6 – இதயத்திரை விலகிடாதோ?

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 6

கணவன் வெளியே செல்ல அழைத்ததும் அவனுடன் வந்து விட்டவள், கீழே தரிப்பிடம் வந்ததும் தயங்கி நின்றாள்.

இன்னும் அவன் தன் பைக்கில் அவளை வெளியே அழைத்துச் செல்லவில்லை.

இங்கே வந்ததில் இருந்து இன்னும் அவனுடன் ஜோடியாக வெளியே செல்லவில்லை என்பதே உண்மை.

அலுவலகத்திற்கு அவளைத் தனியாகப் போகச் சொன்னது போல் இப்போது வெளியே செல்ல என்ன சொல்வானோ? என்று தயங்கி நின்றாள்.

“என்ன அப்படியே நிற்கிற? வந்து வண்டியில் ஏறு…” என்று சூர்யா தன் வண்டியில் ஏற சொன்னதும், அவளின் முகம் மலர்ந்து போனது.

மனைவியின் பார்வை அவள் வண்டியின் பக்கம் சென்று வந்ததைக் கண்டவன், “ஏன் உன்னைத் தனியா வர சொல்லிட்டு அதுக்கும் நீ சண்டை போடவா? சண்டை போட எல்லாம் நான் தயாராயில்லை. என் வண்டியில் ஏறு!” என்றான்.

மலர்ந்திருந்த அவள் முகம் கூம்பிப் போனது.

“எனக்கு நேரமாகுது. சீக்கிரம்…” சூர்யா அவசரப்படுத்த, வண்டியில் ஏறிக் கொண்டாள்.

“நான் ஸ்பீடா போவேன். நல்லா பிடிச்சுக்கோ. அப்புறம் கீழே விழுந்து வச்சு அதுக்கும் சண்டைக்குக் கிளம்பிடாதே…” என்றதும் கம்பியை இறுக பற்றிக் கொண்டாள்.

கூடவே அவளின் மனம் முணுமுணுத்தது.

‘நான் என்னவோ தினமும் சண்டை போட்ட மாதிரி அதையே எத்தனை முறை சொல்வார்? அவர் செய்வதற்கு எல்லாம் நான் தினமும் சண்டை போடணும். ஆனா நான் என்ன அப்படியா போட்டேன்?’ என்று புலம்பிப் கொண்டாள்.

கணவனுடன் முதல் முதலாக ஜோடியாக வண்டியில் செல்கிறோம் என்ற மகிழ்ச்சி கூட அவளிடம் இல்லை.

ஒரு மாலின் முன் வண்டியை நிறுத்தினான்.

“வா…” என்று உள்ளே அழைத்துச் சென்றான்.

அவளை அழைத்துக்கொண்டு மாலிற்குள் சுற்றினான்.

ஆனால் அவளிடம் எதுவும் பேசாமல் கைபேசியையே பார்த்துக் கொண்டு நடந்தான்.

தன்னிடம் கணவன் ஏதாவது பேசுவான் என்று அவள் எதிர்பார்க்க, அவனோ கைபேசிக்குள் தன்னை மூழ்கடித்துக் கொண்டான்.

நடுநடுவே அவனுக்கு அலைபேசி அழைப்பும் வர, பேசிக் கொண்டே நடந்தான்.

“ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இருக்கேன். அங்கே வா…” என்று அவன் யாரிடமோ சொல்லிக் கொண்டிருக்க, ‘யார் வரப்போகிறார்கள்?’ என்பது போல் அவனைப் பார்த்தாள்.

பதில் அவளின் கணவன் சொல்லவில்லை என்றாலும் அவளுக்கே சற்று நேரத்தில் தெரிந்து போனது.

“ஹாய் சூர்யா…” என்று கையாட்டியபடி ஒருவன் அங்கே வந்தான்‌.

“வா சுரேன்… நீ மட்டும் தான் வந்தியா? எங்கே மத்தவங்க எல்லாம்?” என்று கேட்டான் சூர்யா.

“வந்துட்டு இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துருவாங்க…” என்ற சுரேன், யுவஸ்ரீக்கு, “ஹலோ…” சொன்னான்.

“ஹலோ…” என்றாள் பதிலுக்கு.

“இவன் சுரேன். என்னோட காலேஜ் மேட். நம்ம கல்யாணத்துக்கு வந்திருந்தான்…” நண்பனை மனைவிக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மேலும் நான்கு பேர் அங்கே வந்தனர்.

“இவன் அருண், நரேன், விஜய், லோகேஷ்… நாங்க எல்லாருமே காலேஜில் ஒன்னா படிச்சவங்க. இங்கேயே ஐடியில் வேற வேற கம்பெனியில் வேலை பார்த்துக்கிட்டு இருக்காங்க. இவங்க கூடத் தான் நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி ரூம் எடுத்து தங்கி இருந்தேன்…” என்று மனைவிக்கு நண்பர்களைப் பற்றிய விவரத்தை தெரிவித்தான் சூர்யா.

அவர்களைப் பார்த்துச் சம்பிரதாயமாகப் புன்னகைத்து வைத்தாள் யுவஸ்ரீ.

திருமணத்திற்கு அவர்கள் வந்திருந்த போது சொல்லியிருந்தான் தான். ஆனால் கல்யாண பரபரப்பில் மறந்திருந்தாள்.

“இன்னைக்கு நம்ம கூட என் வைஃப்பும் ஜாயின் பண்றா…” என்று நண்பர்களிடம் தெரிவித்தான்.

அப்படியா? என்பது போல் அவனின் நண்பர்கள் சூர்யாவையும், அவன் மனைவியையும் சங்கடமாகப் பார்த்தனர்.

அவளுக்கும் பெரும் சங்கடம் தான். தன்னை வெளியே அழைத்து வந்த கணவன் நண்பர்களை அனுப்பிவிட்டு தன்னுடன் நேரத்தை செலவு செய்வான் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க, அவள் நினைப்பை பொய்யாக்கி அவர்களுடன் தன்னையும் அவன் இணைத்துக் கொள்வதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

“நாங்க வேணும்னா கிளம்புறோம் சூர்யா. நீ உன் வைஃப் கூட என்ஜாய் பண்ணு…” என்று அவனைத் தனியாக அழைத்துச் சொன்னான் லோகேஷ்.

“இல்லடா லோகு, நம்ம ப்ரோக்ராமை மாற்ற வேண்டாம். நம்ம ஏற்கெனவே சினிமாவுக்குப் போக எடுத்திருக்கும் டிக்கெட் கூட இவளுக்கும் ஒரு டிக்கெட் மட்டும் வாங்கிடலாம்…” என்றான்.

“அவங்களுக்குச் சங்கடமா இருக்கப் போகுது சூர்யா…” என்றான் லோகேஷ்.

“அதெல்லாம் எதுவும் இல்லை. அவளாகத்தான் வீட்டில் போரடிக்குதுன்னு என் கூடக் கிளம்பி வந்திருக்காள். நம்ம ப்ரோகிராமில் எந்த மாற்றமுமில்லை. வா போகலாம்…” என்றான்.

அவர்கள் பேசியது அவளுக்கும் கேட்டது.

கணவனின் முடிவை கேட்டு அவனை விநோத ஜந்துவை பார்ப்பது போல் பார்த்து வைத்தாள் யுவஸ்ரீ.

இவன் தெளிவாகத்தான் இருக்கின்றானா? நேற்று போட்ட போதை இன்னும் இறங்கவில்லையா? இல்லை, தனக்குத் தெரியாமல் காலையிலும் குடித்து விட்டானா? என்ற சந்தேகமே அவளுக்கு வந்துவிட்டது.

அவளின் பார்வையை எல்லாம் கண்டு கொள்ளாமல், அவளுக்கென ஒரு சினிமா டிக்கெட் எடுத்துத் தங்களுடன் அழைத்துச் சென்றான்.

இருக்கை மாறி வரும்போது எங்கே தன்னைத் தனியாக அமர வைத்து விடுவானோ என்று அவள் நினைத்திருக்க, அதிசயத்திலும் அதிசயமாக அப்படி எதுவும் செய்யாமல் இருக்கையை மாற்றிக் கேட்டு, தன்னுடன் அமர வைத்துக் கொண்டான்.

இவன் கொஞ்சம் நல்லவன் தானோ? என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, தன்னுடன் தன் மனைவியும் வந்திருக்கிறாள் என்பதை மறந்தவன் போல் நண்பர்களுடன் அரட்டை அடிக்க ஆரம்பித்து விட்டான்.

படம் ஆரம்பித்ததிலிருந்து முடிவு வரை அவர்களுக்குள் விவாதங்களும், சிரிப்பும், கும்மாளமுமாகப் பேச்சு ஓடியது.

அவளால் எதிலும் கலந்துகொள்ள முடியவில்லை.

நேரம் செல்ல செல்ல ‘தான் ஏன் வந்தோம்?’ என்று நினைக்க ஆரம்பித்து விட்டாள்.

படம் முடிந்த பிறகு அங்கேயே இருந்த உணவகத்தில் உணவை

வாங்கி உண்ண ஆரம்பித்தனர்.

மனைவிக்கு வாங்கிக் கொடுத்துவிட்டு மீண்டும் நண்பர்களுடன் பேசிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தான் சூர்யா.

டிக்கெட் வாங்கிக் கொடுத்ததும், சாப்பாடு வாங்கிக் கொடுத்ததும் மட்டுமே போதுமா என்ன?

அவளிடமும் பேசவேண்டும், சிரிக்க வேண்டும் என்று அவனுக்கு ஏன் தோன்றவில்லை? என்று உள்ளுக்குள் புலம்பி தீர்த்துக் கொண்டாள்.

அவளின் மனநிலையை உணர்ந்தது போல் அவனின் நண்பர்களின் பார்வை அவளின் மீது சங்கடத்துடன் அவ்வப்போது பதிந்து மீண்டது.

ஆனால் சூர்யாவே அவளைக் கண்டு கொள்ளலாம் இருக்கும் போது அவர்கள் என்ன செய்ய முடியும்?

அப்படியும் அவளுக்கு மேலும் சங்கடத்தைத் தர விரும்பாமல், உணவை முடித்ததும், “சரி சூர்யா, நாங்க கிளம்புறோம். நீ உன் வைஃப் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணு…” என்றனர்.

“என்னடா, என்னை விட்டு எங்கே போறீங்க?” சூர்யா வியந்து கேட்க,

“நாங்க வழக்கம் போல் தான் போறோம் சூர்யா. நீ உன் வைஃபை பார்…” என்றனர்.

“அவளைத் தனியா பார்த்துக்க என்னடா இருக்கு? அதான் அவளும் இவ்வளவு நேரம் நம்ம கூட ஜாயின் பண்ணிருந்தாளே? அது போல் தான் நம்ம அடுத்த ப்ரோகிராமிலும் ஜாயின் பண்ண போறாள். வாங்க போகலாம்…” என்றதும் அவனின் நண்பர்கள் அதிர்ந்து பார்த்தனர்.

யுவஸ்ரீயோ இறுகி போய் நின்றிருந்தாள்.

அவனின் நண்பர்களே செல்கிறோம் என்று சொல்லியும் கணவன் அவர்களுடன் ஒட்டிக் கொள்வது அவளுக்கு எரிச்சலை தந்தது.

அவர்களுடன் தன்னையும் அழைத்துச் செல்ல முயல்வது கட்டுப்படுத்த முடியாத கோபத்தை உண்டாக்கியது.

“ஒரு நிமிஷம்!” என்று கணவனைத் தனியாக அழைத்தாள்.

“என்ன?” என்று வந்தான் சூர்யா.

“அவங்களே போறேன்னு சொல்றாங்க. நீங்க ஏன் தடுத்துட்டே இருக்கீங்க?” என்று கோபத்துடன் கேட்டாள்.

அவளைக் கூர்ந்து பார்த்தவன், “இதோ பார், நீயாகத்தான் என் கூட வரணும்னு சண்டை போட்ட. அதான் கூட்டிட்டு வந்தேன். எங்க கூட ஒட்டிக்கிட்டு எங்க ப்ரோகிராமை மாற்றியது நீ தானே தவிர, நாங்க இல்லை.

இப்ப எங்க ப்ளானை மாற்ற வைப்பதும் நீ தான். உன்னால் இப்போ அவனுங்க என்ன விட்டுட்டு போக முடிவு பண்ணிட்டாங்க. நீ வராமல் இருந்திருந்தால் ஜாலியா இருந்திருப்போம். இப்போ உன்னால் எங்க பிளான் ஊத்திக்கிச்சு…” என்றான் கடுப்புடன்.

கணவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளைக் காயப்படுத்தியது.

இனியும் தான் அங்கே இருப்பது தனக்குத்தான் அசிங்கம் என்று நினைத்தவள் அவனிடம் ஒன்றும் சொல்லாமல் விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள்.

“ஏய், எங்கே போற? இப்ப நாங்க பப் போறோம். நீயும் வா! அப்புறம் அங்கயும் உன்னைக் கூட்டிட்டு போகலைன்னு சண்டை போட்டாலும் போடுவ…” என்று அவளின் கையைப் பிடித்து நிறுத்தினான் சூர்யா.

பப் என்ற வார்த்தையில் தான் ஏன் அவனுடன் கிளம்பி வந்தோம் என்பது ஞாபகத்தில் வர, அவனுடன் செல்வதா வேண்டாமா என்று தடுமாறினாள்.

இவ்வளவு நேரம் அவன் உன்னுடன் இருந்தே உன்னைக் கண்டு கொள்ளவில்லை. அங்கே போனால் மட்டும் இதையே தொடர மாட்டான் என்று என்ன நிச்சயம்? என்ற கேள்வி எழுந்தது.

“நான் இப்ப அங்கே வந்தால் நீங்க குடிக்காம இருப்பீங்களா?” என்று கேட்டாள்.

“என்ன விளையாடுறியா? இப்போ போறதே அதுக்குத்தான். அங்கே போய் எல்லார் வாயையும் சும்மா பார்த்துட்டு இருக்கச் சொல்றியா?” என்று கடுப்பாகக் கேட்டான்.

அங்கே தான் போனால் தனக்கும் வாங்கிக் கொடுப்பானே தவிர அவன் குடிப்பதை நிறுத்த மாட்டான் என்று புரிந்து விட, அவன் பற்றியிருந்த தன் கையை விடுவித்துக் கொண்டு விறுவிறுவென்று வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

“நீயாகத் தான் இப்போ போற. நான் உன்னைப் போகச் சொல்லலை…”

அப்போதும் அவனின் நியாயத்தை நிலை நிறுத்த பார்த்த குரல் அவளின் முதுகிற்குப் பின் ஒலித்தது.

ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தவளுக்கு மனமெல்லாம் சோர்வாக இருந்தது.

கணவனின் குணம் என்ன என்று அவளால் வரையறுத்துக் கூற முடியவில்லை.

அவனின் குணமே அப்படித்தானா? அல்லது தன்னிடம் வேண்டுமென்றே அப்படிச் செய்கின்றனா? என்று அவளுக்கு ஒன்றும் பிடிபடவில்லை.

புதிதாகத் திருமணமான ஒருவன் இப்படித்தான் இருப்பானா? என்ற கேள்வி எழுந்தது.

இல்லையே தன் வீட்டிற்கு வந்த போது தன்னுடன் தானே ஒட்டிக் கொண்டே திரிந்தான். இப்போது மட்டும் என்ன? என்று தோன்றியது.

ஒருவேளை கணவனுக்குத் தன்னைப் பிடிக்கவில்லையோ? பிடிக்காமல் திருமணம் செய்திருப்பானோ? அதனால் தான் இப்படிச் செய்கிறானோ என்று தோன்றும் போதே தொண்டைகுழி விக்கிக் கொண்டது போல் தவித்துப் போனாள்.

உடனே இந்தக் கேள்வியை அவனிடம் கேட்டு விட வேண்டும் என்று தோன்றியது.

ஆனால் இன்றும் குடித்து விட்டு வந்தால் ஒழுங்காகப் பதில் சொல்ல மாட்டானே… என்ன செய்வது? என்று யோசித்தாள்.

அவனைத் தன்னால் குடிக்க விடாமல் தடுக்க முடியுமா? என அவளின் யோசனை ஓடியது.

சில நொடிகள் சிந்தனையின் முடிவில் அவளின் மாமியாருக்கு அழைத்து விட்டாள்.

“என்னமா யுவா, மதியம் போன் போட்ட போது இரண்டு பேரும் வெளியே போயிருக்கிறதாகச் சொன்ன. வீட்டுக்கு வந்துட்டீங்களா?” என்று சித்ரா கேட்க,

“நான் மட்டும் தான் வந்திருக்கேன் அத்தை. அவர் இன்னும் வரலை…” என்றாள்.

“ஏன்மா, என்னாச்சு? நீ மட்டும் தனியா ஏன் வந்த?”

“அதெல்லாம் இருக்கட்டும் அத்தை. நான் கேட்குறதுக்குப் பதில் சொல்லுங்க…” குரல் இறுக கேட்டாள்.

“என்னமா யுவா?”

“உங்க பையனுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லைன்னு சொல்லித் தானே எனக்குக் கட்டி வச்சீங்க. இப்ப என்னன்னா அவர் குடிக்கிறார். ஏன் அத்தை பொய் சொன்னீங்க?” என்று கேட்டாள்.

“என்னமா சொல்ற? கண்ணா குடிக்கிறானா? இல்லம்மா அவனுக்கு அந்தப் பழக்கம் இல்லை…” என்று பதறினார்.

“எனக்குப் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அத்தை. இப்ப கூட உங்க பிள்ளை குடிக்கத்தான் போயிருக்கார்…” என்றாள்.

“என்னமா இப்படிச் சொல்ற? என்னால நம்ப முடியலையே. அவனுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லைன்னு சந்தோஷம்ல பட்டுட்டு இருந்தேன்…” என்று கலங்கி போனார் சித்ரா.

அவரிடம் காலையில் இருந்து நடந்ததைச் சொன்னவள், “எனக்குப் பயமா இருக்கு அத்தை. இவர் என்கிட்டே இப்படி யாரோ போல நடந்துகிறார். இதெல்லாம் என்னோட அம்மாவுக்குத் தெரிந்தால் உடைந்து போயிடுவாங்க…” என்றாள்.

“அம்மாகிட்ட சொல்லாதே யுவா. நீ போனை வை. நான் அவனை என்னன்னு கேட்குறேன்…” என்றார் சித்ரா.

சித்ரா மகனிடம் என்ன பேசினாரா… அரைமணி நேரத்தில் வீட்டிற்கு வந்திருந்தான் சூர்யா.

உள்ளே நுழைந்த போதே கடும் கோபத்துடன் நுழைந்தவன், “உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? போட்டு கொடுக்கிறயோ? என்னோட அம்மாகிட்ட சொன்னால் நான் அப்படியே பயந்துடுவேனா?” என்று ஆத்திரத்துடன் கேட்ட கணவனை ஆராய்ச்சியாகப் பார்த்தாள் யுவஸ்ரீ.

அவனிடம் மது வாடையோ, தள்ளாட்டமோ இல்லை. தெளிவாக இருந்ததைக் கண்டு உள்ளுக்குள் சிறு நிம்மதி ஏற்பட்டது.

“முதலில் நான் கேட்குற கேள்விக்குப் பதில் சொல்லிட்டு அப்புறம் கோபப்படுங்க. என்னை எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க?” என்று கேட்டாள்.

“நான் என்ன கேட்டால், நீ என்ன கேட்டுட்டு இருக்க?” எனச் சிடுசிடுத்தான்.

“எனக்குப் பதில் சொல்லுங்க…” என்றாள் பிடிவாதமாக.

“எங்க வீட்டில் நான் கல்யாணம் பண்ணியே ஆகணும்னு பிடிவாதம் பிடிச்சாங்க பண்ணிக்கிட்டேன்…” என்று தோளை குலுக்கினான்.

“உங்களுக்குக் கல்யாணத்தில் விருப்பம் இல்லனா பண்ணாம இருந்திருக்க வேண்டியது தானே? ஏன் என்னைக் கல்யாணம் பண்ணிட்டு இப்படிப் பண்றீங்க?”

“ஏன் நான் என்ன பண்ணினேன்? உன்னைக் கொடுமை படுத்தினேனா? நகை வாங்கிட்டு வா, பணம் வாங்கிட்டு வான்னு டார்ச்சர் செய்தேனா?” என்று கேட்டான்.

“அப்படி இல்லை தான். ஆனால் நீங்க செய்வது எல்லாம் என்னைப் பாதிக்குதே? கல்யாணம் ஆனவங்க எல்லாம் இப்படித்தான் தன்னோட மனைவியைத் தனியா விட்டுட்டு ஃபிரண்ட்ஸ் கூடச் சுத்துவாங்களா?”

“அதான் இன்னைக்கு உன்னையும் கூட்டிட்டு போனேனே? அப்புறம் என்ன?”

“கூட்டிட்டு போய்ட்டு உங்க ஃபிரண்ட்ஸ் கூடத்தானே ஜாலியா இருந்தீங்க? அப்புறம் என்னை எதுக்குக் கூட்டிட்டு போகணும்?”

“இதோ பார், கல்யாணத்துக்கு முன்னாடி நாங்க ஃபிரண்ட்ஸ் எல்லாம் இப்படித்தான் ஜாலியா இருந்தோம். அதைக் கல்யாணம் ஆன உடனே என்னால் மாத்திக்க முடியாது. என் ஃபிரண்ட்ஸ் கூட டைம் ஸ்பெண்ட் பண்றது தான் எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு. அதை நிறுத்த வைக்கலாம்னு பார்க்காதே! உன்னால் முடியாது…”

“எங்க ஊருக்கு வந்திருக்கும் போது மட்டும் என் கூடத் தானே வெளியே வந்தீங்க? இப்ப மட்டும் ஃபிரண்ட்ஸ் தான் முக்கியமா?”

“அங்கே எனக்கு யாரையும் தெரியாது. அதான் உன் கூட ஊர் சுத்த வேண்டியதா போயிடுச்சு…” என்றான் அலட்சியமாக.

இப்படிப் பேசுகிறவனை என்ன செய்வது என்று புரியாமல் மலைத்து நின்றது என்னவோ யுவஸ்ரீ தான்.

“சரி, எப்படியோ போங்க. ஆனா நீங்க குடிக்கக் கூடாது. எனக்கு அது பிடிக்கலை…” என்றாள்.

அவனின் அந்தப் பழக்கத்தை நிறுத்தினாலே எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தவள் அதைச் சொன்னாள்.

“உனக்குப் பிடிக்கலைனா நீ குடிக்காதே! நான் இப்படித்தான் இருப்பேன்…” என்றான்.

தான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று அடம்பிடிப்பவனை என்ன செய்ய? அவளுக்குத் தெரியவே இல்லை.

“ஏன் இப்படிப் பண்றீங்க? அப்போ என்னைப் பிடிக்கலையா உங்களுக்கு? அதான் இப்படிப் பண்றீங்களா?” என்று கலங்கிய கண்களுடன் கேட்டாள்.

“உன்னைப் பிடிக்கலைனா இந்தக் கல்யாணமே நடந்திருக்காது. போட்டோவில் பார்த்தப்ப உன்னைப் பிடிக்கலை தான். ஆனா நேரில் பார்த்ததும் ஓகேன்னு தோனுச்சு. அதான் கல்யாணத்துக்குச் சரின்னு சொன்னேன்…”

இந்தப் பதிலுக்குச் சந்தோஷப்படுவதா? வருத்தப்படுவதா?

பிடித்துத் திருமணம் செய்தவன் ஏன் தன்னை யாரோ போல் நடத்துகிறான் என்ற கேள்வியும் கூடவே தோன்றும் போது அவள் எங்கிருந்து சந்தோஷப்பட முடியும்?

“உனக்கு ஏன் இப்படி எல்லாம் சந்தேகம் வருது? அப்படிச் சந்தேகப்படும்படியா நடந்துக்கிறேன். நைட் ஆனால் உன் கூடவே தானே இருக்கேன்…” என்று அவளை ரசித்துப் பார்த்தபடி ஒரு மாதிரி குரலில் சொன்னான் சூர்யா.

அவன் சொல்லிக் காட்டிய விதத்தில் யுவஸ்ரீயின் முகம் சிவந்தது.

கூடவே, வாழ்க்கைக்கு இரவு நேர அன்னியோன்யம் மட்டும் போதுமா? என்று கேள்வியும் எழுந்தது.

அவளின் அந்தக் கேள்விக்கு ஆறு மாதங்கள் கடந்த பிறகும் பதில் தெரியவில்லை.

சூர்யாவின் நடவடிக்கையிலும் மாற்றம் வரவில்லை.