4 – மின்னல் பூவே!
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 4
“என்ன உத்ரா, யாரையோ லவ் பண்றன்னு சொன்ன. ஆனா அது யாருன்னு கேட்கும் போதெல்லாம் சொல்லாம மழுப்பிக்கிட்டே இருக்க. எப்பத்தான் சொல்லுவ?” என்று கேட்டாள் புவனா.
“ஒரு நாள் சொல்லத்தானே போறேன். அதுக்குள்ள என்ன அவசரம்? வெயிட் பண்ணு புவி. சீக்கிரமே சொல்றேன்…” என்றாள் உத்ரா.
“அந்தச் சீக்கிரம் எப்போ வரும்?”
“இன்னும் கொஞ்ச நாள் தான்…” என்றவள் கண்கள் அந்த நாளை நினைத்து மின்னின.
“உன் லவ்வர் பத்தி நீ பேசும் போதெல்லாம் உன் கண்ணு அப்படியே ஜொலிக்குது உத்ரா. அப்படி எந்த மன்மதனை லவ் பண்றன்னு தெரிஞ்சுக்கலாம்னு நினைச்சா சொல்ல மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறயே…” என்று அலுத்துக்கொண்டாள் புவனா.
“அட! பொறு தங்கம்! என் லவ்வைப் பத்தி முதலில் என்னோட அப்பா, அம்மாகிட்ட சொல்லணும். அப்புறம் என் லவ்வர்கிட்ட சொல்லணும். அதுக்குப் பிறகு தானே உன்கிட்ட சொல்ல முடியும்…”
“வெயிட்! வெயிட்! என்ன ஆர்டர் எல்லாம் தலைகீழே இருக்கு. உன்னோட அப்பா, அம்மாகிட்ட முதல் முதலா சொல்லப் போறீயா?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் புவனா.
“யெஸ், அவங்ககிட்ட தான் சொல்லப் போறேன். அது தான் என் பழக்கமும் கூட…”
“ஆனா அது காதலுக்குச் சரிவருமா உத்ரா?”
“என்னைப் பொறுத்தவரை அவங்ககிட்ட தான் முதலில் சொல்லணும். சின்னச் சின்ன விஷயத்தைக் கூட என்னோட அப்பா, அம்மாகிட்ட பகிர்ந்து தான் எனக்குப் பழக்கம். சின்ன விஷயத்துக்கே அப்படிங்கும் போது, என் வாழ்க்கை துணையா நான் தேர்ந்தெடுத்தவரை பற்றிச் சொல்வதில் என்ன தப்பு?” என்று கேட்டாள்.
“நீ தைரியமானவள்னு தெரியும். ஆனா இவ்வளவு தைரியம்னு தெரியாதுடி. எனக்கெல்லாம் இவ்வளவு தைரியம் வராது. உன் காதலுக்கு உங்க வீட்டில் சரின்னு சொல்லிடுவாங்களா?”
“சொல்லிடுவாங்கன்னு தான் நினைக்கிறேன். ஒருவேளை சம்மதிக்கலைனா எடுத்துச் சொல்லிப் புரியவைப்பேன்…” என்றவளின் உதடுகள் புன்னகையில் விரிந்தன.
“சரி, அதெல்லாம் விடு. அந்தக் குரு அதுக்குப் பின்னாடி உன்னைத் தொந்தரவு செய்தானா?” என்று விசாரித்தாள் உத்ரா.
புவனாவின் முகம் உடனே மாறியது. எதையோ மறைப்பவள் போல அவளின் தொண்டைக் குழி ஏறி இறங்கியது.
“என்னடி புவி, என்னாச்சு? எதுக்கு இவ்வளவு அவஸ்தையா நெளியுற?” கவனித்துக் கேட்டாள் உத்ரா.
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல உத்ரா…”
“இல்ல, உன் தயக்கமே ஏதோ இருக்குன்னு சொல்லுது…”
“அந்தக் குரு திரும்ப என்னைத் தனியா நிறுத்திப் பேசினான்…”
“என்ன பேசினான்?”
“அவனுக்கு என்னை ரொம்பப் பிடிக்குமாம். அவன் மனசை எப்படிச் சொல்றதுன்னு தெரியாம தான் கிஸ் பண்ணிட்டானாம். அவன் காதலை நான் ஏத்துக்கணும்னு சொன்னான்…” என்றாள் தயக்கமாக.
“அவனுக்கு உன்னைப் பிடிக்கிறது எல்லாம் இருக்கட்டும். உனக்கு அவனைப் பிடிச்சுருக்கா?” என்று கேட்டாள் உத்ரா.
உடனே வேகமாக மறுப்பாகத் தலையை அசைத்தாள் புவனா.
“அப்புறம் ஏன் தயங்குற? முடியாதுன்னு சொல்லிட்டு உன் வேலையைப் போய்ப் பார்…” என்றாள்.
“சொல்லிட்டேன். எனக்கும் சரி, எங்க வீட்டுக்கும் சரி இந்தக் காதல் எல்லாம் சரி வராது. என்னை நிம்மதியா படிக்க விடுங்க. காதல்னு வார்த்தை காதில் விழுந்தா கூட என்னைப் படிக்க வேண்டாம்னு வீட்டில் நிறுத்திருவாங்க. நான் படிக்கணும்னு சொன்னேன். உடனே அங்கிருந்து போய்ட்டான்…”
“ஒண்ணுமே சொல்லாம போய்ட்டானா?” ஆச்சரியம் இருந்தது உத்ராவின் குரலில்.
“ஒரு செகண்ட் ஒரு மாதிரி யோசனையா என் முகத்தைப் பார்த்தான். அப்புறம் போய்ட்டான்…” என்றாள்.
“நம்ப முடியலையே?” யோசனையுடன் சொன்னாள் உத்ரா.
“என்னாலேயும் நம்ப முடியலை. ஆனாலும் என்னைத் திரும்பத் தொந்தரவு பண்ணலைனா சரிதான்னு நானும் அதைப் பெருசா எடுத்துக்கலை…” என்றாள்.
“எனக்கு என்னமோ சரியாப்படலை. எதுக்கும் நீ கவனமா இரு…” என்றாள் உத்ரா.
“சரி…” என்றாள் புவனா.
கல்லூரி வாழ்க்கை அதன் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
முகில்வண்ணன் கடைசி வருடம் என்பதால் இறுதி தேர்வுக்கு அதிக ஈடுபாட்டுடன் தயாராகிக் கொண்டிருந்தான்.
இதன் நடுவில் கேம்பஸ் இன்டர்வ்யூ வேறு வரும் என்பதால், அதற்காகவும் கவனம் செலுத்த முயன்று கொண்டிருந்தான்.
கேம்பஸ் இன்டர்வ்யூவிலேயே வேலை வாங்கி விட வேண்டும் என்ற முனைப்பு அவனிடம் இருந்தது.
அவனின் தந்தை வங்கியில் மேனேஜராக இருக்க, தாய் இல்லத்தரசியாக இருந்தார்.
திருமண வயதில் ஒரு தமக்கையிருந்தாள். அவளுக்கு வீட்டில் வரன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இப்போது அவனின் கவனம் எல்லாம் படிப்பில் இருக்க, அவனை ஒருத்திக் கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அறியாமல் போனான்.
‘பயபுள்ள ஓவர் படிப்ஸ்ஸா இருக்கானே…’ என்று அவனைக் கவனித்தவள் புலம்பிக் கொள்ளத்தான் முடிந்தது.
படிப்பு ஒரு பக்கம் சென்று கொண்டிருந்தாலும் தினமும் கல்லூரி முடிந்த பின் புட்பால் விளையாடுவது முகிலின் வழக்கம்.
அன்றும் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
“பாலை பிடி, விடாதே அருண்…” என்று தன் டீம் நண்பனைப் பார்த்துக் கத்திக் கொண்டிருந்தான்.
அருணும் தன் பக்கம் வந்த பாலை சரியாக எட்டி உதைக்க, அது முகிலனை நோக்கி ஓடியது.
தன் பக்கம் வந்த பாலை குறிபார்த்து வலை பக்கம் எட்டி உதைக்க, அது வலையில் மோதி தன் இலக்கை அடைய, முகிலனும் அவனின் நண்பர்களும் உற்சாகமாகக் கூவினர்.
“சூப்பர்டா முகில்…” என்று நண்பர்கள் அவனை வாழ்த்தினர்.
அத்துடன் அந்த ஆட்டம் முடிய, அருணுடன் பேசிக் கொண்டே அங்கிருந்த மரத்தடியில் வைத்திருந்த டவலை எடுத்து வியர்வையைத் துடைக்க ஆரம்பித்தான் முகில்.
அப்போது ஏதோ வித்தியாசமாக உணர்ந்தவன் துடைப்பதை நிறுத்தி விட்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.
“என்னாச்சு முகில், என்ன தேடுற?” அருண் கேட்க,
“யாரோ என்னைப் பார்க்கிற மாதிரியே இருக்கு…” என்றவன் கண்கள் தன் தேடலை தொடர்ந்தன.
சற்றுத் தூரத்தில் இருந்த இன்னொரு மரத்தடியில் உத்ராவும், அவளின் இன்னொரு தோழியும் தான் நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
உத்ரா அவனின் புறம் தான் திரும்பி நின்றிருந்தாள்.
ஆனால் அவள் தோழியின் முகம் பார்த்துத்தான் பேசிக் கொண்டிருந்தாள்.
அவளைக் கண்டவன், ஒருவேளை அவள் தான் என்னைப் பார்க்கிறாளா? என்று தோன்ற அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தான்.
ஆனால் உத்ராவின் பார்வை அவனின் புறம் திரும்பவே இல்லை.
‘இவ எதுக்கு என்னைப் பார்க்கப் போறா? இந்தத் திமிர்ப்பிடித்தவள் என்னைப் பார்க்காம இருக்குறதே நல்லதுடா சாமி…’ என்று நினைத்துக் கொண்டவன் தலையைக் குலுக்கி விட்டுக் கொண்டான்.
“என்ன முகில், அங்கே இரண்டு ஜீனியர் பொண்ணுங்க தான் நிற்கிறாங்க. அவங்களில் ஒருத்தி தான் உன்னைப் பார்க்கிறாளோ?” என்று அருண் கேட்க,
“ச்சே, ச்சே! இல்லை அருண். அவங்க சும்மாதான் பேசிட்டு இருக்காங்க. நான் தான் ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டேன் போல இருக்கு. யாரும் என்னைப் பார்க்கலை. வா போகலாம்…” என்ற முகில் அதற்கு மேல் அங்கே நிற்காமல் இடத்தைக் காலி செய்தான்.
சாதாரணப் பேச்சுக்கு கூட உத்ராவுடன் தன் பெயர் அடிப்படக் கூடாது என்று நினைத்துக் கொண்டான்.
வீட்டிற்குச் செல்ல பார்க்கிங் சென்று தன் பைக்கை எடுக்க ஆரம்பித்தான்.
அதே நேரம் சற்று தள்ளி தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டிருந்தாள் உத்ரா.
அவளைப் பார்த்ததும் அவனின் மனதில் ஒரு திடுக்கிடல் வந்து போனது.
‘இது தற்செயலாக நடக்கிறதா? இல்லை, வேண்டுமென்றெ தன்னைத் தொடர்கிறாளா?’ என்று அவனின் சிந்தனை ஓடியது.
‘ச்சே, இன்னைக்கு என்ன என் நினைப்பு இப்படியே போகுது?’ என்று தன்னையே திட்டிக் கொண்டவன், மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
அவன் செல்லும் வழியிலும் பின்னாலேயே வந்தாள் உத்ரா.
அவளைக் கண்ணாடி வழியாகப் பார்த்தவன் இன்னும் குழம்பிப் போனான்.
அவன் வீடு இருக்கும் தெரு வந்ததும் வண்டியின் வேகத்தைக் குறைத்தான்.
ஆனால் அவனின் பின்னால் வந்த உத்ரா வேகத்தைக் குறைக்காமல் பக்கத்து தெருவிற்குள் வண்டியை விட்டாள்.
‘ஓ, அவள் வீடு பக்கத்துத் தெருவில் தான் இருக்கு போல. நான் தான் கொஞ்ச நேரத்தில் ஏதேதோ கற்பனை பண்ணிட்டேன்’ என்று நினைத்தவன் நிம்மதியாகப் பெருமூச்சை இழுத்து விட்டு தன் வீட்டை நோக்கிப் பயணமானான்.
அன்றைய நாளுக்குப் பிறகும் அவ்வப்போது உத்ரா முகில்வண்ணனின் கண்ணில் பட்டுக் கொண்டே தான் இருந்தாள்.
ஆனால் அவளின் பார்வை தன் பக்கம் திரும்பாததால் அவனுக்கு எதுவும் தவறாகத் தெரியவில்லை.
இதற்கிடையே கல்லூரி விழா ஆரம்பித்திருக்க, உத்ரா நடனத்திலும், பாட்டுப் பாடுவதிலும் கலந்து கொள்ளப் பெயர் கொடுத்தாள்.
முகில்வண்ணன் பாட்டில் மட்டும் கலந்து கொள்ளத் தயாரானான்.
அந்தந்த படிப்பு பிரிவின் படியே நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்திருந்தனர்.
அதில் பாட்டு நிகழ்ச்சி மட்டும் நன்றாகப் பாடுபவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சீனியர், ஜூனியரும் கலந்து பாட முடிவு செய்யப்பட்டது.
அதன் படி கம்ப்யூட்டர் முதுகலை பிரிவில் இருந்து முகிலும், உத்ராவும் சேர்ந்து படும் படி அவர்கள் பெயர் அறிவிக்கப்பட, முகிலின் முகம் சுருங்கிப் போனது.
“இல்ல தீனா, இது சரி வராது. நான் வேற யார் கூடயாவது பாடுறேன். இல்லனா தனியா பாடுறேன்…” என்று குழுவாகப் பிரித்துவிட்ட தலைவன் தீனாவிடம் மறுப்புத் தெரிவித்தான் முகில்வண்ணன்.
“ஏன், என்னாச்சு முகில்? உத்ரா ஜூனியர்னு தயங்குறியா? ஜூனியரா இருந்தாலும் நல்லா பாடுவாள் முகில்…” என்றான் தீனா.
“ஜூனியர்னு எல்லாம் நினைக்கலை தீனா. உத்ரா ஏனோ எனக்குச் செட் ஆக மாட்டாள்னு தோணுது…”
“இல்லை முகில், உங்க இரண்டு பேரோட வாய்ஸும் நீங்க எந்தப் பாட்டு பாடினாலும் பெர்பெக்ட்டா மேட்ச் ஆகும். அதனால் தான் உங்க இரண்டு பேரையும் தேர்ந்தெடுத்தேன்…” என்றான் தீனா.
ஆனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மறுப்பாகத் தலையசைத்தான் முகில்.
அவன் தீனாவிடம் ஏதோ பேசுவதையும், மறுப்பதையும் சற்று தள்ளி நின்று தன் தோழியிடம் பேசிக் கொண்டிருந்த உத்ரா கவனிக்கவே செய்தாள்.
தன்னுடன் பாடத்தான் மறுப்புத் தெரிவிக்கின்றானோ என்ற யோசனையுடன் அவனைப் பார்த்தாள்.
அதே நேரம் தீனா சொன்ன எந்தச் சமாதானத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தலையை அழுந்த கோதிக் கொண்டு திரும்பியவன் கண்களில் உத்ரா பட்டாள்.
அவளிடமே நேராகச் சொல்லி விடுவோமா என்று தோன்ற அவளை நோக்கி வந்தான்.
“உத்ரா, ஒரு நிமிஷம்…” என்று அவளைத் தனியே அழைத்தான்.
புவனாவிடம் பேசிக் கொண்டிருந்தவள், “இருடி, வர்றேன்…” என்று சொல்லி விட்டு அவனின் அருகில் வந்தாள்.
“பாட்டு லிஸ்டில் நம்ம இரண்டு பேர் பெயரும் சேர்ந்து பாடச் சொல்லி வந்திருப்பது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.
“தெரியுமே முகில்வண்ணன்…” என்றாள்.
“ஆனா அது சரி வராது உத்ரா…” என்று சுற்றி வளைக்காமல் பட்டென்று விஷயத்தைச் சொல்லியிருந்தான்.
“ஏன்?” என்றாள் ஒற்றை வார்த்தையாக.
‘உன்னைப் போல் திமிர்ப்பிடித்தவள் கூட என்னால் பாட முடியாது’ என்று சொல்லத்தான் அவனின் நாவு துடித்தது.
ஆனால் அப்படி யாரிடம் பேசிப் பழக்கம் இல்லாதவன் மௌனமானான்.
“இந்த அடாவடி பொண்ணு கூட நாம எப்படிப் பாட முடியும்னு நினைக்கிறீங்களோ?” என்று மென்மையாகச் சிரித்துக் கொண்டே கேட்டாள்.
அவன் நினைப்பை ஊகித்துச் சொன்னவளை அமைதியாகப் பார்த்தான் முகில்.
அவளின் சிரிப்பை முதல் முறையாக அவ்வளவு அருகில் பார்க்கிறான். அவன் அருகில் இருந்த போதெல்லாம் கோபத்தில் முகம் சிவக்க, கண்கள் அக்கினியாகக் கொழுந்து விட்டு எரிய நின்றவளைத் தான் பார்த்திருக்கின்றான்.
ஆனால் இப்போதோ ‘என்னை எப்படி அப்படி நினைக்கலாம்?’ என்று குதிக்காமல் அவள் சிரித்துக் கொண்டே கேட்டதே அவனுக்கு அதிசயமாக இருந்தது.
“அது தான் காரணம் போல?” சிரிப்பு மாறாமல் கேட்டவள், “கவலைப்படாதீங்க. நான் கொஞ்சம் நல்லவள் தான். என்னை நம்பி என் கூடப் பாடலாம். உங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது…” என்றாள்.
உதட்டில் புன்சிரிப்பு தவழ, அதனுடன் கண்களும் சேர்ந்து சிரிக்கப் பேசியவளைப் பார்த்து இப்போது ஏனோ அவனுக்கு மறுக்கத் தோன்றவில்லை.
‘இவளா அந்தச் சண்டைக்காரி?’ என்பது போல் பார்த்தான்.
“என்ன சொல்ற முகில்? உன் முடிவு என்ன?” என்று அவர்களின் அருகில் வந்த தீனா கேட்க,
தன் பார்வையை அவளிடமிருந்து பிரிக்காமலேயே “நாங்க பாடுறோம் தீனா…” என்றான் முகில்வண்ணன்.
உத்ராவின் புன்முறுவல் புன்னகையாக மாற, உதடுகள் விரிந்தன.
“சந்தோஷம் முகில். என்ன பாட்டு பாடப் போறீங்கன்னு பேசி முடிவு பண்ணிட்டு எனக்கு இன்பார்ம் பண்ணுங்க…” என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தான் தீனா.
அவன் சென்ற பிறகு இருவருக்கும் இடையே சில நொடிகள் மௌனம் நிலவியது.
“ம்கும், என்ன பாட்டுப் பாடலாம். நீ எதுவும் யோசிச்சுருக்கியா?” என்று தானே முதலில் மௌனத்தைக் கலைந்து அவளிடம் கேட்டான்.
“நான் எதுவும் யோசிக்கலை. நீங்க?” என்று கேட்டாள்.
“ம்ம்ம்…” என்று சில நொடிகள் யோசித்தவன், “எனக்கு என்னமோ ஒரு பாட்டு மட்டும் பாடுவது சரியா இருக்காதுன்னு தோணுது…” என்றான்.
“அப்போ மிக்ஸிங் பாட்டு பாடுவோமா? பழைய பாட்டில் இருந்து ஆரம்பிப்போம். அறுபதுகளில் வந்த பாடலில் ஆரம்பித்து நியூ சாங்ஸ் வரை பாடலாம். அந்தப் பாட்டு எல்லாம் ஒரே மெட்டில் இருப்பது போலப் பார்த்து தேர்ந்தெடுப்போம்…” என்றாள்.
“நல்ல ஐடியா தான். இன்னும் ஒன்னும் ட்ரை பண்ணலாம். முதலில் மெல்லிசையாக ஆரம்பிச்சு அப்படியே ஃபோக் சாங்க்னு லாஸ்ட்ல முடிச்சா நம்ம ப்ரொபஸர்ல இருந்து ஸ்டூடன்ட்ஸ் வரை ரசிக்கிற மாதிரி இருக்கும். அதனால் அது போலப் பாட்டா செலக்ட் பண்ணலாம்…” என்றான்.
“எனக்கு ஓகே தான்…” என்று உத்ராவும் சம்மதம் தெரிவித்து விட, அடுத்த ஒரு மணி நேரத்தில் இருவரும் பேசி என்னென்ன பாட்டு பாடுவது என்று பட்டியல் தயாரித்தனர்.
ஏனோ தானோ என்று இல்லாமல் ஒவ்வொரு பாடலையும் சிறந்த முறையில் தேர்ந்தெடுக்க உதவினாள் உத்ரா.
அவளின் ஆர்வத்தையும், ஒரு பாட்டைத் தேர்ந்தெடுக்கும் பொழுது அதை மெல்லிய குரலில் பாடி, முதல் பாட்டுக்கும் அடுத்தப் பாட்டுக்கும் லிங்க் சரியாக இருக்குமா என்று சரி பார்த்தே பாடலை தேர்ந்தெடுத்தாள்.
அவள் மெல்லிய குரலில் பாடியதே அவ்வளவு ரசனையாக இருந்தது.
மென்மையான இடத்தில் மென்மையாகப் பாடி, உச்சஸ்தானியில் வரும் போது அதற்கு ஏற்ப ஏற்ற இறுக்கத்துடன் அருமையாகப் பாடினாள்.
அவளின் குரல்வளத்தில் முகிலின் புருவங்கள் ஆச்சரியத்தில் மேலேறி கீழ் இறங்கின.
எப்போதும் உக்கிரமாகப் பார்த்துப் பழகியவளை இப்போது இப்படிப் பார்க்க அவனுக்கு வித்தியாசமாக இருந்தது.
‘இவளிடம் இப்படி ஒரு மென்மையா?’ என்று தான் நினைத்தான்.
தன் இந்த எண்ணம் விரைவிலேயே மாறப் போவதை அறியாமல்!