4 – இதயத்திரை விலகிடாதோ?

அத்தியாயம் – 4

யுவஶ்ரீ அவள் வீட்டிற்கு ஒரே பெண்.

அவளின் தந்தை அவள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீர் உடல்நல குறைவால் இறந்திருக்கத் தாயும், அவளுமாகிப் போயினர்.

சேலம் தான் அவர்களின் சொந்த ஊர்.

மகள் படிப்பை முடித்துச் சென்னையில் உள்ள கம்பெனியில் வேலையில் சேர முடிவான நேரத்தில், அவளை எப்படிச் சென்னையில் தனியாக விடுவது? என்று பயந்தார் அவளின் அன்னை பரிமளா.

அதனால் அவளுக்குத் திருமணம் முடித்துச் சென்னைக்கு அனுப்புவது தான் சரி என்று வரன் பார்க்க ஆரம்பித்தார்.

பல வரன்களை அலசிய பிறகு மதுரையைச் சேர்ந்த சித்ரா, குமரகுரு தம்பதிகளின் ஒரே மகனான சூர்யக்கண்ணன் வரன் வர, அவனின் பெற்றவர்களிடம் பேசிய வரை நல்ல குடும்பமாகத் தெரிய, அந்த இடத்தையே பேச முடிவு செய்தார்.

அதில் ஒரு அம்சமாக மாப்பிள்ளை வேலை பார்த்துக் கொண்டிருக்கும் கம்பெனியில் தான் மகளுக்கும் வேலை கிடைத்திருக்கிறது என்றதும் பரிமளாவிற்கு இன்னும் திருப்தியாகிப் போனது.

பெரியவர்கள் பேசிய பிறகு, மாப்பிள்ளையின் புகைப்படம் யுவஶ்ரீ கைக்கு வந்தது.

அவளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தில் முடியை அழகாக வெட்டி, சிரித்தபடி போஸ் கொடுத்திருந்தான் சூர்யா.

அவன் புகைப்படத்தைப் பார்த்ததுமே அவளுக்குப் பிடித்துப் போனது.

அதே நேரம் அவன் வீட்டில் அவள் புகைப்படத்தைப் பார்த்து முகத்தைச் சுளித்துக் கொண்டிருந்தான் சூர்யா.

“பொண்ணு எப்படி இருக்காள் கண்ணா? பேசி முடிச்சுருவோமா?” என்ற அன்னையின் கேள்விக்கு உடனே பதில் சொல்லிவிடவில்லை அவன்.

“பார்க்க நல்லாத்தான் இருக்காள். ஆனா அதுக்காகக் கல்யாணம் பண்ண முடியுமா அம்மா? அவள் முகத்தில் பாருங்க எத்தனை பொட்டு வச்சுருக்காள்னு. திருநீறு, குங்குமம்னு அதைப் பார்த்தாலே அழற்சி ஆகுது…” என்றான்.

“பார்க்க மங்கலகரமா இருக்காள். குடும்பமும் நல்ல குடும்பம். பொண்ணைப் பத்தி சேலத்தில் இருக்கும் உன் சித்திக்கிட்ட சொல்லி விசாரிக்கச் சொன்னேன். அவள் வீட்டுக்காரும் விசாரிச்சு நல்லவிதமா சொல்லிருக்கார். அதுவும் உன் கம்பெனியில் தான் வேலைக்குச் சேர போறாளாம். நீங்க இரண்டு பேரும் ஒரே கம்பெனியில் இருந்தால் நல்லது தானே?” என்றார் சித்ரா.

“எல்லாம் சரிம்மா, ஆனா பொண்ணு மாடலா இல்ல. பார்க்கவே பட்டிக்காடு கெட்டப்ல இருக்காள்…” என்றான்.

“இது என்னடா கொடுமையா இருக்கு? பொண்ணு மாடல் மாதிரி இருந்தால் தான் கல்யாணம் பண்ணிக்குவனா அதுக்கு மாடல் பண்ற பொண்ணுங்களைத் தான் தேடணும். அந்தப் பொண்ணுங்க கூட வீட்டில் இருக்கும் போது சிம்பிளாத்தான் இருப்பாங்க…” என்றார்.

“அம்மா, எனக்கு ஏற்கெனவே கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லை. நீங்க கம்பெல் பண்ணவும் தான் சரின்னு சொன்னேன். இதில் பொண்ணு வேற எனக்குப் பிடிச்ச மாதிரி பார்க்காமல் இப்படிப் பண்றீங்க?” என்றான் சலித்தபடி.

“நேரில் பொண்ணைப் பார்! உனக்குச் சரின்னு தோனுச்சுனா மேற்கொண்டு பேசுவோம்…” என்றார் சித்ரா.

நேரில் பார்த்தால் மட்டும் பிடித்து விடுமா? என்ன அலட்சியம் தான் அவனுக்கு.

எந்தக் கட்டுப்பாடுகளும் அற்று, தான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறானோ அதை மட்டும் செய்ய நினைப்பவன் தான் சூர்யக்கண்ணன்!

வாழ்க்கையை ரசித்து வாழாமல், இப்படித்தான் வாழ வேண்டும் என்ற எந்தக் குறிக்கோளும் இல்லாமல் ஒருவித அலட்சியத்துடன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான்.

இப்போது கல்யாணம் முடிப்பதிலும் கூட அவனுக்குப் பெரிதாக நாட்டமில்லை. ஆனால் பெற்றவர்கள் அவன் போக்கில் விடாமல் இழுத்து பிடிக்க முயன்றதின் விளைவு தான் இந்தக் கல்யாணப் பேச்சு.

பெற்றவர்களின் கட்டாயத்தில் தான் யுவஶ்ரீயை நேரில் பார்க்க சென்றான்.

சுடிதாரில் அவளின் புகைப்படத்தைப் பார்த்து பட்டிக்காடு என்றவன், அவள் சேலையில் வந்து நின்ற போது மயங்கித்தான் போனான்.

சேலையில் அவள் அழகு மிளிர, அவளை மறுக்க வேண்டும் என்று நினைத்து வந்தவனுக்கு இப்போது ஏனோ மறுக்கவே தோன்றவில்லை.

இரண்டு வீட்டு பக்கமும் சம்மதம் தெரிவித்ததும் மேற்கொண்டு பேசி, அடுத்த ஒரு மாதத்திலேயே திருமணம் முடிவானது.

திருமணம் முடிவானாலும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

அதனால் திருமணத்திற்கு முன் அவன் குணம் பற்றி அவளுக்குத் தெரியவில்லை.

அனைத்துப் பெண்களைப் போல அவளுக்கும் அவளின் கணவனைப் பற்றிப் பல எதிர்பார்ப்புகள் இருந்தன.

அந்த எதிர்பார்ப்புகளுடன் தான் திருமணமும் செய்து கொண்டாள்.

திருமணம் முடிந்த முதல் நாள் அவர்கள் வாழ்க்கையும் ஆரம்பமானது.

முதல் நாள் புதுப் பெண் என்ற வெட்கம், சுற்றிலும் இருந்த உறவினர்கள் என்று இருந்ததில், கணவனிடம் அவளால் அதிகம் பேச முடியவில்லை.

அடுத்த நாளும் சில உறவினர்கள் இருக்க, அவர்களுடன் ஒன்றாமல் தனித்திருந்த கணவனை விநோதமாகப் பார்த்தாள்.

அடுத்துப் புதுமணத் தம்பதிகளை உறவினர்கள் வீட்டிற்குப் போகச் சொல்ல, அவனின் அன்னையிடம் பெரிய போர்க்களத்தை அவன் நடத்தியதை பார்த்துத் தான் முதல் முதலில் மிரண்டு போனாள்.

“நீங்க ஆசைப்பட்ட மாதிரி கல்யாணம் பண்ணி வச்சீங்கல? அதோட விட வேண்டியது தானே? என்னவோ நம்ம வீட்டில் சாப்பாடே இல்லாதது போல் அடுத்த வீட்டு விருந்துக்குப் போகச் சொல்றீங்க?” என்று சூர்யா ஹாலில் இருந்து கத்த, அறைக்குள் இருந்தவள் அலறி அடித்து ஓடிவந்தாள்.

“இதெல்லாம் முறை கண்ணா. யாரோ வீட்டுக்கு போற மாதிரி ஏன் குதிக்கிற? உன் அத்தை, மாமா வீட்டுக்குத்தான் போகப் போறீங்க. அதுவும் சாப்பிடுற நேரத்துக்குப் போயிட்டு, சாப்பிட்டு கிளம்பி வர போறீங்க…” என்றார் சித்ரா.

“அதுக்கு ஹோட்டலுக்குப் போனால் போதாதா? அதுக்கு எதுக்கு அவங்க வீட்டுக்குப் போகணும்?” என்று வியாக்கியானம் பேசினான்.

“நமக்கும் நாலு சொந்தபந்தம் வேணும் கண்ணா…”

“சொந்தபந்தம் வேணும்னா நீங்க போங்க. நான் போக மாட்டேன்…” என்றான்.

“நம்ம வீட்டு மருமகளுக்கு நம்ம சொந்தக்காரங்க எல்லாம் தெரிய வேண்டாமா? நீ கூட்டிட்டுப் போனால் தான் தெரியும்…”

“அது அவங்க நம்ம வீட்டுக்கு வரும் போது பார்த்துக்கட்டும்…”

“விதாண்டாவாதம் பண்ணாதே கண்ணா. இதுக்கே இப்படிச் சொன்னால் நாளைக்கு நீ மாமியார் வீட்டுக்குப் போகணும். நாலு நாள் அங்கே தான் இருக்கணும். அப்ப என்ன பண்ணுவ?”

“என்னது? நாலு நாளா? முடியாது… என்னால் எல்லாம் போகவே முடியாது…” என்று வேகமாக மறுத்தான்.

அதுவரை அமைதியாக அவர்கள் பேச்சை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த யுவஶ்ரீக்கு திக்கென்று மனம் அதிர்ந்தது.

ஏற்கெனவே பிறந்த வீட்டை விட்டு வந்திருக்கிறோம். அன்னை தனியாக என்ன செய்கிறாரோ? என்று அவளுக்கு வருத்தமாக இருந்தது.

அந்த வருத்தத்திலும் நாளை அன்னை வீட்டுக்குச் செல்வோம். நான்கு நாட்கள் அங்கே இருப்போம் என்ற மகிழ்ச்சியுடன் இருந்தாள்.

இப்போது என்னவென்றால் போக முடியாதோ? என்று பயந்து போனாள்.

மருமகளைச் சங்கடத்துடன் பார்த்த சித்ரா, “அப்படி எல்லாம் சொல்ல கூடாதுபா. உன் பொண்டாட்டி இனி காலம் முழுவதும் உன் கூடத்தான் இருப்பாள். அவளுக்குச் சந்தோஷமே அப்பப்போ பொறந்த வீட்டுக்குப் போயிட்டு வருவது தான். அதுவும் புதுசா கல்யாணம் ஆன பிறகு மறுவீடு போறது எல்லாம் சம்பிரதாயம். போய்தான் ஆகணும்…” என்றார்.

“பழக்கம் இல்லாத வீட்டில் போய் எப்படித் தங்க முடியும் மா?” என்றான்.

அதைக் கேட்டதும் முதல் முறையாக யுவஶ்ரீக்கு கணவன் மேல் கோபம் வந்தது.

‘இவங்க வீட்டில் மட்டும் நான் காலம் காலமா இருந்தேன்னா என்ன? என்னோட அம்மாவை தனியா விட்டுட்டு இந்த வீட்டுக்கு வாழ வரலை. இவரு மட்டும் நாலு நாள் தங்க யோசிப்பாராமா?’ என்று உள்ளுக்குள் கடுத்தாள்.

அப்போது அவள் அறியவில்லை. இனி கணவன் தன்னை வகைத் தொகை இல்லாமல் கடுப்படிப்பான் என்று.

“அவளுக்குப் பழக்கம் இல்லாத வீட்டில் தான் உன் பொண்டாட்டியும் வாழ வந்திருக்காள். நானும் தான் இந்த வீட்டுக்கு அப்படி வாழ வந்தேன். பொண்ணுங்க எல்லாம் வாழ வர்ற வீட்டை எங்க வீடாக மாத்திக்கிறது இல்ல? உனக்கு நாலு நாள் தங்க கசக்குதா?” என்று கேட்டார் சித்ரா.

மகனுக்கு ஆதரவாகப் பேசாமல் நியாயத்தைப் பேசிய மாமியாரை அப்போதே யுவஶ்ரீக்குப் பிடித்துப் போனது.

“அது பொண்ணுங்க தலையெழுத்து. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?” என்று தெனாவட்டாகக் கேட்டான்.

அதற்குச் சித்ரா மகனுக்கு அறிவுரையைத் துவங்கும் முன் அங்கே வந்த அவனின் தந்தை குமரகுரு, “இங்கே என்ன பிரச்சினை சித்ரா? உன் மகன் சத்தம் வீதி வரை கேட்குது…” என்றார்.

“மறுவீட்டு விருந்துக்கு மாமியார் வீட்டுக்குப் போக மாட்டானாம்…” என்றார்.

தந்தை வந்ததும் சூர்யாவின் முகம் கடுகடுவென்றானது.

வாய் அமைதியைத் தத்தெடுத்துக் கொண்டது.

மகனை கூர்மையுடன் பார்த்தவர், “நீ போற, அவ்வளவு தான்!” என்றவர் அடுத்த நொடி உள்ளே சென்று விட்டார்.

“அம்மா…” என்று தந்தை சென்ற திசையைப் பார்த்து பல்லை கடித்தான்.

“அதை உங்க அப்பாகிட்ட போய்க் கடி!” என்று சொல்லிவிட்டு சித்ரா உள்ளே சென்று விட்டார்.

சென்ற மாமனாரை அதிசயித்துப் பார்த்தாள் யுவஶ்ரீ.

அம்மா பக்கம் பக்கமாகப் பேச, அப்பா நான்கு வார்த்தைகளில் மகனை அடக்கிவிட்டு சென்று விட்டாரே! அதுவும் கணவனும் பதில் பேசாமல் அடங்கிவிட்டாரே என்று வியந்து போனாள்.

அன்று இரவு கணவன் அருகில் வந்த போது, “என்னோட வீட்டுக்கு வர மாட்டேன்னு ஏன் சொன்னீங்க? நான் நாளைக்கு அம்மா வீட்டுக்கு போவோம்னு எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா?” புத்தம் புதிய மனைவி என்ற உரிமையில் சிணுங்களுடனே கேட்டாள்.

“உனக்கு அவ்வளவு ஆசையா இருந்தால் சொல்லு. இப்பவே ஒரு கார் பிடிச்சி அனுப்பி விடுறேன். போய்ட்டு வா!” என்ற அவனின் பதிலில் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் வாயடைத்துப் போனாள் யுவஶ்ரீ.

அவளின் அதிர்வை கண்டு கொள்ளாமல் ஆக்கிரமித்தான் மனைவியை.

தன்னைத் தனியாகப் போகச் சொல்லி விட்டானே என்ற சுணக்கத்தை அவள் காட்ட, அதை எல்லாம் சூர்யா கண்டுகொள்ளவே இல்லை.

அவள் சுணக்கமாக இருந்ததைக் கூட அவன் உணரவே இல்லை என்பது தான் உண்மை.

அடுத்த நாள் அன்னை வீட்டுக்குச் செல்கிறோம் என்ற மகிழ்ச்சியில் தன் சுணக்கம் கூட அவளுக்கு மறந்து போனது.

அதிகாலையிலேயே சேலத்திற்குக் கிளம்பினர்.

காரில் செல்லும் போது கணவனிடம் தன் அம்மாவை பற்றி, தன் இறந்து போன அப்பாவை பற்றி, அதன் பின் தாங்கள் பட்ட கஷ்டங்களைப் பற்றி, தன் விருப்பு, வெறுப்பைப் பற்றிப் பேசுவோம் என்று அவள் நினைத்துக் கொண்டு வந்தாள்.

ஆனால் அவனோ தன்னுடன் ஒருத்தியும் வருகிறாள் என்பதை உணராதவன் போல் ட்ரைவர் அருகில் அமர்ந்து கொண்டவன், காதில் ஹெட் போனை மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டு வந்தான்.

அவனைத் தன்னுடன் பின்னால் அமர சொல்ல அவளுக்கு ஆசையாக இருந்தது.

ஆனால் ட்ரைவர் முன் சொல்ல தயங்கி அமைதியாக வந்தாள்.

நடுவில் காஃபி குடிக்க ஒரு இடத்தில் நிற்க, அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு வாங்கித் தருவான் என்று நினைத்தாள்.

ஆனால் கார் நிற்கவும் அவன் பாட்டுக்கு இறங்கி போக, திகைத்துப் போனாள்.

“உங்களுக்கு எதுவும் வாங்கவா மேடம்?” என்று ட்ரைவர் கேட்க, அவளுக்கு எப்படியோ ஆகிப் போனது.

“இல்ல, நான் பார்த்துக்கிறேன்…” என்றவள் கணவன் சென்ற திசையில் சென்றாள்.

ஒரு கடையில் அவன் குளிர்பானம் வாங்கிக் குடித்துக் கொண்டிருக்க, “என்ன என்னை விட்டுட்டு வந்துட்டீங்க? எனக்குக் காஃபி வாங்கிக் கொடுங்க…” என்றாள்.

“உனக்கு வேணும்னா நீ தான் வந்து வாங்கணும். இதோ இந்தக் கடைக்காரர்கிட்ட சொல்லு, தருவார்…” என்று சொன்னவனைப் பார்த்து அவளுக்குக் காஃபி குடிக்கும் ஆசையே போய் விட்டது.

‘என்ன இது, இப்படி இருக்கிறான்?’ என்று அவளை நினைக்க வைக்க ஆரம்பித்தவன், அதன் பிறகு எண்ணிக்கைக்குள் அடங்காமல் நினைக்க வைத்தான்.

திரும்பக் காரில் ஏறும் போது அவன் பின்னால் வந்து ஏற, அவன் பேசியதை எல்லாம் மறந்து சந்தோஷப்பட்டுப் போனாள்.

ஆனால் பின்னால் அமர்ந்தவன் கண்ணின் மீது ஒரு துணியைப் போட்டு மூடி, தூங்க ஆரம்பிக்க அவளுக்குச் சொத்தென்று ஆனது.

“தூங்க போறீங்களா? பேசிட்டு வரலாம்னு நினைச்சேன்…” மெல்ல அவன் கையோடு கை கோர்த்து கேட்டாள்.

கண்ணில் இருந்த துணியை எடுத்து விட்டு அவளைப் பார்த்தவன், “நைட் எல்லாம் தூக்கமே இல்லை. இன்னைக்கு நைட்டுக்கும் எப்படியும் தூங்க மாட்டேன். இப்போ தூங்கினால் தான் உண்டு…” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு இமைகள் படபடக்கச் சிவந்து போனாள்.

இரவுகளில் தூங்காமல் அவன் காட்டும் வேகமும், தாபமும் அவளை மயக்கியது.

அதை நினைத்து அவள் வெட்கப்பட, “நீயும் கொஞ்ச நேரம் தூங்கு. நைட் தூக்கம் வருதுன்னு சொன்ன, அவ்வளவு தான்…” என்றான்.

அதைச் செல்ல மிரட்டலாக எடுத்துக் கொண்டவள், அவனின் தோள் சாய்ந்து மெல்ல அவளும் நித்திரையைத் தழுவ ஆரம்பித்தாள்.

ஊர் சென்று சேர்ந்ததும் அங்கே எப்படி நடந்து கொள்வானோ என்று அவள் பயந்ததற்கு மாறாக அவளுடனே இருந்தான்.

அவளின் அன்னையுடன் அளவாகப் பேசினாலும், அவன் தன்னுடனே இருப்பது அவளை மகிழ்ச்சியடையச் செய்தது.

தியேட்டர் அழைத்துச் சென்றான். அங்கே சுற்றி பார்க்க என்ன இடங்கள் உள்ளன என்று கேட்டு அவளுடன் சென்றான்.

நான்கு நாட்களும் அவன் காட்டிய இணக்கத்தில் மயங்கி தான் போயிருந்தாள்.

மாப்பிள்ளை மகளுடனே சுற்றுவதைப் பார்த்து பரிமளாவும் மகிழ்ந்து போனார்.

மறுவீட்டு விருந்து, சொந்தபந்தங்களின் வீட்டு விருந்து என அனைத்தையும் முடித்துக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தனர்.

திருமணம் முடிவானதுமே அதுவரை நண்பர்களுடன் சேர்ந்து அறை எடுத்து தங்கியிருந்தவன் தனியாக வாடகை வீடு பார்த்திருந்தான்.

அதில் இருவரும் குடி புகுந்தனர்.

பெரியவர்களும் வந்து எல்லாம் சரியா இருக்கிறதா என்று பார்த்து விட்டுச் சென்றனர்.

அவர்கள் கிளம்பியதுமே அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் வெளியே கிளம்பினான் சூர்யா.

“எங்கே கிளம்பிட்டீங்க?” என்று கேட்டாள் யுவஶ்ரீ.

“ஃபிரண்ட்ஸ் பார்க்க போறேன், ஏன்?”

“நான் தனியா இருக்கணுமே? நானும் வரட்டுமா?”

“இல்லை நாங்க ஃபிரண்ட்ஸா மீட் பண்ண போறோம். நீ வீட்டில் இரு!” என்றவன், அதற்கு மேல் நிற்காமல் வெளியே கிளம்பி விட்டான்.

அவன் திரும்பி வரும் போது பத்து மணிக்கு மேல் ஆகியிருந்தது.

“என்ன இவ்வளவு லேட்? உங்க போனுக்குப் போன் போட்டேன். நீங்க எடுக்கவே இல்லை…” அவன் வீட்டிற்குள் வந்ததும் வராததுமாக அந்தக் கேள்வியைக் கேட்டவள் அப்போது தான் கணவனிடம் அந்த மாற்றத்தை கவனித்தாள்.

கண்கள் சிவந்து போதையில் சொருகியிருக்க, லேசான தள்ளாட்டத்துடன் இருந்த கணவனைக் கண்டு திகைத்துப் போனாள்.

“நீங்க குடிப்பீங்களா?” என்று அவள் அதிர்ந்து கேட்க,

“ஆமா, அதுக்கென்ன இப்போ?” என்று அசராமல் கேட்டான் சூர்யா.

“உங்களுக்கு அந்தப் பழக்கம் எல்லாம் இல்லைனு உங்க அம்மா சொன்னாங்களே?”

“எல்லா அம்மாவுக்கும் அவங்க பிள்ளைங்க ஒன்னுமே அறியாதவங்க தான். எங்க அம்மா மட்டும் அதில் விதிவிளக்கா? அதோட குடிக்கிறதை எல்லாம் அம்மாகிட்ட சொல்லிட்டா குடிக்க முடியும்?” என்று கோணலாக வாயை சுளித்து அவன் கேட்ட போது இப்படி ஏமாந்து விட்டோமே? என்று தான் அவளுக்குத் தோன்றியது.

அவளின் தந்தை எந்தக் கெட்டபழக்கமும் இல்லாதவர். அதனால் தனக்கு வரப் போகும் கணவனும் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசை கொண்டாள்.

ஆனால் அவள் ஆசை நிராசையாகப் போக, அவளால் தாளவே முடியவில்லை.

இது என்ன பிரமாதம்! இன்னும் வைத்திருக்கிறேன் பார்! என்பது போல் அடுத்தடுத்து அவளை அசரடித்தான் அவளின் கணவன்.