5 – மின்னல் பூவே!

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 5

அன்று கல்லூரியே ஆரவாரமாக இருந்தது.

வண்ண வண்ண உடையில் எப்போதையும் விட அதீத அலங்காரத்துடன் மாணவிகள் வலம் வர,

யாரைப் பார்ப்பது, யாரை விடுவது என்று குழப்பத்துடன் மாணவர்கள் ரோமியோக்கள் போலச் சுற்றி வந்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய நிகழ்ச்சியைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் வலம் வந்தனர்.

உத்ரா பாட்டு பாடவும், அது முடிந்தவுடன் நடனம் ஆடவும் தயாராகிக் கொண்டிருந்தாள்.

கடந்த பத்து தினங்களாக முகில்வண்ணனுடன் சேர்ந்து பாடல் பயிற்சி மேற்கொண்டிருந்தாள்.

அந்த நாட்களில் இருவருக்கும் இடையே எந்த விதமான பூசலும் எழவில்லை.

உத்ரா அவனுடன் சகஜமாக உரையாட, முகில்வண்ணன் பட்டும் படாமல் தேவைக்கு மட்டுமே அவளிடம் பேசினான்.

பயிற்சியின் போது அவளின் திறமையைப் பார்த்து வியந்து அவனையும் மீறி சில சமயங்களில் மனம் விட்டுப் பாராட்டினான்.

“என் வாய்ஸ் விட உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு…” என்று உத்ராவும் அவனைப் பாராட்டினாள்.

அவளின் பாராட்டை லேசாகத் தலையசைத்து, மென்மையாகப் புன்னகைத்து ஏற்றுக் கொண்டான்.

அந்தப் புன்னகையைக் கண்டவளின் கண்கள் அவனின் முகத்தில் சில நொடிகள் நிலைத்து நின்றன.

அவளின் பார்வையைக் கண்டு விட்டவன், அவளை யோசனையாகப் பார்க்க ஆரம்பிக்கும் போதே தன் கண்களை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.

இப்போது நிகழ்ச்சி ஆரம்பமாகியிருக்க, தன் வேறு நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டுக் கிளம்பி மேடையின் அருகில் சென்று நின்றாள்.

முகிலும் அதே நேரத்தில் அவளின் அருகில் வந்து நின்றான்.

அடுத்து அவர்கள் தான் பாட வேண்டும் என்பதால் இருவரும் அதற்குத் தயாராகினர்.

அருகில் நின்றிருந்தவனை ஓரப்பார்வையாகப் பார்த்தாள் உத்ரா.

நீல நிற ஜீன்ஸ் பேண்டும், கரு நீலத்தில் டீசர்ட்டும் அணிந்திருந்தான்.

‘ஸ்மார்ட் லுக்’காக நின்றிருந்தவனைப் பார்த்து விட்டு தன் உடையைப் பார்த்தாள்.

அவளின் கண்கள் பளிச்சென்று விரிந்தன.

அவளும் அதே நிற உடை தான் அணிந்திருந்தாள்.

தற்செயலாக இருவரும் ஒன்று போல் உடை அணிந்து வந்திருப்பதை அவள் எதிர்பார்க்கவே இல்லை.

அப்போது அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

இருவரின் உடையும் ஒன்று போல் இருந்ததை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாமல் அவனின் முகம் மாறியது.

“ஷேம் பின்ச்…” என்று உத்ரா கண்களைக் சிமிட்டி அவளின் வழக்கமான புன்னகையைச் சிந்த, வேறு வழியில்லாமல் அவனும் பதிலுக்குச் சிரித்து வைத்தான்.

அதற்கு மேல் அவனை வேறு எதையும் நினைக்க விடாமல் இருவரின் பெயரும் அழைக்கப்பட மேடை ஏறினர்.

அவர்கள் முடிவு செய்த படி அறுபதுகளில் வந்த பாட்டில் ஆரம்பித்து, எழுபது, எம்பது, தொண்ணூறு, இரண்டாயிரம் என்று வரிசையாக வந்து கடைசியாகச் சமீபத்தில் வந்த ஒரு ஃபோக் சாங்கை பாட, மெதுவாக ஆரம்பித்த கைதட்டல் பாடல் முடியும் போது அந்த அரங்கமே அதிரும் அளவு அதிர்ந்து ஒலித்தது.

முகில்வண்ணனும், உத்ராவும் குரல்வளத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதைப் பறைச் சாற்றுவது போல் இருவரும் உற்சாகமாகப் பாடினார்கள்.

அவர்கள் பாடி முடித்த பிறகும், மாணவர்களின் ஆரவாரம் நிற்க வெகுநேரம் ஆனது.

“தேங்க்யூ…” இருவரும் ஒன்று போல் லேசாகச் சிரம் தாழ்த்திப் பாராட்டை ஏற்று நன்றி தெரிவித்து விட்டு மேடையை விட்டு இறங்கினர்.

அவர்கள் இறங்கியதும் முகிலை அவனின் நண்பர்கள் சூழ்ந்து கொள்ள, உத்ராவை அவளின் தோழிகள் சூழ்ந்து கொண்டனர்.

“ஏய் என்னடி பாட்டு தான் சூப்பரா பாடுறீங்கன்னு பார்த்தால் ஜோடி பொருத்தமும் சூப்பரா இருக்கு. சொல்லி வச்சது போல இரண்டு பேரும் ஒரு கலர் ட்ரெஸ் வேற போட்டு வந்திருக்கீங்க…” என்று தோழிகள் ஆளுக்கு ஆள் ஒன்று சொன்னார்கள்.

உத்ரா பதில் சொல்லாமல் சிரித்தாள்.

“உண்மையைச் சொல்லு. இரண்டு பேரும் பேசி வச்சுத் தானே ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டுருக்கீங்க?” என்று புவனா கேட்டாள்.

“ச்சே, ச்சே! தற்செயலா நடந்தது புவி…”

“நீ சொல்றதை நம்ப முடியலை. பேண்ட்டும் ஒரு கலர், டீசர்ட்டும் ஒரே கலர்னு அதெப்படி தற்செயலா போட்டுட்டு வர முடியும்?” என்று நம்ப மறுத்தாள் புவனா.

“அதோட இப்போ இன்னும் ஒரு டவுட் வந்திருக்கு…” என்று உத்ராவின் காதில் கிசுகிசுப்பாகச் சொன்னாள்.

“என்ன டவுட்?” மற்ற தோழிகளை விட்டு விலகிப் புவனாவுடன் நடந்து கொண்டே கேட்டாள்.

“உன் மனம் கவர்ந்த கண்ணாளன் முகில் தான் போலிருக்கு?” என்று கேட்டதும், நடந்து கொண்டிருந்த உத்ரா தன் நடையை நிறுத்தினாள்.

“அட! சரியா சொல்லிட்டேன் போல? நீ அப்பப்போ கிரவுண்ட் பக்கம் சுத்தி வரும் போதே டவுட்டா இருந்தது. ஆனா என்னைக்கு உங்க இரண்டு பேர் பெயரும் சேர்ந்து பாட வந்துச்சோ, அன்னையிலிருந்து உன்னை வாட்ச் பண்ணிட்டே தான் இருக்கேன்.

மேடம் சைட் அடிக்கிறதே தெரியாம முகிலை பார்க்கிறதைக் கண்டு பிடிச்சுட்டேன். இன்னைக்கு மேடையில் பாடும் போதும் காதல் வரிகள் வரும் போதெல்லாம் உன் கண்ணு முகில் பக்கம் போய்ட்டு வந்தது…” என்று புவனா அவளின் காதல் கண்ணாமூச்சை பிட்டுப் பிட்டு வைத்தாள்.

“என் புவி குட்டி ரொம்ப ஸ்மார்ட் ஆகிட்டாளே!” என்று விரிந்த சிரிப்புடன் புவனாவின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினாள் உத்ரா.

“அதெல்லாம் இருக்கட்டும். ஒரு உண்மையைச் சொல்லு. பாட்டுப் பாட உங்க இரண்டு பேர் பெயரும் தற்செயலா சேர்ந்து வந்ததா, இல்லனா ஏதாவது தில்லாலங்கடி வேலை பார்த்தீயா?” சந்தேகமாகத் தோழியை ஏற இறங்கப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.

“ரகசியத்தை எப்படி உன்கிட்ட சொல்வேனாம்?” என்று உத்ரா கிண்டலாகக் கேட்க,

“அப்போ நீ தான் ஏதோ பண்ணிருக்க?”

“இப்போ பேச நேரமில்லை புவி குட்டி. டான்ஸ் ப்ரோகிராமுக்கு நான் ரெடி ஆகணும். என் லவ் ஸ்டோரியை அப்புறம் சொல்றேன்…” என்றாள் உத்ரா.

“சரி, இதை மட்டும் சொல்லிட்டுப் போ. முகில் கிட்ட உன் காதலை எப்போ சொல்லப் போற?” என்று கேட்டாள்.

“இன்னைக்கு…” என்ற உத்ரா நடனத்திற்குத் தயாராகச் சென்றாள்.

உத்ரா பரதநாட்டியம் ஆடுவதாக இருந்தாள். பாட்டிற்கும், நடனத்திருக்கும் இடையே இடைவெளி ஒரு மணி நேரம் இருந்ததால் அந்த நேரத்தில் தயாராகிக் கொள்ளலாம் என்று உடை மாற்றும் அறையில் தன் பரதநாட்டிய உடையை வைத்துவிட்டுச் சென்றிருந்தாள்.

இப்போது வந்து அந்த உடையைப் பையிலிருந்து எடுத்துப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பரதம் ஆடுபவர்களுக்கு ஏற்ற ரெடிமேட் ஆடை அது. கால் பகுதியில் பேண்ட் போலும் நடுவில் சேலை கொசுவம் போல் மடித்து விசிறி போல விரிந்திருக்கும். மேலே சேலை மாராப்புக் கச்சிதமாக வைத்துத் தைக்கப்பட்டிருந்த ஆடை.

இப்போது அந்த ஆடையின் கால் பகுதியின் இருபக்கமும் ஆங்காங்கே கிழிந்திருந்தது.

பிளேடோ, கத்தியோ வைத்துக் கீறியது போலிருந்த உடையைப் பார்த்ததும், யாரோ வேண்டுமென்றே செய்தது புரிய, அவளின் முகம் கோபத்தில் சிவந்தது.

“என்னடி இது, இப்படி இருக்கு?” என்று அவளின் பின்னால் வந்த புவனா பதட்டமாகக் கேட்க,

“யாரோ வேணும்னே பண்ணிருக்காங்க. இந்த ரூமுக்கு வேற யார் வந்தது?” அங்கே நடனத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த மற்ற மாணவிகளிடம் கேட்டாள் உத்ரா.

“தெரியலையே உத்ரா. நாங்க பக்கத்து ரூம்ல ட்ரெஸ் மாத்திட்டு, மேக்கப் போட இப்பத்தான் இங்கே வந்தோம்…” என்று ஒரு மாணவி சொல்ல,

“அப்போ இந்த ரூம்ல அதுக்கு முன்னாடி யாரும் இல்லையா?” என்று விசாரித்தாள்.

“சிலர் வந்து போய்ட்டு இருந்தாங்க. யார் யார் வந்தாங்கன்னு தெரியலை…” என்றனர்.

பலர் இருக்கும் இடத்தில் யார் செய்தது என்று எப்படிக் கண்டுபிடிக்க? விசாரிப்பது வீண் வேலை என்று நினைத்த உத்ரா தளர்ந்து இருக்கையில் அமர்ந்தாள்.

“உன் டான்ஸ் ஆரம்பிக்க இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு உத்ரா. இப்ப என்ன பண்ண போற?” புவனா அவளைப் போட்டு உலுக்கினாள்.

“ம்ம்…” என்று தோழியின் முகம் பார்த்தவளிடமும் அதே யோசனை தான் இருந்தது.

“யார்கிட்டயாவது பட்டு சுடிதார், இல்லைனா தாவணி இருக்கா?” என்று அங்கிருந்த மாணவிகளிடம் கேட்டாள்.

“என்னோட சுடிதார் இருக்கு உத்ரா. என் டான்ஸ் முடிந்ததும் அந்தச் சுடிதார் போடலாம்னு எடுத்துட்டு வந்தேன்…” என்று ஒரு மாணவி சொல்ல,

“அதைக் கொஞ்ச நேரத்துக்குக் கொடுக்கிறயா, ப்ளீஸ்” என்று கேட்டாள்.

“தர்றேன் உத்ரா…” என்று அந்தப் பெண் அவளின் பையில் இருந்த சுடிதாரை எடுத்துக் கொடுத்தாள்.

“சுடிதார் போட்டுட்டு எப்படிடீ பரதநாட்டியம் ஆடுவ?” என்று கேட்டாள் புவனா.

“என்னோட திறமை உடையில் இல்லை புவி! என்னோட உடையைத் தான் கிழிக்க முடியும். திறமையை இல்லை…” என்றாள் அழுத்தமாக.

அடுத்தச் சில நிமிடங்களில் அந்தப் பட்டுச் சுடிதாரை அணிந்து, பரதநாட்டிய உடைக்கு ஏதுவாகக் கொண்டு வந்திருந்த தலையலங்காரத்தை ஒதுக்கி வைத்து விட்டு, தலை முடியை மேலே இழுத்துக் கட்டி, கீழே லூஸ் கேர்ராக விரித்து விட்டாள்.

தலை உச்சியில் மட்டும் சின்னச் சின்ன அலங்காரம் செய்து நெற்றி சுட்டியை மாட்டிக்கொண்டாள். சுடிதார் துப்பட்டாவை மாராப்பாக மேலே போட்டு இடையில் ஒட்டியாணத்தை மாட்டினாள்.

“இப்போ எப்படி இருக்கு புவி?” என்று கேட்டாள்.

அடுத்து என்ன செய்வது என்று கலங்கிப் போகாமல் உடனே முடிவெடுத்து தயாராகி நிற்கும் தோழியைப் பார்த்து வியந்து போனாள் புவனா.

“சூப்பர் உத்ரா…” என்றாள்.

அடுத்து உத்ராவின் பெயர் அழைக்கப்பட, மேடையேறினாள்.

பரதநாட்டிய உடை இல்லாமல் ஏறியவளை சிலர் குழப்பத்துடன் பார்த்தனர்.

முகிலும் அவளைக் குழம்பிப் போய்த் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் பரதம் ஆடப் போகின்றாள் என்று அறிந்திருந்தான். அதனால் ‘என்ன உடை இது?’ என்பது போல் பார்த்தான்.

ஆனால் சற்று நேரத்தில் உடை பற்றிய நினைவே அவனுக்குத் தோன்றவில்லை.

அவன் மட்டுமில்லை. உத்ரா ஆட ஆரம்பித்த மறுகணம் அரங்கமே கட்டுண்டு தான் போனது.

அவளின் உடல் அசைவில் இருந்த நளினமும், நர்ந்தனம் ஆடிய கண்களும், பாடல் வரிகளுக்கு ஏற்ப நவரசம் காட்டிய முகப் பாவமும், யாரையும் எதையும் யோசிக்க விடாமல் செய்து விட்டது.

அவள் ஆடி முடித்த போது கேட்ட கரவோசையில் தான் பலர் தன் கண்களையே சிமிட்டினர்.

முகில் தன்னை மறந்து கைத்தட்டிக் கொண்டிருந்தான்.

“ம்ம், நல்ல திறமைதான்…” என்று தனக்குள் பாராட்டிக் கொண்டான்.

“எப்படிப் பாராட்டன்னு கூடத் தெரியலை உத்ரா. பிரமாதம்!” என்று தோழியை அணைத்துக் கொண்டாள் புவனா.

அப்போது புவனாவின் முதுகிற்குப் பின் சற்றுத் தள்ளி “ச்சே…” என்று கடுப்புடன் முனங்கி விட்டு குரு அந்தப் பக்கம் போக,

“இரு புவி, இதோ வர்றேன்…” என்று தோழியை விட்டு விலகி அவளும் அவனின் பின்னால் சென்றாள்.

“ட்ரெஸை கிழிச்சும் கொஞ்சமும் அசராம என்ன ஆட்டம் ஆடுறா” என்று அவன் முனங்கிக் கொண்டே சென்றதைக் கேட்டு விட்டாள் உத்ரா.

“சீப்பை ஒளிச்சு வச்சா கல்யாணம் நின்னுடும்னு எந்த முட்டாளோ சொன்னானாம். அந்த முட்டாள் இந்த முட்டாள் தானா?” என்று நக்கலாகக் கேட்டாள்.

அவளைப் பின்னால் எதிர்பாராமல் அதிர்ந்தவன், “ஏய், யாரைப் பார்த்துடி முட்டாள்னு சொன்ன?” என்று கத்தினான் குரு.

“உன்னைப் பார்த்து தான்டா முட்டாள்!” என்றாள் கடுமையாக.

“மரியாதையா பேசு உத்ரா. இல்லனா…” என்றவன் அவளை அடிக்கக் கையை ஓங்கினான்.

அவனின் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தியவள், “நீயும் மரியாதையா பேசலை. நானும் மரியாதை கொடுக்கலை…” என்றவள்,

“இதோ பார். உன்கிட்ட சண்டைப் போடுற மூடுல எல்லாம் நான் இல்லை. என் ட்ரெஸை ஏன் கிழிச்ச? அதை மட்டும் சொல்லிட்டு நடையைக் கட்டு…” என்றாள் கோபமாக.

இருவரும் சண்டைப் போட்டுக் கொண்டிருந்ததைத் தூரத்தில் இருந்து பார்த்து விட்ட முகில்வண்ணன் ‘இப்பத்தான் இவளைப் பத்திக் கொஞ்சம் நல்லவிதமா நினைச்சேன். அதுக்குள்ள சண்டைப் போட்டுட்டு நிற்கிறாள் பார். ச்சை, என்ன பொண்ணோ?’ என்று முனங்கியவன் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

“நீ ஏன் அன்னைக்கு அடிச்ச? என் லவ்வை நான் புவனாகிட்ட சொன்னா உனக்கு என்ன? அதுக்கு அடிப்பியா நீ?” என்று ஆத்திரமாகக் கேட்டான்.

“நீ லவ் சொன்னா நான் ஏன் அடிக்கப் போறேன்? அது உங்க பர்ஷனல்னு போய்ட்டே இருந்திருப்பேன்…”

“நான் என் லவ்வைத் தான் சொன்னேன்…”

“தப்பு உன்னோடது தான் குரு. புவனாகிட்ட ஒரு வார்த்தை கூடப் பேசாம திடீர்னு கிஸ் பண்ணிட்டுப் போய்ட்ட. நீ அவள்கிட்ட தப்பா நடந்துகிட்டதா சொல்லித் தனியா உட்கார்ந்து ரொம்ப அழுதாள்.

அதான் கோபம் வந்து அடிச்சேன். இதே நீ உன் மனசை அவகிட்ட சொல்லியிருந்தால் அவளும் அழுதுருக்க மாட்டாள். நானும் அடிச்சிருக்க மாட்டேன்…” என்றாள்.

“என் லவ்வை எப்படிச் சொல்லணும் என்பது என் இஷ்டம்…” என்றான் திமிராக.

‘இவனுக்கு எல்லாம் உட்கார வச்சுப் பாடம் எடுத்தாலும் புரியாது’ என்று சலிப்பாக நினைத்துக் கொண்டாள்.

அவனிடம் மேலும் பேச்சை வளர்க்காமல் முடித்துக் கொள்ள நினைத்தாள்.

“சோ, நான் உன்னை அடிச்சதுக்கு என் ட்ரெஸை கிழிச்சிருக்க? அடிக்கு கிழி சரியா போயிருச்சு. போ போய்ப் பொழப்பை பாரு…” என்று அவனின் கையை உதறியவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

ஒரு பெண் தன்னை அடித்து விட்டால் ஒரு ஆண் பலி தீர்க்க எப்படி எல்லாம் நடந்து கொள்கிறான்? என்று நினைத்துக் கொண்டே அறைக்குச் சென்றாள்.

அங்கே சென்று உடையை மாற்றி விட்டு வெளியே வந்தவள் முகில் எங்கே என்று தேடினாள்.

இன்று தன் காதலை அவனிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் வந்திருந்தாள்.

சற்று நேரத் தேடலில் ஒரு மரத்தடியில் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த முகில்வண்ணன் காணக் கிடைத்தான்.

அவனைக் கண்டதும் அவளின் கண்கள் ஒளிர, ஆர்வமாக அவனின் அருகே சென்றாள்.

“ஹாய் முகில், உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…” என்ற குரல் கேட்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தவன் கேள்வியாக அவளைத் திரும்பிப் பார்த்தான்.

அவளின் கண்களில் அவன் தனியாக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

‘இவள் என்னிடம் என்ன பேசப் போகிறாள்?’ என்று நினைத்தவனுக்கு முதலில் ஏற்பட்டது எரிச்சல் மட்டுமே.

ஆனாலும் தன் மனநிலையை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாதவன் நண்பர்களிடம் விடைபெற்றுத் தனியாக வந்தான்.

“என்ன பேசணும் உத்ரா?”

“எனக்குச் சுத்தி வளைச்சு எல்லாம் பேச வராது முகில்…” என்று பீடிகையுடன் அவள் ஆரம்பிக்க, புருவங்கள் நெறிய அவளைப் பார்த்தான்.

“ஐ லவ் யூ முகில்…” என்று பட்டென்று தன் காதலைச் சொல்லியிருந்தாள் உத்ரா.