26 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில் (Final)

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 26

சத்யாவும், தர்மாவும் மண வாழ்வில் அடியெடுத்து வைத்து ஆறு மாதங்கள் கடந்திருந்தன.

“எம்மா சத்யா… இந்தக் கணக்கு சரியா வரமாட்டீங்குது. என்னனு சொல்லும்மா…” என்ற நீலகண்டன் கணக்கின் விவரத்தை விரிவாகச் சொல்ல,

தன் மடியில் இருந்த பூக்குவியலின் கை, கால்களைப் பூவால் வருடுவது போல வருடிக் கொண்டே மாமனார் சொன்ன கணக்கிற்கான பதிலை சில நொடிகளில் சொல்லியிருந்தாள் சத்யா.

“சூப்பர்மா… இது தெரியாம தான் இவ்வளவு நேரம் மண்டையைப் பிச்சுகிட்டு இருந்தேன். என் மருமக கெட்டிக்காரி! பதிலை நொடியில் சொல்லிட்டாள்…” என்று பெருமையுடன் சொல்லியவர் அங்கே வந்த மனைவியிடம் “மருமக பொண்ணுகிட்ட நீயும் கொஞ்சம் கணக்கு வழக்கு கத்துக்கோ சாவி… அப்பவாவது வீட்டு கணக்கு சரியா பார்க்கிறியான்னு பார்ப்போம்…” என்று மனைவியைக் கேலியாக வம்பிழுத்தார்.

“நான் எதுக்குக் கத்துக்கணும்? எனக்குப் பதிலா என் மருமகளே இனி வீட்டு கணக்கு வழக்கு பார்ப்பாள். இனி என் வேலை பேரப்பிள்ளைகளைக் கொஞ்சுறது மட்டும் தான். நீங்க வேணும்னா கத்துக்கோங்க. உங்களுக்குத் தான் இப்போ எல்லாம் அடிக்கடி தேவைப்படுது…” என்று அடிக்கடி மருமகளிடம் கணக்குச் சம்பந்தமாகக் கேட்பதை கிண்டலாகச் சொன்னார்.

“மாமாவுக்கும் கணக்கு தெரியும் அத்தை. எனக்கும் டிரைவிங் ஸ்கூல் கணக்கு வழக்கு தெரியட்டும்னு என்கிட்ட அவருக்குத் தெரியாதது போலக் காட்டிக்கிறார்…” என்று சிரித்தபடி சத்யா சரியாக மாமனாரின் எண்ணத்தைச் சொல்ல, காரணம் தெரிந்தும் தெரியாதது போல இத்தனை நாட்களும் காட்டிக் கொண்ட மருமகளை ஆச்சரியமாகப் பார்த்தனர் நீலகண்டனும், சாவித்திரியும்.

“எங்க மருமக புத்திசாலினு இதுக்குத் தான் சொல்றோம்…” என்ற சாவித்திரி அவளுக்கு நெட்டி முறித்தவர், “குழந்தையை என்கிட்ட கொடுத்துட்டு பாலை குடிமா சத்யா. தர்மா வர்ற நேரம் ஆகிருச்சு. இன்னும் பால் குடிக்காம இருந்தா திட்ட போறான்…” என்றவர் பால் டம்ளரை சத்யாவிடம் கொடுத்துவிட்டு அவரின் பேரனை தூக்கிக் கொண்டார்.

சாவித்திரியின் கையில் இருந்த குழந்தை சிணுங்க ஆரம்பிக்க, “அம்மா, தம்பி பாப்பா அழுகுறான்…” என்றாள் சத்யாவின் அருகில் அமர்ந்திருந்த இனியா.

“இதோ வந்துட்டேன். இப்போ தான் கொஞ்ச நேரம் படுப்போம்னு சாஞ்சேன் அதுக்குள்ளே அழுதுட்டான்…” என்றபடி அங்கிருந்த அறைக்குள் இருந்து வெளியே வந்த அனு குழந்தையை வாங்கிச் சமாதானம் செய்தாள்.

“சில குழந்தைங்க அப்படித்தான் பெத்தவச் சாப்பிடும் போதும், தூங்கும் போதும் தான் அழுவாங்க. நீ அவனைத் தூங்க வச்சுட்டுப் படுக்கப் போயிருக்கணும். உள்ளே போய் அமர்த்திட்டு தூங்க வை…” என்றார் சாவித்திரி.

அனு குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு வெளியே வந்த போது, ஸ்ரீதர் உள்ளே நுழைந்தான். “வாங்க மாப்பிள்ளை… சாப்பிடுங்க…” என்று அவனுக்கு உணவு எடுத்து வைக்கச் சாவித்திரி உள்ளே செல்ல, தந்தை அருகில் வந்ததும் அவனிடம் ஒட்டிக் கொண்டாள் இனியா.

மகளைத் தூக்கிக் கொண்டே, “என்னமா சத்யா இன்னும் மச்சான் வரலையா?” என்று தர்மாவை விசாரித்தான் ஸ்ரீதர்.

“வர்ற டைம் தான் அண்ணா…” என்று சத்யா பதில் சொல்லவும், அவளிடம் மேலும் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு மாமனாரிமும் பேசிவிட்டு, இரவு உணவை முடித்துக் கொண்டு மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு அதே தெருவில் இருந்த தங்கள் வீட்டிற்குச் சென்றான்.

அனுவிற்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. குழந்தை பிறந்த சில நாட்கள் இரவிலும் தாயின் வீட்டில் இருந்தவள் இப்போது பகல் முழுவதும் தாயின் வீட்டிலேயும், கணவன் வேலை முடிந்து வந்ததும் தங்கள் வீட்டிலும் இருந்து கொள்வாள்.

தாய், தந்தையர் அருகிலேயே இருந்தது இனியாவையும், கை குழந்தையையும் பார்த்துக் கொள்ள அவளுக்கு வசதியாக இருந்தது.

இனியா இப்போது ஓரளவு பள்ளியை பழகியிருந்தாள். அதோடு சத்யாவும் அதே பள்ளி ஆசிரியர் தான் என்பதால் அவளுக்கு இன்னும் சுலபமாகப் பழகிவிட்டிருந்தது.

பள்ளி முடிந்த பிறகும் பெரும்பாலும் சத்யாவின் அருகிலேயே தான் இருப்பாள்.

இருவரும் ஒற்றுதலாக இருந்தனர்.

ஸ்ரீதரின் பெற்றோர் இரண்டாவது குழந்தை ஆரோக்கியமாக இருந்ததால் பார்க்க வந்து போய்க் கொண்டிருந்தனர். வந்தவர்கள் இனியாவை தள்ளி வைத்து பழக, “இரண்டு குழந்தையையும் சரிசமமா நடத்துவதாக இருந்தால் வாங்க. இல்லனா இதுக்கு முன்னாடி இருந்தது போலவே இருந்துப்போம்…” என்று ஸ்ரீதர் கறாராகச் சொல்லிவிட, வயதும் ஏறிக் கொண்டே போனதால் மகனின் தயவும் தேவைபட இனியாவிடம் லேசாக ஒட்ட ஆரம்பித்திருந்தனர்.

அதுவும் மகளுக்காகச் சொந்த ஊரையே சம்பந்தி குடும்பம் விட்டுவிட்டு வந்ததில், மகன் மொத்தமாகவே மாமனார் வீட்டுப் பக்கம் சாய்ந்து விடுவானோ என்ற அவர்களின் பயமே இனியாவுடன் சிறிது அவர்களை ஒட்ட வைத்துக் கொண்டிருந்தது.

ஸ்ரீதருக்கும் அது புரிந்தது. ஆனாலும் தாய், தந்தையைப் பார்த்துக் கொள்ளும் கடமையைத் தான் மறக்க கூடாதே என்று அவர்கள் வந்து செல்வதை ஏற்றுக் கொண்டான்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் தர்மா வர அவனின் சத்தத்தை உணர்ந்ததும் சத்யாவின் முகம் பூவாக மலர்ந்தது.

வீட்டிற்குள் நுழைந்ததும் மனைவியின் பூ முகத்தைத் தான் முதலில் ஆசையாகப் பார்த்தான் தர்மா.

தர்மாவின் ஓட்டுநர் பயிற்சி மையம் சிறந்த முறையில் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

மாற்றுத் திறனாளிகள் ஆர்வத்துடன் ட்ரைவிங் பழகச் சேர்ந்து கொண்டிருந்தார்கள். தற்போது அவனிடம் ஐந்து பேர் ஓட்டுனர்களாகப் பணிபுரிந்து கொண்டிருந்தனர்.

அவன் நினைத்தது போல் உழைப்பால் உயர்ந்து கம்பீரமான மனிதனாகத் திகழ்ந்து கொண்டிருந்தான்.

மாலை வேலை முடிந்த பிறகு கற்றுக் கொள்ள வருபவர்கள் அதிகம் என்பதால் இரவு ஒன்பது மணி வரை அவனுக்கு வேலை இருந்தது.

நீலகண்டனும் பயிற்சி மைய பொறுப்பைப் பார்த்துக் கொள்வதால் தர்மாவிற்கு உதவியாக இருந்தது. தந்தையை மாலையே வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுவான்.

தாய், தந்தையிடம் பேசிவிட்டு உணவை முடித்துக் கொண்டு மனைவியுடன் அறைக்குள் நுழைந்த மறு நொடி அவனின் வழக்கம் போலப் பின்னால் இருந்து சத்யாவை அணைத்துக் கொண்டான்.

முதலிரவில் முதல் முதலாகப் பின்னால் இருந்து அணைத்ததை அனுதினமும் ஞாபகப்படுத்தும் விதமாக அவனின் அணைப்பு அப்படித்தான் ஆரம்பிக்கும்.

அடுத்து ஒற்றைக் கையால் ஒரு சுற்று சுழற்றி முன்பக்கம் திருப்பி அணைப்பதையும் வழக்கம் போலச் செய்து கொண்டிருந்தவன் கடந்த சில நாட்களாகச் செய்யாமல் இருந்தான்.

அதற்குக் காரணம்? சொல்லி தான் தெரிய வேண்டுமா என்ன?

“அப்புறம் இன்னைக்கு என் சக்திமா எப்படி இருந்தாங்க?” அவளின் தோளில் உதட்டால் உரசிக் கொண்டே கேட்டான்.

“சக்திமா ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருந்தாள்…” என்றாள் வெற்று முதுகில் உராய்ந்த மீசையும், அவனின் உதடுகளும் ஏற்படுத்திய குறுகுறுப்பில் சிலிர்த்துக் கொண்டே.

“எவ்வளவு…” உதடுகள் இன்னும் முன்னேறி கழுத்திற்கு வந்தது.

“ஹ்கூம்…” என்று கூச்சத்துடன் மறுத்துக் கொண்டே அவனின் புறம் திரும்பி கணவனை இறுக அணைத்து, அணைப்பின் இறுக்கத்தைக் கூட்டிக் கொண்டே தன் சந்தோஷத்தின் அளவை காட்டினாள்.

மனைவியைத் தன்னுடன் இறுக்கி கொண்ட தர்மா, “எல்லாரும் அளவை சொல்ல கையை விரித்துக் காட்டினால் நீ மட்டும் வித்தியாசமா காட்டுற?” என்று கேட்டுக் கொண்டே கன்னத்தில் இதழ் பதித்தான்.

“மத்தவங்ககிட்ட தான் கையை விரித்துக் காட்டணும். என் தர்மாகிட்ட இப்படித்தான் காட்டணும்…” என்றவள் இன்னும் இறுக்க…

“ஹகூம்டா… உள்ளே இருக்குற நம்ம குட்டிக்கு வலிக்கும்…” என்று தங்களுக்குள் இருந்த இறுக்கத்தை இலகுவாக்கினான்.

தினமும் சத்யா சந்தோஷமாக இருந்தாளா என்று கேட்பதும், அதுக்குச் சத்யா அணைப்பின் மூலம் பதில் சொல்வதும் அவர்களுக்குள் வழக்கமாகிவிட்ட ஒன்று.

இப்போது சத்யாவின் வயிற்றில் இருவரின் அன்பிற்கும் அடையாளமான அத்தாட்சி இருந்ததால் தர்மா அடக்கியே வாசித்தான்.

இல்லையெனில் மனைவி இறுக்கி அணைத்ததில் ஆனந்தப்பட்டு அடுத்தக் கட்டத்திற்குத் தாவியிருப்பான்.

படுக்கையில் மனைவியை அமர வைத்து அவளின் மடியில் படுத்துக் கொண்டவன் “என் செல்லக்குட்டி சந்தோஷமா இருந்தாளா?” அவளின் வயிற்றின் மீது வாய் வைத்து கேட்டவன் அங்கே ஒரு முத்தத்தையும் பதித்தான்.

கணவனின் சிகையைக் கோதிக்கொண்டே “அம்மா போலவே நானும் சந்தோஷமா இருக்கேன்னு குட்டி சொல்றா…” என்ற சத்யா குனிந்து கணவனின் நெற்றியில் இதழ் பதித்து, “அன்பும், நேசமும் இருக்கும் இடத்தில் சந்தோஷத்திற்குக் குறைவே இருக்காது. அந்தச் சந்தோஷத்தை குலைக்க ஏதாவது நடுவில் வந்தாலும், அந்த அன்பும், நேசமும் அதைத் தகர்த்தெறிந்து விட்டு அன்பு அங்கே ஆட்சி செய்யும்!

என்னை நீங்களும், நம்ம குடும்பமும் தினம் தினம் அன்பால் குளிப்பாட்டும் போது என் சந்தோஷத்திற்கு ஒரு குறையும் வராது…” என்று அழுத்தி சொன்னவள், இன்னும் சிறிது குனிந்து தன் சந்தோஷத்தை காட்டும் வகையில் தர்மாவின் அதரங்களில் தன் இதழை பதித்தாள்.

மனைவியின் பேச்சிலேயே மகிழ்ந்திருந்தவன் அவளின் இதழ் முத்தத்தில் தானும் சந்தோஷத்துடன் மூழ்கி போனான் தர்மா.

மறுநாள் காலையில் தியாகராஜன், வசந்தா, கார்த்திகா மூவரும் வந்திருந்தனர்.

கார்த்திகா தற்போது கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்தாள்.

“அடுத்த வாரம் சத்யாவுக்கு ஐஞ்சாவது மாசம் ஆரம்பிக்குது. அப்போ ஐஞ்சு வகைச் சோறு கட்டி சின்னதா விஷேசம் வைக்கலாமா அண்ணி?” என்று சாவித்திரியிடம் வசந்தா கேட்க…

“என்ன அண்ணி வைக்கலாமான்னு கேள்வி கேட்குறீங்க? வைக்கலாம்னு உரிமையா சொல்லுங்க. நானே உங்ககிட்ட கேட்கலாம்னு நினைச்சேன். இப்போ நீங்களே கேட்டுட்டீங்க…” என்றார் உற்சாகமாக.

“சந்தோஷம் அண்ணி. அண்ணாவுக்கும், மாப்பிள்ளைக்கும் சம்மதம்னா நாமளே சிறப்பா செய்துடலாம்…” வீட்டு ஆண்களின் விருப்பத்தை அறிய விரும்பினார் வசந்தா.

“என் மருமகளுக்குச் செய்யக் கசக்குமா என்ன? தாராளமா செய்யலாம்…” என்று நீலகண்டன் உடனே சம்மதம் தெரிவித்துவிட, தர்மாவை கேள்வியாகப் பார்த்தார் வசந்தா.

“எனக்கும் ஓகே அத்தை, செய்யலாம்…” என்று தர்மா சொல்லவும், பெரியவர்கள் நால்வரும் அடுத்துச் செய்ய வேண்டியதை பேசிக் கொண்டிருக்க, அனுவின் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்த கார்த்திகா நிமிர்ந்து பார்த்த போது, தர்மாவின் பார்வை ரசனையுடன் தாய்மையின் பூரிப்பில் மிளிர்ந்து கொண்டிருந்த மனைவியைத் தழுவி கொண்டிருப்பதைக் கண்டு, அருகில் இருந்த அனுவின் கையைச் சுரண்டி தர்மாவை காட்டினாள்.

“அது லவ்ஸ்… சின்னப் பொண்ணு நீயெல்லாம் பார்க்க கூடாது. கண்ணை மூடிக்கோ…” என்று கேலியுடன் சொன்னாள் அனு.

“நான் பார்க்க கூடாதா? உங்க அண்ணனுக்கு இல்ல இங்க ஒரு சின்னப் பொண்ணு இருக்காள்னு நினைப்பு இருக்கணும்? அவரை யாருன்னு நினைச்சீங்க? நாங்க எல்லாம் இருக்கோம்னு கவலைப்படாம எங்க எல்லார் முன்னாடியே எங்க அக்காகிட்ட காதல் சொன்னவராக்கும். இப்போ பாருங்க…” என்றவள் தொண்டையைச் செருமி தர்மாவின் கவனத்தைக் கலைத்தாள்.

பெரியவர்களும் அவளின் செருமலில் நிமிர்ந்து பார்க்க, “என் அக்காவை என்னமா லுக்கு விடுறீங்க மாமா. எங்க அன்னைக்கு முதல் முதலில் சொன்ன மாதிரி என் அக்காவை பார்த்து ஒரு லவ் டைலாக் விடுங்க பார்ப்போம்…” என்று கலாட்டாவாகக் கேட்டாள்.

“லவ் டைலாக் தானே? விட்டுட்டா போச்சு…” என்று தர்மா நகர்ந்து சென்று சத்யாவின் அருகில் நின்றவன் அவளின் தோளில் கையைப் போட்டுக் கொண்டான்.

“ஹ்ம்ம்… என்னங்க இது எல்லோருக்கும் முன்னாடி…” என்று சத்யா கூச்சத்துடன் கையை எடுக்க முயல, “அதெல்லாம் யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க கம்முனு இரு. என் மாமனாரும், உன் மாமனாரும் செய்யாத ரொமான்ஸா என்ன? எல்லாம் அவங்களுக்கும் தெரிஞ்சது தான்…” என்றான் கிண்டலுடன்.

அவன் சொன்னதைக் கேட்டு இரண்டு மாமனார்களும் அவரவரின் துணையைக் காதலுடன் பார்த்து வைக்க, “நல்லா இருந்த பெரியவங்களையும் உங்க அண்ணா கெடுக்கிறார் பாருங்க…” என்று சத்தமாகச் சொன்னாள் கார்த்திகா.

அதில் வசந்தாவும், சாவித்திரியும் அவரவர் கணவனை முறைத்து வைத்தார்கள்.

அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் இன்னும் மனைவியின் தோளில் இருந்து கையை எடுக்காமல் அவளைக் காதலுடன் பார்த்துக் கொண்டே,

“என்னில் வீழ்ந்தது அவள் நெஞ்சம்!
அவளில் வீழ்ந்தது என் நெஞ்சம்!
எம்மிருவரின் நெஞ்சமும்
நேசத்தில் தஞ்சம்!!”

என்று தங்கள் காதலை கவிதையாய் சொல்லிக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.

கணவனின் காதலை மனதால் உணர்ந்து அதைத் தன் முகத்தில் பிரதிபலித்துக் கொண்டிருந்தாள் சத்யவேணி.

இருவரின் நேசம் நிறைந்த முகத்தைப் பார்த்து பெரியவர்களும், சிறியவர்களும் இவர்கள் என்றும் இதே நிறைவுடன் நிறைவாக வாழ வேண்டும் இறைவனிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டனர்.

உடல் குறையை வென்று என்றும் உள்ளத்தால் நிறைவான வாழ்க்கை வாழ தர்மா, சத்யா இருவரின் காதலும் அவர்களுக்குத் துணை நிற்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

சுபம்