28 – இன்னுயிராய் ஜனித்தாய்

அத்தியாயம் – 28

“மாப்பிள்ளை சாப்பிட உட்கார்ந்துட்டார்மா துர்கா. சாப்பாடு எடுத்து வை…” என்று சமையலறை நோக்கி குரல் கொடுத்தார் சபரிநாதன்.

“இதோ வர்றேன் பா…” என்ற துர்கா ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகே வந்தாள்.

சாப்பிட அமர்ந்திருந்தவன் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல் தட்டில் உணவை வைத்தாள்.

அவனோ அதை விடத் தட்டும், உணவும் மட்டுமே என் கண்களுக்குத் தெரிகின்றன என்ற பாவனையில் உணவை எடுத்து உண்ண ஆரம்பித்தான்.

அப்போது அங்கே விளையாடிக் கொண்டிருந்த வருணா தளிர் நடை போட்டு அவன் அருகே வந்து அவனின் காலை பிடித்துக் கொண்டாள்.

“என்னடா குட்டிம்மா?” என்றவன், இடது கையால் அவளைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டான்.

அவள் உடனே அவன் தட்டில் இருந்த உணவை அள்ள, “இன்னைக்குத் தான் அப்பாவுக்கு முன்பே நீ சாப்பிட்டியேடா குட்டி… இன்னும் இந்தக் குட்டி வயித்துக்குப் பசிக்குதா?” என்று கேட்டான்.

“காலையில் நீங்க அவளுக்குச் சாப்பாடு ஊட்டி விட்டு பழக்கிட்டீங்க மாப்பிள்ளை. அதான் இன்னைக்குத் துர்கா ஊட்டிய போது சரியா சாப்பிடலை…” என்றார் சபரிநாதன்.

“ஓ, சரி மாமா. இப்ப நான் ஊட்டி விடுறேன்…” என்று ஒரு வாய் உணவை எடுத்து குழந்தைக்கு ஊட்டியவன் ஒர விழியால் மனைவியைப் பார்த்தான்.

அவள் அவனைப் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

காலையில் குழந்தைக்கு அவன் தான் உணவு ஊட்டி விடுவான். ஆனால் இன்றோ அவன் மீதிருந்த கோபத்தில் துர்கா அவன் சாப்பிட வருவதற்கு முன்பே உணவை ஊட்டி விட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தவனுக்கு மனது வலித்தது.

ஆனாலும் வெளிப்படையாக ஒன்றும் காட்டிக் கொள்ளவில்லை.

இப்போதும் தன் முகம் பார்க்க மறுக்கும் மனைவியைக் கண்டு நெஞ்சை அடைப்பது போல் இருந்தது.

அவளின் அந்தப் பாராமுகத்திற்கு அவன் தான் காரணம் என்று தெரியும்.

செய்த தவறை சரி செய்ய வேண்டும் என்று உள்மனம் துடித்தது. ஆனால் எப்படிச் சரி செய்வது என்று தான் தெரியவில்லை.

நீயே எல்லாம் என்று கையில் சரணடைந்தவளை தவிக்க வைத்த தன் முட்டாள்தனத்தை நினைத்து தன்னையே நொந்து கொண்டான் நித்திலன்.

இரவு நடந்ததை நினைத்தவனுக்கு உணவு தொண்டைக்குள் செல்லாமல் அடைத்துக் கொண்ட உணர்வு.

அவன் தான் ஆசையாக அவளை அணுகினான். நீ எனக்கு வேண்டும் என்று சொல்லாமல் சொல்லி தன் உணர்வுகளை வெளிப்படுத்தினான். உன்னைப் பிடித்திருக்கிறது என்று அவள் சொன்ன பின்பே அவளை அணைத்தான்.

அந்த அணைப்பிற்குப் பிறகு அனைத்தும் மாறிப் போனது. அவனால் இயல்பாக அவளுடன் ஒன்ற முடியவில்லை.

ஒருவித தவிப்பு! தன் உணர்வுகளை அவளுக்குச் சரியாகக் கடத்த முடியுமா என்ற சந்தேகம் தோன்ற, அணைப்புடன் அனைத்தையும் நிறுத்திக் கொண்டான்.

அவன் இயல்பாக இல்லை என்று புரிந்து கொண்ட துர்காவிற்கு ஏன் என்று கேட்க சங்கடமாக இருந்தது.

தனிப்பட்ட அந்தரங்க நேரத்தில் ஆணின் முன்னெடுப்புத்தான் முதன்மையாக இருக்கும். பெண் எடுத்து வைத்தால் அது விமர்சனத்திற்கு உள்ளாகுமோ என்று பெண் தன் உள்ளக்கிடங்கை மறைத்து தான் வைப்பாள்.

துர்காவும் அதையே தான் செய்தாள். அவனாக அடுத்தக் கட்டத்தை நோக்கி செல்வான் என்று காத்திருக்க, நித்திலன் செல்லவில்லை.

முதலில் இதழ்களில் முத்தமிட ஆசைப்பட்டவன் கூட, அறைக்குள் வந்ததும் அதைச் செயல்படுத்துவதில் தயக்கம் காட்டினான்.

‘ஏன்?’ என்பது போல் துர்கா அவனைப் பார்க்க, அவளைத் தவிப்பாகப் பார்த்தான்.

“என்னாச்சு?” என்று கேட்டாள்.

“ஸாரி துர்கா… நா… நான்… என்னால… என்னால…நீ… நீ…” என்று தடுமாறி வார்த்தைகளைக் கோர்க்க முடியாமல் போராடியவன், “ஸாரி துர்கா…” என்று மீண்டும் சொல்லி விட்டுப் படுக்கைக்குச் சென்று சுருண்டு படுத்துக் கொண்டான்.

அவன் அப்படிச் சட்டென்று அவளை விட்டு விலகி சென்றதில் முகத்தில் அடித்தது போல் உணர்ந்தாள் துர்கா .

சில நொடிகள் அசையாமல் அதே இடத்தில் நின்று விட்டாள்.

அன்றிரவு இருவரும் உறக்கமில்லா இரவாகக் கழித்தனர்.

அவனின் நிராகரிப்பில் துர்கா தனக்குள் இறுகி போனாள்.

இரவு நடந்ததை நினைத்து உண்ண முடியாமல் தவித்தவன், குழந்தைக்கு மட்டும் ஊட்டி விட்டுவிட்டு எழுந்து விட்டான்.

“என்ன மாப்பிள்ளை சரியாவே சாப்பிடலை?” சபரிநாதன் தான் கேட்டார்.

“என்னன்னு தெரியலை மாமா. பசிக்கவே இல்லை. எனக்குப் போதும்…” என்றவன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டான்.

“என்னமா பார்த்துட்டு பேசாம நிக்கிற? மாப்பிள்ளைக்கு உடம்பு எதுவும் சரியில்லையான்னு போய்க் கேளு…” என்று அமைதியாக இருந்த மகளிடம் சொல்ல,

அவளோ “கேட்கிறேன் பா…” என்றவள் படுக்கையறைக்குள் செல்லாமல் சமையலறைக்குள் சென்றாள்.

‘பசி தாங்க மாட்டானே… சாப்பிடாமல் சென்று விட்டானே’ என்று அவளின் மனம் வருந்தியது.

ஆனால் அவனிடம் சென்று பேச முயலவில்லை.

வேலை இருப்பது போல் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக நடந்தாள்.

அன்றும் விடுமுறை நாள் தான் என்பதால் நித்திலன் வீட்டில் தான் இருந்தான். காலை உணவை முடித்ததும் வெளியே சென்று விட்டு வருகிறேன் என்று வெளியே சென்றிருந்தார் சபரிநாதன்.

நித்திலன் குழந்தையுடன் அறைக்குள் இருக்க, துர்கா சமையலறையில் அடைந்து கொண்டாள்.

அவள் மனம் முழுவதும் பல்வேறு யோசனைகள். ஏன்? ஏன் விட்டு விலகினான்? என்று அவளாக யோசித்துக் குழம்பி அது தான் காரணமாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.

அம்முடிவு கொடுத்த வலி அவளை உலுக்கி எடுத்துக் கொண்டிருந்தது.

மதிய உணவையும் அரையும் குறையுமாகவே உண்டான். துர்கா அதையும் கூட உண்ணாமல் இருக்க, “என்னமா மாப்பிள்ளைக்குத்தான் வயிறு சரியில்லை போல. நீயும் ஏன் சாப்பிடாம இருக்க?” என்று சபரிநாதன் கேட்ட பிறகே அவள் சாப்பிடாதது நித்திலனுக்குத் தெரிய வந்தது.

“சாப்பிடு துர்கா…” என்று தன் அமைதியை கை விட்டு சொன்னவனுக்கு மௌனத்தையே பதிலாகத் தந்தாள்.

காலையில் வித்தியாசமாகத் தெரியாதது இப்போது தெரிய, மகளையும், மருமகனையும் யோசனையுடன் பார்த்தார் சபரிநாதன்.

இருவருக்கும் இடையே ஊடலோ என்பது போல் இருவரையும் ஆராய்ந்தது அவரின் பார்வை.

“உட்கார் துர்கா…” என்று அவளை அமர வைத்து அவனே பரிமாற ஆரம்பிக்க,

‘நாம் தான் தவறாக நினைத்துக் கொண்டோம் போல’ என்று சபரிநாதன் மனம் தெளிந்தார்.

கூடவே மகளை மருமகன் ஒருமையில் அழைத்துப் பேசுவதையும் கவனித்தவருக்கு அவ்வளவு நிம்மதியாக இருந்தது.

அவர்கள் தனியாக இருக்கட்டும் என்று நினைத்து, விரைவிலேயே சாப்பிட்டு விட்டு எழுந்து சென்று விட்டார்.

தந்தை இருக்கும் வரை அவன் வைத்த உணவை அள்ளி கொரித்தவள், அவர் எழுந்து சென்றதும் தானும் எழுந்தாள்.

அவள் சரியாகச் சாப்பிடாததைக் கண்டு நித்திலன் ஏதோ சொல்ல வர, அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் எழுந்து சென்றாள்.

இருவருக்கும் இடையே மெல்லிய திரை விழுந்து போனதை உணர்ந்த நித்திலனுக்கு வேதனையாக இருந்தது.

இந்த வேதனைக்குக் காரணம் தான்தான் என்ற எண்ணம் வேற அவனைப் போட்டு அரித்து எடுத்தது.

விடுமுறை நாட்களில் மதியம் மூவரும் உறங்குவது வழக்கம்.

வருணா உறங்காமல் அவன் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தாள்.

“தூக்கம் வரலையாடா குட்டிமா?” அவளைக் கொஞ்சி தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அவளோ கேட்பேனா என்று உற்சாகமாக விளையாட அவனும் அவளுடன் கலந்து கொண்டான்.

மனதிற்குள் ரணம் ரம்பமாக அறுத்தாலும் குழந்தையின் அருகாமை அதை எல்லாம் பின்னுக்குத் தள்ளி வைக்க அவனுக்கு உதவியது.

கட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த வருணா, அது அலுத்துப் போய்க் கீழே இறக்கி விடச் சொல்ல, இறக்கி விட்டதும் வரவேற்பறைக்கு ஓடினாள்.

“விழுந்துடாதே குட்டிம்மா, மெதுவா போ…” என்று அவனும் பின்னால் ஓடினான்.

வருணா, சோஃபாவிற்குப் பின்னால் சென்று ஒளிய, அப்போது தான் சோஃபாவில் அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்தான்.

தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அவளின் கவனம் தொலைக்காட்சியில் இல்லை. அதையும் தாண்டி சுவற்றை வெறித்துக் கொண்டிருந்தன அவளின் கண்கள்.

அவளை அப்படிப் பார்த்ததும் வருந்தினான்.

“உள்ளே போய்க் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாமே துர்கா…” என்றான்.

அவன் குரல் கேட்டதும் லேசாகத் திரும்பி அவனைப் பார்த்தவள் ஒன்றும் சொல்லாமல் மீண்டும் சுவரை வெறிக்க ஆரம்பித்தாள்.

அதற்கு மேல் அவளிடம் பேச முடியாமல் நித்திலனும் அமைதியாகிப் போனான்.

அன்றைய போது இருவருக்கும் இடையே ஒரு மௌனத்திரையுடனேயே கடந்தது.

அன்று இரவு ஆனதும் நேற்று நடந்தது எல்லாம் அதிகமாக ஞாபகத்தில் வர, துர்காவின் முகத்தைப் பார்க்க கூசி விரைவிலேயே படுக்கையில் கண்களை மூடிப் படுத்திருந்தான் நித்திலன்.

வேலையை முடித்து விட்டு துர்கா வருவாள் என்று காத்திருக்க, அவள் வரவே இல்லை.

குழந்தை மட்டும் அவனுடன் தூங்கிக் கொண்டிருந்தாள்.

தூங்குவதாகக் காட்டிக் கொண்டு படுத்திருந்தவனுக்கு அதற்கு மேல் அமைதியாகப் படுத்திருக்க முடியவில்லை.

மதியம் போல் சோஃபாவில் அமர்ந்திருக்கிறாளோ என்று நினைத்து எழுந்து அறையை விட்டு வெளியே வந்து பார்த்தான்.

வரவேற்பறை இருளில் மூழ்கி இருந்தது. சோஃபாவில் துர்கா இல்லை.

சமையலறையிலும் இரவு விளக்கு அணைக்கப்பட்டிருக்க, துர்கா எங்கே? என்று பார்த்தான்.

வரவேற்பறையிலும், சமையலறையிலும் இல்லை என்றால் வேறு எங்கே சென்றாள்? அவனிடம் பதட்டம் தொற்றிக் கொண்டது.

சபரிநாதனின் அறைகதவு அடைக்கப்பட்டிருந்தது. அவரிடம் கேட்டு சூழ்நிலையை மேலும் சிக்கலாக்க விருப்பமிருக்கவில்லை.

அதனால் அவனே தேடினான். அவள் எங்கேயும் இல்லை என்றதும் அனைத்து விளக்குகளையும் போட்டுவிட்டு, அவள் ஒளிந்திருப்பது போல் பதறிப் போய் இண்டு இடுக்கு எல்லாம் தேடினான்.

பின்பு தான் அதைக் கவனித்தான். எப்போதும் திறந்திருக்கும் குழந்தையின் அறை இப்போது மூடி இருப்பதைப் பார்த்து அருகே சென்று “துர்கா உள்ளே இருக்கியா?” என்று பதட்டமாகக் கதவைத் தட்டினான்.

உடனே கதவைத் திறந்த துர்கா, “இப்ப எதுக்கு இவ்வளவு வேகமாகக் கதவைத் தட்டுறீங்க? அப்பா முழிச்சுக்கப் போறார்…” என்றாள் கோபமாக.

“நீ காணோம் என்றதும் பதறிட்டேன் துர்கா. இங்கே என்ன செய்ற? நம்ம ரூமுக்கு வரலையா?” என்று கேட்டவனுக்கு அவளைப் பார்த்து விட்டதில் அப்படி ஓர் ஆசுவாசம்!

“இனி நான் இங்கே தான் படுக்கப் போறேன்…” என்று அவன் முகம் பார்க்காமல் பதில் சொன்னவளை பார்த்து அவனின் ஆசுவாசம் எல்லாம் பறந்தோட அதிர்வை வாங்கி நின்றான்.

“ஏன் துர்கா?” மெல்லிய குரலில் கேட்டான்.

“விருப்பம் இல்லாத இடத்தில் இருக்க எனக்கு விருப்பமில்லை. சொல்ல போனால் இந்த வீட்டுலயே நான் இருக்கணுமா வேண்டாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்…” என்றாள் வெடுக்கென்று.

“துர்கா…” அவளிடமிருந்து அப்படி ஒரு வார்த்தை வரும் என்று எதிர்பாராதவன் திகைத்துப் போனான்.

சில நொடிகள் என்ன பேசுவது என்றே புரியவில்லை.

“நான் என்ன தப்பு செய்தேன்னு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை துர்கா?” தீனமான குரலில் கேட்டான்.

“நீங்க தப்பு செய்யலை. தப்பு எல்லாம் என்னோடது தான். ஒரு கல்யாணம் ஆகாதவரை குழந்தையோட இருந்த நான் கல்யாணம் செய்திருக்கக் கூடாது. நான் தான் தப்பு செய்துட்டேன்…” என்றவளின் குரல் கரகரத்துப் போனது.

“துர்கா. ஏன்? ஏன் இப்படி எல்லாம் பேசுற? ப்ளீஸ் துர்கா, இப்படிப் பேசாதே! என்னால் தாங்க முடியலை…” என்றவன் நெஞ்சை அழுத்தி விட்டுக் கொண்டான்.

அப்போது சபரிநாதன் இருந்த அறையில் காலடி சத்தம் கேட்க, அவருக்குத் தங்கள் பேச்சு கேட்க வேண்டாம் என்று சட்டென்று அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான்.

அவனைப் பார்க்காமல் எங்கோ திரும்பி நின்றிருந்தவளின் தோளில் கை வைத்தான்.

“ஏன் துர்கா என்னென்னவோ பேசுற?” என்று கேட்டான்.

துர்கா பதில் சொல்லாமல் இறுக்கமாக நின்றிருந்தாள்.

“துர்கா…” என்று அவளின் தோளை தொட்டு தன் பக்கம் திருப்பினான்.

அவளின் கண்களிலிருந்து கண்ணீர் இறங்கி கன்னம் தாண்டி வழிந்து கொண்டிருந்தது.

துடித்துப் போனான் நித்திலன்.

வேகமாக அவளின் கண்ணீரை துடைக்கப் போக, அவனை விட்டு வேகமாக விலகி நின்றாள்.

“என்னைத் தொட்டு என்னைப் பலவீனமாக்க வேண்டாம்…” என்றாள்.

“நான் என்ன தப்புச் செய்தேன் துர்கா? நேத்து நான் அப்படி விலகிப் போனது உன்னைக் காயப்படுத்திருச்சா? அதுக்குக் காரணம்…” என்று அவன் சொல்ல போக,

“எனக்கே தெரியும்!” என்றாள் இறுகிய குரலில்.

“ஓ! தெரியுமா?” என்று தளர்ந்து போய்க் கேட்டான்.

“நல்லாவே தெரியும். நான் ஏற்கனவே திருமணம் ஆனவள். தாம்பத்திய உறவை அறிந்தவள். அதுதான் காரணம்னு எனக்கு நல்லாவே தெரியும்…” என்றவள் உடைந்து போய்ச் சுவற்றில் சாய்ந்து கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

“தப்புச் செய்துட்டேன். நான் இரண்டாவதா கல்யாணம் பண்ணிருக்கவே கூடாது. அப்படியே பண்ணிருந்தாலும் நண்பர்களாக இருப்போம்னு நான் சொன்னதைக் கடைபிடிச்சுருக்கணும். அதை விட்டு உங்களை என் மனதில் ஏற்றி உங்களுக்குன்னு ஒரு இடத்தை என் மனதில் கொடுத்து, இப்ப உங்க நிராகரிப்பில் தவியா தவிச்சுட்டு இருக்கேன். எல்லாம் என் தப்பு தான்! என் தப்பே தான்!” என்றவளிடமிருந்து ஒரு கேவல் வந்தது.

அடுத்தக் கேவலும் அதைத் தொடர்ந்து வெளியே வர ஆரம்பித்த நேரத்தில் அவளின் கேவல் அப்படியே அடங்கிப் போனது நித்திலனின் அதரங்களுக்குள்!

தன் இதழ்கள் கணவனால் அபகரிக்கப்பட்டதும் சட்டென்று விழிகளைத் திறந்தாள் துர்கா.

அவள் விழிகளுக்குள் அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் அடுத்த நொடி சரசரவென இறங்கி இருவரின் இதழ்களையும் உரசி சென்று சேர, அதையும் தன் அதரங்களால் உறிந்து எடுத்தான் நித்திலன்.

அவனின் செயலை நம்ப முடியாமல் துர்காவின் விழிகள் அகலமாக விரிந்தன.

அவளின் விரிந்த விழிகளுடன் தன் விழிகளையும் கலக்க விட்டு, தன் அதரங்களை அவளின் இதழ்களுடன் உறவாட விட்டான்.

அவனின் கைகள் அவளைச் சுற்றி வளைத்து தன்னுடன் இறுக்கிக் கொண்டன.

அவள் மூச்சு விடத் தவிக்க ஆரம்பித்ததும் அவளின் இதழ்களை விட்டவன், அவளின் கழுத்தில் முகத்தைப் புதைத்து அங்கே அடுத்தடுத்த முத்தங்களைப் பதித்தான்.

“என்ன… என்ன இது?” மூச்சு வாங்கிய படி கேட்டவளின் இதழ்களை மீண்டும் சிறை செய்தான். அவனின் கைகள் அத்துமீறி சேலையின் இடைவெளியில் நுழைந்து அவளைத் தகிக்க வைத்தது.

அவன் கொடுக்கும் உணர்வுகளைத் தாளமுடியாமல் வெடுக்கென்று அவளின் இதழ்களை அவனிடமிருந்து பறித்துக் கொண்டவள், அவனின் கையை மேலும் அசைய விடாமல் பிடித்து நிறுத்தினாள்.

“என்ன பண்றீங்க?” தவிப்புடன் கேட்டாள். அவளின் குரலும் தடுமாறியது.

நேற்று இரவு தன்னைத் தொடவே யோசித்தவன் இன்று ஏன் இவ்வளவு ஆவேசம்?

தான் வெட்கத்தை விட்டுத் தவித்துப் போய்க் கிடக்கிறேன் என்றதால் இப்படிச் செய்கிறானா? என்பது போல் பார்த்தாள். அவளின் சிந்தனை சில நொடிகளில் எங்கெங்கோ சென்று வந்தது.

அவளின் கண்களின் கேள்வி புரிந்தது போல் அவளைத் தன்னருகே இழுத்து இறுக அணைத்துக் கொண்டான் நித்திலன்.

அவனின் மீசை ரோமங்கள் அவளின் காது மடல்களை உரசின.

“நேத்தும் எனக்கு இப்படியெல்லாம் நடந்துக்கணும் போலத்தான் இருந்தது துர்கா. இப்பவும் என் ஆசை, ஆர்வம், தாபம் எல்லாத்தையும் இப்படித்தான் உன்கிட்ட கொட்டணும் போல இருக்கு துர்கா.

உன்னை நான் முழுசா அறிந்து கொள்ளணும்னு மூச்சு முட்ட ஆசை இருக்கு. நானும் உன்னில் உருகி, உன்னையும் என்னில் உருக வைக்க வேண்டும் போல் இருக்கு. இன்னும் இன்னும் நீயும், நானும் ஒன்றாகக் கலக்கணும்னு என் ஒவ்வொரு அணுவும் துடிக்குது. ஆனா… ஆனா…” என்று அவளின் காதின் அருகில் முணுமுணுத்தான்.

‘ஆனா என்ன?’ என்ற யோசனை ஓடினாலும் அவள் அதை வாய் விட்டு கேட்டுவிடவில்லை.

ஆனால் அவனே சிறு தயக்கத்திற்குப் பிறகு மெல்ல சொன்னான்.

அவள் காதில் அவன் சொன்ன காரணத்தைக் கேட்டு அதிர்ந்து அவனை விட்டு விலகி அவன் முகம் பார்த்தாள்.

அவனின் முகம் தவிப்பில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

“ஏன் அப்படியெல்லாம் நினைக்கிறீங்க?” என்று தன் மௌனத்தை விடுத்து அதிர்ந்து கேட்டாள் துர்கா.