25 – இதயத்திரை விலகிடாதோ?

அத்தியாயம் – 25

மனைவியுடன் நேரம் செலவிடுவதில் இவ்வளவு சுகம் இருக்குமென்று இப்போது தான் அறிந்து கொண்டான் சூர்யக்கண்ணன்.

அன்று ஒரு நாள் மட்டும் என்று நின்று விடாமல், தினமும் அவளுடன் இருக்கும் நேரத்தை அதிகரித்தான் சூர்யா. லாக்டவுன் நாட்கள் அவனுக்கு இனிமையுடன் சென்று கொண்டிருந்தன.

மனைவியைச் சமாதானப்படுத்துகிறேன் என்று இல்லாமல் அவனே விரும்பி செய்தான். அது அவனுக்குப் பிடிக்கவும் செய்தது.

இத்தனை நாட்கள் இந்த அழகான நாட்களை இழந்ததற்கு வருத்தமும் கொண்டான்.

காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கும் வரை தன்னுடன் ஒட்டிக் கொண்டே திரியும் கணவனைக் கண்டு யுவஸ்ரீயும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தாள்.

அன்று காலையிலும் சமைத்து உண்டு விட்டு, இருவருமே சோஃபாவில் அமர்ந்து அலுவலக வேலையை ஆரம்பித்திருந்தனர்.

மனைவியைத் தனியாகச் சென்று அமர விடவில்லை அவன்.

அவளுக்கும் அது பிடித்திருக்க, கணவனுடனே இருந்து கொண்டாள்.

மூன்று பேர் அமரும் சோஃபாவில் ஒரு மூலையில் சூர்யா அமர்ந்திருக்க, இன்னொரு மூலையில் யுவஸ்ரீ அமர்ந்திருந்தாள்.

இருவருக்கும் நடுவில் ஒரு கண்ணாடி பவுலில் பாப்கார்ன் வீற்றிருந்தது.

கண்கள் கணினி திரையில் இருக்க, ஒரு கை கணினியிலும், இன்னொரு கை பாப்கார்னை எடுப்பதிலும் பிஸியாக இருந்தது இருவரின் கைகளுமே.

அடுத்துப் பாப்கார்னை எடுக்கச் சூர்யா கை நீட்டிய அதே நேரத்தில் யுவஸ்ரீயும் நீட்ட, இருவரின் கைகளும் இணைந்து கொண்டது.

மனைவியின் கையைப் பற்றிய சூர்யா, அவளின் கையாலேயே பாப்கார்னை அள்ள வைத்து, தன் வாயிற்கு இழுத்துச் சென்றான்.

“சூர்யா, என்ன பண்றீங்க?” அவன் இழுத்ததில் மடிகணினியுடன் அவன் பக்கமாக லேசாகச் சரிந்தாள்.

“ஊட்டி விடு பொண்டாட்டி. நான் தான் ஊட்டி விடுறேன். நீ எனக்கு ஊட்டியே விட மாட்டிங்கிற…” என்றான்.

“உங்களை நானா ஊட்ட சொன்னேன்?” என்று கேட்டாள்.

“நீ சொல்லலை. நானா தான் ஊட்டுறேன். அதுக்காக நீ ஊட்ட கூடாதுன்னு இருக்கா?” என்றவன், அவளின் கையில் இருந்த பாப்கார்னை வாயை திறந்து திணித்துக் கொண்டவன், கூடவே அவள் விரல்களையும் கவ்வி கொண்டான்.

“ஷ்ஷ்… சூர்யா என்ன இது, கடிக்கிறீங்க?”

“கடிக்கிறேனா? ரொமான்ஸ் பண்றேன்டி…” என்றான்.

அவன் வாயின் கதகதப்பில் முத்துக்குளிக்க ஆசை கொண்ட தன் விரல்களை வலுக்கட்டாயமாகத் தன் பக்கம் இழுத்துக் கொண்டாள்.

“எது இது ரொமான்ஸா?” தன் விரல்களைக் காட்டி கேட்டாலும், ‘எதிர்பாராத நேரத்தில் இந்தச் சீண்டலும் ரொமான்ஸ் தான் புருஷா’ என்று மனதோடு சொல்லிக் கொண்டாள்.

“ஆமா, உன் பாஷையில் ரொமான்ஸ்னா என்னன்னு நானும் கண்டுபிடிச்சுட்டேன்டி…”

“எப்படிக் கண்டுபிடிச்சீங்களாம்?”

“உன் கண்ணு தான் காட்டிக் கொடுத்துருச்சு. ஒவ்வொரு ரொமான்ஸ் அப்பவும் நான் கேட்கும் போது இல்லைன்னு மறுத்தாலும், உன் கண்கள் ஒளிர்ந்து நீ எதிர்பார்த்த ரொமான்ஸ் எதுன்னு காட்டிக் கொடுத்துருச்சு. இதோ இப்போ கூட உன் கண்ணில் இருக்கும் மின்னல் சொல்லுது இது ரொமான்ஸ்னு…” என்றான் அவள் கண்களைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே.

அவளின் முகத்தில் நாணப்பூக்கள் பூத்தன.

அதை ரசித்துப் பார்த்தான் சூர்யா.

வெட்கத்தில் சிவந்த மனைவியின் கன்னங்களைத் தன் அதரங்களால் ருசிக்க ஆசை கிளர்ந்து எழுந்தது.

ஆனால் தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டான். மனைவி சொன்ன வார்த்தை உள்ளுக்குள் இருந்து வாள் கொண்டு அறுத்துக் கொண்டிருக்கையில் அவனால் தன் ஆசையை வெளிக்காட்ட முடியவில்லை.

அவளுக்கும் அவனின் தவிப்பு புரியவே செய்தது. ஆனாலும் அவளுக்கு இன்னும் அவகாசம் தேவைப்பட்டது.

தங்கள் மனதை கட்டுக்குள் கொண்டு வந்து அவரவர் வேலையில் கவனம் வைக்க ஆரம்பித்தனர்.

அன்று மாலை வேலை முடிந்ததும் யுவஸ்ரீ ஊஞ்சலில் அமர்ந்திருக்க, அவளின் எதிரே ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்திருந்தான் சூர்யா.

அன்றைய அலுவலக வேலை பற்றிக் கணவன், மனைவிக்குள் ஏதோ பேச்சு ஓடிக் கொண்டிருந்தது.

அப்போது அவனின் அலைபேசி அழைத்தது.

“இரு, வந்திடுறேன்…” என்று மனைவியிடம் சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.

தொலைக்காட்சி அருகில் வைத்திருந்த கைபேசியை யார் அழைப்பது என்று பார்த்தவன் முகம் கோபத்தில் இறுகியது.

அழைப்பை ஏற்காமல் மீண்டும் கைபேசியை இருந்த இடத்தில் வைத்து விட்டு மனைவியின் அருகில் வந்தான்.

“யார் சூர்யா?”

“அது ஏதோ ராங்கால்…” என்றான்.

மீண்டும் அலைபேசி அழைக்க, முகம் மாறிய சூர்யா, அதை எடுக்கச் செல்லவில்லை.

அவனை யோசனையுடன் பார்த்தவள், “யார் சூர்யா? ஏன் எடுக்க மாட்டிங்கிறீங்க?” என்று கேட்டாள்.

“அது ஏதோ தேவை இல்லாத நம்பர். நமக்கு எதுக்கு அது?” என்றான்.

“தேவை இல்லாத நம்பருக்கு எதுக்கு உங்க முகம் இப்படி மாறிப் போகுது?” என்று கேட்டாள்.

அவளுக்குப் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

“சொல்லுங்க சூர்யா, யார் அது?” விடாமல் கேட்டவளுக்குப் பதில் தான் கிடைக்கவில்லை.

“நானே போய்ப் பார்க்கிறேன்…” என்று ஊஞ்சலிலிருந்து இறங்கி செல்ல முயன்றவளின் கை பற்றி நிறுத்தினான்.

“வேண்டாம், எடுக்காதே!” என்றான்.

“அப்படி யார் சூர்யா? என்ன பிரச்சினை?” என்று கேட்டாள்.

“எதுவும் பிரச்சினை இல்லை…” என்றான் முகம் இறுக.

“ஏதோ பிரச்சினைன்னு உங்க முகமே சொல்லுது. அது யார்னு நான் பார்க்கத்தான் போறேன்…” என்றவள் அவனிடமிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு அவனின் கைபேசியை எடுத்துப் பார்த்தாள்.

அவனின் நண்பர்களின் ஒருவனான சுரேன் அழைத்திருந்தான்.

மூன்று மிஸ்ட் கால் வந்திருந்தது.

அதன் பிறகு அழைப்பு வராமல் போக, கணவனின் கைபேசியை எடுத்துக் கொண்டு கணவன் முன் வந்து நின்றாள்.

“உங்களுக்கும், உங்க ஃபிரண்ட்ஸுக்கும் என்ன பிரச்சினை சூர்யா?” என்று கேட்டாள்.

“என்ன பிரச்சினை? அதெல்லம் எதுவுமில்லை…” என்றான் மழுப்பலாக.

“பிரச்சினை இல்லைனா பேசியிருக்க வேண்டியது தானே? உங்க ஃபிரண்ட்ஸை அவாய்ட் பண்ற அளவுக்கு என்ன நடந்தது? அன்னைக்குப் பேசும் போது கூடச் சொன்னீங்க, துரோகிங்கன்னு. உங்களுக்கு என்ன துரோகம் செய்தாங்க?”

“விடேன் யுவா. எனக்கு அவங்களைப் பத்தி பேச விருப்பமில்லை…”

“பேச விருப்பமில்லையா? எங்கிட்ட சொல்ல விருப்பமில்லையா?” கூர்மையாகக் கேட்டாள்.

அவளைக் கோபத்துடன் பார்த்தான் சூர்யா.

“அது சரி, என்னை விட உங்க ஃபிரண்ட்ஸ் உங்களுக்கு எவ்வளவு முக்கியம்னு காட்டியவர் தானே நீங்க? அவங்களைப் பத்தி நான் பேசினால் பிடிக்காது தான்…” என்றாள்.

“போதும், நிறுத்து யுவா!” கோபமாக இரைந்தான் சூர்யா.

“இன்னொரு முறை உன்னை விட அவங்க எனக்கு முக்கியம்னு சொல்லாதே!” என்றான்.

“சொல்லக் கூடாதா? ஆனா, அது தானே உண்மை…” என்றாள்.

“உண்மை அது இல்லை. ஆனால் அது தான் உண்மைன்னு நீ நினைக்கும் அளவுக்கு என் செய்கை இருந்தது பார். அப்படி உன்னை நினைக்க வச்சது என் தப்பு தான்…” என்றான் கசந்த குரலில்.

அவனின் கசப்பான குரல் அவளை நிதானிக்க வைத்தது.

“என்னாச்சு சூர்யா?” என்று பொறுமையாகக் கேட்டாள்.

“என் ஃபிரண்ட்ஸை துரோகிங்கன்னு சொன்னது கூட இப்ப யோசித்துப் பார்த்தால் தப்புதான்னு நினைக்கிறேன். அன்னைக்கு இருந்த கோபத்தில் சொல்லிட்டேன். அவனுங்க சரியாத்தான் இருந்திருக்கானுங்க. ஆனால் நான் தான் சரி இல்லை…” என்றான்.

அவனே பேசி முடிக்கட்டும் என்பது போல் அமைதியாக இருந்தாள்.

“சுரேன், அருண், நரேன், விஜய், லோகேஷ் எல்லாம் காலேஜில் இருந்தே என் ஃபிரண்ட்ஸுன்னு உனக்குத் தெரியும். காலேஜ் முடிக்கும் போது, இனி நம்ம வாழ்க்கை தனித்தனியா போயிடும். யார், யார் எங்கெங்கே இருப்போம்னு தெரியாதுன்னு சோகமாகச் சொன்னான் விஜய்.

“ஏன் அப்படிச் சொல்ற? நாம நினைச்சா ஒன்னா இருக்கலாம்னு அருண் சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டு எங்க எல்லாருக்குமே ஆர்வம். எப்படி ஒன்னா இருக்கலாம்னு யோசிக்கும் போது தான் எப்படியும் வேலை தேடும் போது சென்னையில் தானே இருப்போம். ஒரே இடத்தில் ரூம் எடுத்து தங்கலாம்னு முடிவுக்கு வந்தோம்.

சில மாத இடைவெளியில் எங்க ஆறு பேருக்குமே மாற்றி மாற்றி ஒவ்வொரு கம்பெனியிலா வேலை கிடைத்தது. கம்பெனி வேறாக இருந்தாலும் நாங்க சேர்ந்து சுற்ற சனி, ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுத்துக்கிட்டோம்.

அதன் படி ஒவ்வொரு வாரமும் நேரம் செலவழித்தோம். அப்போது தான் எங்க வீட்டில் கல்யாண பேச்சு வந்தது. அவனுங்க கிட்ட விஷயத்தைச் சொன்னதும் என்னை ஓட்ட ஆரம்பிச்சுட்டானுங்க. இனி வீக் எண்ட்டில் நீ எங்க கூட வர மாட்ட. கல்யாணம் முடிந்து தனியா போறதோட எங்க ஃபிரண்ட்ஷிப்பையும் கட் பண்ணிடுவன்னு என்னைச் சீண்டினானுங்க.

அப்போ எனக்குக் கோபம் வந்து அதெல்லாம் இல்லை கல்யாணம் முடிந்தாலும் நான் மாற மாட்டேன், வீக் எண்ட் உங்க கூடத்தான் இருப்பேன்னு சொன்னேன். அதை அவனுங்க நம்பலை. என்னை எப்படி நம்பாமல் போகலாம்னு நம்ம கல்யாணத்துக்குப் பிறகும் அவனுங்க கூடச் சுற்ற ஆரம்பித்தேன்.

இது ஆரம்பத்தில் எங்களை நம்ப வைக்கச் செய்ற, நாள் போனால் நீ மாறிடுவன்னு திரும்பச் சீண்ட, நான் மாற மாட்டேன்னு காட்டவே உன்னைத் தனிமையில் தவிக்க விட்டுட்டு அவனுங்க கூடப் போனேன்…” என்று மனம் வருந்த பேச்சை நிறுத்தினான்.

யுவஸ்ரீக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஏதோ அவன் நண்பர்களிடம் நல்ல பெயர் வாங்க என்று விளையாட்டு போலச் செய்ய, அதனால் பாதிக்கப்பட்டது தங்கள் வாழ்க்கை அல்லவா? போன காலங்கள் மீண்டும் வராதே? என்னவெல்லாம் செய்து வைத்து விட்டான் என்று கோபம் வந்தது.

ஆனால் அவனே அதற்காக வருந்திக் கொண்டிருக்கையில் தன் கோபத்தைக் காட்டி இன்னும் அவனை வருத்த மனது வரவில்லை.

“என்னோட காரணம் சின்னப்பிள்ளைத் தனமானது தான். அதை நான் உணரத்தான் எனக்கு இத்தனை மாதங்கள் ஆகியிருக்கு. இதனால் நான் என்ன சாதித்தேன்? ஒன்னுமே இல்லை. நான் கூட ஆரம்பத்தில் நினைச்சுருக்கேன். ஃபிரண்ட்ஸ் கூட இருப்பது ஜாலியான விஷயம்னு. வீட்டில் இருக்கிறவங்க கூடச் சுத்தி என்ன ஸ்பெஷல் இருக்குன்னு அசால்டா நினைச்சுருக்கேன்.

ஆனா அன்னைக்கு மகாபலிபுரமும் நாம ஃபிரண்ட்ஸ் கூடத்தான் போனோம். ஆனா அந்த நேரத்திலும் நீயும், நானும் மட்டுமே விளையாடி, சீண்டி, தீண்டி, ரசித்து விளையாடிய போது தான், நம்மைச் சேர்ந்தவங்க கூட நேரம் செலவு செய்வது எவ்வளவு இனிமையான விஷயம்னு எனக்குப் புரிந்தது.

அந்த ட்ராவலில் தான் நான் தனியா விட்டுப் போன போது உனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்னு நீ நந்தினிகிட்ட பேசும் போது தான் எனக்குப் புரிந்தது. மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருந்தது. அதோட நரேனின் பேச்சு என் தவறை எனக்கு இன்னும் சுட்டிக் காட்டியது…” என்று நிறுத்தினான்.

“என்ன பேசினாங்க?” என்று கேட்டாள்.

“வாராவாரம் நான் அவனுங்க கூடச் சுத்தி முடிச்சுட்டு கிளம்பும் போதும் இந்த வாரம் வந்துட்ட. அடுத்த வாரம் வருவியா மாட்டியான்னு பார்ப்போம்னு சவால் விடுவானுங்க. என்னால் வர முடியும்னு காட்ட நானும் அடுத்த வாரம் ஓடுவேன். அடுத்து நரேன் கல்யாணம் முடிவாச்சு.

நானும் கல்யாணம் முடிந்த பிறகும் அவனுங்க கூடச் சுத்துறேன்ல… அது போல அவனுங்களும் வர்றானுங்களான்னு பார்க்க, யாருக்குக் கல்யாணம் முடிந்தாலும் இப்படி நாம ஒன்னு சேருவது மாறக் கூடாதுன்னு சொன்னேன். அவனுங்களும் உடனே கண்டிப்பா நாங்களும் வருவோம்னு சொன்னானுங்க. சத்தியம் செய்யாத குறையா உறுதியா சொன்னானுங்க.

ஆனால் நரேன் கல்யாணம் முடிந்த பிறகு வரலை. ஏன் வரலைன்னு கேட்டதுக்கு நீ தான் முட்டாள். என்னையும் முட்டாள்னு நினைச்சியா? ஃபிரண்ட்ஷிப் எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி வரை தான். அதுக்குப் பிறகு ஃபிரண்ட்ஸ் எல்லாம் இடைவெளி விட்டுத்தான் இருக்கணும். நீ தான் அறிவு இல்லாம உன் வொய்ப்பை விட்டுட்டு வந்தால் நானும் அப்படி இருக்க முடியுமான்னு கேட்டான்.

எனக்குச் செருப்பால் அடிச்சது போல் இருந்தது. நரேன் என்னடா இப்படிப் பேசுறான்னு கேட்டால் மத்த ஃபிரண்ட்ஸும் அவன் சொல்வது சரிதான். எங்களுக்குக் கல்யாணம் முடிந்தாலும் நாங்களும் இப்படித்தான் இருப்போம்னு சொன்னானுங்க. அப்புறம் என்னை மட்டும் ஏன்டா ஒவ்வொரு வாரமும் தூண்டி விட்டீங்கன்னு கேட்டதுக்கு… நீ இப்படிச் செய்வது எங்களுக்கு வேடிக்கையா இருந்தது. அதான் உன்னைச் சீண்டி விளையாடினோம்.

நீயும் முட்டாள் மாதிரி வந்து நின்னன்னு அவனுங்க கேலி செய்து சிரித்த போது, நான் எவ்வளவு பெரிய முட்டாளா இருந்திருக்கேன்னு அப்போதான் தெரிந்தது. அது மட்டும் இல்லை வாராவாரம் குடிக்கவும், ஏதாவது காரணம் சொல்லி செலவை என் தலையில் கட்டுவானுங்க. ஆபிஸில் அப்படி யாராவது செய்ய நினைச்சா அவங்க மூக்கை உடைக்கிற மாதிரி பேசுற நான், இவனுங்க என் ஃபிரண்ட்ஸ் தானேன்னு செலவு செய்வேன்.

என்னைச் சீண்டி என் நேரத்தை பிடிங்கியதும் இல்லாமல், என் பணத்தையும் செலவு செய்ய வச்சுருக்கானுங்க. இதெல்லாம் தெரிந்ததும் எனக்கே என்னைப் பார்க்க பிடிக்கலை. என்ன மாதிரி வாழ்க்கை நான் வாழ்ந்திருக்கேன்?

என்னோட இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டது முழுக்க முழுக்க நீ தான்னு உன் பேச்சும் எனக்குப் புரிய வைத்தது. நீயும் எடுத்து சொல்லலைனா நான் இன்னும் முட்டாளாகத்தான் இருந்திருப்பேன். இந்த முட்டாளை மன்னிப்பியா யுவா?” என்று அவளின் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டான்.

எதுவாக இருந்தாலும் தலையைச் சிலுப்பி அலட்சியமாக எடுத்துக் கொள்ளும் கணவன், இப்போது மனம் வருந்தி, உள்ளுக்குள் நொந்து மன்னிப்பு கேட்கும் போது அவனின் மீதான வருத்தத்தை அவளால் இழுத்து பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை. கணவனின் கையை அழுத்திக் கொடுத்தாள்.

“நீங்க மட்டுமே தப்பு செய்யலை சூர்யா. நானும் தப்புச் செய்திருக்கேன். ஆரம்பத்திலேயே நான் உங்களுக்கு எடுத்து சொல்லியிருக்கணும். உங்க செய்கை எனக்கு வருந்த வைக்குதுன்னு உங்களுக்குப் புரிய வச்சுருக்கணும். நானும் நீங்க போனால் போகட்டும்னு விட்டிருக்கக் கூடாது…” என்றாள்.

“நீ சொல்லியிருந்தாலும் நான் கேட்டுருப்பேனா தெரியாது யுவா. எதையும் புரிந்து கொள்ளாமல் நான் முட்டாள்தனமா இருந்ததில், நீ என்னைக் கட்டுப்படுத்த நினைத்திருந்தால் இன்னும் உன்னைக் காயப்படுத்தியிருப்பேனோ என்னவோ…” என்றான் வேதனையுடன்.

இதற்கு அவளால் என்ன சொல்ல முடியும்? செய்தாலும் செய்திருப்பான் தான். ஆனாலும் அதை ஆமாம் என்று சொல்லி கணவனை வேதனைப்படுத்த விரும்பாமல் அமைதியாக இருந்தாள்.

சூர்யாவிற்குமே என்ன தான் காரணங்கள் சொன்னாலும் அவனாலேயே அவனை மன்னிக்க முடியவில்லை என்னும் போது மனைவியின் அமைதியையும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

“சரி, அதை விடுங்க. ஆனால் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்…” என்றாள்.

“சொல்லு யுவா…”

“ஆரம்பத்தில் இருந்தே உங்க ஃபிரண்ட்ஸ் மேல எனக்கு நல்ல எண்ணமே வரலை. நல்ல ஃபிரண்ட்ஸா இருந்தால் நீங்களே போயிருந்தாலும் உங்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைத்திருக்கணும். ஆனா அதை அவங்க செய்யாத போது ஒருவித உறுத்தல் அவங்க மேல எனக்கு இருந்துட்டே இருந்தது. ஆனாலும் இதனால் எல்லாம் உங்க ஃபிரண்ட்ஷிப்பை மொத்தமா வெட்டிக்கிடணும்னு சொல்ல மாட்டேன். ஆனாலும் பழக்கத்தில் ஒரு லிமிட் வச்சுக்கோங்க…” என்றாள்.

சொல்லும் போதே அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ என்ற தயக்கம் இருந்தது. ஆனால் அதற்காக அவளால் சொல்லாமல் இருக்க முடியவில்லை என்பதால் சொல்லி விட்டாள்.

அவள் சொன்னதும் மறுப்பாகத் தலையை அசைத்தான் சூர்யா.

‘என்ன நான் சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியவில்லையா?’ என்பது போல் கணவனைப் பார்த்தாள்.

“இல்லை யுவா. லிமிட் மட்டும் வச்சுக்கிட்டு பழகும் ஃபிரண்ட்ஸ் அவங்க இல்லைன்னு எனக்குப் பாடம் சொல்லி கொடுத்திருக்காங்க. தப்பு செய்தது நான் தான் என்றாலும் இனியும் அந்தத் தப்பை செய்ய எனக்கு விருப்பமில்லை. அவங்க சீண்டும் போது கூட அவங்க என் ஃபிரண்ட்ஸ்னு நான் உண்மையாகத்தான் இருந்தேன்.

ஆனா அவங்க என்னை வித்தை காட்டும் ஜந்து போல நினைச்சுருக்காங்க. அவங்க கூட இன்னும் நான் நட்பு வச்சுக்கிட்டால் என்னை விட முட்டாள் யாரும் இந்த உலகத்திலேயே இருக்க மாட்டாங்க. இப்ப கூட என் ஃபிரண்ட்ஷிப்பை விட முடியாமல் எனக்குக் கால் பண்ணிருப்பான்னு நினைச்சியா?

வீட்டில் இருப்பதால் பொழுது போயிருக்காது. என்னை வச்சு வேற ஏதாவது புது விளையாட்டு விளையாடலாம்னு நினைச்சிருப்பானுங்க. முட்டாளா நான் இருந்த வரைக்கும் போதும். ஆனால் ஒன்னு யார்கிட்ட ஃபிரண்ட்ஷிப் வைத்துக் கொள்ளணும், யார்கிட்ட கவனமா இருக்கணும்னு எனக்குப் பாடம் கத்துக் கொடுத்துருக்கானுங்க. அதுக்கு அவனுங்களுக்குத்தான் நன்றி சொல்லியாகணும்…” என்றான்.

யுவஸ்ரீக்கு மனது கஷ்டமாக இருந்தது. மனதால் அடிபட்டுப் பாடம் கற்றுக் கொண்ட கணவனைக் கண்டு இரக்கமாக இருந்தது.

அவனின் தோளை சுற்றி கையைப் போட்டு ஆதரவாக அழுத்திக் கொண்டாள்.

மனைவியை அப்படியே அணைத்துக் கொள்ளத் தோன்றியது சூர்யாவிற்கு.

ஆனால் அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று தயக்கமாக இருக்க, தன் கைகளுக்குக் கட்டுப்பாடு போட்டுக் கொண்டான்.

சூர்யா மாறிவிட்டான் தான். மனைவியிடமும் இப்போதெல்லாம் நன்றாகவே நடந்து கொள்கிறான். ஆனாலும் அதற்கு மேல் மனைவியிடம் அவனால் ஒன்ற முடியவில்லை. அவள் சொன்ன வார்த்தை நெருஞ்சி முள்ளாக உள்ளுக்குள் இருந்து அழுத்திக் கொண்டிருக்க, கணவனாகத் தோன்றும் ஆசைகளை எல்லாம் தனக்குள்ளேயே பொதித்து வைத்துக் கொண்டான்.

அவனின் அந்தத் தவிப்பை பற்றி அறிந்தும், அறியாமல் போனாள் யுவஸ்ரீ.