🌞மதி 51🌛

தாராளமயமாக்கலுக்குப் பிறகு 1998ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அணுசக்தி துறையில் கொண்டு வரப்பட்ட முக்கிய தீர்மானம் மூலமாக புதிய கொள்கை (Policy on Exploration of Beach Sand Minerals) வகுக்கப்பட்டது. அதன் பிறகு தான் மோனசைட் தவிர்த்துப் பிற அணுக்கனிமங்களை அள்ளுவது மற்றும் விற்பனை செய்வது போன்றவற்றுக்கான அனுமதி தனியாருக்கு வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் இந்திய நிறுவனமான இருக்க வேண்டும் என்பதே அரசு தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனை. அதன் பிறகு தான் தாது மணல் கொள்ளை தீவிரமடைந்தது.

கடற்கரையின் நின்றபடி அலைகள் அசைந்து வரும் அழகைப் பார்த்தபடி கையை மார்பின் குறுக்கே கட்டியபடி நின்று கொண்டிருந்தான் ஜெயதேவ். அவன் அருகில் மாலை நேர கடல்காற்றில் சுடிதார் துப்பட்டா படபடவென்று பறக்க அதை ஒரு கையால் அடக்கியவாறுமற்றொரு கையால் நெற்றியில் புரண்டு விளையாடும் கூந்தல் கற்றைகளைச் சரிசெய்த படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் மானசாதேவி.

இருவரும் கடற்கரைக்கு வந்து பதினைந்தாவது நிமிடத்தில் ஜெயதேவ் தன் மனதிலுள்ளவற்றை மறைக்காது அவளிடம் கூறிவிட மானசாவுக்கு முதலில் அவன் தன்னை கேலி செய்கிறானோ என்ற சந்தேகம். சில முறை பார்த்த அளவிலேயே ஒரு பெண்ணிடம் காதல் என்று சொல்பவனை யாரால் தான் நம்ப முடியும்?

அவள் மனம் அதை கேலி என்று ஒதுக்கவும் முடியாது, அதே சமயம் உண்மை என்று எண்ணி மகிழவும் முடியாது தவித்தது. முதலில் அவன் காதலிப்பதாகச் சொன்னதற்கு தான் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும் என அவ்வாறு எண்ணமிட்ட மனதை அதட்டி ஒடுக்கி அமர வைத்த மானசாவின் பிடிவாதம் கடல் காற்றிடம் தோற்றுப் போய்விட்டது. காற்றினால் அலைபாயும் கூந்தலையும் சுடிதார் துப்பட்டாவையும் கட்டுப்படுத்த அவள் போராட ஜெயதேவ் கையைக் கட்டிக்கொண்டு கடலை பார்க்கிறேன் என காட்டிக்கொண்டு ஓரக்கண்ணால் மானசாவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மானசா அவன் நின்ற தோரணையில் எரிச்சலுற்றவள் “சும்மா விளையாடாதிங்க சார்… எனக்கு நிறைய வேலை இருக்கு… இதுல காதல்னு புது தலைவலியைக் கொண்டு வராதிங்க” என்று சற்று காட்டமான குரலில் உரைத்துவிட்டு நிற்க

“அப்போ நான் மட்டும் வெட்டியா பொழுதை கழிக்கிறவனா? எனக்கும் ஆயிரம் வேலை இருக்கு மேடம்… பட் அதுக்காக காதலிக்க கூடாதுனு எதாவது கட்டாயம் இருக்குதா?” என்று கேட்டவன் அவள் நெற்றியில் சண்டித்தனம் செய்யும் கூந்தலை ஒதுக்கிவிடவும் மானசாவின் விழிகள் அகல விரிய அந்த விழிகள் எனும் புதைக்குழியில் சிக்கியவன் காதோரம் கூந்தலை ஒதுக்கிவிட்ட பிறகும் விரல்களை விலக்க இயலாது காது மடல்களை வருடி விட்டான்.

மானசா சிலையாய் திகைத்து நின்றவள் கடல் அலையின் இரைச்சலில் சுயநினைவு வந்தவளாய் அவன் கரத்தைப் பட்டென்று தட்டிவிட்டு தானே கூந்தலை ஒதுக்கிக் கொண்டாள்.

ஜெயதேவ் சாக்லேட் பிடுங்கப்பட்ட குழந்தை போல பரிதாபமாக விழித்தபடி நிற்க மானசா விழிகளைச் சுருக்கி அவனைக் கூர்மையாக நோக்கியபடியே

“உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாது தேவ்… நீங்களும், நானும் எதிரெதிர் துருவம்… உங்களோட கொள்கை எதுவுமே என்னோட கொள்கையோட ஒத்துப்போகாது” என்று மறுமொழி பகர அவன் அசட்டையாகத் தோளைக் குலுக்கிக் கொண்டான்.

“லுக் மிஸ் தேவி! நம்ம ரெண்டு பேரும் அந்தக் கொள்கை கூடவா குடும்பம் நடத்தப்போறோம்? அது ஒரு ஓரமா இருக்கட்டும்… நான் நம்ம லைப் பத்தி பேசிட்டிருக்கேன்… நீங்க இஷ்டத்துக்கு வினாயகமூர்த்தி கிட்ட சவால் விட்டுட்டு வந்துட்டிங்கனு கேள்விப்பட்டேன்… ஒவ்வொரு நிமிசமும் அந்தாளோட கிரிமினல் புத்தியால உங்களுக்கு எதுவும் ஆகிடுமோனு பயந்திட்டிருக்க முடியாது… டிரை டு அண்டர்ஸ்டாண்ட் மீ… ஐ லவ் யூ மனு”

அவனது கடைசிவார்த்தையில் மானசாவின் இதயத்தில் ஒரு மினி பூகம்பம் வந்து அடங்கியது என்றால் மிகையில்லை. ஆனால் அதைக் காட்டிக்கொள்ளாது

“அது என்ன மனு? எனக்கு என் நேமை சுருக்கி கூப்பிட்டா பிடிக்காது?” என்று குறைப்பட்டாள் அவள்.

“அப்போ நான் ஐ லவ் யூனு சொன்னது உனக்கு பிரச்சனை இல்ல… நேமை சுருக்கி கூப்பிட்டது தான் பிரச்சனை அப்பிடி தானே!” என்று கேட்டான் தேவ் கேலியாக.

மானசா அதற்கு பதிலளிக்க முயல்வதற்குள் “ஜீவா சார் இப்பிடி நீளமா பேர் வச்சா நான் என்ன பண்ண முடியும்? மானசானு சொன்னா ரொம்ப ஃபார்மலா இருக்கு… தேவினு எல்லாரையும் மாதிரியும் என்னால கூப்பிட முடியாது… பிகாஸ் ஐ அம் வெரி ஸ்பெஷல் டூ யூ… அதான் செல்லமா கூப்பிட அழகா ஒரு நேமை கண்டுபிடிச்சிட்டேன் மனு… கேக்கவே எவ்ளோ ஸ்வீட்டா இருக்கு தெரியுமா?” என்று கண்ணை மூடி ரசனையோடு அவன் சொன்ன பாவனையில் மானசாதேவிக்கு மயக்கம் ஒன்று தான் வரவில்லை.

இவனிடம் இன்னும் சில நிமிடங்கள் பேசினால் அதுவும் வந்துவிடும் போல என்று எண்ணியவளாய் தலையை உலுக்கிக் கொண்டாள் அவள். அன்றைக்கு அவளுக்கு மயக்கம் வராமல் போயிருக்கலாம். ஆனால் அதன் பின் வந்த நாட்களில் ஜெயதேவ்வின் மீதான அவளது எண்ணம் மெதுமெதுவாய் காதல் வண்ணம் பூசிக்கொண்டது.

அடிக்கடி ஜீவானந்தத்தைச் சந்திக்க வருபவன் ஒரு முறை அவளைக் கையோடு வீட்டுக்கு அழைத்துச் சென்று தனது குடும்பத்தாரிடம் அறிமுகம் செய்துவைத்தான். மானசாதேவிக்கும் சாந்தினியின் கலகலப்பான பேச்சு, விஸ்வநாதனின் எளிமை, சங்கரராமனின் பாசம் கூடவே ஜெயதேவ்வின் காதல் எல்லாமே பிடித்துப் போனது.

இருவரும் கடற்கரையில் தனித்திருந்த ஒரு அழகான பௌர்ணமி இரவில் அலை கடலை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் அருகில் அமர்ந்திருந்தவளின் விழிகள் அவனை நோக்கியவாறு இருக்க கரங்கள் மணலில் அலைந்து கொண்டிருந்த அவனது கரங்களை ஆதரவாய்ப் பற்றிக் கொள்ள அவனைத் தன்புறம் திருப்பி “ஐ லவ் யூ தேவ்” என்று மனதின் காதலை மறவாது அவனிடம் உரைத்தவள் கூடியவிரைவில் தேவ்வின் மனுவாகிப் போனாள்.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவரின் காதலும் வளர்ந்த அச்சமயத்தில் பிஜூ என்பவனின் மனதில் வன்மமும் வளர்ந்தது. இளவயதிலிருந்தே மானசாதேவி தனக்குத் தான் என்று ஒருதலையாகக் காதலித்தவனால் மானசா தன்னை நல்ல நண்பனாக மட்டுமே இந்நாள் வரை கருதியிருக்கிறாள் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

அதன் காரணமாக அவன் இதயத்தில் வெறுப்பு வேர் பிடிக்கத் தொடங்கியது. முன்பு போல ரிஷியிடமும் மானசாவிடமும் பேசுவதைத் தவிர்த்தவன் மானசாவை தொடர்ந்து ஆட்கள் மூலம் கண்காணித்து வந்த வினாயகமூர்த்தி வஞ்சகமான வார்த்தையில் விரித்த வலையில் விழுந்தான். அவனை அம்பாக எய்து மானசாதேவியின் உயிரைக் குடித்துவிடும் எண்ணத்துடன் உலாவிய வினாயகமூர்த்தி அடிக்கடி ஜெயதேவ் பணக்காரன் என்பதாலேயே மானசாதேவி அவனைக் காதலிக்கிறாள் என்று மானசாவை பற்றி தவறான எண்ணங்களைப் பதிய வைத்தார்.

அவனும் மதிகெட்ட மூடனாய் அவரது விஷ வார்த்தைகளில் நெஞ்சை நனைத்தவன் முழுவதும் விஷமாகிப் போனான். தனக்குக் கிடைக்காதவள் உயிருடன் இருந்து என்ன பலன் என்று யோசித்தவன் வினாயமூர்த்தியுடன் சேர்ந்து தீண்டிய திட்டத்தில் முதல் பலியாகச் சிக்கிக் கொண்டது ஜீவானந்தம் தான்.

மானசாதேவிக்கு தந்தை என்றால் உயிர் என்பதால் முதலில் அவரைக் காலி செய்யலாம் என வினாயகமூர்த்தி தூண்டி விட பிஜூ ஜீவானந்தத்தின் தினசரி நடவடிக்கைகளைப் பற்றி வினாயகமூர்த்திக்குத் தகவல் கொடுத்தான்.

அதன் படி ஒரு நாள் காரில் அவர் வீடு திரும்பும் போது அடியாட்களால் வழி மறிக்கப்பட்ட ஜீவானந்தம் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டத் தகவல் பிஜூவின் மூலமாக மானசாவைச் சென்றடைந்தது. ரிஷியை அழைத்துக் கொண்டு அவள் மருத்துவமனைக்கு விரைந்தாள்.

மருத்துவமனை கட்டிலில் உடல் முழுவதுக் கட்டுகளுடன் முகம் கூடத் தெரியாதவாறு செயற்கைச்சுவாசம் அளிக்கப்பட்ட நிலையில் கிடந்தார் ஜீவானந்தம். மானசாதேவி எதற்கும் கலங்காதவள் முதல் முறை தந்தையின் நிலையைக் கண்டு மனமுடைந்து போனாள். மருத்துவர்கள் இன்னும் உறுதியாகச் சொல்லாத நிலையில் சிகிச்சை மட்டும் நடந்தபடி இருந்தது.

அன்றைய தினம் முழுவதும் ஜீவானந்தம் உயிருக்கு எவ்வித உத்திரவாதமும் அளிக்க இயலாது என்ற மருத்துவர்களின் நம்பிக்கையற்ற வார்த்தைகளும், கொலை முயற்சி என்பதால் விசாரணைக்கு வந்திருந்த காவல்துறையினரின் சொற்களுமாகச் சேர்ந்து ரிஷிக்கும் மானசாவுக்கும் பைத்தியம் பிடிக்காத குறை தான். இதை எல்லாம் பிஜூ ஒருவித குரூர மனதுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவர்களுடன் இருந்தபடியே!

ரிஷி ஜெயதேவுக்குப் போன் செய்து விசயத்தைச் சொல்ல பதறியடித்துக் கொண்டு வந்தவன் ஜீவானந்தம் இருந்த நிலையைக் கண்டதும் பதறிப்போய் விட்டான். இடிந்து போனவளாய் அமர்ந்திருந்த மானசாவின் கரத்தை அவன் பற்றிய காட்சி பிஜூவின் மனதில் இன்னும் வன்மத்தீயை கொழுந்துவிட்டு எரியச் செய்தது.

ஜெயதேவ் அன்று இரவு முழுவதும் ரிஷியுடனும் மானசாவுடனும் மருத்துவமனையிலிருந்தவன் வேண்டுதலுக்காகக் கோயிலுக்குச் சென்றிருந்த குடும்பத்தினரிடம் ஜீவானந்தத்தின் நிலையைக் கூறிவிட சாந்தினி அவருக்காகவும் கடவுளிடம் வேண்டுதல் வைத்தார்.

அன்றைய இரவு மூவருமே உறங்கவில்லை. மறுநாள் விடியல் புலர்ந்ததும் மானசா ரிஷியையும் தேவ்வையும் வீட்டுக்குச் செல்லுமாறு பணித்தவள் தந்தையை தான் பார்த்துக் கொள்வதாகக் கூறிவிட்டாள்.

பின்னர் நேரம் கழிய மருத்துவர் ஜீவானந்தத்தைப் பரிசோதித்தவர் இனி அவருக்குச் செயற்கைச்சுவாசம் தேவையில்லை என்று கூறியபிறகு தான் மானசா மூச்சுவிட்டாள். இந்த விசயத்தை உடனே ஜெயதேவுக்கும் ரிஷிக்கும் போன் செய்து சொன்னவள் அவளுக்கு இருந்த மனநிலையில் பிஜூ என்பவனை மறந்தே போனாள்.

ரிஷியும் ஜெய்யும் மருத்துவமனைக்கு வந்த நேரத்தில் ஜீவானந்தம் கண் விழித்தார். பேசுவதற்கு அவர் இன்னும் சிரமப்பட அவர்கள் மூவராலும் அவரது சைகை மொழியைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவர் சொன்னது விஷயம் இது தான்.

“நான் பிழைக்கிறது கஷ்டம்.. என் மகளுக்கும் ஜெய்கும் நடக்கப்போற கல்யாணத்தை பார்க்காம நான் சாகப்போறேனே” என்பது தான். சற்று முன்னர் அவர் மயக்கத்திலிருப்பதாக எண்ணிச் செவிலியரும் மருத்துவரும் பேசியதை அவர் கேட்டுவிட்டார்.

அவர் இவ்வாறு கூறவும் மானசாவுக்கு அழுகையில் தொண்டை அடைத்தது.

“அப்பிடிலாம் சொல்லாதிங்கப்பா” என்றவளின் குரல் கம்மியதும் ஜீவானந்தம் சிரமத்துடன் ஜெய்யைத் தன் அருகில் அழைத்தவர்

“தேவி…ய… கல்…. யாணம் பண்ணிக்கோ ஜெய்…. நான் போய்…. சேர முன்னாடி… உங்க….கல்…கல்யாணத்தைப் பார்க்கணும்” என்று சிரமத்துடன் பேச அதற்கு மேல் ஜெயதேவால் அவரது பேச்சைத் தட்ட முடியவில்லை.

அடுத்த சில மணிநேரங்களில் ரிஷி அலைந்து திரிந்து எங்கேயோ மஞ்சள் கயிறும் மாங்கல்யமும் வாங்கிவர அதை மானசாதேவியின் கழுத்தில் அணிவித்து ஜீவானந்தம் முன்னிலையில் அவளைத் திருமதி ஜெயதேவ் ஆக்கிக் கொண்டான்.

அக்காட்சியைக் கண்டதும் ஜீவானந்தம் நிம்மதியடைந்ததை கட்டுகளுக்கு இடையே புலப்பட்ட அவரது முகப்பிரதேசத்தில் தென்பட்ட அமைதியில் கண்டுகொண்டனர் மூவரும். அதன் பின்னர் மருத்துவர் வந்துவிட மூவரும் வெளியேறினர்.

ஜெயதேவ் மானசாவிடம் “மனு! எதைப் பத்தியும் யோசிச்சு குழப்பிக்காத… உன்னோட லட்சியம் நிறைவேற வரைக்கும் நீ மானசா ஜீவானந்தம் தான்.. இந்த மேரேஜ் சாரோட மனதிருப்திக்காக நடந்த்து… இதால உன்னோட லட்சியத்துல எந்தப் பிரச்சனையும் வராது” என்று சொன்னதும் அவள் கண்கள் பனித்தது.

“எனக்கு உன்னைப் பத்தி தெரியும் தேவ்… நீ இவ்ளோ தூரம் சொல்லுறதுக்கு எதுவும் இல்ல… தேங்க்யூ சோ மச்… அப்பாவோட ஆசையை நிறைவேத்துனதுக்கு” என்றவளை பொய்யாக முறைத்தவனை ரிஷி தன் புறமாகத் திருப்பினான்.

“நீங்க எவ்ளோ பெரிய விசயத்தைப் பண்ணிருக்கிங்க தெரியுமா? நீங்க காதலிச்ச பொண்ணை தான் கல்யாணம் பண்ணிருக்கிங்க… ஆனா உங்களோட கல்யாணம் பத்தி உங்க பேரண்ட்சுக்கும் உங்களுக்கும் ஏகப்பட்ட கனவுகள் இருந்திருக்கும்… அதையெல்லாம் யோசிக்காம சித்தப்பாவுக்காக நீங்க செஞ்ச இந்தக் காரியத்தை நான் என்னைக்குமே மறக்க மாட்டேன் தேவ் சார்”

உணர்ச்சிகரமான குரலில் உரைத்தவன் ஜெயதேவ்வை கட்டிக்கொண்டான். அதன் பின்னர் மாலை வரை மூவரும் அங்கேயே இருந்தனர். நேரம் ஐந்து மணியைக் கடக்கவும் மானசாவை தேவ்வுடன் வீட்டுக்குச் செல்லுமாறு பணித்தவன் அவர்கள் சென்றதும் மருத்துவமனைக்குள் நுழைந்த பிஜூவிடம் மானசா தேவ்வின் திடீர் திருமணம் குறித்து மறைக்காமல் சொல்லிவிட்டான். பிஜூவுக்கு இதைக் கேட்டதும் ரிஷியைக் கழுத்தை நெறித்துக் கொல்லுமளவுக்கு ஆத்திரம் வந்தது.

முகம் கோபத்தில் சிவக்க வெறிபிடித்தவனைப் போல நின்றவனை ரிஷி கவனியாது விட்டதன் பலன் மருத்துவர் அழைக்கிறார் என்று செவிலி வந்து அழைத்ததும் ரிஷி நகர அந்தச் சிறிய இடைவெளியை பயன்படுத்தி ஜீவானந்தம் அனுமதிக்கப்பட்ட அறைக்குள் சென்ற பிஜூ மருந்தின் உதவியோடு உறங்கிக் கொண்டிருந்தவரின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்திக் கொன்று விட்டு அங்கிருந்து ஓடிவிட்டான்.

வெளியே சென்றவனின் மனம் முழுவதும் பழிவெறி மட்டுமே கூத்தாட அடுத்த இலக்கு மானசா என்று எண்ணியவனை வினாயகமூர்த்தியின் போன் கால் வந்து கவனம் கலைத்தது.

“இப்போ தானே இந்தாளுக்கு எவிடென்ஸ் எல்லாத்தையும் குடுத்துட்டு வந்தேன்” என்று முணுமுணுத்தவன் அவரிடம் விசயத்தை வினவினான்.

“நான் சொன்னபடி நீ எவிடென்சை கொண்டு வந்து குடுத்துட்ட… ஆனா அதை கலெக்ட் பண்ணுனவ இன்னும் உயிரோட இருக்காளே பிஜூ… என்னைக்கு இருந்தாலும் அவ மறுபடியும் ஆதாரத்தை சேர்ப்பா… மறுபடியும் நீ அதை திருடணும்… நமக்கு இந்த தேவையில்லாத வேலை அவசியமா? அதான் நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன்” என்றவர் தனது திட்டத்தை பிஜூவிடம் கூற அவன் முகத்தில் ஒரு வஞ்சகப்புன்னகை நெளிந்தது.

தான் வருவதாகச் சொல்லி போனை வைத்தவன் நேரே வினாயகமூர்த்தி வரச் சொன்ன பழைய கொடவுனுக்குக் காரைச் செலுத்தினான்.

அதே நேரம் மானசா ஜெயதேவ்வுடன் ஃப்ளாட்டுக்குத் திரும்பியவள் அவனுக்கு அலுவலகத்திலிருந்து ஏதோ மீட்டிங் என்று அழைப்பு வரவும் அவன் செல்வதாகக் கூற அவளுக்கு ஏதோ போல மனம் கனத்துப் போனது.

அவனது கரத்தைப் பற்றி நிறுத்தியவள் அவனை அணைத்துக் கொண்டாள். அவனது இதயத்துடிப்பின் இலயத்தில் ஒன்றியவளுக்கு மனதில் தோன்றிய கனத்த உணர்வு இன்னும் அகலவில்லை.

“ஐ லவ் யூ தேவ்! எனக்கு என்னமோ தப்பா நடக்கப் போற மாதிரியே தோணுதுடா”

ஜெயதேவ் புருவம் சுருக்கியவன் தன் மார்புக்கூட்டுக்குள் புகுவதைப் போல கட்டிக் கொண்டிருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டவன் “நான் இருக்கிறப்போ உன்னை யாராலயும் எதுவும் பண்ண முடியாது… வினாயகமூர்த்தி விசயத்துல தலையிடாம குட்கேர்ளா இரு மனு… அந்தாளுக்கு பாடம் கத்துக் குடுக்க நான் ஒரு திட்டம் போட்டிருக்கேன்” என்று உரைத்துவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

அந்த ஒற்றை முத்தத்தில் யுகயுகமாய் தொடரும் காதலின் பந்தத்தை உணர்ந்தவளுக்கு மனதுக்குள் பிசைந்தது. அதை வெளிப்படையாகச் சொல்வதற்கு முன்னர் தேவ்விற்கு மீண்டும் அலுவலகத்திலிருந்து போன் வரவும் அவன் சிறிது நேரத்தில் வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்ப மானசாதேவிக்கு மனதில் இன்னும் அலைக்கழிப்பு அடங்கவில்லை.

அவன் அங்கே சென்ற சில நிமிடங்களில் மானசாவுக்கு பிஜூவின் போனில் இருந்து அழைப்பு வந்தது. அதே நேரம் மருத்துவமனையில் ரிஷி ஜீவானந்தத்தின் உயிர் பிரிந்ததைக் கேட்டு அதிர்ந்து நின்றான்.

பெற்றோருக்கும் மேலாய் தன்னை வளர்த்தவரின் மரணத்தில் கலங்கி நின்றவன் அழக் கூடத் திராணியற்று ஒடுங்கிய அந்நேரத்தில் மானசாதேவி வினாயகமூர்த்தி பிஜூவைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதால் அவரது கொடவுனுக்குச் சென்று நண்பனைக் காப்பதற்காக அவரிடம் பேசிக் கொண்டிருந்தாள். அவள் செய்த முட்டாள்தனம் காவல்துறைக்கோ ஜெயதேவுக்கோ அழைத்துச் சொல்லாமல் விட்டது தான்.

ஆனால் முந்தைய தினம் நடந்த தந்தையின் விபத்து அவளது யோசிக்கும் திறனை மரத்துப்போகச் செய்துவிட்டது. இந்தப் போராட்டத்தில் தந்தையின் நிலமை பிஜூவுக்கும் வந்துவிடுமோ என்ற பதற்றம் தான் அவளை அவர் முன் நிற்க வைத்தது.

ஆனால் வினாயகமூர்த்தி என்ற விஷப்பாம்புடன் சேர்ந்த பச்சோந்தி தான் பிஜூ என்பது அங்கே சென்ற பிறகு தான் மானசாதேவிக்குப் புரிந்தது.

“உன்னை நான் எவ்ளோ காதலிச்சேன் தெரியுமா தேவி? ஆனா நீ பணக்காரன்னு ஒரே காரணத்துக்காக அந்த ஜெயதேவை காதலிச்ச… அவன் கையால இன்னைக்குத் தாலியும் கட்டிக்கிட்டல்ல… அவன் கட்டுன தாலி இருக்கிற இந்த கழுத்தை இப்போவே அறுக்கணும்னு வெறியாகுது எனக்கு”

மானசாவுக்கு பிஜூவின் உண்மை ரூபமும் அவன் பேசிய சொற்களும் அருவருப்பை மூட்டியது. இவனையா இத்தனை நாட்கள் உயிர்நண்பன் என்று எண்ணியிருந்தோம் என்று தன்னையே வெறுத்துக் கொண்டாள் அவள்.

கிட்டத்தட்ட வெறிபிடித்தவனைப் போல கத்திய பிஜூவை வினாயமூர்த்தியின் வார்த்தைகள் இன்னுமே வெறிகொள்ள செய்தது.

“ஏன் காத்திருக்க பிஜூ? இவ உயிரோட இருந்தா நீ பைத்தியக்காரன் ஆகிடுவடா… அவளைக் கொன்னுரு”

என்னவோ காபி சாப்பிடு என்பது போல ஒரு பெண்ணை கொலை செய்யச் சொன்னவர் அவனிடம் கத்தியை நீட்ட பளபளத்த கத்தியுடன் சேர்ந்து பிஜூவின் விழிகளில் பழிவெறியும் பளபளத்தது.

மானசாவுக்கு இப்போதும் சாவைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. சுற்றிலும் வினாயகமூர்த்தியின் ஆட்கள் இருக்க அவளால் இங்கிருந்து தப்பிக்கவும் முடியாது. ஆனால் தனது இத்தனை வருடக்கனவை நிறைவேற்றாமலே சாகப்போகிறோம் என்று எண்ணியவள் எட்டுமணி நேரத்துக்கு முன்னர் கழுத்தில் தாலி கட்டிய காதல் கணவனை எண்ணி கண்ணை மூடிக்கொண்டாள்.

“ஐ லவ் யூ தேவ்! நான் செத்துப் போறதுக்குப் பயப்படல… ஆனா உன் கூட அழகான வாழ்க்கையை வாழணும்னு ஆசைப்பட்டேன் தேவ்… அது எல்லாமே கனவா போயிடுச்சே” என்று நினைக்கும் போதே மூடியிருந்த இமைகளின் வழியே கண்ணீர் வழிந்து கன்னங்களில் கோடு போட்டது.

அதே நேரம் பிஜூ அவளை நெருங்கியிருந்தவன் கூர் தீட்டிய கத்தியால் அவள் கழுத்தைப் பதம் பார்க்க வலியில் கண் திறந்த மானசா தொண்டையை அழுத்திக் கொண்டு தரையில் விழுந்தாள்.

வினாயகமூர்த்தி அதை பார்த்தவர் “இந்த அல்பாயுசுல போகணும்னு தலையெழுத்தா உனக்கு? பார்க்கவே பாவமா இருக்கு… சாகுறதுக்கு முன்னாடி ஒன்னு கேட்டுட்டு போம்மா… நீ தனியா சாகலை… உன்னோட அப்பாவும் உன் கூடவே துணைக்கு வருவாரு… இல்ல இல்ல அனேகமா அவருக்குத் தான் நீ துணைக்குப் போறேனு நினைக்கிறேன்” என்றவர் கொஞ்சம் கொஞ்சமாக உயிருக்குப் போராடியவளின் முன்னே அவள் திரட்டிய ஆதாரங்கள் அடங்கிய கோப்பை காட்ட மரணம் அடையும் அந்நேரத்திலும் மானசாவின் ஜீவன் இன்னும் தன்னால் அந்தக் கருப்பு பிசாசிடம் இருந்து கிராம மக்களை காப்பாற்ற இயலவில்லையே என்ற வேதனையுடன் அவளது உடலை விட்டு நீங்கியது.

பிஜூ அவள் துடிதுடித்து இறந்ததை ஒரு வித சைகோத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருக்க வினாயகமூர்த்தி மானசாவின் சடலத்தை அப்புறப்படுத்துமாறு கூறவும் யாருக்கும் சந்தேகம் வராதவாறு பழைய குப்பைகள் போடும் கிடங்கின் அருகில் மானசாவின் உடலை வீசிவிட்டான்.

அதேநேரம் ஜீவானந்தம் மறைந்த தகவலை மானசாவுக்குச் சொல்ல போன் செய்த ரிஷிக்கு அவள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் தகவலே பதிலாக கிடைத்தது. மனதில் ஏதோ தவறாகப்பட வேகமாக வீட்டுக்குச் சென்றவனுக்குப் பூட்டிய கதவுகளே பதிலாக கிடைத்தது.

உடனே ஜெயதேவுக்கு அழைத்தவன் அவனிடம் விசயத்தைச் சொல்லிவிட ஜீவானந்தத்தின் மரணத்துடன் மானசாதேவி தலைமறைவானதும் சேர்ந்து ஜெயதேவிற்கு பைத்தியம் மட்டும் தான் பிடிக்கவில்லை.

மருத்துவமனைக்கு விரைந்தவன் அங்கே ஜீவானந்தத்தின் உடலைக் கண்டதும் கண் கலங்கினான். கூடவே தாலி கட்டிய மனைவியைக் காணவில்லை என்ற கலக்கம் வேறு. மீண்டும் காவல்துறை விசாரணை இது திட்டமிட்டக் கொலையா என்ற ரீதியில் நடைபெற இரவு எட்டு மணியளவில் சமூகப்போராளியும் இயற்கை ஆர்வலருமான மானசா ஜீவானந்தம் சடலமாக கிடைத்தாள்.

மானசாவின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது அதைக் கண்டு ஜெயதேவ்வும் ரிஷியும் துடித்துப் போய்விட்டனர். இவ்வளவு கொடூரமாக கொல்லவேண்டிய அவசியம் யாருக்கு என்று காவல்துறை விசாரணையில் ஜெயதேவ் வினாயகமூர்த்தியின் பெயரைச் சொல்லிவிட்டான். இருவருமே இந்த சோகத்தில் பிஜூ என்பவனை கணக்கில் கொள்ளவில்லை.

பிரேதப்பரிசோதனை முடிந்து இருவரின் உடல்களும் ஒப்படைக்கப்பட ஜெயதேவ் வழிகாட்டியையும் காதல் மனைவியையும் ஒரே நேரத்தில் இழந்தவன் கல்லாய் இறுகிப்போய் விட்டான். இருவருக்கும் இறுதிச்சடங்கை முடித்த ரிஷியும் ஜெயதேவ்வும் அதன் பின்னர் ஓய்ந்து பித்துபிடித்த நிலையில் வாழ்வை வெறுத்துவிட்டனர்.

சாந்தினியும் மற்றவர்களும் எவ்வளவோ முயன்றும் இருவரையும் தேற்ற இயலவில்லை. கூடவே வினாயகமூர்த்தியும் வழக்கை உடைத்து வெளியே வந்துவிட ஜெயதேவ் இனி தன் வாழ்நாள் நோக்கமே மானசாதேவியின் கனவை நிறைவேற்றுவதும் அவளது இறப்புக்குக் காரணமான வினாயகமூர்த்தியைப் பழிவாங்குவதும் மட்டும் தான் என்று பழிவெறியுடன் மனதில் பதித்துக் கொண்டான்.

அதோடு இவ்வளவு நடந்தும் அங்கே தலை காட்டாத பிஜூவைச் சந்தேகித்தவன் தனது ஆட்களின் உதவியால் அவனும் வினாயமூர்த்திக்கு உடந்தை என்பதை அறிந்துகொண்டான். ஆனால் ரிஷியும் ஜெயதேவும் எவ்வளவு முயன்றும் தலைமறைவாக இருந்த பிஜூவை கண்டுபிடிக்க இயலவில்லை.

அநியாயம் செய்தவர்களைக் கடவுள் அதிகநாட்கள் பூமியில் விட்டு வைப்பதில்லை. எனவே இரு நல்லவர்களின் உயிரை எடுத்தப் பாவமோ என்னவோ பிஜூ அடுத்தச் சில தினங்களிலேயே ஒரு சாலைவிபத்தில் கொடூரமாக இறந்து போனான். கடைசி நிமிடங்களில் மானசாவையும் ஜீவானந்தத்தையும் எண்ணியே உயிரை விட்டான் அவன்.

அவனது இறப்பு பற்றிய செய்தி ஜெயதேவ், ரிஷியின் மனதுக்கு நிம்மதியளித்தாலும் அவர்கள் வாழ்வில் ஜீவானந்தம், மானசாதேவியின் பிரசன்னமற்று தோன்றிய வெற்றிடத்தை நான்கு வருடங்களாக யாராலும் நிரப்ப முடியவில்லை.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛