33 – மின்னல் பூவே

அத்தியாயம் – 33

“ஸாரி உத்ரா…” என்றான் முகில்வண்ணன்.

உத்ராவோ இறுகிப் போய் அமர்ந்திருந்தாள்.

“கொட்டிய வார்த்தைகளை எப்போதுமே அள்ளிவிட முடியாது முகில்…” என்றாள் அழுத்தமாக.

முகில் அவளுக்குப் பதில் சொல்ல முடியாமல் மௌனமானான்.

அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டியிருக்கக் கூடாது என்ற ஞானம் இப்போது வந்தது.

அதுவும் ஒரு சின்னக் குழந்தையை ஒரு காம அரக்கனிடம் இருந்து காப்பாற்றியவளைத் தான் பேசியது பெரும் தவறு என்று புரிந்தது.

அவள் சோஃபாவில் இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவள் அருகில் சென்று அமர்ந்தான்.

அவள் மடியில் வைத்திருந்த அவளின் கையை எடுத்து தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டவன், “எனக்கு ஏன் அந்த நேரம் அப்படிக் கோபம் வந்ததுன்னு தெரியலை உத்ரா. நான் உன்னைப் பேசியது ரொம்பத் தப்பு. இப்போ புரியுது. அப்போ புரியலை. அவசரப்பட்டு வார்த்தையை விட்டுட்டேன். ஸாரி…” என்றான் உண்மையாகவே வருந்தி.

‘சரி, பரவாயில்லை’ என்று ஒரு பேச்சுக்காகக் கூட உத்ராவால் சொல்ல முடியவில்லை. அவளுக்கு ஆயாசமாக இருந்தது.

‘இவன் எப்போது என்னைப் புரிந்து கொள்வான்?’ என்று தான் தோன்றியது.

தன் கையை வெடுக்கென்று பிடிங்கிக் கொண்டு அவளால் அந்த இடத்தை விட்டுச் செல்ல முடியும். ஆனால் அதை அவளால் செயல்படுத்த முடியவில்லை என்பது தான் அவளின் பலவீனமாகிப் போனது.

ஆம், அவன் தான் அவளின் பலவீனம்!

அது தான் அவளை மேலும் மேலும் இறுக வைத்துக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.

அவள் பதில் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருக்க, அவளின் கையை எடுத்து தன் கன்னத்தில் அழுத்தி வைத்துக் கொண்டான்.

“என்னை அடிக்கக் கூடச் செய் உத்ரா. இப்படி இறுகிப் போய் இருக்காதே…” என்றான்.

“ம்ப்ச்… விடுங்க முகில்…” தன் கையை மெதுவாக விடுவித்துக் கொண்டவள் அமைதியாகச் சில நொடிகள் கண்மூடி அமர்ந்தாள்.

அவள் தன் உணர்வுகளை அடக்கி கொள்ளப் போராடுகிறாள் என்று புரிந்தது.

முகிலுக்குத் தன் மீதே கோபமாக வந்தது.

உத்ரா சண்டைக்காரியாக இருக்கலாம். ஆனால் காரணமின்றிச் சண்டைப் போட்டதே இல்லை.

கல்லூரியில் கூடத் தோழிக்காகக் குருவிடம் சண்டைப் போட்டாள். வகுப்பறையில் தவறாகப் பேசிய மாணவனிடம் சண்டைப் போட்டாள். இப்போது ஒரு குழந்தைக்காகச் சண்டைப் போட்டாள்.

இது தவிர அவள் அனாவசியமாக யாரிடமும் சண்டைக்கோ, வம்பு தும்பிற்கோ போனதே இல்லையே.

இது ஏன் இத்தனை நாளும் எனக்குத் தோன்றாமல் போனது? நியாயமான காரணங்களுக்காகத் தானே அவள் சண்டைப் போட்டாள்.

நியாயமற்றது அவள் எதுவும் செய்திருந்தால் தான் அவளைக் குறை சொல்வதில் நியாயம் இருந்திருக்கும்.

ஆனால் எந்த நியாயமும் இல்லாமல் அவளை ஏன் குறை சொன்னேன்? என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.

அவன் மனதை அலசி ஆராய்ந்ததில் அமைதியான பெண் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்று அவன் ஆசைப்பட்டது தான் காரணம் என்று புரிந்தது.

அமைதியான பெண் என்றுதான் அந்தக் கமலினியைத் தேடி தேடி தன் பெற்றோர் கண்டறிந்தார்கள். ஆனால் அவள் என்ன செய்துவைத்து விட்டுப் போனாள்?

அவனுக்கும், அவனின் குடும்பத்திற்கும் அவமானத்தைத் தானே தேடிக் கொடுத்து விட்டுப் போனாள்.

அது மட்டுமில்லாமல் அவள் அன்று கோவிலில் எப்படிப் பேசினாள். தான், தனது, தன் சுயநலம் என்று மட்டுமே யோசித்துச் செயல்படும் அவளைப் போல் பெண்ணொருத்தி அவனின் மனைவியாக வந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பானா? என்று நினைத்துப் பார்த்தான்.

‘இல்லை…’ என்ற பதிலைத்தான் அவனின் மனது முரசு கொட்டி அறிவித்தது.

உத்ராவோ தான், தனது, தன்னலம் என்று யோசித்ததாகக் கூட அவனுக்குத் தெரியவில்லை.

யாருக்கும் உதவி என்றால் செய்யத் தயாராக நிற்பதையும் கல்லூரியில் கண்டிருக்கிறான்.

ஏன் அவளின் காதல் விஷயத்திலேயே அவள் தன் காதல் தான் ஜெயிக்க வேண்டும் என்று அவனை வற்புறுத்தவே இல்லையே.

அவனின் நிராகரிப்பையும் ஏற்றுக் கொண்டு அமைதியாகத் தானே விலகிப் போனாள்.

சண்டைக்காரியாக, திமிர்ப்பிடித்தவளாக, அடாவடி செய்பவளாக இருந்தால் என் காதலையும் ஏற்றுக்கொள் என்றும் அவள் சண்டைப் பிடித்திருக்கலாமே?

ஆனால் அவள் அப்படி எந்த நேரத்திலும் அவனை நிர்பந்திக்கவே இல்லை.

‘அப்படிப்பட்டவளை போய்ச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் போனேனே’ என்று இப்போது வருந்தினான்.

அவன் அவளைத் தொந்தரவு செய்யாமல் யோசித்துக் கொண்டிருக்கும் போதே உத்ரா எழுந்து சமையலறைக்குள் சென்றாள்.

அவள் பின்னால் சென்றவன் என்ன செய்கிறாள் என்று பார்க்க இரவு உணவிற்குத் தயார் செய்ய ஆரம்பித்துவிட்டாள் என்று புரிந்தது.

“இன்னைக்குச் சமைக்க வேண்டாம் உத்ரா. நான் ஆர்டர் பண்றேன்…” என்று சொல்ல, கையில் எடுத்த பொருட்களை மீண்டும் வைத்து விட்டுப் படுக்கையறைக்குள் சென்றாள்.

அவன் உணவகத்திற்கு அழைத்து ஆர்டர் செய்து விட்டு அறைக்குள் வந்த போது படுக்கையில் படுத்திருந்தாள் உத்ரா.

அவளின் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தான். இப்போது அவளின் முகத்தில் எந்த உணர்ச்சிகளும் இல்லாமல் துடைத்தெடுத்தது போல் இருந்தது.

தான் அவளை அதிகமாகக் காயப்படுத்தி இருக்கிறோம் என்று புரிந்தது.

வருத்தமாகச் சோஃபாவில் வந்து அமர்ந்து விட்டான்.

செய்த தப்பிற்கு ஸாரி கேட்டுவிட்டான். அதற்கு மேல் என்ன சொல்வது என்று அவனுக்கும் தெரியவில்லை.

சாப்பாடு வந்ததும் அவளைச் சென்று அழைக்க, அமைதியாக எழுந்து வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் சென்று படுத்துக் கொண்டாள்.

வரவேற்பறையில் அவனின் அலுவலகப் பை அருகில் இருந்த புடவை கவரும், பூக்கள் இருந்த கவரும் அவனைப் பார்த்துச் சிரிப்பது போல் இருந்தது.

பூக்களை எடுத்துக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டு, புடவையை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றான்.

புடவையை அவளிடம் காட்டலாமா என்று நினைத்துச் சுவர்ப்பக்கமாகத் திரும்பிப் படுத்திருந்தவளை “உத்ரா…” என்று அழைத்தான்.

“ப்ளீஸ் முகில். எனக்கு அமைதி வேணும்…” என்று உத்ரா திரும்பிக் கூடப் பார்க்காமல் சொல்ல, முகிலின் முகம் சுருங்கியது.

அவளுக்கு இந்த வீட்டில் தான் அமைதி கூடவா கொடுக்கவில்லை? என்று நினைத்தவன், ‘அமைதி வேண்டும் என்று அவள் தனி அறைக்குச் செல்லவில்லை. அதை நினைத்துக் கொள்’ என்று தனக்குத் தானே சமாதானமும் செய்து கொண்டான்.

புடவையை அலமாரியில் வைத்து விட்டு வந்து வேறு எதுவும் பேசாமல் அவனும் படுத்துக் கொண்டான்.

இன்றைய இரவிற்கு எப்படி எல்லாம் கற்பனை செய்தான். எல்லாம் கானல் நீர் ஆகிவிட்டதே என்ற ஏக்க பெருமூச்சுடன் கண்மூடிய முகில் சற்று நேரத்தில் உறக்கத்தைத் தழுவினான்.

இரவில் ஏனோ சட்டென்று தூக்கம் களைய கண் விழித்து உத்ராவின் பக்கம் திரும்பிப் பார்த்தான்.

எப்போதும் படுத்தவுடன் உறங்கிவிடும் உத்ரா அன்று விட்டத்தைப் பார்த்தவண்ணம் இன்னும் முழித்துக் கொண்டிருந்தாள்.

டீப்பாய் மீதிருந்த கைபேசியை எடுத்து மணியைப் பார்க்க, மணி பன்னிரெண்டு ஆகியிருந்தது.

‘இன்னுமா இவள் தூங்கவில்லை’ என்று நினைத்தவன், “உத்ரா…” என்று அழைத்துக் கொண்டே அவளை நெருங்கிப் படுத்து “தூங்கலையா?” என்று கேட்டு அவளின் முகத்தைத் தன் பக்கம் திருப்பினான்.

“தூங்கணும்…” என்ற உத்ரா அமைதியாகக் கண்களை மூடிக்கொண்டாள்.

“என்னாச்சு உத்ரா? ஏன் இப்படி இருக்க? என்கிட்டே சொல்ல மாட்டியா?” என்று கேட்டான்.

“ஒன்னுமில்ல முகில். தூங்குங்க…” என்றவள் கண்களைத் திறக்கவே இல்லை.

அவளின் முகத்தையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தான்.

உத்ராவிடம் எந்த அசைவும் இல்லை. உறக்கத்தைத் தழுவ ஆரம்பித்துவிட்டாள் என்று புரிந்தது.

அவள் உறக்கத்தைத் தழுவ அவனுக்கு உறக்கம் தொலைதூரம் போனது.

அவளை நெருங்கிப் படுத்திருந்தவனுக்கு நேரம் செல்ல செல்ல அவளின் அருகாமை ஈர்க்க ஆரம்பிக்க, மெல்ல அவள் இடையின் மீது தன் கையைப் போட்டு அணைத்துக் கொண்டான்.

முதல்முறையாக மனைவியை அணைக்கிறான். அவ்வணைப்பு அன்று முழுவதும் அவனுக்குள் எரிந்து கொண்டிருந்த ஆசை உணர்வுகளை இன்னும் கொழுந்து விட்டு எரிய வைக்கத் தன் முகத்திற்கு நேராக இருந்த அவளின் உதடுகளைப் பார்த்தான்.

அவன் அணுஅணுவாகச் சுவைக்க விரும்பிய அவளின் இதழ்கள் அவனைச் ‘சுவையறிந்து கொள்! வா…’ என்று அழைப்பது போல் இருந்தது.

அவளின் இதழின் மீது ஏற்கனவே பித்தாக இருந்தவனுக்கு அவ்வழைப்பு ஒன்றே தூண்டுகோளாகத் தோன்ற மெல்ல அவள் இதழ்களை நெருங்கினான்.

உதடும் உதடும் உரசிக் கொள்ளும் நெருக்கத்தில் வந்தவன் ஒருவித மயக்கத்தில் இருந்தான். அவள் இடையில் இருந்த தன் கையில் இன்னும் அழுத்தத்தைக் கூட்டினான்.

தன் உதடுகளை மிக மிக மெதுவாக அவளின் இதழில் பதித்தான்.

முதல் உதடுகளின் உரசல் அவனுக்குத் தீப்பற்றும் உணர்வை கொடுக்க, அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே இன்னும் அழுத்தமாக இதழ் பதிக்க முயன்றான்.

ஆனால் அடுத்த நொடி அவனின் உதடுகள் வேகமாக அவளின் இதழ்களை விட்டு விலகின.

“உ…உத்ரா…” என்று தவறு செய்த பாவனையில் மெல்ல முனங்கினான்.

‘இவ்வளவு தானா நீ?’ என்பது போலான ஒரு பார்வையை அவனின் மீது செலுத்திக் கொண்டிருந்தாள் உத்ரா.

அப்போது தான் கண் அசந்து உறக்கத்தைத் தழுவ ஆரம்பித்தவள், இடுப்பில் அவனின் கை கொடுத்த அழுத்தத்தில் எழுந்து விட்டிருந்தாள்.

அவன் இதழ் பதித்த நொடியில் அவளின் உறக்கம் முற்றிலும் ஓடியே போயிருக்க, பட்டென்று விழிகளைத் திறந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இதை உங்ககிட்ட நான் எதிர்பார்க்கவே இல்லை முகில்…” என்றவள் குரல் வறண்டு ஒலித்தது.

“உத்ரா…” என்று தயக்கமாக அழைத்தவன், “உன் மேல் எனக்கு உரிமை இல்லையா உத்ரா?” என்று கேட்டான்.

“உரிமை இருக்கு. ஆனா அந்த உரிமையை என் உடல் மீது மட்டும் எடுத்துக்க முடிவு பண்ணிட்டீங்க பார்த்தீங்களா? அதைத்தான் என்னால் தாங்கவே முடியலை…” என்றவள் எழுந்து அமர்ந்தாள்.

அவனும் வேகமாக எழுந்து அமர்ந்தவன், “அப்போ நான் உன் உடம்புக்கு அலையிறேன்னு சொல்றீயா?” என்று கோபமாகக் கேட்டான்.

அவளின் வார்த்தைகள் அவனுக்கு அந்த அர்த்தத்தைத் தான் கொடுத்தன. அதில் சுள்ளென்று கோபம் வர பட்டென்று கேட்டுவிட்டிருந்தான்.

“இதுதான்… இதுதான் எனக்குப் புரியவே இல்லை முகில். என்னை எப்பத்தான் நீங்க சரியா புரிஞ்சிப்பீங்க? இல்லை அது என் வாழ்நாளில் நடக்கவே நடக்காதா?” என்று ஆயாசமாகக் கேட்டாள்.

“அப்போ நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்?” என்று இன்னும் கோபம் குறையாமல் கேட்டான்.

“என் மனசையும் புரிஞ்சுக்கக் கொஞ்சம் முயற்சி பண்ணுங்கன்னு அர்த்தம். என் மனசும் வலிக்கும் அதையும் கொஞ்சம் நினையுங்களேன்னு அர்த்தம். எனக்கும் உணர்வுகள் இருக்கு அதையும் கொஞ்சம் உணர்ந்து கொள்ளுங்கள் என்று அர்த்தம் முகில்…” என்று ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி நிதானமாகச் சொன்னாள்.

“என்ன சொல்ற நீ?” என்றவனிடம் இப்போது கோபம் குறைந்திருந்தது.

“எனக்கு மனசு எல்லாம் ரொம்பப் பாரமா இருக்கு முகில். என்னால் முடியவே இல்லை. அப்படியே சில்லுசில்லா உடைந்து போய்டணும் போல இருக்கு. ஆனா அது முடியலை என்னும் போது உள்ளே போட்டு அழுத்தி அழுத்தி ஒரு நாள் அப்படியே வெடிச்சுடுவேன் போல் இருக்கு…”

“முடியலை முகில்… என்னால் முடியவே இல்லை…”

“நானும் ஒரு மனுஷி தானே முகில்? அது ஏன் உங்களுக்குப் புரியவே இல்லை? இவள் திமிர்ப்பிடித்தவள் தானே… இவளுக்கு எல்லாம் வலின்னு ஒன்னு இருக்காதுன்னு நினைச்சுட்டீங்களா?” என்று கண்ணில் வலியுடன் அவனிடம் கேட்க, முகில் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போனான்.

“இந்தத் திமிர்ப்பிடித்தவளுக்கும் வலிக்கும் முகில். எனக்கு வலிக்குது முகில். ரொம்ப ரொம்ப வலிக்குது…” என்றவள் குரல் லேசாகக் கரகரக்கவே ஆரம்பிக்க, தொண்டையைச் செருமிக் கொண்டாள்.

அறைக்குள் இருப்பது ஏதோ அடைப்பது போல் தோன்ற கட்டிலை விட்டு இறங்கி வரவேற்பறைக்குச் சென்றாள்.

முகிலோ சிலையாக அமர்ந்திருந்தான்.

உத்ராவின் ஒவ்வொரு வார்த்தையிலும் அவளின் வலி அப்பட்டமாகத் தெரிய அவளை வலிக்க வைத்தவன் நான் தானே என்ற எண்ணம் அவனை அசையவிடாமல் அடித்திருந்தது.

சில நொடிகள் கடந்து செல்ல அவனும் எழுந்து வரவேற்பறைக்குச் சென்றான்.

விளக்கு கூடப் போடாமல் இருட்டில் சோஃபாவில் தலையில் கையை வைத்து தாங்கி அமர்ந்திருந்தாள்.

விளக்கை போட்டவன், அவளின் எதிரே சென்று மண்டியிட்டு அமர்ந்து அவளின் கையைப் பிடித்து மெல்ல விலக்க, தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள்.

“நான் ரொம்பத் தப்புப் பண்ணிட்டேன் போல உத்ரா. என்னோட தப்பு உன்னோட வார்த்தையில் தெரியுது. ஸா…”

“வேண்டாம் முகில். ஸாரி மட்டும் சொல்லாதீங்க…” என்று அவனின் மன்னிப்பை சொல்ல விட்டாமல் நிறுத்தியவள்,

“ஸாரி… ம்ம்… Sorry… இந்த ஐந்து எழுத்து வார்த்தை என்னை உள்ளுக்குள் அணுஅணுவாக வலிக்க வைத்துக் கொண்டிருக்கும் வலியை போக்கிவிடும்னு நினைச்சீங்களா முகில்? இல்லை முகில், முடியாது. கண்டிப்பாக முடியாது!

“என் இதயத்தையே இரண்டா வெட்டி என் கையில் கொடுத்துட்டு, அது முன்னாடி ஸாரி என்ற ஒரு வார்த்தை சொல்லிட்டால் அந்த இதயத்தோட துடிப்பு மீண்டும் வந்து விடுமா முகில்? வராது முகில். வரவே வராது!”

“உத்ரா… என்ன வார்த்தை சொல்ற? இதயத்தை…” என்று அவன் துடித்துப் போய்க் கேட்டான்.

“எனக்கு அப்படித்தான் இருக்கு முகில்…” என்றாள்.

“இன்னைக்கு ரோட்டில் வைத்து உன்னைத் திட்டியதற்காகவா இவ்வளவு பெரிய வார்த்தை சொல்ற உத்ரா? அதான் உன்கிட்ட நான் மன்னிப்புக் கேட்டேனே? அதை உணர்ந்து தான் கேட்டேன் உத்ரா. போனா போகட்டும்னு மேம்போக்கா கேட்கலை.

“இன்னைக்குக் காலையிலிருந்து நான் என்னென்ன கற்பனையெல்லாம் பண்ணியிருந்தேன் தெரியுமா? ஈவ்னிங் சீக்கிரம் ஆபிஸ் விட்டு ஏன் கிளம்பினேன் தெரியுமா? உனக்குப் புடவை வாங்கிட்டு, அப்படியே பூ எல்லாம் வாங்கிட்டு நம்ம ரூமை மட்டும் இல்லை, உன்னையும் அலங்காரம் பண்ணி பார்க்கணும்.

“எனக்கே எனக்கான உத்ராவை ரசிக்கணும்னு அவ்வளவு கற்பனையோட ஆர்வமா வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். அப்போ யாரோ ஒருத்தனை நீ ரோட்டில் போட்டு அடிச்சுட்டு இருந்ததைப் பார்த்ததும், காலேஜில் பார்த்த பழைய உத்ரா தான் என் கண் முன்னாடி தெரிந்தாள்.

“காலேஜிலும் நான் பார்க்கும் நேரம் எல்லாம் யாரையாவது நீ கைநீட்டி அடித்துக் கொண்டு தான் இருப்ப. அது ஞாபகம் வரவும் இன்னும் நீ திருந்தவே இல்லையான்னு சட்டுன்னு வந்த கோபத்தில் தான் நான் வார்த்தையை விட்டுட்டேன்.

“ஆனா எப்போ ஒரு குட்டி குழந்தையைக் காப்பாத்த சண்டைப் போட்டன்னு தெரிந்ததோ அப்பயே நான் செய்த தப்பு எனக்குப் புரிந்துவிட்டது. அதான் நேரத்தை கடத்தாமல் வீட்டுக்கு வந்த அடுத்த நிமிஷம் உன்கிட்ட ஸாரி கேட்டேன்.

“ஆனா அதுக்குப் போய் நீ எவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற?” என்று வேதனையுடன் கேட்டான்.

ஆனால் உத்ராவோ அவனையே தீர்க்கமாகப் பார்த்தாள்.

“என்ன உத்ரா?” அவளின் பார்வை விளங்காமல் கேட்டான்.

“அன்னைக்கு என்கிட்டே ஒரு கேள்விக் கேட்டீங்களே முகில்? என்னை நீ இன்னும் காதலிக்கிற தானே உத்ரான்னு? அந்தக் கேள்விக்கு உங்களுக்குப் பதில் கிடைச்சுருச்சா முகில்?” என்று நிதானமாகக் கேட்டவளை வெறித்துப் பார்த்தான்.

‘இப்போ என்ன சொல்ல வருகிறாள்? நான் உன்னைக் காதலிக்கவில்லை என்றா?’ என்று பார்த்தான்.

“பதில் சொல்லுங்க முகில். பதில் கிடைச்சுதா? கிடைக்கலை தானே? சரி, அதை விடுங்க. என் மனசு ஒரு பக்கம் இருக்கட்டும். உங்க மனதில் என்ன இருக்கு முகில்? என் மீது காதலா? மனைவி என்ற பிரியமா? என் மேல் உங்களுக்கு இருப்பது என்ன முகில்?” என்று கேட்டாள்.

‘காதலா? உத்ராவை தான் காதலிக்கிறோமா?’ என்று நினைத்துப் பார்த்தான்.

அந்த மாதிரி எந்த உணர்வுமே இல்லாதது போல் உணர்ந்தான்.

‘அப்போ இவள் என் மனைவி என்ற பிரியமா?’ என்ற யோசனை அவனின் முகத்தில் தெரிய, அவன் முகத்தையே ஆராய்ந்து கொண்டிருந்த உத்ரா,

“என் மேல உங்களுக்குக் காதல் இல்லவே இல்லைன்னு எனக்கே நல்லா தெரியும். அதே நேரத்தில் மனைவி என்ற பிரியமும் என் மீது உங்களுக்கு இல்லை முகில். அதுவும் எனக்குத் தெரியும்.

“மனைவி என்ற பிரியம் இருந்திருந்தால் காலையில் இருந்து நீங்க கற்பனை செய்ததாகச் சொன்னீங்களே? அந்தக் கற்பனை எனக்கும் தோன்றும் படியா ஏதாவது செய்துட்டு நீங்க அடுத்த நிலைக்குப் போயிருப்பீங்க முகில். ஆனால் நீங்க அதைச் செய்யவே இல்லையே?

“நீங்களா ஒரு கற்பனை செய்தீங்க. நீங்களா புடவையும், பூவும் அலங்காரத்துக்கு வாங்கினீங்க. அதுக்குப் பிறகு என்ன? நீங்க பூவும், புடவையும் கொடுத்ததும் நான் உங்க கூட இரவெல்லாம் அன்னியோன்யமா வாழ்ந்து விடுவேன்னு நினைச்சீங்களா முகில்?

“உங்க இந்த நினைப்பில் நான் எங்கே இருக்கேன் முகில்? என் உணர்வுகள் எங்கே இருக்கு? இங்கே என் உணர்வுகளுக்கு எந்த மதிப்புமே இல்லையே முகில். என்னை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் உங்கள் உணர்வுகள் மட்டும் தானே இருக்கு? கணவன், மனைவி தாம்பத்திய வாழ்விற்குக் கணவனாக உங்க உணர்வுகள் மட்டும் போதுமா?” என்று அவள் ஒவ்வொரு வார்த்தையும் நெற்றியில் அடித்தது போலக் கேட்க, நிலை குலைந்தது போல் அவளைப் பார்த்தான் முகில்வண்ணன்.

அவளின் உடலும், வாசமும் அவனைக் கவர்ந்து இருந்ததே தவிர அவளின் மனம் அவனைக் கவர்ந்ததா என்ற கேள்விக்கு அவனிடம் பதிலே இல்லை.

ஒரு ஆண்மகனுக்குத் தன் மனைவியின் மீது இயல்பாக எழும் ஆசையும், ஆர்வமும், காமமும் எழுந்திருந்ததே தவிர, அவளின் மீது காதலோ, பிரியமோ எழவே இல்லை.

அவளின் உடலை அணுக வேண்டும் என்று அவனின் உணர்வுகள் துடித்ததே தவிர, அவளின் மனதை அணுக வேண்டும் என்று அவன் யோசித்துக் கூடப் பார்த்தது இல்லை.

அவள் கேட்ட கேள்விகளில் அவனின் உணர்வுகள் அடிப்பட்டுப் போக முதல் முதலாகத் தன்னை நினைத்தே வெட்கப்பட்டுப் போனான் முகில்வண்ணன்.