26 – இன்னுயிராய் ஜனித்தாய்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 26

“சாப்பிட வாங்க. ஆபிஸுக்கு நேரம் ஆகிடுச்சு. அவளை என்கிட்ட கொடுங்க…” என்று குரல் கொடுத்தாள் துர்கா.

“இதே வர்றேன் துர்கா…” என்று குரல் மட்டும் கொடுத்தவனோ பத்து நிமிடங்கள் கடந்த பிறகும் வெளியே வரவில்லை.

“இன்னுமா நீங்க குளிச்சுட்டு வரலை? என்ன செய்றீங்க?” என்று சமையலறையிலிருந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்த துர்கா, அவன் வெளியே வரவில்லை என்றதும் அறைக்குள் சென்று பார்த்தாள்.

அறையிலும் இல்லை. குளியலறையிலிருந்து தண்ணீர் சத்தம் கேட்டது.

“இன்னும் அங்கே என்ன செய்றீங்க இரண்டு பேரும்?” வாசலிலிருந்து குரல் கொடுத்தாள்.

“குளிக்கிறோம்…” என்றான்.

“அவளை நான் குளிக்க வச்சுக்கிறேன்னு சொன்னேனே… கதவைத் திறங்க…” கதவைத் தட்டினாள்.

தாழை நீக்கி விட்டு தலையை மட்டும் வெளியே நீட்டினான் நித்திலன்.

“இன்னும் ஒரு பைவ் மினிட்ஸ் துர்கா. இதோ வந்துடுறோம்…” என்று கண்களைச் சுருக்கி அனுமதி கேட்டான்.

“உங்களோட சேர்ந்து அவள் கெட்டுப் போறாளா? இல்ல அவ கூடச் சேர்ந்து நீங்க கெட்டுப் போறீங்களான்னு தெரியலை. வர வர இரண்டு பேரும் ரொம்பச் சேட்டை செய்றீங்க…” என்றாள் சலிப்பாக.

“அப்பாவை போலப் பொண்ணு. பொண்ணைப் போல அப்பா…” என்று நமட்டு சிரிப்புடன் சொன்னவன் மீண்டும் கதவை மூடிக் கொண்டான்.

“சொல் பேச்சே கேட்கிறது இல்லை…” என்று புலம்பிக் கொண்டே வெளியே வர,

“என்னமா, இன்னைக்கும் இரண்டு பேரும் தண்ணிக்குள் ஆட்டமா?” என்று கேட்டார் சோஃபாவில் அமர்ந்திருந்த சபரிநாதன்.

“ஆமாப்பா. நானும் சொல்லி பார்த்துட்டேன். ஆனாலும் தினமும் இப்படித்தான் ஆட்டம் போட்டுட்டு இருக்காங்க…” என்றாள் சலிப்பாக.

“விடுமா… இரண்டு பேரும் கொஞ்ச நேரம் தான் ஆட்டம் போடுவாங்க. அது ஒன்னும் செய்யாது…” என்றார்.

“அதனால் தான் விட்டு வைக்கிறேன். தண்ணியில் ஆட்டம் போட்டாலும் அவள் தலையை ரொம்ப நனைய வைக்கிறது இல்லை. இல்லனா விடுவேனா…” என்ற துர்கா வேலையைப் பார்க்க செல்ல, மகளை இப்படிப் பார்த்து சபரிநாதனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அவர்கள் ஊருக்கு சென்று விட்டு வந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன.

அங்கே இருந்த வரை அதன் பிறகு ஹேமா எதுவும் தொந்தரவு கொடுக்கவில்லை.

அந்நிகழ்விற்குப் பிறகு நித்திலன், துர்கா இடையே மனதளவில் நெருக்கம் ஏற்பட்டிருந்தது.

இருவரும் சகஜமாகப் பேசிக் கொண்டனர்.

நட்புணர்வையும் தாண்டி தங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று இருவருக்குமே புரிந்தாலும், அதையும் தாண்டிய வாழ்க்கைக்குள் நுழைய இருவருக்கும் தயக்கம் இருந்தது.

அதனால் இணக்கமிருந்தும் இணங்காமல் தான் அவர்களின் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

“துர்கா, குட்டிம்மாவுக்கு இந்த ட்ரெஸ் போட்டு விடட்டுமான்னு வந்து பாருங்க…” ஐந்து நிமிடங்கள் கடந்த நிலையில் குரல் கொடுத்தான் நித்திலன்.

அவனின் பன்மை அழைப்பு மட்டும் இன்னும் மாறவே இல்லை.

சொல்லியும் அவன் மாற்றிக் கொள்ளவில்லை என்றதும், அதன் பிறகு துர்காவும் சொல்லவில்லை.

“இது வேண்டாம். அது அரிக்குதுன்னு அழறாள். வேற போட்டு விடுங்க…” அவன் எடுத்து வைத்திருந்த உடையைப் பார்த்து சொல்ல,

“அரிக்குதுனா அது ஏன் தனியா வைக்காம இங்கே வச்சுருக்கீங்க?” என்று கேட்டவன், அந்த உடையை உடனே போடாத உடைகளுடன் ஒதுக்கி வைத்தான்.

அவனின் அந்தச் சிறு சிறு அக்கறை தான் துர்காவை மிகவும் ஈர்க்கும் ஒன்று.

இதை நீயே தான் செய்ய வேண்டும் என்று வேலையைத் திணிப்பவனும் அல்ல.

தானே செய்து விடுவான்.

இதோ, காலையில் வீட்டு வேலைகள் அனைத்தையும் துர்கா பார்ப்பதால் குழந்தை பொறுப்பை அவன் எடுத்துக் கொண்டு காலையில் குளிக்க வைத்து, உடை மாற்றி விட்டு, அவன் காலை உணவை உண்ணும் போதே குழந்தைக்கும் ஊட்டி விட்டுவிட்டே கிளம்புவான்.

அதனால் காலையில் அவன் வேலைக்குக் கிளம்பிய பிறகு துர்காவிற்கு ஓய்வு கிடைக்கும்.

அதே போல் மாலையிலும் வீடு வந்ததும் குழந்தையைப் பார்த்துக் கொள்வான்.

வேலை நேரம் போக, தன்னுடைய பெரும்பாலான நேரத்தை குடும்பத்திற்குத் தான் செலவு செய்வான்.

சில நேரம் குழந்தையைச் சபரிநாதன் பார்த்துக் கொண்டால் துர்காவிற்கு வீட்டு வேலைக்கு உதவி செய்ய ஆரம்பித்து விடுவான்.

நித்திலனுடன் இருப்பது துர்காவிற்குப் பெரும் பாதுகாப்பு உணர்வை கொடுத்துக் கொண்டிருந்தது.

எந்தக் கவலையும் இல்லாமல் நிம்மதியாக வாழும் உணர்வை இந்த இரண்டு மாதங்களில் நன்றாகவே உணர்ந்திருந்தாள் துர்கா.

“நான் ட்ரெஸ் மாத்தி விடுறேன். நீங்க போய் முதலில் சாப்பிடுங்க. உங்களுக்குப் பசி தாங்காது…” என்று கனிவுடன் சொன்னவளை காதலுடன் பார்த்தான் நித்திலன்.

என்றோ ஒரு முறை சொன்னதை ஞாபகம் வைத்து அவனை எப்போதும் சரியான நேரத்திற்குச் சாப்பிட வைத்து விடுவாள்.

அவன் பார்வை தன் மீது படிவதை ஓரப்பார்வையில் உணர்ந்தவளுக்கு உள்ளுக்குள் சிலிர்த்தது.

இப்போதெல்லாம் நித்திலன் தன் பார்வையை மறைத்துக் கொள்வதில்லை. ‘என் மனைவியைப் பார்க்கிறேன்’ என்ற உரிமையைப் பார்வையிலேயே நிலை நாட்டுவான்.

அது புரிந்தும், புரியாத பாவனைக் காட்டினாலும் அவனின் அந்தப் பார்வையைத் துர்காவும் விரும்பவே செய்வாள்.

அவனின் தீண்டல் எல்லாம் பார்வையில் மட்டுமே!

அவ்வப்போது தெரியாமல் கை படுவது மட்டுமே அவனின் தீண்டலாக இருக்கும்.

ஆனால் துர்கா, சில நேரம் இயல்பாக அவன் தோள் தொட்டு அழைப்பது உண்டு. குழந்தையை வாங்கிக் கொள்ளும் போது கைகள் உரசிக் கொண்டாலும் பெரியதாக எடுத்துக் கொள்வது இல்லை.

மெல்ல மெல்ல அவளுக்குள் இறங்க ஆரம்பித்திருந்த ‘இவன் என் கணவன்!’ என்ற உரிமை அவளை இயல்பாக இருக்க வைத்தது.

“இன்னைக்கு ஈவ்னிங் ஒரு மீட்டிங் இருக்கு துர்கா. வர லேட் ஆகலாம்…” சாப்பிட்டு வேலைக்குக் கிளம்பும் முன் தகவல் சொன்னான்.

“நைட் வீட்டில் வந்து தானே சாப்பிடுவீங்க?”

“ஆமாம்…”

“அப்ப சரி…” என்றாள்.

“குட்டிம்மா… அம்மாவையும், தாத்தாவையும் தொந்தரவு பண்ணாம சமத்தா இருக்கணும். அப்பா நைட் வந்து உன் கூட விளையாடுறேன்…” என்றவன் துர்காவின் கையில் இருந்த வருணாவின் கன்னத்தில் முத்தமிட செல்ல, அவனிடம் விளையாட சட்டென்று முகத்தைத் திருப்பினாள் குழந்தை.

அவள் திரும்பியதில் அவனின் உதடுகள் துர்காவின் தோளில் பதிந்தது.

இருவருமே அதை எதிர்பார்க்கவில்லை.

நித்திலன் பதறி விலகி துர்காவின் முகத்தைப் பார்த்தான்.

துர்காவின் முகத்தில் மெல்லிய நாணப் பூக்கள் தெரிய, வியந்து போனான்.

அவன் பார்வையை எதிர் கொள்ளாமல், “அப்பாவுக்கு டாட்டா சொல்லுடா கண்ணுமா…” என்று குழந்தையிடம் பேசுவது போல் திரும்பிக் கொண்டாள்.

துர்கா தன் தீண்டலை இயல்பாக எடுத்துக் கொண்டது நித்திலனுக்கு மயிலிறகால் மனம் வருடியது போல் இருந்தது.

அந்த மகிழ்ச்சியுடனே வேலைக்குக் கிளம்பிச் சென்றான்.

“பாலை அப்பா பக்கம் தூக்கிப் போடுடா குட்டிம்மா…” என்று உற்சாகமாகக் கூவினான் நித்திலன்.

கையில் வைத்திருந்த பந்தை தந்தையின் பக்கம் தூக்கிப் போட்டாள் வருணா.

அதுவோ நித்திலன் பக்கம் போகாமல் வேறு பக்கம் போய் விழ, நித்திலன் பந்து நகர்ந்த பக்கம் தானும் நகர்ந்து அதை எடுத்தான். உற்சாகமாகக் கை தட்டி சிரித்தாள் வருணா.

“இப்ப அப்பா பால் போடுவேனாம். குட்டிம்மா கரெக்ட்டா பிடிப்பாளாம்…” என்று குழந்தையின் பக்கம் பந்தை போட, அதை ஓடிப் போய்ப் பிடிக்க முயன்று மண்ணில் விழுந்தாள்.

“அச்சோ! குட்டிம்மா விழுந்துட்டாங்களா?” என்று பதறி அவன் குழந்தையைத் தூக்கப் போக, அவளோ விழுந்து எழுந்து அமர்ந்து தந்தையைப் பார்த்து சிரித்தாள்.

“சமத்துக் குட்டிம்மா. அழவே இல்லையே?” என்று வியப்பாகக் கேட்டு அவளைத் தூக்கி அடி எதுவும் பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்தான். உடல் எல்லாம் மண் தான் ஒட்டியிருந்ததே தவிர அடி எதுவும் படவில்லை என்றதும் நிம்மதி அடைந்தான்.

“மாப்பிள்ளை பாப்பாவை ரொம்ப அக்கறையா பார்த்துக்கிறார்ல மா?” கடற்கரை மணலில் அமர்ந்து கரையைத் தொட்டுச் செல்லும் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த மகளிடம் கேட்டார் சபரிநாதன்.

“அக்கறையா? அவள் மேல உயிரையே வச்சுருக்கார்பா. அவள் லேசா சிணுங்கினா கூட அவர் முகம் சுருங்கிப் போயிடும். பூ போல அவளைத் தாங்குறார்….” என்றாள் பெருமையாக.

மகளின் பெருமையில் அத்தந்தையும் பூரித்துப் போனார்.

“மாப்பிள்ளை நம்மைச் சந்தோஷமா பார்த்துக்கிற மாதிரி நீயும் மாப்பிள்ளையை எப்பவும் இதே சிரிச்ச முகமா பார்த்துக்கணும் மா…” என்று நித்திலன் குழந்தையிடம் சிரித்துப் பேசுவதைப் பார்த்துக் கொண்டே சொன்னார்.

அவளும் கணவனைப் பார்த்து விட்டு, “கண்டிப்பாப்பா…” என்றாள்.

அவளின் கண்கள் ஆசையுடன் கணவனைப் பருகின.

மகளின் மனம் மாறி விட்டதைப் புரிந்து கொண்ட தந்தைக்கு அவ்வளவு நிம்மதியாக இருந்தது.

“சரிமா, நான் கொஞ்ச நேரம் நடந்துட்டு வர்றேன்…” என்று எழுந்து வேறு பக்கமாக நடக்க ஆரம்பித்தார்.

சென்னை கோவளம் கடற்கரைக்கு வந்திருந்தனர். ஆட்கள் கூட்டம் இல்லாத பகுதிக்கு வந்திருந்ததால் அங்கே ஜனக்கூட்டமோ எந்த ஆர்ப்பாட்டமோ இல்லாமல் அலைகளின் இரைச்சல் மட்டும் பலமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

துர்கா மட்டும் தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்த நித்திலன், குழந்தையைத் தூக்கி கொண்டு அவளின் அருகில் வந்தான்.

“அம்மாவையும் விளையாட கூப்பிட்டு வாடா குட்டிம்மா. நாம பால் விளையாடுவோம்…” என்று வருணாவை மனைவியின் அருகில் இறக்கி விட்டான்.

வருணா அன்னையின் கையைப் பிடித்து இழுக்க, “நீயும், அப்பாவும் விளையாடுங்க கண்ணுமா. அம்மா வரலை…” என்றாள்.

“அதெல்லாம் அம்மாவை தனியா விட முடியாதுன்னு சொல்லுடா குட்டி…” என்றான் நித்திலன்.

“அம்மா எங்கே இருந்தாலும் உங்க கூடத்தான் இருக்கேன்னு சொல்லுடா கண்ணு…” குழந்தையை நடுவில் விட்டு இருவரும் மாறி மாறிப் பேசிக் கொண்டிருந்தாலும் இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் தழுவிய படி தான் இருந்தன.

“ப்ளீஸ் துர்கா, வாங்க விளையாடலாம்…” என்று அழைத்தவனைக் கடுமையாக முறைத்தாள்.

நித்திலனின் கண்களில் குறும்பு கொப்பளித்துக் கொண்டிருக்க, துர்காவின் கண்களிலோ கடுப்புத் தாண்டவமாடியது.

பின்னே அவளும் பன்மையில் அழைக்க வேண்டாம் என்று பல முறை சொல்லிவிட்டாள். ஆனாலும் விடாமல் அவன் அப்படியே அழைக்க அவளுக்கு எரிச்சல் தான் வந்தது.

இன்று அவனுக்கு விடுமுறை என்பதால் குடும்பத்துடன் கடற்கரைக்கு அழைத்து வந்து விட்டான்.

“அம்மா விளையாட வரலைனா நாமளும் விளையாட வேண்டாம்டா குட்டி…” என்றவன் துர்காவை விட்டு சற்று இடைவெளி விட்டு அமர்ந்து, குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு அவளிடம் கதை பேசினான்.

“ஏன் இப்படிப் பண்றீங்க?” என்று கேட்டாள் துர்கா.

“நான் என்ன பண்ணினேன் துர்கா?” ஒன்றும் அறியாதவன் போல் கேட்டு வைத்தான்.

“இவ்வளவு நேரம் நீங்க இரண்டு பேரும் தானே விளையாடிட்டு இருந்தீங்க? அப்புறம் இப்ப மட்டும் என்ன?” என்று கேட்டாள்.

“அப்ப மாமா உங்க பக்கத்தில் இருந்தார் துர்கா. இப்ப தனியா இருக்கீங்க. உங்களைத் தனியா விட மாட்டேன்…” என்று அவன் சாதாரணமாகச் சொல்வது போல் இருந்தாலும் அதிலும் ஒரு தீவிரம் தெரிந்தது.

‘என்ன செய்துவிட்டேன் உனக்கு? நீ என் மேல் இவ்வளவு காதல் கொள்ள?’ என்று தான் துர்காவிற்கு அந்த நேரம் தோன்றியது.

அவளின் பார்வை அவனைக் காதலுடன் தழுவியது.

இது போல் தான் அவனின் நேசத்தை அழுத்தமாகத் தன் ஒவ்வொரு செயலிலும் காட்டிக் கொண்டிருந்தான் நித்திலன்.

அவளின் பார்வையைப் பார்த்து என்னவென்று விழியுயர்த்திக் கேட்டான்.

துர்கா பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

இப்போது அவனின் பார்வை ரசனையுடன் மனைவியைத் தழுவியது.

கூடவே நேற்று அலுவலகத்தில் நண்பனிடம் உரையாடிய வார்த்தைகளும் அவனுள் ஓடியது.

“அப்புறம் நித்திலா, கல்யாண வாழ்க்கை எப்படிப் போகுது?” அன்று அலுவலகத்தில் மதிய உணவின் போது கேட்டான் முரளி.

“ரொம்ப நல்லாவே போகுது முரளி. ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்…” என்றான் முகம் மலர.

“துர்கா உன்கிட்ட நல்லா பழகுறாங்களா? முன்னாடி போல விலகல் இருக்கா?” என்று முரளி கேட்க, நித்திலனுக்குக் காலையில் அவள் தோளில் இதழ் பதித்த போது முகம் சிவந்தது மனக்கண்ணில் வர, உதடுகள் புன்னகையில் விரிந்தன.

“துர்காவுக்கு என்கிட்ட எந்தத் தயக்கமும் இல்லை…” என்றான்.

“கேட்கவே சந்தோஷமா இருக்கு நித்திலன். ஷாலினி தான் அப்பப்போ ரொம்பக் கவலைப்பட்டுட்டு இருப்பாள். கட்டாயக் கல்யாணம் போலப் பேசி பேசியே கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைத்தேன். அவங்க நல்லா வாழலைனா எனக்குக் குற்றவுணர்ச்சியா போயிடும்னு புலம்புவாள். அதனால் தான் விசாரிச்சேன். உன் மனைவி பற்றி விசாரித்தேன்னு தவறா எடுத்துக்காதே நித்திலா…” என்றான் முரளி.

“நீயும், ஷாலினி சிஸ்டரும் எங்களுக்கு நல்ல வெல்விஷர் முரளி. அதனால் உன் விசாரிப்பை தவறா எடுத்துக்கலை. எடுத்துக்கவும் மாட்டேன்…” என்றான் சமாதானமாக.

“தேங்க்ஸ் நித்திலா. அப்புறம் நித்திலா… நான் கொஞ்சம் பர்ஷனலா பேசலாமா?” என்று தயக்கத்துடன் இழுத்தான் முரளி.

“என்ன தயக்கம் முரளி, கேளு…”

“அது… நீ என்னைத் தவறா…”

“இப்பத்தான் சொன்னேன் தவறா எடுத்துக்க மாட்டேன்னு…” முரளியின் பேச்சினூடே இடைவெட்டினான் நித்திலன்.

“இது ரொம்பப் பர்ஷனல் நித்திலா. அதான் யோசிச்சேன்…” முரளி இன்னும் தயங்க,

“என்னோட முக்கியமான பர்ஷனலை கூட உன்கிட்ட சொல்லிருக்கேன் முரளி. அதை விட என்ன இருக்கப் போகுது? சும்மா கேளு…” என்றான்.

“அது… நீ வாழ ஆரம்பிச்சிட்டியா நித்திலா?” என்ற கேள்வி புரியாமல் சட்டென்று முழித்த நித்திலன், பின் புரிந்து கொண்டு, முரளியின் முகம் பார்க்காமல் தவிர்த்தான்.

“நித்திலன்?”

“ம்க்கும்…” என்று செருமிக் கொண்டவன், “எனக்கும் ஆசையாத்தான் இருக்கு முரளி. ஆனால் பயமா இருக்கு…” என்றான் மெதுவாக.

“இதில் பயப்பட என்ன இருக்கு நித்திலன்?” புருவம் சுருக்கி கேட்க, அதற்கு நித்திலன் சொன்ன பதிலை கேட்டு அவனைச் சமாதானப்படுத்தினான் முரளி.

முரளியிடம் பேசிய பிறகு நித்திலன் மனதில் பெரும் சஞ்சலம்!

துர்காவை உயிராக நேசிப்பவனுக்கு அவளை விட்டு விலகி இருப்பது அவஸ்தையாகத்தான் இருந்தது.

ஆனாலும் தன் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்த என்று அவனுக்குத் தெரியவில்லை.

தான் வெளிப்படுத்தும் உணர்வுகளைத் துர்கா எப்படி எடுத்துக் கொள்வாள் என்று தெரியாமல் அது வேறு தயக்கத்தைத் தந்து கொண்டிருந்தது.

பார்வையிலேயே துர்காவை ரசித்துப் பார்த்தான்.

அப்போது கடற்காற்றில் அவள் சேலை பறந்து லேசாக விலகி இடை பிரதேசம் தெரிய, அதனைக் கண்டவனின் உடலில் சட்டென்று உஷ்ணம் ஏறியது போல் இருந்தது.

‘வேண்டாம் பார்க்காதே!’ அவனின் மனதிற்கு அவனே கடிவாளமிட்டு சட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

ஆனாலும் மனம் அந்தச் சில நொடிகளிலேயே பேயாட்டம் ஆடத் தொடங்கியது என்னவோ உண்மை!

“நாமளும் கொஞ்ச நேரம் நடந்துட்டு வரலாமா துர்கா?” எங்கே ஒரே இடத்தில் இருந்தால் தன் கட்டுப்பாடுகள் தளர்ந்து விடுமோ என்று நினைத்தவன், எழுந்து நின்று துர்காவையும் அழைத்தான்.

“ம்ம், போகலாம்…” என்றவள் எழ முயலும் போது அவளின் கால்கள் லேசாகத் தடுமாற, “பார்த்து துர்கா…” என்றவன் வேகமாக அவள் கையைப் பற்றிக் கொண்டான்.

அவன் கையைப் பிடித்து அவள் நிலையாக நின்ற பிறகும் அவளின் கையை விடவில்லை.

அவளும் விடுவித்துக் கொள்ள முயலவில்லை.

ஒரு கையில் குழந்தையும், இன்னொரு கையால் மனைவியின் கை பற்றியும் அந்தக் கடற்கரை மணலில் சுகமாகக் கால் புதைய நடக்க ஆரம்பித்தான் நித்திலன்.

துர்கா எங்கே கையை விடுவித்துக் கொள்வாளோ என்று அவன் மனதில் சிறு சஞ்சலம் இருந்தது.

ஆனால் துர்கா இயல்பாக அவன் கை கோர்த்து நடந்தாள்.

‘இதை விடத் தன் வாழ்வில் என்ன வேண்டும்?’ என்று தான் அவனுக்கு அந்த நொடி தோன்றியது.

இருவரின் தோள்களும் அவ்வப்போது உரசிக் கொண்டன.

துர்காவின் முந்தானை பறந்து அவனின் முகத்தில் மோதி அவளின் வாசனையைப் பரப்பியது.

என்ன தான் கட்டுப்படுத்திக் கொண்டாலும் அந்த நேரம் நித்திலன் திண்டாடித்தான் போனான்.

அன்று இரவு வீட்டுக்கு வந்த பிறகு துர்காவையே மொய்த்தது நித்திலனின் ரகசிய பார்வை.

நேற்று முரளி அவனின் பயத்தைச் சிறிது தெளிவு படுத்தியிருந்தான் என்றாலும் அவனால் முழுதாகத் தன் பயத்திலிருந்து வெளியே வர முடியவில்லை.

ஆனாலும் இன்று துர்காவின் அருகாமையால் அவனுள் கிளர்ந்து எழுந்த உணர்வுகள் அவனைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.

மனதில் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துவது என்ற தயக்கம் அவனிடம்!

அவன் பார்வை அடிக்கடி தன் மீது தழுவிச் செல்வதை உணர்ந்த துர்கா, ‘என்ன?’ என்பது போல் அவனைப் பார்த்தாள்.

ஆனால் அவள் பார்த்ததும் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

அவனின் இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் ஏன்? புரியவில்லை அவளுக்கு!

மாலை நன்றாகத்தானே இருந்தான்? இப்போது என்ன? என்று தோன்றியது.

என்னவென்று தெரியவில்லை என்றாலும் அவன் பார்வை அவளை ஏதோ செய்தது.

தனக்குள் தோன்றிய உணர்வுகளை அவளுக்குள் கடத்த முயன்று கொண்டிருந்தான் நித்திலன்.