3 – சிந்தையில் பதிந்த சித்திரமே

அத்தியாயம் – 3

மாலை கல்லூரியிலிருந்து வந்ததும் சிறு குளியல் போட்டுக் கொண்ட கதிர்நிலவன் இலகுவான உடைக்கு மாறி விட்டு சமையலறைக்குச் சென்றான்.

முதலில் உளுந்தை நனைய வைத்தவன், காலையிலேயே ஊற வைத்த அரிசியைக் கழுவி எடுத்து வைத்தான்.

பின்பு காலையில் பயன்படுத்தியது போக மீதி இருந்த பாலை குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து சுட வைத்து காஃபி கலந்தவன், கூடவே ஒரு சான்ட்விச்சும் தயார் செய்து எடுத்து வந்து வரவேற்பறை சோஃபாவில் சென்று அமர்ந்தான்.

தொலைக்காட்சியை உயிர்ப்பித்துச் செய்தியை போட்டு அதைப் பார்த்துக் கொண்டே காஃபியையும், சான்ட்விச்சையும் எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாக உண்டு முடித்தான்.

காலையில் துவைத்து காய வைத்து விட்டு போன துணிகளை எடுத்து மடித்து வைத்தவன், மீண்டும் சமையலறைக்குச் சென்றான்.

கிரேண்டரை கழுவி மாவு ஆட்ட ஆரம்பித்தான். அந்த வேலையை முடித்ததும் படுக்கையறைக்குச் சென்றவன் ஜன்னல் அருகில் இருந்த மேஜையின் முன் அமர்ந்து அடுத்த நாள் வகுப்பிற்கான குறிப்பு எடுக்க ஆரம்பித்தான்.

ஏழு மணி வரை அந்த வேலையைப் பார்த்தவன், எடுத்து வைத்து விட்டு எழுந்து சென்று இரவு உணவாகச் சப்பாத்தியும், தக்காளி தொக்கும் செய்து எட்டு மணிக்குள் இரவு உணவை உண்டு முடித்தான்.

அவனின் வேலைகள் இயந்திரகதியில் எப்போதும் போல் நடந்தன.

அவனின் தேவைக்கான வேலைகளை அவனே பார்த்துக் கொள்வதால் சோர்ந்து அமர்ந்திருக்க அவனுக்கு நேரம் இருப்பதில்லை.

உணவு உண்டதும் பாத்திரங்களைக் கழுவி வைத்து விட்டு, சமையலறையை ஒதுங்க வைத்தான்.

பின், வெளியே வந்து வீட்டுக் கதவை பூட்டியவன் மொட்டை மாடிக்கு செல்ல படிக்கட்டில் ஏறினான்.

இரண்டு மாடிகளைக் கடந்து மொட்டை மாடிக்கு சென்றவன் மெல்ல நடைபயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்தான்.

இதுவும் அவனின் அன்றாடச் செயல்களில் அடங்கிப் போனவை.

அரட்டை அடிக்க நண்பர்களோ, அனுதினமும் போன் போட்டு விசாரிக்க மிக நெருங்கிய உறவினர்களோ அற்றவன் என்பதால் தன் நேரத்தை தனக்குப் பயன் உள்ளதாக எப்படிப் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அப்படிப் பயன்படுத்திக் கொள்வான்.

அரைமணி நேரம் நடந்தவன் எப்போதும் வழக்கமாக நிற்கும் சுவர் ஓரமாகச் சென்று நின்றான்.

அந்த அடுக்குமாடி கட்டிடத்தை ஒட்டி தெரு விளக்குகள் இருந்தாலும் அந்த விளக்கின் வெளிச்சம் மொட்டை மாடி வராது என்பதால் மாடி இருட்டாகத் தான் இருந்தது.

அந்த இருட்டில் நின்று வானத்தை அண்ணாந்து பார்த்தான்.

மின்மினிகளாக மின்னிக் கொண்டிருந்தன நட்சத்திரங்கள்.

எண்ணிலடங்கா நட்சத்திரங்களைக் கண்ணுற்று பார்த்தவனுக்குத் தன் அன்னையின் ஞாபகம் வந்தது.

‘உங்களுக்கு அப்படி என்ன அவசரம்னு என்னை விட்டு இவ்வளவு சீக்கிரம் போனீங்கமா? ஒரு மகனா உங்களுக்கு நான் எதுவும் செய்யும் கொடுப்பனை கூட நீங்க எனக்குக் கொடுக்கலையே மா. உங்க உழைப்பை மட்டும் வாங்கிட்டு, உங்களுக்கு நான் எந்தக் கடமையும் செய்ய எனக்கு ஏன்மா சந்தர்ப்பம் கொடுக்கலை?

இந்த மகன் கூட வாழ்ந்தது போதும்னு நினைச்சுட்டீங்களா? ஆனால் என்னால் முடியலைமா. எனக்கு இருந்த ஒரே உறவான நீங்களும் போன பிறகு தனிமை… தனிமை… எங்கும் எனக்குத் தனிமை மட்டும் தான் மா துணை.

இந்தத் தனிமை சில நேரம் சுகமாக இருந்தாலும் பல நேரம் நரக வேதனையா இருக்குமா. எனக்குன்னு மனசு விட்டு பேச கூட ஆள் இல்லாம என்னைச் சுற்றி வெறுமை மட்டுமே சூழ்ந்திருக்கு மா. இந்த வெறுமை எங்க ஒரு நாள் என்னையே என்னை வெறுக்க வச்சுருமோன்னு எனக்குப் பயமா இருக்கு மா…’ என்று அன்னையிடம் பேசுவது போல் மனதிற்குள் நினைத்துக் கொண்டவன், வானத்தில் மின்னிய நட்சத்திரங்களை வெறித்துப் பார்த்தான்.

மனம் நிறைய வெறுமை அண்டிக் கிடந்தாலும் அவனின் முகத்திலோ, உடல் மொழியிலோ எந்தச் சலனமும் இருக்கவில்லை.

அவனின் முகம் நிர்மலமாக இருக்க, அவனின் கண்களோ நிலா வெளிச்சத்தில் பளபளத்தன.

அப்போது அவனின் முதுகிற்குப் பின்னால் ஏதோ சலசலப்பு கேட்க, சட்டென்று விழிகளைச் சிமிட்டிக் கொண்டான். அவன் சிமிட்டிய வேகத்தில் அவனின் கண்களில் தேங்கி பளபளத்துக் கொண்டிருந்த நீர் துளிகள் அவனின் கன்னத்தில் சிதறித் தெறித்தன.

“இதுக்குத்தான் நான் வர மாட்டேன்னு சொன்னேன். இங்க பாரு எவ்வளவு இருட்டா இருக்குன்னு. சொன்னால் கேட்டாத்தானே. போ… நான் போறேன்…” என்று இளம் ஆண் குரல் கேட்டது.

“டேய் தயா, கொஞ்ச நேரம் இருடா. வீட்டுக்குள்ள அப்பா இருக்கிறதால சுதந்திரமா ஒன்னுமே பேச முடியலை. அப்பா நியூஸ் பார்த்து முடிக்கிற வரை மௌன விரதம் இருக்க முடியாதுன்னு தானே மாடிக்கு வந்தோம். வந்ததும் ஓடுறியே…” என்ற குரல் அடுத்ததாக ஓங்கி ஒலித்ததிலேயே குரலுக்குரியவள் யார் என்று திரும்பிப் பார்க்காமலேயே கதிர்நிலவனுக்குப் புரிந்து போனது.

‘ஸ்பீக்கர்…’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

கதிர்நிலவன் நின்ற பக்கம் தண்ணீர் தொட்டி இருந்ததால், தொட்டிக்கு அடுத்தப் பக்கம் இருந்த நயனிகாவிற்கும், அவள் தம்பி தயாவிற்கும் அவன் அங்கே இருப்பது தெரியாமல் போனது.

“அதுக்குத்தான் நாம பார்க்கிங் பக்கம் போகலாம்னு சொன்னேன். அங்கேயாவது லைட் எரிஞ்சிட்டு இருக்கும். ஆனா இங்கே பாரு பயங்கர இருட்டா இருக்கு…” என்றான் தயா.

“இருட்டை கண்டு பயப்பட நீ என்ன சின்னப் பப்பாவாடா? கீழே போனா ரோட்டில் போற வண்டி சத்தம், ஆளுங்க பேசுற சத்தம்னு கசகசன்னு இருக்கும். ஆனா இங்கே பாரேன். எவ்வளவு அமைதியா இருக்கு. வானத்தைப் பாரு. நிலாவும், சுத்தி இருக்கிற நட்சத்திரங்களும் பார்க்க அவ்வளவு அழகா இருக்கு. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு. இயற்கையை ரசிச்சுப் பழகுடா…” என்று தம்பியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் நயனிகா.

அவள் சொன்னதைக் கேட்ட கதிர்நிலவனின் ஒற்றைப் புருவம் லேசாக மேலே ஏறி நிதானமாகக் கீழே இறங்கியது.

அவள் சொன்ன காரணங்களுக்காகத் தான் அவனும் மாடியில் நடைபயற்சியை மேற்கொள்வது.

இரவு நேர அமைதியும், வெட்டவெளியில் வீசும் மெல்லிய காற்றும், இரவுக்கு அழகு சேர்க்கும் வான்வெளியின் அழகும் என்றும் அவனின் மனதை நிறைத்தவை.

‘அடைக்கும் உணர்வுகளை அசாத்தியமாக வெளியே தள்ளி விடும் சக்தி இயற்கைக்கே உண்டு’ என்பதால் தன் மன காயங்களை ஆற்றிக் கொள்ள அவனுக்கு உதவியாக இருப்பதும் இயற்கையே.

“இயற்கையை இருட்டில் நின்னு நீயே ரசி. நான் கீழே போறேன்…” என்றான் தயா.

“டேய்… டேய் தயா… தம்பி பையா… கொஞ்ச நேரம் இருடா. அப்பா நியூஸ் பார்த்து முடிக்கிறப்ப நாம கீழே போய்டலாம். அதுவரை மட்டும் இரு. உனக்கு வேணும்னா செல்போன் டார்ச் போட்டுக்கோ. அக்கா அப்படியே சுத்தி நடந்துட்டு வர்றேன். இந்தக் காத்து ஜில்லுன்னு சூப்பரா இருக்குடா. ப்ளீஸ்டா தம்பி பையா…” என்று தம்பியிடம் கெஞ்சினாள்.

“சரி, சரி… ஒரேடியா காலை பிடிக்காதே. நான் இங்கே நிற்கிறேன். நீ சீக்கிரம் நடந்துட்டு வா…” என்று தயா சொல்ல,

“சமத்துடா தம்பி பையா…” என்று தம்பியின் கன்னம் கிள்ளி கொஞ்ச போனாள்.

“ஏய், கிள்ளி வச்சுடாதே. ஏற்கனவே நீ கொஞ்சுகிறேன் என்ற பேருல கிள்ளி கிள்ளி என் கன்னம் பொத்தல் விழுந்து போயிருச்சு. இன்னும் கிள்ளி பெரிய ஓட்டையே போட்டு விட்டுடாதே…” என்று அவளிடம் தன் கன்னத்தைச் சிக்க விடாமல் விலகி கொண்டான்.

“இது என்னடா அநியாயமா இருக்கு? தம்பின்னு ஆசையா கொஞ்ச கூட விட மாட்டேங்கிற…” என்று சலித்துக் கொண்டாள்.

“இப்ப நீ நடக்கப் போறீயா? இல்ல நான் கீழே போகட்டுமா? பேசி பேசி டயத்தை வேஸ்ட் பண்ணிட்டு இருக்க…” தயா முறுக்கி கொள்ள,

“ஓவரா பண்ணாதேடா. இதோ போறேன்…” என்ற நயனிகா நடக்க ஆரம்பித்தாள்.

அக்கா, தம்பியின் விளையாட்டுப் பேச்சை கேட்டுக் காலையில் போல் உதட்டோரம் நெளிய விட்ட லேசான புன்முறுவலுடன் நின்று கொண்டிருந்தான் கதிர்நிலவன்.

‘உடன் பிறந்த பிறப்பு என்று ஒருவர் இருப்பதும் சுகம் தான் போலும்’ என்று எண்ணிக் கொண்டான்.

அவன் நின்றிருந்த பக்கம் நயனிகா நடந்து வரும் சப்தம் கேட்க, மெல்ல திரும்பி பார்த்தான்.

சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி நடந்து வந்து கொண்டிருந்த நயனிகா திடீரெனத் தன் முன் ஒரு உருவத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டு நின்றாள்.

இவ்வளவு நேரத்தில் இருட்டுக்குக் கண்கள் பழகி விட்டதால் உருவத்தின் முகம் தெரிய, அங்கே தன் பேராசிரியர் நிற்கிறார் என்று புரிந்ததும், “அது வந்து சார், சும்மா நடக்கலாம்னு…” என்றாள் தயக்கத்துடன்.

அவளுக்கு லேசாகத் தலையை அசைத்தவன், ‘போ…’ என்பதாக ஜாடை காட்டினான்.

“என்னக்கா, யார்க்கிட்ட பேசுற? ஒருவேளை பேய் எதுவும் அந்தப் பக்கம் உலாத்துதா என்ன?” என்று தமக்கையின் பேச்சுச் சப்தம் கேட்டு குரல் கொடுத்தான் தயா.

“ஷ்ஷ்… பேசாம இருடா. இது எங்க சார்…” தம்பி பேய் என்றதில் பதறி கத்தினாள்.

அவளின் கத்தலில் காதில் லேசாகக் குடைந்து கொண்டான் கதிர்நிலவன்.

“நீ கத்துற கத்தில் நான் பேயாகவே ஆகிடுவேன் போல…” என்றான்.

“அச்சோ! சார், இல்லை சார்…” என்ன சொல்வது என்று அறியாமல் நயனிகா தடுமாறிக் கொண்டிருக்கும் போதே, செல்போன் வெளிச்சத்தைக் காட்டிய படி அங்கே வந்தான் தயா.

அங்கே அக்காவின் முன் நின்றிருந்த ஆடவனைக் கண்டு தயா கேள்வியாகப் பார்க்க,

“இவர் தான் என்னோட மேத்ஸ் ப்ரொபஸர் தயா…” என்று தம்பிக்கு கதிர்நிலவனை அறிமுகப்படுத்திவள், “இவன் என் தம்பி தயாகர் சார்…” என்றாள் கதிர்நிலவனிடம்.

பேராசிரியர் என்றதும் பள்ளி இறுதி வருடத்தில் இருக்கும் தயாவின் உடலில் தன்னிச்சையாகப் பணிவு வந்துவிட, “வணக்கம் சார்…” என்றான்.

அவனின் வணக்கத்தை லேசாகத் தலையை அசைத்து ஏற்றுக் கொண்டவன், “நீங்க நடங்க…” என்று சொல்லிவிட்டு அங்கே அதற்கு மேல் நிற்காமல் படியை நோக்கி நடக்க ஆரம்பித்தான் கதிர்நிலவன்.

அவன் சென்றதும் “ஷ்ஷ்! ஷப்பா!” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டாள் நயனிகா.

நாட்கள் அதன் வேகத்தில் செல்ல, நயனிகாவிற்குக் கல்லூரி வாழ்க்கை வழக்கம் போல் சென்றது.

கதிர்நிலவன் தன் வேலையைத் திறம்படச் செய்தான். மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியர் ஆகிப்போனான் என்று சொன்னால் அது மிகையல்ல.

வீட்டில் தான் அண்டை வீட்டாரிடம் பழக்க வழக்கங்கள் வைத்துக் கொள்வது இல்லையே தவிர, கல்லூரியில் மாணவர்களிடம் நன்றாகப் பேசினான்.

அவர்கள் கேட்கும் கேள்விக்குப் பொறுமையாகப் பதில் சொன்னான்.

துர்காவிற்குப் பதில் தற்காலிகமாகப் பணியில் அமர்த்தப்பட்டவன் என்பதையும் தாண்டி அவனே தங்களுக்கு நிரந்தரப் பேராசிரியராக வர வேண்டும் என்று மாணவர்கள் ஆசை கொள்ளும் வண்ணம் அவனின் வேலையைச் சிறப்பாகச் செய்தான்.

அதே நேரம் நயனிகா, கதிர்நிலவன் இருவருக்கும் இடையே ஆசிரியர், மாணவி என்பதைத் தாண்டி அதன் பிறகு எந்தப் பேச்சு வார்த்தைகளும் நடந்து கொள்ளவில்லை.

அவனின் இடத்தில் தான் வண்டியை நிறுத்துவாள் என்றாலும், அவளை அங்கே நேராகப் பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் கடந்து விடுவான்.

வீட்டின் அருகிலும், மாடியிலும் பார்த்தாலுமே அப்படித்தான்.

அதே நேரம் கல்லூரியில் பாடம் சம்பந்தமாகப் பேச வேண்டியது வந்தால் ஒரு ஆசிரியராக எந்த வேறுபாடும் காட்டாமல் அவளிடம் பேசுவான்.

அதுதான் அவனின் இயல்பு என்பதை அவளும் இத்தனை நாட்களில் புரிந்து கொண்டிருந்தாள்.

அதோடு அவன் வலது கையைக் கால்சட்டை பையில் வைத்துக் கொண்டு இடது கையால் பலகையில் எழுதுவதும், தலையைக் கோதி கொள்வதும், இடது கையை மட்டும் ஆட்டி அவன் பேசும் மேனரிசமும் மாணவிகள் பலருக்குப் பிடித்தமானதாக ஆகிப் போனது.

“சார் என்னடி வலது கையை வெளியே சும்மா கூட நீட்ட மாட்டேங்கிறார். அது தான் அவரின் பழக்கமோ?” என்று பானு ஒரு நாள் நயனியிடம் கேட்க,

“லெப்ட் ஹேண்ட் பழக்கம் என்பதால் அப்படி இருக்கார் போலப் பானு. அங்கே வீட்டில் இருக்கும் போதும் சார் அப்படித்தான் இருப்பார். ஆனா அதுவும் நல்லாத்தான் இருக்கு பானு. அப்படியே ஒரு கையைப் பேண்ட் பாக்கெட்டில் விட்டுட்டு இடது கையால் அவர் தலை கோதுவதே தனி அழகா இருக்குடி…” என்றாள் நயனிகா.

“அது என்னவோ உண்மை தான்…” என்றாள் பானு.

அவர்களின் வயதுக்கே உரிய ஒரு ரசிப்பு தன்மையை மட்டுமே அவர்கள் வெளிப்படுத்தினர்.

மற்றபடி அவனின் மீது தனி மரியாதை வைத்திருந்தனர்.

அன்று காலை இளம் பச்சை நிறத்தில் சுடிதார் அணிந்து கண்ணாடியின் முன் நின்று தலைவாரி, புருவங்களுக்கு நடுவில் சின்னதாக ஸ்டிக்கர் பொட்டை வைத்துக் கொண்டாள் நயனிகா.

வேறு எந்த ஒப்பனையும் அவளிடம் இல்லை. சிம்பிளாகக் கிளம்பினாலும் அதிலும் அவளின் முகம் பளிச்சென்று ஜொலித்தது.

அன்னை வைத்த உணவை உண்டுவிட்டு “போய்டு வர்றேன்மா…” என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.

அவளின் தந்தையும், தம்பியும் முன்பே அலுவலகமும், பள்ளியும் சென்றிருந்தனர்.

அவளின் தந்தை ஞானசேகரன் ஒரு தனியார் கம்பெனியில் மேனேஜராக இருந்தார். தம்பி தயாகர் பன்னிரெண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தான். தாய் அபிராமி இல்லத்தரசியாக இருந்தார்.

அவளின் அன்னை கண்டிப்பும், மென்மையும் கலந்தவர் என்றால், தந்தை கண்டிப்புக்கு மட்டுமே பெயர் போனவர்.

அவர் வீட்டில் இருக்கும் போதே வீடே அமைதியாகத்தான் இருக்கும். கூச்சலோ, அதிகச் சப்தமோ இருந்தால் கூட அதட்டுவார்.

அதனால் தந்தை வீட்டில் இருக்கும் போது பிள்ளைகள் இருவரும் அடக்கித்தான் வாசிப்பர். அதே அவர் வீட்டில் இல்லாத நேரம் அடக்கி வாசித்ததற்கும் சேர்த்து ஆட்டம் போடுவர்.

அதிலும் நயனிகாவின் குரல் உயர்ந்து தான் ஒலிக்கும். மெதுவாகப் பேச சொல்லி அவளின் அன்னை கண்டித்தாலும் அவளால் இன்னும் தன்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

அன்னையிடம் சொல்லிவிட்டு கல்லூரிக்கு கிளம்பியவள் வீட்டை விட்டு வெளியே வந்ததும் கதிர்நிலவனின் வீட்டை திரும்பி பார்த்தாள்.

அவன் வீட்டு பூட்டி இருந்தது. லேசான தோள் குலுக்கலுடன் கீழே சென்றாள். அவனின் கார் இன்னும் நின்று கொண்டிருக்க, ‘சார் இன்னும் கிளம்பலை போல’ என்று நினைத்துக் கொண்டே தன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

கல்லூரிக்கு சென்று சேர்ந்து தோழிகளுடன் அரட்டை அடிக்க ஆரம்பித்தாள்.

அன்று முதல் வகுப்பு கணக்குப் பாடப்பிரிவு தான். ஆனால் வகுப்பு நேரம் ஆரம்பித்த பிறகும் கதிர்நிலவன் வகுப்பிற்கு வரவில்லை.

மாணவர்கள் அவனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த நேரத்தில் ஆங்கிலப் பாட பேராசிரியர் உள்ளே நுழைந்தார்.

“ஸ்டுடெண்ட்ஸ், இன்னைக்குக் கதிர்நிலவன் சார் லீவ். அதனால் இந்த ப்ரீயர்டை இன்னைக்கு நான் எடுத்துக்கப் போறேன். அவர் வந்த பிறகு என் கிளாஸை ஒரு நாளைக்கு அவருக்கு மாத்திக் கொடுத்திடுவேன். இப்ப கிளாஸ் ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டவர் பாடத்தை ஆரம்பித்தார்.

‘என்னாச்சு? ஏன் சார் வரலை?’ என்ற யோசனையுடன் வகுப்பை கவனித்தாள் நயனிகா.

அவளின் மனதில் இருந்த கேள்வியை ஒரு மாணவன் வகுப்பு முடிந்த நேரத்தில் ஆங்கில ஆசிரியரிடம் கேட்டான்.

“கதிர் சார் ஏன் லீவ் சார்?” என்று அந்த மாணவன் கேட்க,

“ஹெல்த் பிராப்ளம் போல. சிக் லீவ் எடுத்திருக்கார்…” என்று சொல்லிவிட்டு சென்றார் அவர்.

‘அச்சோ! சாருக்கு என்னாச்சு? காலையில் வீடு பூட்டி இருப்பதைப் பார்த்துட்டு லேட்டா வருவார்னு நினைச்சுட்டு வந்துட்டேனே. அவருக்கு உடம்புக்கு என்னன்னு தெரியலையே? வீட்டில் தனியா வேற இருக்கார். தனியா எப்படிச் சமாளிப்பார்?’ என்று அன்று கல்லூரி முடியும் வரை கதிர்நிலவனைப் பற்றியே சிந்தனையில் இருந்தாள் நயனிகா.

கல்லூரி முடிந்ததும் முதல் ஆளாக வீட்டிற்குக் கிளம்பினாள்.

வீடு சென்று முதலில் தன் வீட்டிற்குச் செல்லாமல் அவனின் வீட்டின் முன் நின்று அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருந்தாள்.

ஆனால் பத்து நிமிடங்கள் கடந்த பிறகும் கதவை திறக்கவே இல்லை கதிர்நிலவன்.