30 – இன்னுயிராய் ஜனித்தாய் (Final)

அத்தியாயம் – 30

“என்னங்க… பலூனை அப்புறம் கட்டுங்க. முதலில் இவளை என்னன்னு கேளுங்க…” என்ற துர்காவின் குரலில் ஸ்டூலில் ஏறி நின்று பலூனை கட்டிக்கொண்டிருந்த நித்திலன் திரும்பிப் பார்த்தான்.

அவனின் உதடுகள் புன்னகையில் விரிந்தன.

“என்னடா குட்டிம்மா இப்படி நிக்கிறீங்க?” சிரித்தபடி கேட்டான்.

குளித்து விட்டு உடல் எல்லாம் பவுடரை அப்பிக் கொண்டு முகத்தில் ஆங்காங்கே கண் மையைப் பூசி, வெறும் ஜட்டியுடன் நின்று தந்தையைப் பார்த்து சிரித்தாள் வருணா.

“பாருங்க என்ன வேலை பார்த்து வச்சுருக்காள்னு. அவளா பவுடர் அடிக்கிறேன்னு அடிச்சு, மையைப் பூசி, ட்ரெஸ் போட மாட்டேன்னு அடம்பிடிச்சிட்டு இருக்கா…” புகார் வாசித்தாள் துர்கா.

“சமத்துக் குட்டி! நீங்களா பவுடர் அடிச்சி பொட்டு வச்சீங்களா? குட்டிம்மா அவங்களா வேலை பார்க்கிற அளவுக்குப் பெரிய ஆள் ஆகிட்டாங்களா?” என்று கொஞ்சலாகக் கேட்டுக் கொண்டே ஸ்டூலில் இருந்து இறங்கினான்.

“அப்பா… பாப்பா… பிக்…” என்று தன் கையைத் தலைக்கு மேலே தூக்கி தான் வளர்ந்து விட்டது போல் காட்டினாள் வருணா.

“பாப்பா அவ்வளவு பிக் ஆகிட்டீங்களா? ஆமா இங்கே பாருங்க, அப்பாவுக்கு மேல பாப்பா வளர்ந்துட்டீங்க…” என்று தன் தலைக்கு மேலே அவளைத் தூக்கிப் போட்டு விளையாடினான். கிளுங்கி சிரித்தாள் குழந்தை.

“அவளுக்கு ரொம்பச் செல்லம் கொடுக்குறீங்க. ஏன் இப்படிச் செய்தாள்னு தட்டிக் கேளுங்க…” இருவரையும் முறைத்துக் கொண்டு முறையிட்டாள் துர்கா.

“கூல் துர்கா! இப்ப சேட்டை செய்யாமல் எப்ப செய்ய முடியும்? விடுமா. இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் பாப்பாவை ரெடி பண்றேன். நீ டென்சன் ஆகாம அமைதியா கொஞ்ச நேரம் உட்கார்…” என்றவன், குழந்தையைத் தூக்கிக் கொண்டு படுக்கையறைக்குள் சென்றான்.

நித்திலன் அப்படித்தான். துர்கா எவ்வளவு கோபப்பட்டாலும், டென்ஷன் ஆனாலும் நிதானமாக நிலைமையைக் கையாளுவான்.

அவளை டென்ஷன் ஆக்குவது போல் தான் குழந்தையும் ஏதாவது செய்து வைப்பாள்.

ஆனால் நித்திலன் இருவரையுமே கடிந்து கொள்ள மாட்டான். ‘குழந்தைக்குச் சொல்லி புரிய வைக்கும் வயது அல்ல. அவள் அவளாக இந்த வயதில் இருக்கட்டும்’ என்பான்.

அதே நேரம் துர்காவும் அமைதி அடைவது போல் குழந்தையைப் பார்த்துக் கொள்வான். அவனின் அந்த அணுகுமுறை துர்காவிற்கு மிகவும் பிடிக்கும்.

குழந்தையுடன் உள்ளே சென்றவன் பின் தானும் சென்றாள்.

வருணாவின் முகத்தைக் கழுவி விட்டு, ஈரத்தை துடைத்து, லேசாகப் பவுடர் போட்டு, புது உடையைப் போட்டு விட்டான் நித்திலன்.

பின் பீரோவில் இருந்து தங்க செயின், கம்மல், வளையல் என அனைத்தையும் எடுத்துப் போட்டு விட்டான். துர்காவிடம் துள்ளி எதுவும் செய்ய விடாமல் செய்த வருணா, இப்போது அவனிடம் அமைதியாக அலங்காரம் செய்து கொண்டாள்.

“இப்ப பிரத்டே பேபி தயாராகிட்டாங்க…” என்று குழந்தையைக் கொஞ்சி விட்டு திரும்ப, அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் மனைவியை அப்போது தான் கண்டான்.

‘என்ன?’ என்று விழிகளால் கேட்டவனுக்கு உதட்டை குவித்து முத்தமிடுவது போல் காட்டினாள் துர்கா.

அவனின் முகம் காதலுடன் மலர்ந்த அதே நேரத்தில் குழந்தையைச் சுட்டிக் காட்டி, ‘அவள் பார்த்து விடுவாள், வேண்டாம்’ என்பது போல் தலையையும் அசைத்தான்.

துர்கா செல்லமாக முறைக்க, அவளைக் கண்டு கொள்ளாமல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றவன், “மாமா பாப்பாவை கொஞ்சம் பார்த்துக்கோங்க. துர்கா பீரோவில் எதையோ காணோம்னு தேடிட்டு இருந்தாள். என்னன்னு பார்த்துட்டு வர்றேன்…” என்று வெளியே இருந்த மாமனாரிடம் குழந்தையைக் கொடுத்து விட்டு மீண்டும் அறைக்குள் வந்தவன், கதவின் மறைவில் துர்காவை இழுத்துப் போனான்.

“குட்டிம்மா முன்னாடி கவனமா இருக்கணும்னு சொல்லிருக்கேன்ல துர்கா…” என்று கடிந்து கொண்டவன் குரலோ கடினத்தை இல்லாமல் காதலைத்தான் பிரதிபலித்தது.

கைகளோ பேச்சுக்கு மாறாக அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்தன.

குழந்தைக்கு விவரம் தெரியும் வயது இல்லை என்றாலும் குழந்தையின் முன் மனைவியிடம் எந்தச் சில்மிஷமும் வைத்துக் கொள்ள மாட்டான்.

“அவளுக்குத் தெரியாமல் தான் கொடுத்தேன்…” என்றவள் அவன் மீசையின் ஓரம் அவளின் உதடுகளை ஒற்றி எடுத்தாள்.

“என் உதடு இங்கே இருக்கு…” என்று தன் உதடுகளைத் தொட்டுக் காட்டினான்.

“அங்கே எல்லாம் நீங்க கொடுத்துக்கோங்க. நான் இங்கே தான் கொடுப்பேன். மீசை ரோமம் என் உதட்டை உரசும் போது அப்படியே…” என்றவள் பற்களால் லேசாக மீசையைக் கடித்து இழுத்தாள்.

“அவுச்! என்ன இது, விட்டால் என் மீசையைக் கடிச்சு தின்றுவிடுவ போல. ஆமா இன்னைக்கு என்ன என் மேடமுக்கு இவ்வளவு ரொமான்ஸ்?” என்றவன் அவளின் இதழ்களில் மென்மையாக முத்தமிட்டான்.

“என்னன்னு தெரியலை. நீங்க ஒவ்வொரு விஷயம் செய்யும் போதும் உங்க மேல எனக்குக் காதல் பொங்கி பொங்கி வருது…” என்றாள்.

“பொங்கி வழியும் போது சொல்லு கீழே விழாமல் பிடிச்சுக்கிறேன். ஒரு சொட்டு கூட வீணாகிட கூடாது…” என்றவன் அவளின் இதழ்களைக் கவர்ந்து கொண்டான்.

இருவரும் வாழ்க்கையை எவ்வளவு வண்ணமயமாகக் கொண்டு செல்ல முடியுமோ அப்படிக் கொண்டு சென்றனர்.

இருவருக்கும் இடையே வரும் சின்னச் சின்ன மனஸ்தாபங்களையும் உடனே பேசி சரி செய்து கொண்டனர்.

இருவரும் அவர்களுக்குள் மூழ்கி இருந்த நேரத்தில் வீட்டின் அழைப்பு மணி அழைத்தது.

வேகமாக விலகி சென்று கதவைத் திறந்தான் நித்திலன்.

வெளியே செவ்வந்தி, நிரஞ்சன், சிவா, ஷிவானி நின்று கொண்டிருந்தனர்.

“அம்மா, அண்ணா, குட்டீஸ் வாங்க… வாங்க…” உற்சாகமாக வரவேற்றான்.

துர்காவும், சபரிநாதனும் வரவேற்று முடித்ததும் ஆண்கள் இலகுவாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“அண்ணியை அழைச்சுட்டு வரலையா அண்ணா?” நிரஞ்சனிடம் மெதுவான குரலில் விசாரித்தான் நித்திலன்.

“அவளும் வர்றேன்னு தான் சொன்னாள். நான் தான் அவளை அவள் அம்மா வீட்டில் விட்டுட்டு வந்துட்டேன்…” என்றான்.

“ஏன் அண்ணா? அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்க வேண்டியது தானே?”

“அவள் வேண்டாம் நித்திலா. நான் அதட்டுவதால் என் முன்னாடி அடங்கி இருக்காள். ஆனால் எனக்குத் தெரியாமல் உன்னையும், துர்காவையும் எதுவும் சொல்லிட்டால்… அது வேண்டாம். நீங்க இரண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும். அது அவளால் கெட்டதாக இருக்கக் கூடாது…” என்றான் நிரஞ்சன்.

“அப்படி எல்லாம் எதுவும் நடக்காது அண்ணா. நாங்க இப்ப சந்தோஷமா இருக்கோம். இப்ப யார் என்ன சொன்னாலும் கவலைப்படும் நிலையில் நாங்க இல்லை. எங்க சந்தோஷத்தை அடுத்தவங்க குலைக்க விடமாட்டோம். இனி வரும் போது அண்ணியையும் சேர்த்து தான் அழைச்சுட்டு வரணும்.

நீ இப்படி அவங்களை விட்டுட்டு வருவது சிவா, ஷிவானியைப் பாதிக்கும் அண்ணா. குழந்தைகளைப் பற்றி யோசி. இனி நீ வந்தால் குடும்பத்தோடத்தான் வரணும். என்ன சரியா?” என்று கேட்ட தம்பியை வாஞ்சையாகப் பார்த்து ‘சரி’ என்றான் நிரஞ்சன்.

தூரத்திலிருந்து கணவனைக் காதலாகப் பார்த்தாள் துர்கா.

நித்திலனின் குணம் அவளை வசீகரித்துக் கொண்டே இருந்தது.

அவளின் பார்வையைக் கண்டு மென்மையாகச் சிரித்தான் நித்திலன்.

நேரம் நகர்ந்து செல்ல, அடுத்து முரளி, ஷாலினி இருவரும் அவர்களின் குழந்தையுடன் வந்து சேர்ந்தனர்.

வீடே கலகலப்பாக மாறியது.

அன்று வருணாவின் மூன்றாவது பிறந்தநாள்.

அதற்குத் தான் அனைவரும் வந்திருந்தனர்.

மகளின் முதல் இரண்டு பிறந்தநாளை துர்கா பெரிதாகக் கொண்டாடியது இல்லை.

இப்போது முதல் முறையாகத் தன்னுடன் நடக்கும் வருணாவின் பிறந்தநாள் என்பதால் நன்றாகச் செய்ய ஆசைப்பட்டான் நித்திலன்.

குழந்தைகள் ஓடி விளையாடி வீட்டையே இரண்டாக்கிக் கொண்டிருக்க, ஆண்கள் வீட்டை அழகுப்படுத்திக் கொண்டிருக்க, பெண்கள் உணவகத்தில் இருந்து வந்த உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.

மாலை ஆனதும் கேக் வெட்ட தயாராகினர்.

கேக் வெட்டும் போது போடும் உடையை வருணாவிற்கு மாட்டி விட்ட நித்திலன் துர்காவை அறைக்குள் அழைத்தான்.

“என்னங்க?”

“நீ இப்ப என்ன ட்ரெஸ் போட போற துர்கா?”

“சேலை தான். ஏன் கேட்கிறீங்க?” என்று கேட்டவளின் முன் ஒரு பார்சலை நீட்டினான்.

“என்ன இது?”

“பிரிச்சுப்பார்!”

பிரித்துப் பார்க்க உள்ளே ஒரு சுடிதார் இருந்தது.

“இதைப் போடுன்னு கட்டாயப்படுத்த மாட்டேன். போட்டால் சந்தோஷப்படுவேன்…” என்றவன் அங்கே நிற்காமல் வெளியே சென்று விட்டான்.

சில நொடிகளுக்குப் பிறகு வெளியே வந்த மனைவியை ஆர்வமாகக் கொத்தின நித்திலனின் கண்கள்.

அவன் எடுத்துக் கொடுத்த சுடிதாரில் சிறு பெண் போல் அழகாக அவன் முன் வளைய வந்தாள் துர்கா.

சேலை அவளுக்கு ஒரு கம்பீரத்தை கொடுக்கும். சுடிதாரில் மிக இளமையாகத் தோற்றமளித்தவளை கண்களில் நிரப்பிக் கொண்டான்.

‘எப்படி இருக்கேன்?’ துர்கா கண்களால் கேள்வி கேட்க,

‘சூப்பர்!’ என்று கண்களால் பாராட்டி யாரும் அறியாமல் உதட்டை குவித்துக் காட்டி விட்டு விலகினான்.

“சுடிதார் உனக்குச் சூப்பரா இருக்கு துர்கா…” என்று பாராட்டினாள் ஷாலினி.

“அவர் தான் எடுத்துக் கொடுத்தார் ஷாலினி…” என்று பெருமையாகச் சொன்ன தோழியை வாஞ்சையாக அணைத்துக் கொண்டாள் ஷாலினி.

நித்திலன், துர்காவின் அன்னியோன்யத்தை அனைவருமே பார்த்தனர். அனைவருக்கும் அப்படி ஒரு நிம்மதி ஏற்பட்டது.

மகனை மகிழ்ச்சியுடன் பார்த்து தாய் மனம் குளிர்ந்து போனது செவ்வந்திக்கு.

மகள் வாழ்க்கை மலர்ந்து விட்டதில் ஏற்கனவே சபரிநாதன் உற்சாகமாகத்தான் வலம் வந்து கொண்டிருந்தார்.

தனக்கு மட்டும் இல்லாமல் தம்பிக்கும் ஒரு குடும்பம் அமைந்து விட்டதில் நிரஞ்சன் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டான்.

துர்காவை நித்திலன் அடிக்கடி பார்ப்பதை சுட்டிக் காட்டி அவ்வப்போது கேலி செய்து சிரித்துக் கொண்டான் முரளி.

எங்கே ஆளுக்கு ஒரு மூலையில் இருந்து கொள்வார்களோ என்று அவர்கள் பயந்தது போல் இல்லாமல் அவர்கள் வாழ ஆரம்பித்ததில் அனைவருமே சந்தோஷமாக இருந்தனர்.

மாலை ஆறு மணி அளவில் குழந்தையின் கையைப் பிடித்துக் கேக்கை வெட்ட வைத்த நித்திலன், ஒரு கேக் துண்டை எடுத்து குழந்தைக்கு ஊட்டி விட்டு, “முதலில் நீயே அம்மாவுக்குக் கேக்கை கொடுடா குட்டிம்மா…” என்றான்.

ஆனால் வருணா கையில் இருந்த கேக்கை அன்னைக்கு ஊட்டாமல், நித்திலனின் வாயில் திணித்து விட்டாள்.

அனைவரும் உற்சாகமாகக் கைத்தட்ட, நித்திலனின் கண்கள் கலங்கித்தான் போயின.

அவனுக்கு முன்பு முரளியின் மகள் பிறந்தநாளின் போது நடந்தது ஞாபகத்தில் வந்தது.

அன்று உரிமை இல்லாமல் கலங்கியவன், இன்று அவளுக்குத் தந்தையாய் மாறிக் கலங்கினான்.

‘என் இன்னுயிராய் ஜனித்தவள் இவள்!’ என்று மீண்டும் குழந்தையைப் பற்றி நெகிழ்வுடன் நினைத்துக் கொண்டான் நித்திலன்

துர்காவிற்கும் அதே ஞாபகம் தான். அன்று மகளின் செயலில் பதறியவள், இன்று அன்புடன் இருவரையும் பார்த்தாள்.

“அப்பா இன்னும்…” என்று குழந்தை அவனுக்கு இன்னும் ஊட்ட, அதனை ஆசையாக வாங்கிக் கொண்டவன், “இப்ப அம்மாவுக்குக் கொடுப்போம்டா…” என்று வருணாவும், நித்திலனும் சேர்ந்தே துர்காவிற்கு ஊட்டி விட்டனர்.

அந்த அழகான தருணத்தை நிரஞ்சன் கையில் இருந்த புகைப்படக்கருவி அற்புதமாய்ச் சிறைப்பிடித்தது.