5 – ஈடில்லா எனதுயிரே

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 5

பிரபஞ்சன் நாற்காலியில் கோபமாக அமர்ந்திருக்க, அவனின் முன் தீபக்கும், பைரவியும் கைகளைக் கட்டிய படி தலை குனிந்து நின்று கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவரையும் கடுமையுடன் முறைத்துக் கொண்டிருந்தான் பிரபஞ்சன்.

மரத்தின் பின் அவர்கள் நின்றிருந்த அன்னியோன்ய நிலையைக் கண்டு அருவருத்துப் போயிருந்தான்.

உடனே இருவரையும் ஆசிரியர் அறைக்கு அழைத்து வந்து விட்டான்.

இன்னும் மற்ற ஆசிரியர்கள் வராததால் அவர்கள் மூன்று பேர் மட்டும் அங்கே இருந்தனர்.

அவர்கள் இருவரும் நின்றிருந்த நிலையைத் தன் கைபேசியில் புகைப்படம் எடுத்த பிரபஞ்சன், “இரண்டு பேரும் இதைப் பாருங்க…” என்று கைபேசியை அவர்கள் முன் வைத்தான்.

கைபேசியில் தங்கள் புகைப்படத்தைப் பார்த்து இருவரும் திடுக்கிட்டனர். இந்தப் புகைப்படத்தை வைத்து என்ன செய்யப் போகிறானோ என்ற பயத்துடனும், திடுக்கிடலுடனும் அவனைப் பார்த்தனர்.

“சார், நாங்க செய்தது தப்புத்தான். அதுக்காக மன்னிப்புக் கேட்கிறோம் சார். போ… போட்டோ எல்லாம் வேண்டாம் சார்…” என்று பதறினான் தீபக்.

“உங்களை மிரட்ட இந்தப் போட்டோவை எடுக்கலை. நான் மிரட்ட நினைத்திருந்தால் இங்கே போட்டோ எடுக்கத் தேவையில்லை. மரம் பின்னாடி நீங்க இருந்த போதே எடுத்திருப்பேன்…” என்று கடுமையாகச் சொல்ல,

தீபக் மீண்டும் தலை குனிந்தான்.

“நீங்க நின்று இருக்கும் நிலையைக் காட்ட எடுத்தேன். நல்லா பாருங்க… எப்படி நின்றிருக்கீங்கன்னு பாருங்க…” என்று கோபத்துடன் இரைந்தான்.

இருவரும் மீண்டும் பார்த்தனர். தாங்கள் தலை குனிந்து நின்றிருக்கும் நிலையைப் பார்த்த பிறகும் அவர்களால் தலையை நிமிர்த்தித் தன் ஆசிரியரைப் பார்க்க முடியவில்லை.

“என்ன இப்பவாவது புரியுதா? நீங்க செய்தது தலை நிமிர்ந்து நிற்க கூடிய காரியம் இல்லை…” என்றான்.

“இப்ப உங்களை என்ன செய்யலாம்? சொல்லுங்க…” என்று கேட்டவன் இருவரையும் கூர்மையாகப் பார்த்தான்.

“ஸாரி சார். இனி இப்படிப் பண்ண மாட்டோம்…” என்றனர்.

“இனி என்ன பண்ண போறீங்கன்னு நான் கேட்கலை. இப்ப நீங்க செய்ததுக்கு அர்த்தம் என்னன்னு கேட்குறேன்…” என்றான் அழுத்தமாக.

“சா…ர்…” என்று தயங்கி இழுத்த தீபக், “தப்பு என் மேல் தான் சார். பைரவி வேண்டாம்னு தான் சொன்னாள். நான் தான். ஸாரி சார்…” என்றான்.

அவன் பேச்சை கேட்டு சிறிதும் அசையாமல் அதே கூர்மையைக் கண்களில் காட்டினான் பிரபஞ்சன்.

“சா…ர்… நாங்க இரண்டு பேரும் லவ் பண்றோம் சார். படிப்பை முடிச்ச பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்…” நிமிர்ந்து அவன் முகம் பார்க்காமல் தலைகுனிந்த படியே சொன்னாள் பைரவி.

“ஓஹோ! அப்படியா தீபக்?” என்று கேட்க, அவன் ‘ஆமாம்’ என்று தலையை அசைத்தான்.

“அப்போ உங்க இரண்டு பேருக்கும் காதலித்துக் கல்யாணம் பண்ணிக்கிற வயசு வந்திருச்சு. அப்படியா தீபக்?” என்று கேட்டான்.

தீபக் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாற, “காதலிக்க வயசு தேவையில்லையே சார்?” என்று வெடுக்கெனப் பதில் சொன்னாள் பைரவி.

‘ஷ்ஷ்! பேசாமல் இரு!’ என்று பைரவியை அடக்க முயன்றான் தீபக்.

“பைரவி பேசட்டும் தீபக். நீங்க இரண்டு பேரும் என்ன நினைச்சுட்டு இருக்கிங்கன்னு எனக்குத் தெரிந்தாகணும். அப்போதுதான் நான் முடிவு எடுக்க வசதியா இருக்கும்…” என்று அலட்டாமல் சொன்னவனைப் பயப்பார்வை பார்த்தான் தீபக்.

பைரவி தலையை நிமிர்த்தவில்லை என்றாலும் அவளிடம் ஒரு அலட்சியப் பாவனை இருந்தது.

அது எதனால் என்று பிரபஞ்சனுக்கு நன்றாகவே புரிந்தது.

பைரவி ஒரு பெரிய தொழிலதிபரின் மகள். பணத்தில் ஊறிய குடும்பத்தைச் சேர்ந்தவள்.

வெறும் வாத்தியார் நீ என்ன செய்ய முடியும்? என்ற அலட்சியம் அவளிடம்.

அதைப் புரிந்து கொண்ட பிரபஞ்சனுக்கு அனுதாபம் தான் தோன்றியது.

பணம் மட்டுமே அனைத்தையும் நிர்ணயம் செய்வது இல்லை என்று இந்தப் பெண்ணிற்கு யார் சொல்வது? என்று தான் அவனுக்குத் தோன்றியது.

“நீங்க கல்யாணம் பண்றது எல்லாம் இருக்கட்டும். முதலில் நீங்க பண்றதுக்குப் பேர் காதல் தானா பைரவி?” என்று அழுத்தமாகக் கேட்டான்.

“ஆமாம் சார்…” என்று இப்போது தலையை நிமிர்த்திச் சொன்னாள்.

“இல்லை பைரவி. நீங்க செய்வதற்குப் பெயர் காதல் இல்லை…!” என்றான் உறுதியாக.

“சார்…” என்று பைரவி ஏதோ சொல்ல வர,

“நீ என்ன விளக்கம் சொல்ல போற பைரவி? நீங்க செய்தது உயிரான காதல், உன்னதமான காதல்னா?” என்று கடுமையாகக் கேட்டான்.

“அது வந்து சார்…” அவள் தயங்கி இழுக்க, கையை ‘நிறுத்து!’ என்பது போல் காட்டினான்.

“நீ என்ன சொன்னாலும் நீங்க செய்ததற்குப் பெயர் காதல் இல்லைன்னு உறுதியா சொல்வேன் பைரவி. சரி, அந்தப் பேச்சு வேண்டாம். நான் என்ன விளக்கம் சொன்னாலும் உன் வயசு கேட்காது. நீ பெரிய வீட்டு பொண்ணு. உனக்குப் படிப்பு பற்றி அக்கறை இருக்காது. அதனால் நான் சொல்ல வருவது உனக்குப் புரியவும் செய்யாது…” என்று பைரவியிடம் சொன்னவன், தீபக் பக்கம் திரும்பினான்.

“நீ சொல்லு தீபக், உன் அப்பா என்ன வேலை பார்க்கிறார்?” என்று கேட்டான்.

“ஒரு பிரைவேட் ஆபிஸ்ல வாட்ச்மேன் சார்…” என்றான் மெதுவான குரலில்.

“உங்க வீட்டில் எத்தனை பேர் பட்டதாரி தீபக்?” பிரபஞ்சனின் அடுத்தக் கேள்வி வர,

“நான் தான் எங்க வீட்டில் ஹை ஸ்கூல் வரை வந்து படிச்சுட்டு இருக்கேன் சார்…” என்றான் உள்ளே போன குரலில்.

“சோ, அப்போ உன் வீட்டில் உன்னைத் தவிர யாரும் ஹை ஸ்கூல் கூடப் படித்தது இல்லை, அப்படித்தானே?”

“ஆமா சார்…”

“ஹை ஸ்கூல் வந்துட்ட. இந்த வருஷம் அதை முடிக்கவும் போற? அதுக்குப் பிறகு என்ன பண்ணுவ தீபக்?”

“காலேஜ் போகணும் சார். அதை முடிச்சுட்டு நல்ல வேலைக்குப் போகணும் சார்…” என்றான்.

“அப்படியா? ஆனா நீ ஸ்கூல் படிப்பையே சரியா முடிப்பன்னு எனக்கு நம்பிக்கை இல்லையே தீபக்?” என்று கையை விரித்தான் பிரபஞ்சன்.

“சா…சார்…” பயத்துடன் அழைத்தான் தீபக்.

“நான் உன் படிப்பு விஷயத்தில் கை வைக்க மாட்டேன் தீபக். என் பக்கம் இருந்து உனக்கு எந்த வித பாதிப்பும வராது. ஆனால் உன் விஷயத்தில் மூன்றாம் மனிதர் தேவையில்லை தீபக்.

நீ இப்ப காதல் என்ற பெயரில் சில காரியங்கள் செய்றீயே… அதுவே உன்னைப் படிப்பை முழுதாக முடிக்க விடாது. உன் எண்ணங்கள் உன்னை அலைபாய வைக்கும். படிப்பை தேடி ஓடாம, இளமை உணர்ச்சிகள் உன்னை அடிமையாக்கி, உன்னை வேற தேட வைக்கும். வேறுவிதமான தேடலை நோக்கி நீ ஓடினால் படிப்பு உன்னை விட்டு ஓடிப் போகும் தீபக்…” என்றான்.

அவன் பேச்சை விதிர்த்துப் போய்க் கேட்டுக் கொண்டிருந்தான் தீபக்.

அவனைப் படிக்க வைக்க அவனின் தந்தை படும் கஷ்டங்கள் கண் முன்னே வந்து போயின.

‘நீயாவது படிச்சு நல்ல வேலைக்குப் போகணும்பா…’ என்ற அன்னையின் எதிர்பார்ப்பு நிறைந்த வார்த்தைகள் காதில் ஒலித்தன.

இன்னும் சில கேள்விகள் கேட்டுத் தீபக்கை யோசிக்க வைத்தான் பிரபஞ்சன்.

நீ அதைச் செய்ய வேண்டும். இதைச் செய்ய வேண்டும் என்று எதுவும் சொல்லவில்லை. நீ ஏன் இப்படிச் செய்தாய்? என்றும் கேட்கவில்லை.

ஆனால் தீபக் சார்ந்த அவன் கேட்ட கேள்விகள் அவனையே யோசிக்க வைப்பதாக இருந்தன.

“உனக்குப் பக்கம் பக்கமா நான் அறிவுரை சொல்லி அறுவை போட போறது இல்லை தீபக். உனக்குச் சிலது மட்டும் சொல்ல விரும்புறேன். உனக்கு உண்மையிலேயே பைரவியைக் கல்யாணம் செய்ய விருப்பமிருந்தால் முதலில் உன் கேரியர் என்னன்னு முடிவு செய்துட்டு பின்பு அதைப் பற்றி யோசி.

இது கல்யாணம் பற்றி யோசிக்கும் வயது அல்ல. கல்யாணம் எல்லாம் நீ ஒரு நிலைக்கு வந்த பிறகு தான் அதில் இருக்கும் இன்பத்தைச் சந்தோஷமா அனுபவிக்கவும், துன்பம் வரும் போது அதைச் சமாளிக்கும் பக்குவமும் உனக்கு இருக்கும்.

சோ, உன் குடும்பச் சூழ்நிலை. உன் எதிர்காலம் எப்படி இருக்கணும்? எல்லாம் நீயே யோசி. உன் எதிர்கால வாழ்க்கையை எது நிர்ணயிக்கப் போகிறது என்று நீ தான் முடிவு செய்யணும். உன் யோசனை உனக்கொரு நல்ல முடிவை கொடுக்கும். அதுக்குப் பிறகு உனக்கு என்ன தோனுதோ அதைச் செய்!” என்று தன் பேச்சை முடித்துக் கொண்டான் பிரபஞ்சன்.

யோசனையும், குழப்பமுமாக அவனைப் பார்த்தான் தீபக்.

அவன் முகபாவம் அவனே யோசித்து நல்ல முடிவெடுப்பான் என்று பிரபஞ்சனை எண்ண வைத்தது.

ஆனால் பைரவியின் முகபாவம் வேறாக மாறிப் போனது. எங்கே தீபக் மனம் மாறி விடுவானோ என்று பதைபதைப்பாக அவனைப் பார்த்தாள்.

சில நொடிகள் சிந்தனையில் இருந்த தீபக், ‘ஸாரி பைரவி’ என்பது போல் அவளைப் பார்த்தான்.

“நோ தீபக்” என்றாள் வாய்விட்டே.

“ஸாரி பைரவி. சார் சொல்வது சரி தான். என் வீட்டில் நான் ஒருத்தன் படித்தால் தான் என்னோட குடும்பம் முன்னேற்றம் அடையும். அது புரியாமல் இத்தனை நாளும் ஒருவித மயக்கத்தில் இருந்துட்டேன். உன் மனசை நான் கலைத்திருந்தால் ஸாரி பைரவி…” என்றான்.

“அவசரப்பட்டு முடிவு எடுக்காதே தீபக்! நாம படிக்கலைனாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும். என் அப்பாவோட பிசினஸ் எல்லாம் பின்னாடி நான் தான் பார்த்துப்பேன். நீ என்னைக் கல்யாணம் பண்ணிட்டால் எல்லாமே உனக்கும் சொந்தம். அப்புறம் உன் குடும்பமும் முன்னேறிடும். நாம சந்தோஷமா இருக்கலாம்…” என்றாள் பைரவி.

பிரபஞ்சன் முன் தான் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களே பேசி முடிவு செய்யட்டும் என்ற எண்ணத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

“இல்லை பைரவி. என்னோட அப்பா, அம்மா அப்படி வரும் பணத்தை ஏத்துக்க மாட்டாங்க. நான் படிக்கிறதை விட்டு லவ் பண்றேன்னு தெரிந்தாலே அவங்க உடைந்து போவாங்க…”

“ஏன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரை கூட உனக்கு உன் அம்மா, அப்பா ஞாபகமில்லையே. இப்ப மட்டும் என்ன புதுசா சொல்ற?” எனக் கோபமாகக் கேட்டாள்.

“சார் முன்னாடி நாம மாட்டியே நம்ம மானம் போயிருச்சு. இதில் இன்னும் நாம பழகினால் அது எங்க போய் முடியுமோ சொல்ல முடியாது. சார்கிட்ட மாட்டி தலை குனிந்து நிற்கும் நிலை வந்த பிறகு தான் எனக்கு அந்த அறிவு வந்திருக்கு. நாம இப்பவே பிரிவது தான் நல்லது…” என்றதும், கோபமாக அவனைப் பார்த்தவள், அதே கோபத்துடன் பிரபஞ்சன் பக்கம் திரும்பினாள்.

“எங்க லவ்வை பிரிச்சுட்டீங்களே சார்…” என்று சொல்லும் போது, கோபமாக இருந்த அவளின் குரல் உடைந்து வெளிப்பட்டது.

“நோ பைரவி. இந்த வயதில் வாழ்க்கைக்கு என்ன தேவைன்னு தீபக்கிற்கு எடுத்து சொன்னேன். அவன் புரிந்து கொண்டான். நீயும் புரிந்து கொள்ள முயற்சி செய்! உண்மையிலேயே அவனை நீ காதலிக்கிறன்னு நினைத்தால் வெயிட் பண்ணு.

அவன் வாழ்க்கையில் முன்னேறி வரட்டும். நீயும் உன் படிப்பை முடி. அதற்குப் பிறகும் அவனை மறக்க முடியாம உனக்குத் தீபக் மேல் காதல் இருந்தால் அப்போ அவன் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேள். நீங்க உங்க எண்ணத்தில் உறுதியாக இருந்தால் அப்போ என்னை மாதிரி யார் குறுக்க வந்தாலும் உங்க காதல் ஜெயித்தே தீரும்…” என்றான் பிரபஞ்சன்.

அவனுக்கு நன்றாகப் புரிந்தது. அவர்களுடையது காதல் அல்ல, இனக்கவர்ச்சி என்று.

காதலாக இருந்தால் தீபக் இப்படி உடனே தன் மனதை மாற்றிக் கொண்டிருக்க மாட்டான். முதலில் நன்றாகப் படிப்போம்… அப்புறம் நம் காதலை பார்ப்போம் என்று சொல்லியிருப்பான். ஆனால் அவன் அதைச் செய்யவில்லை. உடனே பைரவியை விட்டு விலகவே நினைத்தான்.

நேற்றுவரை பின்னால் சுற்றியவன் இன்று விலகுகிறேன் என்று சொல்கிறானே என்ற பதைப்பு மட்டுமே பைரவியிடம் இருந்தது.

அவளும் உண்மையாகக் காதலித்திருந்தால் அவனின் முன்னேற்றத்திற்குக் கைகொடுக்க ஒத்துழைத்திருப்பாள். ஆனால் அவளோ அனைத்தையும் விட்டு விட்டு வா. படிப்பு எல்லாம் முக்கியமில்லை என்கிறாள். அவள் படிப்பை ஒரு பொருட்டாகவும் எடுத்துக் கொள்ளவில்லை.

படிப்பு மட்டுமே வாழ்க்கைக்கு முக்கியமில்லை. படிப்பு இல்லாமலும் ஜெயிக்கலாம் என்று இந்த வயதில் துடிப்புடன் பேச நன்றாகத்தான் இருக்கும். ஆனால் வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற நிலை வரும் பொழுது தான், தாங்கள் இழந்தவைகள் எல்லாம் பூதாகரமாகத் தெரியும்.

அவள் சொன்ன தந்தையின் தொழிலை கூட நல்ல படியாக நடத்த படிப்பு முக்கியம் என்று அவள் உணரவில்லையே என்ற அனுதாபம் தான் பிரபஞ்சனுக்குத் தோன்றியது.

ஒரு நிலையான முடிவை எடுக்கத் தெரியாத பதின்ம வயது பருவத்தில் இருப்பவர்களுக்குத் தான் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று நினைத்தானே தவிர அவர்களைப் பிரிக்க வேண்டும் என்பது பிரபஞ்சனின் எண்ணம் அல்ல.

அவன் நினைத்திருந்தால் அவர்கள் இருவரும் தனித்திருந்த நிலையை வைத்து இருவீட்டு பெரியவர்களையும் அழைத்து அவர்களிடம் புகார் செய்திருக்கலாம்.

ஆனால் அது பிரச்சனையைப் பெரிது செய்யுமே தவிர, நல்ல தீர்வை தராது என்று நினைத்தான்.

பெற்றவர்கள் மூலம் ஒரு தீர்வு வருவதை விட, அவர்களே யோசித்துத் தீர்வு காணும் போது தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருப்பார்கள் என்று நம்பினான்.

தீபக் யோசித்து அவன் வாழ்க்கைக்கு என்ன தேவையோ அந்த முடிவை எடுத்தான்.

ஆனால் பைரவி யோசிக்கக் கூடத் தயாராக இருக்கவில்லை. எடுத்துச் சொன்னாலும் புரிந்து கொள்பவளாகத் தெரியவில்லை. அவளிடம் ஒருவித முரட்டுப் பிடிவாதம் தெரிந்தது.

ஆனாலும் அவளுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்க முயன்றான்.

“படிப்பு உன் கண் முன்னால் இருக்குப் பைரவி. வாழ்க்கை இருட்டில் ஒளிந்திருக்கிறது. கண் முன்னால் இருப்பதற்கு நீ முக்கியத்துவம் கொடுக்கும் போது வாழ்க்கை உனக்கு ஒளிமயமாக இருக்கும். இவ்வளவுதான் சொல்வேன். இதற்கு மேல் நீயே யோசித்து முடிவெடு!” என்று பைரவியிடமும் அதற்கு மேல் வாதம் வைக்காமல் முடித்துக் கொண்டான் பிரபஞ்சன்.

பைரவி அதற்கு ஏதோ சொல்ல வர, “எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம் பைரவி. எனக்கு வேண்டியது என் மாணவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கணும். அவர்கள் தவறான வழியில் சென்று அவர்களின் வாழ்வு வீணாகிட கூடாது என்ற எண்ணம் மட்டுமே! உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்! அதைச் சிறப்பாகக் கொண்டு செல்ல என்ன செய்யலாம்னு நீங்களே யோசித்து முடிவு எடுங்க. இப்ப நீங்க போகலாம்…” என்று வாசலை நோக்கி கையைக் காட்டினான்.

அவன் அவ்வளவு சொன்ன பிறகும் “மனசு மாறிடாதே தீபக்…” என்று பைரவி தீபக்கிடம் சொல்லிக் கொண்டே செல்வதைச் சலனமில்லா பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் பிரபஞ்சன்.

மேலும் இரண்டு நாட்கள் சென்ற நிலையில் பைரவியும், தீபக்கும் ஜோடியாகச் சுற்றாததைக் கண்ட பிரபஞ்சன் நிம்மதியுற்றான்.

ஆனால் பைரவி தான் ஆசிரியர் என்ற மரியாதை கூட இல்லாமல் பிரபஞ்சனை விரோதி போல் முறைத்துக் கொண்டிருந்தாள்.

அவளின் முறைப்பை எல்லாம் பிரபஞ்சன் பெரிதுபடுத்தவே இல்லை. ‘தான் செய்தது நல்லதிற்குத்தான் என்று புரியாமல் இருக்கிறாள் பாவம்’ என்று தான் நினைத்துக் கொண்டான்.

பக்குவமில்லா வயது, புரிந்து கொள்ளும் காலம் வரும் போது, தான் சொன்னது எவ்வளவு நல்லது என்று புரிந்து கொள்வாள் என்று நினைத்ததால் சிறுகுழந்தையின் முறைப்பாக அவளின் பார்வையைக் கடந்து விடுவான்.

அவள் சிறு குழந்தையாக அல்ல, விபரீத குழந்தையாக நடந்து கொள்ளப் போகிறாள் என்று அறிந்திருந்தால் அவளிடம் கவனமாக இருந்திருப்பானோ என்னவோ?

பிரபஞ்சன் அஜாக்கிரதையாக இருந்தது அவனுக்கே விபரீதமாக வந்து முடியும் என்று அவன் உணரும் நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது.

காலம் கடந்து விழித்துக் கொண்டால் முடிந்து போன காலம் மீண்டும் வருவதே இல்லை.

பிரபஞ்சனின் தலையெழுத்தையே மாற்றி எழுதும் பேனாவாக மாறிக் கொண்டிருந்தாள் பைரவி!