3 – ஈடில்லா எனதுயிரே

அத்தியாயம் – 3

“வெயிட்! வெயிட் அத்தான்! நான் சொல்லப் போவதை முழுசா கேட்டுட்டு திட்டலாமா, வேண்டாமான்னு அப்புறம் முடிவு பண்ணுங்க…” என்று வேகமாகத் தடுத்தாள் ராகவர்தினி.

தான் காதலிக்கப் போவதாகச் சொன்னதும் கோபத்துடன் திட்ட வாயை திறந்த பிரபஞ்சனின் வாயை தன் கரங்களைக் கொண்டு மூடிய படி வேகமாகப் பேசி தடுத்து நிறுத்தியிருந்தாள்.

அவளின் கையைத் தன் வாயிலிருந்து விலக்கியவன், “என்ன சொல்ல போற?” என்று கோபத்துடன் கேட்டான்.

“எங்க காலேஜில் ஒரு பையன் என் பின்னாடி ரொம்ப நாளா சுத்துறான் அத்தான். நீங்க தான் படிக்கும் போது காதலில் விழ கூடாதுன்னு பக்கம் பக்கமா பல முறை பாடம் எடுத்திருக்கீங்களே… அதை மனதில் வைத்து நான் அவனைக் கண்டுக்கவே இல்லை. ஆனால் பையன் ரொம்பச் சின்சியரா நான் கண்டு கொள்ளாமல் போனாலும் பின்னால் வந்தான்.

அதனால் ஒரு நாள் கூப்பிட்டு வச்சு இப்படிப் பின்னாடி வராதீங்க… எனக்குப் பிடிக்கலைன்னு சொன்னேன். ஆனால் அவன் கேட்கலை. எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சுருக்கு. உங்களுக்கு என்னைப் பிடிக்கும் வரை காத்திருக்கேன் அப்படின்னு சொன்னான்.

நான் படிக்கும் போது காதல் வலையில் எல்லாம் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. அதனால் உங்க காத்திருப்பு வேஸ்ட்னு சொன்னேன். அப்போ படிப்பு முடிந்த பிறகு காதலிங்க… அது வரை வெயிட் பண்றேன்னு கூலா சொன்னான்.

அப்பவும் உங்க மேல எனக்குக் காதல் வரலைனா என்ன செய்வீங்கன்னு கேட்டேன். அதுக்கு அப்போ வரலைனா உங்களைத் தொந்தரவு பண்ண மாட்டேன்… ஆனா நான் காதலிச்சுட்டே இருப்பேன். ஒரு தலை காதலாக இருந்தாலும் என் காதல் உண்மையானது. நீங்க வேண்டாம்னு சொன்னாலும் என் மனசு மாறாதுன்னு சொல்லி என் ஹார்ட்டை டச் பண்ணிட்டான்…” என்றவள் தன் நெஞ்சத்தைச் சுட்டிக் காட்டி முகத்தைக் கொஞ்சலாக வைத்துக் கொண்டு சொன்னாள்.

“அதுக்கு இப்ப நீ என்ன பண்ணலாம்னு இருக்க?” கைகளைக் கட்டிக் கொண்டு அழுத்தமாகக் கேட்டான் பிரபஞ்சன்.

“பையன் ரொம்ப நல்லவனா இருக்கான். எனக்குத் தெரிந்த வரை அவனுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. அவன் கண்கள் தேவையில்லாம அலைபாயலை. லவ் பண்ண சொல்லி என்னை டார்ச்சர் பண்ணலை. இவ்வளவு நல்ல பையனை ஏன் விடணும்னு யோசிக்கிறேன். அதனால்…”

“அதனால்?”

“என் காலேஜ் படிப்பை முடிக்க இன்னும் ஆறு மாசம் தான் இருக்கு. அதுவரை அவனை நான் கண்டுகிறதாக இல்லை. ஆனால் படிப்பை முடிக்கிற அன்னைக்கு அவன் லவ்வை ஏத்துக்கலாம்ன்னு இருக்கேன்…” என்றாள்.

பேசி முடித்தவளையே பிரபஞ்சன் கூர்மையாகப் பார்த்தான்.

“என்ன அத்தான் ஏதாவது கேளுங்க. ஏன் அமைதியா இருக்கீங்க?” என்று கேட்டாள்.

“அதான் நீயே எல்லாம் முடிவு பண்ணிட்டீயே… இதை எதுக்கு என்கிட்ட வந்து சொல்ற?” என்று கேட்டான்.

“என் முடிவு சரியா, தவறான்னு நீங்க தான் சொல்லணும் அத்தான். தவறா இருந்தாலும் வெளிப்படையா சொல்லிடுங்க. நான் அவன் காதலை அப்செட் செய்ய மாட்டேன்…” என்றாள்.

“இதில் சரியா, தவறான்னு நான் சொல்ல என்ன இருக்கு ராகா? உன் வாழ்க்கை உன் கையில்!” என்று கையை விரித்தான்.

“இப்படிச் சொன்னால் எப்படி அத்தான்? என் வாழ்க்கை என் கையில் என்று நான் நினைச்சுருந்தால் உங்ககிட்ட பேச வந்துருக்கவே மாட்டேன். எனக்கு ஒரு அட்வைசர் வேண்டும். அது நீங்க தான். உங்க எண்ணம் எப்பவும் சரியா இருக்கும். மழுப்பாமல் என்ன செய்வதுன்னு சொல்லுங்க அத்தான்…” என்றாள்.

“அட்வைசரா? என் பேச்சு உனக்கு அறுவையா இல்ல இருக்கும்?” என்று கிண்டலாகக் கேட்டான்.

“என்ன செய்வது? அந்த அறுவை நல்ல அறுவையா இருக்கும் போது கேட்டு தானே ஆகவேண்டியதா இருக்கு?” என்று சலித்துக் கொண்டவளை முறைத்துப் பார்த்தான்.

“உங்க கண்ணு நல்ல ஷார்ப் அத்தான். நல்லாவே முறைக்குது…” என்று நக்கல் அடித்தாள்.

“உன்னை…” என்று அடிப்பது போல் கை ஓங்க,

வேகமாகப் பின்னால் நகர்ந்தாள் ராகவர்தினி.

“அந்தப் பயம் இருக்கட்டும்!” என்று மிரட்டியவன், கையைக் கீழே இறக்கினான்.

“அப்படியே பயந்துட்டேன் போங்க. நீங்க அடிக்கக் கூட என்னைத் தொட மாட்டீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். சரி, அதை விடுங்க அத்தான். நான் இப்ப என்ன செய்யட்டும்?” என்று தீவிரமாகக் கேட்டாள்.

அவனும் தன் விளையாட்டை விட்டுவிட்டுத் தீவிரமாகச் சில நொடிகள் சிந்தனையில் ஆழ்ந்தான்.

“படிப்பு முடியும் வரை அவனுக்குப் பதில் சொல்ல முடியாதுன்னு நீ எடுத்த முடிவு நல்ல முடிவு தான். படிப்பு முடியும் அன்னைக்கு அவனுக்குப் பதில் சொல்ல போவதாக முடிவு எடுத்துருக்கியே… அது சரியான்னு மட்டும் யோசிச்சுக்கோ…” என்றான்.

“ஏன் அத்தான், அதான் படிப்பை முடிச்சுருவேனே? அதுக்கு மேல என்ன யோசிக்க?” என்று கேட்டாள்.

“நீ எடுக்கப் போவது உன் வாழ்நாள் முழுமைக்குமான வாழ்க்கை துணைக்கான முடிவு ராகா. அதைப் போனால் போகுதுன்னு போற போக்கில் எடுக்க முடியாது. அவன் நல்லவன்னு ஒரு காரணம் மட்டும் அவனுக்குச் சம்மதம் சொல்லப் போதாது.

முதலில் உன் மனசுக்கும் அவனைப் பிடிக்கணும். அடுத்து அவனுக்குச் சம்மதம் சொன்ன பிறகு என்ன செய்யப் போற? வீட்டில் எப்படிப் பேச போற? இப்ப பேச்சை ஆரம்பித்த போதே நம்ம வீட்டுப் பெரியவங்களுக்குத் தெரிய கூடாதுன்னு சொல்லித்தான் ஆரம்பிச்ச. அப்படி எத்தனை நாள் வீட்டில் சொல்லாமல் இருப்ப?

காதலிப்பது பெருசு இல்லை. காதலிச்சவனையே கைப்பிடிக்கும் அளவுக்கு உனக்குத் தைரியம் இருக்குமா? யோசிச்சுக்கோ… உன்னோட அப்பா அம்மாகிட்ட சம்மதம் வாங்கித் திருமணம் செய்ய உன்னால் முடியுமானால் மேற்கொண்டு முடிவு எடு!” என்றான்.

அவன் சொன்னதை எல்லாம் கேட்டு யோசனையில் ஆழ்ந்தாள் ராகவர்தினி.

அவளை யோசிக்க விட்டு அமைதியாக இருந்தான் பிரபஞ்சன்.

சில நொடிகளுக்குப் பிறகு உதட்டை பிதுக்கிய படி அவன் முகம் பார்த்தாள்.

“என்னால் ஒரு முடிவுக்கும் வர முடியலை அத்தான். மூளை எல்லாம் மந்தமா இருக்குற மாதிரி இருக்கு. அப்பா, அம்மா என்ன சொல்வாங்கன்னு தெரியலை. ஒருவேளை அவங்க சம்மதம் சொல்லலையானால் என்ன முடிவு எடுக்கப் போறேன் என்றும் தெரியலை…” என்றாள்.

“ஒன்னும் அவசரம் இல்லை. உன் படிப்பு முடிய இன்னும் நாள் இருக்கு. அதுவரை இந்த விஷயத்தை ஆறப்போடு. ஆனால் அவனுக்கு முடிவு சொல்லும் முன் ஒன்றுக்கு பல முறை யோசித்து அதுக்குப் பிறகு முடிவு சொல்.

இப்ப உன்கிட்ட இல்லாத தெளிவு இன்னும் ஆறு மாதத்தில் வரலாம். அப்போ என் ஐடியா கூட உனக்குத் தேவைப்படாது. நீயே யோசித்துச் சரியான முடிவு எடுப்ப…”

இதைச் சொன்னவன் அறியவில்லை. ஆறு மாதங்கள் அல்ல. இன்னும் சில நாட்களிலேயே பெரிய பெரிய முடிவுகளை எல்லாம் சர்வசாதாரணமாக எடுக்கப் போகிறாள் என்று.

இப்போது அன்னை, தந்தை என்ன சொல்வார்களோ? என்று யோசிப்பவள், அப்போது அவர்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தன் முடிவின் படி தான் அவள் நடப்பாள் என்று ராகவர்தினியே அறியவில்லை.

“அத்தான்…” என்று அவள் ஏதோ சொல்ல வந்த போது அவனின் கைபேசி சிணுங்கியது.

“ஒரு நிமிஷம்…” என்றவன் கைபேசியை எடுத்துக் பார்த்தான்.

நந்திதா தான் அழைத்துக் கொண்டிருந்தாள். அதை உடனே எடுக்காமல் ராகவர்தினியைப் பார்த்துத் தயங்கினான்.

“அக்காவா அத்தான்? பேசுங்க. நான் கிளம்புறேன்…” என்று நமுட்டு சிரிப்புடன் சொன்னவள், வாசலை நோக்கி நடந்து கொண்டே, “உங்க ப்ரீ அறுவைக்குத் தேங்க்ஸ் அத்தான்…” என்று சொல்லிவிட்டு ஓடியே போனாள்.

“இவளுக்கு இருக்குற கொழுப்புக்கு…” என்று முணுமுணுத்துக் கொண்டே அழைப்பை எடுக்கப் போனான்.

ஆனால் அதற்குள் அழைப்பு நின்றிருந்தது.

மீண்டும் அலைபேசி உடனே அழைக்க, எடுத்துப் பேசினான்.

“வீட்டுக்கு வந்துட்டீங்களா பிரபு? நான் முதலில் போன் போட்டேன் எடுக்கலையே?” என்று கேட்டாள் நந்திதா.

“வீட்டுக்கு வந்துட்டேன் நந்து. ராகா வந்திருந்தாள். அவள்கிட்ட பேசிட்டு இருந்தேன். இப்போ தான் உன் போன் வந்ததும் என் ரூமில் இருந்து போனாள்…” என்றான்.

“ஓ, ராகா வந்திருந்தாங்களா? எப்படி இருக்காங்க?” என்று விசாரித்தாள்.

“அவள் நல்லா இருக்காள். அவளுக்கு என்ன? சரியான ஓட்டை வாய். லொட லொடன்னு பேசிட்டு இருப்பாள். சரி, என்ன செய்ற? நீ பேங்கிலிருந்து எப்ப வந்த?” என்று அவளிடம் பேச ஆரம்பித்தான்.

அவர்களின் பேச்சு வளர்ந்து அர்த்தமானதும், இல்லாததுமாகத் தொடர்ந்தது.

அந்த வார இறுதியில் முகூர்த்த புடவை எடுக்கச் சென்றனர்.

பிரபஞ்சன் வீட்டினருடன் ராகவர்தினி குடும்பத்தினரும் வந்திருந்தனர்.

பெண் வீட்டின் சார்பில் நந்திதாவும் அவள் பெற்றோரும், அவளின் பெரியப்பா வீட்டினர் என்று வந்திருந்தனர்.

பெண்கள் எல்லாம் ஒரு பக்கம் புடவையைப் பார்த்துக் கொண்டிருக்க, “அக்கா இந்தக் கலர் பாருங்களேன் உங்களுக்கு நல்லா இருக்கும்…” என்று ஒரு பச்சை கலர் புடவையைச் சுட்டிக் காட்டினாள் ராகவர்தினி.

“எந்தக் கலர் ராகா? அந்தப் புளூவா?” என்று கேட்டாள் நந்திதா.

“இல்லைகா கிரீன் கலர்…”

“க்ரீனா? கிரீன் வேண்டாம் ராகா…”

“ஏன்கா? பாருங்களேன்… இங்கே இருந்து பார்க்கவே நல்லா இருக்கு…”

“பார்க்க நல்லாத்தான் இருக்கு ராகா. ஆனா எனக்கு க்ரீன் கலரே பிடிக்காது. அதுவும் என் கல்யாணத்துக்கு க்ரீன் கலர்னா வேண்டவே வேண்டாம்…” என்று முகத்தைச் சுளித்து மறுத்தாள் நந்திதா.

“ஓ, உங்களுக்கு க்ரீன் பிடிக்காதாக்கா? ஆனா அத்தானுக்கு க்ரீன் கலர் பிடிக்கும். அதான் அந்தக் கலர் பார்க்கலாமேனு சொன்னேன்…” என்றாள்.

“உங்க அத்தானுக்குப் பிடிச்ச கலரா இருந்தாலும் எங்க அக்காவுக்குப் பிடிச்ச கலரா இருந்தால் தானே அவங்க சந்தோஷமா இருப்பாங்க. அதனால் எங்க அக்காவுக்குப் பிடித்த கலர் தான் எடுக்கணும்…” என்று துடுக்குத்தனமாகச் சொன்னாள் நந்திதாவின் பெரியப்பாவின் இளைய மகள்.

“அவங்களுக்குப் பிடிக்காத கலர் எடுக்கணும்னு நானும் சொல்லலைங்க. க்ரீன் அத்தானுக்குப் பிடிக்கும்னு தான் சொன்னேன். அக்கா அவங்களுக்குப் பிடிச்ச கலர் புடவையே எடுக்கட்டும்…” என்று துடுக்காகச் சொன்ன பெண்ணைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு சற்று தள்ளி நின்று கொண்டாள் ராகவர்தினி.

“ஏய் திவ்யா, எதுக்கு இப்ப வெடுக்குன்னு பேசுற? அவங்க சாதாரணமாகத் தானே சொன்னாங்க…” என்று நந்திதா பெரியப்பா மகள் திவ்யாவை அதட்டினாள்.

“இல்லக்கா, நானும் வந்ததிலிருந்து பார்த்துட்டே இருக்கேன். என் அத்தான் அப்படி என் அத்தான் இப்படின்னு ஏதாவது சொல்லிட்டே இருக்காங்க. அவர் நம்ம அத்தானும் தானே. என்னமோ அவங்க உரிமையை நிலை நாட்டுவது போல் பேசுறாங்க. அதான் நோஸ் கட் செய்தேன். நீங்களும் அவங்ககிட்ட இனி கொஞ்சம் கவனமாவே இருங்க…” என்று அந்தத் திவ்யா சொன்னது ராகவர்தினி காதிலும் விழ அவளின் முகம் சுருங்கிப் போனது.

தனக்கு வரப்போகும் அக்கா என்ற உரிமையில் அவள் தன் யோசனையைச் சொன்னதே தவறாகப் போகும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

அவளாலும் துடுக்காகப் பேச முடியும் என்றாலும் தேவையில்லாமல் ஸீன் கிரியேட் செய்ய வேண்டாம் என்று நினைத்தவள் மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.

“என்ன ராகா, நீ புடவை பார்க்கலையா?” என்று அவள் மட்டும் தள்ளி வந்ததைப் பார்த்துக் கேட்டான் பிரபஞ்சன்.

“இதோ இந்தப் பக்கம் புடவையைப் பார்க்கலாம்னு வந்தேன் அத்தான்…” என்று வேறு ஒரு பகுதியை காட்டி விலகி நடந்தாள்.

“நீ மட்டும் தனியா என்ன பார்க்க போற?”

“ஏன் அத்தான், எனக்கு நான் பார்க்க கூடாதா? பார்த்தால் நீங்க தான் வாங்கித் தர மாட்டீங்களா?” என்று கேட்டாள்.

“ராகா, இது முகூர்த்த புடவை செக்சன். நம்ம வீட்டு ஆளுங்களுக்கு எல்லாம் நாம நாளைக்கு வந்து தனியா எடுப்பதாக இருக்கோம். அப்போ உனக்குப் பிடிச்ச புடவையா சொல்லு. எடுத்து விடலாம்…” என்றான்.

“அப்போ உனக்குக் காஸ்ட்லி புடவை எல்லாம் கிடையாதுன்னு சொல்லாமல் சொல்றீங்க? அப்படி ஒன்னும் நீங்க எனக்குக் கஷ்டப்பட்டுப் புடவை எடுத்து தர வேண்டாம்…” என்று முறுக்கி கொண்டாள்.

“என்னாச்சு உனக்கு? எதுக்கு இந்த விதாண்டா வாதம்?” என்று கூர்மையுடன் அவளைப் பார்த்துக் கேட்டான்.

அவள் விளையாட்டுத்தனமாகப் பேசியிருந்தால் அதற்கு ஏற்றார் போல் அவனும் பேசியிருப்பான். ஆனால் அவளின் குரலில் விளையாட்டுத் தனம் இருந்ததே தவிர, பேசும் தன்மையில் இல்லை என்பதால் ஏன் இப்படி இருக்கிறாள் என்று தான் அவனுக்குத் தோன்றியது.

இன்று மணப்பெண்ணுக்கு மட்டும் தான் புடவை எடுக்க வந்திருக்கிறோம் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருந்தும் அவள் இப்படிப் பேச காரணம் என்ன என்ற சிந்தனை அவளை அழுத்தமாகப் பார்க்க வைத்தது.

அவள் அவன் முகம் பார்க்காமல் எங்கோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்திற்கு முன் நந்திதாவுடன் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தவள் இப்போது தனியாக வந்து ஏன் இப்படி இருக்கிறாள் என்ற எண்ணத்துடன் ராகவர்தினியையும், சற்று தள்ளி புடவையைப் பார்த்துக் கொண்டிருந்த நந்திதாவையும் பார்த்தான்.

நந்திதா ஓரப்பார்வையாக அவ்வப்போது தங்களைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கண்டு கொண்டான்.

அதுவே அவர்களுக்குள் ஏதாவது பிரச்சனையோ என்று யோசிக்க வைத்தது.

“ராகா, இங்கே என் முகத்தைப் பார்!” என்று அழுத்தமாக அழைத்தான்.

அவள் மெல்ல திரும்பி அவன் முகம் பார்க்க, “என்ன நடந்தது? நந்துவுக்கும், உனக்கும் எதுவும் பிரச்சனையா?” என்று கேட்டான்.

“ஐயோ அத்தான்! எனக்கும், அக்காவுக்கும் என்ன பிரச்சனை வரப்போகுது? அதெல்லாம் எதுவுமில்லை…” என்று வேகமாக மறுத்தவளை நம்பாமல் பார்த்தான்.

“போங்க அத்தான், போய் உங்க உட்பியை சைட் அடிக்கும் வேலையைப் பாருங்க. நான் போய் இந்தக் கடையில் என்னென்ன டிசைனில் புடவை இருக்குன்னு பார்த்துட்டு வர்றேன். என் கல்யாணத்துக்கு உதவும்…” என்று கண்சிமிட்டி கலாட்டாவாகச் சொல்லி விட்டு அவனை விட்டு நகர்ந்து சென்றாள்.

அவள் அப்படி மழுப்பி விட்டு சென்றதே ஏதோ இருக்கிறது என்ற எண்ணத்தை அவனுக்குள் வலுவாக நினைக்க வைத்தது.

பெண்களுக்குள் நடந்த வார்த்தையாடல் பெரிய விஷயம் இல்லை தான். ஆனாலும் திவ்யா அப்படிப் பேசியது ராகவர்தினியை ஒரு விதத்தில் காயப்படுத்தியிருந்தது.

‘எனக்குத்தான் முதலில் அத்தான். அதைத் தாண்டி தான் உங்களுக்கு’ என்று எனக்குச் சொல்ல எவ்வளவு நேரம் ஆகுமாம்? ஏதோ சாதாரணமாகச் சொன்னதை வைத்து உரிமையை நிலைநாட்ட பார்க்கிறேன் என்று எப்படிச் சொல்லலாம்?

ஆமாம்! என் உரிமையை அப்படித்தான் நிலை நாட்டுவேன் என்று நேராகவே சொல்லிருக்கணும். நோஸ்கட் செய்தாளாம். எனக்கும் நோஸ்கட் செய்யத் தெரியாதா என்ன?’ என்று தனக்குள் புலம்பிக் கொண்டாள் ராகவர்தினி.

மனதிற்குள் சுணக்கம் இருந்தாலும் அதன் பிறகு சாதாரணமாகவே இருந்தாள். ஆனால் நந்திதா, திவ்யாவின் பக்கம் போகாமல் விலகி இருந்து கொண்டாள்.

“என்ன பிரச்சனை நந்து? ராகா ஏன் உன்னை விட்டு விலகியே போறாள்?” என்று பிரபஞ்சன் அவள் அப்படி விலகி போவதையும் கண்டு, நேராக நந்திதாவிடமே கேட்டு விட்டான்.

‘அச்சோ! அந்தப் பொண்ணு திவ்யா பேசியதில் கோபித்துக் கொண்டது போல’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்ட நந்திதா, “ஒன்னும் பிரச்சனை இல்லை பிரபு. சும்மா எங்களுக்குள் கலாட்டாவா தான் பேசிட்டு இருந்தோம். என்னாச்சுன்னு தெரியலை…” என்று சமாளிப்பாகச் சொல்லி வைத்தாள்.

“ராகா எதுவும் பேசியிருந்தால் அதைத் தவறா எடுத்துக்காதே நந்து. அவள் கொஞ்சம் விளையாட்டுதனமாகப் பேசுவாளே தவிர, எந்தக் கல்மிஷமும் அவள்கிட்ட இருக்காது. அதுவும் புது அக்கான்னு உன்னை அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த உரிமையில் ஏதாவது பேசுவாள். அதைத் தவறா எடுத்துக்கிட்டு அவளை விலக்கி வைக்காதே. அவளும் நம்ம குடும்பத்தில் ஒருத்தி தான்…” என்றான்.

“நீங்க சொல்லலைனாலும் நானும் அவளைத் தங்கையாத்தான் பார்க்கிறேன் பிரபு. எங்களுக்குள் ஒரு பிரச்சனையும் இல்லை…” என்ற நந்திதா தானே வழிய சென்று ராகவர்தினியிடம் பேசி அவளைச் சகஜமாக்க முயன்றாள்.

ஆனால் திவ்யாவும் நந்திதாவுடன் இருந்ததால் ராகவர்தினியால் முன் போல் அவளுடன் இணக்கமாகப் பேச முடியவில்லை.

இனி திவ்யா ஏதாவது பேசினால் தானும் பேசி விடுவோம். அது வேண்டாம் என்று நினைத்தாள். அதனால் நந்திதாவிடம் பேசியும் அதிலும் சிறு ஒதுக்கத்தைக் காட்டினாள்.

தான் என்ன பேசினாலும் அது தன் அத்தானை பாதித்து விடுமோ என்ற எண்ணம் அவளை விலகி இருக்கவே வைத்தது.

பிரபஞ்சனிடம் வாய் துடுக்காகப் பேசினாலும் அவனின் மனம் நோக கூடாது என்று அக்கறை கொண்டவளாய் இருந்தாள் ராகவர்தினி.