5 – இதயத்திரை விலகிடாதோ?

அத்தியாயம் – 5

முதல் முதலாகச் சூர்யா குடித்து விட்டு வந்த போது, உடைந்து தான் போனாள் யுவஸ்ரீ.

குடித்து விட்டு வந்து அவளையும் அவன் நாட, “எனக்கு இந்த வாடையே பிடிக்கலை. பக்கத்தில் வராதீங்க…” என்று பலமாக எதிர்ப்பு தெரிவித்தாள்.

அவள் முகத்தை விடிவிளக்கின் ஒளியில் பார்த்தவன், “நீ‌ என் பொண்டாட்டி. அது ஞாபகம் இருக்குத்தானே?” என்று கேட்டான்.

அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று, அவளை உடனே பதில் சொல்ல விடவில்லை. அமைதியாக அவன் முகத்தை வெறித்தாள்.

“சொல்லு, என் பொண்டாட்டி தானே? உன்கிட்ட எல்லா ரைட்ஸும் எனக்கு இருக்கு தானே? சொல்லு…” என்று அவள் தோளை பிடித்து உலுக்கினான்.

முதல் முதலாகக் கணவன் குடித்து விட்டு வந்ததில் ஏற்கெனவே பயந்திருந்தவள், அவன் அப்படிக் கேட்டதும் இன்னும் பயந்து போனாள்.

தன்னைக் கொடுமை படுத்துவானோ? அடிப்பானோ? சூடு வைப்பானோ? வக்கிரமாக நடந்து கொள்வானோ? என்று ஏதேதோ நினைத்துப் பயந்து போனாள்.

ஆண்கள் பெண்களிடம் நடத்தும் எத்தனையோ கொடுமைகளைப் பற்றி அவள் கேள்விப்பட்டது எல்லாம் மனதில் கணநேரத்தில் வந்து போக, அவளின் மேனி நடுங்க ஆரம்பித்தது.

அவளின் நடுக்கத்தை உணர்ந்தோ? இல்லை, வேறு எண்ணமோ? எதுவோ ஒன்று! அந்த நேரம் போதையிலும் மென்மையாக அவளை அணைத்தான் சூர்யா.

“என்னைக் கொடுமை படுத்துவீங்களா?” என்று அவனின் அணைப்பில் இருந்து கொண்டே நடுக்கத்துடன் கேட்டாள்.

“என்ன, கொடுமையா?” என்று வேகமாக விலகி அவள் முகம் பார்த்தான்.

அவள் முகத்தில் அப்பட்டமாகப் பயம் தெரிய, “ஹாஹாஹா…” என்று வாய்விட்டுச் சிரித்தான்.

அந்தச் சிரிப்பு கூட அவளுக்கு அந்த நேரம் பயத்தைத் தான் தந்தது.

“ரிலாக்ஸ்க்குக் குடிப்பேன். அதுக்காக நான் ஒன்னும் கொடுமைக்காரன் இல்லை. புதுப் பொண்டாட்டியை விட்டுட்டு படுக்க முடியலைன்னு பக்கத்தில் வந்தால் பயந்து நடுங்குற?” என்றவன் அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.

அதில் அவள் பயமும் கூடச் சிறிது குறைந்தது. தான் நினைத்தபடி கணவன் அவ்வளவு மோசமானவன் இல்லை என்ற சிறு நிம்மதியும் உண்டாயிற்று.

அதன் பிறகு மெல்ல மெல்ல அவளை அவன் ஆக்கிரமிக்க ஆரம்பிக்க, மதுவின் வாடை பிடிக்கவில்லை என்றாலும் அவன் வக்கிரமாக எதுவும் நடந்து கொள்ளவில்லை என்பதால் அவள் பயம் குறைந்தது.

வக்கிரம் காட்டவில்லை என்றாலும், சற்று முரட்டுத்தனத்தைக் காட்டவே செய்தான்.

அவள் நினைத்த அளவுக்கு அவன் கொடுமை காட்டவில்லை என்பதால், அதையும் அவளால் பொறுத்துக் கொள்ள முடிந்தது.

காலையில் எழுந்து அமைதியாக உறங்கி கொண்டிருந்த கணவனை வெறித்துப் பார்த்தாள்.

அப்போது அவனும் விழிக்க, அவள் அமர்ந்திருந்த நிலையைப் பார்த்து பட்டென்று எழுந்து அமர்ந்தான்.

“ஏய், என்ன இது? இப்படி உட்கார்ந்து இருக்க? புருஷன், பொண்டாட்டிக்குள்ள நடக்க வேண்டியது தானே நடந்தது? என்னவோ, உன்னைக் கட்டாயமா நான் கற்பழிச்சது போலப் போஸ் கொடுத்துட்டு இருக்க?” என்று கேட்டான்.

கால்களைக் கட்டிக் கொண்டு அதில் முகத்தைச் சாய்த்து அவனை வில்லன் போல் அவள் பார்த்துக் கொண்டிருந்தது அவனை அப்படிக் கேட்க வைத்தது.

“நீங்க ஏன் நைட் குடிச்சுட்டு வந்தீங்க?” அவன் கேள்வி காதில் விழாதது போல் தனக்கு முக்கியம் என்று தோன்றியதை மட்டும் கேட்டாள்.

“நம்ம கல்யாணத்துக்கு நேத்து என் ஃபிரண்ட்ஸ்க்கு ட்ரீட் வச்சேன். அவங்களுக்கு எல்லாம் வாங்கிக் கொடுத்துட்டு நான் குடிக்கலைனா எப்படி?” என்று அவளிடமே நியாயம் கேட்டான்.

“அப்போ நேத்து மட்டும் தான் குடிச்சீங்களா? இனி குடிக்க மாட்டீங்க தானே?” என்று ஆவலாகக் கேட்டவளை, ஒரு தினுசாகப் பார்த்தவன், பதில் எதுவும் சொல்லாமல் எழுந்து சென்று விட்டான்.

‘என்ன ஒன்னுமே சொல்லாம போறார்? குடிப்பாரா, மாட்டாரா?’ என்ற அவளின் கேள்விகளுக்கு அந்த வார இறுதியில் தான் அவளுக்குப் பதில் தெரிந்தது.

அன்று இருவருமே வேலைக்குச் செல்லும் நாள்.

யுவஸ்ரீக்கு முதல் நாள் என்பதால் பரபரப்பாகவே கிளம்பிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு முன் கிளம்பியிருந்த சூர்யா, காலை உணவை முடித்து விட்டு அவன் பாட்டுக்கு வேலைக்குக் கிளம்ப, “என்னங்க…” என்று அழைத்து நிறுத்தினாள் யுவஸ்ரீ.

“என்ன?”

“எங்கே கிளம்பிட்டீங்க?”

“வேலைக்கு. கல்யாணத்துக்கு எடுத்த லீவ் முடிந்தது…” என்றான்.

“அது தெரியும். ஆனா என்னையும் அழைச்சுட்டு போகாம போறீங்க?” என்று கேட்டாள்.

“உன்னையா? நீ ஆட்டோ பிடிச்சு போ…” என்று சொல்லி விட்டு அவன் நிற்காமல் கிளம்பி விட, அதிர்ந்து நின்றாள்.

ஒரே இடத்திற்கு வேலைக்குச் செல்கிறோம். கணவன் அழைத்துச் செல்வான் என்று நினைத்துச் சந்தோஷமாக இருந்தாள்.

அவளின் அம்மாவிடமும் அதைத்தான் சொல்லியிருந்தாள். அவரும் மருமகன் மகளைப் பார்த்துக் கொள்வான் என்று நினைத்துக் கவலையில்லாமல் இருந்தார்.

அவன் இப்படி விட்டுவிட்டு செல்வான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

சில நொடிகள் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் அப்படி விட்டுச் சென்றது கண்களையும் கலங்க வைத்தது.

நேரமாவதை உணர்ந்து தன்னை எப்படியோ சமாளித்துக்கொண்டு வேலைக்குக் கிளம்பினாள்.

ஆட்டோவில் அலுவலகம் சென்று இறங்கியபோது கம்பெனி வளாகத்தில் பார்க்கிங்கில் நின்று அவனது நண்பர்களுடன் ஏதோ சிரித்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தான் சூர்யா.

இப்படி அவனின் நண்பர்களுடன் அரட்டை அடிக்கவா தன்னை விட்டுவிட்டு வந்தான்? என்று நினைக்கும் போதே அவளுக்கு வெறுத்துப் போனது.

அவனைப் பற்றி நினைக்க நேரமில்லாமல் முதல் நாள் அலுவலக அனுபவம் அவளை இழுக்க, கம்பெனிக்குள் சென்று வேலையில் சேர்ந்தாள்.

அன்று இரவு அவள் அலுவலகம் சென்ற கதையை அவளின் மாமியார் கேட்க, தான் ஆட்டோவில் சென்று வந்ததைச் சொல்ல, உடனே அவர் மகனுக்கு அழைத்துப் பேச ஆரம்பித்துவிட்டார்.

“நீ ஏன் யுவாவை கம்பெனிக்கு கூட்டிட்டு போகலை கண்ணா? உன் கூடத் தானே வேலை பார்க்கிறாள். உன் கூடவே கூட்டிட்டுப் போக வேண்டியது தானே?” என்று கேட்டார்.

“அம்மா, அவள் காலையில கிளம்ப லேட்டாகுது. அவளால் எனக்கும் லேட்டாகிடும். அவளுக்குத் தனியாக ஒரு வண்டி வாங்கிக் கொடுத்துவிடலாம். அவள் அதில் போய்ட்டு வரட்டும்…” என்றான்.

“ஒரே இடத்திற்கு வேலைக்குப் போவதற்கு எதுக்கு இரண்டு வண்டி? கொஞ்ச நேரமானாலும் பரவாயில்லை. அவளையும் உன் கூடக் கூட்டிட்டுப் போ…” என்றார் கண்டிப்பாக.

இதற்கு மேல் அன்னையிடம் பேசுவது வீண் என்று நினைத்தவன், “சரி, நீங்க வைங்க. நான் அவள்கிட்ட பேசிக்கிறேன்…” என்றான்.

“அவள்கிட்ட என்ன பேச போற? நான் சொன்னதைச் செய்!” என்றார் சித்ரா.

“அதான் நான் பார்த்துக்கிறேன்னு சொல்றேன்ல மா…” என்று அன்னையைச் சமாளித்து விட்டு அழைப்பை துண்டித்தான்.

“அம்மாகிட்ட என்ன சொன்ன?” என்று அவளிடம் வந்து கேட்டான்.

“காலையில் எப்படி வேலைக்குப் போனன்னு கேட்டாங்க, சொன்னேன்…” என்றாள்.

“இதோ பார், நாம இரண்டு பேரும் ஒரே இடத்தில் வேலை பார்க்கிறோம் என்பதற்காக, உன்னையும் என் கூடவே கூட்டிட்டுப் போய்ட்டு வர முடியாது. நம்ம இரண்டு பேருக்கும் வேலை ஆரம்பிக்க, முடிய… நேரம் முன்ன பின்ன ஆகும். அப்போ உனக்கு வேலை முடியட்டும்னு நானும், எனக்கு முடியட்டும்னு நீயும் காத்துக்கிட்டு இருக்க முடியாது. அதனால், உனக்கு ஒரு வண்டி வாங்கிக்கோ. நீ அதில் போய்ட்டு வா. அதுதான் சரியா இருக்கும்…” என்றான்.

இதுதான் என் முடிவு என்பது போல் சொல்லி விட்டுச் சென்று விட்ட கணவனை, என்ன சொல்வது? என்று யுவஸ்ரீக்கு தெரியவே இல்லை.

ஆனாலும் யோசித்துப் பார்த்ததில் அவன் சொல்வதும் சரி என்றே தோன்றியது.

மாலையில் இருவருக்கும் வேலை எப்போது முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அவனுக்கு முடிய நேரமானால் தானும் இரவு வரை அங்கேயே இருக்க முடியாது என்று தோன்றியது.

வீட்டு வேலைகளும் பார்த்தாக வேண்டும் என்பதால் அவன் தன் நல்லதிற்குத் தான் சொல்கிறான் என்று எடுத்துக் கொண்டாள்.

அதனால் அவளுக்குத் தனியாக வண்டி வாங்கிக் கொண்டாள்.

அந்த வார இறுதியில் வெள்ளி அன்று அவளுக்கு வேலை அதிகம் இல்லை என்று அவனுக்கு முதல் வீட்டிற்கு வந்து விட்டாள்.

அவன் வர நேரமானது. இரவு எட்டு மணிக்கு பிறகும் கணவன் வரவில்லை என்பதால் கைபேசியில் அழைத்தாள்.

முதல் அழைப்பு முழுதாக ரிங் அடித்து முடித்த பிறகும் அவன் எடுக்கவில்லை.

“நான் பப்ல இருக்கேன். நைட் லேட்டாத்தான் வருவேன். வை!” என்று அவள் பேச இடம் கொடாமல், தகவல் மட்டும் சொல்லிவிட்டு, உடனே வைத்து விட்டான்.

இரண்டாவது முறை போட்ட போது எடுத்தான்.

அவன் பப்பில் இருக்கிறான் என்றதும் பதறி போனாள். இன்றும் குடித்து விட்டு வருவானா? என்று அவள் பயந்தது போலவே அன்றும் குடித்து விட்டு வந்தான்.

“என்னங்க இது? இப்படிப் பண்றீங்க? குடிக்காதீங்க! உடம்புக்கு நல்லது இல்லை…” என்றாள்.

“அதெல்லாம் எனக்குத் தெரியும்…” என்றவன் அடுத்து அவளைப் பேசவே விடவில்லை.

“எனக்கு நீங்க குடிச்சிட்டு வருவது பிடிக்கவில்லை…” என்று அவள் சொன்னது அவன் காதில் ஏறவே இல்லை.

நடுவில் ஒரு வாரம் அவன் குடிக்கவில்லை என்றதால் அவள் சந்தோஷமாக இருந்தது எல்லாம் அன்றுடன் முடிந்து போனது.

மறுநாள் காலையில் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனால் அவள் பேச அவன் இடம் கொடுத்தால் தானே, அதற்கு முடிவு கட்ட முடியும்? காலையிலேயே வெளியே கிளம்பிச் சென்றுவிட்டான்.

ஒரு வாரம் வேலைக்குச் சென்று வந்த பிறகு, அன்று முதல் விடுமுறை வாரம் அவளுக்கு.

சனி, ஞாயிறு கணவனுடன் நேரம் செலவழிக்கலாம் என்று எதிர்பார்ப்புடன் இருந்தாள்.

ஆனால் அவளை அழைக்காமல் வெளியே சென்று விட்டான்.

முதலில் பக்கத்தில் எங்கேயாவது சென்றிருப்பான். வந்து விடுவான் என்று தான் அவளும் நினைத்தாள்.

ஆனால் மதியம் ஆன பிறகும் வரவில்லை என்றதும், அவனுக்கு அலைபேசியில் அழைத்தாள்.

ஆனால் அவனோ எடுக்கவே இல்லை.

என்னானதோ என்று பயந்து தான் போனாள்.

மாலை வரை மாற்றி மாற்றிப் போனில் அழைத்துக் கொண்டே இருந்தாள்.

அவளுக்கு அவனின் நண்பர்கள் பெயரும் தெரியவில்லை. யாரிடம் விசாரிப்பது? யாரிடம் கேட்டால் அவனைப் பற்றித் தெரியும்? என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

திருமணமான இத்தனை நாட்களில் அதைப் பற்றியெல்லாம் விசாரிக்காமல் விட்ட தன் மடத்தனத்தை நொந்து கொண்டாள். கூடவே, அவன் பேசினால்தானே தான் விசாரிக்க முடியும்? என்றும் தோன்றியது.

மீண்டும் மீண்டும் அவனுக்கு அழைத்தும் அவன் எடுக்கவே இல்லை என்றதும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் உடனே மாமியாருக்கு அழைத்து விட்டாள்.

அவள் விஷயத்தைச் சொல்ல, அவரும் அங்கே பயந்து போனார்.

“நீ பயப்படாதேமா! அவன் கூடப் படிச்ச ப்ரண்ட்ஸ் அங்கே இருக்காங்க. அவங்களைப் பார்க்க போயிருக்கானோ என்னவோ? அவன் ப்ரண்ட்ஸ் நம்பர் என்கிட்ட இருக்கு. நான் அவன்கிட்ட விசாரிக்கிறேன்…” என்றார்.

அரைமணி நேரம் சென்ற நிலையில், சூர்யா அவளுக்கு அழைத்தான்.

உடனே அழைப்பை எடுத்தவள், “என்னங்க, எங்க இருக்கீங்க? ஏன் போன் எடுக்கவே இல்லை. உங்களுக்கு என்னாச்சு?” என்று பதறி போய் விசாரித்தாள்.

“ம்ப்ச்… இப்ப எதுக்கு இப்படிக் கத்துற?” என்று சூர்யா அந்தப் பக்கமிருந்து பல்லை கடிக்க, அவ்வளவு நேரம் இருந்த பதட்டம் போய் உறைந்து போனாள்.

‘என்ன கத்துறாளா? காலையில் வெளியே போன கணவன் இன்னும் வரவில்லை. போனும் எடுக்கவில்லை என்று பதறி போய் அவனைத் தேடினால் நான் கத்துக்கிறேனா?’ என்று தான் அவளுக்குத் தோன்றியது.

“நான் என் ப்ரண்ட்ஸ் கூட வெளியே வந்திருக்கேன். நைட் தான் வருவேன். உனக்குப் பொழுது போகலைனா நீயும் உன் ப்ரண்ட்ஸ் கூட வெளியே போய்ட்டு வா. அதை விட்டு அம்மாவையும் பயமுறுத்தி, அவங்களை என் ப்ரண்ட்ஸ்க்கு போன் போட வைத்து ஸீன் கிரியேட் செய்யாதே. வை போனை!” என்று எரிச்சல்பட்டவன் உடனே வைத்து விட்டான்.

முகத்தில் அடித்தது போல் பேசுவது என்று அதுவரை கேள்வி தான் பட்டிருக்கிறாள். முதல் முறையாக அது எப்படி இருக்கும்? என்று கணவன் மூலம் அன்று அறிந்து கொண்டாள் யுவஸ்ரீ.

அவனின் மீது இருக்கிற அக்கறையினால் தானே பயந்தாள்.

என்னவோ காரணமே இல்லாமல் அவள் பயந்தது போலவும், நாடகம் ஆடுவது போலவும் நினைத்து அல்லவா பேசிவிட்டான்… என்று நினைக்க நினைக்க, அவள் மனம் ஆறவேவில்லை.

சற்று நேரத்துக்குப் பிறகு ‘கண்ணா பேசினானா?’ என்று கேட்டு மாமியார் போன் போட, “பேசினார் அத்தை…” என்றதுடன் பேச்சை முடித்துக் கொண்டாள்.

அவளால் அதற்குமேல் பேசவே முடியவில்லை. கணவனின் செயல்கள் யாவும் அவளின் கண்களைக் கரிக்க வைத்துக் கொண்டிருந்தது.

தனியாக அமர்ந்து அழுதாள்.

அன்று இரவும் முதல் நாள் போலவே தொடர, அப்பொழுதுதான் அவன் தொடர்ந்து குடிப்பான் என்று அவளுக்குப் புரிந்தது.

அதோடு அவன் ஏன் தன்னிடம் சொல்லாமல் போனான். தன்னை வெளியே அழைத்துச் செல்லாமல் ஏன் நண்பர்களுடன் சென்றான் என்று அவளால் அவன் இருந்த நிலையில் கேட்கவே முடியவில்லை.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் அதே போல் அவன் வெளியே கிளம்ப, இந்த முறை அவள் விடவில்லை.

“நில்லுங்க!” என்று அவள் கத்திய கத்தில், வாசல் அருகில் சென்று கொண்டிருந்தவன், அதிர்ந்து நின்றான்.

“உங்க மனதில் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? நீங்களா போறீங்க… வர்றீங்க… எங்க போறீங்கன்னும் சொல்ல மாட்டிங்கிறீங்க. இந்த வீட்டில் நானும் ஒருத்தி இருக்கேன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்லையா?” என்று கேட்டாள்.

அவளின் புறம் நிதானமாகத் திரும்பிய சூர்யா, “இப்ப ஏன் இப்படிக் கத்துற?” என்று கேட்டான்.

“கத்துறேனா? ஏன் சொல்ல மாட்டீங்க? நேத்து உங்களைக் காணோம்னு அவ்வளவு பயந்து போன் போட்டால் அப்பவும் இப்படித்தான் சொன்னீங்க. அதோடு ஸீன் கிரியேட் பண்றேன்னு சொல்றீங்க. அப்படி என்ன நான் ஸீன் கிரியேட் செய்தேன்?” என்று கேட்டாள்.

“பின்ன, நீ செய்ததை எப்படிச் சொல்வது? நான் எங்க போறேன், எப்ப வருவேன், யார் கூட இருக்கேன்னு எல்லாம் உன்கிட்ட சொல்லிக்கிட்டே இருக்கணுமா? என்னால் அது முடியாது… எனக்குப் பழக்கமும் இல்லை…” என்றான்.

“இதுவரை பழக்கம் இல்லாமல் இருக்கலாம். ஆனா இனி பழகிக்கோங்க…” என்றாள்.

“புதுப் பழக்கம் எல்லாம் என்னால் பழக முடியாது…” என்றான் பிடிவாதமாக.

“நான் உங்க வொய்ப். அதாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்லையா? உங்களை நம்பித்தான். இந்த வீட்டுக்கு வந்திருக்கேன். என்னை இப்படித் தனியா விட்டுட்டுப் போனால் என்ன அர்த்தம்? தனியாக இருந்து நீங்க செய்றதெல்லாம் யோசித்து எனக்குப் பைத்தியமே பிடித்து விடும் போல இருக்கு…” என்றாள்.

“இப்ப என்ன உன்னையும் கூட்டிட்டு போகலைன்னு தான் கோபமா? அப்போ கிளம்பி வா, போவோம்…” என்றான்.

முதலில் அவன் அழைத்ததும் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. செல்வதா? வேண்டாமா? என்று சில நொடிகள் யோசித்தாள். தான் கேட்ட பிறகு அவன் அழைத்துச் செல்கிறேன் என்று சொல்கிறானே என்றும் யோசனையாக இருந்தது.

ஆனால் இன்று தானும் அவனுடன் வெளியே சென்றால் அவனைக் குடிக்க விடாமல் அழைத்து வந்து விடலாமே என்று தோன்றியதும் உடனே அவனுடன் கிளம்பினாள்.

அவள் ஆவலாகத் தான் கணவனுடன் வெளியே சென்றாள். ஆனால் அங்கே சென்ற பிறகுதான் ஏன் சென்றோம்? என்று அவளை நினைக்க வைத்தான் சூர்யா.