3 – இன்னுயிராய் ஜனித்தாய்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 3
ஒருமணிநேரம் கடந்து சென்றது.
நித்திலன் எங்கேயும் செல்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தான்.
அவன் அப்படி அங்கே இருப்பது துர்காவிற்குச் சங்கடத்தைக் கொடுத்தது.
ஆனால் அவன் தான் சிகிச்சைக்குப் பணம் கட்டினான் என்பதால் அவனைக் காத்திருக்க வேண்டாம் என்று அவளால் சொல்ல முடியவில்லை.
குழந்தை வருணா, துர்காவின் மடியில் தூங்கிக் கொண்டிருந்தாள்.
மேலும் சிறிது நேரம் கடந்த நிலையில் அறுவைசிகிச்சை நல்லபடியாக முடிந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
மேலும் ஒருமணிநேரம் கடந்த நிலையில் சபரிநாதனை அறைக்கு மாற்றினர்.
துர்கா முதலில் உள்ளே சென்று பார்க்க, சபரிநாதன் மயக்கத்திலிருந்தார்.
“சார் எப்படி இருக்கிறார்?” சற்று நேரத்திற்குப் பிறகு உள்ளே வந்த நித்திலன் விசாரித்தான்.
“தூங்குறார். ரொம்ப நன்றிங்க. அவசரத்துக்கு உதவி செய்தீங்க. நாளைக்கு உங்க பணத்தைக் கொடுத்துடுறேன்ங்க…” என்றாள் துர்கா.
“இருக்கட்டும்ங்க. உங்களால் முடியும் போது கொடுங்க…” என்றான்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வருணா எழுந்து அழ ஆரம்பிக்க, அவளைச் சமாதானம் செய்தாள் துர்கா.
“குழந்தை சாப்பிட்டாளாங்க? பசிக்கு அழறாளோ?” என்று விசாரித்தான்.
“ஏழு மணிக்கு எல்லாம் சாப்பிட்டாள். படுக்கப் போகும் போது ஒரு டம்ளர் பால் குடிப்பா. இன்னைக்குக் குடிக்காமல் தூங்கிட்டாள். அதுதான் பசிக்குது போல…” என்றாள்.
“நைட் பதினோரு மணி ஆச்சு. இந்நேரம் கேண்டின் இருக்குமான்னு தெரியலை. நான் எதுக்கும் பார்த்துட்டு வர்றேன். நீங்க சாப்பிட்டீங்களா?” என்று கேட்டவனுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தாள்.
“இன்னும் சாப்பிடலைப் போல?” அவனாக யூகித்துக் கேட்டவன், “நானும் இன்னும் சாப்பிடலை. உங்களுக்கும் சேர்த்து வாங்கிட்டு வர்றேன்…” என்றான்.
“இல்லங்க, பரவாயில்லை…” என்று துர்கா தயக்கத்துடன் மறுக்க,
“மறுக்காதீங்க. சாப்பிடாமல் நீங்க எப்படி உங்க அப்பாவையும், குழந்தையையும் கவனிக்கப் போறீங்க? நான் வாங்கிட்டு வர்றேன்…” என்று அவள் மறுப்பு சொல்ல நிற்காமல் கிளம்பி விட்டான்.
கேண்டின் திறந்திருக்கவில்லை. ஆனால் மருத்துவமனைக்கு வெளியே இருந்த ஒர் உணவகம் திறந்திருந்தது.
அதற்குச் சென்றவன், முதலில் குழந்தைக்குப் பால் இருக்கிறதா என்று விசாரித்தான். அவர்கள் இருக்கிறது என்று சொல்லவும் தான், தான் சாப்பிட அமர்ந்தான். அதற்குள் பார்சலும் கட்டி வைக்கச் சொன்னான். பாலையும் வாங்கி ஆற வைக்கச் சொன்னான்.
சாப்பிட்டு முடித்து, பார்சலும், பாலும் வாங்கிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தான்.
வருணா சிணுங்கிக் கொண்டே இருக்க, விரைந்து சென்று பாலை கொடுத்தான்.
துர்கா நன்றி பார்வையுடன் பாலை வாங்கிக் குழந்தைக்குப் புகட்ட ஆரம்பித்தாள்.
பால் குடித்ததும் அழுகையை நிறுத்தி விட்டு அமைதியானாள் வருணா.
“நீங்க சாப்பிடுங்க…” என்று பார்சலை கொடுத்தான்.
“நீங்க சாப்பிட்டீங்களா?” துர்கா விசாரிக்க,
“ஆச்சுங்க. எனக்குப் பசி தாங்காது. நான் சாப்பிட்டு தான் உங்களுக்கு வாங்கிட்டு வந்தேன்…” என்றான் மென்னகை புரிந்த படி.
“ஓ, சாரிங்க. எங்களால் நீங்க இவ்வளவு நேரம் சாப்பிட முடியாமல் போயிருச்சு…” வருத்தம் தெரிவித்தாள்.
“அதனால் பிரச்சனை இல்லைங்க. நேரம் ஆகுது சாப்பிடுங்க…” என்றதும் குழந்தையை அங்கிருந்த இன்னொரு கட்டிலில் அமர வைத்துவிட்டு, அவள் அருகிலேயே பார்சலை பிரித்துச் சாப்பிட ஆரம்பித்தாள்.
ஆனால் வருணா அவளைச் சாப்பிட விடாமல் அனைத்தையும் இழுத்துக் கொண்டிருந்தாள்.
“இழுக்காதே கண்ணும்மா. குழம்பு கொட்டிடும்…” என்று சொல்லியும், அவள் விடாமல் இழுக்க,
“குட்டி பாப்பா, அம்மா சாப்பிடட்டும்டா…” என்று நித்திலன் மென்மையாகச் சொல்ல,
அவனைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள் குழந்தை.
குழந்தையின் சிரிப்பில் அவனின் மனம் மயங்கியது. தூக்கிக் கொஞ்ச வேண்டும் போல் இருந்தது.
“நீங்க சாப்பிடும் வரை குழந்தையை நான் தூக்கி வச்சுக்கிட்டுங்களா?” தயக்கமாக அவளிடம் அனுமதி கேட்டான்.
வருணாவும் சாப்பிட விடாமல் அனைத்தையும் இழுத்துக் கொண்டே இருக்க, சம்மதமாகத் தலையை அசைத்தாள்.
“குட்டிம்மா… வாங்க. அம்மா சாப்பிடட்டும்…” என்று கையை நீட்டியவனை ஒரு நொடி குறுகுறுவெனப் பார்த்தாள் குழந்தை. பின் தெரிந்தவன் தான் என்பதை அறிந்தவள் போல் அவனிடம் தாவினாள்.
ஆவலாகக் கைகளில் அள்ளிக் கொண்டான் நித்திலன்.
பூவை தன் கைகளில் ஏந்திக் கொண்டது போல் சிலிர்த்துப் போனான் நித்திலன்.
அப்போதும் குழந்தையைத் தூக்கினான் என்றாலும் அப்போது இருந்த சூழ்நிலையில் குழந்தையைத் தூக்கிய சந்தோஷத்தை எல்லாம் அவனால் அனுபவிக்க முடியவில்லை.
இப்போது குழந்தையின் ஸ்பரிசத்தை உணர்ந்தவனுக்கு மேனி சிலிர்த்துப் போனது.
அவனின் கைகளில் பாந்தமாக அமர்ந்து கொண்டாள் வருணா.
“வெளியே இருக்கேன்ங்க. சாப்பிட்டதும் சொல்லுங்க…” என்று துர்காவிடம் சொல்லிவிட்டு வெளியே சென்றான்.
வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்தவன், குழந்தையின் ஸ்பரிசத்தை மென்மையாக வருடினான்.
குழந்தையும் அவனின் மீசையைப் பிடித்து இழுத்தது. அவனின் சட்டைப் பையில் கையை விட்டு நோண்டியது.
சட்டைப் பையில் பணம் இருக்க, அதை வெளியே எடுத்துப் பார்த்தது.
குழந்தையைத் தடுக்காமல் அதன் போக்கிற்கு விட்டுவிட்டான்.
ஒரு குழந்தையைத் தான் கையில் தூக்கி இருப்பதே பெரும் பேருவகை என்பது போல் அவனின் முகம் கனிந்திருந்தது.
“அச்சோ! பணத்தைக் கிழிச்சுட போறாள்…” சாப்பிட்டு முடித்து வந்த துர்கா பதறினாள்.
“அவள் சும்மா கையில் தான் வச்சுருக்காள். கிழிக்கலைங்க. அப்படியே கிழித்தால் தான் என்ன? குழந்தையின் சந்தோஷத்தை விடப் பணம் பெருசு இல்லைங்க…” என்றவனின் பேச்சைக் கேட்டு அவனை விநோதமாகப் பார்த்தாள் துர்கா.
சற்று நேரத்திற்கு முன் கூடப் பணம் இல்லாமல் அவள் பட்ட அவஸ்தை அவளுக்குத்தானே தெரியும்?
இவன் என்னடாவென்றால் பணம் கிழிந்தால் கிழியட்டும் என்கிறான்.
அப்படியும் அவனும் வசதியானவன் போலும் தெரியவில்லை. அவனும் தன்னைப் போல வாடகை வீட்டில் தான் இருக்கிறான். பைக் கூட இல்லாமல் தினமும் பேருந்தில் தான் அலுவலகம் செல்கிறான். அப்படி இருக்கப் பணத்தைச் சாதாரணமாகப் பேசுகிறானே? என்று தான் நினைத்தாள் துர்கா.
குழந்தையை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டவள், “இவ்வளவு நேரம் இருந்ததுக்கு ரொம்ப நன்றிங்க. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. நான் இங்கே பார்த்துக்கிறேன்…” என்றாள் துர்கா.
“குழந்தையை வச்சுக்கிட்டுத் தனியா சமாளிச்சுடுவீங்களா? உங்க ரிலேஷன் யாரையாவது ஹெல்ப்க்கு கூப்பிடலாமே?” நித்திலன் கேட்க, துர்காவின் முகம் மாறியது.
அவளுக்கு உதவ யாரும் முன் வர மாட்டார்கள். சொந்த அத்தையே அவளை விரோதியாகப் பார்க்கும் போது மற்ற உறவுகளைப் பற்றிக் கேட்கவும் தான் வேண்டுமோ? அதனால் துர்கா ஒதுங்கி இருக்கவே பழகிக் கொண்டாள்.
அவள் முகம் மாறவுமே அவளின் நிலையைப் புரிந்து கொண்டான் நித்திலன்.
இந்த நேரத்தில் அவளைத் தனியாக விட்டுச் செல்ல அவனுக்கு மனது வரவில்லை. அதிலும் கை குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு அவளுக்குக் கஷ்டமாக இருக்கும் என்று புரிந்தது.
“நீங்க உள்ளே போங்க. நான் இங்கே இருக்கேன். எதுவும் உதவி வேண்டுமானால் கூப்பிடுங்க…” என்றான் உடனே முடிவெடுத்து.
“இல்லைங்க. ஏற்கனவே உங்களுக்கு ரொம்பச் சிரமம் கொடுத்துட்டேன். இனி நான் பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்க…” என்றாள்.
“எனக்கு எந்தச் சிரமமும் இல்லைங்க. வீட்டுக்குப் போனாலும் நான் தனியாகத்தான் கிடக்கணும். ஏன் வீட்டுக்கு வரலைன்னு கேட்க கூட அங்கே எனக்கு யாருமில்லை. அங்கே தனியா இருப்பதற்குப் பதில் இங்கே இருக்கப் போறேன். அவ்வளவுதான். நீங்க சங்கடப்படாமல் உள்ளே போங்க, ப்ளீஸ்…” என்றான்.
தங்களுக்கு உதவியாக இருக்க இவ்வளவு இறங்கி வந்து பேசுகிறானே என்று நினைத்த துர்காவிற்கு அதற்கு மேல் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அமைதியாக உள்ளே சென்று விட்டாள்.
அவன் அங்கே இருந்ததும் எவ்வளவு நல்லது என்று துர்காவிற்குச் சற்று நேரத்திலேயே புரிந்து போனது.
சபரிநாதன் மயக்கத்திலிருந்து அப்படியே தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார் என்பதால் தந்தைக்கு உதவும் வேலை எதுவும் அவளுக்கு இருக்கவில்லை. அதனால் அங்கே இருந்த இன்னொரு கட்டிலில் மகளுடன் படுத்துக் கொண்டாள் துர்கா.
ஆனால் வருணா முன்பே தூங்கி விட்டதால் தூங்காமல், படுத்திருந்த அன்னையின் மேல் ஏறி விளையாடி அவளையும் தூங்க விடாமல் செய்து கொண்டிருந்தாள்.
நேரம் செல்ல தூக்கம் வந்தும் தூங்காமல் புது இடம் என்பதால் சிணுங்கிக் கொண்டே இருந்தாள் வருணா.
“தூங்குடா பாப்பா…” என்று துர்கா எவ்வளவு சமாதானம் செய்தும் வருணாவின் அழுகையை அவளால் நிறுத்தவே முடியவில்லை.
குழந்தையைச் சமாளிக்க முடியாமல் தவித்துப் போனாள்.
குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு வெளியே இருக்கையில் அமர்ந்த படியே கண் அசந்திருந்த நித்திலன் விழித்துக் கொண்டான்.
சட்டென்று உள்ளே சென்று என்னவென்று கேட்க முடியாமல் தயங்கி கதவருகில் நின்று கவனித்தான்.
குழந்தையின் அழுகை கூடியதே தவிரக் குறையவில்லை.
குழந்தையின் அழுகுரல் கேட்கக் கேட்க மனம் பாரம் ஏறுவது போல் உணர்ந்தான் நித்திலன்.
அவளின் அழுகையை நிறுத்த சொல்லி அவனின் மனம் பரபரத்தது.
ஒரு கட்டத்தின் மேல் பொறுக்க முடியாமல் கதவை லேசாகத் தட்டினான்.
குழந்தையுடன் எழுந்து வந்து கதவைத் திறந்தாள் துர்கா.
“ஸாரிங்க… பாப்பா ரொம்ப நேரமா அழும் சத்தம் கேட்டது. அதான்…” என்றான்.
“புது இடம்னு தூங்க மாட்டிங்கிறா…” என்றாள்.
“குட்டிம்மா, என்னடா? தூக்கம் வரலையா?” என்று குழந்தையிடம் கேட்டான்.
அழுது கொண்டே அவன் வெளியே நின்றிருப்பதைப் பார்த்தவள் உள்ளே இருக்கப் பிடிக்காமல் அவனிடம் தாவினாள்.
வேகமாக அவளைக் கைகளில் வாங்கிக் கொண்டான் நித்திலன்.
“என்னடா உள்ள இருக்கப் பிடிக்கலையா?” வாஞ்சையுடன் முதுகைத் தடவி விட்டுக் கேட்டான்.
“ஸாரிங்க. உங்களுக்கு வேற தொந்தரவு. பாப்பா அம்மாகிட்ட வா…” துர்கா கையை நீட்ட, குழந்தையோ உள்ளே செல்ல மாட்டேன் என்பது போல் அவனின் கழுத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
“இருக்கட்டும்ங்க. நான் கொஞ்ச நேரம் இப்படி வச்சுருக்கேன். நீங்க உள்ளே போங்க. பாப்பா அழுகையை நிறுத்தியதும் உங்ககிட்ட கொடுக்கிறேன்…” என்றவன், குழந்தையை அணைவாகப் பிடித்தபடி வராண்டாவில் நடக்க ஆரம்பித்தான்.
அவன் நடக்க ஆரம்பிக்கவுமே வருணா அழுகையை நிறுத்தவும், துர்கா உள்ளே சென்று அமர்ந்தாள்.
வெளிக்காற்று பட்டதும் சுகமாக அவனின் கழுத்து வளைவில் முகம் புதைத்து சிறிது சிறிதாக நித்திரையைத் தழுவ ஆரம்பித்தாள் வருணா.
குழந்தையை அப்படித் தூங்க வைப்பதே நித்திலனுக்குப் பேரானந்தமாக இருந்தது.
பரிவுடன் மெல்ல அவளின் முதுகில் தட்டிக் கொடுக்கவும் நன்றாகத் தூங்க ஆரம்பித்தாள்.
இனி எழ மாட்டாள் என்று உறுதியானதும் கதவின் அருகே நின்று, “பாப்பா தூங்கிட்டாங்க…” என்று மெதுவாகக் குரல் கொடுத்ததும், “தேங்க்ஸ்ங்க…” என்ற துர்கா குழந்தையை வாங்கிக் கொண்டாள்.
“இருக்கட்டும்ங்க…” என்ற நித்திலன் மீண்டும் சென்று இருக்கையில் அமர்ந்தான்.
குழந்தையின் ஸ்பரிசம் இன்னும் தன்னோடு ஒட்டிக் கொண்டிருப்பதைப் போல் உணர்ந்தவனின் மனம் இலவம் பஞ்சாக லேசானது.
“ரொம்ப நன்றி தம்பி. நீங்க தான் நேத்து எல்லா உதவியும் செய்தீங்கன்னு என் பொண்ணு சொன்னாள்…” காலையில் நித்திலனுக்கு நன்றி தெரிவித்தார் சபரிநாதன்.
“இருக்கட்டும் சார். நீங்க எப்படி இருக்கீங்க? கால் வலி இருக்கா?” விசாரித்தான்.
“ஆமா தம்பி. காலையில் ரொம்ப வலிக்கவும் தான் கண் முழிச்சேன். இப்ப சாப்பிட்டு மாத்திரை போட்டதும் பரவாயில்லை…” என்றார்.
“குட்டிப்பாப்பா சாப்பிட்டாளாங்க?” அங்கே ஓரமாக நின்றிருந்த துர்காவிடம் கேட்டான். குழந்தை கட்டிலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
“கேண்டினில் இட்லி வாங்கிக் கொடுத்தேன். சாப்பிட்டாள்…” என்றாள்.
விடியற்காலை ஐந்து மணிக்கு வீட்டிற்குக் கிளம்பிக் குளித்து, சாப்பிட்டு விட்டுத் திரும்பி வந்திருந்தான் நித்திலன்.
அவனிடம் அக்கம்பக்கத்தினரும் விசாரிக்க, விவரம் சொல்லியிருந்தான்.
ஆனால் யாரும் வந்து பார்க்க முன்வரவில்லை.
“நீங்க வீட்டுக்கு எதுவும் போயிட்டு வரணும்னா போயிட்டு வாங்க. நான் அதுவரை சார் கூட இருக்கேன்…” என்றான்.
“இல்லைங்க…” என்று தயங்கினாள் துர்கா.
“போயிட்டு வாமா… குட்டிக்குக் கடை சாப்பாடு சேருமோ என்னவோ. அவளுக்கு மட்டுமாவது ஏதாவது செய்து எடுத்துட்டு வா. நீயும் மாத்து துணி எதுவும் எடுத்துட்டு வரலையே? அதையும் எடுத்துட்டு வந்திரு…” என்றார் சபரிநாதன்.
“சாருக்கு தொந்தரவுபா. நான் நீங்க தூங்கும் போது போய்க்கிறேன்…” என்றாள்.
“எனக்குத் தொந்தரவு எல்லாம் எதுவும் இல்லைங்க. நீங்க போயிட்டு வாங்க…” என்றான்.
“நீங்க வேலைக்குப் போகணுமே?” அப்போதும் அவளிடம் தயக்கம்.
“தயங்காதீங்க. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. வேலைக்கு இன்னைக்கு நான் போகலை. லீவ் போட்டிருக்கிறேன்…” என்றான்.
“அச்சோ! சார் எங்களுக்காகவா?” பதறினாள்.
“உங்களுக்குன்னு ஏன் நினைச்சுக்கிறீங்க? எனக்குன்னு நினைச்சுக்கோங்க. வருஷத்துக்குப் பதினைந்து நாள் லீவ் எனக்கு இருக்கு. ஆனா ஒருநாள் கூட நான் எடுத்தது இல்லை. சும்மா போற லீவை ஏன் விடணும்? அதான் எடுத்தேன்…” என்றான் சிறு புன்முறுவலுடன்.
அவர்களுக்காகத் தான் விடுமுறை எடுத்திருக்கிறான் என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் எப்படிச் சமாளிக்கிறான். ஏன்? என்பது போல் அவனை யோசனையாகப் பார்த்தாள் துர்கா.
அவளின் பார்வை கூர்மையுடன் அவனை ஆராய்ந்தது.
அவனிடம் எந்தக் கல்மிஷமும் இல்லை. முடிந்தவரை துர்காவின் பக்கம் அவனின் பார்வை போகவே இல்லை. சபரிநாதனையும், குழந்தையையும் தான் பார்த்தான்.
அவனின் கண்களில் அலைபாயுதல் எதுவும் இல்லை என்றதும் அவளுக்குள் ஒரு நிம்மதி.
ஆண்மகன்களைப் பற்றி நன்றாகவே புரிந்து வைத்திருந்தாள் துர்கா. கணவனை இழந்ததில் இருந்தே எதிராகச் சந்திக்கும் பலரும் பார்க்கும் பார்வை அவளுக்கு அத்துப்படி. ஆண்கள் பார்வை தன் மீது வக்கிரமாகப் பதிந்து விடக்கூடாது என்றே அவள் பார்த்துப் பார்த்துக் கவனமாக நடந்து கொண்டாலும் கூட அவளின் மீது பதியும் பார்வையில் புழுவாகத் துடித்திருக்கிறாள்.
ஆனால் நித்திலனிடம் இதுவரை அவள் எந்தத் தவறையும் உணர்ந்தது இல்லை. இப்போதும் இல்லை என்பதால் நிம்மதியுடன் குழந்தையுடன் வீட்டிற்குக் கிளம்பினாள் துர்கா.
துர்கா ஒன்றை உணரவே இல்லை. நித்திலனிடம் கல்மிஷம் இருந்தது.
அவன் சொன்னது போல அவனுக்காகத்தான் அவன் விடுமுறை எடுத்தான்.
காரணம் குழந்தை வருணா!
இதுவரை ஒரு குழந்தையைத் தூக்க கூடப் பயந்தவன், நேற்று வருணாவை தூக்கியதிலிருந்து அவனுள் இனம் புரியாத ஓர் உணர்வு அவனை ஆட்டிப்படைக்க ஆரம்பித்து விட்டது.
அவ்வுணர்வு தான் அவனை விடுமுறை எடுக்க வைக்கத் தூண்டியிருந்தது.
அவ்வுணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் மட்டுமே, தானே முன் வந்து உதவி செய்து கொண்டிருந்தான் நித்திலன் என்பதை அறியாமல் போனாள் துர்கா.