28 – மின்னல் பூவே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 28
மறுநாள் சீக்கிரமே எழுந்து காலை உணவை தயாரிக்க ஆரம்பித்தாள் உத்ரா.
முகில் சமையலறையில் சப்தம் கேட்டு எழுந்து வந்தான்.
அவள் வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்தவன், “என்ன இவ்வளவு சீக்கிரம் சாப்பாடு செய்ற? மணி ஆறரை தானே ஆகுது?” என்று கேட்டான்.
“மதியத்துக்கு லன்ட்ச் ரெடி செய்யணுமே முகில். இப்ப வேலையை ஆரம்பித்தால் தான் சரியா இருக்கும்…”
“மதியத்துக்குக் கேண்டின்ல பார்த்துக்கலாமே? அதுக்கு எதுக்குச் சமைக்கிறே?”
“கேண்டின்ல என்னைக்காவது சாப்பிட்டால் பரவாயில்லை முகில். தினமும் சாப்பிடுவது எல்லாம் சரிவராது. சரி, உங்களுக்குக் காஃபி போடட்டுமா?” என்று கேட்டாள்.
“ம்ம் போடு… ப்ரஸ் பண்ணிட்டு வர்றேன்…” என்றவன் அறைக்குச் சென்றான்.
அவன் வரும் முன் இருவருக்கும் காஃபி போட ஆரம்பித்தாள். அவன் வந்ததும், அவனுக்கு ஒரு கப் கொடுக்க, சோஃபாவில் அமர்ந்து பருக ஆரம்பித்தான்.
உத்ரா ஒருபக்கம் வேலையைப் பார்த்துக் கொண்டே காஃபியைப் பருகி முடித்தாள்.
காஃபியைக் குடித்துக் கொண்டே தொலைக்காட்சியைப் போட்டு விட்டு அதைப் பார்க்க ஆரம்பித்தான் முகில்.
உத்ராவும் வேலைக்குச் செல்வாள். அவளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு வரவில்லை.
இதுவரை சமையலறைக்குச் சென்று உதவி செய்து அவனுக்குப் பழக்கம் இல்லை என்பதால் தொலைக்காட்சியில் மூழ்க ஆரம்பித்தான்.
முன்பு ஏழு மணிக்குக் கிளம்பினால் தான் சீக்கிரம் அலுவலகம் செல்ல முடியும் என்று இந்த நேரத்தில் எல்லாம் கிளம்ப ஆரம்பித்து விடுவான்.
இப்போது அலுவலகம் அருகிலேயே இருக்க அவதி அவதியாகக் கிளம்ப வேண்டும் என்ற எந்த அவசரமும் இல்லாமல் இலகுவாக அமர்ந்திருந்தான்.
சமையலறையில் முகில் உதவ வேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள் உத்ரா.
எட்டு மணிக்கு சமையலை முடித்து மேஜையின் மீது அடுக்கி வைத்தாள்.
அப்போது கீழே நடைப்பயிற்சிக்குச் சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்தான் முகில்.
வியர்வை குறையச் செய்தித்தாளை எடுத்து வைத்துக் கொண்டு அவன் ஹாலில் அமர்ந்து விட, சமையலறையில் நின்றிருந்த கசகசப்புப் போகக் குளிக்கச் சென்றாள் உத்ரா.
அடுத்து வந்த ஒரு மணி நேரத்தில் இருவரும் குளித்து, உணவை முடித்து அலுவலகத்திற்குக் கிளம்ப வீட்டை விட்டு வெளியேறினர்.
அவர்கள் குடியிருக்கும் அடுக்குமாடி கட்டிடம் ஆறு தளங்களைக் கொண்டிருந்தது. அவர்களின் ப்ளாட் நான்காவது தளத்தில் இருந்தது.
கீழே செல்ல படியருகில் மின்தூக்கியும் இருந்தது.
இருவரும் மின்தூக்கியினுள் ஏறினர்.
உள்ளே ரிலாக்ஸாக நின்ற பிறகு தான் முகிலின் கவனம் அருகில் நின்றிருந்த மனைவியின் புறம் சென்றது.
இளஞ்சிவப்பு நிற சுடிதார் அவளின் உடலை கச்சிதமாகத் தழுவியிருந்தது.
அவளின் பக்கவாட்டுத் தோற்றமே அவளை எடுப்பாகக் காட்டியது. காதின் ஓரம் லேசாகச் சுருண்டிருந்த முடிக்கற்றைகளை மெல்ல ஒதுக்கிவிட்டுக் கொண்டாள்.
அப்போது அவனின் கவனத்தை அலைபேசி கலைத்தது.
அவனின் அம்மா தான் அழைத்துக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் மின்தூக்கியின் கதவு திறக்க வெளியே நடந்து கொண்டே அழைப்பே ஏற்றுப் பேச ஆரம்பித்தான்.
“ஹலோ அம்மா, சொல்லுங்க. என்ன செய்றீங்க? சாப்ட்டீங்களா? அப்பா ஆபிஸ் கிளம்பிட்டாரா?” என்று விசாரித்தான்.
“அப்பா இப்போத்தான் கிளம்பினார் முகில். நான் வேலையெல்லாம் முடிச்சுட்டு சாப்பிட்டு உட்கார்ந்திருக்கேன். நீங்க இரண்டு பேரும் ஆபிஸ் கிளம்பிட்டீங்களா முகில்?” என்று கேட்டார்.
“கிளம்பி பார்க்கிங் வந்திட்டோம் மா. வண்டியை எடுத்துட்டு கிளம்ப வேண்டியது தான்…” என்றான்.
“உத்ராவும் உன்கூடத் தானே வர்றாள். அவள் ஸ்கூட்டியில் வரலையே?” என்று கேட்ட அன்னைக்குப் பதில் சொல்லத் தெரியாமல் முழித்தான் முகில்வண்ணன்.
அதைப் பற்றி அவளிடம் அவன் கேட்கவே இல்லை. அதை அவன் யோசிக்கவும் இல்லை. எப்போதும் போல அலுவலகம் கிளம்பத் தன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான்.
அவள் எதில் வருவாள்? தன்னுடன் அழைக்க வேண்டுமா? என்று எதுவுமே யோசிக்கவே இல்லை.
மகனின் அமைதியே வளர்மதிக்கு விஷயத்தை விளங்க வைத்தது.
“இன்னைக்கு முதல் நாள் ஆபிஸ் போறீங்க. அதனால் இரண்டு பேரும் சேர்ந்தே போங்க…” என்றார் முடிவாக.
“என்னம்மா, இதிலும் சென்டிமென்ட்டா?” தன் தடுமாற்றத்தை மறைக்கக் கேலியாகக் கேட்டான்.
“சென்டிமென்ட் எல்லாம் இல்லை. நீ ஆபிஸ் போ. உனக்கே புரியும்…” என்றவர் அழைப்பைத் துண்டித்தார்.
‘வர வர இந்த அம்மா பூடகமாகவே பேச ஆரம்பிச்சுட்டாங்க’ என்று தனக்குள் புலம்பிக் கொண்டவன் உத்ராவைப் பார்த்தான்.
அவளின் வண்டியின் அருகே நின்றிருந்தாள். அவளின் கையில் வண்டி சாவி இருந்தது.
அவளின் அருகில் சென்றவன், “அம்மா நம்ம இரண்டு பேரையும் ஒரே வண்டியில் போகச் சொன்னாங்க. வா…” என்று அழைத்தான்.
“ஓ, ஏன்?”
“என்ன சென்டிமென்ட்டோ என்னவோ. வா…” என்று சலிப்பாகச் சொன்னவன் தன் வண்டியை இயக்கி அவள் ஏற காத்திருந்தான்.
அவள் ஏறி அமர்ந்ததும் வண்டியைச் சாலையில் ஓட விட்டான்.
முதல் முறையாக அவனின் மனைவியைத் தன் வண்டியில் அழைத்துச் செல்கிறான்.
அவனை ஒட்டாமல் உத்ரா அமர்ந்திருந்தும், அவளின் வாசம் அவனைத் தழுவி தீண்டியது. மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டான்.
ஏதோ புரியாத இதம் மனம் முழுவதும் பரவியது போல் உணர்ந்தான்.
அந்த இதத்துடனேயே அலுவலகத்திற்குச் சென்று வண்டியை நிறுத்தினான்.
இருவரும் ஒன்றாக இணைந்து நடந்து அவர்கள் இருக்கைக்கு அருகில் சென்ற போது வழியிலேயே ஆரவாரமாகக் கைதட்டி வரவேற்றனர் அவர்களின் அலுவலக நண்பர்கள்.
அந்த வரவேற்பை எதிர்பாராமல் இருவரும் வியப்புடன் நின்று விட்டனர்.
“என்னாச்சு? எதுக்கு இந்த வரவேற்பு?” என்று கேட்டான் முகில்.
“ஆபிஸ் ஸ்டாப்பா போயிட்டு இரண்டு பேரும் தம்பதிகளா திரும்பி வந்திருக்கீங்களே. அதற்குத் தான் இந்த ஸ்பெஷல் வரவேற்பு…” என்றனர்.
அன்னை இருவரையும் ஒன்றாகக் கிளம்பச் சொன்ன காரணம் முகிலுக்குப் புரிந்தது.
அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, அவர்கள் வாழ்த்தை பெற்றுக் கொண்டு வேலையைத் தொடர ஆரம்பித்தனர்.
“என்ன உத்ரா கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு?” என்று விசாரித்தபடி தோழியின் அருகே அமர்ந்தாள் புவனா.
“ம்ம், யா… குட்…” என்று முடித்துக் கொண்டாள் உத்ரா.
“என்ன பதில் இது?” என்று புவனா கேட்க,
“நான் வேற என்ன பதில் சொல்லணும்னு எதிர்பார்க்கிற புவி?” என்று உத்ரா கணினியை இயக்கிக் கொண்டே கேட்டாள்.
“முகில் உன்கிட்ட எப்படி நடந்துகிறார்? முன்னாடி போலக் கோபப்படுறாரா? இல்லை…” என்றவள் நிறுத்த,
“இல்லை?” என்று உத்ரா கேட்க,
“ரொமான்ஸ் பண்றாரா?” என்று கண்சிமிட்டிக் குறும்பாகக் கேட்டாள்.
கணினியை விட்டு பார்வையைத் தோழியின் பக்கம் திருப்பிய உத்ரா, “எங்க கல்யாணம் எதிர்பாராமல் நடந்த திடீர் கல்யாணம். அது உனக்கு ஞாபகம் இருக்குத்தானே?” இது தான் பதில் என்பது போல் கேட்டாள்.
தோழியின் கேள்வியிலேயே அவள் வாழ்க்கைகான பதில் அடங்கியிருந்ததை உணர்ந்த புவனாவின் குறும்புத்தனம் அப்படியே அடங்கிப் போனது.
“ஸாரி உத்ரா…” என்றாள்.
“விடு புவி. போய் வேலையைப் பார்…” என்ற உத்ரா தன் வேலையைத் தொடர்ந்தாள்.
விடுமுறை விட்டுத் திரும்ப வந்ததால் முகில், உத்ரா இருவருக்குமே வேலைகள் அதிகமாக இருந்தன.
அன்றைய நேரம் வேகமாக ஓடியது.
வேலையில் கவனமாக இருந்தாலும் உத்ராவின் ஞாபகம் அவ்வப்போது அவளின் சித்தியைச் சுற்றி வந்தது.
இன்று அவரைப் பார்க்க வருவதாகச் சொல்லிவிட்டாள். இப்போதே மாலையை நெருங்கிவிட்டது.
முகிலிடம் இன்னும் விஷயத்தைச் சொல்லியிருக்கவில்லை. அவனை எப்படி அழைத்துப் போவது என்ற யோசனை அவளைச் சுழன்றடித்தது.
உண்மையைச் சொன்னால் கண்டிப்பாகக் கோபப்பட்டு வரமாட்டான் என்று தெரியும்.
என்ன செய்வது? என்று நினைத்தவள் தலையை அடிக்கடி பிடித்துக் கொண்டாள்.
“என்ன செய்து?” என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
முகில் தான் அவளின் எதிரே நின்றிருந்தான். முன் போல் எரிந்து விழாமல் அவனின் குரலில் அக்கறை எட்டிப்பார்த்ததை உணர்ந்தவள் அவனின் கண்களையே தீர்க்கமாகப் பார்த்தாள்.
“என்ன உத்ரா? ஏன் அப்படிப் பார்க்கிற? உடம்புக்கு என்ன செய்து? ஏன் ஒருமாதிரி இருக்க?” என்று கேட்டான்.
“ஹான்… தலைவலி முகில்…” என்றாள்.
“ஓ!” என்றவன் யோசனையுடன் அவளைப் பார்த்தான். வேலை பளுவினால் அன்று சோர்வாகத் தான் இருந்தாள் உத்ரா.
“நீ வேணும்னா வீட்டுக்குக் கிளம்பு…” என்றான்.
லேசாகத் தலைவலிப்பது போலிருக்கவும் அவன் கேட்டதும் சட்டென்று சொல்லியிருந்தாள். இப்போது அவன் வீட்டுக்குக் கிளம்பச் சொன்னதும் பட்டென்று ஒரு யோசனை தோன்றியது.
“நான் வண்டியில் வரலை. இப்போ எப்படிப் போக?” என்று கேட்டாள்.
“எனக்கு வேலை இருக்கு உத்ரா. நீ ஆட்டோ பிடிச்சுப் போ…” என்றான்.
அவன் அப்படிச் சொன்னதும் உத்ராவின் முகம் அப்படியே மாறியது.
அதைக் கவனித்தாலும் தன் இருக்கைக்குச் சென்றான் முகில்வண்ணன்.
‘என்னடா இப்பத்தான் அக்கறையா கேட்குறானேன்னு நினைச்சேன்…’ என்று உள்ளுக்குள் சலித்துக் கொண்டாள் உத்ரா.
‘இப்ப என்ன செய்றது? பேசாம உண்மையைச் சொல்லியே கேட்டுப் பார்ப்போமா?’ என்று யோசித்தவளுக்கு நிஜமாகவே தலைவலி அதிகமானது போல் இருக்கத் தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.
தன் இருக்கையில் அமர்ந்த வண்ணம் சில நொடிகள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் முகில்வண்ணன்.
உத்ரா யோசிப்பதும், கணினியைப் பார்ப்பதும், கடிகாரத்தைப் பார்ப்பதுமாக இருந்தாள்.
“வா… போகலாம்…” என்று முகிலின் குரல் கேட்க, வேகமாக நிமிர்ந்து பார்த்தாள். அவளின் தவிப்பை கண்டவன் எழுந்து வந்திருந்தான்.
அவனின் பையை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்ல தயாராக நின்றிருந்தவனைப் பார்த்ததும் உத்ராவின் முகம் லேசாக மலர்ந்தது.
“நான் வீட்டில் இருந்து வேலை பார்க்கணும் உத்ரா. சீக்கிரம் கிளம்பு…” என்று அவளின் மலர்ந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.
வேகமாக அவனுடன் கிளம்பினாள்.
இருவரும் வெளியே வந்து வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி சென்றனர்.
‘இப்ப கோவிலுக்கு வேற ரூட்டில் போகணுமே…’ என்று நினைத்த உத்ரா,
“முகில்…” என்று அழைத்தாள்.
“ம்ம்ம்…”
“எனக்கு ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா?” என்று கேட்க, வண்டியை ஓட்டிக் கொண்டே லேசாகத் திரும்பி அவளைப் பார்த்தான்.
“உதவியா? என்ன உதவி?”
“இன்னைக்குக் கோவிலுக்குப் போகணும்னு நினைச்சுருந்தேன். ஆனா வேலை இருக்கே, போக முடியாதேன்னு நினைச்சேன். இப்பத்தான் சீக்கிரம் வீட்டுக்குப் போறோமே. அப்படியே கோவிலுக்குப் போய்ட்டு போவோமா?” என்று கேட்டாள்.
“இப்ப நாம உனக்குத் தலைவலிக்குதுன்னு தான் வீட்டுக்குப் போறோம் உத்ரா. எனக்கும் வேலை இருக்கு. இப்ப போய்க் கோவிலுக்குப் போகணும்னு சொல்ற?” என்று சிடுசிடுப்பாகக் கேட்டான்.
“ப்ளீஸ் முகில். சீக்கிரம் கும்பிட்டுட்டு வீட்டுக்குப் போயிடலாம்…” என்று அவள் கெஞ்சலாகக் கேட்க, அவளின் முகத்தைக் கண்ணாடி வழியாகப் பார்த்தவன் கிறங்கித்தான் போனான்.
அவனை அழைத்துச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பில் அவளையும் மீறி தன் பெற்றோரிடம் கெஞ்சிக் கேட்பது போல் குழந்தையாக முகத்தைச் சுருக்கி, உதட்டை லேசாகச் சுளித்துக் கேட்டாள். அவன் கண்ணாடி வழியாகத் தன்னைப் பார்த்ததை அவள் அறியவில்லை.
ஏற்கனவே அவளின் உதடுகள் அவனைப் பைத்தியம் பிடிக்க வைக்கும் என்பதை அறியாமல் அவள் உதட்டை தெரியாமல் சுளித்து விட, அதுவே அவளுக்குச் சாதகமாக அமைந்து போனது.
அதற்கு மேல் மறுக்காமல், “எந்தக் கோவில்?” என்று கேட்டான்.
“பிள்ளையார் கோவில். இதோ இந்த ரோட்டில் போனால் வரும்…” என்று கிளைபாதையைச் சுட்டிக் காட்டினாள்.
உடனே அந்தப் பாதையில் வண்டியைத் திருப்பினான்.
அவள் சொன்ன பிள்ளையார் கோவில் முன் வண்டியை நிறுத்தியவன், அவளுடன் இறங்கி நடந்தான்.
கோவிலுக்குள் காலடி எடுத்து வைத்ததும் “உத்ரா…” என்று அழைத்துக் கொண்டு வந்த விமலாவைப் பார்த்ததும் முகிலின் கோபம் சுறுசுறுவெனப் பொங்கிக் கொண்டு வந்தது.
“இவங்களைப் பார்க்கத்தான் தலைவலின்னு பொய் சொல்லிக் கூட்டிட்டு வந்தியா?” என்று உத்ராவை பார்த்துக் கோபமாக வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவன் வேகமாகக் கோவிலை விட்டு வெளியேற போனான்.
“மாப்பிள்ளை, உங்ககிட்ட மன்னிப்பு கேட்க நான் தான் உத்ராவை கூட்டிட்டு வர சொன்னேன்…” என்று பதறிக் கொண்டு அவனின் பின்னால் வந்தார் விமலா.
அவரைக் கண்டு கொள்ளாமல் அவன் வெளியே செல்ல போக, உத்ரா அவனின் கையை அழுத்தமாகப் பிடித்து நிறுத்தி, “முகில், ப்ளீஸ் ஒரு நிமிஷம் நில்லுங்க…” என்றாள்.
அவளின் கையில் இருந்த தன் கையை உதறி விடுவித்துக் கொண்டவன் “நின்னு? நின்னு என்ன செய்யச் சொல்ற? இவங்க யார் என்கிட்ட மன்னிப்பு கேட்க? யாரோ ஒருத்தர்கிட்ட நான் ஏன் நின்னு பேசணும்?” என்று கோபமாகக் கேட்டான்.
“உத்ராவும் என் பொண்ணு மாதிரி தான் மாப்பிள்ளை…” என்று விமலா சொல்ல,
கோபமாக உத்ராவின் புறம் திரும்பியவன் “இதோ பார் உத்ரா, உங்க அம்மா பொண்ணு பாசம் எல்லாம் உன்னோட நிறுத்திக்கச் சொல்லு. இவங்க பொண்ணால் நானும் என் குடும்பமும் அவமானப்பட்டுக் கூனி குறுகி நின்னது எல்லாம் போதும். இப்போ கோவிலில் வச்சி என்னைத் தேவையில்லாம பேச வைக்க வேண்டாம். நான் இப்போ கிளம்புறேன். நீ வர்றீயா இல்லையா?” என்று உத்ராவிடம் கேட்டான்.
“முகில் ஒரு நிமிஷம் பொறுமையா இருங்க. வயதில் மூத்தவங்க. உங்ககிட்ட பேசணும் வாங்கன்னு சொன்னப்போ, வரமுடியாதுன்னு என்னால் மறுக்க முடியலை. அவங்க உங்ககிட்ட தான் ஏதோ சொல்லணுமாம்.
என்னன்னு எனக்கும் தெரியாது. என்னை நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும். ஆனாலும் வயதில் பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்து என்ன சொல்ல வர்றாங்கன்னு ஒரு நிமிஷம் நின்னு கேட்கலாமே?” என்று இறைஞ்சுதலாகக் கேட்டாள்.
அவளின் முகத்தை ஒரு நொடி தீர்க்கமாகப் பார்த்தவன், “என்னன்னு சொல்ல சொல்லு…” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்ட விமலா, “அது வந்து மாப்பிள்ளை…” என்று ஆரம்பிக்க,
“என்னை அப்படிக் கூப்பிடாதீங்க. நான் என் மாமியார், மாமனாருக்கு மட்டும் தான் மாப்பிள்ளை…” என்றான் அழுத்தமாக.
அவன் அதை ஒருவித கோபத்தில் தான் சொன்னான். ஆனால் அதைக் கேட்ட உத்ராவோ அவனை ஆனந்தமாகத் திரும்பிப் பார்த்தாள்.
கோபத்தில் அதை அவன் சொன்னாலும் கேட்டவளுக்கோ இன்ப அதிர்வு வந்து போனது.
“சரிங்க தம்பி…” என்ற விமலா, “நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும் தம்பி…” என்றார்.
“இதோ பாருங்க, கல்யாணம் நின்னதோட உங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைன்னு ஆகிடுச்சு. அப்புறம் உங்க மன்னிப்பை என்கிட்ட ஏன் கேட்குறீங்க?” என்று கேட்டான்.
“இப்ப நான் கேட்ட மன்னிப்பு உங்க கல்யாணம் நின்னதுக்காக இல்லை தம்பி…” என்று அவர் சொல்ல,
“பின்ன வேற எதுக்காக?” என்று கேட்டான்.
அவர் அவனைத் தயக்கத்துடன் பார்த்தார்.
“என்ன விஷயம் சித்தி? தயங்காம சொல்லுங்க…” என்று கேட்டாள் உத்ரா.
“உத்ரா நான் உன்கிட்டயும் மன்னிப்பு கேட்கணும் டா…” என்றார்.
“எங்கிட்டயா? என்கிட்ட எதுக்கு மன்னிப்பு கேட்கிறீங்க சித்தி?” உத்ரா புரியாமல் கேட்க, முகில் அவரைக் கேள்வியாகப் பார்த்தான்.
“வினையம் பிடிச்ச மகளைப் பெத்து வச்சுருக்கேனே உத்ரா. அவளைப் பெத்த பாவத்துக்கு நான் மன்னிப்பு கேட்டுத்தானே ஆகணும்…” என்றார்.
“என்ன சித்தி சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலையே? கமலி இன்னும் என்ன செய்து வச்சுருக்காள்?” என்று கேட்டாள்.
“அவள் ஏற்கனவே நிறையச் செய்து வச்சுட்டாள் உத்ரா. அவள் செய்த எதுவுமே தெரியாம அவளை நம்பி ஏமாந்து நிக்கிறோம்…” என்றார்.
அவர் சொன்னது இன்னும் உத்ரா, முகில் இருவருக்குமே புரியவில்லை.
இருவரும் அவரைக் குழப்பத்துடன் பார்த்தனர்.
“ஏய் வாடி, வந்து நீயே எல்லாம் சொல்லி மன்னிப்பு கேளு…” என்று பக்கவாட்டில் திரும்பி விமலா கோபமாக அழைக்க, அங்கிருந்த ஒரு தூண் மறைவில் இருந்து வெளியே வந்தாள் கமலினி. அவளுடன் ஒற்றுப்புல்லாகத் தொடர்ந்து வந்தான் அவளின் கணவன் நிவேதன்.
அவர்களைக் கண்டதும் முகில்வண்ணனின் புஜங்கள் கோபத்தில் இறுகின.