29 – இன்னுயிராய் ஜனித்தாய்

அத்தியாயம் – 29

தன் கணவன் இப்படி ஒரு காரணத்தைச் சொல்வான் என்று துர்கா எதிர்பார்க்கவே இல்லை.

பின்னே, ‘நான் ஒரு ஆண்மகனாக நடந்து கொள்வேனா என்று எனக்கே சந்தேகமாக இருக்கு’ என்று அவன் சொன்னதைக் கேட்டு அவளும் தான் என்ன செய்வாள்?

அவன் சொன்னதை நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள் துர்கா.

“இது தான் காரணம் துர்கா. நீ சொன்ன காரணம் இல்லை. நீ ஏற்கனவே கல்யாணம் ஆனவள் அதனால் தான் நான் விலகி போனேன்னு நீ எப்படி நினைச்ச துர்கா? நான் அப்படி நினைக்கிறவன்னு உனக்குத் தோன்றும் படியாகவா என் செய்கை இருந்தது?” வருத்தமாகக் கேட்டான்.

“இல்லை… நீங்க…” துர்காவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

அவள் அப்படித்தான் நினைத்தாள். நேற்று இரவு அவன் ஆசையுடன் அணுகியதை அவளும் உணர்ந்து தானே இருந்தாள்.

அப்படி இருக்கத் திடீரென விலகி போனான் என்றால் தான் ஏற்கனவே மணமானவள் என நினைத்து தான் விலகி போனான் என்று தான் அவளால் நினைக்க முடிந்தது.

“உன்னை நேசிக்கும் முன்னாடியே நீ ஒரு குழந்தைக்குத் தாய்னு எனக்குத் தெரியும் தானே துர்கா? அப்புறம் எப்படி உன்னை அப்படி நினைப்பேன்? என் நினைப்பு எல்லாம் என்னைப் பற்றித் தான் துர்கா.

தாம்பத்ய வாழ்க்கையைப் பொறுத்தவரை என்னால் நார்மலா ஈடுபட முடியும்னு டாக்டர் சொல்லியிருக்கார். என் உயிரணுவிற்கு மட்டும் தான் ஒரு குழந்தையை உருவாக்கும் சக்தி இல்லை.

ஆனால் டாக்டர் என்ன தான் தாம்பத்ய உறவில் நான் நார்மலா பிகேவ் பண்ண முடியும்னு சொன்னாலும் என்னால் ஈடுபட முடியுமான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு…” உணர்ச்சிவசப்பட்டுப் பேசினான் நித்திலன்.

“டாக்டர் தான் சொல்லிட்டாரே… அப்புறம் என்ன?” மெதுவாகக் கேட்டாள் துர்கா.

“அதுக்குக் காரணம்… நான் கேட்ட வார்த்தைகள்…” என்றான் மனம் கசங்க.

அவளின் பார்வை புரியாமல் அவனைத் தழுவியது.

“என் அண்ணி என்னைத் திட்டும் போதெல்லாம் என்ன வார்த்தை யூஸ் பண்ணுவாங்க தெரியுமா துர்கா?”

‘அச்சோ! அவங்களா? இவனின் தாழ்வு மனப்பான்மைக்குக் காரணம் அவங்களா?’ என்று உள்ளுக்குள் பதறி போய் அவனைப் பார்த்தாள்.

ஹேமா ஒரு நாளில் சில நொடிகள் பேசியதே எப்படிப்பட்ட வார்த்தைகள் பேசுவாள் என்று அறிந்தவள் தானே?

“என்னைப் பொட்டைப்பய, ஒன்னுக்கும் லாயிக்கு இல்லாதவன், நீ எல்லாம் ஆம்பிளையே இல்லைன்னு தான் சொல்வாங்க துர்கா…” என்றவன் கண்கள் சிவந்து கைகள் இறுகி போயின.

அவன் இறுகிய கையை இறுக்கமாக பற்றிக் கொண்டவள், “ஆண்மை என்பது வெறும் உடல் சேர்க்கைக்கு மட்டுமே இல்லைங்க. தன்னைச் சார்ந்த பெண்ணை மதிப்பது, அவளுக்கான உரிமையைத் தடுக்காமல் இருப்பது, அவளை அவளாகவே ஏற்றுக் கொள்வது, அன்பு செலுத்துவதுன்னு இன்னும் எவ்வளவோ இருக்குங்க. அதில் நீங்க முழுமையான ஆண்மகன் தான்!” என்றாள் துர்கா.

“நீ சொல்வதைக் கேட்க சந்தோஷமா இருக்கு துர்கா. ஆனா உன்னைப் போல எல்லாரும் நினைக்க மாட்டாங்களே? அவங்களுக்கு என் உடல் குறை மட்டும் தானே பெரிதாகத் தெரிந்தது…”

“அவங்க அந்த மாதிரி வார்த்தைகள் சொல்லி சொல்லி ஒருவேளை நான் அப்படித்தானோனு எனக்கே தோணும். எனக்கு எந்த உணர்வுமே வராதோன்னு கூட நினைச்சுருக்கேன்…”

“உங்களைக் காயப்படுத்தணும், சீண்டனும்னு மட்டுமே சொன்ன அவங்க வார்த்தைகளை நீங்க ஏன் பெருசா எடுத்துக்கிறீங்க?” என்று கேட்டாள்.

“எடுத்திருக்கக் கூடாது தான். ஆனா முடியலையே? என்னோட இயலாமையைக் குத்தி குத்திக் காட்டி ரணமாக்கி வச்சுட்டாங்க. அதில் இருந்து என்னால் மீள முடியலை…” என்றான் விரக்தியாக.

“நீங்க அப்படி நினைக்கத் தேவையே இல்லை. நீங்க நினைச்சால் உங்களால் மீள முடியும். நேத்து உங்கள் உணர்வுகளை என்னால் உணர முடியுது…” என்று அவன் அருகில் நெருங்கி முணுமுணுப்பாகக் கூறினாள்.

அவளின் தோளை சுற்றி கை போட்டு அணைத்துக் கொண்டவன், “என் உணர்வுகள் உங்கிட்ட மட்டும் தான் உயிர் பெறுகிறது துர்கா. அதை உங்கிட்ட காட்டணும்னு தவிப்பும் வருது. ஆனால் அந்த நேரத்தில் என்னால் முடியாமல் போனால்…” என்று அவன் தயங்கி நிறுத்த, துர்கா அவன் தவிப்பை கண்டு உடைந்து போனாள்.

என் கணவன் என்னென்ன நினைத்துத் தவித்துப் போயிருக்கிறான். அவன் தவிப்பை போக்கும் மருந்து நானாக இருக்க, ஏன் கை கட்டி வேடிக்கை பார்க்க வேண்டும் என்று தான் அந்த நொடி தோன்றியது.

கணவன் மனைவிக்குள் ஆண் என்ன? பெண் என்ன? உணர்வுகள் இருவருக்குமே பொதுவானவை!

உடைந்து போயிருக்கும் ஆணை உயிர் பெற வைக்க அவனின் உரிமையான பெண்ணால் மட்டுமே முடியும்!

அவனை அவனாக உணர வைக்க வேண்டும். அவனின் தாழ்வு மனப்பான்மையைப் போக்க வேண்டும். அவன் உணர்வுகளுக்கு உயிர் உண்டு என்று காட்ட வேண்டும்.

இவ்விஷயத்தில் பேசி அவனைத் தெளிவுபடுத்த முடியாது என்பதைப் புரிந்து கொண்டவள் தன் தயக்கத்தை விடுத்து அவன் கையை எடுத்து தன் இடையைச் சுற்றிப் போட்டுக் கொண்டாள்.

“உங்க துர்கா உங்க பக்கத்தில் இருக்கேன். இப்ப நீங்களும், நானும் மட்டும் தான் இங்கே இருக்கோம். இப்போ வேற எதுவும்… எதுவுமே உங்க ஞாபகத்தில் இருக்கக் கூடாது. நான்… நீங்க…! நீங்க… நான்…! நாம் மட்டும் தான் இருக்கோம்…” மயக்கும் குரலில் அவன் காதோரம் சொன்ன மனைவியின் வார்த்தைகளில் நித்திலனின் மனம் மயக்கியது.

‘உன் புருஷனால் உனக்குச் சுகத்தைக் கூடக் கொடுக்க முடியாது’ ஹேமா சொன்ன வார்த்தைகளை அன்று கேட்டு விட்டிருந்தான் நித்திலன்.

அந்த வார்த்தைகள் கொடுத்த வலியும் சேர்ந்து தான் அவனையே அவனைச் சந்தேகம் கொள்ள வைத்தது.

அதை எல்லாம் புறம் தள்ளியது உடையவளின் உரிமை தொனிக்கும் வார்த்தைகள்!

‘நானும், துர்காவும் மட்டுமே ஆன உலகம் இது!’ அவன் மனம் மனனம் செய்தது.

என் துர்காவை ஆராதிக்க வேண்டும். அவள் வாழ்ந்த வறண்ட காலங்கள் எல்லாம் போதும். அவளின் வாழ்வில் உயிர்ப்பை தர வேண்டும்.

அவளை நன்றாகக் கவனித்துக் கொண்டு, அன்பு செலுத்துவது மட்டும் போதாது. அவள் உணர்வுகளுக்கும் உயிர்ப்பூட்ட வேண்டும் என மனதினில் உருப்போட்டுக் கொண்டான்.

‘என்னால் முடியும்! என் துர்கா அருகில் இருக்கும் போது என்னால் முடியும்!’ தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன் கைகள் அவளைச் சுற்றி இறுக்கமாக அணைத்துக் கொண்டன.

முகம் அவளை நோக்கி குனிந்தது. அவளின் இதழ்களில் காதலுடன் முத்தமிட்டவன், அடுத்தடுத்து நிகழ்த்தியதெல்லாம் அவனே இத்தனை வருடங்கள் அறியாமல் போன உணர்வுகள்.

தான் அறியாத உணர்வுகளை எல்லாம் அவளிடம் அறிய முயன்றான்.

அவன் செயல்கள் கொடுத்த உணர்வுகள் அவளைத் தகிக்க வைக்க, அவனுக்காக, அவன் மனதளவில் உடைந்து போய் விடக் கூடாது என்று தன் வெட்கம், கூச்சம் எல்லாம் சற்றே ஒதுங்க வைத்து முற்றும் முதலாகக் கணவனுடன் ஐக்கியமானாள் பெண்ணவள்!

மனைவிக்கும் தன் உணர்வுகளைக் காட்டி அவளையும் உயிர்ப்பிக்க வைத்தான் ஆணவன்!

“தேங்க்ஸ் துர்கா…” தன் நிறைவை அவளின் இதழ்களில் முத்தமிட்டுச் சொன்னான் நித்திலன்.

இரண்டற கலந்து கலைத்து, களைந்து அவனின் வெற்று மார்புக்குள் சுருண்டு படுத்திருந்தாள் துர்கா.

அவளின் முகம் பற்றி முகம் முழுவதும் முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மீண்டும் தன் இறுகிய அணைப்பிற்குள் அடைகாத்துக் கொண்டான்.

அவளின் உச்சியில் மென் முத்தங்களைப் பதித்துக் கொண்டே இருந்தவன், “உன்னால் தான் நான் முழுமை அடைஞ்சிருக்கேன் துர்கா. இப்ப நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? என்னால் உன்னைச் சந்தோஷப்படுத்த முடியும்னு இப்ப நிரூபணம் ஆன பிறகு தான் எனக்கு நிம்மதியா இருக்கு. தேங்க்ஸ் துர்கா…” என்றான் மனப்பூர்வமாக!

அவனின் மார்பிலிருந்து முகம் நிமிர்த்திப் பார்த்தவள், “யாரோ நண்பர்களுக்குள் தேங்க்ஸ் எல்லாம் கிடையாது சொன்னாங்க. நண்பர்களுக்குள்ளேயே தேங்க்ஸ் கிடையாதது கணவன், மனைவிக்குள் மட்டும் இருக்கலாமா?” செல்ல கோபத்துடன் கேட்டு வைத்தாள்.

“ஹாஹா…” என்று சிரித்து அவளின் மூக்கை நிமிட்டி விட்டவன், “இது உணர்ச்சிவசத்தில் வந்த தேங்க்ஸ்” என்றான்.

அவனின் மார்பு ரோமங்களை விரல்களால் சுழற்றி சுள்ளென்று இழுத்து அவனுக்குத் தண்டனை கொடுத்தாள்.

“ஹா… அவுச்! என்னோட துர்காவுக்குச் செம்மையா கோபம் வருது…” என்று அவள் இழுத்த இடத்தை நீவி விட்டுக் கொண்டான்.

“அப்படித்தான் வரும்!” என்றவளோ அவன் வலியை போக்குவது போல் வலித்த இடத்தில் இதமாக இதழ் பதித்தாள்.

சுகமாக இருந்தாலும், இன்னும் இன்னும் அவளுள் மூழ்க ஆசை இருந்தாலும் குழந்தையின் ஞாபகம் வர, “குட்டிம்மா தனியா இருக்காள். அங்கே போவோமா?” என்று கேட்டான்.

“அங்கே போய் என்னை விட்டுத் தனியா படுத்துக்குவீங்க தானே?” என்று குறும்பாகக் கேட்டாள்.

“ம்கூம்… உன்னைக் கட்டிக்கணும்…” என்றான் ஆசையாக.

“பாப்பா பக்கத்தில் அது கஷ்டம். அவளை ஓரமா படுக்க வைக்க முடியாது. கீழே விழுந்திடுவா…” என்றாள்.

“நாளைக்கு முதல் வேலையா கட்டிலை சுவரோரம் ஒட்டி போடணும்…” என்று தீவிரமாகச் சொன்னவனைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பு வந்தது.

அவளின் இதழ்களை ஆசையாக வருடியவன், “நான் போய்க் குட்டிம்மாவை இங்கே தூக்கிட்டு வந்து அவள் தொட்டிலில் படுக்க வைக்கிறேன். நாம இங்கே…” என்றவன் உடனே எழுந்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்து தொட்டிலில் விட்டுவிட்டுக் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான்.

மனைவியைத் தன் கை வளைவிற்குள் கொண்டு வந்து அணைத்துக் கொண்டான்.

“நீ சந்தோஷமா இருந்த தானே துர்கா?” மெல்லிய குரலில் கேட்டான்.

‘இன்னும் சந்தேகமா?’ என்று விழியுர்த்தி அவனைப் பார்த்தாள்.

“சொல்லேன், ப்ளீஸ்…”

“ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருந்தேன். இருக்கேன்!” என்று சொன்னதும் முத்தமிட்டு தன் மகிழ்ச்சியைச் சொன்னான்.

“உங்களுக்குக் குறை இருக்குன்னு சொன்னால் என்னால் நம்பவே முடியலை” என்று அவன் காதோரம் ரகசியமாகச் சொன்னாள்.

“ஆண்மை குறைவில் சில வகைகள் உண்டு துர்கா. சிலருக்கு இருக்கும் குறைப்பாட்டில் உறவில் ஈடுபட முடியாது. ஆண் தன்மையே முழுமையாக இருக்காது.

சிலருக்கு உடல் அளவில் எந்தக் குறையும் இருக்காது. தாம்பத்ய வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட முடியும். உயிரணுக்கள் இருந்தாலும் அதில் வீரியம் இருக்காது. எனக்கு இருப்பது இரண்டாவது வகை!” என்றான்.

“உங்களுக்கே இவ்வளவு விவரம் தெரிந்து இருக்கே? அப்புறம் ஏன் நேற்று அப்படி ஒரு தவிப்பு? விலகல்? சந்தேகம்?” என்று கேட்டாள்.

“ஒருத்தரை உன்னால் முடியாது, நீ ஒன்றுக்கும் உதவாதவன்னு சொல்லி சொல்லி காட்டிக்கிட்டே இருந்தால் நான் ஒருவேளை அப்படித்தானோ என்ற எண்ணம் வருவது இயல்பு தானே துர்கா?

அன்னைக்கு அண்ணி என்ன பேசினாங்கன்னு நானும் கேட்டேன் துர்கா. உனக்கு என்னால் சுகமே கொடுக்க முடியாதுன்னு சொன்னாங்க. உன்கிட்ட மட்டுமில்லை என்கிட்டயும் சாடை மாடையா நிறைய வார்த்தைகள் சொல்லியிருக்காங்க.

அது எல்லாம் நேத்து ஞாபகம் வரவும் ஒரு தடுமாற்றம். ஒருவேளை என்னால் உனக்கு ஏமாற்றம் வந்தால் என்ன செய்வது? நீ என்ன நினைப்ப? நம்ம வாழ்க்கை என்ன ஆகும்? உன்னைக் கல்யாணம் செய்து உன் வாழ்க்கையைப் பாழாக்கிட்டேனோன்னு எனக்குள் பலவித தவிப்புகள்.

அதில் இருந்து என்னால் சட்டுன்னு வெளியே வர முடியலை. அதனால் விலகிப் போனேன். ஆனால் என் விலகலால் நீ வேற மாதிரி கற்பனை செய்துக்குவன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை…” என்றான்.

“அவ்வளவு ஆசையா வந்துட்டு நீங்க விலகிப் போவீங்கன்னு எதிர்பார்க்கலை. அப்ப எனக்கு என் பக்கம் மட்டும் தான் ஏதோ தவறோன்னு என்னால் யோசிக்க முடிந்தது…” என்றாள்.

“இல்லை துர்கா. உன்னை நான் அப்படி நினைத்ததே இல்லை. நினைக்கவும் மாட்டேன். குட்டிம்மா எனக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த உன் வாழ்க்கையைக் கொச்சைப்படுத்தவும் மாட்டேன்.

மனைவி இழந்த ஆண் மட்டும் தான் மணமாகாத பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எந்தச் சட்டமும் இல்லை.

திருமணமாகாத ஆண், கணவனை இழந்த பெண்ணைத் திருமணம் செய்வது ஒன்னும் பெரிய குற்றம் இல்லை. அதெப்படி அப்படி முடிக்கலாம் என்ற நியாயமும் பேச முடியாது.

இங்கே ஒன்றுபட்டு போவது மனது ஒன்று தான்! நமக்கு மனதிற்குச் சரின்னு பட்டதைக் கண்டிப்பா செய்யலாம். என் மனசுக்கு உன்னை மட்டும் தான் பிடித்தது…” என்றவனைக் காதலாகப் பார்த்தாள் துர்கா.

“ஆண்மை என்பது இது தாங்க! இந்தப் புரிதல் எத்தனை பேருக்கு இருக்கும்? குழந்தை பிறந்தால் தான் அவன் ஆண் என்று அர்த்தமில்லை. இப்படி ஒரு நல்ல குணம் உள்ள நீங்க எனக்குக் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்கணும். உங்களோட இந்தப் புரிதல், அன்பு, காதல், பாசம் எல்லாம் தான் என்னை உங்கள் பக்கம் சாய்த்தது…” என்றவள் அவன் கன்னத்தில் தன் இதழ்களைப் பதித்தாள்.

மனைவி தன் மனதை வெளிப்படுத்தியதற்குப் பரிசாக அவளைக் கொண்டாடி மகிழ்ந்தான் நித்திலன்.

சில நொடிகளுக்குப் பிறகு ஒருவர் அணைப்பில் ஒருவர் இளைப்பாறினர்.

“என் மூலமாகக் குழந்தை பிறக்காதுன்னு உனக்கு வருத்தம் எதுவும் உண்டா துர்கா?” என்று நித்திலன் கேட்க,

“இப்ப எதுக்கு இந்தக் கேள்வி?”

“சொல்லேன்… நீ என்ன நினைக்கிறயோ அப்படியே சொல்லு. நான் வருத்தப்படுவேன்னு எதுவும் மறைக்கக் கூடாது…” என்றான்.

“உங்களைப் பற்றித் தெரிந்து தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்புறம் எப்படி வருத்தப்படுவேன்? எதிர்பார்த்து ஏமாறும் போது தான் வருத்தம் வரும். இதுதான்னு நிதர்சனம் புரிந்து விட்டால் வருத்தத்துக்கு இடமில்லை. ஆனால்…”

“ஆனால் என்ன? எதுவாக இருந்தாலும் சொல்…”

“ஆனால் இந்தக் கேள்வி என் எதிர்பார்ப்பினால் கேட்கலை. விவரம் அறிந்து கொள்ளக் கேட்கிறேன்…” என்றாள் தயக்கமாக.

“கேள் துர்கா…” அவன் ஊக்க,

“இப்பத்தான் மருத்துவத்துறையில் எவ்வளவோ வளர்ச்சி வந்துருச்சே. உங்களுக்கு ட்ரீட்மெண்ட் பார்த்து இருக்கலாமே?” என்று கேட்டாள்.

“பார்க்காமல் இருப்பேனா? முதல் தடவை ரிப்போர்ட் வரவுமே நம்பாமல் இன்னும் இரண்டு டாக்டர்கிட்ட பார்த்தேன். அவங்களும் எனது குறையை உறுதி செய்தாங்க. அதுக்குப் பிறகு தாமதிக்காமல் ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. எனக்குள்ள குறைப்பாட்டில் உறவின் போது உயிரணு வெளிப்படும். ஆனால் அதில் உயிர் இருக்காது.

நம்ம உணவு முறை, மன அழுத்தம், மது பழக்கம், புகைப்பழக்கம், மருத்துவ ரீதியான சில பாதிப்புகளால் இந்தப் பாதிப்பு வரும்.

எனக்கு மது, புகைப்பழக்கம் இல்லை. ஆனால் நம்ம மாறி போன உணவு பழக்க வழக்கத்தால் கூட இந்தப் பாதிப்பு வரலாம்னு சொன்னாங்க.

எனக்குச் சுத்தமாக உயிரணுவில் உயிர் இல்லாததால் என் குறை நிரந்தரமாகிருச்சு. அதனால் குழந்தைபேறுக்குச் சாத்தியமில்லாமல் போய்விட்டது. என்ன தான் மருத்துவத்துறை வளர்ந்தாலும் கடவுள் அருளும் வேணுமே? எனக்குக் கடவுள் அந்த அருள் கொடுக்கவில்லை என்னும் போது மருத்துவத்துறை எல்லாம் எம்மாத்திரம்?” என்றான் வருத்தமாக.

“கவலைப்படாதீங்க. நமக்குத்தான் வருணா இருக்காளே…” என்றாள் துர்கா.

“ஆமா! நமக்கு அவள் போதும்! அவள் மட்டும் என்கிட்ட பாசமா இருக்கலைனா நீயும், அவளும் எனக்குக் கிடைச்சுருக்கவே மாட்டீங்க. குட்டிம்மாவுக்குத் தான் நான் தேங்க்ஸ் சொல்லணும்…” என்றான்.

“உங்களைப் போலப் பாசமான அப்பா கிடைக்க அவளும் தான் கொடுத்து வச்சுருக்கணும். அடுத்த ஆளுங்ககிட்ட போகவே மாட்டாள். ஆனா உங்ககிட்ட ஆரம்பத்திலேயே நல்லா ஒட்டிக்கிட்டாள். உங்களை அவளுக்கு அவ்வளவு பிடிச்சிருக்கு…” என்றாள்.

அவன் கண்கள் தொட்டிலில் படுத்திருந்த வருணாவை தழுவின.

“வருணா என்னுயிரில் ஜனிக்கலைனாலும் இன்னுயிராய் எனக்காக ஜனித்திருக்கிறாள். என் வாழ்வில் இனிமையைக் கொண்டு வந்த இனிய உயிர் அவள்!” என்றான் ஆத்மார்த்தமாக.

ரத்தப்பிறப்பின் மூலமாகத்தான் பந்தமும், பிணைப்பும் உருவாக வேண்டும் என்பதல்ல!

அன்பாலும், பாசத்தாலும் மட்டுமே பிணைப்பும், பந்தமும் உண்டாகி அது இறுகி வலுபெரும் என்பதை நித்திலன், வருணா உறவின் வாயிலாகக் கண்கூடாகக் கண்டாள் துர்கா.