3 – உனதன்பில் உயிர்த்தேன்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 3
“இங்கன உட்காருமா. நா போயி நர்சம்மாக்கிட்ட டாக்டரு வந்துட்டாரான்னு கேட்டுக் போட்டு வாறேன்…” என்று அந்த மருத்துவமனை வராண்டாவிலிருந்த இருக்கையில் அன்னையை அமர வைத்து விட்டு மருத்துவர் அறையின் பக்கம் சென்றாள் தேன்மலர்.
முத்தரசிக்கு மூன்று நாட்கள் ஆகியும் காய்ச்சல் விடவில்லை.
கைவைத்தியம் பார்த்தும் குணமாகாமல் போனது. அதோடு வயல் வேலையையும் மகள் சொல்ல சொல்ல கேட்காமல் இழுத்துப் போட்டுச் செய்ய, உடல் இன்னும் பாதிக்கப்பட்டது.
அதிலும் நேற்று இரவு முழுவதும் தொடர் இருமலில் அவதிப்பட்டுத் தூக்கத்தையே தொலைத்திருந்தார்.
காலையில் முதல் வேலையாக மருத்துவமனை வேண்டாம் என்று அடம்பிடித்த அன்னையைக் கட்டாயப்படுத்திச் சில கிலோ மீட்டர் தொலைவில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தாள் தேன்மலர்.
“டாக்டரு வந்துட்டாராம் மா. ஆனா கூட்டம் கூடிருச்சு. செத்த நேரம் காத்திருக்கச் சொல்லிருக்காங்க…” என்று விசாரித்து விட்டு வந்து சொன்னாள்.
“இதுக்குத்தேன் ஆஸ்பத்திரிக்கு எல்லாம் வேணாம்னு சொன்னேன். இனி எப்ப கூட்டம் குறைய? நாம எப்ப டாக்டரை பார்க்க? சுக்கு, மல்லி காபி வச்சு குடிச்சாலே சரியாப்போயிடும். அதை விட்டுப் போட்டு இம்புட்டு தொலவட்டு என்னைய இழுத்துப் போட்டு வந்துட்ட. இன்னைக்குப் பூ பறிக்க நாழியாகி போயிடும்…” என்று புலம்பினார்.
“ஆனா ஆகிப்போட்டு போவுது போம்மா. ராவெல்லாம் ஒரு பொட்டு கூடக் கண்ணை மூடாம இரும்பிக்கிட்டு கிடந்தீரு. அதெல்லாம் உமக்கு மறந்து போவுமே. இன்னும் ரெண்டு நாளைக்காவது நீரு வயலுல காலை வையும், அப்புறமேட்டுக்கு இருக்கு உமக்கு…” அன்னையைக் கடிந்து கொண்டாள் மகள்.
“சரிதேன். இந்தக் காய்ச்சலெல்லாம் என்னைய என்ன செய்யும்? நாலு நாளைக்கு இருக்கும். அப்புறமேட்டுக்கு அதுவா போயிட போவுது. இதுக்குப் போயி ரொம்பத்தேன் அலும்பு பண்ற. காய்ச்சலுக்கு எல்லாம் படுத்துக் கிடந்தா பொழப்பு நடக்குமா?”
“எம்மா, பேசாம இரும். மசமசன்னு கடுப்பு வருது. ஏதாவது சொல்லிப்புட போறேன்…” பல்லைக் கடித்தாள் மகள்.
அதையெல்லாம் காதிலேயே அவர் வாங்கிக் கொள்ளவில்லை.
சற்று நேரத்தில் மருத்துவரை பார்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தனர்.
வீட்டிற்குள் வந்ததும் அன்னைக்கு உணவை கொடுத்து அவர் மாத்திரை போட்டதும் படுக்கச் சொல்லிவிட்டு, ராசுவை அவருக்குக் காவல் வைத்து விட்டு பூ பறிக்கச் சென்றாள்.
அன்று வேலைக்கு ஆள் சொல்லவில்லை என்பதால் அவள் மட்டும் தனியாகப் பறிக்க ஆரம்பித்தாள்.
அன்றன்றைக்குப் பறிக்கும் பூக்களை அன்று மாலை டவுனுக்குச் செல்லும் பேருந்தில் ஏற்றி அனுப்பி விடுவது வழக்கம்.
பேருந்தை தவற விட்டுவிட்டால் ஊர்காரர்கள் யாராவது பைக்கில், அல்லது மினி வேனில் அந்தப் பக்கம் செல்லும் போது கொடுத்துவிடுவர்.
அன்று தனியாகப் பூக்களைப் பறித்தாலும் பத்துகிலோவிற்குப் பறித்து முடித்த தேன்மலர் அதைப் பேருந்தில் அனுப்ப அந்த ஊர் பஸ் நிற்கும் மரத்தடிக்கு ஓடினாள்.
ஆனால் அவள் மரத்தடிக்கு நெருங்கும் போதே அந்தப் பேருந்து வந்து விட்டுத் தூரத்தில் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தவள் இடுப்பில் கை வைத்து மூச்சு வாங்கினாள்.
பறித்த பூக்களை அன்றே அனுப்ப வேண்டும். அப்போது தான் அதற்கு உரிய விலை கிடைக்கும். அன்று மீண்டும் அந்த ஊருக்கு ஏழு மணி அளவில் தான் பேருந்து வரும்.
அதன் பிறகு அனுப்ப முடியாது என்பதால் என்ன செய்வது என்று அறியாமல் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டு நின்றாள். யாராவது டவுனுக்குப் போனால் கொடுத்து விடுவோம் என்ற நினைப்பில் அவள் சிறிது நேரம் நின்று பார்த்தாள்.
ஆனால் யாரும் செல்வது போல் தெரியவில்லை என்றதும் சோர்வுடன் மீண்டும் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அவளின் தோட்டத்தை நெருங்கும் போது எதிரே தன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தான் வைரவேல். வண்டியின் பின் பக்கம் ஒரு மூட்டையை வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தான்.
அதைப் பார்த்ததும் அது மல்லிகை பூ மூட்டை தான் என்பது புரிந்து போக, அவளின் நடை தயக்கத்துடன் மெதுவாகியது.
அவனும் இன்று பேருந்தை விட்டுவிட்டுப் பைக்கில் டவுனுக்குக் கிளம்பியிருந்தான்.
அவனும் எதிரே வந்தவளின் கையில் இருந்த பூ மூட்டையைப் பார்த்தான்.
அவனிடம் உதவி கேட்போமா? வேண்டாமா? என்பது போலான மெல்லிய தயக்கம் தேன்மலரின் முகத்தில் இழைந்தோடியது.
அவன் குடிபோதையில் விழுந்து கிடந்த போது அவனிடம் பேசியிருக்கிறாளே தவிர, அவன் தெளிவுடன் இருக்கும் போது பேசியதே இல்லை.
பக்கத்து வயலை சேர்ந்தவன் தான் என்றாலும் எந்தச் சூழ்நிலையிலும் இயல்பாகப் பேசிக் கொள்ளும் சந்தர்ப்பம் அமையவில்லை.
அதுவும் குடிபோதையில் இருந்ததால் மட்டுமே அவள் உதவி செய்யும் போது அவனையே அறியாமல் ஏற்றுக் கொண்டானே தவிர, தெளிவாக இருக்கும் போது கண்டுகொள்ளவே மாட்டான்.
அப்படிப்பட்டவனிடம் அவளால் சட்டென்று கேட்டுவிட முடியவில்லை.
அவளைப் பார்த்துக் கொண்டே அவளைத் தாண்டி சென்றான். இன்னைக்குப் பத்துகிலோ பூ வேஸ்ட் என்ற வருத்தத்துடன் தன் நடையின் வேகத்தை மீண்டும் கூட்டினாள்.
அப்போது அவளின் முதுகிற்குப் பின் பைக்கின் ஹாரன் ஒலி கேட்க, திரும்பி பார்த்தவள், வியப்புடன் அவனைப் பார்த்தாள்.
வைரவேல் தான் திரும்பி வந்திருந்தான். ஒன்றும் பேசாமல் அவள் கையில் இருக்கும் மூட்டையைப் பார்த்துக் கையை நீட்டினான்.
அதில் இன்னும் அதிசயமாக உணர்ந்தவள் அவனிடம் மூட்டையைக் கொடுத்தாள்.
வாங்கித் தன் மூட்டையுடன் சேர்த்து வைத்தவன், ஒன்றும் பேசாமல் வண்டியை கிளம்பிக் கொண்டு சென்றான்.
“மழ இன்னைக்குப் பொத்துக்கிட்டு ஊத்த போகுது…” என்று தனக்குள் முனங்கிக் கொண்டு தூரத்தில் சென்றவனைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டாள் தேன்மலர்.
இருசக்கர வாகனத்தில் சென்ற வைரவேலின் முகத்தில் யோசனை படிந்திருந்தது.
அவனுக்கும் அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எந்த விருப்பமும் இல்லை தான். அதென்னவோ அவளுடனோ, அவளின் அன்னையுடனோ அவன் பேசவே மாட்டான். ஊராரில் நிறையப் பேரும் அவர்களுடன் பேசுவது இல்லை.
ஆனாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தான் அன்னையும், மகளும் தங்கள் பிழைப்பை மட்டும் பார்த்துக் கொண்டு அமைதியாக ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருந்தனர்.
ஊரோடு ஒத்துவாழ் என்பது போல் அவனும் விலகித்தான் செல்வான். ஆனால் இன்று அவ்வாறு செல்ல முடியவில்லை.
அன்று அவனின் அப்பத்தா சொன்னதே காரணம். அவள் தான் தன்னை வீட்டில் சென்று விட்டாள் என்று தெரிந்த பிறகும் அவளுக்கு இதுவரை அவன் ஒரு நன்றி கூடச் சொன்னது இல்லை.
இப்போது அவளுக்கு உதவி செய்யும் சாக்கில் அவளுக்கு நன்றி தெரிவிக்க மட்டுமே திரும்பி வந்து வாங்கிச் சென்றான்.
மாலையில் டவுனிலிருந்து வந்தவன் வயல் பக்கமாக வந்து எதிரே வந்தவள் கையில் காசை அமைதியாக நீட்டி கொடுத்து விட்டு திரும்பி நடந்தான்.
“யோவ், நில்லு!” சென்றவனை நிறுத்தினாள் தேன்மலர்.
வியப்பாக நின்று திரும்பி பார்த்தான் வைரவேல்.
“ஆமா, அதென்ன? குடிச்சுப்புட்டு நேரா வூடு போய்ச் சேராம நிலத்துலேயே விழுந்து கிடக்கீரு? நானும் தினமுமா உம்மை ஓ வூட்டுல கொண்டு போய் விட முடியும்? இனிமேட்டுக்குச் சாராயம் குடிச்சா ஒழுங்கா வூடு போய்ச் சேரும்…” என்று சொன்னவள் அவனின் பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட்டாள்.
‘என்ன தினமுமா?’ என்று திகைத்துப் போனான் வைரவேல்.
அவனுக்கு அன்று ஒரு நாள் மட்டுமே அவள் உதவி செய்தாள் என்று தெரியும்.
அன்று மட்டுமில்லாமல் அதன் பிறகு இரண்டு நாட்கள் அவள் தான் அவனை வீட்டில் சென்று விட்டாள்.
மூன்றாவது முறை அவனின் கிணற்றடிக்கு சென்றவன் மனைவியை நினைத்து புலம்பி விட்டு அங்கேயே விழுந்து கிடந்தான்.
அவன் கிணற்றடிக்குச் செல்லும் போது பின்பக்கமாகத் துணி துவைத்துக் கொண்டிருந்த தேன்மலர் கண்டிருந்தாள்.
அவள் துவைத்து முடித்து, துணியைக் காயப்போட்டு விட்டு, கிடந்த அழுக்கு பாத்திரங்களையும் துலக்கி முடித்த பிறகும் அவன் திரும்பி வரவே இல்லை.
கண்டுகொள்ளாமல் விட்டு விடவும் ஏனோ மனம் வரவில்லை.
இந்த நேரம் வயலில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அவளின் மனது ஏனோ காரணமின்றித் துடித்தது.
அவளின் தந்தை பாம்பு கடித்து இறந்தார் என்பதாலோ என்னவோ குடித்து விட்டு தன் உணர்வின்றி விழுந்து கிடப்பவனை நினைத்து வருத்தமாக இருந்தது.
என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்தவள், ராசுவை அழைத்தாள்.
“ராசு, அந்த ஆளு அதோட கிணத்துமேட்டுக்கு போச்சு. ஆனா இன்னும் திரும்பி வர காணோம். அந்த ஆளு அங்க கிடக்கான்னு பார்த்துப்போட்டு வாரும்…” என்றாள்.
அதுவும் புரிந்து கொண்ட பாவனையில் வாலை ஆட்டிவிட்டு வேகமாக ஓடியது.
சிறிது நேரத்தில் கிணற்றுப் பக்கம் ராசு குரைக்கும் சத்தம் கேட்டது.
பின் வேகமாகத் திரும்பி வந்து அவளின் சேலையைப் பிடித்து இழுத்தது.
“என்னய்யா ராசு, அந்த ஆளு அங்கன தேன் கிடக்காரா?” என்று கேட்க,
“வவ்… வவ்…” என்றது.
“இந்த ஆளு இப்படியே கிடக்காரு. பொஞ்சாதி போனது துக்கம் இருக்கும்தேன். அதுக்காக இப்படியா தன் ஒசாரே இல்லாம கிடப்பாக. ஒன்னுகிடக்க ஒன்னு ஆனா என்ன பண்ண முடியும்?” என்று புலம்பிக் கொண்டே கிணறு பக்கம் சென்றாள்.
அவள் சென்று பார்த்த போது கிணற்றடியில் வயிற்று பிள்ளை போல் கையையும், காலையும் சுருட்டிக் கொண்டு படுத்துக் கிடந்தான் வைரவேல்.
அவனின் கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்து கோடாக இறங்கி மண் தரையில் சொட்டாக விழுந்து கிடந்தது.
அவனை அப்படிப் பார்த்ததும் பெண்களுக்கே உண்டான தாய்மை குணம் மேலெழுந்து ததும்ப இரக்கத்துடன் அருகில் சென்றாள்.
“யோவ்! என்ன இது? இப்படிக் கிடக்குற?” என்று அவள் கேட்க,
“ஏய், யாரது? என்னைய தொந்தரவு பண்ணாத! நா எம் பொஞ்சாதி மடியில படுத்துருக்கேன். நா எம் பொஞ்சாதி மடியில தேன் ராவுக்குத் தூங்குவேன். போ… நீ போ…” என்று அவன் சொன்னதும் சட்டென்று அவளின் கண்கள் கலங்கி போனது.
அவளின் முகத்தைப் பார்த்த ராசு, சத்தம் போட்டு குரைக்க ஆரம்பிக்க, “ஏய், நாயி அங்கிட்டுப் போய்க் குலை. எம் பொஞ்சாதிக்கு நாயினா பயம். அவ பயந்துக்குவா…” என்று போதையிலேயே உளற ஆரம்பித்தான்.
“ராசு கத்தாம இரும்…” என்று தேன்மலர் சொன்னதும் ராசு அமைதியானது.
“நீ பயப்படாத ராசாத்தி. நாயை நா தொரத்தி விட்டுட்டேன். நீ அப்படியே ஏ தலையைப் பிடிச்சு விடு. தலை எல்லாம் பாரமா கனக்குது ராசாத்தி. தலையா? மனசா? தெரியலை கண்ணம்மா. ஆனா வலிக்குது…” என்று அவன் சிணுங்கவும், கேட்டுக் கொண்டிருந்தவளின் நெஞ்சம் கனத்துப் போனது.
அவனின் அருகில் மெல்ல அமர்ந்தவள், “உம்ம பொஞ்சாதி தேன் உம்மை வூட்டுல போய்ப் படுக்கச் சொல்லுச்சுயா. எழுந்திரி போவோம்…” என்றாள்.
“எம் பொஞ்சாதி தேன் சொன்னாளா?” இமைக்களை விரித்துச் சுருக்கி பார்த்து கேட்டான்.
“ம்ம், ஆமா…” என்று அவள் சொன்னதும் எழுந்து நின்றான்.
போதையில் அவனின் கால்கள் தள்ளாட, அப்படியே பின்னால் விழ போனான்.
“யோவ், பார்த்து…” என்று பதறியவள் அவனைச் சட்டென்று பிடித்து நிறுத்தினாள்.
“கிணத்துல விழுந்திடுவேன்னு பயந்துட்டியா? விழுந்தாலும் எமக்கு ஒன்னும் ஆவாது. எம் பொஞ்சாதி அங்கன தேன் இருக்கா. என்னைய பத்திரமா பார்த்துப்பா…” என்றான்.
அவளின் மனம் மேலும் மேலும் பாரமானது. இதற்கு முன் அவள் மனம் இப்படிக் கலங்கியதே இல்லை.
அன்று அவள் அவனை வீட்டில் சென்று விட்ட போது அவனின் அப்பத்தா உள்ளே ஏதோ வேலையாக இருந்ததால் அன்றும் அவர் கவனிக்கவில்லை.
அப்பத்தா அதன் பிறகு எதுவும் சொல்லாததால் அவனுக்கும் தெரியவில்லை.
அவள் சொல்லி சென்றதும் அவனுக்குச் சங்கடமாகப் போனது.
அதனால் அன்று குடிக்கச் சென்றவன் நிதானம் இருக்கும் அளவில் மட்டும் குடித்து விட்டு வீடு போய்ச் சேர்ந்தான்.
அன்று இரவு அவன் வயல் பக்கம் வரவில்லை என்றதும் சற்று நிம்மதி மூச்சு விட்டுக் கொண்டாள் தேன்மலர்.
“வாங்கய்யா… வாங்க…” என்று காலையில் அப்பத்தா யாரையோ அழைக்கும் குரல் கேட்க, மெல்ல கண் விழித்தான் வைரவேல்.
“என்ன ஆத்தா, மாப்ள வெளியவே படுத்துக்கிடக்காக?” என்று கேட்ட குரல் அவனின் மாமனாரின் குரலாக இருக்கப் படுக்கையிலிருந்து பட்டென்று எழுந்து அமர்ந்தான்.
“மாமா… அய்த்தை… வாங்க…” என்று மாமியார், மாமனாரை வரவேற்றான்.
“சவுக்கியமா மாப்ள?” என்று நலம் விசாரித்தனர்.
“இருக்கேன் மாமா. நீங்க எப்படி இருக்கீக?”
“ஏதோ, இருக்கோம் மாப்ள. இருந்த ஒத்த புள்ளயவும் எமனுக்குத் தூக்கி கொடுத்துட்டோம். எங்கள எமன் எப்ப தூக்கிபோவும்னு காத்துக்கிட்டு கிடக்கோம்…” அவனின் மாமனார் தழுதழுத்த குரலில் சொல்ல,
அவனின் மாமியார் முந்தானையால் வாயை மூடிக் கொண்டு அழுதார்.
அப்பத்தாவும் கண்கள் கலங்கிப் போனார்.
தன் சிவந்த கண்களை மாமியார், மாமனாருக்குக் காட்டாமல் குனிந்து கொண்டான் வைரவேல்.
“ஏத்தா கோமதி, அழாதத்தா. உள்ளார வா. நீரும் உள்ளார வாய்யா. எய்யா வேலு என்ன மசமசன்னு இருக்க? ஓ அயித்தையும், மாமனும் வந்துருக்காக. போயி வெள்ளாட்டு கறியா ரெண்டு கிலோ எடுத்துட்டு வாய்யா…” என்று அப்பத்தா நிலைமை சீராக்க முயன்றார்.
“கவுச்சி எல்லாம் வேணாம் ஆத்தா. நாங்க சும்மா உம்மையெல்லாம் பார்த்துப் போவலாம்னு தேன் வந்தோம்…” கோமதி சொல்ல,
“நம்ம வூட்டுக்கு வந்துபோட்டு உங்காம போறதா? வேலு அவுக அப்படித்தேன் சொல்லுவாக. நீரு வெரசா போயி வாங்கிட்டு வாரும்…” என்றார்.
“சரி அப்பத்தா. மாமா உள்ளார போயி டீ தண்ணி குடிச்சுட்டு இருங்க. நா இதோ வந்துபுடுறேன்…” என்றவன் எழுந்து கிளம்பினான்.
சற்று நேரத்தில் கிளம்பி கடைக்குச் சென்று ஆட்டுக்கறி எடுத்து வந்து கொடுத்தான்.
அப்பத்தாவும், அவனின் மாமியாரும் சேர்ந்து உணவை தயாரிக்க அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்.
“எம்மக இருந்து ஆக்கிப்போட வேண்டியது. இப்படியா அல்பாய்சில் போவா? கல்யாணம் கட்டி ஒரு மாசந்தே வாழ்ந்திருக்கா. பூ போல வெள்ளை மனசு அவளுக்கு. யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைச்சது இல்ல.
நா யாரையாவது திட்டினா கூட, திட்டாதமா. பாவம் அவுகளுக்கும் மனசு வலிக்கும்லன்னு எம் புள்ள பாவம் பார்ப்பா. அவளைப் போயா காலன் இம்புட்டு சீக்கிரமா அழைச்சுக்கிடணும்…” அங்கிருந்த மகளின் புகைப்படத்தைப் பார்த்து புலம்பி அழுதார் கோமதி.
அனைவரும் கண்கலங்கி அமைதியாக இருந்தனர்.
“விடு கோமதி, வந்த விசயத்தைப் பேசிப் போட்டு போவோம். நாம அழுது புலம்பினா போனவ வந்துற போறாளா?” என்று அவரின் கணவர் கோவிந்தன் சொல்ல, மெல்ல தன்னைத் தேற்றிக் கொள்ள முயன்றார் கோமதி.
“என்ன விஷயமய்யா?” என்று சுவற்றில் சாய்ந்து, கால் நீட்டி அமர்ந்திருத்த அப்பத்தா கேட்டார்.
“இந்த நேரத்துல இதைப் பத்தி நா பேசக் கூடாது தேன் ஆத்தா. ஆனா சமயம் அப்படி அமைஞ்சு போச்சு…” என்றார் கோவிந்தன்.
வைரவேல் கேள்வியாக மாமனாரை பார்த்தான்.
அவரின் பார்வையும் அவனின் மீது கூர்மையாகப் படிந்தது.
“எம்புள்ள போயி சேர்ந்து கொஞ்ச நாளு தேன் ஆகுது. நா ஒரு வருசத்துக்கு இத பத்தி பேச வேணாம்னு தேன் இருந்தேன். ஆனா நடக்குறதை எல்லாம் பார்த்தா, நாளை தள்ளி போடுறது சரியில்ல. அதுதேன் இப்பவே பேசிப் போடுவோம்னு வந்துட்டேன்…” என்றார்.
“என்ன மாமா சொல்றீக? என்ன பேசணும்? சுத்தி வளைக்காம பேசுங்க மாமா…” என்றான் வைரவேல்.
கோவிந்தன் மனைவியைத் திரும்பி பார்த்தார். ‘பேசுங்க’ என்பது போல் தலையை அசைத்தார் கோமதி.
அவர்களின் முத்தாய்ப்பு ஏதோ பெரிய விஷயம் என்பதை எடுத்துரைக்க, அப்பத்தாவும், பேரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“எம் புள்ள போனதில இருந்து மாப்ள சாராயம் குடிக்கிறாருன்னு கேள்விப்பட்டோம். எம் புள்ள நினைப்புல மாப்ள அப்படி இருக்காருன்னு நினைச்சோம். ஆனா இப்ப…” என்று அவர் இழுக்க,
“அதுதேன்ய்யா. எம் பேரன் பொஞ்சாதி போன துக்கத்துல தூக்கத்தையே இழந்து போயிட்டான்யா. கண்ணை மூட முடியலை அப்பத்தா. எம் பொஞ்சாதி நினைப்பு மனசை அறுக்குதுன்னு அழுது புலம்புறான்யா. அந்தச் சாராயத்தைக் குடிச்சாத்தேன் கொஞ்சமாவது கண்ணை மூட முடியுதுனு அதைக் குடிச்சுப் போடுறான். அதுக்கு நீங்க விசனப்படாதீக…” என்றார் அப்பத்தா.
“எம் புள்ள நெனப்பு மாப்ள மனசுல இருக்குறது எமக்குச் சந்தோசந்தேன் ஆத்தா. ஆனா… இப்ப கொஞ்ச நாளா குடிச்சுப்போட்டு இந்த ஊரு தோப்புக்காரி வயலுல விழுந்து கிடந்திருக்காரு. அந்தப் புள்ள மூணு முறை கூட்டி வந்து வூட்டுல விட்டுருக்கு.
தோப்புக்காரி பத்தி நா சொல்லி உமக்கெல்லாம் தெரிய வேண்டியது இல்லை. இந்தச் சவகாச தோஷம் எங்கன போயி முடியுமோன்னு பயமா இருக்கு. இதுக்கு மேலயும் இதையெல்லாம் தொடர விடுறது எமக்குச் சரியாப்படலை…” என்று கோவிந்தன் நிறுத்த,
அப்பத்தா திடுக்கிட்டு அவரையும், பேரனையும் பார்க்க,
இரண்டு ஊரை விட்டு தள்ளி இருக்கும் மாமனாருக்கு எப்படி இது எல்லாம் தெரிந்தது? அதுவும், மூன்று முறை என்று எப்படிச் சரியாகச் சொல்கிறார்? என்ற கேள்வி தோன்ற அவரை ஊடுருவும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் வைரவேல்.