3 – இதயத்திரை விலகிடாதோ?

அத்தியாயம் – 3

ஆம்! கணவனுக்குத் தன் மீது சிறிதளவாவது அன்பு உள்ளதா, இல்லையா? என்ற பெரும் கேள்வி யுவஶ்ரீயிடம் இருந்தது.

தன்னைத் திருமணம் செய்து கொண்டது கூட வெறும் கடமைக்குத் தானோ? என்ற எண்ணம் அவளைக் குடைந்தெடுத்துக் கொண்டிருந்தது.

அவளின் எண்ணத்திற்கேற்ப தான் அவனின் செயல்களும் இருந்தன.

“இதோ இப்ப கூட எனக்குத் தலை வலிக்குது. ஆனா நீ பூரியை மொக்கிக்கிட்டு இருக்க. அதுக்கு நான் ஏதாவது சொன்னேனா என்ன?” சூர்யாவின் தொடர் பேச்சு அவளின் சிந்தனை ஓட்டத்தை அறுத்தது.

அவன் சொல்லிவிட்டானே என்று அவள் சாப்பிடுவதை நிறுத்தவில்லை.

அவன் சொன்ன பிறகு இன்னும் இரண்டு பூரிகளை எடுத்துத் தட்டில் வைத்துக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள்.

“கொழுப்பு!” என்று பல்லை கடித்தான் சூர்யா.

“ஆமாம்! கொழுப்புதான். நானே செய்து நானே சாப்பிடுறேன்ல… அந்தக் கொழுப்பு. நீங்களும் போய் நீங்களே காஃபி போட்டு குடிங்க…” என்றாள்.

“நான் எதுக்குப் போடணும்? அதான் பொண்டாட்டின்னு உன்னை என் தலையில் கட்டி வச்சுருக்காங்களே. அது எதுக்கு?” என்று நக்கலாகக் கேட்டான்.

“என் தலையில் உங்களைக் கட்டி வச்ச உங்க அம்மாகிட்ட போய்க் கேளுங்க…” என்றாள் அவனை நிமிர்ந்தும் பார்க்காமல்.

“இதோ கேட்குறேன்…” என்று உடனே அவன் தன் கைபேசியை எடுத்து அன்னைக்கு அழைத்தான்.

யுவஶ்ரீயிடம் சிறிதும் சலனம் இல்லை.

‘சொல்கிறாயா? சொல்லிக்கொள்!’ என்பது போல் கடமையே கண்ணாக இருந்தாள்.

ஆசையாகச் செய்த உணவை ஆசை இல்லாத கணவனுக்காக உண்ணாமல் இருப்பதா?

“ஹலோ அம்மா…” என்று அவன் பேச்சு கேட்ட பிறகும் நிமிரவில்லை அவள்.

“கண்ணா எப்படி இருக்க? இப்பத்தான் எழுந்தியா?” என்று அவனின் அன்னை சித்ரா பாசமாகக் கேட்டு வைத்தார்.

“அம்மா… கண்ணான்னு சொல்லாதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது. சூர்யான்னு கூப்பிடுங்க…” தான் அழைத்த காரணத்தை மறந்து பல்லை கடித்தான்.

“சூர்யா உன் ஆசைக்காக வச்சது. கண்ணன் எங்க ஆசைக்காக வச்சுது. நான் ஆசையா வச்ச பேர் தான் கூப்பிடுவேன்…” என்றார் சித்ரா.

“அம்ம்ம்மா…” என்று அவன் பல்லை கடிக்க,

“என்ன கண்ணா…” என்று அசராமல் கேட்டு வைத்தார்.

அவன் பற்கள் தூள் தூளாக நொறுங்கினாலும் அன்னை அவரின் அழைப்பை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்பது திண்ணம்.

அவனுக்கு வைத்த பேர் ‘கண்ணன்’.

சிறுவயதில் யாரோ அவனின் பெயரை பழைய பெயராக இருக்கிறது என்று கேலி செய்ய, வீட்டில் வந்து வேறு மாடலான பெயராக வைக்கச் சொல்லி அடம் பிடித்தான்.

அவனின் ஆசைக்காக ‘சூர்யா’ என்று வைத்துப் பின்னால் ‘கண்ணன்’ என்பதையும் சேர்த்து ‘சூர்யக்கண்ணன்’ என்று அவனின் பெயரை மாற்றினார்கள்.

சூர்யாவோடு ஒட்டிக் கொண்ட ‘கண்ணன்’ என்ற பெயரை அவன் எங்கேயும் சொல்லிக் கொள்ள மாட்டான்.

யார் கேட்டாலும் ‘சூர்யா’ என்று தான் சொல்வான்.

ஆனாலும் சிறுவயதிலிருந்து அழைத்து வந்த பெயரை அவனின் அன்னையும், தந்தையும் மாற்றிக் கொள்ளவே இல்லை.

“இப்ப எதுக்குப்பா போன் போட்ட? அதைச் சொல்லு…” என்றார் சித்ரா.

அன்னை கேட்ட பிறகுதான் எதற்கு அழைத்தோம் என்பதே அவனுக்கு ஞாபகம் வந்தது.

“அம்மா, உங்க மருமக எனக்குக் காஃபி கூடப் போட்டு தர மாட்டிங்கிறாள். என்னன்னு கேளுங்க…” என்று சிறு பையன் போல் புகார் வாசித்தான்.

“நீ தான் காஃபி குடிக்க மாட்டியே கண்ணா?” என்று கேட்டு வைத்தார்.

“அம்ம்ம்மா… எனக்குத் தலை வலிச்சா குடிப்பேன்னு உங்களுக்குத் தெரியாதா?”

“தலைவலி என்ன தன்னாலா வந்தது? நீ குடிச்சுட்டு வந்து தலைவலியை இழுத்துட்டு வந்திருக்க. அப்புறம் எப்படி யுவா உனக்குக் காஃபி போட்டு தருவாள்?” என்று கேட்டார்.

“அம்மா, நீங்க எனக்குத்தான் அம்மா. மாமியாரா லட்சணமா உங்க மருமகளை என்னன்னு கேளுங்கன்னா என்னைக் கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க?” என்று எரிச்சல்பட்டான்.

“கேள்வி கேட்கணும்னா உன்னைத்தான் நான் முதலில் கேள்வி கேட்கணும். நீ எப்பத்தான் இந்தக் குடிக்கிற பழக்கத்தை விடுவ?” என்று கேட்டார்.

“அம்மா, நான் ஏற்கெனவே சொல்லிட்டேன். என்னோட வேலையில் எவ்வளவு ஸ்ட்ரெஸ் வரும் தெரியுமா? அதை எல்லாம் குறைக்கணும்னா எனக்கு ட்ரிங்க்ஸ் தேவைப்படுது. அதை விட்டுட்டா எனக்குப் பைத்தியம் தான் பிடிக்கும்…” என்றான்.

“யுவாவும் உன் கூட அதே வேலை தானே பார்க்கிறாள். அவள் மட்டும் குடிச்சுட்டா இருக்காள்?” சித்ரா கேட்க,

“அவளைக் குடிக்க வேண்டாம்னு நானா சொன்னேன்? என் கூட வர சொல்லுங்க. அவளுக்கும் வாங்கிக் கொடுக்குறேன். எத்தனை பொண்ணுங்க இப்ப எல்லாம் குடிக்கிறாங்க தெரியுமா? உங்க மருமகள் தான் சரியான பட்டிக்காடா இருக்காள்…” என்றான்.

சாப்பிட்டு முடித்துக் கையைக் கழுவி விட்டு மீண்டும் டைனிங் டேபிளில் அமர்ந்து கன்னத்தில் கையை வைத்து ‘நீ இப்படிப் பேசவில்லை என்றால் தான் அதிசயம்!’ என்பது போல் அவன் பேசுவதைத் தான் கேட்டுக் கொண்டிருந்தாள் யுவஶ்ரீ.

அவளைப் பார்த்துக் கொண்டே ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கியவன், ‘பட்டிக்காடு’ என்று முணுமுணுத்தான்.

உதட்டை அலட்சியமாகச் சுளித்துக் கொண்டாள் யுவஶ்ரீ.

‘அதை அப்படியே கடிச்சு வைக்கிறேன் இரு!’ என்பது போல் முறைத்துப் பார்த்தான்.

‘இதுக்கு மட்டும் வந்துருவியே?’ என்று பதிலுக்குப் பார்த்து வைத்தாள் அவள்.

இவர்கள் இங்கே கண்களாலேயே பேசிக் கொண்டிருக்க, அலைபேசியிலோ, மகனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார் சித்ரா.

“பொண்ணுங்க இப்ப அதெல்லாம் செய்றாங்கன்னு என் மருமகளையும் செய்யச் சொல்வியா? அவளைப் போலத் தங்கமான பொண்ணு மருமகளா கிடைச்சுருக்காள்னு நாங்க எவ்வளவு சந்தோஷமா இருக்கோம், தெரியுமா? இனி இப்படி ஏதாவது பேசு. நேரில் வந்தே உதைக்கிறேன்!” என்றார்.

“ம்க்கும்… உங்க மருமகளை நீங்க தான் மெச்சிக்கணும். செவ்வாய், வெள்ளிக்கு நான்வெஜ் சாப்பிட கூடாதுனு ரூல்ஸ், தண்ணி அடிக்கக் கூடாதுன்னு ரூல்ஸ், ப்ரண்ட்ஸ் கூட வெளியே சுத்தக்கூடாதுன்னு ரூல்ஸ்னு எனக்கு ரூல்ஸ் ரூல்ஸா போட்டுட்டு இருக்கா. அவளுக்கு வேணும்னா அவளும் அது போல இருக்க வேண்டியது தானே? அவளும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பாளாம். நானும் இருக்கணுமாம். என்னை என்னன்னு நினைச்சாள் அவள்?”

ஒரு காஃபிக்கு ஆரம்பித்த பஞ்சாயத்தில் மனைவியின் மீதிருந்த கடுப்பை எல்லாம் கொட்டினான்.

“அவள் சரியாத்தான் இருக்காள். நீ சரியா இருக்குற வழியைப் பாரு…” என்று மகனைத்தான் அடக்கினார் சித்ரா.

அவன் மீண்டும் கடுப்புடன் அவளைப் பற்றிக் குறை சொல்ல ஆரம்பிக்க, “அதை விடு கண்ணா. அடுத்த வாரம் நீங்க ஊருக்கு வருவதற்கு யுவாவை டிக்கெட் போட சொல்லிருக்கேன். அடுத்த வாரம் இரண்டு பேரும் கிளம்பி வந்து சேருங்க…” என்றார்.

“நீங்க உங்க மருமகளுக்குத்தானே சப்போர்ட் செய்தீங்க? உங்க மருமகளை மட்டும் கூப்பிடுங்க. நான் வர மாட்டேன்…” என்றான் வீம்பாக.

“நீ வரலைனா அப்பா நாம அங்கே போவோம்னு சொல்றார். என்ன நாங்க வரட்டுமா?” என்று கேட்க, பல்லை கடித்தான் சூர்யக்கண்ணன்.

“நானே வர்றேன், வைங்க…” என்று அழைப்பை துண்டித்தான்.

தந்தை இங்கே வந்துவிட்டால் ஆயிரத்தெட்டுக் கட்டுப்பாடுகள் போடுவார். வெளியே கிளம்பினால் எங்கே கிளம்புகிறான் என்று கேள்விகள் கேட்டு குடைவார்.

அந்த எரிச்சலுக்கு அங்கே செல்வதே சரி என்று அவனுக்குத் தோன்றியது.

அங்கேயும் இதே கேள்விகளைக் கேட்பார் என்றாலும் அவனால் அதைச் சுலபமாகச் சமாளிக்க முடியும்.

இங்கே என்றால் வந்திருக்கும் எங்களைக் கவனி என்பார். வெளியே குடும்பத்துடன் அழைத்துச் செல்ல சொல்வார்.

அவனுக்கு அதிலெல்லாம் எப்போதும் பிடித்தம் இல்லை. நண்பர்களுடன் எத்தனை நாட்கள் சுற்ற சொன்னாலும் சுற்றுவான். அதுவே குடும்பத்துடன் என்றால் அவனுக்கு அழற்சி.

இதுவே ஊரில் என்றால் அப்படி அவர்களை அழைத்துச் செல்ல சொல்லமாட்டார் என்பதால் தாங்களே ஊருக்கு சென்று விடலாம் என்று நினைத்தான்.

அவன் பேசி முடித்த போது அவனின் முன் நீண்டது காஃபி கப்.

அதைப் பார்த்தவனுக்குச் சுர்ரென்று ஏறியது.

கேட்கும் போதே கொடுத்திருந்தால் தான் என்ன? என்ற சினம் உண்டாக, “எனக்கு ஒன்னும் வேண்டாம்…” என்றான்.

“சும்மா குடிங்க. அப்பத்தான் ஒன்றறையடி வளர்ந்திருக்கும் கொண்டை வச்ச மண்டையில் இருக்கும் வலி குறையும்…” என்றவள் அவன் கையில் காஃபி கப்பை திணித்து விட்டுச் சென்றாள்.

கோபம் வந்தாலும் அதை விடத் தலைவலி அதிகமாக இருக்க, காஃபியை பருக ஆரம்பித்தான்.

“அத்தை ஊருக்கு வர சொன்னாங்க…” என்றாள்.

“ம்ம்… சொன்னாங்க… சொன்னாங்க…”

“டிக்கெட் போடவா?”

“போடு…” என்றதுடன் பேச்சை முடித்துக் கொண்டு அறைக்குள் சென்று மறைந்தான்.

மீண்டும் அவன் வந்த போது வெளியே கிளம்பத் தயாராகியிருந்தான்.

‘கிளம்பியாச்சு நகர்வலம் போக!’ என்று எரிச்சலுடன் முணுமுணுத்துக் கொண்டு அவனை முறைத்துப் பார்த்தாள்.

அவள் பார்வையை எல்லாம் அவன் கண்டு கொள்ளவே இல்லை.

கைபேசியைப் பார்த்துக் கொண்டே டைனிங் டேபிளில் சென்று அமர்ந்தான்.

“சாப்பாடு வை!” என்று நிமிர்ந்து பார்க்காமலேயே சொன்னவன் தலையில் குட்டு வைத்தால் தான் என்ன என்று அவளுக்கு ஆத்திரமாக வந்தது.

ஆனாலும் உணவை எடுத்து வைத்தாள்.

உணவை கூடப் பார்க்காமல் கைபேசியைப் பார்த்துக் கொண்டே உண்டு முடித்தவன், கையைக் கழுவிவிட்டு அவளிடம் ஒன்றுமே சொல்லிக் கொள்ளாமல் வெளியே கிளம்பினான்.

எப்போதும் நடப்பது தான். ஆனாலும் அவள் மனம் விண்டு போனது போல் வலித்தது.

குடும்ப வாழ்க்கையில் பற்றில்லாதவனுக்கு எதற்குத் திருமணம்? என்ற கேள்வி தான் தோன்றியது.

அப்படி முழுமையாகப் பற்றில்லாதவன் என்றும் முடித்துவிட முடியாது.

இரவுகளில் மட்டும் பற்றுள்ளவன் தான். இரவு மட்டும் தான் அவன் கணவன் என்று அவனுக்கு ஞாபகம் வரும் போல் என்று அவள் நினைத்தது உண்டு.

கணவனாக அவன் தேவையை அவள் மறுத்தாலும் நிறைவேற்றிக் கொள்வான்.

அதைத் தவிர, மனைவியிடம் சந்தோஷமாகச் சிரித்துப் பேச வேண்டும், அவளை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும், அவளுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் அவனுக்கு இருந்தது இல்லை.

காலையிலும், இரவிலும் வீட்டு சாப்பாடு சமைத்து வைக்கவும், இரவில் அவனின் இளமை தேவையைத் தீர்த்து வைக்கவும் மட்டுமே மனைவி என்பது போல் நடந்து கொள்வான்.

வாய்க்கு வாய் பொண்டாட்டி என்பானே தவிரப் பொண்டாட்டிக்கு உரிய உரிமையைத் தர முன் வந்ததில்லை.

மேம்போக்கான வாழ்க்கை அவனது.

அவளோ கணவன், மனைவி பந்தத்தை ரசித்து, அனுதினமும் ருசித்து வாழ நினைத்தவள்.

ஆம்! நினைத்தவள் தான்! இறந்தகாலத்தில் தான் சொல்ல வேண்டும்.

எப்போது தன் நினைப்பு நிறைவேறாது என்று தோன்றியதோ, அப்போதிருந்து அந்த நினைப்பை எல்லாம் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற முடிவிற்கு வந்து விட்டாள்.

அவன் வெளியே கிளம்பிச் சென்ற பின் அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தானாக எடுத்துக் கொண்ட தனிமை அல்ல அது. கணவனால் கொடுக்கப்பட்ட தனிமை அது.

அது மன புழுக்கத்தைத் தான் தந்தது.

அப்படியே இருந்தால் பைத்தியம் பிடித்து விடும் என்று நினைத்தவள், எழுந்து அலமாரியில் இருந்த பொருட்களைத் துடைத்தாள்.

அதைச் செய்து கொண்டிருக்கும் போதே அவளின் அன்னை அழைக்க, எடுத்து பேசினாள்.

அதில் சிறிது நேரம் செல்ல, பின் மதியத்திற்குத் தனக்கு மட்டும் சமைத்து உண்டு முடித்தாள்.

இன்று இரவும் உறக்கம் கெடும் என்று நினைத்தவள் மதியம் சிறிது நேரம் தூங்கி எழுந்தாள்.

வெளியே சிறிது நேரம் செல்வோமா என்று தோன்றினாலும் தனியாக எங்கே செல்ல? சென்று என்ன ஆகப் போகிறது? என்ற சலிப்பு உண்டாக, கணினியை உயிர்ப்பித்து இணையத்தில் சிறிது நேரம் செலவழித்தாள்.

மாலை காஃபி, இரவு உணவு என்று நேரம் சென்ற பிறகும் வெளியே சென்ற கணவன் இன்னும் வீடு வந்து சேரவில்லை.

மனைவி என்ற ஒருத்தி வீட்டில் இருக்கிறாளே, என்ன செய்கிறாளோ? என்று அலைபேசியிலும் அழைத்து விசாரிக்க மாட்டான்.

அவள் அழைத்தாலும் பேச மாட்டான் என்ற பாடத்தை ஏற்கெனவே கற்றிருந்தாள். அதனால் அவளும் அழைக்க மாட்டாள்.

சூர்யா அன்று இரவு வீடு திரும்பி வந்த போது நள்ளிரவாகியிருந்தது.

அவனிடம் ஒரு சாவி இருந்தாலும் வேண்டுமென்றே கதவை தட்டித்தான் அழைப்பான்.

அதுவும் குடித்து விட்டு வந்தால் வீட்டின் அழைப்பு மணி என்ற ஒன்று இருப்பதே அவனுக்கு மறந்து போயிருக்கும்.

இல்லையென்றால், அவளைத் தூங்க விடாமல் செய்யவே கதவை தட்டுவானா? என்பது அவனுக்கே வெளிச்சம்!

யுவஶ்ரீ கதவை திறக்க, இன்றும் மூச்சு முட்ட குடித்து விட்டுத்தான் வந்திருந்தான்.

“ஹாய் பொண்டாட்டி, இன்னும் தூங்கலையா நீ? எனக்காகத் தானே முழிச்சிருந்த? உன் பதிபக்தியை யாம் மெச்சினோம்…” என்று குழறலாகச் சொல்லி கொண்டே வீட்டிற்குள் வந்தான்.

“ஆமா, உங்களுக்காக நான் முழிச்சிருக்கணும்னு வேண்டுதல் பாருங்க. உங்ககிட்ட தான் ஒரு சாவி இருக்குல்ல? திறந்து வர வேண்டியது தானே?” என்று கேட்டாள்.

“சாவி இருக்கா? என்கிட்டயா? எங்கே இருக்கு?” என்று சட்டை பையிலும், பேண்ட் பையிலும் கையை விட்டுப் பார்த்தான்.

பேண்ட் பாக்கெட்டில் இருந்து சாவியை எடுத்தவன், “ஆமா இருக்கு. மறந்துட்டேன்டி பொண்டாட்டி…” என்று இளித்தான்.

“கொஞ்சமா குடிக்கணும். இப்படி மூச்சு முட்ட குடிச்சுட்டு வந்தால் அப்படித்தான்…” என்றாள்.

“இன்னைக்காவது சிக்கன், மட்டன் எடுத்தியா பொண்டாட்டி? உன் புருஷனுக்குப் பசிக்குது. தட்டில் போட்டு எடுத்துட்டு வா…” என்றான்.

“இன்னைக்கு நான்வெஜ் எல்லாம் எடுக்கலை. மஸ்ரூம் பிரியாணி செய்தேன். அதான் இருக்கு, வேணுமா?” என்றதும் முகத்தைச் சுளித்தான்.

“இன்னைக்குச் சனிக்கிழமை தானே? இன்னைக்குத் தான் நீ சாமியாட மாட்டியே சிக்கன் எடுக்க வேண்டியது தானே?” அவள் வெள்ளிக்கிழமை பக்தியாக இருப்பதைக் கேலி செய்த படி கடுப்பாகக் கேட்டான்.

“இனி நீங்க புருஷனா லட்சணமா கறி கடைக்குப் போய்ச் சிக்கன் எடுத்துட்டு வந்து கொடுங்க. நான் செய்து வைக்கிறேன்…” என்றாள்.

“ஓய்! என்ன கொழுப்பா? கடைக்கு எல்லாம் நீ தான் போகணும். நான் ஏன் போகணும்? அது என்ன அசிங்கமா கடையில் நின்னு கறி வாங்கிட்டு வரச் சொல்ற?” என்று கோபத்தில் குதித்தான்.

“நீங்க சாப்பிடணும்னா நீங்க தான் போய் வாங்கிட்டு வரணும்…” என்றாள்.

“நான் எல்லாம் போக மாட்டேன். அதான் என் பொண்டாட்டின்னு நீ எதுக்கு இருக்க? நீ தான் போய் வாங்கிட்டு வரணும்…” என்றான்.

‘வீட்டுக்கு தேவையான எதுவும் வாங்க போறது இல்லை. ஆனா வாய்க்கு ருசியா நான்வெஜ் மட்டும் வேணுமாம்…’ என்று புலம்பிக் கொண்டே காளான் பிரியாணியைத் தட்டில் வைத்து, அவனிடம் நீட்டிவிட்டுப் படுக்கச் சென்று விட்டாள்.

மாமிச உணவு வகைச் செய்யவில்லை என்று அவளைத் திட்டினாலும் அவள் தந்த காளான் பிரியாணியை உண்ணாமல் இருக்கவில்லை அவன்.

உண்டு விட்டு வழக்கம் போல அவள் அருகில் சென்றான்.

“இன்னைக்குப் பக்கத்தில் வந்தீங்கனா நான் எழுந்து பால்கனிக்கு போய்டுவேன்…” என்று மிரட்டலாகச் சொன்னாள் யுவஶ்ரீ.

“ரொம்ப நல்லது. வேற இடத்தில் ட்ரை பண்ணலாம். வா பால்கனிக்கு…” என்று சூர்யா அழைக்க, தலையில் அடித்துக் கொண்டாள்.

எங்கே இருந்தாலும் விட மாட்டான் என்று புரிந்து விடப் பல்லை கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டாள்.

அவன் விலகிய பின் அவளின் கண்களின் ஓரம் கண்ணீர் கசிந்து வடிய ஆரம்பித்தது.

கவிழ்ந்து படுத்துச் சுகமாக நித்திரையைத் தழுவிக் கொண்டிருந்தவனை வெறித்துப் பார்த்தாள்.

இவனைத் தான் திருமணம் செய்தது சரியா? தவறா? இன்று வரை அவளுக்குப் புரியவில்லை.

இப்போது நினைத்து என்ன ஆகப் போகிறது? என்று பெருமூச்சும் வந்தாலும், அவனைத் திருமணம் செய்து மணவாழ்க்கையில் பல எதிர்பார்ப்புகளுடன் நுழைந்த நாட்களும் நினைவில் வந்தது.