4 – உனதன்பில் உயிர்த்தேன்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 4

“நா சாராயம் குடிச்சதும் நிசந்தேன் மாமா. தோப்புக்காரி வயலுல விழுந்து கிடந்ததும் நிசந்தேன். ஆனா அவ என்னைய வூட்டுல கொண்டாந்து விட்டது ஏ அப்பத்தாவுக்கே எம்புட்டு தடவைன்னு தெரியாதப்ப, உமக்கு மட்டும் எப்படித் தெரிஞ்சது?” கூர்மையுடன் கேட்டான் வைரவேல்.

கோவிந்தன் தடுமாறவும் இல்லை, தயங்கவும் இல்லை.

“எமக்கும் இந்த வூருக்குள்ளார சொந்தப்பந்தமெல்லாம் இருக்கு மாப்ள…” என்றார்.

நம் கண்ணுக்கே புலப்படாத சில விஷயங்கள் கூட என்ன விஷயம் கிடைக்கும் என்று அலைபாயும் சிலரின் கண்களில் பட்டு விடும் என்று நிறையப் பேருக்கு புரிவதே இல்லை.

வைரவேலும் அதே நிலையில் தான் இருந்தான். அவனே அறியாததைச் சிலர் அறிந்து அதை அவன் மாமனார் காது வரை கொண்டு சென்றிருக்கின்றனர் என்று இப்போது அவனுக்குப் புரிந்தது.

“சரிதேன் மாமா. ஏ ஒசாரே இல்லாம கிடந்தேன். அப்ப பாவமேன்னு கொண்டாந்து விட்டுருப்பா. இதுல என்ன இருக்கு?” என்று சாதாரணமாகவே கேட்டான்.

“என்ன மாப்ள இப்படிக் கேட்டுப்புட்டீக? அப்படியாப்பட்ட குடும்பத்துப் பொண்ணு கூட உம்ம பேரும் அடிபடுறது நல்லாவா இருக்கு? இது சரியில்லையே மாப்ள…” என்றார் கறாராக.

அவரின் பேச்சின் தொனி மாறுவது அவனின் வதனத்தைச் சூடேற்றியது. வார்த்தையை விட்டுவிடக்கூடாது என்று உள்ளங்கைகளை விரித்து விரித்து மடக்கினான்.

அவனின் முகமாற்றத்தைக் கண்டாலும் அதை எல்லாம் அவர் பொருட்படுத்தவே இல்லை.

“எம் மவளும் போய்ச் சேர்ந்துட்டா. போனவ திரும்பி வர போறதும் இல்லை. அவளையே நினைச்சு இல்லாத கெட்டப் பழக்கமும் பழகி, நீரு எங்கனயோ விழுந்து கிடந்து, எவளோ உம்மைத் தொட்டு தூக்கிட்டு வர்றதை பார்த்துட்டு கம்முன்னு இருக்க முடியல மாப்ள. இதுக்கு ஒரே வழி தேன் இருக்கு…”

“என்ன மாமா?” அவரின் பேச்சின் திசை செல்வது புரியாமல் கேட்டான்.

“எந்தம்பி மவ கல்யாண வயசில் இருக்கா மாப்ள. நானும் எந்தம்பிக்கிட்ட பேசிட்டேன். அவனும் நீங்க பார்த்துச் செய்தா சரிதேன் அண்ணேன்னு சொல்லிட்டான். துக்க வூட்டுல ஒரு வருசத்துக்கு நல்ல விசயம் பண்ணக் கூடாதுன்னு தள்ளி போடுறது எல்லாம் இப்ப சரி வராது மாப்ள.

அதுனால அடுத்து வர்ற முகூர்த்ததுல உமக்கும், எந்தம்பி மவளுக்கும் கல்யாணத்தை முடிச்சுப் போடுவோம். எம்மவ எடத்துல எந்தம்பி மவ வந்தா எங்களுக்கும் சந்தோசமா இருக்கும்…” என்று கோவிந்தன் சொன்னதும் அவரின் எதிரே அமர்ந்திருந்த வைரவேல் பட்டென்று எழுந்தான்.

“மாப்ள?” என்று அவர் அழைக்க,

“உம்ம மேல எமக்கு ரொம்ப மருவாதை இருக்கு மாமா. ஆனா அதை நீரே கெடுத்துக்கிடாதீரும். ஒருத்தி ஏதோ பாவப்பட்டு ஒத்தாசை செய்ததை நீரு பெரிய விசயமா மாத்துறீக. எம் பொஞ்சாதியை எரிச்ச சாம்பல் கூட இன்னும் காத்துல கலந்திருக்காது. அதுக்குள்ள இன்னொரு கல்யாணம் பத்தி பேச உமக்குக் கூசலை?” என்று ஆத்திரமாகக் கேட்டான்.

“எய்யா வேலு, அவசரப்பட்டு வார்த்தையை விடாதேய்யா. அவரு உம் மாமனாரு…” என்று பதறினார் அப்பத்தா.

“இவரு பேசியதை நீரும் கேட்டுப்போட்டு தானே இருந்தீரு அப்பத்தா? எம் பொஞ்சாதி மேல நா எம்புட்டு உசுரை வச்சுருந்தேன்னு உமக்குத் தெரியாதா? எம் மனசுல எம் பொஞ்சாதி மட்டும் தான் இருக்கா… இருப்பா. நா இந்த மண்ணோட மண்ணாகப் போற வரை…” என்று மாமனாரை பார்த்து அழுத்தமாகச் சொன்னான்.

அவரோ கோபப்படாமல் என் மாப்பிள்ளை என்று பெருமையாகப் பார்த்தார்.

“இப்படியாப்பட்ட புருசன் கூட உமக்கு வாழ கொடுத்து வைக்கலையேடி ஆத்தா…” என்று மகளின் புகைப்படத்தைப் பார்த்து கதறி அழுதார் கோமதி.

“நா குடிச்சுப்போட்டு எங்கனயோ கிடந்து, எவளோ என்னைய கொண்டு வந்து விட்டது தானே உமக்குப் பிரச்சனை? இனி அப்படி நடக்காது. ஏ வூட்டுக்கு எம் மாமனாரு, மாமியாரா எப்ப வேணும்னாலும் நீங்க வந்து போவலாம். ஆனா வேற நினைப்போட…” என்றவன் மேலும் சொல்லும் முன்…

“எய்யா வேணாம். சூதானமா பேசு…” என்று அப்பத்தா பதறி அடக்க, சட்டென்று வாயை மூடிக் கொண்டான்.

“விடுங்க ஆத்தா. எம் மருமவ புள்ள தானே. எம் மவ இப்ப இல்லனாலும் நம்ம உறவு விட்டு போவாது ஆத்தா…” என்றார் கோவிந்தன்.

“எமக்கு வேற என்ன வேணும் மாப்ள? நீரு மனசு உடஞ்சி போயிருக்குற இந்தச் சமயத்துல உம்ம பேரு கெட்டுப் போயிட கூடாதுன்னு ஆதங்கத்தில தேன் பேசிப்புட்டேன். எதையும் மனசில வச்சுக்காதீக…” என்றார்.

அவருக்குத் தலையை அசைத்தானே தவிர வேறு பேசவில்லை.

அவனின் மனம் ஆறவே இல்லை. என் மனைவி இருந்த இடத்தில் வேறு ஒருத்தியை கொண்டு வர எப்படித் துணியலாம் என்ற கோபம் மட்டுப்பட மறுத்தது.

அதன் பிறகு பேச்சு வார்த்தைகள் நீளவில்லை.

அன்று மதியமும் மாமனார், மாமியாரை இருந்து சாப்பிட சொன்னான். அவர்களும் மறுப்புச் சொல்லாமல் உண்டு விட்டே ஊருக்கு கிளம்பினர்.

அவர்கள் கிளம்பியதும் வைரவேலும் வெளியே கிளம்ப, “எய்யா வேலு, சூதானமா இருய்யா…” என்றார் அப்பத்தா.

“நா பார்த்துக்கிடுதேன் அப்பத்தா…” என்றவன் வயலுக்குக் கிளம்பினான்.

வயலில் ஆட்களை வேலைக்கு விட்டுப் பூக்களைப் பறிக்கச் சொல்லியிருந்தான்.

மல்லிகை மட்டும் இல்லாது, சாமந்தியும், கோழி கொண்டை பூவும் அவனின் வயலில் போட்டிருந்தான்.

ஆட்கள் வேலை செய்வதை மேற்பார்வை இட்டவன், வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தானும் வேலையில் இறங்கினான்.

கை வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் மனம் முழுவதும் எரிச்சலும், கோபமும் அண்டி கிடந்தது.

எரிச்சல் மாமனாரின் பேச்சினால் விழைந்தது.

கோபம் அவர் அப்படிப் பேச காரணமாக இருந்தவளின் மேல் வந்தது.

‘இவளை யாரு என்னைய வூட்டுல கொண்டு போயி விடச் சொன்னது? நா குடிச்சுப்போட்டு கிடந்தா இவளுக்கு என்ன? எமக்கு நல்லது பண்ணுன்னு நா கேட்டேனா? இப்ப இவளால் தானே எம் மாமன் அப்படிப் பேசிப் போட்டு போறார்…’ என்று மனதிற்குள் குமைந்து கொண்டான்.

அவனின் மன ஆதங்கம் குறையவே இல்லை.

அதனுடனே வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பூக்களை எல்லாம் பறித்து முடித்ததும் அளந்து மூட்டையில் கட்டிவிட்டுக் கை கால்களைக் கழுவ மோட்டார் அறைப் பக்கம் சென்றான்.

அப்போது எதிரே தேன்மலர் வர, அவளைக் கடுமையாக முறைத்து விட்டுச் சென்றான்.

அவனின் முறைப்பை எதிர்பாராமல் விழித்தாள் தேன்மலர்.

‘இந்த ஆளு ஏன் என்னைய இப்படிப் பார்த்துப் போட்டு போவுது?’ என்று புரியாமல் குழம்பிக் கொண்டாள்.

ஆனால் அவளின் சிந்தனை அதோடு நின்று போனது. அவனைப் பற்றி நினைக்க நேரமில்லாமல் அன்று அவளுக்கு அதிக வேலைகள் இருந்தன.

முத்தரசி இன்னும் காய்ச்சலோடு தான் படுத்துக் கிடந்தார். அவரே வேலை பார்க்க வேண்டும் என்று நினைத்தாலும் அவரால் அன்று எழ கூட முடியவில்லை.

மருத்துவரிடம் காட்டி விட்டு வந்தும் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

அது வேறு அவளுக்குக் கவலையைக் கொடுத்திருந்தது.

இரண்டு ஆட்களை வரவைத்து அன்றைய பூப்பறிக்கும் வேலையைப் பார்த்திருந்தாள்.

அந்த வேலை முடிந்ததும் டவுனிற்கு அனுப்பிவிட்டு வீடு வந்து சேர்ந்த போது, முத்தரசி ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு சுருண்டு படுத்துக் கிடந்தார்.

“எம்மா, என்ன இப்படிப் படுத்திருக்கீரு?” பதறி போய்க் கேட்டாள்.

“கு…குளுரு…து…” என்றவரின் உதடுகள் நடுங்கின.

காய்ச்சல் அடிக்கிறதா என்று தொட்டுப் பார்த்தாள்.

அவரின் உடல் ஜில்லென்று இருந்தது.

“என்னமா இப்படி இருக்கு?” என்று கவலை கொண்டவள், அவரின் உள்ளங்கை, உள்ளங்கால்களைப் பரபரவென்று தேய்த்து விட்டாள்.

சூடாகக் கசாயம் வைத்துக் கொடுத்தாள்.

தைலத்தை எடுத்து வந்து தேய்த்து உடலை சூடாக மாற்ற முயற்சி செய்தாள்.

ஆனால் அவளின் எந்த முயற்சிக்கும் அவரிடம் எந்த முன்னேற்றமும் வரவில்லை.

நேரம் ஆக ஆக அவரின் குளிர் கூடியதே தவிரக் குறையவே இல்லை.

மேலும் இரண்டு போர்வைகள் எடுத்துவந்து போர்த்தி விட்டாள்.

இரவு எட்டு மணிக்கு மேல் ஆகியது. அன்னையின் அருகிலேயே இருந்து அவள் கவனித்துக் கொண்டிருக்கும் போதே, திடீரென முத்தரசியின் உடல் வெட்டி இழுக்க ஆரம்பித்தது.

“எம்மா… ம்மா… என்ன செய்து?” என்று பதறி துடித்தாள் தேன்மலர்.

அவர் பதில் சொல்லும் நிலையில் இல்லை.

அவளுக்கும் என்ன செய்வது என்று சட்டென்று பிடிபடவில்லை.

அம்மாவின் கையைப் பிடித்தாள், கை கால்களைத் தடவி கொடுத்தாள்.

ஆனால் அவரின் துடிப்பு கூடவும் பயந்து போனவள் உடனே அன்னையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தோன்ற, “நா போய் யாரையாவது கூட்டிட்டு வாறேன்மா. உமக்கு ஒன்னுமில்லை. நா இதோ வந்துடுறேன்…” என்றவள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தாள்.

அவளிடம் ஊருக்குள் பேசுபவர்கள் சிலர் தான் என்பதால் அவர்களில் யாரையாவது கூப்பிடலாம் என்று நினைத்து வயலில் இறங்கி ஓட ஆரம்பித்தாள்.

ராசுவும் என்னவோ என்று பயந்து அவளின் பின்னால் ஓடி வர, “ராசு, நீரு அம்மாக்கிட்ட போரும்…” என்று கத்திக் கொண்டே ஓடினாள்.

ராசு உடனே வீட்டை நோக்கி ஓடியது.

டார்ச் லைட் கூட எடுத்துக் கொள்ளாமல் கண்மண் தெரியாமல் ஓடியவள் வரப்பில் முன்னால் சென்று கொண்டிருந்த உருவத்தைக் கவனிக்காமல் மேலே சென்று மோதினாள்.

“ஏய், எவன்டா அது?” என்று அவள் மோதிய வேகத்தில் முன்னால் ஒரு அடி நகர்ந்து சமாளித்து நின்று அதட்டலாகக் கேட்டான் வைரவேல்.

அவளும் தடுமாறி நின்றாள்.

“யோவ், நீரா? அம்மா… அம்மாவுக்கு…” என்று மூச்சு வாங்க திணறியவள், “தள்ளும், நா வூருக்குள்ளார போயி ஆளுகளைக் கூப்பிடணும்…” என்றவள் அவனைத் தாண்டி செல்ல போனாள்.

“ஏன், ஒ அம்மாவுக்கு என்னாச்சு?” என்று யோசனையுடன் கேட்டான்.

“அம்மாவுக்குக் கை, காலு எல்லாம் வெட்டி வெட்டி இழுக்குது. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும். ஆளுங்க யாராவது ஒத்தாசைக்கு வருவாகளான்னு கேட்கணும். நீரு வழியை விடும்…” என்றவள் கண்ணில் இருந்து சரசரவெனக் கண்ணீர் இறங்க ஆரம்பித்தது.

அந்த இருட்டில் அவள் கண்ணீர் தெரியவில்லை என்றாலும் அவள் திக்கி திணறி பேசிய விதத்தில் அழுகிறாள் என்று புரிந்து கொண்டான்.

ஒரு நொடி தயங்கி யோசித்தான் வைரவேல்.

“நீ வூட்டுக்கு போ. நா போய் வண்டியை எடுத்துட்டு வாறேன். ஆஸ்பத்திரி போவலாம்…” என்றான்.

“நீரா? நீருதேன் குடிச்சிருப்பீரே. வண்டி ஓட்டிடுவீரா?” என்று சந்தேகமாகக் கேட்டாள்.

“இன்னைக்குக் குடிக்கலை. வெட்டியா பேசிட்டு இருக்காதே. நா வெசரா போய் வண்டி எடுத்துட்டு வாறேன்…” என்றவன் அதற்கு மேல் நிற்காமல் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றான்.

அவளும் அன்னையை நோக்கி ஓடினாள்.

வைரவேல் அன்று குடித்திருக்கவில்லை.

காலையில் அவனின் மாமனார் பேசிய தாக்கம் ஒரு பக்கம் என்றால், இன்றும் தான் வயலில் விழுந்து கிடந்து தேன்மலர் தனக்கு உதவுகிறேன் என்ற எண்ணத்தில் மேலும் விஷயம் திசை மாறிவிடுமோ என்று நினைத்தவன் அன்று குடிக்கப் போகாமல் சமாளித்திருந்தான்.

ஆனாலும் மனைவியின் நினைவு அவனை நிலையாக இருக்க விடாமல் மனதை போட்டு பிராண்ட, கிணற்றடியிலேயே அமர்ந்திருந்து விட்டு வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தான்.

அவனிடம் லோடு ஏற்றும் மினி வேன் உண்டு. அதை வாடகைக்கும் விடுவான், சொந்த உபயோகத்திற்கும் பயன்படுத்திக் கொள்வான் என்பதால் அதை எடுக்கச் சென்றான்.

அவன் வண்டியை எடுத்து வந்து வயலுக்கு வெளியே நிறுத்திவிட்டு வந்த போது கதவை திறந்து வைத்துக் கொண்டு அழுகையும் பயமுமாக அன்னையின் அருகில் அமர்ந்திருந்தாள் தேன்மலர்.

முதல் முறையாக அவளின் வீட்டிற்குள் நுழைந்தவன், உள்ளே ஜன்னி வந்தது போல் துடித்துக் கொண்டிருந்த முத்தரசியைத் தாமதிக்காமல் தூக்கிக் கொண்டான்.

“வூட்ட பூட்டிப் போட்டு வா…” என்று தேன்மலரிடம் சொல்லிக் கொண்டே வேகமாக வெளியேறினான்.

அவளும் வீட்டை பூட்டிக் கொண்டு அவனின் பின் ஓடினாள்.

அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த ராசுவும் குரைத்துக் கொண்டே பின்னால் ஓடி வர, “இங்கனயே இரும் ராசு. நா ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்துடுறேன்…” என்று தன் எஜமானி சொன்னதும், அவளைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே வாலை ஆட்டிக் கொண்டு அங்கேயே நின்று கொண்டது.

வயலுக்கு வெளியே நிறுத்தியிருந்த வண்டியின் பின்பக்கம் முத்தரசியைப் படுக்க வைத்தவன், தேன்மலரும் ஏறியதும் முன்னால் சென்று வண்டியை எடுத்தான்.

வண்டியை வேகமாகச் செலுத்தி அந்த அரசு மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்தான்.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் முத்தரசி.

தேன்மலர் தன் அழுகையை அடக்கி கொண்டு நின்றிருக்க, அவளை விட்டு சிறிது தள்ளி நின்றான் வைரவேல்.

உள்ளே முத்தரசிக்குச் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு மருத்துவர் வெளியே வந்தார்.

“ஏ அம்மா எப்படி இருக்கு டாக்டர்?” என்று தேன்மலர் வேகமாக அவரின் முன்னால் சென்று நின்று கேட்டாள்.

“அவங்களுக்கு ஜன்னி வந்திருக்கு. ட்ரீட்மெண்ட் பார்த்திருக்கேன். இப்ப ஜன்னி நின்னுடுச்சு. ஆனா திரும்ப ஜன்னி வரக்கூடாது. வந்தால் பிரச்சனை ஆகும்…” மருத்துவர் சொல்ல, அவரைக் கவலையுடன் பார்த்தாள்.

“இன்னைக்கு நைட் அவங்க எங்க ட்ரீட்மெண்ட்ல இருக்கட்டும். காலையில் வரையில் ஜன்னி வரலைனா அப்புறம் எந்தப் பிரச்சனையும் இல்லை…” என்றார்.

“இப்ப ஏ அம்மாவ பார்க்கலாமா டாக்டர்?”

“இப்ப தூங்குறாங்க. டிஸ்டெப் பண்ணாம போய்ப் பாருங்க…” என்று சொல்லி விட்டு சென்றார்.

உள்ளே செல்ல காலடி எடுத்து வைத்த தேன்மலர் ஏதோ நினைத்துக் கொண்டது போல நின்று “நீரும் வாறீரா?” என்று சற்று தள்ளி நின்றிருந்த வைரவேலுவிடம் கேட்டாள்.

“இல்லை, நீ போய்ப் பார்த்துப் போட்டு வா…” என்றான்.

அவள் மட்டும் உள்ளே சென்று பார்த்தாள். சற்று நேரத்திலேயே முற்றும் தளர்ந்தவராகப் படுக்கையில் கிடந்த அன்னையைப் பார்த்து அவளின் கண்ணீர் பெருகியது.

அவளின் ஒரே உறவு அவர் மட்டுமே. இதுவரை இப்படி இந்தளவு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதே இல்லை.

எவ்வளவு காய்ச்சல் வந்தாலும் அதனுடனே வயல் வேலைகளை இழுத்து போட்டு செய்வார்.

உழைப்பின் அருமையை அவளின் அன்னையின் மூலமாகத் தான் அறிந்து கொண்டாள் தேன்மலர்.

ஊரில் அவர்களைப் பற்றித் தவறாகப் பேசினால் அதைப் பற்றி எல்லாம் அவர் பொருட்படுத்தியதே இல்லை. மகளையும் அதே போல் எதையும் மனதில் ஏற்றிக் கொள்ளாதே என்று சொல்லியே வளர்த்திருந்தார்.

ஒரு அன்னையாக அவர் ஆசைப்பட்ட ஒரே ஒரு விஷயம் தன் மகளை மணக்கோலத்தில் பார்க்க வேண்டும் என்பதே.

ஆனால் அதுவும் எட்டாக்கனியாக ஆன இந்தச் சில வருடங்களில் மனதளவில் தளர்ந்து தான் போயிருந்தார்.

ஆனால் இப்போது உடலும் தளர்ந்து விட்டாரோ என்று நினைத்தவளுக்குக் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

அங்கே நின்றால் சத்தம் போட்டு அழுதுவிடுவோம் என்று நினைத்தவள், வேகமாக வெளியே வந்துவிட்டாள்.

அழுது கொண்டே வெளியே வந்தவளை பார்த்தாலும் வைரவேல் அமைதியாக நின்றான்.

ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது உதவாமல் தட்டிக்கழிப்பது மனித தன்மையே இல்லை என்று தான் அவள் விஷயத்தைச் சொன்னதும் உடனே உதவ ஓடி வந்தான்.

ஆனால் அதற்கு மேல் அவளிடம் பேச அவனுக்கு எந்த விருப்பமும் இருக்கவில்லை என்பதால் வேடிக்கை மட்டும் பார்த்தான்.

சிறிது நேரம் சென்றதும் அவளின் அருகில் வந்தவன், “நா கிளம்புறேன்…” என்றவனைப் பார்த்து மலங்க மலங்க விழித்தாள் தேன்மலர்.

தான் மட்டும் தனியாக இங்கேயா? என்ற எண்ணம் அவளின் மனதில் ஓடியது.

ஆனாலும் அவனை இருக்கச் சொல்ல அவன் என்ன தன் சொந்தமா? பந்தமா? அவன் இவ்வளவு தூரம் உதவி செய்ததே பெருசு என்ற எண்ணத்தில் மனதை தேற்றிக் கொண்டு சம்மதமாகத் தலையை அசைத்தாள்.

அவள் விழித்துக் கொண்டு நின்றதையும், அவளின் தயக்கத்தையும் உணரவே செய்தான்.

ஆனால் அதற்காகத் தானும் இங்கே இருக்க முடியாது என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.

குடித்துவிட்டு விழுந்து கிடந்தவனை அவள் வீட்டில் விட்டதற்கே மாமனாரின் பேச்சுச் சென்ற திசை ஏற்கனவே அவனைப் பாதிக்க வைத்திருந்தது.

இந்த நிலையில் இரவு முழுவதும் மருத்துவமனையே என்றாலும் அவள் அருகில் தான் இருப்பது சரியில்லை என்று நினைத்தவன் கிளம்பிவிடுவதே நல்லது என்ற முடிவுக்கு வந்தான்.

அவளிடம் லேசான தலையசையுடன் விடைபெற்று திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

அப்போது அவனைத் தாண்டி ஓடிய ஒரு செவிலி எதிரே வந்த மருத்துவரிடம், “சார், அந்தப் பேஷண்ட்டுக்கு திரும்ப ஜன்னி வந்துருச்சு…” என்று பதட்டமாகச் சொல்லிக் கொண்டிருக்க,

அதைக் கேட்டு நடந்து கொண்டிருந்தவன் அதிர்ந்து அப்படியே நின்று பதட்டத்துடன் திரும்பி பார்த்தான்.

அங்கே தேன்மலர் அதிர்ச்சியில் விக்கித்துச் சிலை போல் நின்றிருந்தாள்.

மருத்துவரும், செவிலியும் உள்ளே சென்ற சில நிமிடத்திற்குப் பிறகு அதிர்விலிருந்து வெளியே வந்து தரையில் மடிந்து அமர்ந்து கதறி அழ ஆரம்பித்தாள் தேன்மலர்.