4 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 4
“வாங்க தர்மா தம்பி… உங்க டிரைவிங் ஸ்கூல் வேலை சூடு பிடிக்க ஆரம்பிச்சுடுச்சா? ஒரு வாரமா இந்தப் பக்கம் ஆளையே காணோமே…” என்று அந்த ஞாயிற்றுக்கிழமை மாலைவேளையில் வந்தவனை வரவேற்றார் தியாகராஜன்.
ஊன்றுகோலை கடையின் சுவற்றில் சாய்த்து வைத்து விட்டுக் கடை முன்பிருந்த மேஜையின் மேல் சாய்ந்து நின்று துளிர்த்த வேர்வையைக் கைக்குட்டையால் ஒத்தி எடுத்தவன் “ட்ரைவிங் கத்துக்க இதுவரை ஒரு மூணு பேரு சேர்ந்து இருக்காங்க சார். இதுக்கு மேல தொழில் சூடு பிடிக்கக் கொஞ்ச நாளாகும். இந்தப் பக்கம் வரமுடியாம போனதுக்குக் காரணம் வேற வேலையினால் சார்…” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே “தம்பி ஒரு நிமிஷம்…” என்று இடைவெட்டினார் தியாகராஜன்.
“என்ன சார்?”
“இந்தச் சாருக்குத் தான் தம்பி பேச்சை நிறுத்தினேன். நீங்க சார்… சார்னு கூப்பிடறது என்னவோ ஸ்கூல் வாத்தியாரை கூப்பிடுற மாதிரி இருக்கு. அந்தச் சாரை விட்டுருங்களேன்…” என்றார்.
“நான் எப்படி உங்களைக் கூப்பிடட்டும்னு நீங்களே சொல்லிடுங்க…” என்றான் சிரிப்புடன்.
“அதுதான் பொதுவா அங்கிள்னு ஒரு வார்த்தை இருக்கே… அப்படிக் கூப்பிடுங்க தம்பி…”
“என்னப்பா யாரை அங்கிள்னு கூப்பிட சொல்றீங்க?” என்று கேட்டுக்கொண்டே அப்போது அங்கே வந்தாள் சத்யவேணி.
“தர்மா தம்பிமா… நான் தாங்க…” என்று தியாகராஜனும், தர்மாவும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்.
“தர்மா சாரா? வாங்க…!” அவள் சார் என்றதும் மற்ற இருவருக்குமே சிரிப்பு வந்தது.
“எதுக்குச் சிரிக்கிறீங்க?”
“நானும் வாத்தியார் இல்லைங்க… அதனால நீங்க என்னைப் பேர் சொல்லியே கூப்பிடலாம்…”
“வாத்தியார் இல்லையா? உங்களை யார் இப்போ வாத்தியார்னு சொன்னா?”
“நீங்க தான்…”
“நானா? நான் எப்போ சொன்னேன்?”
“இப்போதாங்க…”
“இல்லையே…”
“இப்ப சார்னு கூப்பிட்டீங்களே…” என்று சொல்லிச் சிரித்தான்.
அவர்களின் உரையாடலை சிறு புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்த தியாகராஜனும் இணைந்து சிரித்தார்.
அவர்கள் சிரிக்கவும் “மறுபடியும் முதலில் இருந்தா? இரண்டு பேரும் சொல்லிட்டு சிரிங்க…” என்று சலித்துக் கொள்வது போல் சொன்னாள்.
அவளின் சலிப்பில் இன்னும் சிரித்துக் கொண்டே அவள் வரும் முன் தாங்கள் பேசிக் கொண்டதை சொன்னான் தர்மா.
“ஓஹோ…! இப்படித்தான் அங்கிள் வந்ததா? சரிதான்…! அப்பாவை நீங்க அங்கிள்னு கூப்பிடுறது நியாயம் தான். ஆனா…” என்றவள் நிறுத்தி, பின்பு “நீங்க எப்படியும் ஒரு வாத்தியார் தானே தர்மா சார்? அதனால நான் சார்னு கூப்பிட்டது தப்பில்லை…” என்றவள் இதழோரம் சிரிப்பு வருவதற்கு அடையாளமாகத் துடித்தது.
இரண்டு பேரும் கடைக்கு வெளியே தான் நின்றிருந்தார்கள். சத்யவேணி அப்பொழுதுதான் கடைக்கு வந்ததால் தர்மாவிடம் பேசிக்கொண்டே அப்படியே வெளியே நின்று விட்டாள். அதுமட்டுமில்லாமல் அவள் கடைக்கு உள்ளே செல்லும் வழியில் தான் அவன் நின்றிருந்தான்.
தர்மா பேசிக்கொண்டிருந்த சுவாரஸ்யத்தில் அதைக் கவனிக்கவில்லை. வெளியே நின்றிருந்தவள் அவனின் கழுத்து வரையிலான உயரத்துடன் இருந்தாள்.
அதனால் அவன் முகத்தைப் பார்த்து பேசுவது போல் லேசாக அண்ணாந்து பேசிக்கொண்டிருந்தாள். அவளின் கையில் உதவிக் கோல் (வாக்கிங் ஸ்டிக்) இருக்க, கண்ணில் கருப்பு கண்ணாடியை அணிந்திருந்தாள். அது இரண்டு மட்டுமே அவளின் நிலையை எடுத்துக் காட்டுவதாக இருந்தது.
மற்றபடி தன் குறைபாடே தெரியாதது போல் அவள் உடை உடுத்திருந்த பாங்கும், திருத்தமாகத் தலைவாரி வெறும் பவுடர் மட்டும் போட்டிருந்தாலும் அதுவே அவளின் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் அவளின் முக அழகை எடுத்துக் காட்டியது.
அதோடு இதோ இப்போது சிரித்து விடுவேன் என்பது போலத் துடித்துக் கொண்டிருந்த இதழோரமும், கண்கள் சொல்ல முடியாமல் போன நயன மொழியைக் காட்டும் முகமும் தர்மாவை ரசித்துப் பார்க்க தூண்டி கொண்டிருந்தன.
ஆனால் அவளால் தான் அப்படி ரசித்துப் பார்ப்பதை காண முடியாது என்பதற்காகத் தன் வரைமுறையைத் தாண்டுவது நியாயம் ஆகாது என்பதை அவனின் மனம் அவனுக்கு அறிவுறுத்த தன் பார்வையை அடக்கி கொண்டு முயன்று சாதாரணமாகப் பார்த்து பேச ஆரம்பித்தான்.
“நான் வாத்தியாரா… எப்படிங்க?” என்று கேட்கும் போதே அவள் சொல்ல வருவது அவனுக்குப் புரிந்து விட்டது. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவளே சொல்லட்டும் என்று அமைதி காத்தான்.
“நீங்க நடத்துற டிரைவிங் ஸ்கூலுக்கு நீங்க வாத்தியார் தானே? டிரைவிங் தெரியாம வர்ற எத்தனை பேருக்குக் கத்துக் கொடுக்குறீங்க? அப்போ நீங்க வாத்தியாரே தான் சார்…!” என்று அந்தச் ‘சாரில்’ அழுத்தம் கொடுத்துச் சொல்லி வாய்விட்டே சிரிக்க ஆரம்பித்தாள்.
அவள் மனம் விட்டு சிரிப்பதை இப்போது அவனால் ரசிக்காமல் இருக்கவே முடியவில்லை. அதே நேரம் மகள் இறுக்கம் தளர்ந்து சிரிப்பதை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் தியாகராஜன்.
அவரின் கவனம் தன்னில் இல்லாதது தர்மாவிற்கு இன்னும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க, சத்யாவின் சிரிப்பையும், அப்போது அவளின் முகம் அதிக ஜொலிப்பை வெளிப்படுத்தியதையும் ரசித்துப் பார்த்தான்.
“சரிங்க, நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். உங்க விருப்பம் போலக் கூப்பிடுங்க. என்ன அங்கிள் சரிதானே?” என்று மகளிடம் ஆரம்பித்துத் தந்தையிடம் பேச்சை முடித்தான்.
“சரிதான் தம்பி… சரி சொல்லுங்க தம்பி. ஏதோ சொல்ல வந்தீங்க. அதுக்குள்ள பேச்சு எங்கெங்கோ போயிருச்சு…” என்று பாதியில் விடுபட்ட பேச்சை ஞாபகப்படுத்தினார்.
“அதான் சார்…” என்று அவன் பேச்சை துவக்கவும் “சாரி தர்மா சார்… நான் உள்ளே போய்க்கிறேன். அப்புறம் பேசுங்க… பிளீஸ்…” என்று அவனின் பேச்சை நிறுத்தினாள்.
அப்பொழுதுதான், தான் பாதையை மறைத்துக் கொண்டிருப்பது உறைக்க “அச்சோ…! சாரிங்க… கவனிக்கலை…” என்றவன் வழியை விட்டு நின்றான்.
“பரவாயில்லைங்க…” என்று விட்டு அவனைத் தாண்டி கடைக்குச் செல்லும் போது சத்யாவின் முகம் யோசனையுடன் சுருங்கியது.
அவள் உள்ளே சென்றதும் தர்மா பேச்சை ஆரம்பித்தான். “உங்ககிட்ட தான் சொல்லியிருந்தேனே அங்கிள்… ஈரோட்டிலிருந்து இப்போதான் இங்க வந்திருப்பதால் இப்போதைக்குத் தங்கை வீட்டில் தான் இருக்கேன்னு…”
“ஆமா தம்பி… தங்கச்சி வீட்டிலேயே இருக்க முடியாதுன்னு தனி வீடு பார்க்கிறதா சொன்னீங்க. பார்த்தாச்சா…?”
“பார்த்து வீடு ஷிப்ட் பண்ணிட்டேன் அங்கிள். அந்த வேலையே போனவாரம் சரியா போயிருச்சு. அதான் இந்தப் பக்கம் வர முடியலை…” என்றான்.
“சரிதான் தம்பி. வீடு மாத்தினாலே நிறைய வேலை இருக்குமே…” என்று அவர்கள் பேசுவதைக் கேட்ட படி அமைதியாக அமர்ந்திருந்த சத்யா, “லேடி ட்ரைவர் கிடைச்சுட்டாங்களா தர்மா சார்?” என்று விசாரித்தாள்.
அவளின் புறம் திரும்பியவன் “இல்லைங்க… இன்னும் கிடைக்கலை… சீக்கிரம் கிடைச்சா நல்லா இருக்கும். இதுவரை மூணு… நாலு கஸ்டமர் விசாரிச்சுட்டு போயிருக்காங்க. லேடி டிரைவர் இருந்தா வந்து சேருறோம்னு போய்ட்டாங்க…”
“ஓ…! ஏன் தர்மா சார் ஜென்ட்ஸ்கிட்டயே கத்துக்கிட்டா என்ன? இதில் என்ன தப்பு இருக்கு? இப்போதான் நிறைய இடத்தில் அப்படிக் கத்துக்கிறாங்களே…?”
“எந்தத் தப்பும் இல்லைங்க. ஆனா இது கொஞ்சம் அவுட்டர் ஏரியா பாருங்க. அதனால கிராமம் போலத் தான் இங்க சில மக்கள் தயங்குறாங்க. எல்லாம் வயசு பொண்ணுங்க வேற… காலம் வேற கெட்டுக்கிடக்கே? அதோட நானே இதை அவாய்ட் பண்ணிருவேன். நாளை பின்ன எதுவும் பிரச்சனை வந்து டிரைவிங் ஸ்கூல் மேல மக்களுக்குத் தவறான அபிப்பிராயம் வந்திர கூடாது பாருங்க? அதான்…”
“ஓ…! பின்னாடி வருவதையும் யோசித்துச் செயல்படுறீங்க…?”
“நீங்க சொல்றதும் சரிதான் தம்பி. உலகமே நவநாகரீகமா வளர்ந்தாலும் வளர்ந்தது எப்போ என்ன நடக்கும்னே சொல்ல முடியாது. லேடி டிரைவரை கூட நல்லா விசாரிச்சு அப்புறமா வேலையில் சேருங்க தம்பி…” என்றார் தியாகராஜன்.
“ஆமா அங்கிள், விசாரித்து விட்டு தான் சேர்ப்பேன். இப்போ என்னிடம் வேலைக்கு இருக்குற சிவா நல்ல பையன் தான். அவனைப் பற்றி நல்லா விசாரிச்சுட்டு தான் மறுநாள் வேலைக்கு வர சொன்னேன். படிக்கும் போதே வேலை பார்க்கணும்னு ஆசைப்படுற பையன். லைசன்ஸ் எல்லாம் ரெடியா வைத்திருந்தான்.
இருபத்தி இரண்டு வயசு தானே ஆகுது. அவனை எப்படி வேலையில் வைக்கிறதுன்னு யோசிச்சேன். ஆனா அவன் துடுக்கு தனமா இல்லாம நல்ல நிதானமா கண்ரோலா தான் வண்டி ஓட்டுறான். அதான் வேலையில் சேர்த்துக்கிட்டேன். அவனை மாதிரி லேடி டிரைவரும் நல்லவங்களா கிடைத்தால் திருப்தியா இருக்கும்…” என்றான்.
“சீக்கிரம் கிடைப்பாங்க தம்பி…” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரின் அலைபேசி அழைத்தது.
எடுத்துப் பேசியவர் “இல்லமா… அக்கா வந்துட்டா… அப்படியா…? சரிமா… நான் இதோ எடுத்துட்டு வர்றேன்…” என்று பேசிவிட்டு வைத்தவர் “என்ன சத்யா, கார்த்தி நோட்டும், சாட்டும் கேட்டாளாமே?”
“அச்சோ…! ஆமாப்பா… இங்கே பேசிக்கிட்டே மறந்துட்டேன். என்னைத் திட்டப்போறா…” என்று சத்யா நாக்கை கடித்தாள்.
“பரவாயில்லைமா… நான் போய்க் கொடுத்துட்டு வர்றேன். கடையைப் பார்த்துக்க…” என்றுவிட்டு அவளிடம் சொன்னவர் தர்மாவின் புறம் திரும்பி, “வீடுவரை போய்ட்டு வர்றேன் தம்பி…” என்றார்.
“சரிங்க அங்கிள்… நானும் அப்படியே கிளம்புறேன்…” என்று தான் கழற்றி வைத்திருந்த தன் ஊன்றுகோலை எடுத்து மாட்ட ஆரம்பித்தான்.
தியாகராஜன் சிறிய மகளுக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு கிளம்ப, தர்மாவும் நடக்க ஆரம்பித்தான். அதுவரை ஏதோ யோசனையில் இருந்த சத்யா, அவன் நடக்க ஆரம்பித்ததை உணர்ந்து “தர்மா சார், ஒரு நிமிஷம்…” என்று நிறுத்தினாள்.
“என்னங்க…?” என்று அவன் திரும்பி வர, தியாகராஜனும் மகளைக் கேள்வியாகப் பார்த்தார். தந்தையின் நடை நின்றதை உணர்ந்தவள், “அப்பா நீங்க கிளம்புங்க. லேடி டிரைவரை பற்றிச் சார்க்கிட்ட ஒன்னு சொல்லணும்…” என்றாள்.
“ஓ…! சரிமா, பேசு! வர்றேன் தம்பி…” என்றவர் கிளம்பினார்.
“என்ன விஷயம்ங்க?”
“என் கூட வேலை பார்க்கிற என் பிரண்டோட அக்காவுக்கு ட்ரைவிங் தெரியும். அவங்க இங்கே பக்கத்தில் தான் இருக்காங்க. முதலில் அவங்க வேற வேலைக்குப் போய்க்கிட்டு இருந்தாங்க. அப்புறம் அவங்களுக்குக் குழந்தை பிறக்கவும் குழந்தையைப் பார்க்கணும்னு வேலையை விட்டுட்டு வீட்டில் இருந்தாங்க. இப்போ குழந்தைக்கு மூணு வயது ஆகிருச்சு. திரும்ப அந்த அக்கா வேலைக்குப் போக விரும்புறாங்க.
ஆனா எதுவும் நல்ல வேலையா அமையலை. இல்லனா சேலம் டவுனுக்குள்ள வேலையா இருக்கு. குழந்தை இன்னும் பெருசா வளரும் வரை பக்கத்திலேயே வேலை கிடைத்தால் நல்லா இருக்கும்னு நினைக்கிறாங்க. ஏன்னா வேலைக்குப் போகணும்னா நர்சரி ஸ்கூலில் விட்டுட்டு தான் போகணும்.
வேலைக்குப் போயிட்டு அவனைக் கூப்பிட சீக்கிரமே வரவேண்டியிருக்கும். டவுனுக்குள்ள வேலைக்குப் போய்ட்டால் அது கஷ்டம். அதனால் வேலை கிடைக்கிற மாதிரி இருந்தாலும் சேர யோசிக்கிறாங்க. இந்த டிரைவிங் வேலை அவங்களுக்குச் சரிவரும்னு நினைக்கிறேன். இங்க டிரைவிங் சொல்லிக்கொடுக்கும் நேரம் மட்டும்தான் வேலை இருக்கும். மீதி நேரம் அவங்க பையனைப் பார்த்துக் கொள்ளலாம்.
பக்கத்திலேயே வேற இருக்கு. பையனையும் பார்க்கலாம். வேலையும் பார்க்கலாம். எனக்கு இப்பதான் அவங்க ஞாபகம் வந்தது. நான் வேணும்னா அவங்க கிட்ட பேசிட்டு சொல்றேன். நல்ல அமைதியானவங்க. எந்தப் பிரச்சனையும் இல்லாதவங்க. உங்க வேலைக்குச் சரி வரலாம்…” என்றாள்.
“ரொம்ப நல்லதா போச்சுங்க. நீங்க விசாரித்துவிட்டு சொல்லுங்க. நீங்க சொன்னவங்களே வேலைக்குக் கிடைத்தால் சந்தோசம் தான்…” என்று மலர்ந்த முகத்துடன் சொன்னான் தர்மா.
“சரிங்க… நான் கேட்டுட்டு சொல்றேன்…” என்றாள்.
“நீங்க என்ன வேலை பார்க்கிறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று தர்மா விசாரித்தான்.
“என்னை மாதிரி இருக்குற பிள்ளைகளுக்கு டீச்சரா இருக்கேன். லீவு நாளில் பொழுது போக இங்கே கடைக்கு வந்து விடுவேன்…” என்றாள்.
“ஓ…! நீங்க டீச்சரா…?” என்று கேட்டவன், பின்பு மெல்லிய சிரிப்புடன் “இப்போ புரிஞ்சு போய்ருச்சு…” என்றான்.
“என்ன சார் புரிஞ்சு போய்ருச்சு?”
“நீங்க என்னைச் சார்னு கூப்பிடுவதற்கான காரணம் தான்…”
“என்ன காரணம்?” என்று யோசனையுடன் கேட்டாள்.
“டீச்சரம்மா தான் பார்க்கிற வேலைக்குத் தகுந்த மாதிரி என்னையும் வாத்தியாராகி என்னைச் சார் ஆக்கிட்டீங்க…” என்று சொல்லி சிரித்தான்.
அவன் சிரிப்பில் அவளுக்கும் சிரிப்பு வந்தது. லேசாகச் சிரித்துக் கொண்டே “நீங்க வேற வேலை பார்த்தாலும் நான் சார்னு தான் கூப்பிடுவேன்…” என்றாள்.
“என்னங்க இது அநியாயமா இருக்கு? நீங்க எப்படியும் சாரை விடவே மாட்டீங்களா?” என்று கேட்டான்.
“இப்போதைக்கு விடுற ஐடியா இல்லை…”
“சரிங்க… உங்க இஷ்டம்…” என்று பேச்சை முடித்துக் கொண்டவன் “உங்க முழுப் பேரை சத்யா தானா?” என்று கேட்டான்.
“சத்யவேணி…”
“நல்ல பேருங்க…! அப்புறம் இன்னும் ஒரே ஒரு கேள்விங்க…” என்று தர்மா ஆரம்பிக்க…
“நான் உங்களை வாத்தியாருன்னு சொன்னதில் தப்பே இல்லை. கேள்வியா கேட்கிறீங்களே…” என்று சிரித்தாள்.
தானும் சிரித்தவன் “இது தாங்க லாஸ்ட். இனி கேட்க மாட்டேன்…” என்றான்.
“சரி கேளுங்க…”
“அன்னைக்கு வந்தது நான் தான்னு சரியா சொன்னீங்க. இன்னைக்கு அங்கிள்கிட்ட யார் கூடப் பேசுறீங்கனு கேட்டீங்களே… இன்னைக்கு எப்படிக் கண்டுபிடிக்காம மிஸ் பண்ணினீங்க?”
“அது தான் நானும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யோசிச்சேன் சார். அன்னைக்கு உங்ககிட்ட உணர்ந்த எல்லாமே இன்னைக்கு மிஸ்ஸிங். டியோடரண்ட் வாசனை வரலை. ஜெல் ஸ்மைலும் இல்லை. அதோட நீங்க நடக்காம நின்னுட்டு இருந்தது. இது எல்லாமே உங்களைக் கெஸ் பண்ண விடாம செய்துருச்சு…” என்றாள்.
“ஓ…! ஆமாங்க. நான் இன்னைக்கு எதுவும் வாசனை திரவியம் போடலை. இரண்டுமே தீர்ந்து போயிருச்சு. இனி தான் பர்சேஸ் பண்ணனும். ஓகேங்க, அப்போ நான் கிளம்புறேன். நீங்க அந்த லேடிகிட்ட கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்க…” என்றவன் மேலும் பேச்சை வளர்க்காமல் கிளம்பி விட்டான்.