26 – மின்னல் பூவே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் - 26
“உத்ரா… உத்ரா…”
“நீ போய் என்னன்னு கேட்டுட்டு வாமா. எழுந்ததும் ஏலம் போட ஆரம்பிச்சுட்டான்…” காய்களை நறுக்கிக் கொண்டே அருகில் காஃபி போட்டுக் கொண்டிருந்த மருமகளிடம் சொன்னார் வளர்மதி.
“இதோ போறேன் அத்தை. உங்க காஃபி இங்கே வச்சுருக்கேன். நீங்க காஃபியை முதலில் குடிங்க. மாமாவுக்கும் நான் கொடுத்துட்டு ரூமுக்குப் போறேன்…” என்றாள் உத்ரா.
“சரிமா, உன் காஃபியையும் ரூமுக்கு எடுத்துட்டு போய் அவன் கூடக் குடி…” என்றார்.
“சரி அத்தை…” என்ற உத்ரா மூன்று காஃபி கப்பை ட்ரேயில் வைத்து எடுத்துச் சென்றாள்.
முதலில் வரவேற்பறையில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த மாமனாரிடம் ஒரு கப்பை நீட்டினாள்.
“தேங்க்ஸ் மா…” என்று அவர் வாங்கிக் கொள்ள, அவரைப் பார்த்துப் புன்முறுவல் பூத்துவிட்டுத் தங்கள் அறைக்குள் சென்றாள் உத்ரா.
அவள் உள்ளே சென்ற போது இன்னும் படுக்கையை விட்டு எழாமல் படுத்திருந்தான் முகில்வண்ணன்.
அவனைப் பார்த்தவள் அவனுக்கான காஃபியை டீப்பாயின் மீது வைத்து விட்டு, தன்னுடைய காஃபியைக் கையில் எடுத்துக் கொண்டு அமைதியாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து பருக ஆரம்பித்தாள்.
“நான் உன்னைக் கூப்பிட்டேன்…” அவள் தன் அழைப்பிற்கு என்னவென்று கேட்காமல் போனதில் கடுப்புடன் சொன்னான். முகில்வண்ணன்.
“கேட்டது முகில். அதான் உங்க முன்னாடி உட்கார்ந்து காஃபி குடிக்கிறேன். இல்லனா இங்கே வந்திருக்கவே மாட்டேன்…” என்றாள் நிதானமாக.
அவன் அவளை முறைத்துப் பார்க்க, ‘நீ என்னை முறைப்பது எனக்குப் புதுசா என்ன?’ என்பது போல் அவனைக் கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தாள் உத்ரா.
“கூப்பிட்டா என்னன்னு கேட்கணும்…” என்றான்.
“ஓஹோ!” என்றவள் மீண்டும் காஃபியைப் பருக ஆரம்பித்தாள்.
“திமிர்…!” என்றான் பல்லைக் கடித்துக்கொண்டு.
“அந்த வார்த்தையை இப்போ நான் உங்களைப் பார்த்துச் சொன்னால் சரியா இருக்கும்னு நினைக்கிறேன்…” இப்போதும் நிதானமாகவே வந்தது உத்ராவின் குரல்.
முகில்வண்ணனோ மிதமிஞ்சிய கோபத்தில் பட்டென்று படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தான்.
அவள் என்ன என்று கேட்காமல் போனதற்குக் காரணம் தான் தான் என்று தெரிந்தும் கோபப்பட்டுக் கொண்டிருந்தான்.
உத்ராவின் வீட்டில் இரண்டு நாட்கள் விருந்தை முடித்துக் கொண்டு மூன்றாவது நாள் மணமக்கள் முகிலின் வீட்டிற்கு வந்து விட்டனர்.
அவர்கள் அங்கே வந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தன.
இலக்கியா இவர்கள் இங்கே வந்ததும் தம்பி, தம்பி மனைவியுடன் ஒரு நாள் பொழுதை கழித்து விட்டுக் கணவன், குழந்தையுடன் மதுரைக்குக் கிளம்பியிருந்தாள்.
அடுத்து வந்த இரண்டு நாட்கள் மணமக்களைப் பார்க்கவென்று சில உறவினர்கள், குடும்ப நண்பர்கள் என்று யாராவது வந்த வண்ணம் இருக்க, அவர்களின் நேரம் இறக்கை கட்டிப் பறந்திருந்தது.
அவளிடம் எதுவும் சொல்ல வேண்டும் என்றால் ‘உத்ரா’ என்று அவன் அழைத்த உடனே வந்து ‘என்ன முகில்?’ என்று கேட்டாள் உத்ரா.
அதைக் கவனித்திருந்தவன் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், “ஆமா, உன்னால எப்படி என் மேல் கொஞ்சமும் கோபம் இல்லாமல் ‘என்ன முகில்’னு உடனே கேட்க முடியுது? உன்னை நான் எப்படி எல்லாம் திட்டியிருக்கேன். அது எல்லாம் உனக்கு உறைக்கவே இல்லையா?” என்று நக்கலாக வாயை விட்டிருந்தான்.
அவனின் கேள்விக்குப் பதிலே பேசாமல் ஒரு பார்வை பார்த்தவள் தான். அதன் பிறகு அவன் அழைத்த போது ‘என்ன முகில்’ என்ற வார்த்தை அவளின் வாயிலிருந்து வரவே இல்லை.
அப்போது அப்படிக் கேட்டுவிட்டு இப்போது அவள் கேட்கவில்லை என்று கொதித்துக் கொண்டிருந்தான்.
‘உன் கோபம் என்னை என்ன செய்யும்?’ என்ற பாவனையில் அவள் தன் காஃபியைக் குடித்து முடித்து விட்டுக் கப்பை கீழே வைத்தாள்.
‘இவளுக்கு இருக்குற தெனாவட்டை பாரேன். அப்படியே அந்த வாயை… இல்ல… இல்ல… அந்த உதட்டை…’ என்று நினைத்தவனுக்கு ஏடாகூடமாகத் தோன்றித் தொலைத்தது.
அவளின் உதடுகளை என்று நேருக்கு நேராகப் பார்த்தானோ… அன்றில் இருந்து கோபத்தில் கூட அவளின் உதடுகளை ஏதாவது செய்து விடும் வேட்கை கொழுந்துவிட்டு எரிந்தது.
அதை அடக்க முடியாமல் அவதிப்பட்டுப் போனான் முகில்வண்ணன்.
அவளின் உதடுகளை நேருக்கு நேராகப் பார்த்த கணங்கள் இப்போதும் கண்முன் நின்றது.
விருந்து முடிந்து இங்கே வந்த மறுநாள் இரவு வீட்டினர் அனைவருமாக உணவை முடித்ததும் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
இரவில் விரைவில் தூங்கிவிடும் குழந்தை அபிரூபா அன்று உறங்காமல் ஹால் முழுவதும் தவழ்ந்து வந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
அவளைப் பிடித்து வைக்கப் போராடி முடியாமல் இலக்கியா தளர்ந்து அமர்ந்து விட, உத்ரா அந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டாள்.
அவள் தவழ்ந்து சென்ற பக்கமெல்லாம் அவளும் சென்றாள்.
அவள் தன்னைப் பிடிக்க வருவதாக நினைத்து வேகமாகத் தவழ்ந்து சென்றவள் அங்கிருந்த மேஜையின் மீது மோத போனாள்.
அதற்குள் அவளைத் தாவி பிடித்துத் தூக்கியிருந்தாள் உத்ரா.
ஆனால் குழந்தையோ சட்டென்று பயந்து ஆழ ஆரம்பித்துவிட்டாள்.
“என்ன… என்ன?” என்று அனைவரும் பதறி ஓடி வர, அதில் குழந்தையின் அழுகை அதிகம் தான் ஆனது.
“சும்மா பயந்துட்டா… வேற ஒன்னுமில்லை. பதறாதீங்க. அதைப் பார்த்து இன்னும் அழப் போறாள். நான் பார்த்துக்கிறேன்…” என்று அனைவரையும் அமைதிப்படுத்திய உத்ரா குழந்தையைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வெளியே சென்றாள்.
இலக்கியாவும் பின்னால் செல்ல போக, “நீ இருக்கா. நான் போறேன்…” என்ற முகில் தானும் வெளியே சென்றான்.
வெளியே சென்றதும் குழந்தையின் அழுகை குறைந்திருக்க மற்றவர்கள் மீண்டும் சென்று அமர்ந்தனர்.
வெளியே சென்ற உத்ரா, “இப்ப எதுக்காம் எங்க ரூபி பேபி அழறாங்க. உங்களுக்குத் தான் அடிப்படவே இல்லையே? அப்புறம் அழலாமா?” என்று கொஞ்ச,
மேஜை மீது நெற்றியில் மிக மிக லேசாக உரசியதால் அதில் பயந்திருந்த குழந்தை அழுதாள்.
“இங்க அடிப்பட்டுச்சா? இங்க அடிப்பட்டுச்சா?” என்று அவளின் தலை, நெற்றி என்று கேட்டுக்கொண்டே அங்கே எல்லாம் “உப்.. உப்…” என்று உத்ரா ஊதிவிட, அதன் மூலம் வந்த காற்றினால் அழுகை மறைந்து ஜில்லென்ற உணர்வில் சிரிக்க ஆரம்பித்தாள் அபிரூபா.
ஜில்லென்ற உணர்வு குழந்தையை மட்டுமல்ல. குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தவளுக்கு உடையவனானவனையும் தாக்கியது.
அவளின் இதழ்களைப் புகைப்படத்தில் பார்த்தே பித்துப்பிடித்துப் போனவன் இப்போது நேரில் அவள் இதழ்களைக் குவித்து ஊத, வராண்டாவில் ஒளிர்ந்த விளக்கு வெளிச்சத்தில் குவிந்த இதழ்கள் லேசான ஈரப்பதத்தில் மினுமினுக்க, இதழ்களின் சிறு பிரிவிற்கு இடையே நட்சத்திரங்களென லேசாக ஒளிர்விட்ட பற்களைக் கண்டவன் பிரமை பிடித்தவன் போல் ஆகிப் போனான்.
அவளின் இதழ்களையே பார்த்த வண்ணம் உறைந்து நின்றிருந்தான்.
குழந்தை சிரிக்க ஆரம்பிக்கவும் விளையாட்டை நிறுத்திய உத்ரா வீட்டிற்குள் செல்ல முடிவெடுத்துக் கவனத்தைத் திருப்ப அப்போது தான் கணவனும் அங்கே நிற்பதைக் கண்டாள்.
ஆனால் அவன் அசையாமல் எதையோ பார்த்த படி நிற்க தன்பின்னால் திரும்பிப் பார்த்தாள்.
அங்கே இருட்டு தான் தெரிந்தது.
‘என்ன அப்படிப் பார்க்கிறான்?’ என்று தோன்றினாலும் அவனைத் தாண்டி உள்ளே சென்று விட்டாள்.
அவள் சென்றதை கூட உணராமல் முகில் நின்று கொண்டிருக்க… “உள்ளே வா முகில், லைட்டை ஆப் பண்ணிட்டு தூங்க போகலாம்…” என்ற அவனின் தந்தையின் குரல் கேட்ட பிறகு தான் சுதாரித்துத் தெளிந்தான்.
இப்போதும் அவளின் இதழ்களை நினைத்துக் கனவில் ஆழ்ந்து நனவிற்கு வந்தவன் தலையை உலுக்கிக் கொண்டான்.
அப்போது உத்ரா அவனையே கேள்வியுடன் பார்த்த வண்ணம் நின்றிருந்தாள்.
‘இவள் ஏன் இப்படிப் பார்க்கிறாள்?’ என்று நினைத்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“இன்னைக்கு அத்தைக்குப் பதில் நான் சமைக்கிறேன்னு சொல்லிட்டேன். இப்போ நான் போகணும்…” என்றாள் உத்ரா.
‘என்னை அழைத்த காரணத்தைச் சொல்…’ என்பதை அவள் பூடகமாகச் சொல்ல, அதைப் புரிந்து கொள்ள முடியாமல்,
“போகணும்னா போ… அதை எதுக்கு என்கிட்ட சொல்ற?” என்று அவள் முகம் பார்க்காமல் சொல்லிவிட்டுக் குளியலறைக்குள் சென்று மறைந்தான்.
இப்போதெல்லாம் அவளின் இதழ்களைப் பார்த்தாலே தான் உறைந்து செயலற்று போவதை உணர்ந்தவன் கூடுமானவரை அவளின் முகம் பார்க்காமல் தவிர்க்க முயன்றான்.
‘என்னடா இவன்? இவன் தானே கூப்பிட்டான். இப்போ என்னமோ நானா அவன்கிட்ட பேச வந்தது போலச் சொல்லிட்டுப் போறான். இவனுக்கு என்னமோ ஆச்சு…” என்று நினைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.
காலை சமையல் வேலை பாதி முடிந்திருந்த நிலையில் சமையலறை வாயிலில் வந்து நின்றான் முகில்வண்ணன்.
வளர்மதியும், உத்ராவும் ஏதோ பேசிக் கொண்டே வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது உத்ரா ஏதோ சொல்ல, வளர்மதி சிரித்துக் கொண்டே அவளின் தோளில் செல்லமாக அடித்து “உனக்குக் குறும்பு ஜாஸ்தியா தான் இருக்கு…” என்றார்.
மாமியாரும், மருமகளும் சிரித்துப் பேசிக் கொண்டே வேலை பார்க்கும் காட்சி, கண்கொள்ளா காட்சியாக இருக்க, முகில் வந்த விஷயம் மறந்து அவர்களைப் பார்த்துக் கொண்டு நின்று விட்டான்.
“என்ன முகில்? பசிச்சிருச்சா? இதோ முடிஞ்சது. சாப்பிடலாம்…” மகனை பார்த்ததும் சொன்னார் வளர்மதி.
கணவன் அங்கே நிற்கிறான் என்று தெரிந்தும் சிறிதும் தலையைத் திருப்பாமல் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள் உத்ரா.
“மெதுவா செய்ங்கமா. நான் ஒரு விஷயம் சொல்லத்தான் வந்தேன். இன்னைக்குச் சண்டே வழக்கம் போல நான்வெஜ் எடுக்க வேண்டாம் மா. நாங்க ஈவ்னிங் ஆபிஸ் ப்ரண்ட்ஸ்க்கு ரெடி பண்ணிருக்கிற பார்ட்டிக்குப் போய்டுவோம். உங்களுக்கும், அப்பாவுக்கும் ஹோட்டலில் இருந்து டின்னர் வந்திடும். அதனால் மதியம் லைட்டாவே சமைச்சா போதும்…” என்றான்.
“சரி முகில்…” என்றார் வளர்மதி.
‘ஓ! இதைச் சொல்லத்தான் அப்போ கூப்பிட்டான் போலிருக்கு…’ என்று நினைத்துக் கொண்டாள் உத்ரா.
ஏற்கனவே எடுத்த முடிவின் படி மாலை விருந்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.
அனார்க்கலி சுடிதார் அணிந்து கிளம்பி வந்தாள் உத்ரா.
“சேலை கட்டலையா உத்ரா?” என்று வளர்மதி கேட்க,
“இல்ல அத்தை. நைட் பார்ட்டிக்கு இது தான் கம்படெபிளா இருக்கும்…” என்றாள்.
“அதுவும் சரி தான். வெளியே போறீயேன்னு பூ வாங்கி வச்சேன். அதை எப்படி இப்போ வைக்க?” என்று கேட்டார்.
தலைமுடியை மேலே மட்டும் க்ளிப் மாட்டி கீழே லூஸ் கேராக விரித்து விட்டிருந்தாள்.
“இதிலும் வைக்கலாம் அத்தை. கொடுங்க வச்சுக்கிறேன்…” என்று பூவை வாங்கிச் சரியாக வைத்துக்கொள்ளவும் இன்னும் பளிச்சென்று அழகாகத் தெரிந்தாள் உத்ரா.
“இதுவும் நல்லா இருக்கு…” என்று அம்மா வாயால் பாராட்ட, மகனோ கண்களால் மெச்சி கொண்டிருந்தான்.
அதிலும் சுடிதாருக்கு ஏற்ற நிறத்தில் லேசாக உதட்டுச் சாயமும் பூசி இருக்க, இதழ்கள் இன்னும் எடுப்பாக தெரிந்தன.
“ஷப்பா! இவள் இந்த உதட்டை காட்டியே என்னை மயக்கிருவாள் போல…” என்று சுகமாக அலுத்துக் கொண்டான்.
ஏற்கனவே மயங்க ஆரம்பித்ததை அறியாமல்.
“முகிலா ஸ்டெடி! இவள்கிட்ட அவ்வளவு சீக்கிரம் மயங்கிடாதே!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
ஒரு பெரிய ஹோட்டல் முன் வண்டியை நிறுத்தி இறங்கி ஒரு சிறு ஹாலுக்கு மனைவியை அழைத்துச் சென்றான் முகில்வண்ணன்.
அந்த ஹாலின் கதவைத் திறந்ததும் ஆரவாரமான கரவொலியுடன் வரவேற்றனர் அவர்களின் அலுவலக நண்பர்கள்.
கூடவே வண்ணதாள்களைப் புதுமணத் தம்பதிகள் மேல் பறக்க விட, தம்பதிகளின் முகம் இனிமையான மகிழ்ச்சியைப் பிரதிபலித்தது.
“ஹேப்பி மேரிட் லைஃப் முகில், உத்ரா…” என்று வாழ்த்து தெரிவித்தவர்கள் அடுத்ததாக ஹால் நடுவே இருந்த மேஜை அருகில் மணமக்களை அழைத்துச் சென்றனர்.
மேஜையின் மீது பெரிய கேக் ஒன்று வீற்றிருந்தது.
“கேக் வெட்டுங்க…” என்று முகில் கையில் கத்தியைக் கொடுக்க, அவனோ தான் மட்டும் கேக்கை வெட்டப் போனான்.
“நோ முகில். உங்க வொய்ப் கையையும் பிடித்து வெட்டுங்க…” என்று சிலர் கோரஸாகக் குரல் கொடுக்க,
உத்ராவைப் பார்த்தான் முகில்.
அனைவரும் சுற்றி இருக்க, மறுப்பு சொல்ல முடியாத நிலையில் இருந்த உத்ரா தன் கையைக் கணவனிடம் நீட்டினாள்.
அவளின் கையைப் பற்றிக் கொண்டவன் இன்னும் தன் அருகில் நெருக்கமாக அழைத்தான்.
இருவரின் தோள்களும் உரசிக் கொண்ட நெருக்கத்தில் மனைவியின் கையை மென்மையாகப் பற்றியிருந்தான் முகில்வண்ணன்.
இருவரும் சேர்ந்து கேக்கை மெல்ல வெட்ட, நண்பர்கள் குழு கைதட்டினர்.
“உங்க வொய்ப்க்கு ஊட்டி விடுங்க முகில்…” என்று ஒருவர் சொல்ல, கேக் துண்டை எடுத்து தயக்கத்துடன் உத்ராவின் புறம் திரும்பினான்.
மெல்ல அவளின் உதட்டருகே கேக்கை கொண்டு செல்ல உத்ரா எந்த மறுப்பும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள்.
“நீங்களுக்கும் முகிலுக்குக் கொடுங்க உத்ரா…” என்று உற்சாகமாகக் குரல் கொடுத்தனர்.
அவளும் ஒரு துண்டை எடுத்து முகிலுக்குக் கொடுக்க, அவனும் இந்த முறை எந்தச் சலிப்பும் காட்டாமல் வாங்கிக் கொண்டான்.
அந்த நேரம் முகில் எப்போதும் போல் அவள் மேல் கடுகடுப்பு இல்லாமல் புன்சிரிப்புடன் இருந்தான்.
அதன் பிறகு கேக்கை வெட்டி நண்பர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தனர்.
அடுத்து விருந்து ஆரம்பம் ஆனது. பஃபே முறையை முகில் ஏற்பாடு செய்திருந்ததால் தங்களுக்குத் தேவையான உணவு வகைகளைத் தாங்களே எடுத்துக் கொண்டு அங்கிருந்த டேபிள்களில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தனர்.
அலுவலக நண்பர்கள் இருபது பேர் வந்திருக்க, ஒரு சிலர் சாப்பிட அமர்ந்து விட, சிலர் மணமக்கள் அருகிலேயே இருந்து சிறு கேலி, கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது உத்ராவும், முகிலும் தங்களுக்கான உணவை எடுக்கப் போக, “இப்போ ஒரு விளையாட்டு வைப்போமா?” என்று நண்பர் ஒருவர் கேட்க,
“என்ன விளையாட்டுப்பா?”
“புது ஜோடிக்குத் தான் விளையாட்டு…” என்றவர், மணமக்கள் புறம் திரும்பி, “உங்களுக்குக் கல்யாணமாகி ஒருவாரம் ஆகப் போகுது. இந்த ஒரு வாரத்தில் நீங்க ஒருத்தரை ஒருத்தர் எவ்வளவு புரிந்து வைத்திருக்கீங்க என்று பார்க்கப் போறோம்…” என்றார்.
“ஏன்பா, இங்க அவனவன் வருஷக்கணக்கா வாழ்ந்தே ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிந்து வாழ்வது கஷ்டம். இவங்களுக்கு மேரேஜ் ஆகி ஒரு வாரம் தான் ஆகப்போகுது. அதுக்குள்ள என்னத்தைப்பா புரிந்து இருக்கப் போறாங்க…” என்று கேலி செய்தார் இன்னொருவர்.
“இதுவரை இல்லைனாலும் இனி புரிந்து கொள்வாங்கபா. இப்போ என்ன, சின்ன விளையாட்டு தானே. செய்து தான் பார்ப்போமே…” என்றார்.
“ஹய்யோ! நான் இந்த விளையாட்டுக்கு வரலைபா. என்னை ஆளை விடுங்க…” என்று சிரித்துக் கொண்டே பின் வாங்க பார்த்தான் முகில்.
உத்ராவோ உதட்டில் பூத்த புன்னகையுடன் நின்றிருந்தாள்.
“புதுமாப்பிள்ளை பின் வாங்கலாமா முகில்? உங்க மிசஸ் பாருங்க. நீங்க என்ன விளையாட்டு வைத்தாலும் ஜெயிப்பேன் என்பது போல் நிற்கிறாங்க…” என்றார் ஒருவர்.
“ஏன் உத்ரா, முகில் மேல் நீ பைத்தியமா சுத்தியது தெரியாம இவங்க எல்லாம் கேம் வைக்கப் போறாங்க. நீ எப்படியும் ஜெயிச்சுடுவன்னு தெரியும். முகில் தேறுவார்னு நினைக்கிற?” என்று உத்ராவின் அருகில் நின்றிருந்த புவனா தோழியிடம் கேலியுடன் கேட்டாள்.
“புவி குட்டி வாயை மூடிக்கிட்டு இரு…” என்று உத்ரா அவளைக் கடிந்து கொள்ள,
“வாயை மூடுவதா? இவங்க எல்லாம் உங்களுக்கு என்ன கேம் வைக்கப் போறாங்களோ எனக்குத் தெரியாது. ஆனா இன்னைக்கு உங்க இரண்டு பேருக்கும் நான் ஒரு கேம் வச்சுருக்கேன்…” என்று கண்ணைச் சிமிட்டி குறும்பாகச் சிரித்தாள் புவனா.
“என்ன செய்து வைக்கப் போற? விளையாடாதே புவி! முகில் என்ன மூடில் இருக்காரோ? ஏதாவது செய்து வாங்கிக் கட்டிக்காதே!” என்றாள் உத்ரா.
“அதெல்லாம் இத்தனை பேருக்கு நடுவில் முகில் மூஞ்சியைக் காட்ட மாட்டார்…”
“ஆமா, குரு எங்கே? அவர்கிட்ட உன்னை மாட்டிவிட்டால் தான் சும்மா இருப்ப?” என்று பார்வையைச் சுழல விட்டு குரு எங்கே என்று தேடினாள்.
அங்கிருந்த ஒரு டேபிளில் அமர்ந்து உண்டு கொண்டே அவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான் குரு.
“அதெல்லாம் இன்னைக்கு நீ என்னை அடக்க முடியாது. நான் சொன்ன விளையாட்டு நானும் குருவும் சேர்ந்து தேர்ந்தெடுத்தது தான். அதனால் நீ தப்பிக்க முடியாது…” என்ற புவனா,
உத்ரா சொல்ல வந்த மறுப்பைக் கேட்காமல் குருவுடன் சென்று அமர்ந்து கொண்டாள்.
‘இவள் என்ன செய்து வைக்கப் போறாள் என்று தெரியலையே…’ என்று உத்ரா யோசித்துக் கொண்டிருந்த போதே, இங்கே அலுவலக நண்பர் விளையாட்டைச் சொல்ல ஆரம்பித்தார்.
“உங்க ஃபுட்டை உங்க வொய்ப்பும், அவங்க ஃபுட்டை நீங்களும் எடுத்துக் கொடுக்கணும் முகில். அதிலும் முக்கியமா அவங்களுக்கு ரொம்பப் பிடித்த ஃபுட் மட்டும் தான் எடுத்துக் கொடுக்கணும். பிடிக்காத ஃபுட்டை எடுத்துக் கொடுக்கக் கூடாது. அதே போல் தான் உங்க வொய்ப்பும் எடுத்துக் கொடுக்கணும்…” என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டு மானசீகமாகப் பேய் முழி முழித்தான் முகில். வெளிப்படையாகவும் அவனால் முழிக்க முடியாமல் போனது.
அவளுக்கு என்ன பிடிக்கும் என்று தான் அவனுக்கு ஒன்றுமே தெரியாதே?
‘இந்த லட்சணத்தில் நான் என்ன எடுத்துக் கொடுக்க? இன்னைக்கு நல்லா சொதப்ப போற முகில்’ என்று நினைத்துக் கொண்டான்.
இருவரின் கையிலும் தட்டு கொடுக்கப்பட வாங்கிக் கொண்டு உணவை எடுக்கச் சென்றனர்.
முதலில் உத்ரா வரிசையாகச் சில உணவுகளை எடுத்தவள் ஒரு கிரேவியை மட்டும் எடுக்காமல் சென்றாள்.
“என்ன மிசஸ் முகில் இதை மட்டும் எடுக்காமல் போறீங்க?” என்று ஒருவர் கேட்க,
“அதில் கத்திரிக்காய் ஆட் பண்ணிருக்காங்க. முகிலுக்குக் கத்திரிக்காய் அழற்சி…” என்று உத்ரா சொல்ல,
“ஓ… ஓ…” என்று சிலர் ஆரவாரமாகச் சப்தம் கொடுக்க ஆரம்பித்தனர்.
முகிலோ உத்ராவை வியப்புடன் பார்த்தான். அதனுடன் அவள் எடுத்த உணவுகளைப் பார்த்தான். எல்லாமே அவனுக்கு மிகவும் பிடித்தது மட்டுமே தட்டில் வீற்றிருந்தது.
ஆனால் அவனோ அவளுக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்று தெரியாமல் தோன்றியதை எடுத்து வைத்திருந்தான்.
ஆனாலும் உண்ண ஆரம்பித்த போது அவன் எடுத்துக் கொடுத்த எதையுமே உத்ரா பிடிக்காது என்று ஒதுக்கவே இல்லை.
அதைக் கண்டவன் மனம் ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் தத்தளித்தது.
உணவு முடிந்ததும், “இன்னைக்குப் பங்க்ஷன் சூப்பர் முகில். ஆனா ஒரே ஒரு குறை மட்டும் தான்…” என்றான் குரு.
அவன் அப்படிச் சொன்னதும் எல்லோரும் அவனைப் பார்க்க ஆரம்பிக்க, உத்ரா ‘என்னடி செய்து வைக்கப் போறீங்க?’ என்பது போல் புவனாவை முறைத்துக் கொண்டிருந்தாள்.
புவனா கிண்டலாக மட்டும் புன்னகைத்துக் கொண்டாள்.
“என்ன குறை குரு?” என்று கேட்டான் முகில்.
“ஹலோ கைஸ், உங்க எல்லாருக்கும் ஒரு விஷயம் தெரியுமா? உத்ராவும், முகிலும் பெஸ்ட் சிங்கர்ஸ். அவங்க இரண்டு பேரும் எங்க காலேஜ்ல பாடினப்ப ஹோல் காலேஜும் மிரண்டு போய்டுச்சு. இப்போ அவங்களோட பங்க்ஷன்ல ஒரு பாட்டு கூடப் பாடாம எஸ்கேப் ஆகப் பார்க்கிறாங்க பாருங்க. இதை என்னன்னு கேளுங்க…” என்று சுற்றி உள்ளவர்களிடம் நியாயம் கேட்டான் குரு.
“அப்படியா? எங்களுக்குத் தெரியாதே. ஏன் முகில் வயித்துக்கு மட்டும் உணவு கொடுத்துட்டு செவிக்கு உணவு கொடுக்காம எஸ்கேப் ஆகலாமா? இப்போ எங்களுக்குச் செவிக்கும் உணவு வேண்டும்…” என்று குரல் கொடுக்க,
“ஆமா… ஆமா… பாடுங்க…” என்று மற்றவர்களும் குரல் கொடுத்தனர்.
“ரொம்ப நாளா பிராக்டீஸ் பண்ணலையே…” என்று இருவருமே பின் வாங்க பார்த்தனர்.
“பரவாயில்லை… நீங்க அடிக்கடி முணுமுணுக்குற பாட்டு ஏதாவது பாடுங்க…” என்றனர்.
“என்ன பாட்டு பாட உத்ரா? எனக்குச் சட்டுன்னு எதுவும் தோணலை…” என்று உத்ராவிடம் மெதுவாகக் கேட்டான் முகில்.
“அவங்க சொன்ன மாதிரி நாம அடிக்கடி முணுமுணுக்குற பாட்டே பாடலாம் முகில். உங்களுக்குப் பிடித்ததை நீங்க பாடுங்க. நானும் அதே போலப் பாடுறேன்…” என்றாள் உத்ரா.
“அப்போ நீ முதலில் ஆரம்பி. நான் அதுக்குள்ள ரெடி ஆகிக்கிறேன்…” என்றான்.
“சரி…” என்ற உத்ரா பாட ஆரம்பித்தாள்.
உந்தன் கண் ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்
தறிக்கெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் நூலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிக்கொதிக்கும்
உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடித்துடிக்கும்
புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமோ
மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது
மூங்கில் காடென்று ஆயினள் மாது
என்று உத்ரா பாட ஆரம்பிக்க, முகில் அடுத்து தான் என்ன பாடுவது என்பதை யோசிப்பதை மறந்து அவளின் குரலில் மட்டுமில்லாமல் அவள் பாடிய வரிகள் சொல்லிய செய்தியிலும் கட்டுண்டு போனான்.
ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன்
இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால்
எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நனவா
என்னைக் கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்தெந்தன் தாய்மொழி மறந்தேன்
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
என்று அவள் தொடர்ந்து பாட, அதிலும் அவள் பாடிய
உன்னை இழந்துவிட்டால்
எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நனவா
என்னைக் கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்தெந்தன் தாய்மொழி மறந்தேன்
இந்த வரிகள் முகிலை உருக்கியது.
உத்ராவோ கண்களை லேசாக மூடி மனமுருகி பாடிக் கொண்டிருந்தாள்.
அந்த வரிகள் உத்ராவின் மனதினை அவனுக்குச் சொல்வது போல் இருக்க, அவளை ஆழ்ந்து பார்க்க ஆரம்பித்தான் முகில்வண்ணன்.