3 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்

அத்தியாயம் – 3

அன்று மாலையே சத்யவேணி சொன்ன யோசனையின் படி தயார் செய்த விளம்பரத்தைக் கடையின் சுவற்றில் ஒட்டினான் தர்மா.

அவன் மீண்டும் கடைக்கு வந்த நேரத்தில் தியாகராஜனும் இருக்க, அவரும் மகள் சொன்ன யோசனையை ஆமோதித்தார்.

விளம்பரத்தை ஒட்டிவிட்டு “நன்றி சார்…” என்றான்.

“நன்றி எல்லாம் எதுக்குத் தம்பி? நீங்களும் இப்போ நம்ம ஊருக்காரங்களா ஆகிட்டீங்க. இது எல்லாம் நமக்குள்ள செய்துக்குற சின்னச் சின்ன உதவி தான்…” என்றார் சிறிது நேரம் பேசியதில் அவனைப் பற்றி அறிந்திருந்தவர்.

மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு அவன் கிளம்பி செல்ல, “அந்தத் தம்பி பழக நல்லவரா தெரியுறார்…” என்றார் மகளிடம்.

“ம்ம்…” என்று மட்டும் சொன்னாள் அவள்.

அவனின் பேச்சில் இருந்த கண்ணியம் அவளையும் அப்படித்தான் நினைக்க வைத்தது. அதுவும் அவளைப் புதிதாகப் பார்ப்பவர்கள் அவளின் பார்வையற்ற குறையைப் பற்றி ஏதாவது ஒரு வழியில் கேட்டு அனுதாபம் என்ற போர்வையில் அறிவுரை வேறு சொல்லாமல் இருந்தது இல்லை.

ஆனால் அவன் அது போல எதுவும் அனுதாபம் காட்டவில்லை. அவனின் வரவை சரியாகச் சொன்னதற்கு ஆச்சர்யம் காட்டியதோடு நிறுத்திக்கொண்டான். அதுவே அவனின் மீது ஒரு நல்ல எண்ணத்தை அவளுக்கும் கொடுத்தது.


அன்று இரவு உணவை முடித்த பிறகு கார்த்திகா வீட்டுப்பாடம் செய்வதாகச் சொல்லிவிட்டு அவ்வீட்டில் இருந்த ஒரே அறையான அவளும், அவளின் அக்கா சத்யவேணியும் மட்டும் உபயோகிக்கும் அறைக்குள் சென்று விட, தானும் படுக்கப் போவதாகச் சொல்லிவிட்டு உள்ளே செல்ல தயாராக இருந்த பெரிய மகளைக் கூடத்தில் தான் படுப்பதற்காக விரித்து வைத்திருந்த பாயில் அவளை அமரச்சொன்னார் வசந்தா.

“என்னம்மா? எனக்குத் தூக்கம் வருது. சீக்கிரம் சொல்லுங்க…” என்று சிறு சலிப்புடனே அந்தக் கோரை பாயில் அமர்ந்தாள்.

“நான் வேற என்ன கேட்க போறேன்? காலையில் பேசியது தான். என்ன முடிவு பண்ணிருக்க?” என்று அவளின் சலிப்பை கண்டு கொள்ளாமல் காரியத்தில் கண்ணாகக் கேட்டார் வசந்தா.

“அம்மா… நான் இதுக்குக் காலையிலேயே பதிலைச் சொல்லிட்டேன். எனக்குப் பிடிக்கலைன்னா விட்டுருங்களேன்…” என்றவளின் குரலில் கோபம் எட்டிப் பார்த்தது.

“அப்படியெல்லாம் விட முடியாது சத்யா. உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமையணும்னு எங்களுக்கும் ஆசை இருக்காதா? உன் நிலைமையைக் காரணமா வச்சே ஒரு வரன்னும் இதுவரை அமையலை. இப்போ அவங்களா கேட்டு வர்றாங்க. அதை நாமளே வேண்டாம்னு சொல்றது முட்டாள் தனம் சத்யா…” கண்டிப்புடன் சொன்னார் வசந்தா.

“ப்ச்ச்…! அவங்களா கேட்டு வருவது தான்மா இன்னும் பயமா இருக்கு. இந்தக் குருடியை எப்படித் தானா வழிய வந்து பொண்ணு கேட்கிறாங்க? அதுவே எனக்குச் சந்தேகமா இருக்கு. எந்தக் குறையும் இல்லாத பொண்ணுங்களையே இப்படி வீடு தேடி வந்து பொண்ணு கேட்பது கஷ்டம். அப்படி இருக்கும் போது எப்படி என்னைக் கேட்குறாங்க? இதை எல்லாம் யோசிச்சீங்களா, இல்லையாமா?” என்று கேட்டாள்.

“அதெல்லாம் விசாரிக்காம இருப்போமா சத்யா? விசாரிச்சாச்சு…மாப்பிள்ளையைப் பற்றிய முழு விவரமும் சொல்றேன் கேளு…” என்று ஆரம்பித்தவரை பேச விடாமல் தடுத்து நிறுத்தினாள்.

“நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்மா. நான் எதுவும் கேட்குற மனநிலையில் இல்லை…” என்று கண்டிப்புடன் சொன்னாள்.

“என்ன சத்யா இப்படிப் பிடிவாதம் பிடிக்குற? விவரத்தை கேட்டா தானே உனக்கே புரியும். அதை விட்டுட்டு ஒரு விவரமும் கேட்காமல் உன் காதோடு, மனசையும் மூடி வச்சுக்கணும்னு ஏன் நினைக்கிற?” என்று சலிப்பாகக் கேட்டார் வசந்தா.

“நீங்க காலையில் சொன்ன ஒரு விவரமே போதும்மா…இன்னும் வேற விவரம் தெரிய தேவையில்லை. அந்த விஷயம் தெரிந்ததிலிருந்தே வேற எதுவும் கேட்க தேவையில்லைனு எனக்கு நல்லா தெரிஞ்சு போயிருச்சு…”

“ப்ச்ச்…! முழு விவரத்தை கேளு சத்யா…”

“இல்லம்மா… எனக்குத் தெரிய வேண்டாம். இதோட இந்தப் பேச்சை விடுங்க…”

“இது வீண் விதண்டாவாதம் சத்யா…” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கடையிலிருந்து தியாகராஜன் வந்துவிட்டார்.

அவருக்குக் கதவைத் திறந்துவிட்ட வசந்தா முகத்தில் இருந்த கோபத்தைப் பார்த்து “என்னமா… என்னாச்சு? ஏன் இப்படி இருக்க?” என்று விசாரித்தார்.

“எல்லாம் காலைல பேசுன விஷயம்தான். சத்யா பிடி கொடுக்கவே மாட்டேங்கிறா. நீங்களாவது எடுத்து சொல்லுங்க…” என்று சொல்லிவிட்டு அவருக்கு இரவு உணவை எடுத்து வைக்கச் சென்றார்.

“என்ன சத்யா…” என்று அவர் பேச்சை ஆரம்பிக்க, “அப்பா ப்ளீஸ்… இப்போ நான் எதையும் அலசி ஆராய்ற நிலையில் இல்லை. என்னை இப்போதைக்கு விட்டுருங்களேன்…” என்று கலக்கத்துடன் பரிதாபமாகச் சொன்னாள்.

அவளின் கலக்கத்தைப் பார்த்து அவர் அமைதியாகி விட, “என்னடி சொன்னதையே சொல்லிட்டு இருக்குற?” என்று வசந்தா கணவனுக்கு உணவு எடுத்து வைத்துக் கொண்டே கோபப்பட்டார்.

மனைவியின் புறம் திரும்பிய தியாகராஜன் “வசந்தா விடு…! இன்னைக்குத் தானே இந்த விஷயத்தை ஆரம்பிச்சோம். திடீர்னு கேட்கவும் அவளுக்குப் பயமா இருக்கு போல… கொஞ்ச நாள் விட்டுப்பிடி. அவளும் கொஞ்சம் தெளிந்து வரட்டும்…” என்றார்.

தந்தையின் பேச்சைக் கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்ட சத்யா ‘இன்னும் எத்தனை நாள் ஆனாலும் என் முடிவில் மாற்றம் இல்லைப்பா’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

“என்னங்க நீங்க? நீங்களும் இப்படிச் சொன்னா எப்படி?” என்று ஆட்சேபனை தெரிவிக்க…

“வசந்தா…” என்று அழுத்தி அழைத்த தியாகராஜன் ஏதோ சமிக்ஞை செய்து அவரின் பேச்சை நிறுத்த, “என்னமோ போங்க…” என்று சலித்துக் கொண்டார்.

“சரிமா சத்யா… நீ போ… போய்த் தூங்கு. காலையில் ஸ்கூலுக்குப் போகணும்ல…” என்று சொல்ல, “ஆமாம்பா…” என்றவள் எழுந்து உள்ளே சென்றாள்.

மேலும் ஒரு மணிநேரம் கடந்த பிறகும் தங்கை அருகில் படுத்திருந்த சத்யாவிற்கு உறக்கம் அருகில் கூட வர வில்லை.

‘தன்னிடம் இவ்வளவு பெரிய குறையை வைத்துக் கொண்டு தான் பிடிவாதம் பிடிப்பது நியாயம் தானா? முதல் பெண் குழந்தையாகக் குறையோட பிறந்த தன்னை ஏழ்மை நிலையிலும் ‘இந்தக் குருட்டுப் பெண்ணை ஏன் வளர்க்கணும்’னு நினைக்காம என்னையும் பாதுகாத்து பத்திரமா இந்த இருபத்தி ஆறு வருஷம் வளர்த்த பெத்தவங்களுக்கு இன்னும் தான் நான் பாரமா இருக்கேன்.

எனக்கும் கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு அவங்க ஆசைப்படுவது நியாயம் தான். ஆனா என்னால அந்த நியாயமான ஆசைக்குக் கூடச் சம்மதம் சொல்ல முடியாத நிலையைக் கடவுள் எனக்கு ஏன் தந்தார்? குறையோட பிறந்த எனக்கு இந்தச் சம்பந்தமே பெருசுன்னு நினைச்சிருப்பாரோ? ‘நீ ஆசை படுவது பேராசை இல்லையா?’ என்று மனம் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் ஏதேதோ மனதில் நினைத்துக் கொண்டு நித்திரையைத் தொலைத்து நின்றாள் சத்யவேணி.

மகள் உறங்கியிருப்பாள் என்று நினைத்து வெளியே கணவனும், மனைவியும் பேசிக் கொண்டது சத்யவேணியின் காதில் மெதுவான குரலில் கேட்டது.

“என்னங்க இவ இப்படிப் பண்றா? ஏற்கனவே வயசு ஏறிக்கிட்டே போகுது. ஏதோ கடவுளா பார்த்து இந்தச் சம்பந்தத்தை அனுப்பி இருக்கார். தானா தேடி வருவதையும் தட்டி கழிச்சா எப்படி? இன்னைக்கு எப்படியாவது பேசி அவளைச் சம்மதிக்க வைச்சுடலாம்னு நினைச்சேன். ஆனா நீங்களும் வாயை அடைச்சிட்டீங்க…” என்று குறைப்பட்டார் வசந்தா.

“கொஞ்சம் பொறுமையா இரு வசந்தா… நானும் காலையில் கடையில் வைத்து பேசினேன். ஆனா அவளும் கோபப்பட்டு என்னையும் கோபப்பட வச்சுட்டா. அதோட உன் மேலையும் தப்பு இருக்கு. நீ அவகிட்ட காலையில் விவரம் சொல்லும் போது வார்த்தையை அழகா கோர்த்துப் பொறுமையா சொல்லியிருக்கணும். ஆரம்பிக்கும் போதே ‘மாப்பிள்ளைக்கு இது இரண்டாவது கல்யாணம் தானாம்’னு நீ ஆரம்பிச்சது தப்பு.

இரண்டாவது கல்யாணம்னு சொல்லவும் முதல் முதலில் இந்த மாதிரி சம்பந்தம் வந்திருக்கிறதை கேட்டு அவ வித்தியாசமா நினைச்சுருப்பா. அவள் இந்த விஷயத்தை ஏத்துக்க நாமும் கொஞ்சம் டைம் கொடுப்போம். இருபத்தி ஆறு வருஷமா பொறுமையா அவளுக்குத் தேவையானது செய்து கொடுத்து வளர்த்துட்டோம். அதே மாதிரி கல்யாணமும் அவளுக்கு நல்லபடியா நடத்தி கொடுப்போம்…” என்றார்.

“ஆனா அவ பேசுறதைப் பார்த்தா வேண்டவே வேண்டாம்னு சொல்லுவா போல இருக்கேங்க?” என்று கேட்டார் வசந்தா.

“எனக்கும் அப்படித் தான் தோணுது. ஆனா ஏதோ ஒரு நம்பிக்கையும் இருக்கு. பொறுத்திருந்து பார்ப்போம்…” என்று பெருமூச்சு விட்டார் தியாகராஜன்.

பெற்றவர்கள் இருவரும் கவலையாகப் பேசிக் கொள்வதைக் கேட்டு சத்யாவிற்கு இன்னும் தான் மன உளைச்சல் கூடியது.

‘தான் என்ன முடிவெடுப்பது?’ என்று புரியாமல் குழம்பி போய்த் தூக்கம் வராமல் வெகு நேரம் தவித்தாள் சத்யா. அவளே அறியாமல் அவளை உறக்கம் தழுவிய போது நள்ளிரவை தாண்டி நேரம் ஓடியிருந்தது.