35 – மின்னல் பூவே

அத்தியாயம் – 35

மனதில் இருந்ததை எல்லாம் கொட்டிவிட்டதாலோ என்னவோ, மறுநாள் கண்விழிக்கும் போதே உத்ராவின் மனம் இலகுவாக இருப்பது போல் இருந்தது.

அருகில் இன்னும் உறங்கிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தாள்.

விடியற்காலையில் தான் நித்திரை தழுவியதால் முகில்வண்ணன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

அவனின் முகத்தையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிலநாட்களாக அவனிடம் மாற்றங்களை உணர்ந்தாலும் அவன் நேற்று தன்னை அணுகுவான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

எதிர்பாராத நேரம், அதுவும் சாலையில் வைத்து தன் பக்கத்தைச் சிறிது கூடக் கேட்காமல் அப்படிப் பேசிவிட்டு இரவிலேயே அவன் அருகில் வந்ததை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.

‘இவன் என் மனதை எப்போதுமே நினைக்கவே மாட்டானா?’ என்ற அவளின் ஆதங்கம் அவளை வெடித்துச் சிதற வைத்திருந்தது.

அவன் தன்னிடம் உணர்ந்து மன்னிப்புக் கேட்டதும் புரிந்தது தான்.

ஆனால் மன்னித்துவிட்டேன் என்று சம்பிரதாய வார்த்தை சொல்லி தன்னை மட்டுமில்லாமல் அவனையும் ஏமாற்ற விருப்பமில்லை.

விரும்பியவனே கணவனாக வந்தும் அந்தச் சந்தோஷத்தை உணர்ந்து அனுபவிக்க முடியாமல் போன தன் நிலையை நினைத்து அவளுக்கு மனம் வலித்தது.

அவன் தான் வலி தந்தவன் என்று அவனை வெறுத்து ஒதுக்கவும் முடியவில்லை.

மனதிற்குள்ளேயே நிறையப் போராடிவிட்டாள் என்பதால் இலகுவாக அவனைச் சட்டென்று ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

மனம் திறந்து பேசிய பிறகு அவளின் மனது ஓரளவு சமாதானம் அடைந்தது போல் இருந்தது.

இரவு அவள் அடித்துக் கொண்ட கன்னம் எரிய மெதுவாக அவனைத் தாண்டி எழுந்து சென்று கண்ணாடியில் முகம் பார்த்தாள்.

விரல் தடம் இன்னும் தெரிந்தது. அவன் தடவிவிட்ட மருந்து எல்லாம் எப்போதோ தலையணையைத் தஞ்சம் அடைந்திருந்தது.

‘இதோடு எப்படி அலுவலகம் செல்ல?’ என்ற யோசனையுடன் அவள் அப்படியே நின்றுவிட்டாள்.

“இனிமே உனக்கு அடிக்கணும்னா என்னை அடி. ஏற்கனவே உன் அடி மின்னல் போலத் தான் பளிச் பளிச்சுன்னு விழும். இப்போ அப்படி உன்னையே அடிச்சு, பார் இன்னும் கைதடம் இருக்கு. இந்தா இந்த மருந்தை போடு…” என்ற வண்ணம் அவளின் பின்னால் நின்றிருந்தான் முகில்வண்ணன்.

“மருந்து எல்லாம் வேண்டாம். எனக்கு வேலை இருக்கு…” என்று அவள் அங்கிருந்து நகரப்போக, அவளின் கையைப் பிடித்து நிறுத்தினான்.

“இன்னைக்கு ஆபிஸ் போக வேண்டாம். வீட்டில் இருந்தே வேலை பார்ப்போம். அதனால் மெதுவாகவே சமைக்கலாம்…” என்ற முகில், மருந்தை எடுத்து தானே அவளுக்குப் போட்டு விட வர, ‘வேண்டாம்’ என்பது போலப் பின்னால் நகர்ந்தாள்.

“நைட்டும் நான் தானே மருந்து போட்டேன். அப்போ ஏதாவது சில்மிஷம் செய்தேனா என்ன?” என்றவன் கேள்வியில் அவளின் பின்வாங்கல் நின்று போனது.

அதையே அவளின் சம்மதமாக எடுத்துக் கொண்டு மென்மையாக இரண்டு கன்னங்களிலும் மருந்தை தடவி விட்டான்.

அவன் மருந்து தடவுவதில் மும்முரமாக இருக்க, அவளின் பார்வை ஆராய்ச்சியாக அவனின் முகத்தை மேய்ந்தது.

அவனின் கண்களில் சிறிதும் அலைபாயுதல் இல்லை. காரியமே கண்ணாக இருந்தான்.

“உன் மேல கண்டிப்பா எனக்கு ஈர்ப்பு இருக்கு. இல்லைன்னு பொய் சொல்லி நல்லவனாகக் காட்டிக் கொள்ள எல்லாம் எனக்கு விருப்பம் இல்லை. ஆனா என் ஈர்ப்பு உன் மேல் காதலா மாறும் போது இவ்வளவு பக்கத்தில் நீ இருக்கும் போது சும்மா வேடிக்கை மட்டும் பார்த்துட்டு நிற்க மாட்டேன்…” என்று அவள் பார்வை புரிந்தது போல் பதில் சொன்னான்.

‘ஓஹோ! பெரிய ரோமியோன்னு நினைப்பு!’ என்று நக்கலாக அவனைப் பார்த்துவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

“ஹப்பா முகிலா! நீ ரொம்பவே போராடணும் போல இருக்கே?” என்று புலம்பிக் கொண்டான்.

‘பின்ன, கொஞ்சமா பேசணும். நீ செய்ததுக்கு எல்லாம் இப்போ அனுபவிடா ராஜா’ அவனின் மனமே கெக்கொலி கொட்டி சிரித்தது.

“இப்ப என்னவாம்? என் பொண்டாட்டிக்கிட்ட தானே போராட போறேன். போராடிட்டுப் போறேன்…” என்று நினைத்துக் கொண்டான்.

“நீங்க வேலைக்குப் போங்க முகில். நான் இன்னைக்கு லீவ் போட போறேன்…” குளியலறையில் இருந்து வெளியே வந்த உத்ரா சொல்ல,

“லீவா? எதுக்கு? கன்னம் ரொம்ப வலிக்குதா என்ன?” என்று கவலையுடன் கேட்டான்.

இத்தனை நாளும் அவளின் மனவலியை வெளியே காட்டாமல் இருந்தவள், இப்போது உடல் வலியை மறைகிறாளோ என்று தான் அவனுக்குத் தோன்றியது.

“இந்த வலி எல்லாம் எனக்கு ஒண்ணுமே இல்லை. இன்னைக்கு எந்த வேலையும் இல்லாம ரெஸ்ட் எடுக்கணும் போல இருக்கு…” என்றாள்.

“சரி, நீ லீவ் போட்டு ரெஸ்ட் எடு. நான் இன்னைக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கிறேன்…” என்றான்.

ஏனோ அவளைத் தனியாக விட்டுச் செல்ல அவனுக்கு மனமே இல்லை.

ஏற்கனவே அதிக மனவுளைச்சலில் வேறு இருந்து இருக்கிறாள் என்பதால் அவளைத் தனியாக விட யோசித்தான்.

அவனை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தவள், “புத்தி வேற எப்படியோ யோசிக்கிது போல? ஒன்னும் செய்துக்க மாட்டேன். வேலைக்குக் கிளம்புங்க…” என்று அசால்டாகச் சொல்லிவிட்டுச் சமையலறைக்குள் சென்றாள்.

‘இருந்தாலும் நீ இவ்வளவு புத்திசாலியா இருக்கக் கூடாது’ என்று நினைத்துக் கொண்டே அவனும் பின்னால் சென்றான்.

அவனும் அவளுடன் சமையலில் உதவி செய்ய வர, “நானே பார்த்துக்கிறேன் முகில். நீங்க போங்க…” என்றாள்.

“என்ன நீ என்னை விரட்டுவதிலேயே குறியா இருக்க? நானும் உன் கூடத் தான் வேலை பார்க்க போறேன். ஆபிஸ் வேலையும் வீட்டில் இருந்து தான் பார்க்க போறேன்…” என்றவன் அவளை இடித்துக் கொண்டு நின்று அவள் அடுப்பில் வைத்திருந்த பால் பொங்கி வந்திருக்க அதை இறக்கி வைக்கக் கையை நீட்டினான்.

அவன் நீட்டிய வேகத்தில் அவனின் கை அவளின் இடுப்பில் உராய்ந்தது.

அவனுக்கு முன் அடுப்பை அணைத்தவள் முகமோ தீ ஜூவாலை போல் ஜொலித்தது.

“ஸாரி, ஸாரி உத்ரா… தெரியாம தான் கைப்பட்டுச்சு…” என்று வேகமாக அவளை விட்டுப் பின் வாங்கினான்.

எங்கே இரவு போல் அவன் தொட்டதற்காகப் பொங்கி எழுந்துவிடுவாளோ என்ற எண்ணம் அவனைப் பின் வாங்க வைத்தது.

“நீங்க ரொம்பப் பயந்தவர் தான். நம்பிட்டேன்…” அவனின் செய்கையில் நொடித்துக் கொண்டவள் அடுப்பின் பக்கம் திரும்பிக் கொண்டாள்.

ஆனால் அவளின் உதடுகளோ மெல்லிய புன்னகையைக் கசிய விட்டன.

என்ன திட்டப் போகிறாளோ என்று அவன் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவளின் புன்னகை அவனை நிம்மதி மூச்சு விட வைத்தது.

“ஹப்பா! ஆனாலும் என்னை நீ ரொம்பத் தான் பயமுறுத்துற…” என்று சப்தமாகச் சொன்னவன்,

‘ஹ்ம்ம்… உன் ஹிப் செம ஷாப்ட்…’ என்று மெல்லிய குரலில் முணுமுணுத்துக் கொண்டான்.

அவன் முணுமுணுத்ததும் அவள் காதில் விழத்தான் செய்தது. ஆனால் கண்டுகொள்ளாதது போலத் திரும்பிக் கொண்டாள்.

அன்று முழுவதும் அவள் அருகிலேயே தான் ஒட்டிக் கொண்டு திரிந்தான்.

அவள் சமையலறையில் இருந்தால் அவனும் உதவி செய்கிறேன் என்று வந்து நின்று கொண்டான்.

அவள் படுக்கையறையில் படுத்திருந்தால் அவனும் அங்கே அருகில் அமர்ந்து அலுவலக வேலையைத் தொடர்ந்தான்.

கன்னத்தில் மருந்து போய்விட்டால் மீண்டும் மீண்டும் போட்டுவிட்டான்.

“வலியால் சிவந்ததை விட நீங்க மருந்தை இப்படித் தேய் தேய்ன்னு தேய்க்கிறதில் சிவந்து போகப் போகுது…” என்று அவனைத் தடுத்தும் பார்த்தாள்.

“அப்படியாவது என்னால் உன் கன்னம் சிவக்கட்டும்…” என்று குறும்புடன் சொல்ல, போலியாக அவனை முறைத்து விட்டு போனாள்.

அன்று இரவு உத்ரா உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது, முகில் அப்போது தான் ஒரு அலுவலக மீட்டிங்கை முடித்துவிட்டு கணினியை அமர்த்தி வைத்து விட்டு நிமிர, மேஜையின் மீதிருந்த அவளின் கைபேசி அழைப்பு விடுத்தது.

யார் என்று பார்க்க, வீரபத்ரன் தான் மனைவிக்கும், மகளுக்கும் வீடியோ கான்பிரன்ஸ் கால் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்.

கைபேசியை எடுத்துக் கொண்டு சமையலறைக்கு வந்தவன், “உத்ரா, இந்தா மாமா பேசுறார்…” என்று நீட்ட, அவளோ சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டிருந்த கையுடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“இப்படி என் முன்னாடி ஆன் செய்து வைங்க முகில்…” என்றாள்.

அவன் ஆன் செய்த உடனே வீரபத்ரனும், அஜந்தாவும் திரையில் தெரிந்தனர்.

முகிலின் முகம் திரையில் தெரிய ஆரம்பிக்கவும், “எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை?” என்று விசாரிக்க ஆரம்பித்தார் வீரபத்ரன்.

“நல்லா இருக்கேன் மாமா? நீங்க எப்படி இருக்கீங்க?” என்று இவனும் பதிலுக்கு விசாரிக்க, சிறிது நேரம் அவர்களின் உரையாடலில் சென்றது.

“உத்ரா சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டு இருக்காள். இருங்க தர்றேன்…” என்றவன், போனை அவள் முன் சமையல் மேடையில் வைக்கப் போனான்.

ஆனால் அதற்கு முன் அவளின் கன்னம் ஞாபகம் வர, வேகமாக அவளின் கன்னங்களை ஆராய்ந்தான்.

விரல் தடம் மறைந்து லேசாகச் சிவந்தது மட்டும் தெரிந்தது.

மேடையில் கைபேசியை வைக்கும் யோசனையைக் கை விட்டவன் பின்னால் நின்று அவள் முகம் தெரியும் வண்ணம் முன்னால் கையை நீட்டி போனை பிடித்துக் கொண்டு “பேசு உத்ரா…” என்றான்.

அவன் அப்படி நின்று கொடுப்பான் என்று எதிர்பாராத உத்ரா, “என்ன பண்றீங்க?” என்று மெதுவான குரலில் கடுப்பாகக் கேட்டாள்.

“நான் பிடிச்சுக்கிறேன். இப்படியே நின்னு பேசுன்னு சொல்றேன். மாமா லைனில் இருக்கார் பார்…” என்றான்.

அவள் மேலும் ஏதோ சொல்ல வர, அதற்குள் மாப்பிள்ளை, பெண்ணின் நெருக்கத்தைப் பார்த்த மகிழ்வுடன் பேச ஆரம்பித்தார் வீரபத்ரன்.

“எப்படி இருக்க உத்ராமா?” என்ற தந்தையின் கேள்வியில் அவரின் புறம் கவனம் திரும்ப, பெற்றோரிடம் பேச ஆரம்பித்தாள்.

அவள் பேசி முடிக்கும் வரை கைபேசியைப் பிடித்துக் கொண்டு நின்றான்.

“இன்னைக்கு நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன் மாப்பிள்ளை. நல்லாருடா உத்ரா…” என்று நெகிழ்ச்சியுடன் அழைப்பைத் துண்டித்தார்.

இப்போ எதுக்கு அப்பா இவ்வளவு எமோசனல் ஆகுறார்? என்ற எண்ணத்துடன் கணவனைப் பார்த்தாள்.

கைபேசியை அணைத்துப் பாக்கெட்டில் வைத்தவன், “உன் கன்னம் சிவந்து இருப்பதைப் பார்த்து மாமா கேள்வி கேட்டால், என்ன பதில் சொல்ல போறீயோன்னு பயந்து நான் போனை பிடிச்சுட்டு நின்னேன். ஆனா நான் உன் பக்கத்தில் நின்னதையும், உன் கன்னம் சிவந்து இருப்பதையும் மாமா வேற மாதிரி புரிந்து கொண்டார் போல…” என்று சொல்லி சிரித்தவனைப் பார்த்து முறைத்தாள்.

“ஹேய், முறைக்காதே மா. நான் ஒன்னு நினைச்சேன். அதுக்கு அவங்க வேற ஒன்னு நினைச்சா நான் என்ன செய்ய முடியும் சொல்லு?” என்று அவன் பாவம் போலக் கேட்டான்.

“உங்களை எல்லாம் நம்பவே முடியாது. நீங்க வேணும்னே செய்தாலும் செய்திருப்பீங்க…” என்றாள்.

வெளியே முறைத்தாலும் உள்ளுக்குள் உத்ராவின் மனமும் நெகிழ்ந்து தான் போயிருந்தது.

எப்போதும் தன்னைத் தவறாகவே நினைத்துக் கொண்டிருக்கும் முகிலாக இல்லாமல், இன்று முழுவதும் அவள் மனம் விரும்பிய பழைய முகிலை காண்பது போல் இருந்தது.

மன்னிக்க முடியாது என்று வீம்பாகக் காட்டிக் கொண்டாலும் தன் தவறுக்கு உண்மையாக வருந்தி அவன் மன்னிப்புக் கேட்ட பிறகு பழைய விஷயங்களையே பிடித்துத் தொங்கவும் அவளுக்கு விருப்பம் இல்லை.

அதனால் அவனுடன் இலகுவாக உரையாடுவதில் எந்த வித்தியாசமும் காட்டவில்லை.

முகில்வண்ணனும் இத்தனை நாள் அவளைத் தான் தவறாகப் புரிந்து கொண்டிருந்தது எல்லாம் போதும். இனி தவறுதலாகக் கூட அவளைத் தவறாக நினைக்கக் கூடாது என்று மனதிற்குள்ளேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டவன் போல் நடந்து கொண்டான்.

இரவு உணவிற்குப் பின் வேலையெல்லாம் முடிந்ததும் படுக்கைக்கு வந்தனர்.

உத்ரா முதலில் படுக்கத் தயாராக, முகில் படுக்கையில் ஏறி அமர்ந்தான்.

“உத்ரா, நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும்…” என்றான்.

“என்ன முகில்?” என்று அவள் படுத்துக் கொண்டே கேட்டாள்.

“லவ் எப்படிப் பண்ணனும்?” என்றவன் கேள்வியில்,

“வாட்!” என்று அதிர்ந்து எழுந்து அமர்ந்தாள்.

“என்ன கேட்டீங்க?” தான் சரியாகத் தான் கேட்டோமா என்பது போல் அவனைப் பார்த்தாள்.

“எப்படி லவ் பண்ணனும்னு கேட்டேன்…” என்றவன் அவளின் பார்வையை எதிர்கொண்டான்.

“எ…என்ன கேள்வி இது?” அவள் குழப்பத்துடன் கேட்க,

அவள் புறம் நன்றாகத் திரும்பி அமர்ந்தவன், “நீ தானே என்னை லவ் பண்ணிருக்க. உனக்கு லவ்னா என்னன்னு தெரியும் தானே? அப்போ எனக்கு லவ் பண்ண சொல்லிக் கொடு. நானும் உன்னை லவ் பண்ணனும். நிறைய… நிறைய…!

நான் உன்னை வெறுத்த போதும் உன்னால் என்னை வெறுக்க முடியலையே… அது போல நானும் உன்னை லவ் பண்ணனும். உன் மனசை நான் உணரவே இல்லைன்னு சொன்னயே. இப்போ நான் உன் மனசை உணர ஆசைபடுறேன். எனக்கு லவ்னா என்னன்னு சொல்லிக் கொடு…” என்றான்.

“உப்ப்…” என்று பெருமூச்சு விட்ட உத்ரா படுக்கையில் தளர்ந்து அமர்ந்தாள்.

“என்ன கேட்குறீங்கன்னு புரிந்து தான் கேட்குறீங்களா முகில்?”

“நல்லாவே புரிந்து தான் பேசுறேன். எனக்கு உன்னை லவ் பண்ணனும். அதுவும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம். இதுவரை நீ மட்டும் தனியே காதலில் தவிச்சது எல்லாம் போதும். எனக்கும் காதல் தவிப்புன்னா என்னன்னு தெரியணும். லவ் பண்ண சொல்லிக் கொடு…” என்றான்.

சந்தைக்குப் போகணும். காசு கொடு என்று கேட்பது போல அவன் லவ் பண்ண சொல்லிக் கொடு என்று திரும்பத் திரும்பக் கேட்க கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவள், தலையில் கைவைத்தாள்.

“நான் இப்ப என்ன கேட்டுட்டேன்னு நீ இப்போ தலையில் கை வைக்கிற?” என்று கேட்டான்.

“பின்ன? அது என்ன ஒரு வித்தையா சொல்லிக் கொடுக்க?” என்று கேட்டாள்.

“அப்போ சொல்லிக் கொடுக்க மாட்டியா?” என்று கேட்டான்.

“நான் ஏன் சொல்லிக் கொடுக்கணும்? ஏன், உங்களுக்கே தெரியாதா என்ன?” என்றவள் ஓரப்பார்வையாக அவனைப் பார்த்தாள்.

“எனக்குத் தெரியுமா? என்ன சொல்ற நீ? எனக்கெல்லாம் தெரியாது. எனக்கே தெரிஞ்சா உன்கிட்ட கேட்டுட்டு இருந்திருக்க மாட்டேன். இந்நேரம் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சுருப்பேன்…” என்றான்.

அடுத்து சில நொடிகள் மௌனமாக இருந்த உத்ரா, “கமலியைக் கல்யாணம் பண்ணிக்க நீங்க எவ்வளவு ஆர்வமா இருந்தீங்கன்னு எனக்கே தெரியும் முகில்…” என்று அழுத்தமாகச் சொன்னவள் அவனை நேர்ப்பார்வையாகப் பார்த்தாள்.

அவளின் அந்தப் பேச்சில் சட்டென்று முகிலின் முகம் கோபத்தால் சிவந்தது. ஆனாலும் வார்த்தையை விட்டுவிடக் கூடாது என்று பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டிருந்தவனை அலட்டிக்கொள்ளாமல் பார்த்தாள்.

“அந்தக் கமலினியைப் பற்றிய பேச்சு இதுவே நமக்கிடையே கடைசி முறையா இருக்கட்டும் உத்ரா…” என்று அழுத்தமாகச் சொன்னவன்,

“அவள் என்னோட அம்மா, அப்பா எனக்காகப் பார்த்த பொண்ணு என்ற முறையில் ஒரு ஆர்வம். அவ்வளவு தான். ஒரு கல்யாணம் நிச்சயம் ஆன ஆணின் எதிர்பார்ப்பு எனக்கும் இருந்தது. ஒரு ஆண்மகனுக்கு அது கூட இருக்காதுன்னு சொல்ல முடியாது இல்லையா உத்ரா?

வருக்கால மனைவி என்ற நிலையில் ஒரு பொண்ணைக் காட்டும் போது அந்த எதிர்பார்ப்பு வருவது நியாயம் தானே? ஆனா ஒன்னு மட்டும் என்னால் நிச்சயமா சொல்ல முடியும்.

அவள் ஓடிப் போனப்ப, என்னை விட்டுப் போய்ட்டாளே என்ற வருத்தத்தை விட, என்னையும், என் குடும்பத்தையும் இப்படி அவமானப்படுத்திட்டு போயிட்டாளே என்ற கோபம் தான் எனக்கு அதிகமா வந்தது.

அவள் எப்படி என்னை விட்டுட்டுப் போகலாம்? வேற ஒருத்தனை எப்படிக் காதலிக்கலாம்? என்ற உரிமையுணர்வு எதுவுமே வரலை.

எப்ப அவள் மண்டபத்தை விட்டுப் போனாளோ அப்பவே அவளுக்கும், எனக்கும் எதுவுமே இல்லை…” என்றான்.

உத்ராவின் முகத்தில் ஒரு திருப்தியான புன்னகை உதயமானது.

அவள் மனதை உறுத்திய விஷயமது. என்னதான் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முயன்றாலும் அவனை விரும்பிய மனது சமாதானம் ஆக மறுத்தது.

இப்போதைய அவனின் பதிலில் மனதில் ஓர் இதம் உண்டாக உதடுகளில் புன்னகை நெளிந்தது.

அந்தப் புன்னகையுடனே அவனுக்குப் பதில் சொன்னாள்.

“சரி, அதை எல்லாம் விடுங்க முகில். என்னை லவ் பண்ண சொல்லிக் கொடுக்கச் சொன்னீங்களே… ஆனா இப்போ நீங்க பேசின வார்த்தைகளிலேயே உங்களுக்கான பதில் இருக்கு முகில்…” என்றாள்.

“என்ன சொன்னேன்?” என்றவன் தன் பேச்சை மனதில் ஓட்டிப் பார்த்தும் அவனுக்கு ஒன்றும் புலப்படவில்லை.

“காதல் யாரும் சொல்லிக் கொடுப்பதால் வருவது இல்லை முகில். அதை எல்லாம் நாமே உணரனும். அவங்க தான் நம்மளோட வாழ்க்கைன்னு தோணனும். அவங்களோட பிரிவு நமக்கு வலியைக் கொடுக்கணும்…”

“விட்டொழிந்தது என்று நினைக்க வைப்பதல்ல காதல்!

விட்டுப்பிரிந்தாலும் உணர்வுகளில் உறைந்து கிடப்பது தான் காதல்!”

என்று ஆத்மார்த்தமாகச் சொன்னாள் உத்ரா.