36 – மின்னல் பூவே

அத்தியாயம் – 36

எதிரே அமர்ந்து தன்னையே குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருக்கும் புவனாவை செல்லமாக முறைத்தாள் உத்ரா.

இருவரும் கேண்டினில் அமர்ந்திருந்தனர்.

உத்ராவின் கன்னத்தில் இப்போது சிவந்திருந்ததும் மறைந்திருந்தது.

“நானும் காலையில் ஆபிஸ் வந்ததில் இருந்து கவனிச்சுட்டு இருக்கேன். என்னையே குறுகுறுன்னு பார்த்துக்கிட்டு இருக்க. என்ன விஷயம்? எதுக்கு அப்படிப் பார்க்கிற?” என்று கேட்டாள்.

“உன் முகத்தில் ஒரு வித்தியாசம் தெரியுது. அதான் என்னன்னு பார்க்கிறேன்…” என்றாள் புவனா.

“வித்தியாசமா? அப்படி எதுவும் இல்லையே…”

“ம்கூம், ஏதோ வித்தியாசம் இருக்கு. அதுவும் உன்கிட்ட மட்டுமில்ல. முகில்கிட்டயும் வித்தியாசம் தெரியுது. அவர் முகத்தை நான் இப்படிப் பார்க்க முடியாதே. அதான் அவருக்கும் சேர்த்து உன் முகத்தைப் பார்க்கிறேன். என்ன? என்ன மேட்டர்? ம்ம்ம்… ம்ம்ம்…” என்று சிரித்து ரகசியமாகக் கண்சிமிட்டினாள்.

“ஹய்யோ! ஆண்டவா! வர வர நீ ரொம்பக் கெட்டுப் போய்ட்ட. எல்லாம் அந்தக் குருவை சொல்லணும். உனக்கு நிறையக் காதல் பாடமா சொல்லிக் கொடுத்து உன்னைக் கெட்ட பொண்ணா ஆக்கி வச்சுருக்கார் போல இருக்கு…” என்று உத்ராவும் கேலியில் இறங்கினாள்.

“ச்சு… அப்படியெல்லாம் எதுவுமில்லை…” என்று சிணுங்களாகச் சொன்னாள் புவனா.

“அம்மாடியோ! உன் வெட்கமே என்னமோ இருக்குன்னு சொல்லுதே… ஹா… ஹான்… இப்ப உன்கிட்ட தான் ஹன்ரெட் ப்ரசன்ட் வித்தியாசம் தெரியுது. சம்திங்? சம்திங்?” என்று உத்ரா கேலியாகக் கேட்க,

“மெனிதிங்… மெனிதிங் தான். இப்ப அதுக்கு என்னாங்கிற? நானெல்லாம் உன்னை மாறி இருப்பதை இல்லைன்னு சொல்லலைபா. முந்தாதாள் இரண்டு பேருமே சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பினீங்க.

நேத்து நீ லீவ். முகில் ஒர்க் ப்ரம் ஹோம். இன்னைக்கு ஆபிஸ் வரும் போதே இரண்டு பேர் முகமும் ஜொலிக்குது. கேட்டா நத்திங் நத்திங் பாட்டுப்பாடுற…” என்றாள்.

உத்ராவின் முகம் மென்மையாக மலர்ந்தது.

முகில் தன்னைக் காதலிக்க வேண்டும் என்று கேட்டதும், தன் காதலை அவன் புரிந்து கொண்டதுமே அவளின் அன்றைய முகமலர்ச்சிக்குக் காரணமாக இருந்தது.

தன்னை வேண்டாம் என்று ஒதுக்கியவன், இப்போது தான் தான் வேண்டும் என்று கேட்பதும், தன் உணர்வுகளுக்கும் அவன் மதிப்புக் கொடுக்கத் தொடங்கி இருப்பதும் அவளை ஒரு இன்ப உணர்வில் தத்தளிக்க வைத்துக் கொண்டிருந்தது.

அவனிடம் அதைச் சொல்லவில்லை என்றாலும் அவளின் மனமகிழ்சசி அவள் முகத்தில் தெரிந்தது.

தனக்குள் ரகசியமாகச் சிரித்துக் கொண்டவள், “முகில் காதலிக்கப் போறாராம்…” என்று சொல்லிப் புவனாவைப் பார்த்துக் கண்சிமிட்டி சிரித்தாள்.

“ஐயோ! யாரை? பொண்டாட்டி நீ இருக்கும் போது… என்ன உத்ரா இது கூத்து? நீயும் ஈஈ-ன்னு பல்லைக் காட்டி சிரிச்சுட்டு இருக்க?” என்று அதிர்ந்து கேட்ட தோழியைப் பார்த்து வாய்விட்டே சிரித்தாள் உத்ரா.

“அடியேய்! பொண்டாட்டி நான் இருக்கும் போது வேற யாரை லவ் பண்ண போறார்? அப்படிப் பண்ணத்தான் நான் விட்டுடுவேனா?” என்று உத்ரா கேட்க, ‘ஆ’வென்று வாயைப் பிளந்து பார்த்தாள் புவனா.

“அப்போ உன்னை லவ் பண்ண போறதாகத் தான் முகில் சொன்னாரா? வாவ்! வாவ்!” என்று ஆர்ப்பாட்டமாகக் கத்தினாள் புவனா.

“ஏய் புவி, நாம கேண்டின்ல இருக்கோம். அடக்கிவாசி…” என்று அவளை அடக்கினாள் உத்ரா.

அவள் சொன்னதற்கு ஏற்ப புவனாவின் சப்தம் கேட்டு, ஓரிருவரின் பார்வை இவர்களின் புறம் திரும்பியது.

“எனக்கு இருக்குற சந்தோஷத்துக்கு விசிலே அடிக்கணும் போல இருக்கே…” என்று புவனா சப்தத்தைக் குறைத்துக் கொண்டு சந்தோஷத்தில் குதிக்காத குறையாகச் சொன்னாள்.

“புருஷன், பொண்டாட்டியை லவ் பண்ணுவதெல்லாம் பெரிய மேட்டரா? இதுக்கு எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்?” என்று உத்ரா கேட்க,

“எதுக்கு ஆர்ப்பாட்டமா? என்ன நீயே இவ்வளவு சாதாரணமா சொல்லிட்ட? முகில் உன்னை எவ்வளவு அவாய்ட் செய்தார்ன்னு எனக்குத் தெரியும். அப்படி இருக்கும் போது சூழ்நிலையால் உங்க கல்யாணம் நடந்துடுச்சு. ஆனா முகில் உன் மேல் வெறுப்பைக் காட்டி எங்கே தள்ளி நின்னுடுவாரோன்னு நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா?

உன் வாழ்க்கை எப்படி இருக்கப் போகுதோன்னு கவலையா இருந்தது. முகில் இவ்வளவு சீக்கிரம் மாறியதே எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு. இனி உன் வாழ்க்கை பத்தி கவலை இல்லை…” என்று திருப்தியுடன் சொன்ன தோழியை மனம் நெகிழ பார்த்தாள் உத்ரா.

“முகில் ரொம்ப நல்லவர் தான் புவி. என்ன என் விஷயத்தில் தான் கொஞ்சம் இடக்கு மடக்கா நடந்துகிட்டார். இப்போ தான் செய்ததுக்கு எல்லாம் மன்னிப்புக் கேட்டார். ஆனா என்னால் தான் உடனே மன்னிச்சுட்டேன்னு சொல்ல முடியலை…” என்றாள்.

“ஏன் உத்ரா?”

“ம்ப்ச்… சொல்லத் தெரியலை…” என்றாள் உத்ரா.

தோழியின் மனநிலை புவனாவிற்கும் ஓரளவு புரிந்தது.

“கவலையை விடு. நீங்க இரண்டு பேரும் சீக்கிரம் சந்தோஷமா வாழ்வீங்க…” என்றாள் புவனா.

“ம்ம்… சரி அதை விடு. உன் லவ் எந்த லெவலில் இருக்கு? உங்க கல்யாணம் எப்போ?” என்று கேட்டாள் உத்ரா.

“குரு அவர் வீட்டில் பேசிட்டார் உத்ரா. எங்க வீட்டிலும் நான் சொல்லிட்டேன். முதலில் கொஞ்சம் தயங்கினாங்க. ஆனா குருவை பற்றி விசாரித்து விட்டு நீங்களே முடிவு பண்ணி சொல்லுங்கன்னு சொல்லிட்டேன். இப்போ விசாரித்த பிறகு அவங்களுக்கும் திருப்தி. சோ, சீக்கிரமாகவே தேதி குறிப்பாங்கன்னு நினைக்கிறேன்…” என்று புவனா லேசான வெட்கத்துடன் சொல்ல,

“ஹேய், சூப்பர் புவி குட்டி. கங்கிராட்ஸ்…” என்று தோழியின் கையைப் பிடித்துக் குலுக்கி வாழ்த்தினாள்.

“என்ன, எதுக்கு இந்த வாழ்த்து?” என்று கேட்டுக் கொண்டே உத்ராவின் அருகில் வந்து அமர்ந்தான் முகில்வண்ணன்.

“புவனாவுக்கும், குருவுக்கும் மேரேஜ் ஃபிக்ஸ் ஆகப்போகுது முகில்…” என்று உத்ரா சொல்ல,

“ஓ, சூப்பர்! வாழ்த்துகள் புவனா…” என்றான்.

“தேங்க்ஸ் முகில்…” என்றாள் புவனா.

“ம்ம்… அப்புறம்?” என்ற முகில் உத்ராவை இன்னும் நெருங்கி அமர, ‘என்ன செய்றீங்க?’ என்பது போல் கண்களால் அதட்டினாள் உத்ரா.

அவர்களின் நாடகத்தை எதிரே இருந்து கண்டு கொண்ட புவனா நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

“ஆஹா! கொஞ்ச நேரம் கூட உங்க வொய்ப்பை விட்டு இருக்க மாட்டீங்களா முகில்?” என்று கேலியாகக் கேட்டாள் புவனா.

“இது என்ன புவனா அநியாயமா இருக்கு? அரைமணி நேரமா உங்ககிட்ட பேச என் வொய்பை விட்டுக் கொடுத்தேனா இல்லையா? இவ்வ்வ்வளவு நேரம் நான் விட்டுக் கொடுத்த பிறகும் நீங்க இப்படிப் சொல்லலாமா?” என்று நியாயம் கேட்டான் முகில்வண்ணன்.

“அம்மாடியோவ்! வெறும் அரைமணி நேரம்… அது என்னவோ ரொம்ப நேரம் போலச் சொல்றீங்க…” என்றாள் புவனா.

“இப்போ இன்னும் பத்து நிமிஷம் ஆகிடுச்சு புவனா…” என்று முகில் சொல்ல,

“அய்யோ! நான் எஸ்கேப் ஆகுறேன் உத்ரா. இனி முகில் ஒவ்வொரு செகண்டுக்கும் கணக்கு எடுப்பார் போல. உங்க வொய்பை நீங்களே வச்சுக்கோங்க முகில்…” என்ற புவனா சிரித்துக்கொண்டே இடத்தைக் காலி செய்தாள்.

“இப்ப எதுக்கு முகில் அவளை விரட்டி விட்டீங்க?” என்று உத்ரா கேட்க,

“நான் விரட்டினேனா? அவங்களா தானே எழுந்து போனாங்க…” என்று முகில் அப்புராணி போல் முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல, அவனை முறைத்தாள்.

“எப்பப் பார்த்தாலும் என்னை முறைக்கிற இந்தக் கண்ணை அப்படியே…” என்று அவன் இழுக்க, அவளின் முறைப்புக் கூடியது.

“காதல் பார்வை பார்க்க வைக்கணும்னு சொல்ல வந்தேன் மா…” என்று கண்களைச் சிமிட்டி சொன்னான்.

“உங்களை…” என்று உத்ரா அவனின் தோளில் அடித்தாள்.

அவளின் கையை மென்மையாகப் பிடித்துக் கொண்டவன், “உன்னை வீட்டில் வைத்து தான் என்னை அடிக்கச் சொல்லியிருக்கேன். இது ஆபிஸ் மா. என் பிரஸ்டீஜ் என்ன ஆகுறது?” என்று கேட்டான்.

“ம்ம் பிரஸ்டீஸ்ல ரைஸ் வைத்து கொடுங்க…” என்று கேலியாகச் சொன்ன உத்ரா தன் கையை அவனிடமிருந்து பிடிங்கி கொண்டாள்.

“ரைஸ் தானே வச்சுட்டால் போச்சு…” என்று சாதாரணமாகச் சொன்னவனின் முகத்தை ஆழ்ந்து பார்த்தாள் உத்ரா.

“உன்னைக் காதலிக்கணும் எப்படின்னு கேட்டால், அதை நானாகத் தான் உணர்ந்து கொள்ளணும்னு சொல்லிட்ட. சரி காதலிக்கலாம்னு பார்த்தால் நமக்கான நேரமே இல்லை. பகலில் ஆபிஸ் வேலை இழுக்குது.

லண்ட்ச் டைம்ல உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு பார்த்தால் அந்த நேரத்தை புவனா எடுத்துக்கிட்டாங்க.

ராத்திரி காதல் பண்ணனும்னு சொன்னால் அதன் அர்த்தமே மாறிடாது?” என்று அவன் குறும்பாகக் கேட்க,

“வர வர ரொம்பப் பேசக் கத்துக்கிட்டீங்க…” என்றாள் உத்ரா.

“இப்பத்தான் உன்கிட்ட சரியா பேச கத்துக்கிட்டேன்னு சொல்லலாம்…” என்றான் முகில்வண்ணன்.


நாட்கள் அதன் வேகத்தில் ஓட முகில்வண்ணனின் நடவடிக்கையில் பெரிய மாற்றத்தைக் கண்டாள் உத்ரா.

இருவருக்கும் இடையே கேலிகளும், கிண்டல் பேச்சுக்களும் சர்வசாதாரணமாக உறவாடின.

தேவையில்லாத கோபமோ, எரிச்சலோ எதுவுமே அதன் பிறகு முகிலிடமிருந்து வெளிப்படவில்லை.

புரிந்து நடந்து கொள்கிறேன் என்று வார்த்தையாகச் சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதைச் செயலிலும் காட்டினான்.

உத்ராவிற்குத் தான் முன்பு பார்த்த முகிலை மீண்டும் பார்ப்பது போல் இருந்தது.

அப்போதாவது தொலைவிலிருந்து தான் அவனைப் பின் தொடர்ந்து அவனின் குணநலன்களில் கவரப்பட்டாள்.

இப்போதோ நேரடியாக அவனின் அருகாமையில் அவன் உணர்த்தும் அன்பு அவளின் காயப்பட்ட மனதிற்கு ஒத்தடம் கொடுப்பது போல் இருந்தது.

அவனை மனதில் சுமந்தவள் என்பதால் இன்னும் அவனின் அருகாமையில் அவளின் மனம் அவன் பக்கம் சாய்ந்தது.

எப்படிக் காதலிக்க வேண்டும்? என்று கேட்டவன் இப்போது காதல் என்றால் என்ன என்று உணர்ந்து கொண்டவன் போல் நடக்க ஆரம்பித்திருந்தான்.

அவளின் உடலை தீண்ட முயற்சி செய்யாமல் அவளின் மனதை தீண்டும் வேலையில் முழுமூச்சாக இறங்கியிருந்தான்.

வார நாட்களில் வேலை வேலை என்று இருப்பவர்கள், வார விடுமுறையைத் தங்கள் குடும்பத்துடன் நேரம் செலவளிக்கும் நாட்களாக மாற்றிக் கொண்டார்கள்.

அன்றும் ஒரு சனிக்கிழமையாக இருக்க இருவரும் முகிலின் வீட்டிற்குச் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தனர்.

அஜந்தாவையும் அங்கே வரச் சொல்லியிருந்தனர்.

“கிளம்பிட்டியா உதி?” என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் வந்தான் முகில்வண்ணன்.

இப்போது எல்லாம் ‘உதி’ என்று தான் அழைக்க ஆரம்பித்திருந்தான்.

“இன்னும் ஒரு பைவ் மினிட்ஸ் முகில்…” என்ற உத்ரா தலைவாரிக் கொண்டிருந்தாள்.

தலைமுடியை வாரி பின்ன ஆரம்பிக்கும் போது சிறு முடிக்கற்றை ஒன்று மட்டும் பின்னலில் இருந்தது தவறி மாறி பின்னல் விழ, அவளையே கட்டிலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த முகில் எழுந்து அவள் அருகில் வந்தான்.

“இங்கே சின்ன முடி மிஸ் ஆகிடுச்சு உதி…” என்று சொல்லிக் கொண்டே அவள் பின்னிக் கொண்டிருந்த கையின் மீது தன் கையை வைத்து நிறுத்தினான்.

“எங்கே?” என்று கேட்டுக் கொண்டே இன்னொரு கையால் முடிக்கற்றையைத் துழாவினாள்.

“இதோ இங்கே. இரு நானே எடுத்துத் தர்றேன்…” என்றவன் அவளின் விரல் பிடித்து முடியின் மீது வைத்தான்.

“ஓ, இதுவா? இதைத் திரும்பப் பின்னலை பிரித்துட்டு தான் போட முடியும்…” என்றவள் பின்னலை எடுத்துவிட்டு கண்ணாடியின் முன் நின்று பார்த்து மீண்டும் வாரி பின்ன ஆரம்பித்தாள்.

அதன் பிறகும் அங்கிருந்து விலகி செல்லாமல் அவளின் அருகிலேயே நின்றிருந்தான் முகில்வண்ணன்.

கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே தலையை வார ஆரம்பித்தவள், கண்ணாடியில் விழுந்த கணவனின் பிம்பத்தைக் கண்டதும் தலை வாருவதை நிறுத்தி விட்டு அவனைக் கேள்வியுடன் பார்த்தாள்.

கண்ணாடியில் தெரிந்த அவனின் கண்களில் தெரிந்த ஒளிர்வு அவளை வியக்க வைத்தது.

“என்ன முகில், ஏன் அப்படிப் பார்க்கிறீங்க?” என்று கேட்ட படி அவனின் புறம் திரும்பினாள்.

அவளின் தோளில் கையைப் போட்டு மீண்டும் கண்ணாடியின் பக்கம் திருப்பி நிற்க வைத்தவன், அவளின் அருகில் ஒட்டி நின்று “கண்ணாடியைப் பாரேன். நம்ம ஜோடிப் பொருத்தம் அப்படியே… என்ன சொல்றது? மேட் பார் ஈச் அதர் போல இருக்கு. இதை எப்படி இத்தனை நாள் கவனிக்காம போனேன்…” என்றவன் தானே தங்கள் ஜோடிப் பொருத்தத்தை ரசித்துப் பார்த்தான்.

அவளும் பார்த்தாள் தான். ஆனால் அதையும் விட அவனின் அருகாமையும், அவன் ஸ்பரிசம் ஏற்படுத்திய குறுகுறுப்பும் தான் அந்த நொடி அவளைத் தாக்கியது.

அந்தத் தாக்கம் அவளின் உணர்வுகளில் ஓடி ஒளிர்வூட்ட, அவ்வொளி அவளின் கண்களில் பிரதிபலித்தது.

அதனைப் பிம்பத்தில் கண்டு விட்டவன் “ஹேய் உதி…” என்று அழைத்து வேகமாகத் தன் பக்கம் அவளைத் திருப்பி அவளின் கண்களை ஆர்வமாகப் பார்த்தான்.

சட்டென்று தன் பார்வையை மாற்றிக் கொண்டாள் உத்ரா.

“இப்போ உன் கண்ணில் நான் ஒரு வித்தியாசத்தைப் பார்த்தேன். ஏன் உடனே மாத்தின?” என்று கேட்டான்.

“வித்தியாசமா? அப்படி எதுவும் இல்லையே…” என்றவள் மீண்டும் கண்ணாடியின் பக்கம் முகத்தைத் திருப்ப நினைத்தாள்.

ஆனால் அவளைத் திரும்ப விடாமல் அவளின் இரண்டு தோளிலும் கைவைத்து தடுத்து நிறுத்தினான்.

“இல்லை நான் பார்த்தேன். ம்ம்… எனக்குப் புரிந்துவிட்டது. என்னைக் காதல் பார்வை பார்த்த. என்ன கரெக்ட்டா?” என்று கேட்டான்.

“அப்படியா?” என்று உத்ரா சாதாரணம் போலப் பேச முயல,

“இன்னும் நான் உன் கண்ணுக்கு பழைய அரக்கனாத்தான் தெரியுறேனா உத்ரா?” என்று தீர்க்கமாகக் கேட்டான்.

“ம்ப்ச்… என்ன பேச்சு இது? நான் என்னைக்கு உங்களை அரக்கனா நினைச்சேன்?” என்று கேட்டாள்.

“அப்புறம் ஏன் உன்னோட பார்வையை மாத்தின?” என்று கேட்டவன் குரலில் வருத்தம் இருந்தது.

அவளோ பதில் சொல்லாமல் நிற்க, “புரியுது. என்னதான் நான் மாற முயற்சி செய்தாலும், இன்னும் நான் உன் மனசை வலிக்க வைத்த நிகழ்வுகள் எல்லாம் உன்னை விட்டுப் போகலை. அதுதான் காரணம்…” என்றவன், அவளை விட்டு விலகி நடந்தான்.

“முகில்…” என்றழைத்து அவனின் கையைப் பிடித்து நிறுத்தியவள், “நீங்க ஒன்னும் வில்லன் எல்லாம் இல்லை. என்னமோ வில்லனா இருந்து திருந்திய ரேஞ்சுக்குப் பேசிட்டு இருக்கீங்க. என் முகில் ரொம்ப ரொம்ப நல்லவர்.

என்ன என் விஷயத்தில் மட்டும் அப்பப்போ அந்நியனா மாறிடுவார். இப்போ அந்த அந்நியனும் அந்நியனாகி போய் முழு ரெமோவா மாறிட்டு வர்றார்…” என்று குறும்பாகச் சொல்லி சிரித்தாள் உத்ரா.

அவளின் பேச்சில் அவனின் மனம் மகிழ்ந்தது என்றால், அவளின் சிரிப்பில் அவள் உதடுகள் மின்ன, நீண்ட நாட்களுக்குப் பிறகு முகிலின் மனம் அவளின் இதழை நோக்கி கவர்ந்திழுத்தது.

“ரெமோ என்ன செய்வான் தெரியுமா?” அவளின் இதழ்களை மையலுடன் பார்த்துக் கொண்டே கேட்டான்.

அவனின் பார்வை புரிய, உத்ராவிற்கு வெட்கம் வந்தது.

“என்ன செய்வானாம்?” என்று மெல்லிய நாணத்துடன் கேட்டாள்.

“ம்ம்… அதுவா?” எனக் கேட்டவனுக்கு என்ன செய்வான் என்று செய்து காட்டிவிடும் வேகம் பிறந்தது.

ஆனால் அதே நேரம், தான் இன்னும் அவளைக் காதலிக்கிறோமா இல்லையா என்று தெரியாமல் அவளை நெருங்கினால் மீண்டும் அவளை உடல் ரீதியாக மட்டுமே அணுகுகிறான் என்று எண்ணி விடுவாளோ என நினைத்தவன், “ம்ம்ம்… இல்லை வேண்டாம்…” என்று பின்வாங்கினான்.

அவனின் தயக்கமும் புரிந்தது. அவனின் தடுமாற்றமும் புரிந்தது.

“முகில் அடிக்கடி அம்மாஞ்சியாவும் மாறி போய்டுறார்…” என்று சீண்டலுடன் சொன்னவள், அவனின் கையை அழுத்தமாகப் பிடித்துச் சுண்டி இழுத்தாள்.

அவன் இலகுவாக நின்றிருக்க, அவளின் பலமான இழுப்பிற்கு அவளை மோதி தான் நின்றான்.

உடல்கள் இரண்டும் உரசிக் கொள்ள “சில நேரம் செய்ய நினைத்ததைச் செய்திடணும். யோசிக்கக் கூடாது…” என்றவள் இமைகளை மூடி அவனின் ஆசையை நிறைவேற்ற இணங்கி நின்றாள்.

“நானா அம்மாஞ்சி? உனக்காகத் தான் பொறுமையா இருந்தேன். ஆனா நீ என்னை அம்மாஞ்சின்னு சொல்றீயா?” என்றவன், அவளின் அங்கங்களைத் தன் உணர்வில் உணர்ந்தவன் கைகள் எழுந்து அவளின் இடுப்பை சுற்றி வளைத்து இன்னும் நெருக்கமாக்கி கொண்டன.

அவள் உடுத்தியிருந்த சுடிதாரின் மேல் அவளின் இடையின் மென்மையை உணர முடியாமல் தவித்தவன், அவளின் இதழ்களின் மென்மையை உணர அதை நோக்கி குனிந்தான்.

இமைகளை மூடி இருந்த உத்ரா அவன் கைகள் இடுப்பில் கொடுத்த அழுத்தத்தில் மோனநிலைக்குச் சென்று, எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தாள்.

அவளின் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காமல் தன் அழுத்தமான அதரங்களை அவளின் இதழ்களில் மென்மையாக உரச விட்டான்.

அவள் இன்னும் அழுத்தத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருக்க, மீண்டும் ஒரு மென்மையான உரசலுடன் தன் அதரங்களை விலக்கிக் கொண்டவன், அவளின் கழுத்தில் முகம் புதைத்தான்.

அவனின் சூடான மூச்சுக்காற்று அவளின் கழுத்தையும் அனலாக்கியது.

அதோடு அவனின் உடலில் மெல்லிய நடுக்கத்தை உணர்ந்து இமைகளைப் பிரித்துக் கணவனைப் பார்த்தாள்.

“முகில்?” என்று அவள் கேள்வியுடன் அழைக்க, அவனோ இன்னும் அழுத்தமாக அவளின் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.

அவளை அணைத்திருந்த அவனின் கைகள் இறுகின.

அதுவே அவன் தன் உணர்வுகளை அடக்கிக் கொள்ள முயற்சிக்கிறான் என்று உத்ராவிற்குப் புரிய, ஏன் என்ற கேள்வி தோன்றியது.

‘அவளே தானே ஒப்புக் கொடுத்து நிற்கிறாள். பின்னும் ஏன் அவன் தன்னை அடக்கிக் கொள்ள வேண்டும்?’ என்று நினைத்தவள், அவனின் பிடரியில் கை வைத்து அவனின் முகத்தை நிமிர்த்தி, “என்னாச்சு முகில்?” என்று கேட்டாள்.

“ஒன்னுமில்ல உதிமா…” என்றவன் மீண்டும் அவளின் கழுத்தில் முகத்தைப் புதைத்துக் கொள்ளப் போனான்.

ஆனால் அதற்கு விடாதவள், அவனின் கண்களைக் கூர்ந்து பார்த்தாள்.

“என்ன பிரச்சனை இப்போ? எதுக்குக் கண்ட்ரோல் பண்ணிக்க நினைக்கிறீங்க?” என்று நீ சொல்லியே ஆக வேண்டும் என்பது போல் கேட்டாள்.

“நான் இன்னும் உன்னைக் காதலிக்கிறேனா, இல்லையான்னே தெரியலை. ஆனா அதுக்குள்ள… இது…” என்றவன் பேச்சை அத்துடன் நிறுத்திக் கொள்ள, உத்ராவின் இதழ்கள் சிரிப்பில் மலர்ந்தன.

“நீங்க என்னைக் காதலிக்கத் தொடங்கிட்டீங்க முகில்…” என்று காதலுடன் சொன்னவளை நம்ப முடியாமல் பார்த்தான் முகில்வண்ணன்.