🌞மதி 59🌛

தாதுமணல் கொள்ளையால் நமது நாட்டின் கனிமவளம் அழிந்தது மட்டுமன்றி கடற்கரையோர சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. மேலும் கடல் அரிப்பு போன்றவற்றால் கடற்கரையோர கிராமங்களில் அடிக்கடி கடல் தண்ணீர் புகுதல் சம்பவங்களும் தொடர்கதையாகிறது. அரசு, புறம்போக்கு மற்றும் தனியார் நிலங்களில் தாதுமணல் அள்ளப்பட்டதால் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் பனங்காடுகள் அழிக்கப் பட்டதால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுஅரியநாயகம்.

அஸ்மிதா மலரின் ‘ஜெய் அண்ணா’ என்ற வார்த்தையில் ஒரு வினாடி அதிர்ந்தவள் அலுவலக அறையின் வாயிலில் நின்றிருந்த ஜெயதேவ்வைக் கண்டதும் இந்நேரத்தில் இவனுக்கு இங்கே என்ன வேலை என்ற ரீதியில் பார்த்துவைக்க அவனோ மலரின் ஷேமநலனை விசாரித்துவிட்டு மேரியிடம் துளி நிறுவனத்தின் வேலைகள் எப்படி நடைபெறுகிறது என்று உரையாட ஆரம்பித்தான்.

கூடவே அஸ்மிதாவுக்கு “என் கிட்ட சொல்லிட்டு வர்ற பழக்கத்தை நீ எப்போ தான் நீ ஏற்படுத்திப்பனு தெரியல” என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினாற்போல ஒரு குத்தல். அவள் அவசரத்தில் சொல்ல மறந்துவிட்டதாக மழுப்பினாலும் அது பொய்யென்று மிகச் சுலபத்தில் அறிந்து கொண்டான் ஜெயதேவ். சிறிது நேரம் மேரியிடம் பேசிவிட்டு கையோடு அஸ்மிதாவைத் தன்னுடன் அழைத்துச் சென்றான்.

அவன் கூடவே நடந்தவள் அவனது கண்டிப்பான வார்த்தைகளுக்காக காத்திருக்க மாறாக ஜெயதேவ்வோ தணிந்த குரலில் “ரொம்ப நாள் கழிச்சு உங்கப்பா கிட்ட பேசுனது உன் மனசை இவ்ளோ பாதிச்சிருச்சா அஸ்மி?” என்று கேட்க இவனுக்கு எப்படி அது தெரியவந்தது என்று வியப்புடன் நோக்கினாள் அஸ்மிதா.

அவளது வியந்த பார்வையில் முறுவலித்தவன் சுவாதீனமாக அவளது தோளை அணைத்தபடி நடக்க ஆரம்பிக்க அஸ்மிதாவுக்கும் அப்போதிருந்த மனநிலையில் அவனது தோளணைப்பு மனதுக்கு இதமாகத் தோண மௌனமாக அவனுடன் நடைபோட்டாள்.

“யூ நோ வாட்? வாழ்க்கையில சில ரிலேசன்ஷிப்ப மறக்கவே முடியாது… என்ன தான் அவங்க நம்ம கூட இல்லனாலும் அவங்களை நம்ம வெறுத்தாலும் அவங்களுக்கான இடம் நம்ம வாழ்க்கையில நிலையா இருக்கும்… உனக்கும் அப்பிடி தான்… சந்திரசேகர் ஒரு மோசமான கணவனா, மோசமான நண்பனா, மோசமான மனுசனா இருக்கலாம்… ஆனா ஒரு அப்பாவா அவர் நல்லவர் தான்… அவரைக் கட்டுப்படுத்துற ஒரே ஒரு விஷயம் உன் மேல அவர் வச்சிருக்கிற அன்பு மட்டும் தான்… அதுக்காக தான் அவர் என் முன்னாடி தன்னோட கோவத்தை வெளிக்காட்டிக்கிறது இல்ல… எங்க தான் கோவப்பட்டு மகளோட வாழ்க்கையை ஸ்பாயில் பண்ணிடுவோமோனு பயப்படுறாரு… ஹீஸ் அ குட் ஃபாதர்”

ஜெயதேவ்வின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நூறு சதவிகித உண்மையே! அஸ்மிதா அவன் பேசியதற்கு வெறுமெனே தலையாட்டிக் கொண்டு வர சஞ்சீவினி பவனமும் வந்துவிட்டது. அது மாலை நேரம் என்பதால் அங்கே நடனவகுப்பு ஜரூராக நடந்து கொண்டிருக்க வராண்டாவின் நாற்காலிகளில் அலமேலுவும் ராஜகோபாலனும் அமர்ந்து வழக்கமான அரட்டைக்கச்சேரியில் இணைந்திருந்தனர்.

பேத்தியும் அவள் கணவனும் ஒன்றாய் நடந்து வரும் காட்சியைக் கண்ட அந்த வயோதிகத்தம்பதியினருக்கு இனி அஸ்மிதாவின் வாழ்வும் இயல்பாகிவிடும் என்ற நம்பிக்கை பிறந்தது. மனதில் எழுந்த நம்பிக்கை முகத்தை ஜொலிக்க வைத்ததாலோ என்னவோ அவர்கள் அருகில் வந்துவிட்ட அஸ்மிதா இருவரின் முகமலர்ச்சியையும் கண்டு அவர்களைச் சீண்ட ஆரம்பித்தாள்.

“மிஸ்டர் அண்ட் மிசஸ் ஆர்.கேவோட ஃபேஸ் ஏன் இவ்ளோ க்ளோவா இருக்கு?” என்றபடி அவர்களருகில் அமர்ந்தவள் ஜெயதேவ்வையும் அமருமாறு கண்ணால் கூற அவன் மறுபேச்சின்றி அமர்ந்தான்.

அதன் பின்னர் அவள் வழக்கமாக அவர்களுடன் வாயாட ஆரம்பிக்கவும் அலமேலு பொய்யான சலிப்புடன் ஜெயதேவ்வைப் பார்த்தவர்

“நீ எப்பிடி கண்ணா இவளைச் சமாளிக்கிற? அப்பிடியே என் பெரிய மாமியார் தான் இவ… அந்தம்மா தான் நான் என்ன பண்ணுனாலும் என்னை கேலி பண்ணிட்டே இருப்பாங்க… அவங்கள எங்கேனு பிறந்திருக்கா” என்று சொல்லவும்

“இத்தனை பதினாலு கழுதை வயசாகியும் இன்னும் பெரிய மாமியாரை குறை சொல்லுறியே அல்லு! என்ன இது சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு? ஆர்.கே இதுக்கு நீங்க இப்போ சண்டை போட்டிருக்கணும்” என்று ராஜகோபாலனை தூண்டிவிட

“இவ ஏன் பேசமாட்டா? எங்களுக்கு கல்யாணம் நடந்த புதுசுல இவளுக்குச் சமையல் சுத்தமா வராது… எங்கம்மா ஸ்ட்ரிக்டான மாமியார் வேற! அவங்க கிட்ட இருந்து இவளை காப்பாத்துற வேலை என் பெரியம்மாவோடது தான். இவளோட அரைகுறை சமையலை என்னென்னவோ பண்ணி சமாளிச்சு வச்சிடுவாங்க…. எங்கம்மாவும் அக்கா பேச்சை தட்டமாட்டாங்க… அதுலாம் அழகான நியாபகங்கள்… இவ எங்க அம்மா கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறதும், பெரியம்மா இவளை அம்மா கிட்ட இருந்து காப்பாத்துறதும் நினைக்க நினைக்க மனசு அந்தக் காலத்துக்கே போயிடுதுடா” என்று சிலாகிக்க

“க்கும்! நான் மாட்டிக்கிட்டு முழிச்சது இவருக்கு அழகான நியாபகமாம்!” என கணவரைப் பார்த்து அலமேலு நொடித்துக் கொள்ள இந்த வயோதிகர்களின் அன்பான செல்லச்சண்டையையும் குறும்பான பேச்சையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த ஜெயதேவ்வுக்கு இவர்களின் வயதில் தானும் அஸ்மிதாவும் கூட இப்படித் தான் ஏட்டிக்குப் போட்டி பேசிக்கொண்டிருப்போமோ என்று தோணியது.

அதே எண்ணத்துடன் மனைவியைப் பார்க்க அவளும் கண்ணில் மகிழ்ச்சி மின்ன தாத்தா பாட்டியின் இந்தச் செல்லச்சண்டையை ரசித்தபடி கூடவே இருவரையும் ஊக்குவித்துக் கொண்டிருந்தாள். இடையிடையே ஜெயதேவ்வின் தோளில் அடித்து நகைத்தவளின் அருகாமையில் ஜெயதேவ் பெரும் நிம்மதியை உணர்ந்தான். அவளைச் சந்தித்த ஆரம்பநாட்களின் மாயம் திரும்பி வந்ததை போல உணர்ந்தான்.

இவர்களது கலாட்டாவில் நடனவகுப்பை முடித்துவிட்டுத் திரும்பிய இஷானியும் கலந்து கொள்ள தனியாக கணவரையும் பேத்தியையும் சமாளித்த அலமேலுவுக்குத் துணைக்கு ஆள் வந்துவிட்ட திருப்தி.

“இனிமே பாட்டிய யாராச்சும் கிண்டல் பண்ணுவிங்க” என்று இழுத்தபடி பேசிய இஷானி புருவத்தை உயர்த்தி மிரட்ட

“ஐயோ அக்கா! நீங்க ரொம்ப பயமுறுத்திறிங்க?” என்று சொல்லிவிட்டு அஸ்மிதா முகத்தைக் கரங்களால் மூடிக்கொண்டாள்.

யாருப்பா அது என் அஸ்மிய பயமுறுத்துறது?” என்று கேட்டபடி வந்து சேர்ந்தான் ருத்ரா. வேலை அதிகம் என்பது அவன் முகத்தில் தெரிந்த சோர்வில் தெரியவர அலமேலு கண்ணம்மாவிடம் காபி கொண்டு வருமாறு கூறினார்.

அதே நேரம் அஸ்மிதா ருத்ராவிடம் “உங்க சம்சாரம் என்னை மிரட்டுது மாமா…. பேசாம இதுக்கு டெர்மினேசன் ஆர்டர் குடுத்துடுங்க” என்று சொல்லிவிட்டு முகத்தைத்  தூக்கி வைத்துக்கொள்ள

அவனும் “கண்டிப்பா! என் அஸ்மிய மிரட்டுனவங்களை சும்மா விட முடியுமா?” என்று கேலியாய் இஷானியைப் பார்த்து நகைத்துவிட்டு அஸ்மிதாவுக்கு ஒத்து ஊதியவன் அவளுக்கு ஹைஃபை கொடுத்தான்.

அதைக் கண்ட ஜெயதேவ் “உன் வாழ்க்கை நிம்மதியா போயிட்டிருக்குனு நினைச்சேன்… இவ பேச்சைக் கேட்டு நீயே உன் வாழ்க்கைக்கு குண்டு வச்சிக்கிட்டியேடா! உனக்கு சனியன் வாய்ல தான் ருத்ரா” என்று கேலியாய் பேச இஷானி ருத்ராவை எண்ணெய் கடுகு எதுவுமின்றி வாணலியில் வறுக்குமளவுக்குக் கடுப்பில் இருந்தாள்.

“விடுங்க தேவ்! இவருக்கும் இந்த அஸ்மிக்கும் என்னை கிண்டல் பண்ணுறது லட்டு சாப்பிடுற மாதிரி” என்று சொல்லி நொடித்துக் கொண்டவள் விருட்டென்று வீட்டுக்குள் சென்றுவிட ஜெயதேவ் நமட்டுச்சிரிப்புடன் ருத்ராவைப் பார்க்க அவனோ “இஷி! நில்லு… நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்” என்றபடி அவள் பின்னே ஓடினான்.

அவர்களைக் கண்டு நகைத்த ஜெயதேவ் “நல்லா போயிட்டிருந்த குடும்பத்துல கதகளி விளையாடிட்டியா? இப்போ சந்தோசமா இருக்குதா லேடி நாரதரே?” என அஸ்மியைக் கேலி செய்ய

“சண்டை இல்லாம ஒரு நாள் போச்சுனா அது என்னவோ மாதிரி இருக்கு தேவ்… இப்போ தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு” என்று கண்ணை மூடித்திறந்து சிலாகித்ததில் ஜெயதேவ்வோடு சேர்ந்து தாத்தாவும் பாட்டியும் சிரிக்கத் தொடங்கினர்.

ஜெயதேவ் சிரித்து முடித்தவன் “அப்போ அதே மனநிம்மதியோட கிளம்பு, வீட்டுக்குப் போவோம்” என்று அஸ்மியிடம் உரைத்தவன் ராஜகோபாலனிடமும் அலமேலுவிடமும் சொல்லிக்கொண்டுக் கிளம்பினான்.

அவர்கள் கிளம்பியதும் சஞ்சீவினி பவனத்தில் ருத்ரா மற்றும் இஷானியின் செல்லச்சண்டை அரங்கேறியது.

அன்று மட்டுமல்ல அதன் பின் வந்த நாட்களும் இந்த இரு ஜோடிகளுக்கும் இனிமையான அழகான நாட்களாவே நகர்ந்தன.

ருத்ராவும் இஷானியும் இயல்பான மனமொத்த தம்பதியினராக வாழத் தொடங்கியிருந்தனர். அவர்களின் மணவாழ்க்கை அழகான கவிதையைப் போல அடுத்தடுத்த அத்தியாயங்களில் அழகாக எழுதப்பட்டது.

இஷானி ருத்ராவின் காதலிலும் அன்பிலும் உருகித் திளைத்தவள் புகுந்த வீட்டாரிடம் சுமூகமான உறவை ஏற்படுத்திக் கொண்டாள். சந்திரசேகரும் மந்தாகினியும் கூட அவள் வந்த பின்னர் வீட்டிற்கு புதுக்களை வந்ததாக எண்ணியவர்கள் ஒரேயடியாக உருகி வழியவில்லை என்றாலும் அவளிடம் இன்முகத்துடன் நடந்து கொண்டனர்.

அதிலும் அவள் அர்ஜூனை அன்புடன் கவனித்துக் கொள்வது, அவனுக்கு நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொடுப்பது, தவறு செய்தால் கண்டிப்பதை எல்லாம் கண்ணுற்றவர்கள் இப்போதெல்லாம் மகனுடன் நேரம் செலவளிக்க முயன்றனர். அந்த நேரங்களில் எல்லாம் ருத்ராவோ இஷானியோ பெற்றோருக்கும் மகனுக்குமிடையே வருவதில்லை.

வீட்டின் இயந்திரத்தன்மை அகன்று அனைவரும் ஒரே குடும்பம் என்ற எண்ணம் அவர்களிடையே வலுப்பட்டது. இஷானியும் வீட்டின் பொறுப்பு, மாலை நேரங்களில் நடனவகுப்பு என நேரத்தைக் கழித்தவள் இடையிடையே துளி நிறுவனத்தின் சார்பாக நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்வுகளிலும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளால் உரையாற்றுவதை வழக்கமாக்கி கொண்டாள்.

அப்படி ஒரு முறை உரையாற்றிய போது தான் அவளது உடல்கூறு பற்றிய செய்தி மந்தாகினி, சந்திரசேகரை சென்றடைந்தது. அவள் தொலைக்காட்சியில் உரையாடினாள் என்பதால் அதை சாந்தினியின் குடும்பத்தினரும் பார்த்துவிட்டனர். அவளது உரையை முடித்த நேரத்தில் அனைவருக்குமே அவளையும் சஞ்சீவினியையும் நினைத்து பிரம்மிப்பு உண்டானது. அதே சமயம் ருத்ராவின் மீது மரியாதை பிறந்தது. அவன் மனைவி மட்டுமே அறிந்திருந்த அவனது நேசத்தின் அளவு அன்றைய தினம் மற்றவர்களுக்கும் தெரியவந்தது.

ஆனால் ருத்ரா இதற்காக அலட்டிக் கொள்ளவில்லை. காதல் ஒருத்தியைக் கைபிடித்த மகிழ்ச்சியே அவனுக்கு இந்த ஜென்மம் முழுவதும் தீராது என்ற நிலையில் தற்போது இருவரும் நடத்தும் இனிய இல்லறமும் சேர்ந்து கொள்ள அவன் வாழ்வு இனிமையாக நகர்ந்து கொண்டிருந்தது.

மனைவி மருமகனுடன் செலவளிக்கும் நேரங்களை எக்காரணத்தைக் கொண்டும் சுருக்கிக்கொள்ளவில்லை அவன். எப்போதுமே வேலையைக் காரணம் காட்டி உறவுகளை ஓரங்கட்டுபவன் இல்லை ருத்ரா. இப்போதும் அதுவே தொடர்ந்தது.

ருத்ராவும் இஷானியும் இல்லறவாழ்க்கையின் இனிமையில் கரைந்துவிட அஸ்மிதாவும் ஜெயதேவ்வும் இருபத்து நான்கு மணிநேரமும் ஒன்றாகவே நேரம் செலவளித்தனர். தினச்சரி அவர்களின் எட்டுமணிநேர அலுவலக வேலை இருவரையும் ஒன்றாக சேர்த்து வைத்திருக்க வீட்டிலும் இருவரும் ஒருவரை கேலி கிண்டல் செய்து கொண்டும் சீண்டிக்கொண்டும் தங்களது வாழ்வின் நெருடல்களைச் சிறிது சிறிதாக தகர்த்துக் கொண்டிருந்தனர்.

அஸ்மிதாவைச் சாந்தினி தன் மகளைப் போல பார்த்துக் கொண்டார். விஸ்வநாதனும் நண்பனின் மகளுக்கு தன் வீட்டில் எந்த குறையும் வந்துவிடக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தினார். சங்கரராமன் முன்பெல்லாம் பேரன் அலுவலகம் முடிந்துவரும் நேரத்துக்காகக் காத்திருப்பவர் இப்போது பேரனும் பேத்தியும் வரும் நேரத்துக்காகத் தோட்டத்தில் காத்திருப்பார். அவர்களும் தினசரி அவருடன் சிறிதுநேரம் உரையாடுவதை வழக்கமாக்கி இருந்தனர்.

ஆனால் கடந்த சில தினங்களாக ஜெயதேவ் வெளிவேலையாக அலைய அஸ்மிதா மட்டும் தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். சந்திரசேகரின் பங்குகளும் ஜெயதேவ் வசம் வந்துவிட அவனது பொறுப்பு அதிகரித்ததை அவளாலும் புரிந்து கொள்ள முடிந்தது.

அவனோடு சேர்ந்து அவளது அலுவலகச்சுமையும் அதிகரித்தது எனலாம். வேலையைக் காரணம் காட்டி அவள் சிணுங்கினால் “இத்தன வருசமா பொம்மை ஷேர்ஹோல்டரா இருந்து நீ ஒன்னுமே பண்ணல… அதுக்குப் பிராயசித்தமா இப்போவாச்சும் ஹார்ட் ஒர்க் பண்ணு… ஒரு கம்பெனியைத் தனியா மேனேஜ் பண்ணுற அளவுக்கு உனக்கு திறமை இருக்கு அஸ்மி… சோ இப்பிடி சைல்டிஷா பிஹேவ் பண்ணாம நான் சொன்ன மீட்டிங்கை அட்டெண்ட் பண்ணிட்டு வா” என்று ஆணித்தரமாக கட்டளையிடுவான் ஜெயதேவ்.

அஸ்மிதாவும் அவனைத் திட்டிக்கொண்டே அலுவலகம் சம்பந்தப்பட்ட கூட்டங்களில் இப்போதெல்லாம் கலந்துகொள்ள ஆரம்பித்திருந்தாள். அஸ்மிதா என்பவளை ஆர்.எஸ் கெமிக்கலின் மேலாண்மையில் தவிர்க்க முடியாத ஒரு நபராக மாற்றும் வேலையை ஜெயதேவ் கச்சிதமாகச் செய்து முடித்துவிட்டான். கூடவே ஆர்.எஸ் மினரல்சின் பங்குகளை எதற்காக தன்வசம் கொண்டு வந்தானோ அந்த வேலையையும் கச்சிதமாகச் செய்ய ஆரம்பித்திருந்தான்.

வினாயகமூர்த்திக்கு எதிராக என்னென்ன ஆதாரங்கள் அவனால் ஆர்.எஸ் மினரல்சில் இருந்து சேகரிக்க முடியுமோ அவையனைத்தையும் நிறுவனத்தின் உண்மையான விசுவாசிகள் வாயிலாக சேகரித்தான். இதில் பத்திரிக்கைத்துறை நண்பர்களின் உதவியையும் அவனுடன் ரிஷியும் நாடினர். இந்த வேலைகள் அனைத்தும் மற்றவர் கண்ணுக்குத் தெரியாது நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் ஆர்.எஸ் கெமிக்கலில் அஸ்மிதாவுக்குப் புதிய பொறுப்புகளைக் கொடுத்திருந்தான்.

இதை யார் கவனித்தார்களோ இல்லையோ சந்திரசேகர் கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.

அவரிடம் “உங்க பொண்ணுனு நினைச்சு நான் அஸ்மிக்கு எந்த மேனேஜ்மெண்ட் ட்ரெயினிங்கும் குடுக்கல… என்னோட ஒய்பை தான் நான் ட்ரெயின் பண்ணுறேன்… நான் இல்லைனாலும் அவ தடுமாறாம நிக்கணும்.. அதுக்காக தானே தவிர இப்போவும் ஆர். எஸ் க்ரூப்போட முக்கியமான ரெண்டு கம்பெனி என் கண்ட்ரோல்ல தான் இருக்கு” என்று அமர்த்தலாக மொழிந்திருந்தான் ஜெயதேவ்.

சந்திரசேகரோ விஸ்வநாதனின் மகனிடம் இனி விரோதம் பாராட்ட விரும்பவில்லை. எனவே தான் ஆர்.எஸ் மினரல்ஸில் தன்னுடைய முழுபங்குகளையும் ஜெயதேவ்விற்கு தாரை வார்த்ததை மந்தாகினியிடம் கூட தெரிவிக்காது மறைத்திருந்தார். ஆனால் இன்று வரை ஆர்.எஸ் குழுமத்துக்காக ஓயாது உழைக்கும் வினாயகமூர்த்தியிடம் தான் மறைத்தது தவறோ என்று அவருக்கு குற்றவுணர்ச்சி அவ்வபோது எழுந்து வந்தது.

நல்லவேளையாக வினாயகமூர்த்தி அச்சமயத்தில் ஆழியூர் யூனிட்டைக் கவனிக்கச் சென்றுவிட்டார். அவரைத் தினமும் சந்தித்திருந்தால் கண்டிப்பாக சந்திரசேகர் பங்குமாற்றம் பற்றி உளறியிருப்பார்; அல்லது குற்றவுணர்ச்சியில் வெம்பியிருப்பார்.

இவ்விதமான மனநிலையுடன் நாட்களைக் கடத்திய சந்திரசேகர் வழக்கம் போல இரவுணவுக்குப் பின்னர் தொலைக்காட்சியில் செய்தி சேனலை பார்த்துக் கொண்டிருந்தவர் அதில் இடம்பெற்ற செய்தியில் அதிர்ந்தார்.

“ஆர்.எஸ் குழுமத்தின் பொதுமேலாளரும், ஆர்.எஸ் மினரல்ஸில் தலைமை பொறுப்பு வகிப்பவருமான வினாயகமூர்த்தி தாதுமணலை சட்ட விரோதமாக வெளிநாட்டுக்குக் கடத்த முயன்ற குற்றத்தில் ஈடுபட்டதால்  சி.பி.ஐ அதிகாரிகளால் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சி.பி.ஐயின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்”

அந்தச் செய்தி அவரோடு மந்தாகினிக்கும் தலையில் இடியை இறக்கியது. அவர்களுக்கு மட்டுமல்ல சஞ்சீவினி, அவரது பெற்றோர், சாந்தினி, விஸ்வநாதன், சங்கரராமன் என அனைவருமே இச்செய்தியால் அதிர்ந்து போய் விட்டனர்.

ருத்ராவும் இஷானியும் என்றாவது ஒருநாள் நடக்குமென எதிர்பார்த்த சம்பவம் தானே என்று கண்டுகொள்ளவில்லை. அஸ்மிதாவும் அவ்வாறே. ஆனால் அவளது எண்ணமெல்லாம் ஜெயதேவ் எங்கே என்பதில் தான் இருந்தது. அன்றைய தினம் முழுவதும் அவன் ஆர்.எஸ் கெமிக்கலுக்கு வரவில்லை. அவள் போன் செய்து கேட்டதற்கும் முக்கியமான வேலை என்ற தகவல் மட்டுமே கிடைத்தது. அவன் மாலையில் இருந்து போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துவைத்து விட்டதால் அஸ்மிதாவுக்கு என்னவோ போலிருந்தது. திருமணமாகி இத்தனை நாட்களில் முதல் முறையாக கணவனின் வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள் ஜெயதேவ்வின் மனைவி.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛