4 – ஈடில்லா எனதுயிரே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 4
“என்னக்கா இப்படிச் செய்றீங்க?” என்று சலித்துக் கொண்டாள் திவ்யா.
“அப்படி என்ன செய்தேன் திவ்யா?” நந்திதா கேட்க,
“அந்தப் பொண்ணு விலகிப் போகுது. நீங்க இழுத்து இழுத்து வச்சு பேசுறீங்க. அதுவே பிகு பண்ணும் போது நீங்க கல்யாணப் பொண்ணுக்கா… நீங்க ஏன் வழிய போய்ப் பேசணும்?” என்றாள் திவ்யா.
“கல்யாண பொண்ணுனா இப்ப என்ன திவ்யா? எனக்கு என்ன புதுசா கொம்பா முளைச்சுருக்கு?”
“அப்படி இல்லக்கா. ஆனா நீங்க இப்ப அந்தப் பொண்ணுகிட்ட வழிய போய்ப் பேச வேண்டிய தேவையும் இல்லக்கா…” என்றாள் ஒரு மாதிரியான குரலில்.
“இங்கே என்ன போட்டியா நடக்குது திவ்யா? அவள் புதுசா வந்து என்னை அக்கான்னு கூப்பிட்டு உரிமை கொண்டாடுவது உனக்குப் பிடிக்கலையா? அதான் அவளைப் பத்தி ஏதாவது சொல்லிட்டே இருக்கியா?” நந்திதா சற்று கோபமாகவே கேட்டு விட்டாள்.
“என்னக்கா அவளுக்குச் சப்போர்ட் செய்து என்னைத் திட்டுறீங்க…” என்று முகத்தைச் சுருங்கினாள் திவ்யா.
திவ்யாவிற்கு அந்த எண்ணம் தான். அவள் கல்லூரியில் இளங்கலையில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தாள்.
மாப்பிள்ளை வீட்டுப் பக்கம் ஒரு பெண் கலகலப்பாகச் சுற்றி வருவதும், தன் அக்காவை அவள் அக்கா என்று உரிமை கொண்டாடுவதும், தனக்கு வரப் போகும் புது அத்தானை ராகவர்தினி அத்தான், அத்தான் என்று உரிமை கொண்டாடுவதும் அவளுக்குள் பொறாமை உணர்வை உண்டாக்கியிருந்தது.
அதனால் அவளுக்கு ராகவர்தினியைப் பிடிக்காமல் போக, ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தாள்.
“குட்டி பாப்பா மாதிரி பிஹேவ் பண்ணாதே திவ்யா. அந்தப் பொண்ணு அத்தானோட மாமா பொண்ணு. கல்யாணம் முடிந்த பிறகு நான் வாழ போற வீட்டோட பொண்ணு. அப்படி எல்லாம் நான் வெட்டிக்கிட்டு விலகிப் போக முடியாது.
அதுவும் அத்தானே கூப்பிட்டு வச்சு நமக்குள் எதுவும் பிரச்சனையான்னு கேக்குற அளவுக்கு வந்திருச்சு. அவர் சொன்ன பிறகும் நான் விலகி இருந்தால் அது எங்களுக்குள் தான் பிரச்சனையை உண்டு பண்ணும். அதனால் குழந்தை மாதிரி ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காம அமைதியா இரு…” என்றாள் நந்திதா.
“நீங்க தான்கா விவரம் இல்லாம இருக்கீங்க. நமக்குள் பேசிக் கொண்டதை நீங்களோ நானோ நம்ம வீட்டு பெரியவங்ககிட்ட சொன்னோமா என்ன? ஆனா அந்தப் பொண்ணு நேரா அத்தான் கிட்ட போய்ச் சொல்லி உங்க கிட்ட அத்தான் வந்து பேசுற அளவுக்கு விஷயத்தைப் பெருசு பண்ணிருக்கு. சரியான கோள்மூட்டியா இருக்கும் போல.
உங்க கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படினா கல்யாணத்துக்குப் பிறகு இன்னும் என்னென்ன பிரச்சனையை இழுத்து வைக்குமோ? அதுக்குத்தான் அந்தப் பொண்ணு கிட்ட கவனமா இருங்கன்னு சொன்னேன். நீங்க என்னவோ நான் சின்னப்பிள்ளை தனமா நடந்துக்கிறேன்ன்னு சொல்றீங்க. உங்களுக்கு நல்லது சொன்னதுக்கு என்னையே திட்டுறீங்க. போங்கக்கா…” என்று கோபித்துக் கொண்டு போனாள் திவ்யா.
திவ்யா சொன்னதும் சரியாக இருக்குமோ என்று யோசிக்க ஆரம்பித்தாள் நந்திதா.
நந்திதாவிற்குப் பிடித்த புடவையை எடுத்து முடித்து விட்டு, கடையை விட்டு கிளம்பிக் கொண்டிருந்தனர்.
நந்திதாவும், திவ்யாவும் பேசிக் கொண்டே பின்னால் வந்திருக்க, முன்னால் பிரபஞ்சனிடம் ஏதோ பேசிக் கொண்டே சென்ற ராகவர்தினியை சந்தேகக் கண்களுடன் பார்த்தாள் நந்திதா.
‘அக்காவுடன் வராமல் ஏன் அத்தான் முன்னாடி வந்தீங்க?’ என்று நந்திதாவுக்காகத்தான் பிரபஞ்சனிடம் ராகவர்தினி பேசிக் கொண்டிருந்தாள் என்று அவள் அறியவில்லை.
சுற்றிலும் பெரியவர்கள் மட்டும் இல்லாமல் வயது பெண்களும் தங்களுடன் வந்திருந்ததால் நந்திதாவுடன் ஒரு இடைவெளியுடன் தான் இருந்தான் பிரபஞ்சன்.
அதைச் சுட்டிக்காட்டி நந்திதாவிற்கு ஆதரவாகப் பேசிய ராகவர்தினியை வாஞ்சையுடன் பார்த்தான் பிரபஞ்சன்.
“நாங்க வயசு பிள்ளைகளும் இருக்கோம்னு ரொம்பத்தான் விலகிப் போகாதீங்க அத்தான். வீட்டை விட்டு வெளியே வந்தால் பல ஜோடிகளை நெருக்கமாக நாங்க பார்க்கிறோம். அதைப் பார்த்தே கெட்டு போகாம ஸ்டெடியாத்தான் இருக்கோம். நீங்க என்னவோ ரொம்பத்தான் பண்றீங்க…” என்றாள் ராகவர்தினி.
“வாலு! ரொம்ப வாய் பேசாதே! போ… போ… அம்மா கூட வா…” என்று அவளை விரட்டவும், சிரித்துக் கொண்டே பெரியவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.
அவர்கள் அப்படிச் சிரித்துப் பேசுவதை இதுவரை விகல்பம் இல்லாமல் பார்த்த நந்திதா இப்போது தன்னைப் பற்றித் தான் ராகவர்தினி ஏதோ புரணி பேசுகிறாள் என்று சந்தேகத்துடன் பார்த்தாள்.
அவர்கள் நான்காவது மாடியில் இருந்தனர். கீழ் தளத்திற்குச் செல்ல மின்தூக்கியில் அனைவரும் ஏறினர்.
பெரியவர்களையும், பெண்களையும் முன்னால் விட்டு, கடைசியாக உள்ளே நுழைந்த பிரபஞ்சன், ராகவர்தினியின் அருகில் நிற்க வேண்டியதாக இருந்தது.
மின்தூக்கியில் சற்று இடைஞ்சலாக இருக்க, ராகவர்தினியை உரசாமல் இருக்க, கையை நகர்த்தி வைக்க லேசாகக் கையைத் தூக்கினான்.
அப்போது அவனின் கை அவளின் தோள்பட்டையில் பட்டு சுடிதாரை தெரியாமல் இழுத்து விட, பெரிய கழுத்துக் கொண்ட டிசைனான சுடிதார் லேசாக விலகி அவளின் உள்ளாடை வெளியே தெரிய ஆரம்பிக்கவும் பதறிப் போனான்.
அதை உணர்ந்த ராகவர்தினி வேகமாகத் தன் உடையை இழுத்து சரி செய்து கொண்டாள்.
அவள் என்ன நினைத்துக் கொள்வாளோ என்று பதறியவன், “ஸாரி ராகா, தெரியாமல்…” அவளின் பின்னால் இருந்து குனிந்து அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னான்.
அவன் அப்படிக் குனிந்த போது கூட அவளை உரசாமல் தான் நின்றிருந்தான். ஆனாலும் சற்று தள்ளி இருந்து அவர்களைப் பார்த்த நந்திதாவிற்கு அவர்கள் நின்றிருந்த சூழ்நிலை வித்தியாசமாகப் பட்டது.
அவன் மன்னிப்பு கேட்கவும் அவனைத் திரும்பி பார்த்த ராகவர்தினி புன்முறுவலுடன், “தெரியாமல் நடந்ததுக்கு ஸாரி எதுக்கு அத்தான்? விடுங்க…” என்றாள்.
அவன் குனிந்து இருந்ததும், அவள் திரும்பி பார்த்துச் சிரித்ததும், அதுவும் அவளின் உடையை அவன் விலக வைத்த போதும் அவள் சிரித்தது நந்திதாவை இயல்பாக யோசிக்க விடவில்லை.
ஆனாலும் சாதாரணமாகத்தான் பழகுகிறார்கள். தான் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு தன் மனதை நிர்மலமாக வைத்துக் கொள்ள முயன்று அதில் வெற்றியும் கண்டாள் தற்சமயம் மட்டும்!
அதன்பிறகு அவர்களுக்குள் எந்தப் பூசலும் இல்லை. அவ்வப்போது நந்திதாவுடன் சகஜமாக அலைபேசியில் உரையாடினாள் ராகவர்தினி.
இதற்கிடையே ராகவர்தினியை விரும்புவதாகச் சொன்ன பையனைப் பற்றி விவரங்களைக் கேட்க அவளைத் தனியாகச் சந்தித்தான் பிரபஞ்சன்.
“ஒரு பையனை பத்தி சொன்னியே? அவன் பேர், என்ன படிக்கிறான் என்ற விவரம் எல்லாம் சொல்லு ராகா…” என்று கேட்டான்.
“எதுக்கு அத்தான்?”
“என் வீட்டு பொண்ணு பின்னாடி சுத்துறான். அவன் யாரு என்னன்னு நான் தெரிஞ்சுக்க வேண்டாமா?”
“அவ்வளவு தானா? நான் கூட என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்…” என்றாள்.
“என்ன பயம்?”
“எங்க வீட்டு பொண்ணு பின்னாடி நீ எப்படிச் சுத்தலாம்னு தொரத்தி தொரத்தி எங்கே அந்தப் பையனை அடிப்பீங்களோன்னு தான்…” என்றவள் கண் சிமிட்டி சிரித்தாள்.
“என்னை என்ன ரௌடின்னு நினைச்சியா ராக்கம்மா?” என்று அவளை முறைத்தான்.
அவனின் முறைப்பு எல்லாம் அவளுக்கு எம்மாத்திரம்? அதையெல்லாம் அவள் கணக்கிலேயே எடுக்கவில்லை.
“ஆனா பாருங்களேன் நான் ஒன்றை மறந்துட்டேன். நீங்க தொரத்தி தொரத்தி எல்லாம் அடிக்க வேண்டாம். நிக்க வச்சு ஒரு அரைமணிநேரம் அட்வைஸ் பொழிந்தாலே உங்க வீட்டு பொண்ணு பக்கம் இனி வரவே மாட்டேன்னு அவன் ஓடிடுவான்…ஹா…ஹா…” என்று சொல்லி விட்டு கலகலவென்று சிரித்தாள்.
பிரபஞ்சன் இப்போது கடுமையாக முறைக்க, அவளின் சிரிப்பு மட்டும் நிற்பேனா என்றது.
“நீ இப்படியே சிரிச்சிட்டு இரு. நான் மாமாகிட்ட சொல்லி அந்தப் பையனை பற்றி விசாரிக்கச் சொல்றேன்…” என்று மிரட்டினான்.
“ஆத்தாடி! உங்களுக்கு ஏன் இந்த வில்லன் வேலை அத்தான்? உங்களுக்கு இந்த வில்லன் கெட்டப் எல்லாம் சரி வராது. விட்டுடுங்களேன்…” என்றாள் அப்பாவியாக.
“செய்வது எல்லாம் கேடி வேலை. ஆனால் முகத்தை மட்டும் பச்ச பிள்ளை மாதிரி வெச்சுக்கோ…” என்று சலித்துக் கொண்டான்.
“யூ நோ அத்தான்? நான் இன்னும் பச்ச பிள்ளை தான். அதான் ஒரு அடிமை சிக்கிட்டான்னு காதலிக்காமல் உங்ககிட்ட வந்து ஐடியா கேட்டுக்கிட்டு இருக்கேன்…” என்றாள்.
“வாயடிச்சது போதும் ராகா. விவரம் சொல்!” என்றான் கண்டிப்புடன்.
அவளும் தன் விளையாட்டுப் பேச்சை விட்டுவிட்டு விவரம் சொல்ல ஆரம்பித்தாள்.
“அவன் பெயர் ஆதித்யன். என் கிளாஸில் தான் படிச்சுட்டு இருக்கான் அத்தான். கூடப் பிறந்த ஒரு அண்ணா இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது தவிர வேற விவரம் எதுவும் தெரியலை அத்தான்…” என்றாள்.
“ஓகே, இதுக்கு மேல நான் பார்த்துக்கிறேன். நீ படிப்பை முடிக்கும் வரை இதைப் பற்றி யோசிக்கக் கூடாது. என்ன சரியா?” என்று கேட்டான்.
“சரி அத்தான்…” நல்ல பிள்ளையாகத் தலையை ஆட்டினாள்.
இன்னும் ஆறு மாதங்களுக்குப் பிறகு ராகவர்தினி என்ன முடிவு எடுத்தாலும் அவனுக்குச் சம்மதமே! ஆனால் அவள் முடிவு எடுப்பதற்கு முன் அந்தப் பையன் நல்லவன் தானா? அவளை உண்மையாக விரும்புகிறவன் தானா? என்பதை ஆராய முடிவு செய்தான் பிரபஞ்சன்.
ராகவர்தினி அவனுக்குச் சம்மதம் சொன்ன பிறகு கெட்டவன் என்று தெரிய வந்தால் அவள் வாழ்க்கை கேள்விகுறியாகப் போகும் என்று நினைத்தவன் அவளின் அத்தானாகத் தான் தான் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று நினைத்தான்.
அவர்களின் கல்லூரி முடியும் நேரம் பிரபஞ்சனுக்குத் தெரியும் என்பதால், அந்த நேரத்தில் இருந்து ஆதித்யனை பின் தொடர்ந்தான்.
அன்று கல்லூரி முடிந்து தன் நண்பனுடன் இருசக்கர வாகனத்தில் வெளியே வந்த ஆதித்யன், தன் வீட்டிற்குச் செல்லும் பாதையில் வண்டியை விட்டான். அவனைத் தன் காரில் பின் தொடர்ந்தான் பிரபஞ்சன்.
பாதி வழியில் இருந்த நண்பனின் வீட்டில் வண்டியை ஆதித்யன் நிறுத்த, பிரபஞ்சனும் சற்றுத் தொலைவில் தன் காரை நிறுத்தி அவனைப் பார்த்தான்.
வண்டியை விட்டு இறங்கிய ஆதித்யனின் நண்பன், அவனையும் வீட்டிற்குள் அழைத்தான்.
அதற்கு ஆதித்யன் மறுப்புத் தெரிவித்தான்.
அப்போது வீட்டிற்குள் இருந்து ஒரு இளம்பெண் வெளியே வந்து அவளும் ஆதித்யனை வீட்டிற்குள் அழைத்தாள்.
முதலில் மறுத்துக் கொண்டிருந்த ஆதித்யன், அவள் வந்து அழைத்ததும் வண்டியை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றதை பார்த்தான் பிரபஞ்சன்.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்தான் ஆதித்யன்.
அவன் வரும் போது காரை விட்டு இறங்கி, அவர்களின் பேச்சுச் சத்தம் கேட்கும் தூரத்தில் ஏதோ அட்ரஸ் விசாரிப்பது போல் வந்து நின்றான்.
“அப்புறம் நாளைக்குக் காலேஜில் பார்ப்போம் ஆதி…” என்று அவன் நண்பன் சொல்ல,
“ஓகேடா பை!” என்றான் ஆதித்யன்.
“அண்ணா, உன் பிரண்டை ஒரு நிமிஷம் நிக்கச் சொல்லு…” உள்ளிருந்து அந்த இளம் பெண் சொல்லும் சத்தம் கேட்டது.
“இன்னும் என்ன அவன்கிட்ட பேச போற?” என்று அவள் அண்ணன் கேட்க,
“நாளைக்கு வரும் போது நான் கேட்டது வாங்கிட்டு வரச் சொல்லணும்…” என்றாள் தங்கை.
“அவன்கிட்ட எதுவும் கேட்காதேன்னு உன்னைச் சொல்லிருக்கேனா இல்லையா?” அண்ணன்காரன் அதட்ட,
“விடு வைபவ். என்கிட்ட தானே கேட்குறாள்? நீ கேட்டது நாளைக்கு வாங்கிட்டு வர்றேன் சிந்து…” என்றான் ஆதித்யன்.
“தேங்க்ஸ் ஆதி…” என்றாள் அந்தச் சிந்து.
“அவனைப் பெயர் சொல்லி கூப்பிடாதேன்னு சொல்றதையும் கேட்க மாட்டியா?” வைபவ் அதட்ட,
“ஆதியே பேசாம இருக்காங்க. நீ ஏன் குதிக்கிற? போ அண்ணா…” சிணுங்கினாள்.
“இரண்டு பேரும் எப்படியோ போங்க…” என்று வைபவ் நண்பனுக்குப் ‘பை’ சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட, அதன் பிறகு சிந்து ‘டாட்டா’ காட்டினாள்.
வண்டியில் ஏறியவன், அவளின் கன்னத்தில் லேசாகத் தட்டி விட்டு தானும் ‘டாட்டா’ சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் ஆதித்யன்.
பார்த்துக் கொண்டிருந்த பிரபஞ்சனுக்கு அதைத் தவறாக நினைக்கத் தோன்றவில்லை.
அந்த இளம்பெண் அண்ணனின் நண்பனை அண்ணனாக நினைத்து உரிமையுடன் ஏதாவது வாங்கித் தரச் சொல்லியிருக்கலாம். ஆதித்யனும் அவளைத் தன் தங்கையாக நினைத்து வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கலாம் என்று நினைத்த பிரபஞ்சன் மீண்டும் காரில் அவனைப் பின் தொடர ஆரம்பித்தான்.
அதன்பிறகு எங்கேயும் நிற்காமல் நேராக வீட்டிற்குச் சென்றான் ஆதித்யன்.
அதைக் கண்டு விட்டு மேலும் அரைமணி நேரம் அவனின் வீட்டு வாசலையே பார்த்துக் கொண்டு காத்திருந்தான். ஆனால் ஆதித்யன் வெளியே வரவில்லை என்றதும் ‘இன்றைக்கு இது போதும்!’ என்று பிரபஞ்சன் கிளம்பி தன் வீடு சென்று சேர்ந்தான்.
அதன்பிறகு திருமணத் தேதி நெருங்கி விட்டதால் அவனுக்குக் கல்யாண வேலையே சரியாக இருந்ததால் ஆதித்யனை பற்றி மேலும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பிரபஞ்சன், நந்திதா திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே இருந்தன.
பிரபஞ்சன் வழக்கம் போல வேலைக்குச் சென்று கொண்டிருந்தான்.
அன்றும் காலையில் விரைவில் பள்ளிக்கு வந்தவன், மாணவர்களுக்குப் பிராட்டிகல் பரீட்சை வைத்திருந்ததால் லேப்பில் உபகரணங்களை ஐந்து மாணவர்களின் உதவியுடன் தயாராக எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
ஒரு வரிசையில் சிறிய கண்ணாடி குடுவைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது, “சார்…” என்றழைத்தான் ஒரு மாணவன்.
“சொல் தீபக்…”
“என் லைனில் எல்லாம் எடுத்து வச்சுட்டு வச்சுட்டேன் சார். நான் கிளாஸ் ரூம் போகட்டுமா சார்?” என்று கேட்டான் அந்த மாணவன்.
“ஓகே தீபக், நீ போ! ஒரு பத்து நிமிஷத்திற்குப் பிறகு ஸ்டூடெண்ட்ஸை எல்லாம் லேப்பிற்கு வரச் சொல்…” என்றான்.
“சரிங்க சார்…” என்று அந்த மாணவன் சென்று விட்டான்.
அவன் சென்ற பிறகு மற்ற நான்கு மாணவர்களும் ஒவ்வொருவராக அவர்களுக்குக் கொடுத்த வேலையை முடித்து விட்டு கிளம்பினர்.
அவர்கள் சென்ற பிறகு மீண்டும் ஒரு முறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான் பிரபஞ்சன்.
அப்போது ஜன்னல் பக்கமாக இருந்த வரிசையைப் பார்த்துக் கொண்டிருந்த போது வெளியே தீபக் தூரத்தில் எங்கோ செல்வதைக் கண்டான்.
லேப்பிற்கு வரும் நேரத்தில் இவன் எங்கே செல்கிறான்? என்று பிரபஞ்சன் பார்க்க,
அன்று பார்த்த புதர் பக்கம் இருந்த மரத்தின் பக்கம் தீபக் செல்வதைக் கண்டு துணுக்குற்றான்.
மரத்தின் மறைவின் பக்கம் சென்ற தீபக் அங்கே இருந்த யாரிடமோ பேசுவது போல் இருந்தது.
சில நொடிகளுக்குப் பிறகு மரத்தின் பின் இருந்து ஒரு மாணவி வெளியே வந்ததைக் கண்டு பிரபஞ்சனின் முகம் கோபத்தில் சிவந்தது.
அந்த மாணவியும் தீபக் படிக்கும் அதே வகுப்பில் தான் இருந்தாள்.
அந்த மாணவி பாதித் தூரம் சென்ற பிறகு, தீபக் வகுப்பறையை நோக்கி செல்வதைக் கண்ட பிரபஞ்சனுக்கு என்ன விஷயம் என்று ஓரளவு பிடிப்பட்டது.
ஆனாலும் உடனே எந்த முடிவிற்கும் வரக்கூடாது, பொறுத்திருந்து பார்ப்போம் என்று நினைத்துக் கொண்டான்.
பிராட்டிக்கல் வகுப்பிற்கு மாணவர்கள் அனைவரும் வந்து விடக் கடைசியாகத்தான் தீபக்கும், அந்த மாணவி பைரவியும் வந்தனர்.
அதுவும் லேப் வாசலில் மெல்லிய குரலில் ஏதோ பேசிக் கொண்டவர்கள் லேப்பிற்குள் நுழைந்ததும் தனித் தனியாகப் பிரிந்து நடந்ததையும் கண்டான் பிரபஞ்சன்.
பிராட்டிக்கல் வகுப்பின் போதும் கண்களாலேயே அவ்வப்போது ரகசியம் பேசிக் கொண்டனர்.
‘எனக்கு ரிசல்ட் சரியா வரலை’ என்று பைரவி உதட்டை பிதுக்க,
‘முயற்சி செய்! வரும்…’ என்று தீபக் வாயசைக்க,
‘போடா என்னால் முடியலை’ என்று அவள் தலையைச் சிலுப்ப,
‘மக்கு, உன்னால் முடியும்’ என்று தீபக் விழிகளை உருட்டி முழிக்க, என இருந்தனர்.
அவர்களுக்குள் மௌனமாக ஒரு பரிபாஷை நடந்ததைப் பிரபஞ்சன் கண்கொத்தி பாம்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவர்கள் உணரவே இல்லை.
அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த பிரபஞ்சனுக்குச் சுறுசுறுவென்று கோபம் பொங்கியது.
‘அவர்கள் நண்பர்களாக இருக்கலாமே?’ என்று உள்மனம் எடுத்துச் சொன்னாலும், ‘நண்பர்கள் தனித்து மறைவாகப் பேச வேண்டிய அவசியம் என்ன?’ என்ற கேள்வியில் உள்மனம் சொன்னது அடிபட்டுப் போனது.
பிராட்டிக்கல் முடிந்து தீபக் ரிசல்ட்டை ஒப்படைக்க வந்ததும் அடுத்ததாகப் பைரவி வந்து ஒப்படைத்தாள்.
வாசல் வரை இருவரும் செல்லும் போது தனித்தனியாகச் சென்றவர்கள், வாசலை தாண்டியதும் அருகருகே நடந்து ஏதோ பேசிக் கொண்டே சென்றனர்.
அதன் பிறகு அவர்களைக் கண்காணித்துக் கொண்டே இருந்தான் பிரபஞ்சன். வகுப்பறையிலும் சரி, பள்ளி வளாகத்தில் தூரத்தில் அவர்களைப் பார்த்த போதும் சரி, அவர்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டான்.
அவன் புரிந்து கொண்டதை உறுதி செய்யும் நாளும் வந்தது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கு வந்த பிரபஞ்சன் ஆசிரியர்கள் அறையின் ஜன்னல் அருகில் நின்று புதர் பக்கம் இருந்த மரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது தீபக்கும், பைரவியும் ஒருவர் பின் ஒருவர் அந்த மரத்தின் பின் செல்வதைக் கண்டவன் சட்டென்று ஆசிரியர் அறையை விட்டு வெளியேறி அந்தப் புதரின் பக்கம் சென்றான்.
“வேண்டாம் தீபக், பேசாமல் இரு. நோ… அங்கே எல்லாம் கை வைக்காத. இப்படியெல்லாம் செய்தால் நான் இனி தனியா வரமாட்டேன்…” மரத்தை நெருங்க, நெருங்க பிரபஞ்சனின் காதுகளில் பைரவியின் சிணுங்கலுடன் கூடிய வார்த்தைகள் தெளிவாக விழுந்தன.
“ஒரே ஒரு தடவை பையூ. இது மட்டும். அப்புறம் கேட்க மாட்டேன்…” கெஞ்சலுடன் மிஞ்சலுமாகத் தீபக்கின் குரலும் கேட்டது.
பிரபஞ்சன் பட்டென்று மரத்தின் முன் செல்ல, தீபக், பைரவியின் முகத்தை நோக்கி குனிந்து கொண்டிருந்தான்.
அவனின் கை பைரவியின் மேல் அங்கத்தின் மீது பதிந்திருக்க, “தீபக்…” என்று அதட்டி அழைத்தான்.
தன் ஆசிரியரை அங்கே எதிர்பாராமல் திகைத்து விலகி நின்று பிரபஞ்சனை பயப்பார்வை பார்த்தனர்.