5 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்

அத்தியாயம் – 5

“வாங்க சத்யா… வாங்க…” என்று தன் அலுவலகத்திற்கு வந்த சத்யவேணியையும், அவளுடன் வந்த பெண்மணியையும் வரவேற்றான் தர்மேந்திரன்.

சத்யா வாசல்‌ அருகில் வரும்போதே எழுந்து நின்று வரவேற்றவன் அவள் அமர்ந்து கொள்வதற்கு வசதியாக இருக்கையை எடுத்துப் போட்டான்.

“வர்றேன் தர்மா சார். இவங்க தான் ‌நான் சொன்ன அக்கா. இவங்களுக்கு இந்த வேலை ஓகேன்னு சொல்லிட்டாங்க. மேற்படி விவரம், டைம் எல்லாம் நீங்க பேசிக்கோங்க…” என்றாள்.

“சந்தோஷம்ங்க… பேசலாம்… அதுக்கு முன்னாடி என் இடத்துக்குப் பர்ஸ்ட் டைம் வந்திருக்கீங்க. குடிக்க இங்க தண்ணீ தான் இருக்கு. கொஞ்சம் குடிங்க…” தண்ணீர் எடுத்து வந்து அந்தப் பெண்மணிக்கு மேஜையின் மீது வைத்துக் கொடுத்தவன்‌ சத்யாவிற்குக் கையை நீட்ட சொல்லி அவளின் கைகளில் கொடுத்து அவள் குடித்ததும்‌ தானே டம்ளரை வாங்கி வைத்தான்.

தன்னிடத்திற்குப் புதிதாக அவள் வந்திருப்பதால் புதிய இடத்தில் அவள் தடுமாறி விடக் கூடாது என்று தானே பொறுமையுடன் அவளைக் கவனித்தான். அவனின் ‌அந்த அக்கறை சத்யாவின் கவனத்திலும் வந்தது. அதை அவளின் மனம் குறித்து ‌வைத்துக் கொள்ளவும் செய்தது.

மீண்டும் அமர்ந்தவன் “சத்யா உங்களைப் பற்றிக் கொஞ்சம் விவரம் சொன்னாங்க. உங்க பேர் தெரியலை. உங்க பேரு என்ன?” என்று அந்தப்‌‌ பெண்மணியிடம் கேட்டான்.

“என் பேரு அமுதா சார்…”

“ஓகேங்க அமுதா. டிரைவிங் காருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டியது இருக்கும். ஸ்கூட்டி கத்துக்க வர்றவங்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டியது இருக்கும். உங்களுக்குச் சின்னக் குழந்தை இருக்கிறதா சத்யா சொன்னாங்க. அதனால் டைமிங் உங்களுக்கு எது தோது வரும்னு சொல்லுங்க. அதுக்கு ஏத்த மாதிரி டைமிங் அட்ஜஸ்ட் பண்ணிப்போம்…” என்று சொன்னவன் மேலும் சம்பள விவரம், எந்த நேரம் சரியாக வரும் என்று அனைத்தையும் அமுதாவிடம் கேட்டு தெரிந்து அதற்கு ஏற்றார்போல் முடிவு செய்து அவளை வேலைக்கு அமர்த்தினான்.

“அப்போ சரிங்க அமுதா. நாளையில் இருந்து வந்துருங்க. ஏற்கனவே மூணு கஸ்டமர் ரெடியா இருக்காங்க. நாளைக்கே ஆரம்பிச்சுடலாம்…” என்றான்.

“ஓகே சார். நாளைக்கே வந்துடுறேன்…” என்று சந்தோஷத்துடன் சொன்னாள் அமுதா. நேரம் அவளுக்கு ஏற்றார் போல் அவன் நிர்ணயித்துக் கொடுத்தது அமுதாவிற்கு இன்னும் சந்தோஷத்தை தந்திருந்தது.

“நன்றி ‌சார்…” என்றாள் மனமார.

அதை மென்புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவன் “நாம சத்யாவிற்குத் தான் நன்றி சொல்லணும்…” என்றவன் அதுவரை அவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்த சத்யாவின் புறம் திரும்பி “நன்றிங்க சத்யா. நீங்க எனக்குச் செய்து இருப்பது மிகப்பெரிய உதவி. ரொம்ப நன்றி…” என்றான்.

“எனக்கும் தான் சத்யா. தேங்க்ஸ்…” என்று அமுதாவும் தன் நன்றியைத் தெரிவித்தாள்.

“அச்சோ…! போதும்…! நன்றி எல்லாம் தேவையில்லை. ஏதோ என்னால் முடிந்ததைச் செய்தேன். அவ்வளவுதான்! விடுங்க…” என்று முடித்தாள்.

“சரி சத்யா. அப்ப நாம கிளம்புவோமா?” என்று அமுதா கேட்க, “சரிக்கா… கிளம்பலாம்…” என்றவள் எழுந்து நின்றாள்.

“அப்போ நான் வர்றேன் தர்மா சார்…” என்று அவனிடம் விடைபெற்றாள்.

“போய்ட்டு வாங்க சத்யா…” எழுந்து நின்று சொன்னான்.

அலுவலகத்தை விட்டு வெளியே வந்த பிறகு “நீ கடைக்குப் போறீயா? இல்லை வீட்டுக்கா சத்யா? எங்க போகணும்னு சொல்லு. உன்னை விட்டுட்டு நான் வீட்டுக்குக் கிளம்புறேன்…” என்றாள் அமுதா.

“நான் வீட்டுக்குத் தான் போகணும் அமுதாக்கா. ஆனா நீங்க கிளம்புங்க. குட்டியை பக்கத்து வீட்டில் விட்டுட்டு வந்ததா சொன்னீங்க. அவன் தேடப் போறான். நான் கார்த்தியை வரச் சொல்லியிருக்கேன். அவ இப்போ வந்திடுவாள். நான் அவ கூடப் போயிடுவேன்…” என்றாள்.

“அப்போ நான் அவ வர்ற வரை வெயிட் பண்றேன்…”

“இல்ல அமுதாக்கா. கிளம்புங்க… நான் இங்க தானே பத்திரமா நிற்கிறேன்…” என்றாள்.

“என்னாச்சுங்க சத்யா?” என்று அவர்கள் இன்னும் நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து வெளியில் வந்து கேட்டான் தர்மா.

அவனிடம் சத்யா தங்கள் பேச்சைச் சொல்ல… “நீங்க கிளம்புங்க அமுதா. நான் சத்யாவை பத்திரமா அனுப்பி வைக்கிறேன்…” என்று அமுதாவை அனுப்பி வைத்தவன், “நீங்க உங்க தங்கை வர்ற வரை உள்ளே வந்து உட்காருங்க சத்யா. என் கூடத் தனியா உள்ளே உட்கார தயக்கமா இருந்தா… இருங்க, இங்கயே உங்களுக்கு ஒரு சேர் எடுத்துப் போடுறேன்…” என்று நாற்காலியை எடுக்க உள்ளே நடக்க ஆரம்பித்தான்.

“அச்சோ…! தயக்கம் எல்லாம் ஒன்னும் இல்லை தர்மா சார். நான் உள்ளேயே வந்து உட்காருறேன்…” என்று திரும்பி தன் உதவிக்கோலை வைத்துப் பாதை பார்த்து நடக்க ஆரம்பித்தாள். முதலில் அமுதா இருந்ததினால் அவளின் உதவியுடன் உள்ளேயும், வெளியேயும் நடந்திருந்தாள்.

இப்போது அவள் இதுவரை பழகாத இடம் என்பதினால் கவனத்துடன் எடுத்து வைத்தாள். அதைக் கண்டவன் “சத்யா நான் ஹெல்ப் செய்யட்டுமா?” என்று சிறு தயக்கத்துடனே கேட்டான்.

“இல்லை தர்மா சார், நானே நடக்கிறேன். அப்போ தான் எனக்கும் பழகும். ஒருவேளை அடுத்த முறை வந்தா எந்தத் தயக்கமும் இல்லாம நடப்பேன் பாருங்க…” என்றாள்.

“சரிங்க…” என்றவன் அதற்கு மேல் அவன் எதுவும் கேட்கவில்லை. அவள் அடுத்த முறை என்றது உள்ளத்தில் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்க, அவள் தன்னிடத்தை உணர்ந்து கொள்ளட்டும் என்று நினைத்துக்கொண்டான்.

வழி காட்டவில்லையே தவிர அவள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் தானும் அவளுடன் பொறுமையாக நடந்தான்.

அவனின் ஊன்றுகோல் எழுப்பிய சத்தமே அவனும் தனக்கு இணையாக நடந்து வருகிறான் என்பதை அவளுக்குப் புரியவைத்தது.

அதையும் கவனத்தில் கொண்டு, நடக்கும் பாதையையும் மனக்கண்ணில் பதிய வைத்துக்கொண்டு நடந்தாள். இருக்கையையும் உணர்ந்து அவள் அமர்ந்த பிறகே தன் இருப்பிடத்தில் சென்று அமர்ந்தான் தர்மா.

“சாரிங்க சத்யா… என்னால் உங்களுக்குச் சிரமம். ஸ்கூல் போய்ட்டு வந்து ரெஸ்ட் எடுக்க முடியாம என்னால் நீங்க அலைய வேண்டியதாகிருச்சு…” என்று வருத்தத்துடன் சொன்னான்.

“எனக்குச் சிரமம் எல்லாம் எதுவும் இல்லை தர்மா சார். ஒரு பொறுப்பை நானே ஏற்றுக்கொண்ட பிறகு நானும் கூட இருந்து அது முடிந்தால் நல்லா இருக்கும்னு தான் அமுதாக்காவை மட்டும் அனுப்பி வைக்காம நானும் கூட வந்தேன். அதோட நானும் ஸ்கூல், எங்க கடை தவிரத் தனியா எங்கயும் போறது இல்லை. வீட்டில் போய்ச் சும்மா உட்கார்ந்து இருக்குறதுக்கு ஒரு புது இடத்துக்கும் போவோமேன்னு தோணுச்சு. கிளம்பி வந்துட்டேன்… ” என்றாள்.

“என் இடத்துக்கு உங்களுக்கு வர தோன்றியதில் எனக்குச் சந்தோஷமா இருக்குங்க…” என்று அவன் பேசிக்கொண்டு இருக்கும் போதே “குட் ஈவினிங் அண்ணா…” என்ற படி சிவா அங்கே வந்தான்.

“வா சிவா… குட் ஈவினிங்…”

“என்ன அண்ணா, புது ஸ்டுடென்டா…?” சத்யாவின் முதுகு புறத்தை மட்டும் பார்த்து விட்டுக் கேள்வி கேட்டுக் கொண்டே முன்னால் வந்தவன் அவளின் முகத்தைப் பார்த்துச் சட்டென்று பேச்சை நிறுத்தி, மேலும் பேச்சு வராமல் தடுமாறினான்.

அவனின் கேள்வியில் தர்மாவும் தர்மசங்கடமாக உணர்ந்தவன் சிவாவை முறைத்தான்.

அவனின் முறைப்பை பார்த்து “சாரிண்ணா… கவனிக்கலை…” என்றவன் “சாரிக்கா…” என்று சத்யாவிடமும் மன்னிப்புக் கேட்டான்.

“பரவாயில்லை சிவா… என்னால் பார்க்க முடியாதுன்னு என்னைப் பார்த்தப் பிறகு தானே உங்களுக்குத் தெரியும்? தெரியாமல் சொன்னதில் தப்பில்லை…” என்று மென்மையான சிரிப்புடனே சொன்னாள்.

அவளின் மென்மையான சிரிப்பில் சிவாவின் மனது ஆசுவாசம் கொண்டது.

சிவாவின் பேச்சு எங்கே அவளைக் காயப்படுத்தி விட்டதோ என்று பதறிய படி அவளின் முகத்தைப் பார்த்திருந்தான் தர்மா.

ஆனால் சிறிது கூட வேதனையின் சாயல் என்று எதுவும் காட்டாமல், குறை தெரியாமல் தான் பேசினான் என்றாலும் ‘சட்டென அவளுக்குள் எதுவும் சுணக்கம் வந்திருக்குமோ?’ என்று அவன் பயந்தது போல் இல்லாமல் ‘உன் பேச்சு என்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை!’ என்று புன்னகை மூலம் அவள் காட்டிய விதம் அவனை மீண்டும் வியக்க தான் வைத்தது.

“நன்றிக்கா…” என்று சிவா அவளிடம் சொல்லிவிட்டு, “ஆறு மணி கிளாஸுக்கு கிளம்புறேன்ணா…” என்றான் தர்மாவிடம்.

“ஹ்ம்ம்… கிளம்பு சிவா… அப்புறம் இவங்க சத்யா… நம்ம ஸ்கூலுக்கு லேடி டிரைவர் தேடிட்டு இருந்தோமே? அதுக்கு இவங்க தான் ஒரு ஆள் சொன்னாங்க. அந்த லேடி நாளையில் இருந்து வேலைக்கு வருவாங்க…” என்று சத்யாவை பற்றி அறிமுகப்படுத்தினான்.

“வேலைக்கு ஆள் சேர்ந்தாச்சா? சூப்பர்ணா… நன்றிக்கா… அண்ணா ஒரு வாரமா ஆள் கிடைக்கலையேன்னு கவலைப்பட்டுகிட்டு இருந்தார். இனி நிம்மதியா இருப்பார்…” என்று சிவா சொல்ல, சத்யா லேசாகப் புன்னகை மட்டும் புரிந்தாள்.

“சரிண்ணா. நான் கிளம்புறேன்…” என்று அவன் செல்லவும், “அக்கா…” என்று கார்த்திகா வெளியே இருந்து அழைக்கவும் சரியாக இருந்தது.

“இங்கே இருக்கேன் கார்த்தி…” என்று குரல் கொடுத்த சத்யா, “அப்போ நான் கிளம்புறேன் தர்மா சார்…” என்று அவனிடம் விடை பெற்றாள்.

“சரிங்க சத்யா…” என்றவன் தானும் எழுந்து வெளியே வரை அவளுடன் நடந்தான்.

அவள் வெளியே வந்ததும் “சீக்கிரம் வாக்கா, போகலாம்… எனக்கு எழுத வேண்டியது நிறைய இருக்கு…” என்று கார்த்திகா அவசரப்படுத்த… “ஏண்டி இவ்வளவு லேட்டு?” என்று செல்லமாகக் கடிந்து கொண்டே தங்கையின் அருகில் சென்றாள்.

“நான் கிளம்புறப்ப ரெக்கார்ட் நோட் வாங்க என் பிரண்டு வந்துட்டாள். அதான்…” என்று பதில் சொல்லிக் கொண்டே பேச்சில் அவசரம் காட்டினாலும் அக்காவின் கையை மென்மையாக பற்றி அழைத்துப் போகத் தயாரானாள்.

“சரி கிளம்பலாம், இரு…” என்று தங்கையிடம் சொல்லிவிட்டு தர்மா நிற்கும் இடத்தை அனுமானித்து, “தர்மா சார், இவ தான் என் தங்கை கார்த்திகா. பிளஸ் டூ படிக்கிறாள்…” என்று அறிமுகப்படுத்தினாள்.

“ஹலோ கார்த்திகா…” என்றவனைப் பார்த்து சிறு கூச்சத்துடன் சிரித்துத் தானும் “ஹலோ…” என்றாள் கார்த்திகா.

“சரிங்க தர்மா சார், வர்றேன்…” என்று அவனிடம் விடைப்பெற்றவள் தங்கையுடன் நடக்க ஆரம்பித்தாள்.

“பை’ ங்க சத்யா…” என்று அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த இடத்தை விட்டு சிறிது நகர்ந்ததும், “இவர் தான் நீயும், அப்பாவும் சொன்ன தர்மா சாரா? பார்க்க ஹீரோ போல இருக்கார்கா. என்ன அவர் காலுதான்…” என்று சிறிய குரலில் பேசியவளின் பேச்சைக் கேட்டு “ஷ்ஷ்…! கார்த்திமா, அவங்க குறையைப் பற்றி அப்படிப் பேசக் கூடாது…” என்று கண்டித்தாள் சத்யா.

“நானும் குறையா சொல்ல வரலைகா. அவர் காலும் நல்லா இருந்தா இன்னும் சூப்பரா இருப்பார்னு சொல்ல வந்தேன்…” முகம் சுருங்கி சிறுத்துப் போன குரலில் சொன்னாள்.

“ஓ…! அதனால் என்னடி? குறையிருக்கிறவங்க எல்லாம் அழகா இருக்கக் கூடாதுன்னு சட்டமா என்ன? அவர் உடலில் குறை இருந்தாலும் உள்ளத்தில் குறை இருப்பது போல் தெரியலை கார்த்தி. அவர் கொஞ்ச நாள் முன்னாடி அறிமுகம் ஆனவர் தான்.

ஆனா இந்தக் கொஞ்ச நாளிலேயே அவரை நம்பினா ஆபத்து இல்லைன்னு என் உள் மனசு சொல்லுச்சுடி. அதான் அவருக்கு வழிய போய் உதவி பண்ண என்னைத் தூண்டுச்சு. இதுவரை அக்கா இப்படி வேற ஒருத்தர் இடத்துக்கு அநாவசியமா போயிருக்கேனா என்ன? ஆனா அவர் இடத்துக்கு வந்தேன்னா அது… அவரை என் மனசு நம்பலாம்னு அறிவுறுத்தியதால் தான்…” என்ற சத்யாவை ஆச்சரியமாகப் பார்த்தாள் கார்த்திகா.

‘யாரோ அதிகம் தெரியாத ஆளு டிரைவிங் ஸ்கூலுக்கு இந்த அக்கா ஏன் போகணும்?’ என்று நினைத்துக் கொண்டே தான் அவளை அழைக்க வந்தாள்.

அதிகம் அறிமுகம் இல்லையென்றாலும் இத்தனை தூரம் அவரை நம்பி வந்திருக்கிறாள் என்றால் அக்காவே சொன்னது போல அவர் நம்பிக்கைக்குத் தகுந்தவராகத் தான் இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டாள்.

அதுவும் பல நேரம் சத்யாவின் கணிப்புச் சரியாக இருக்கும். கண்ணில் குறைபாடு இருந்ததாலோ என்னவோ, தன்னைச் சுற்றிலும் நடக்கும் சிறு அசைவிலும் அதிகம் கவனம் வைத்துக் குறித்துக் கொள்வது அவளின் வழக்கம். எதிரே இருப்பவரின் பேச்சில் கூடச் சிறு தடுமாற்றம் வந்தால் கூட, அது எந்த வகையானது என்று பிரித்து ஆராய்ந்து அதன் பிறகே அவர்களுடன் மேலும் பேசுவாள்.

அப்படிப்பட்டவளே நம்பும் போது தானும் நம்புவது சரியே என்ற முடிவுக்கு வந்திருந்தாள் கார்த்திகா.

புதிதாக வந்து சத்யாவின் பேச்சில் புகுந்து பாராட்டும் பெற்ற தர்மா, அவளின் வாழ்க்கையிலும் நுழைய நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று அறிந்தால் அவன் மீது சத்யாவிடம் எழுந்த நட்புணர்வு இதே துடிப்புடன் இருக்குமா?