26 – ஞாபகம் முழுவதும் நீயே (Final)

அத்தியாயம்- 26

அவளின் மௌனத்தைக் கண்டு “என்ன பவி…?” என்று வினய் மீண்டும் கேட்டான்.

ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு “நான் பயம், பயம்னு சொன்னேனே வினு? அது ஃபாரின் வந்து இருக்குற பயம் மட்டும் இல்லை. உங்க மேல நான் வச்ச நம்பிக்கை உடைஞ்சிருமோனு தான் அதிகம் பயந்தேன் வினு. அது தான் நான் கன்சீவ்னு தெரிஞ்சு நீங்க கூப்பிடவும் வர மறுத்தேன்” என்றாள்.

“என்ன சொல்ற பவி…? புரியல… தனியா இருந்தப்ப என் மேல இருந்த நம்பிக்கை என் கூட இருக்கும் போது ஏன் உடையும்னு நினைச்ச?” என்று மனைவியின் மனநிலை புரியாமல் கேட்டான் வினய்.

“ஹ்ம்ம்…! அந்த ஊர் சூழ்நிலை பழசை எல்லாம் ஞாபகப்படுத்தித் திரும்ப அந்த வலி எனக்குள்ள பரவி, அது உங்க மேல சந்தேகமா மாறிடுமோனு பயம். நீங்க அங்கே சாதாரணமா நடந்துகிறதையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பிச்சிருவேனோன்னு பயம்.

சந்தேகப் பேய் மனசுக்குள்ள வந்திட்டா அந்த நம்பிக்கை கண்டிப்பா ஆட்டம் கண்டிரும். நம்பிக்கை உடைஞ்சிருச்சுனா நமக்குள்ள இருந்த சில வருட பிரிவு நிரந்தரப் பிரிவா போய்டுமோனு பயம்.

நிரந்தரப் பிரிவை நிச்சயம் நான் தாங்க மாட்டேன். அதுக்குத் தனியா இருந்தாலும் உங்க மேல இருந்த என் காதலும், நம்பிக்கையும் உடைய வேண்டாம்னு நினைச்சேன்” என்று சொன்னவள்,

மேலும் “ஆனா இப்போ மட்டும் எப்படி வர கிளம்பினனு நினைக்கலாம். கல்யாணம் ஆன புதுதில் இல்லாத பக்குவம் இப்ப கொஞ்சம் வந்திருக்குன்னு நினைக்கிறேன். இப்போ கிளம்ப முடிவெடுத்தப்ப நான் முடிவு பண்ணின விஷயம்…

என்னோட சிறுவயது பாதிப்பை என் வாழ்க்கையில் நான் இப்ப நுழைத்து விட கூடாது. அந்தப் பாதிப்பால் நாம என்னைக்கும் பிரிந்து விட கூடாதுன்னு தீர்மானம் எடுத்துக்கிட்டு தான் கிளம்ப முடிவெடுத்தேன்.

என் இந்தத் தீர்மானம் ரொம்ப லேட் தான். ஆனா இப்போ கவினோட அம்மாவாகவும் யோசித்து பார்த்து செயல் பட்டுருப்பேன். ஆனா அந்தச் சமயத்தில் அப்படி இருந்திருப்பேனான்னு எனக்கே தெரியாம, என் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க நான் விரும்பலை.

இதோ இப்போ இந்த நிமிடம் பிரிவு மட்டும் தான் நம்ம வாழ்க்கையைப் பாதிச்ச விஷயமா இருக்கு. ஒருவேளை நம்பிக்கையும் உடைந்து, நம்ம காதலும் உடைந்திருந்தா இந்த ஒட்டுதல் இல்லாம நாம உருகொலைந்து போயிருப்போமே?

அப்படிப் போறதுக்கு இந்தப் பிரிவே இப்போ பெட்டரா தெரியுது எனக்கு…” என்று தன் எண்ணத்தைப் பவ்யா சொல்லவும், வினய்க்கும் அவள் எண்ணம் சரி என்றே தோன்றியது.

மனம் உடைந்து வாழ்வதற்குச் சில வருட பிரிவுக்குப் பிறகு கிடைத்த இந்தப் புரிதலே போதும் என்று எண்ண வைத்தது.

தம்பதிகள் இருவரும் மனம் விட்டு பேசி முடித்த போது அதிகாலை நான்கு மணி ஆகியிருந்தது.

“கவின் இந்த டைம் லேசா எழும்புவான் வினு. உள்ளே போகலாம்” என்றாள்.

“நானும் அங்கேயே வர்றேன் பவிமா. இனி தனி ரூம்க்குப் போகச் சொல்ல மாட்ட தானே…?” என்று கேலி போலக் கேட்க,

அவனின் கையில் லேசாக அடித்தவள் “கேலி பண்ணாம வாங்க வினு” என்றுவிட்டு உள்ளே சென்றாள்.

பவ்யா கட்டிலில் கோணல் மாணலாகப் படுத்திருந்த கவினை நேராகப் படுக்க வைத்துவிட்டு நிமிரும் முன் அருகில் வந்திருந்த வினய் “குட்டியை சுவர் பக்கமா படுக்க வை பவி. இப்ப நீ என் பக்கத்தில் தான் இருக்கணும்” என்று சொல்லவும்,

“நோ வினு…! குட்டி பக்கத்தில் இருக்கும் போது பார்த்து இருக்கணும்” என்று தடை சொன்னாள்.

“நான் ஒன்னும் பண்ண மாட்டேன் பவி. ஆனா இப்போ என் பக்கத்தில் மட்டும் இரு…அது போதும்…!” என்றான்.

அதற்கு மேல் தடை சொல்லாமல் கவினை சுவர் ஓரம் படுக்க வைத்தவள் நடுவில் படுத்துக் கொண்டாள். அவள் அருகில் வந்து படுத்த வினய்யின் முகத்தில் எல்லையில்லா நிம்மதி தெரிந்தது.

‘இத்தனை நாளும் இருந்த வெறுமை போய் ஒரு குடும்பமாக இன்று இருக்கும் நிலை இனி எந்தச் சூழ்நிலையிலும் பிரிய கூடாது கடவுளே…’ என்று அந்த நேரத்தில் ஒரு வேண்டுதல் ஒன்றையும் வைத்துக் கொண்டான்.

திரும்பி தன் அருகில் இருந்த மனைவியின் மீது கை போட்டு அணைத்துக் கொண்டவன் “தூங்கு பவிமா…!” என்று சொல்லி தானும் நிறைவாக உறக்கத்தின் பிடிக்குச் சென்றான்.

காலையில் நன்றாக விடிந்த பிறகு கவின் எழுந்து அன்னையின் அருகில் தந்தையும் இருப்பதைப் பார்த்து பவ்யாவின் மீது ஏறியவன் மெல்ல இருவருக்கும் நடுவில் வந்து அவர்கள் மேலேயே படுத்துக் கொண்டான்.

அதை உணர்ந்து இருவருமே கண் விழித்துத் தள்ளி படுக்க, இப்போது இருவருக்கும் நடுவே படுத்துக் கொண்டு “குட் மானி பா…! குட் மானி மா…!” என்று இருவர் புறமும் திரும்பி பார்த்துக் காலை வணக்கம் வைக்க அந்த அழகான தருணத்தை ரசித்துக் கொண்டே மகனை இருவரும் ஒன்றாக அணைத்து “குட் மார்னிங் டா குட்டி!” என்று ஒரே நேரத்தில் சொல்ல, கவின் அதில் உற்சாகமாகச் சிரித்தான்.

மூவருக்கும் அன்றைய பொழுது ரம்யமாக விடிந்தது.

அடுத்து வந்த ஒவ்வொரு நொடிகளையும் அனுபவித்து ரசித்தார்கள். கவின் பார்க்காத நேரம் கணவன், மனைவி சீண்டலும் தொடர்ந்தது.

கவினை விளையாட வைத்து விட்டு வழக்கம் போலச் சமையல் வேலையில் ஈடுபட்டு கொண்டிருத்த பவ்யாவின் முகம் அன்று வர்ணஜாலங்களாக ஜொலித்தது.

அடிக்கடி இதழோரம் துளிர்த்த புன்னகையுடன் வேலை செய்து கொண்டிருந்தவளை பின்னால் இருந்து அணைத்தான் வினய்

அதிர்ந்து விழித்தவளின் கழுத்தில் மீசை ரோமங்களை உராய விட்டு இன்னும் நாணத்தில் ஜொலிக்க வைத்தான். தன்னை அணைத்திருந்தவன் கையில் இருந்த ரோமத்தை லேசாகச் சுருட்டி இழுத்தாள்.

அதில் கையை லேசாக உதறியது போல நடித்த வினய் இன்னும் இறுக அணைத்துக் கொண்டான்.

“அச்சோ…! கவினை அங்கே தனியா விட்டுட்டு இங்கே என்ன சேட்டை?” என்று செல்லமாகச் சலித்தவள் திரும்பி கணவன் பிடியில் இருந்து வெளியே வர பார்க்க, இப்பொழுது அவனுக்கு முன் புறம் அணைக்க வசதியாகப் போனது.

“அதெல்லாம் என் செல்ல குட்டி சமர்த்தா விளையாடுவான். எத்தனை நாள் ஆச்சு? நீயும் நானும் இப்படி இருந்து…” என்று சொன்னவனுக்கும், கேட்டவளுக்கும் அந்த நாட்களில் நினைவு வந்தது. அதில் இருவருமே கட்டுண்டு இருந்தனர். பவ்யாவிற்கு இது போலத் தான் கனவு கண்டதும் ஞாபகத்தில் வந்தது.

அதற்குள் “ப்பா…” என்று அழைத்த படி கவின் வர இருவரும் விலகி நின்றார்கள். கவினை தூக்கி வந்து சமையல் செய்து கொண்டிருந்த மனைவியைப் பார்த்துக் கொண்டே அங்கே ஒரு இருக்கையைப் போட்டு அமர்ந்து கொண்டான்.

“இன்னைக்கு நீங்க வேலைக்குப் போய்ட்டு வந்ததும் உங்க வீட்டுக்குப் போயிடலாம் வினய். இனி வந்தா உங்க கூடத் தான் வருவேன்னு சொல்லிட்டு வந்தேன். மாமாவையும் ரொம்பக் கஷ்டப்படுத்திட்டோம். அங்க போயிடலாம். அடுத்த வாரம் கவினோட மூணாவது ப்ரத்டே வருது.

இந்த வருஷம் எல்லாரையும் அழைச்சுச் சிறப்பா கொண்டாடணும். போன இரண்டு வருஷமும் மாமா ஆசைப்பட்டும் நீங்க இல்லாம வேண்டாம்னு நாங்க மட்டும் சிம்பிளா செய்தோம்” என்று பவ்யா பேசிக் கொண்டே வர வினய்யின் முகம் வேதனையைச் சுமக்க ஆரம்பித்தது.

பேசி விட்டு கணவனின் பதிலுக்காகக் காத்திருந்து விட்டுப் பதில் இல்லாமல் போகவும் திரும்பி அவனைப் பார்த்து “என்னச்சு வினு…?” என்று அருகில் வந்து கேட்டாள்.

“பொன்னான நிறைய நாட்கள் போயிருச்சுல. அதுவும் இந்தக் குட்டியோட செலவழித்திருக்க வேண்டிய நிமிடங்கள்…?” என்று சொல்ல, அவன் தோளில் கை வைத்து அழுத்தியவன், “கவின் குட்டி உன் குட்டி பொம்மையை இங்க எடுத்துட்டு வாங்க. இங்க வச்சு விளையாடுவோம்” என்று மகனை அனுப்பி வைத்தாள்.

மகன் போகவும் “கவின் முன்னாடி இப்படி வருத்தமா அவனை விட்டு இருந்தேன்னு பேசாதீங்க வினு. இதுக்கு முன்னாடி நடந்தது எதுவும் அவனுக்கு ஞாபகம் இருக்காது. ஆனா இனி வளர, வளர அவன் மனசில் இதெல்லாம் பதியும். அது அவனையும் பாதிக்கும். அப்பா என் கூட இல்லாம இருந்தார்னு நினைச்சு உங்க மேல அவனுக்குக் குறைவான மதிப்பு வர வாய்ப்பிருக்கு.

வளரும் போது அவன் எதுவும் சின்ன வயசு கதையைக் கேட்டா நீங்க வீடியோவில் பார்த்ததை வச்சு சொல்லுங்க. எப்பவும் அவன் கூட நீங்க இருக்குற போல வளர்ந்த பிம்பம் உடைய வேண்டாம். அதோட” என்று சொல்லி நிறுத்தியவள் குரலில் கூச்சம் இருந்தது.

“என்ன பவி…?”

“ஹ்ம்ம்…! அதோட நேத்து பேசும் போது ஒரு விஷயம் சொன்னீங்களே இன்னொரு குழந்தைனு” என்று தடுமாறி சொன்னவளுக்கு இரவு கூடலின் முடிவில் கணவன் சொன்னது இன்னும் காதில் ஒலித்தது.

“எனக்கு இன்னொரு குழந்தை வேணும் பவிமா. அந்தக் குழந்தை உருவானதில் இருந்து ஒவ்வொரு அசைவையும் நான் பக்கத்தில் இருந்து பார்த்து அன்னைக்கு ரிதேஷ் சொன்ன மாதிரி, நீ கர்ப்பமா இருக்கிறதை நினைத்து சந்தோஷமும் படணும்.

உன் பிரசவ கால வலியை நானும் உன் கூட இருந்து அனுபவிக்கணும். அந்த ஃபீல் எனக்குக் கொடுப்பியா?” என்று கேட்டு அவளிடம் சம்மதமும் வாங்கி இருந்தான்.

இப்போது அதை ஞாபகப் படுத்தியவள் “அப்படி இன்னொரு குழந்தை வரும் போது, இந்தக் குழந்தைக்கு அப்பா பக்கத்தில் இருந்தார், என் கூட மட்டும் இல்லைனு அவன் மனதில் தாழ்வு மனப்பான்மை வந்திற கூடாது. இனி வருக்காலத்தில் எப்படி அவனுக்கு நல்லா அப்பாவா இருக்கணும்னு மட்டும் யோசிங்க. முடிஞ்சி போனது பேசி வருக்காலமும் பிரச்சனை ஆகிற கூடாது” என்றாள்.

“ஹ்ம்ம்…! சரி பவி. இனி இப்படிப் பேச மாட்டேன்” என்று உடனே சம்மதித்தவன், “ஆமா அந்த இன்னொரு குழந்தை எப்போ வரும் பவி?” என்று கேலியாகக் கேட்க… அதில் கூச்சம் கொண்டவள், “அது வர வேண்டிய நேரத்தில் வரும். சும்மா இப்படிப் பேச கூடாதாக்கும்” என்று முகம் சிவக்க சொன்னாள்.

மனைவியின் சிவப்பை ரசித்துக் கொண்டே அவள் அருகில் நெருங்கியவன் “பேச கூடாது. செயலில் காட்டணும்னு சொல்ற… அப்படித்தானே…?” என்று மனைவியை இன்னும் சீண்டினான்.

“அச்சோ…! கவின் வர போறான் தள்ளி போங்க…” என்று பவ்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே கவின் வந்து விட… மனைவியை விட்டு விலகி நின்றவன் கண்களால் மட்டும் தீண்டி ரகசிய மொழி பேசி இன்னும் மனைவியைச் சிவக்க வைத்துவிட்டு அலுவலகம் கிளம்பினான்.


என்னைத் தீண்டும்
உன் விழியால்
உயிர்ப்பேன் நான்!


அன்று மாலையே ரங்கநாதன் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் அங்கே குடும்பமாகப் போய் நின்றார்கள். மருமகள் அவளாகச் சந்தோஷமாக வாழ வர வேண்டும் என்ற அவரின் காத்திருப்பு நிறைவேற சந்தோஷத்தில் திக்கு முக்காடி போனார்.

ஆரத்தி எடுத்து வரவேற்று, இரவு உணவை தடப்புடலாக நடத்தினார். “இவ்வளவு நேரம் என் கூட ஆபீஸ்ல இருந்தும் சொல்லவே இல்லையே?” என்று மகனை கேட்க, “சஸ்பென்ஸா இருக்கட்டும்னு தான்பா” என்றான்.

அந்தச் சஸ்பென்ஸும் கூட அவருக்கு ஆனந்தத்தையே தந்தது.

அன்று இரவு கவின் தன்னுடன் இருக்கட்டும் என்று ரங்கநாதன் அழைத்துப் போய்விடக் கணவனும், மனைவியும் மட்டுமாக வினய்யின் அறையில் இருந்தார்கள்.

“இனி என்னால இந்த வீட்டில் நீ கண்ணீர் விடும் படி வர விட மாட்டேன் பவிமா” என்று மனைவியை அணைத்தவன், அடுத்து வந்த நாட்களில் சொன்னதைச் செய்தும் காட்ட ஆரம்பித்தான்.

அன்று கவினின் பிறந்த நாளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க அந்தப் பெரிய கடையில் இருந்தார்கள். அப்போது அங்கிருந்த பொம்மைகள் பிரிவில் ஒரு பொம்மையைக் கேட்டு அடம் பிடித்துக் கொண்டிருந்தான் கவின்.

அது விலை உயர்ந்ததுடன் நிறைய வேலை பாடுகள் நிறைந்த குட்டி இரு சக்கர வாகனம். அதை வாங்குவதில் வினய்க்கு ஒரு பிரச்சனையும் இல்லை தான். ஆனாலும் அதை ‘வேண்டாம் அப்பா வேற கார் வாங்கித் தர்றேன்’ என்று சொல்லி மறுத்துக் கொண்டிருந்தான்.

“ஏன் வினு அவன் தான் அடம் பிடிக்கிறானே வாங்குவோம்” என்று பவ்யா சொல்ல, “இல்லை பவி… இதை இன்னும் ஒரு வருஷம் போனா தான் இவன் ஓட்ட முடியும் இப்பயே வாங்கி என்ன பண்ண? அதான் அவன் இப்போ ஓட்டுற போலக் கார் வாங்கலாம்னு சொல்றேன்” என்று சொல்ல பவ்யாவும் அது புரிந்து அமைதியாகி விட்டாள்.

ஆனால் தந்தையின் விளக்கம் புரியாத கவினோ இன்னும் அழுது ஆர்ப்பாட்டம் செய்தும் வினய் மறுத்து, சின்னக் காரை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான்.

வீட்டிற்கு வந்து அதை எப்படி ஓட்ட வேண்டும் என்று ஓட்டி காட்ட, முன்பு தான் பிடித்த பிடிவாதத்தையே மறந்தவனாக உற்சாகமாக அந்தக் காரை ஓட்ட ஆரம்பித்து விட்டான்.

மகனை விளையாட விட்டுவிட்டு மனைவியிடம் வந்த வினய் “கவின் என்னைப் போலவே வளர்ந்துருவானோன்னு பயமா இருக்குப் பவி” என்றான்.

“ஏன் வினய் என்னாச்சு? நீங்க பார்க்க நல்லா தானே இருக்கீங்க. உங்களைப் போல வந்தா என்ன?”என்று பவி கேலியுடன் கேட்க,

“ப்ச்ச்…! நான் அதையா சொன்னேன். பிடிவாதம் பிடிக்கிறதுல என்னைப் போல வந்துருவானோன்னு சொன்னேன். நான் எப்படி நான் கேட்டது உடனே கிடைக்கணும்னு நினைச்சேனோ அதே போல அவனும் பண்றான்.

அதுக்குத் தான் அவன் பிடிவாதத்துக்குச் சப்போர்ட் பண்ணாம அவனுக்கு நல்லதுனு இந்தக் காரை வாங்கினேன். இப்ப அவனுக்கு நான் சொல்றது புரியலை. ஆனால் வளர, வளர எது அவனுக்கு நல்லது, கெட்டதுனு சொல்லி வளர்க்கணும்.

இப்பயே பிடிவாதம் குணம் வந்தா கண்டிப்பா இன்னொரு வினய்யா தான் வருவான். பிடிவாதமும் இருக்கணும். ஆனா அது வறட்டு பிடிவாதமா மாறுற மாதிரி அவன் வளர கூடாதுனு நினைக்கிறேன்.

இப்போ சமீபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன். அதில் அந்த லேடி குழந்தைகளை எப்படி வளர்க்கணும்னு சொன்னாங்க. கண்ணில் பார்த்தெல்லாம் குழந்தை கேட்கும் போது, எது குழந்தைக்கு நல்லதோ அதை மட்டும் வாங்கிக் கொடுங்க. ஒருவேளை அது சரியானதா இல்லனா…. இல்லனா இல்லைனு சொல்லி வளருங்க. குழந்தை கேட்குதேன்னு எல்லாத்தையும் செய்யக் கூடாதுன்னு நிறையச் சொன்னாங்க.

அவங்க சொன்ன விஷயம் எப்படி நம்ம வாழ்க்கையோட பொருந்தி போகுது பார். சில சின்ன விஷயங்கள் தான் பெரிதாக ஏதோ தவறு நடக்கவும் காரணமா அமைந்து விடுது. சிறு வயதில் இருந்தே குழந்தை கேட்குதேன்னு பெரியவங்க எல்லாம் வாங்கிக் கொடுத்துறாங்க. சில பெரியவங்க தனக்குச் சிறுவயதில் கிடைக்காதது தன் பிள்ளைக்காவது கிடைக்கட்டும்னு கேட்குறதை வாங்கிக் கொடுக்குறாங்க. அதன் மூலமா பெரியவங்களுக்கும் ஏதோ ஒரு நிறைவு கிடைக்குது.

ஆனா அப்படிச் செய்றது எல்லா நேரமும் சரியா வருமா? இதோ இப்போ என்னையே எடுத்துக்கோ. கேட்டதெல்லாம் கிடைக்கும் சூழலில் வளர்ந்துட்டு, வளர்ந்த பிறகு எனக்கு வாழ்க்கையில் நான் ஆசை பட்ட ஒரு விஷயம் மறுக்கப்படவும் நான் என்னோட படிப்பறிவு, வயது முதிர்ச்சி எதுவும் பார்க்காம சிறுபிள்ளை தனமா எப்படி நீங்க எனக்கு மறுப்பு சொல்லலாம்னு நாலு வருஷம் நம்ம வாழ்க்கையை வீணாக்கிருக்கேன்.

இப்படி நான் நடந்துக்கிட்டதுக்கு அடித்தளம் நான் மறுப்பே இல்லாத சூழ்நிலையில் வளர்ந்தது தானே? அந்தச் சூழ்நிலை கண்டிப்பா நம்ம கவின் வாழ்க்கையில் இருக்கக் கூடாது. அவனின் நியாயமான ஆசையை நிறைவேற்றனும். நியாயமில்லாத சில ஆசைகளுக்கு மறுப்பும் சொல்லணும். அப்படி வளர்ந்தா தான் அவன் இன்னொரு வினய்யா இல்லாம வளருவான்னு எனக்குத் தோணுது. நீ என்ன நினைக்கிற பவி…. நான் சொல்றதில் எதுவும் தப்பு இருக்குனு நினைக்கிறியா?” என்று கேட்டான்.

கணவனின் இந்த மாற்றம் பவ்யாவை மனம் மகிழ வைத்தது. தான் மாறிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் பிள்ளையையும் கவனத்துடன் வளர்க்க வேண்டும் என்று நினைத்த அவனின் எண்ணம் மன நிறைவை தர “இல்ல வினு. ரொம்பச் சரி தான். உங்க விருப்பம் போல அவனை வளருங்க” என்று மகிழ்வுடன் சம்மதம் தந்தாள்.

கூடவே அவன் ஆசைப்பட்ட விஷயத்தையும் நினைத்துப பார்த்து “நீங்க பாரின்ல இருக்கணும்னு நினைத்த ஆசையை நான் கெடுத்துட்டேன்ல?” எனப் பவ்யா வருத்தமாகக் கேட்டாள்.

“பாரீன் தானே? அது வருஷத்துக்கு ஒரு தடவை ஒவ்வொரு நாடா போய்க் குடும்பத்தோட சுத்தி பார்த்துட்டு வர வேண்டியது தான். அப்படி வர உனக்கு ஓகே தானே?” என்று பவ்யாவிடம் சம்மதம் கேட்டுக் கொண்டான்.

“தாராளமா போகலாம்…” என்று பவ்யா தன் சம்மதத்தைச் சொன்னாள்.

***

அன்று கவினின் பிறந்தநாள். காலையில் இருந்தே அந்தப் பங்களா விழா கோலம் பூண்டிருந்தது.

மாலையில் தம்பதி சகிதமாக உறவினர்களை வரவேற்று, அவர்கள் பிரிவை பற்றிக் கேட்டவர்களைச் சமாளித்து, உற்சாகமாகக் கேக்கை வெட்டி, வேறு சச்சரவு எதுவும் வராமல் விழாவை சிறப்பாகவே கொண்டாடி முடித்தார்கள்.

இரவு உணவு நடந்து கொண்டிருக்கும் பொழுது, வந்ததில் இருந்ததில் இருந்து தன் அத்தை தாராவின் புறம் மறைந்து, மறைந்து நின்று கொண்டிருந்த நவிதாவிடம் வந்த பவ்யா “என்ன நவிதா நீ வந்ததில் இருந்து பார்த்துட்டு இருக்கேன். இப்படி ஓடி, ஓடி ஒளிந்து கொண்டு இருக்க?” என்று கேட்டாள்.

“அவளுக்கு உன்னைப் பார்த்தா பயமா இருக்காம்” என்றார் தாரா.

“என்னது நவிதாவுக்குப் பயமா? நான் நம்ப மாட்டேன் அத்தை. என்ன நிவிதா…?” என்று அவளிடமே கேட்டாள் பவ்யா.

“அது வந்து அக்கா…” என்று நவிதா இழுக்க…

“என்னது அக்காவா…?” எனப் புருவத்தைத் தூக்கி வியந்து பார்த்தாள் பவ்யா.

“ஹ்ம்ம்…! நீங்க என்னை விட மூத்தவங்க. எனக்கு அக்கா மாதிரி தான். இதோ இந்த ஆன்ட்டி என்னை வில்லி வேஷம் போட சொல்லவும், உங்களைப் பேர் சொல்லி கூப்பிட்டேன். என்னை மன்னித்து விடுங்கக்கா. உங்களை அன்னைக்கு அழ வச்சுட்டேன்.

உங்க அழுகையைக் கூட நின்னு பார்க்க முடியாம பேசிட்டு ஓடி போய்ட்டேன். உங்களை என்னென்னமோ வேற சொல்லிட்டேன். ஸாரி” என்று வருந்தி மன்னிப்பு கேட்டாள்.

“அப்ப நான் இருந்த உண்மை நிலைமையைத் தானே சொன்ன நவிதா? பரவாயில்லை விடு. நீ என்ன பண்ணுவ? எல்லாம் இந்த அத்தை வேலை” என்று சொல்லி தாராவை பொய்யாக முறைத்தாள்.

“சரி தான் போடி…! என் மக நல்லா இருக்கணும்னா நான் என்னமும் செய்வேன்” என்றார் தாரா.

அதில் பவ்யாவின் மனது இளகி தான் போனது. பெற்றோரை இழந்து வந்து எப்போதோ லீவில் மட்டும் வந்து போய்ப் பழகி கொண்டிருந்த உறவை, திடீரென நெருங்கின ஒரே வீட்டில் வாழும் உறவாக ஏற்று வாழ பல நாட்கள் கஷ்டப்பட்டிருக்கிறாள் பவ்யா.

அப்போதெல்லாம் என்னைப் புரிந்து அரவணைத்துக் கொண்டார். நாத்தனார் மகளைத் தன் மகளாகப் பாவிக்க எத்தனை பேரால் முடியும்? இதோ இவர் எனக்கு அத்தையாகக் கிடைத்தது என் பாக்கியம் என்று நினைத்துக் கொண்டவள் அவரை லேசாக அணைத்துக் கொண்டாள்.

அமுதவன் அவர்களைப் பார்த்து சிரிக்க, மனைவியின் சந்தோஷத்தை தூரத்தில் வேறு உறவினருடன் பேசிக் கொண்டிருந்த வினய்யும் பார்த்தான்.

விழா முடிந்ததும் தங்கள் அறைக்கு வந்த வினய் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த கவினை பார்த்து, “இன்னைக்குக் குட்டி அப்பாகிட்ட போகலையா…?” என்று கேட்டான்.

“இல்லை வேண்டாம்னு நான் தான் சொல்லிட்டேன். அவனுக்கு அலுப்பு இருக்கும். இன்னைக்கு நைட் அழுதாலும் அழுவான். அதான் இங்கயே இருக்கட்டும்னு சொல்லிட்டேன்” என்றாள்.

“ஹ்ம்ம்…! சரி… ரிதேஷ் இப்போ வீடியோ கால் பண்றேன்னு சொன்னான். வா… அந்த ரூம்ல போய்ப் பேசுவோம்” என்று அருகிலேயே இருந்த இன்னொரு அறைக்கு அழைத்தான்.

வினய், தங்களுக்கான தனிமையான நேரத்திற்காக அந்த அறையைத் தயார் செய்திருந்தான்.

இந்த வீட்டிற்கு வந்த பிறகு போனில் சில வார்த்தைகள் அவர்களிடம் பவ்யா பேசியிருந்தாலும், இன்றுதான் காணொளியில் பார்த்து பேச போகின்றாள்.

மனைவியை அந்த அறைக்கு வர சொல்லிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு வந்துவிட, மனைவிக்கு ஜாடை காட்டிவிட்டு அந்த அறைக்குள் நுழைந்தான். மகனுக்குப் பாதுகாப்பு செய்துவிட்டு பவ்யாவும் செல்ல, அங்கே வினய் காணொளியில் தெரிந்த குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தான்.

பவ்யாவும் பின்னால் சென்று பார்க்க, மனைவியைத் திரும்பி பார்த்தவன் “பவி இங்கே வா… பாரு இந்தக் குட்டி ஐயாவை தான் அன்னைக்குத் தூக்கிட்டு உருகி போய் நின்னேன்” என்று சந்தோஷமாக அறிமுகப் படுத்தினான்.

பவ்யாவும் குழந்தையை ரசித்துப் பார்த்தாள். உங்களையும், கவினையும் நான் ரங்கநாதன் அங்கிள் கொடுத்த போட்டோவில் பார்த்திருக்கேன். இப்போ வீடியோவில் பார்த்து பேச சந்தர்ப்பம் அமைந்ததில் ரொம்ப சந்தோசம் என்றாள் ஷீலு.

“எனக்கும் ரொம்ப சந்தோஷம்” என்ற பவ்யா… ரிதேஷிடமும், ஷீலுவிடமும் தன் நன்றியை மீண்டும் சொன்னாள். அதற்கு ஷீலு “சும்மா, சும்மா நன்றி சொல்லாதீங்க பவ்யா. அதான் அன்னைக்குப் போனில் பேசும்போதே சொல்லிட்டீங்களே? எங்க நண்பன் குடும்பமா நல்லா இருக்கணும்னு தான் செய்தது. நன்றிக்காக இல்லை” என்றாள்.

“நீங்க இரண்டு பேருமே எங்க வாழ்க்கையில் அக்கறை எடுத்து இவர்கிட்ட பேசினதுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும். அதுவும் என்னைப் பார்க்காமலேயே எனக்காக வாதாடி இருக்கீங்கனு தெரிந்த போது இப்படி ஒரு பிரண்ட்ஸ் இவருக்குக் கிடைத்ததில் பெருமையா ஃபீல் பண்ணினேன்” என்றாள்.

பின்பு அங்கே சில நொடிகள் நன்றி நவிழலும், மறுப்புமாகச் சிறிது நேரம் கடந்ததும், “இவனும் ஒரு பெரிய நடிகர் தான் பவி. அன்னைக்கு நான் எனக்குக் கல்யாணம் ஆகி விட்டதுனு நம்ம கதையைச் சொன்னதும், என்னமோ அப்பதான் அவனுக்குத் தெரிந்தது போல என்னமா ஆக்சன் கொடுத்தான் தெரியுமா?” என்று நண்பனை கேலி செய்தான் வினய்.

“ஆமா… அப்படி நடிக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு தெரியுமா? ஆனா அதுக்கும் பலன் இருந்ததுன்னு நினைக்கும் போது ஹேப்பியா இருக்கு. இதோ இப்ப தான் வினய் உன் முகம் பொழிவா இருக்கு. இனி எப்பயும் இப்படியே இருக்கணும்” என்று ஆங்கிலத்தில் சொன்ன ரிதேஷ்.

“அழாகா இருக்கீ வினய்” என்று தமிழில் சொல்ல “அடேய்…! போதும்டா. தமிழைக் கொலை பண்றதை விட்டுரு…” என்று அலறினான் வினய்.

அவன் அலறலை பார்த்து எல்லாரும் சிரித்து விட அதே சந்தோஷத்துடன் பேசி முடித்தார்கள்.

நடுவில் ஒரு நாள் ஷர்வஜித் ACP க்கும் போன் செய்து தன் நன்றியை சொல்லி இருந்தான் வினய்.

“இன்னைக்கு எனக்கு மனசு எல்லாம் நிறைந்த மாதிரி இருக்குப் பவி” என்று தன் அருகில் அமர்ந்திருந்த மனைவியின் தோளில் சாய்ந்து சொன்னான் வினய்.

“எனக்கும் தான்…” எனப் பவ்யாவும் சொல்ல,

“அதான் முகத்திலேயே தெரியுதே…! நான் தான் கவனித்துக் கொண்டு தானே இருக்கேன். நான் வந்தன்னைக்கு இருந்ததுக்கும், இன்னைக்கு இருக்கிற உன் முக ஜொலிப்புக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு” என்றான்.

“ஹா…! அது கணவன் கூடச் சந்தோஷமா வாழ்ற எல்லாப் பொண்ணுங்க முகமும் இப்படித் தான் ஜொலிக்கும்” என்றாள்.

“அப்போ நான் சந்தோஷமா உன்னைப் பார்த்துக்கிறேன்னு சொல்ற? அப்படித் தானே? அப்போ அதுக்குப் பரிசு கொடு”

“ஆமா எப்போ பார் ஏதாவது ஒரு காரணத்தை வைத்துப் பரிசுன்னு என்கிட்ட வசூல் பண்ணிட்டே இருக்க வேண்டியது” என்று சலிப்பது போலச் சொன்னாலும், அதிலும் அவளின் மகிழ்வு தான் தெரிந்தது.

“அப்படித் தான் கேட்பேன். நான் கேட்கும் போதெல்லாம் கொடுத்துட்டே இருக்கணும்” என்று வசூல்ராஜாவாக வசூலிக்கத் தயார் ஆனான்.

இனி பேச்சுக்கே இடம் இல்லை என்பது போல மனைவியிடம் பரிசை பெற ஆரம்பித்தவன், அவளை விடப் பல மடங்கு பரிசை திருப்பிக் கொடுத்தான்.

இனி அவர்களின் வாழ்வில் இன்பம் அளவில்லாமல் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

***

ஒரு வருடத்திற்குப் பிறகு…

அந்த மருத்துவமனை வளாகத்தில் கவினும், ரங்கநாதனும் அமர்ந்திருக்க… அருகில் இருந்த அறையின் உள்ளே அழுகை சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

“ம்மாவை அழாதே சொல்லு தாத்தா….” என்று கவின் உதட்டை பிதுக்கி லேசாக அழுது கொண்டே மழலையில் சொல்லிக் கொண்டிருந்தான்.

“அம்மா இன்னும் கொஞ்ச நேரத்தில் அழுவதை நிறுத்தி விடுவா… நீ பயப்படாம இருடா குட்டி” என்று சொல்லி அவனைச் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார் ரங்கநாதன்.

“அவனைக் கொஞ்ச நேரம் வெளியே தான் கூட்டிட்டுப் போங்களேன். அவனை வேற இங்க அழைச்சுட்டு வந்து அழ வச்சுட்டு இருக்கீங்க” என்று அமுதவனைத் திட்டிக் கொண்டிருந்தார் கனகதாரா.

“நான் என்னமா பண்றது…? அவன் இங்கே தான் இருப்பேன்னு அடம் பிடிக்கிறான்” என்று பரிதாபமாக மனைவிக்கும், பேரனுக்கும் இடையில் அல்லாடிக் கொண்டிருந்தார் அமுதவன்.

இங்கே ஆளுக்கு ஒரு மனநிலையில் இருக்க அந்த அறையின் உள்ளே பவ்யா பிரசவ வழியில் துடித்துக் கொண்டிருக்க, அவளுக்குத் தலை அருகில் இருந்து கண்ணில் கண்ணீர் நிரம்ப நின்றிருந்த வினய் மனைவிக்குச் சமாதானம் சொன்னதை விட,

பவ்யாதான் “ஒன்னும் இல்லை வினு… அழாதீங்க…” என்று தன் வலியின் ஊடே கணவனைச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

“சார் நீங்க ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணி கேட்டுக்கிட்டதால உங்களை உள்ளே அலோ பண்ணினேன். இங்கே வந்து உங்க மனைவியை நீங்க டென்சன் ஆக்கிறாதீங்க” என்று அந்த மருத்துவர் கடிந்து கொண்டிருந்தார்.

“இல்லை டாக்டர்… நான் டென்சன் ஆக்க மாட்டேன்” என்று தன்னைச் சமாளித்துக் கொண்ட வினய் மனைவியைச் சமாதானம் செய்ய ஆரம்பித்தான்.

வினய் சொன்னது போலக் கரு உருவான நாளில் இருந்து மனைவியைத் தாங்கினான். குழந்தை அசைய ஆரம்பிக்கவும், வயிற்றைத் தடவி தன் மகவுவை உணர்ந்து ஆனந்தப்பட்டுக் கொண்டான்.

இடைப்பட்ட நாளில் சொந்தமாகப் தொழிலும் தொடங்கி இருந்தான். பவ்யா வேலையை விட்டிருந்ததால், இப்பொழுது தொடங்கி இருந்த தங்கள் கம்பெனி பொறுப்புகள் சிலதை மனைவியைக் கவனிக்க வைத்தான்.

இப்போது பிரசவ அறையிலும் மனைவியின் வேதனையில் பங்கெடுத்து கொள்வேன் என்பது போல அனுமதி வாங்கி உள்ளே வந்திருந்தான்.

ஒருவருக்கு ஒருவர் உருகிக் கொள்ளும் அந்தப் தம்பதிகளுக்கு இன்னும் சந்தோஷத்தை அள்ளி தர சிறிது நேரத்தில் அவதரித்தாள் வினய், பவ்யாவின் புதல்வி.

மகளை முதல் முறையாகக் கையில் ஏந்திய வினய், உடல் எல்லாம் புல்லரிக்கச் சிலிர்த்து நின்றான்.

குழந்தையை மனைவிக்கும் காட்டி அவளின் நெற்றியில் முத்தமிட்டு தன் மகிழ்வை பகிர்ந்து கொண்டான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அறைக்குப் பவ்யா மாற்றப்பட, அவளிடம் ஓடி வந்த கவின் “அம்மா நீ அழவும், நானும் அழுதே. அப்பறம் குட்டி பாப்பாவும் அழுதா” என்று அம்மாவுக்காக உன் பிள்ளைகள் நாங்கள் இரண்டு பேரும் அழுதோம் என்ற அர்த்தத்தில் சொல்ல,

“என் செல்ல குட்டிங்க இந்த அம்மாவுக்காக அழுதீங்களா?” என்று கேட்டவளின் பார்வை அவளின் பெரிய குழந்தையான கணவனிடம் பாய்ந்தது.

‘என்னவனும் என் வலி பொறுக்காமல் அழுதானே…’ என்று அவளில் மனதில் ஓடியது.

பெரியவர்கள் குழந்தையையும், பவ்யாவையும் பார்த்து விட்டு செல்ல, மனைவியின் அருகில் வந்த வினய் “சந்தோஷமா இருக்கு பவிமா…” என்று விட்டு மீண்டும் அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

அதைக் கண்டு அருகில் இருந்த கவின் “நானும்… நானும்…” என்றவன் அம்மாவின் நெற்றியில் முத்தமிட்டான்.

அதில் வினய்யும், பவ்யாவும் புன்னகை சிந்த, கவினும் அவர்களுடன் இணைந்து கொள்ள, ‘நானும் இங்கே தான் இருக்கின்றேன்…’ என்பது போல் அழுகையில் தன் இருப்பைக் காட்டினாள் குட்டி தேவதை.

அந்த அழுகை கூட அவளைப் பெற்றவர்களுக்கு ஆனந்தமாக இருந்தது.

அந்த நால்வருக்குமான உலகம் அவர்களுக்கான இன்பத்தை அள்ளி தெளிக்கக் காத்திருந்தது.

சுபம்