37 – மின்னல் பூவே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 37
“நிஜமாகவா?” என்று நம்பமுடியாமல் கேட்டான் முகில்வண்ணன்.
“நிஜம் தான்…” என்று உறுதியாகச் சொன்னாள் உத்ரா.
அப்போதும் முகில் நம்பமுடியாமல் பார்த்தான்.
“நம்பமுடியலையா? கணக்குப் பார்த்து வருவது காதல் இல்லை முகில். ஆனாலும் நீங்க புரிந்து கொள்ளணும்னு தான் இதைச் சொல்றேன்…”
“அன்னைக்கு என் வேதனையை எல்லாம் கொட்டி நான் வருத்தப்பட்டப்ப, உங்க தவறுக்காக உண்மையாக வருந்தி நீங்க மன்னிப்புக் கேட்ட போதே உங்க மனசு என் பக்கம் சாய ஆரம்பித்துவிட்டது முகில்.
தன் துணையோட வேதனையைக் கைக் கட்டி வேடிக்கை பார்க்கிறவன் நல்ல கணவனாக இருக்க முடியாது முகில். துணையோட வலியை தன் வலியா நினைக்கலைனாலும் அவள் வலியை புரிந்து கொள்பவனாகவாவது இருக்கணும்.
நீங்க புரிந்தும் கொண்டீங்க, என் வலியைப் பார்த்து நீங்களும் துடிச்சீங்க. அந்த வலி ஒன்னே போதும் முகில். இவன் என் கணவன்னு ஒரு மனைவிக்கு அந்த நேரம் எப்படி இருக்கும் தெரியுமா?” என்று உத்ரா லயித்துக் கூறினாள்.
அவள் சொன்னதை எல்லாம் மனதில் ஓடிப்பார்த்தான் முகில்வண்ணன்.
அவள் வலித்த மனதுடன் பேசியது அவனுக்கும் உள்ளுக்குள் துடிக்க வைத்தது. அவள் துடிப்பிற்குத் தான்தான் காரணம் என்று அவன் தன்னையே நிந்தித்துக் கொண்டதும் உண்மை.
“அப்படியா? அப்போ ஏன் அதுக்கு அப்புறமும் என்னை முறைச்சிட்டே இருந்த? என்னை மன்னிக்க முடியலைன்னு வேற சொன்னீயே?” என்று கேட்டான்.
“உடனே மன்னிச்சுட்டா உங்க தப்பு உங்களுக்குப் புரியாம போயிடுமே முகில்?” என்ற உத்ரா குறும்புடன் சிரிக்க, அவளின் இடுப்பில் இன்னும் அணைக்கட்டியிருந்த தன் கையை இறுக்கினான்.
“அப்போ என்னை மன்னிச்சுட்டியா?” என்று அவளின் மூக்கோடு மூக்குரசி கொண்டே கேட்டான்.
“ம்ம்ம்… இதுக்குப் பதில் இப்போ இல்லை. இன்னொரு நாள் சொல்றேன்…” என்றாள்.
“ஏன் இப்பவே சொன்னால் என்ன?” அவன் விடாமல் கேட்க,
“இதுக்கும் உங்களுக்கா புரிய நேரம் வரும் முகில். அந்தப் புரிதல் வரும் போது வாய் பேச்சுக் கூடத் தேவையில்லை…” என்றாள்.
“ரொம்பப் புதிராவே பேசுற…” என்றான்.
“ம்கூம்… எதார்த்தத்தைப் பேசுறேன்…” என்றவள்,
“உங்களுக்கு என் மேல் லவ் வந்துருச்சுன்னு சொல்ல இன்னொரு காரணமும் என்கிட்ட இருக்கு முகில். அங்கே அப்படி உட்கார்ந்து பேசுவோமா?” என்று கட்டிலை சுட்டிக் காட்டிக் கேட்டாள்.
“நோ, இப்படியே சொல்லு. எனக்கு உன்னை விட்டுத் தள்ளிப் போகவே மனசு இல்லை…” என்றவன் அவளின் முகத்தைத் தன் நெஞ்சில் சாய்த்து, மென்மையாக அணைத்துக் கொண்டான்.
அவனின் கை அவளின் இடையே மென்மையாக வருடியது.
“கை இந்த வேலை பார்த்துட்டு இருந்தால் நான் எப்படிப் பேசுவது?” என்று அவனின் கையை நகர விடாமல் பற்றிக்கொண்டாள்.
“ஏற்கனவே நீ ஃபுல்லா இழுத்து மூடியிருக்க. இங்கே என்னால் எதையும் உணர முடியலை. இதில் கையை வேற பிடிச்சுக்கிட்டா எப்படி உதிமா?” என்று கேட்டவன், ‘என் கைகளுக்குச் சுதந்திரம் கொடு’ என்பது போல் பார்த்தான்.
“ம்கூம்… என்னால் பேச முடியாது…” என்று முனங்கலாகச் சொன்னவள் அவனின் நெஞ்சத்தில் அழுத்தமாகத் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
அவளின் ஸ்பரிசமும், இளக்கமும் அவனைச் சிறகடித்துப் பறக்க வைத்தது.
தன் அணைப்பை இறுக்கியவன் அவளின் தலையில் நாடியை வைத்து அழுத்திக் கொண்டான்.
ஒன்றும் பேசாமல் அணைத்துக் கொண்டே அப்படியே இருந்து விடத் தோன்றியது.
அவளுக்கும் அப்படித்தான் என்பது போல் அவனின் இடுப்பை சுற்றி கையைப் போட்டு அணைத்துக் கொண்டாள்.
சில நிமிடங்கள் அப்படியே கரைய, “போன வாரம் வீக் என்ட்ல என்ன நடந்ததுன்னு ஞாபகம் இருக்கா முகில்?” லேசாகத் தலையை உயர்த்தி அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.
“எதைச் சொல்ற? நாம மால்க்கு போனதையா?”
“ம்ம் ஆமா…” என்றவள், தன் காலை லேசாக உயர்த்தி அவனின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள்.
முதல் முதலாக அவளாகக் கொடுக்கும் முத்தம். முகில் கண்களை மூடி ரசித்து உள்வாங்கினான்.
மாலில் நடந்தது இருவருக்குமே மனதில் ஓடியது.
கடந்த ஞாயிறு அன்று தங்கள் பெற்றவர்களைப் பார்த்து விட்டு வீடு திரும்பும் வழியில் இருந்த ஒரு மாலில் வீட்டிற்குத் தேவையான சில பொருட்கள் வாங்க இருவரும் உள்ளே சென்றனர்.
ஞாயிறு மாலைப்பொழுது என்பதால் சற்றுக் கூட்டமாக இருந்தது.
மூன்றாவது தளத்தில் பொருட்களை வாங்கி விட்டு இரண்டாவது தளம் செல்ல நகரும் படிக்கட்டின் அருகில் வந்தனர்.
பை கனமாக இருந்ததால் தான் பைகளைத் தூக்கிக் கொண்டான் முகில்வண்ணன்.
உத்ராவின் கையில் ஒரு பை இருந்தது.
“கவனமா இறங்கு உதி…” அவளை முன்னால் விட்டு அவன் பையுடன் பின்னால் வந்தான்.
நகரும் படிக்கட்டில் உத்ரா முதலில் கால்வைத்து விட, பின்னால் முகில் படியில் கால் வைக்க முயன்ற போது, அவனின் பின்னால் வேகமாக வந்த பதின்ம வயதில் இருந்த பையன் ஒருவன் முகில் மீது பலமாக மோதி விட, இரண்டு கையிலும் பையுடன் இருந்த முகில் படிகளில் தடுமாறி முன்னால் ஏறிய மனைவியின் மீது மோதினான்.
அதில் அவளும் தடுமாறி விழப் போக, கையில் இருந்த பையைச் சட்டென்று கீழே போட்டு விட்டு அவளை விழ விடாமல் தாங்கிக் கொண்டான் முகில்வண்ணன்.
அதற்குள் அவர்கள் கீழே வந்திருக்க மனைவியைக் கவனமாக ஓரமாக நிறுத்தி விட்டு “ஆர் யூ ஓகே உதிமா?” என்று பதட்டத்துடன் விசாரித்தான்.
“ஓகே முகில். உங்களுக்கு ஒன்னுமில்லையே?” என்று கேட்டாள்.
“எனக்கு ஒன்னுமில்லை…” என்றவன் தங்களைத் தடுமாற வைத்தவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தான்.
“பார்த்து வர முடியாதா? இப்படியா ஓடி வந்து மேல விழுவ?” என்று அந்தப் பையனை அதட்டினான்.
“ஏய், என்னப்பா அதட்டுற? சின்னப் பையன் ஏதோ விளையாட்டா ஓடி வந்துட்டான். உங்களுக்குத் தான் ஒன்னும் ஆகலைல?” என்று அந்தப் பையனின் அருகில் நின்றிருந்த ஒரு பெரியவர் அதட்டினார்.
இவனா சின்னப் பையன்? என்பது போல் அவனை ஏற இறங்க பார்த்தான்.
பதினைந்து வயது இருக்கலாம். ஆனால் நன்றாக வளர்ந்து வாட்டசாட்டமாக இருந்தான்.
“நல்லா கேளுங்க தாத்தா. நான் என்னமோ வேணும்னே செய்த மாதிரி அதட்டுறார்…” என்று அந்தப் பையன் அந்தப் பெரியவரிடம் செல்லம் கொஞ்சினான் .
ஸாரி… என்று ஒரு வார்த்தை கேட்டிருந்தாலும் விஷயம் முடிந்திருக்கும். ஆனால் அவனின் தாத்தாவிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டே பதிலுக்கு முகில்வண்ணனை முறைத்துக் கொண்டு நின்றான் அவன்.
அதில் முகிலுக்கு இன்னும் கோபம் வந்தது. அந்த நேரம் காலில் ஏதோ சுறுக்கென்று வலியை உணர்ந்தவன், குனிந்து பார்த்தான்.
கால் பெருவிரலில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. ஏற்கனவே அந்தப் பையன் தெனாவட்டாகப் பேசியதில் கடுப்புடன் நின்றிருந்த உத்ரா, கணவனின் காலில் ரத்தத்தைப் பார்த்ததும் கொதித்துப் போனாள்.
“என்னாச்சு முகில்?” என்று பதறி வேகமாகக் குனிந்து அவளின் பையில் எப்போதும் இருக்கும் முதலுதவி பொருட்களை வைத்து கட்டுப்போட்டவள், நிமிர்ந்து அந்தப் பையனை மட்டும் இல்லாமல் பெரியவரையும் முறைத்தாள்.
“என்னமோ ஒன்னும் ஆகலைன்னு சொன்னீங்க? இதோ ரத்தம் வருது. பையன் தப்பு செய்தால் கண்டிக்கப் பாருங்க. என்னமோ நாங்க தப்பு செய்த மாதிரி எங்களை அதட்ட வந்துட்டீங்க?”
“தெரியாமல் செய்திருந்தாலும் ஒரு ஸாரி சொல்ல கூட உன்னால் முடியாதா? நிறையப் பேர் இருக்கும் இடத்தில் பார்த்து தான் வரணும். நீ தள்ளி விட்ட வேகத்தில் எக்ஸ்லேட்டர்ல நாங்க விழுந்திருந்தால் என்ன ஆகுறது?” என்று இருவரையும் கேள்விகளால் விளாசினாள்.
“உத்ரா விடு, பிரச்சனை வேண்டாம்…” கோபம் நெஞ்சு முட்ட இருந்தாலும், அனைவரும் தங்களைச் சுற்றி வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கவும், முகிலின் குணம் தலை தூக்க, பிரச்சனை இல்லாமல் சென்று விட நினைத்தான்.
“ஏய், என்னமா ரொம்பப் பேசுற? நிறையப் பேர் வரும் இடத்தில் நீங்க தான் கவனமா போகணும். அதை விட்டு சும்மா கத்த வந்துட்ட?” என்று பேரனை திட்டியதில் வெகுண்டு அந்தப் பெரியவர் சண்டைக்கு வந்தார்.
“எப்படிப் பேசுறாங்கன்னு பாருங்க முகில். உங்க காலில் காயம் இருக்குன்னு தெரிந்த பிறகும் ஒரு ஸாரி கேட்க மனசு வரலை. இவங்களைச் சும்மா விட்டு வரச் சொல்றீங்களா?” என்று கணவனிடம் கேட்ட உத்ரா, அந்தப் பெரியவரையும், பையனையும் நன்றாகத் திட்டிவிட்டாள்.
அவள் தனக்காக அப்படிச் சண்டையிட்டது பிடித்திருந்தாலும், காட்சிப்பொருளாக நிற்க பிடிக்காமல், “உதிமா… போதும் வா…” என்று அங்கே மற்றவர்கள் உதவி செய்து எடுத்து வைத்திருந்த தங்கள் பைகளை எடுத்துக் கொண்டு மனைவியையும் பிடித்து இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
அவர்கள் இரண்டு எட்டு நடக்கவும், “அந்தப் பையனே அடிப்பட்டும் சும்மா இருக்கான். ஆனா அந்தப் பொண்ணு என்ன குதி குதிக்குது. சரியான திமிர்ப்பிடித்த பொண்ணா இருக்கும் போல…” என்று அந்தப் பெரியவர் சப்தமாகவே முனங்க, மனைவியுடன் நடந்து கொண்டிருந்த முகில் சட்டென்று நின்றான்.
திரும்பி அந்தப் பெரியவரின் முன் வந்தவன், “அதுக்குப் பேரு திமிர் இல்லை. என் மேல இருக்குற அன்பு! தவறு செய்தும் சின்ன மன்னிப்பு கூடக் கேட்காத உங்களை மாதிரி ஆளுங்ககிட்டயும், நியாயம் கேட்கும் தைரியம்! தைரியத்துக்குப் பெயர் திமிர் இல்லை!” என்று அவரிடம் அழுத்தமாகச் சொன்னவன் மனைவியை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
அன்று முழுவதும் உத்ராவின் பார்வை முகிலை தொடர்ந்தது.
“என்ன அப்பப்போ என்னை ஒரு மாதிரி பார்த்து வைக்கிற?” என்று முகில் அவளைக் கவனித்துக் கேட்டான்.
“இன்னைக்கு அந்தப் பெரியவர்கிட்ட நீங்க சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன் முகில்…” என்றாள்.
“ஏன்? சரியாத்தானே பேசினேன்?”
“சரியா பேசினீங்க. ஆனா பேசியது நீங்க தானான்னு எனக்குச் சந்தேகம் வந்துருச்சு…” என்றாள்.
“சந்தேகம் வரக் கூடாதே!” என்று அவன் கேலியாகச் சொல்ல,
“பின்ன? என்னை வாய்க்கு வாய் திமிர்ப்பிடித்தவள்னு சொல்லும் முகில், இன்னைக்கு என் திமிர்த்தனத்துக்கு வேறு பெயர் சொல்லும் போது எனக்குச் சந்தேகம் வராமல் என்ன செய்யும்?” என்று கேட்டாள்.
அவள் அமர்ந்திருந்த சோஃபாவின் கை பிடியில் அமர்ந்து அவளின் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவன், “ஸாரி உத்ரா…” என்றான்.
“இப்போ எதுக்கு முகில் இந்த ஸாரி?” என்று தலையை உயர்த்தி அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.
“உன்னை நிறைய முறை திமிர்ப்பிடித்தவள்னு சொல்லியிருக்கேன். அது தப்புன்னு அப்போ புரியலை. இப்போ புரியுது. பொண்ணுங்க கொஞ்சம் நிமிர்வாக இருந்தாலே அதைத் திமிர்த்தனம்னு சொல்றது எவ்வளவு பெரிய தப்பு.
அது உன்னோட தைரியம்! உன்னோட நிமிர்வு! உன்னோட கம்பீரம் அது!
பொண்ணுங்களுக்குக் கண்டிப்பா அந்தத் தைரியம் வேணும். தைரியம் தான் பலம்! அது தான் நான் உன்னைத் திட்டும் போதும் கூட உன்னை நிமிர்வாக இருக்க வைத்ததுன்னு இப்போ புரிந்து கொண்டேன்.
இப்போ உன்னோட அந்த நிமிர்வு தான் எனக்குப் பிடிச்சிருக்கு. அதாவது உன்னோட திமிர்த்தனம் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு…” என்று முகில் அன்று சொன்னதை இன்று நினைத்துப் பார்த்த உத்ரா, கணவனைக் காதலுடன் பார்த்தாள்.
“என்னைத் திமிர்ப்பிடித்தவள்னு நீங்க சொல்லும் போது கொஞ்சம் கஷ்டமா இருக்கும் முகில். ஆனா அன்னைக்கு என்னோட திமிருக்கு பெயர் நிமிர்வுன்னு நீங்க புரிந்து கொண்டதில் எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா?
இதுவும் ஒரு வகைக் காதல் தான் முகில். தன்னோட துணையின் குணத்தைப் புரிந்து ஏற்றுக்கொள்வது!
இதைத் தவிர இன்னும் சின்னச் சின்ன விஷயங்களில் கூடக் காதல் தெரியும் முகில்.
இதுதான் காதல்ன்னு எந்தக் கட்டுக்குள்ளும் அதை அடக்க முடியாது. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி காதலுடன் தான் என்னை அணுக வேண்டும்னு உங்ககிட்ட ஒரு தயக்கம் வந்தது பாருங்க. அதுவும் கூடக் காதல் தான்.
நீங்க என் உடலை மட்டும் ஸ்பரிசிக்கணும்னு நினைத்திருந்தால் உங்ககிட்ட அந்தத் தயக்கம் வந்திருக்காது. என் மனசுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைத்த உங்க எண்ணமும் காதல் தான்.
உங்களுக்கு இப்ப என் மேல் இருப்பது காதல் மட்டும் தான்!” என்றவள் அவனை இறுக்கமாக அணைத்தாள்.
அவள் சொன்னதை எல்லாம் கேட்டு முகம் மலர்ந்த முகில்வண்ணன் தானும் அவளைத் தனக்குள் புதைத்துக் கொள்பவன் போல அணைத்து அவளின் கன்னத்தில் ஆசையுடன் இதழ் பதித்தான்.
பின் அவளின் இதழை நோக்கி குனிந்தான். அப்போது போல் மென்மையாக இல்லாமல் அழுத்தமாகத் தன் அதரங்களை அவளின் இதழுடன் உறவாட விட்டான்.
இப்போது அவனிடம் தயக்கமோ, நடுக்கமோ இல்லை. மனைவியும் தன் அருகாமையை விரும்புகிறாள் என்ற எண்ணமே அவனைத் தூண்டி விடப் போதுமானதாக இருந்தது.
கணவன் காதலுடன் தனக்கு இட்ட முத்தத்தை ரசித்து உள்வாங்கிக் கொண்டாள் உத்ரா.
அவளின் முகத்தில் வேண்டாம் என்ற உணர்வோ, பிடித்தமின்மையோ சிறிதும் இல்லாமல் லயிப்பும், ஆசையும், காதலும் கலந்து உணர்வாட, அவளுடன் முழுமூச்சாக உறவாடும் ஆசை கொழுந்து விட்டு எரிய முகில்வண்ணனின் கைகள் தன் அத்துமீறலை அவளின் உடலில் காட்டத் துவங்கின.
உத்ராவும் அவனுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து நிற்க, அந்த நேரம் சரியாக அவர்களின் மோனநிலையைக் கலைத்தது அலைபேசி.
கைபேசியின் கதறலை கூடக் காதில் வாங்காமல் காதல் பாடத்தில் முகில் லயித்திருக்க, முதலில் உணர்வுக்கு வந்தது என்னவோ உத்ரா தான்.
“போன் அடிக்கிது முகில்…” என்றவள் அவனை விட்டு மெதுவாக நகர்ந்து நின்றாள்.
“பரவாயில்லை அடிக்கட்டும் உதிமா…” என்றவன் மீண்டும் அவளைத் தனக்குள் இழுத்துக் கொள்ள முயல, “ஒரு நிமிஷம் இருங்க முகில்…” என்றவள் கைபேசியை எடுத்துப் பார்த்தாள்.
வளர்மதி தான் அழைத்துக் கொண்டிருந்தார். அப்போது தான் தாங்கள் அவர்களைப் பார்க்கத்தான் கிளம்பி கொண்டிருந்தோம் என்பதே ஞாபகத்தில் வந்தது.
“அத்தை தான் முகில்…” என்று அவனிடம் சொன்னவள், “ஹலோ அத்தை…” என்று அழைப்பை ஏற்றுப் பேச ஆரம்பித்தாள்.
அவளின் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டவன் கழுத்தில் குறுகுறுப்பு மூட்டினான்.
“காலையில் சாப்பிட வந்துடுவோம்னு சொன்னீங்க. இன்னும் வரலையே உத்ராமா. மணி பத்து ஆச்சு. வந்துட்டு இருக்கீங்களா?” என்று வளர்மதி கேட்க, அவஸ்தையாக உதட்டைக் கடித்துக் கொண்டாள் உத்ரா.
“அம்மா, நாங்க மதியம் சாப்பாட்டு டைம்க்கு வர்றோம். இப்ப வேற ஒரு அவசர வேலை வந்துடுச்சு…” என்று மனைவிக்கு முன் முந்திக் கொண்டு முகில் பதிலை சொல்ல, அவனைத் திரும்பி பார்த்துச் செல்லமாக முறைத்தாள் உத்ரா.
உதட்டைக் குவித்து ஒரு முத்தத்தைக் கொடுத்தவன் குறும்பாகச் சிரித்து அவளின் இடையை அழுத்திப் பிடித்தான்.
‘ஹேய்…’ என்று கத்தப் போனவள் கடைசி நொடியில் நிறுத்தி, அவனின் கையை நகர விடாமல் பிடித்துக் கொண்டே, “இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவோம் அத்தை. முகில் அவர் வேலையை அங்கே வந்து பார்ப்பார்…” என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்.
மகன் ஒன்று சொல்ல, மருமகள் ஒன்று சொல்ல என்று இருக்கவுமே வேறு எதுவும் கேள்வி கேட்காமல் சிரித்துக் கொண்டே அழைப்பை வைத்துவிட்டார் வளர்மதி.
‘என் மகன் பொழைச்சிக்குவான்…’ என்று சிறு புன்னகையுடன் முணுமுணுத்துக் கொண்டார்.
“எதுக்கு உதிமா இப்பவே வர்றோம்னு சொன்ன?” என்று அவன் ஏமாற்றத்துடன் கேட்க,
அவனின் கன்னத்தில் முத்தமிட்டவள், “வாரம் ஒரு முறை தான் அவங்களைப் பார்க்க போறோம் முகில். நம்ம வர போறோம்னு ஆசையா காத்துக்கிட்டு இருப்பாங்க. இப்ப கிளம்பலாம். மீதியை…” என்றவள் நாணத்துடன் நிறுத்தினாள்.
அவளின் இதழில் முத்தமிட்டு விலகியவன், “அங்கே போய் வைத்துக் கொள்வோம்…” என்று அவளின் பேச்சை முடித்து வைத்தான்.
உத்ரா கிளம்பி கொண்டிருக்கும் போது பீரோவை திறந்து அன்று வாங்கிய புடவையை வெளியே எடுத்தான் முகில்வண்ணன்.
“உதிமா இன்னைக்கு நீ இந்தப் புடவையைக் கட்டிக்கிறயா?” என்று கேட்டுக் கொண்டே அவளின் முன் நீட்டினான்.
அதைப் பார்த்ததுமே அன்று தனக்கு அவன் புடவை வாங்கிக் கொண்டு வந்ததாகச் சொன்னது ஞாபகத்தில் வர புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள்.
“இதை இப்ப கட்டணுமா? இல்லை, இன்னைக்கு நைட் கட்டணுமா?” என்று மயக்கும் புன்னகையுடன் கேட்டாள்.
அவளின் புன்னகையில் மயங்கியவன், “இப்ப கட்டினாலும் சந்தோஷம் தான். நைட் கட்டினால் டபுள் சந்தோஷம்…” என்றான் கண்களைச் சிமிட்டி.
“ம்ம்ம்…” என்றவள் அவனுக்கு வேற எந்தப் பதிலும் சொல்லாமல் அந்தப் புடவையைப் பையில் வைத்தாள்.
அதிலேயே அப்புடவையை அவள் எப்போது கட்ட போகிறாள் என்று அவனுக்குப் புரிந்து விட, சிறகு இல்லாமலேயே வானத்தில் பறந்தான்.
பின் இருவருமே சற்று நேரத்தில் கிளம்பினர். அங்கே சென்று பெரியவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும், இருவரின் பார்வையும் அடிக்கடி ரகசியமாகத் தீண்டிக் கொண்டது.
அதை அஜந்தாவும், வளர்மதியும் கவனித்து இருவரும் அர்த்தத்துடன் சிரித்துக் கொண்டனர்.
தங்கள் பிள்ளைகள் வாழ்க்கை மலர வேண்டும் என்று காத்திருந்த அப்பெண்மணிகளுக்கு இப்போது மகிழ்ச்சியாக இருந்தது.
அதிலும் முகில் தன் மகளைப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொள்வதைப் பார்த்து அஜந்தா சந்தோஷத்தில் பூரித்துப் போனார்.
திருமணத்திற்குப் பிறகும் மகளின் முகத்தில் இருந்த ஒருவித இறுக்கம் இப்போது இல்லாமல் இருப்பதைக் கண்டு கொண்ட அஜந்தா அக மகிழ்ந்து போனார்.
முகில் மனைவியைத் தனியாகச் சந்திக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதிலும் மாலையில் ஒரு முறை குளித்து விட்டு அவன் கொடுத்த புடவையை வேறு கட்டிக் கொண்டு அவள் வலம் வர, சொக்கி போனவன் மனைவியைத் தனியாகக் கொத்திக் கொள்ளத் தவித்துக் கொண்டிருந்தான்.
ஆனால் உத்ராவோ ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தாள். பெரியவர்கள் வீட்டில் இருக்கும் போது பகலில் தாங்கள் மட்டும் அறையில் அடைந்து கொள்ள முடியாது என்று நினைத்தவள் அவனை அமைதியாக இருக்கும் படி ஜாடை காட்டிக் கொண்டிருந்தாள்.
அவளின் கண்ணாமூச்சி ஆட்டம் இரவு வரை தொடர, இரவு தான் இருவரும் ஒன்றாக அறைக்குள் வந்தனர்.
அறைக்குள் வந்த அடுத்த நொடி ஆவலுடன் மனைவியை அணைத்துக் கொண்டான் முகில்வண்ணன்.
“பக்கத்தில் கூட வராம தவிக்க விட்டுட்டியே உதிமா…” என்றவன் தன் தவிப்பை அணைப்பில் காட்டினான்.
“நேரம் காலம்னு ஒன்னு இருக்கே முகில்…” என்றவள் அவனின் அணைப்பில் அடங்கினாள்.
“இந்தப் புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்கு உதிமா…” என்றவன் வாயிலிருந்து அடுத்து தொடர்ந்து வந்த வார்த்தைகள் எல்லாம் உளறல் முத்துக்கள் தான்.
அதன் பிறகு வந்த மணித்துளிகள் மெல்ல மெல்ல கணவன் மனைவிக்கான அந்தரங்க ரகசிய கணங்களாக நகர, காதலுடன் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையைத் துவங்கினர்.
உத்ராவின் காதல் கள்வனாக மாறிப் போயிருந்தான் முகில்வண்ணன்.