25 – ஞாபகம் முழுவதும் நீயே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம்- 25
பவ்யா சிறுவயதில் தான் அனுபவித்த துயரத்தை வினய்யிடம் சொல்லிக் கொண்டே வந்தவள் மேலும் சொல்ல முடியாமல் அழ ஆரம்பிக்க, வினய் வார்த்தையால் அவளுக்குச் சமாதானம் சொல்ல முடியாமல் இறுக்கமாக அணைத்து, மனைவியின் வேதனையைக் குறைக்க முயன்றான்.
எத்தனை அழுதாலும் அவளின் வேதனை மட்டும் குறைய வில்லைத் தான். ஆனால் தன் மன பாரத்தைக் கணவனிடம் பகிர வேண்டும் என்ற எண்ணத்தில் கன்னத்தைத் துடைத்துக் கொண்டாள்.
“நான் பார்த்துட்டேன்… இனி மறைச்சு என்ன பண்ணனு நினைச்சுருப்பார் போல, அதுக்குப் பிறகு அடிக்கடி வீட்டுக்கு நான் இருக்குற நேரமும் பொண்ணைக் கூட்டிட்டு வர ஆரம்பிச்சார்.
தட்டிக் கேட்ட அம்மாவை அடிச்சு உதைச்சார். சில நேரம் எனக்கும் அடி விழுந்துச்சு. வீட்டுக்கு தேவையான காசு தர்றது தான் அவர் அந்த வீட்டுக்கு செய்தது.
ஒருவேளை தன் விஷயத்தை வெளியே சொன்னா உன் பொண்ணை வித்துட்டு இந்த ஊருக்கு வந்து கெட்டு போய்ட்டானு நானே ஊரில் இருக்குற சொந்தகாரங்ககிட்ட சொல்லி நாடகம் போடுவேன்னு அம்மா வாய்யை அடைச்சு வச்சிருந்தார்” என்று சொல்லவும்,
“என்ன உன்னை அப்படிச் செய்வேன்னு சொன்னாரா?” என்று கர்ஜனையுடன் கேட்டான்.
“ஹ்ம்ம்…! என்கிட்டயே ஒரு முறை சொன்னார். எங்க அப்பா இப்படி எல்லாம் பண்ணினார்னு வெளியே யார்கிட்டயாவது சொன்னா உன்னை ஒரு இடத்துலயும், உங்க அம்மாவை ஒரு இடத்துலயும் வித்துருவேன். இரண்டு பேருமே நல்ல விலைக்குப் போவீங்கனு சொல்லவும், அவர் சொன்னதுக்கு முழு அர்த்தம் அப்ப எனக்குத் தெரியலை.
ஆனா அம்மாவையும், என்னையும் தனித் தனியா எங்கோ அனுப்பிருவார்னு புரியவும் நான் யார்கிட்டயும் எங்க அப்பா பத்தி சொல்லலை” என்று சொல்லி முடிக்கும் போது வினய்யின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.
“உங்க அப்பா மட்டும் உயிரோடு இருந்திருந்தா என் கையாலேயே கொன்னு போட்டுருப்பேன்” என்று பல்லை கடித்துக்கொண்டு சொன்னான்.
கணவனின் கோபம் கூட மனைவியவளுக்கு இப்போது இனித்தது. அவனின் கோபம் தனக்காக அல்லவா? கணவனின் முகத்தையே ஆசையாகப் பார்த்தாள்.
அவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே “அதை எங்க அம்மாவே செய்துட்டாங்க” என்றாள்.
“என்னடா…? என்ன சொல்ற…?” என்று வினய் அதிர்ந்து கேட்க…
“ஆமா நாளுக்கு நாள் வீட்டில் அசிங்கமா எங்க கண்ணு முன்னாடி நடந்துகிட்டு ஒரு நாள் அதை எங்களைப் பார்க்க வேற சொன்னார்” என்று சகிக்க முடியாத வேதனையுடன் சொன்னாள்.
“என்ன…?” என்று வினய் இன்னும் அதிர்ந்து போனான்.
“ஹ்ம்ம்…! அன்னைக்கு அப்படிச் சொல்லவும், என் அம்மா கத்தியை எடுத்துட்டு வந்து அவர் அசந்த நேரம் குத்தி கொன்னுட்டாங்க. அந்தப் பொண்ணையும் கொல்ல போனாங்க. ஆனா அதுக்குள்ள அவ தப்பிச்சுப் போய்ட்டா.
என் அப்பாகிற அரக்கனை கொன்ன அம்மா போலீஸ்கிட்ட உதவி கேட்டு எப்படியாவது மாமாகிட்ட போய்ருனு சொல்லிக்கிட்டே அவங்களை அவங்களே குத்திகிட்டு என் கண்ணு முன்னாலேயே என்னை விட்டு போய்ட்டாங்க….” சொல்லிவிட்டு தாயை இழந்த தவிப்பில் கதறி அழ ஆரம்பித்தாள்.
அதில் இருந்து அவள் மீண்டு வர இப்போது வெகு நேரம் ஆனது. வினய் சமாதானம் கூட இப்போது எடுபடவில்லை.
பின்பு மெல்ல மீண்டு வந்தவள் “அதுக்குப் பிறகு போலீஸ்க்கு தகவல் சொல்லி அவங்க மூலமா என் மாமாக்கு தொடர்பு பண்ணி அவர் இங்க வர்ற வரை போலீஸ் காப்பகத்தில் தான் தனியா இருந்தேன். மாமா வர்ற வரை அங்க யார்க்கிடையும் பேசாம தனியா தவிச்சு வெறுமையா தான் போச்சு அந்த நாட்கள்.
போலீஸ் கேஸ்ஸை சரி பண்ணி, அம்மாவை அங்கயே அடக்கம் பண்ணிட்டு மாமா என்னை இந்தியா கூட்டிட்டு வந்தார். இங்க வந்து கேட்ட சொந்தகாரங்ககிட்ட எல்லாம் அங்கே விபத்துல அப்பாவும், அம்மாவும் இறந்துட்டதா சொல்லி சமாளிச்சார்.
அதுக்குப் பிறகு அந்தச் சம்பவத்தில் இருந்து நான் மீண்டு வரவே பலநாள் ஆகிருச்சு. அதுக்குப் பிறகு மாமா குடும்பம் தான் எனக்கு எல்லாம். அவங்க கூட இருந்தும் எனக்கு அம்மாவை அப்படித் தேடும். அவங்க இல்லாம போய்ட்டாங்களேனு பல நாள் தனிமையில் அழுதுருக்கேன். ஆனா மாமா, அத்தைக்குத் தெரிஞ்சா வருத்தப்படுவாங்கனு அவங்ககிட்ட காட்டிக்க மாட்டேன். அவங்க என்னையும் பொண்ணாத்தான் பார்த்துக்கிட்டாங்க. ஆனா அம்மா எப்பவும் தனித் தானே…?
அதான் அம்மாவை தேடி தவிப்பேன். அதை அவங்களே ஒரு நாள் புரிஞ்சுக்கிட்டு அப்புறம் என்னைச் சும்மா கூடத் தனிமையில் விட மாட்டாங்க. மைத்ரி எப்பவும் என் கூட இருப்பா. அதுக்குப் பிறகு தான் நான் கொஞ்சம் சூழ்நிலைக்கு ஏற்றார் போல என்னை மாத்திக்கப் பழகிகிட்டேன்” என்று அவளைப் பற்றியும், அவள் குடும்பத்தைப் பற்றியும் சொல்லி முடித்தாள்.
“கேட்கவே கஷ்டமா இருக்கு பவிமா…” என்று வினய் தன் வருத்தத்தைச் சொல்ல,
“ஹ்ம்ம்…! அதான் பாரின் போய் நான் பார்த்தெல்லாம் போதும்னு ஒரு வெறுப்பு வர ஆரம்பிச்சுருச்சு. அப்படி ஒரு வெறுப்பு இருக்குறவளை நீங்களும் அங்கே வானு கூப்பிடவும் நான் வர முடியாதுன்னு பிடிவாதம் பிடிச்சேன்.
அதுக்குப் பிறகு எனக்கும் வீம்பு தான். நீங்களே இங்க வாங்க. நான் அங்க வர மாட்டேன்னு வீம்பு பிடிச்சுதான் என் வாழ்க்கையை நானே பாழாக்கிட்டேன்” என்றாள்.
“இல்லடா… நான் தான் எல்லாத்துக்கும் காரணம். சாரிடா…! நீ இத்தனை வலி அனுபவிச்சது தெரியாம… நீ முன்னாடி என்னை ஊருக்குப் போகக் கூடாதுனு சண்டை போட்ட சமயத்தில் நைட் கனவு கண்டு அழுதப்ப அதைப் பொய்ன்னு நினைச்சு ரொம்பக் கோபப்பட்டுட்டேன். அதுக்கு உன்கிட்ட எத்தனை ஸாரி கேட்டாலும் என் அந்தத் தவறு சரியாகாது. இருந்தாலும் செய்த தப்புக்கு என்னால வெறும் ஸாரி தானே கேட்க முடியுது. மன்னிச்சுருடா…. தயவு செய்து மன்னிச்சுரு…” என்று விடாமல் திரும்பத் திரும்ப மன்னிப்பு கேட்டவனின் வாயை தன் விரல் கொண்டு மூடினாள்.
“போதும் வினு…! தெரியாம தானே செய்தீங்க. முடிஞ்சு போனதை பேசி ஏன் உங்களை நீங்களே வருத்திக்கிறீங்க?” என்றாள் சமாதானமாக.
“இல்லடா பவி…! அன்னைக்கு உன்னை, உன் கண்ணீரை நம்பி நான் என்னனு கேட்டுருந்தா நாலு வருஷம் நமக்குள்ள பிரிவே வந்திருக்காது. அப்பயே உனக்காக இங்கயே இருக்க முடிவெடுத்துருப்பேன். எல்லாம் என்னால்… என் குணத்தால்… ரொம்பக் குற்றவுணர்வா இருக்குப் பவி” என்று வினய் தன்னை மேலும் மேலும் வருத்தி கொண்டான்.
“குற்றயுணர்வு வேண்டாம் வினு. நமக்குனு ஆண்டவன் எழுதி வச்ச சில விஷயங்களை நாம மாத்த முடியாது. நாம பிரிந்து இருக்கணும்னு இருக்கு. அது நடந்துருச்சு. முடிந்து போனதை இப்படி நடந்தா மாத்திருப்பேன். அப்படி நடந்தா மாத்திருப்பேன்னு சொல்ல நாம கடவுள் இல்ல. கடவுள் ஆட்டி வைக்கிற குழந்தைகள் தானே நாம. நாமே நினைச்சாலும், நடக்கணும்னு இருக்குற சில விஷயங்களைத் தடுக்கவே முடியாது. நம்ம வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கணும்னு இருந்ததால் நடந்துருச்சு. அதோட விட்டுருங்க. இனியாவது ஒவ்வொரு விஷயத்திலும் கவனமா இருப்போம்” என்று வெகுவாகப் பேசி கணவனைச் சமாதானம் செய்தாள் பவ்யா.
“சரிடா… இனி அதைப் பேசலை. நீ சொன்ன போல இனி நல்லபடியா வாழ்க்கையை அமைச்சுக்க முயற்சி பண்ணுவோம்” என்றவன் மனைவியிடம் மேலும் சில விஷயங்கள் அறிந்து கொள்ள “ஆனா அப்படி இருந்த உன்னோட வெறுப்பையும் மீறி நீ என்கிட்ட வர முடிவெடுத்து விசா வரைக்கும் போய்ட்டியேடா?” என்று கேட்டான் வினய்.
“அது… உங்க அளவுக்கு உங்க மேல எனக்குக் கோபம் எதுவும் இல்லையே? நீங்க இங்க வந்திரணும்னு எதிர்ப்பார்ப்பு மட்டும் தான் இருந்துச்சு. தினமும் உங்க போட்டோ பார்த்துப் பேசிப்பேன்.
இந்த வீட்டில் நீங்களும், நானும் அந்நியோன்யமா வாழ்ந்த காலத்தை நினைச்சுட்டே நாளை ஓட்டிட்டேன். கவின் பிறந்த பிறகு அவன் முகத்தைப் பார்த்தே என் நாள் போச்சு. அவனை வீடியோ எடுத்து அனுப்பும் போதெல்லாம் அதைப் பார்த்துட்டு மகன் பாசமாவது உங்களை இழுத்துட்டு வரட்டும்னு நினைப்பேன்.
அவன் முகம் பார்க்க ஆரம்பிச்சதுமே உங்க போட்டோவை காட்டி அப்பானு சொல்லிக் கொடுப்பேன். காலையில் வணக்கம் சொல்றதில் இருந்து நைட் குட்நைட் சொல்ற வரை ஏதாவது வழியில் நீங்களும் அவனுக்கு முக்கியம்கிறது போலப் பார்த்துக்கிட்டேன்” அவள் இதைச் சொல்லும் போது அவள் பேச்சில் வினய் குறுக்கிட்டு,
“அப்படி வளர்த்ததுக்கு உனக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்டா பவி. அதனால தானே அவன் என்னைப் பார்த்ததும் ஏத்துக்கிட்டான்…” என்று மனம் நெகிழ சொன்னான்.
“அது என்னோட கடமை வினு. நாம திரும்ப ஒன்னு சேரும் போது நம்ம பிள்ளை தடுமாறிட கூடாது இல்லையா? என் கடமையைத் தான் செய்தேன்”
“அது உன்னோட பெருந்தன்மைடா பவி…”
“சரி… சரி… எனக்குப் பாராட்டு எல்லாம் போதும்” என்று கேலி போலச் சொல்லி அவனின் நன்றி நவிழ்லை நிறுத்தினாள்.
மனைவியின் கேலிக்கு பரிசாக அவள் கன்னத்தையும், இதழ்களையும் சில நொடிகள் பதம் பார்த்தான்.
கணவனிடம் இருந்து ஒரு வழியாக மீண்டு, மீண்டும் பேச்சை தொடர்ந்தாள்.
“அதுக்குப் பிறகு நவிதா வாழாவெட்டினு சொன்ன அன்னைக்கு உங்களை என் மனசு ரொம்பத் தேடுச்சு. நீங்க என் பக்கத்தில் இருந்திருந்தா இந்தப் பேச்சை எல்லாம் நான் கேட்க வேண்டியது இல்லையேனு நினைச்சு அழுதேன்.
இன்னும் என்னைத் தலை கீழா புரட்டி போட்டது தான் கிரண் என்கிட்ட நடந்துகிட்ட விதம்” சொல்லி நிறுத்தியவள் முகம் கசங்கி இருந்தது.
கிரண் பேரை கேட்டதும் வினய்யின் முகமும் கடுமையாக இறுகி போனது.
“சிஸ்டர்… சிஸ்டர்னு பேசிட்டு அவன் நடத்துக்கிட்ட விதம் என்னை ரொம்பவே பாதிச்சிருச்சு. அன்னைக்கு உங்க நினைவுதான் எனக்கு அதிகம் இருந்தது. நாம சேர்ந்து வாழ்ந்திருந்தா இப்படிக் கண்ட நாயும் வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்குமானு நினைச்சேன்.
ஏற்கனவே கவின் வேற வர, வர உங்களை ரொம்பத் தேடினான். அப்பயே என் தேவையில்லாத வீம்புனால பிள்ளையை ரொம்பக் கஷ்டப்படுத்துறேனோன்னு உறுத்திட்டே இருந்தது.
அதோடு சேர்ந்து நான் மானத்துக்குப் போராடி தப்பிச்சதும், என் பயம், வீம்பு எல்லாம் பின்னால போய் உங்ககிட்ட வந்துட்டா போதும் எல்லாம் சரியாகிரும்னு ஒரு எண்ணம் மனசில் விழவும் என் மனசு மாறுவதுக்குள்ள கிளம்பிருவோம்னு தான் விசாக்கு ஏற்பாடு செய்தேன்” என்று முடித்தவள் ஏதோ யோசித்தபடி,
“ஆனா இப்போ நீங்க சொன்ன உங்க காதலையும், நான் சொன்ன காதலையும் சேர்த்து பார்த்தா, என்னை விட நீங்க தான் என்னை ரொம்ப லவ் பண்றீங்கன்னு தெரியுது. நான் ஏதோ கடமைக்காக உங்க கிட்ட வர முடிவெடுத்த மாதிரி எனக்குத் தோணுது” என்று வருத்தமாகச் சொன்னாள்.
அவள் வருத்தத்தைப் பார்த்து “அப்படியெல்லாம் இல்லடா…” என்று வினய் சொல்லியும், பவ்யாவின் முகம் தெளியவே இல்லை.
அதைத் தெளிய வைக்கும் பொருட்டு, “பவிமா… ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டயே?” என்று தயங்கி, தயங்கி கேட்டான்.
அவன் தயக்கத்தைப் பார்த்து “என்ன வினு…?” என்று புருவம் சுருங்க யோசனையாகக் கேட்டாள்.
சில நொடிகள் தயங்கியவன் “இல்ல உன்னோட அப்பா பாரின் போய்ப் பொண்ணுங்க கூடப் பழக்கம் வச்சுக்கிட்டார்ல, அதே போல உன்னை விட்டுத் தனியா போன நானும் அப்படி வழி மாறி போய்ருவேன்னு உனக்குப் பயமா இல்லையா?” என்று கேட்டான்.
“இல்லை…” என்று உடனே சட்டெனப் பதில் சொன்னாள் பவ்யா.
“என்ன இல்லையா…?” என்று வினய் ஆச்சரியமாகக் கேட்க, “கண்டிப்பா இல்லை…” என்று மீண்டும் அழுத்தி சொன்னாள்.
“இப்போ நான் சொல்றதை நான் சந்தேகப்பட்டேன்கிற பார்வையில் பார்க்காம சூடு பட்ட பூனையின் மன நிலையா என்னை எடுத்துக்கோங்க. ப்ளீஸ்…” என்று இறைஞ்சுதலாகக் கோரிக்கை வைத்தாள்.
“ம்ம்…! சொல்லு பவி…. நான் ஒன்னும் நினைக்க மாட்டேன்” என்று வினய் அவள் பேச ஊக்கம் கொடுத்தான்.
“உங்களை முதல் முதலா பார்த்ததில் இருந்து உங்ககிட்ட ஒரு விஷயம் நோட் பண்ணிட்டே இருந்தேன்” என்று சொல்லி நிறுத்தினாள்.
‘என்ன?’ என்பது போல வினய் கேள்வியாகப் பார்த்தான்.
கொஞ்சம் தயங்கி கொண்டே “உங்க கண்ணு அலைபாயுதான்னு நோட் பண்ணினேன். அதாவது என் அப்பாவோட சுயரூபம் தெரிஞ்சப்ப அவர்கிட்ட நான் கண்ட ஒரு பழக்கம் பொண்ணுங்களை ஒரு மாதிரி தப்பாவே பார்ப்பார்.
அதை அவர் கிட்ட நான் ஒற்றுதலா இருந்தப்பவே பார்த்திருக்கேன். ஆனா அந்த அளவு அப்ப விவரம் தெரியாததுனால அது தப்பான பார்வைனு என்னால கண்டு பிடிக்க முடியலை. ஆனா அவர் குணம் தெரிஞ்சதும் அந்தப் பார்வைக்கு அர்த்தம் பின்னாளில் புரிஞ்சது.
அதுக்குப் பிறகு படிக்கிற இடத்துலயும் சரி. வேலை பார்த்த இடத்துலயும் சரி… ஆண்களைக் கண்டா அவங்க கண்ணு மேயுதானு தான் பார்ப்பேன். அப்படிப்பட்ட ஆளுங்களை இனம் கண்டு அவங்க கண்ணில் கூடப் படாமல் விலகி போய்ருவேன்.
உங்ககிட்டயும் அதை நான் நோட் பண்ணினேன். உங்க பார்வை ஒரு நாள் கூட யாரையும் தப்பா பார்த்தது இல்லை. நாம இந்த வீட்டில் சந்தோஷமா இருந்தப்ப எத்தனை நாள் என்னை வெளியே கூட்டிட்டு போனீங்க…? ஒரு நாள்… ஒரு பொழுது கூட உங்க பார்வை மாறலை.
அது மட்டும் இல்லாம உங்க மேலே ஏதோ ஒரு நம்பிக்கையும் மனசுல பதிஞ்சு போயிருந்தது. நீங்க தப்பு பண்ண மாட்டீங்க. நான் மட்டும் தான் உங்க சொத்து…. ” என்று பேசிக் கொண்டிருந்தவளை பேச விடாமல் அவளின் இதழ்களைப் பூட்டியிருந்தான் தன் அதரங்கள் என்னும் சாவியால்.
கணவனின் இந்த அதிரடியில் பவ்யா விழிகளை விரித்து அதிர்ந்து பார்க்க, மனைவியின் கண்களைக் காதல் பொங்க பார்த்துக் கொண்டே தன் இணையின் சுவையறிந்து கொண்டிருந்தான் வினய்
தொடர்ந்து கணவனின் கண்களைச் சந்திக்க முடியாமல் விழிகளை இறுக மூடிக் கொண்டாள்.
தனக்குள்ளேயே மனைவியைப் பொதித்துக் கொள்பவன் போல இறுகி அணைத்தபடி மீண்டும், மீண்டும் அவள் முகத்திலும், இதழிலும் முத்த யுத்தம் நடத்தினான்.
மனைவியின் வார்த்தைகள் வினய்யை பித்தனாக்கி இருந்தது.
தந்தையின் செய்கையால் பாதிக்கப் பட்டும், அதே குணம் கணவனையும் தொற்றிக் கொள்ளுமோ என்று எந்தப் பயமும் இல்லாது முழுமையாகத் தன்னை நம்பிய மனைவியை இன்னும், இன்னும் முத்தத்தால் மூழ்கடிக்கத் தோன்றியது.
யாரும், யாரையும் நம்ப முடியாத உலகச் சூழலில் வெறும் ஒரு மாதம் வாழ்ந்து விட்டு, விட்டுச்சென்ற கணவன் மீது கொண்ட பவ்யாவின் நம்பிக்கை என்னும் காதலுக்கு முன்னால் தன் காதல் ஒன்றுமே இல்லை என்று தான் வினய்க்கு தோன்றியது.
மனைவியின் நம்பிக்கையை விட வேறு என்ன அவன் பெரிதாக அடைந்து விட முடியும்?
இதழ்களால் சண்டை இட்டுயிட்டு விட்டு வெகு நேரம் கழித்தே பவ்யாவை விட்டான் வினய். ஆனாலும் முழுமையாக விடாது தன் கைகளுக்குள் பொக்கிஷத்தை பாதுகாப்பது போலத் தன்னுடன் பொதித்து வைத்துக் கொண்டான்.
கணவனின் கைகளுக்குள் வாகாகப் பொருந்தி இருந்த பவ்யா “ஏன் இப்படி…?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னால என்ன சொன்ன பவிமா…? உன் காதல் என்னோடதை விடக் கம்மியா இருக்குனு தானே? ஆனா உன்னோட நம்பிக்கைக்கு முன்னால என் காதல் ஒரு பொருட்டே இல்லைடா!
வாழ்க்கையில் உன் அப்பாவால் வலிக்க, வலிக்க வலி அனுபவிச்சும், என்னை நீ நம்பினதே உன் காதலால் தான் சாத்தியம் ஆகிருக்குடா. அதனால என் காதல் கம்மி அது, இதுனு புலம்பாதே…!” மனைவியின் காதலில் பெருமை கொண்டவனாகச் சொன்னான்.
“இந்த நம்பிக்கை எப்படி வந்துச்சுடா…?” என்று வினய் கேட்க…
“ஹ்ம்ம்…! இதுக்கு எப்படிப் பதில் சொல்லன்னு தெரியலை வினு! சில விஷயங்களுக்கு விளக்கம் சொல்ல முடியாது. ஒருவேளை உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சதால கூட நம்பிக்கை வந்திருக்கலாம். எனக்குச் சரியா சொல்ல தெரியலையே!” என்று சொல்லி உதட்டை பிதுக்கினாள்.
அந்த உதட்டை பிடித்து இழுந்த வினய் அதில் மீண்டும் சில நொடிகள் முற்றுகை இட்டான்.
சிறிது நேரம் கழித்து விலகி அமர்ந்திருந்த இருவரும் தங்கள் மனதில் இருந்ததைப் பேசிக் கொண்டிருந்தனர்.
“ஆனா வினு… கண்ணைப் பார்த்து விலகின நான் கிரண் கண்ணைப் பார்த்து ஏமாந்தும் போனேன். அவன்கிட்டையும் தப்பு இருக்கானு தேடினப்ப அத்தனை உத்தமனா காட்டிக்கிட்டான். அவன் கண்ணில் கூடக் கல்மிஷம் காட்டலை.
அவன் குணம் தெரிஞ்ச பிறகு தான் புரிஞ்சது மனசுக்குள்ளே வக்கிர குணத்தை வச்சுக்கிட்டு வெளியே நல்லவங்க வேஷம் போடுறவங்களும் உலகத்தில் இருக்காங்கனு” என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு சிறிது நேரம் மௌனமாக இருந்த வினய் பின்பு மெல்ல “ஆனா என்னால தானே அப்படி ஒரு சூழ்நிலையில் நீ மாட்டிக்க வேண்டியதாகிருச்சு. கட்டின மனைவியைக் கூடப் பாதுகாக்க முடியாத் பேடி ஆகிட்டேன்” என்று வேதனையுடன் சொன்னவன்,
“இப்போ அந்தக் கிரண் என்ன ஆனான்னு உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.
“இல்லை தெரியலை. அன்னைக்கு அந்தப் போலீஸ் ஆபிசர் இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே மறந்துடுங்க. இனி எந்தக் கவலையும் வேண்டாம்னு சொல்லிட்டுப் போனார். அப்புறம் ஒரு வாரத்துக்குப் பிறகு பக்கத்துப் பிளாட்டை காலி பண்ணிட்டு போறாங்க. அந்தக் கிரணுக்கு ஏதோ ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சு.
அதனால் சொந்த ஊருக்கே போய்ட போறார்னு சொல்லி ஒரு ஆள் வந்து திங்க்சை எடுத்துட்டுப் போறதா பக்கத்து வீட்டு ஆன்ட்டி சொன்னாங்க. அது மட்டும் தான் அவனைப் பத்தி என் காதுக்கு வந்த கடைசி நியூஸ்” என்றாள்.
“ஓ…! அந்தப் போலீஸ்காரர் வேலையா இருக்குமோ…?” என்று வினய் கேட்க…
“ம்ம்…! அவர் வேலையா தான் இருக்கும். ஒரே நாள்ல பிரச்சனையைத் தீர்த்து வச்சுட்டார். அவரோட அம்மாவும் நல்ல மாதிரியா இருந்தாங்க” என்று அவர்கள் அன்று செய்த உதவியைச் சொன்னாள்.
“அந்தப் போலீஸ் மேன் நம்பர் கொடு பவி. ஒரு நாள் போன் செய்து என் நன்றியை சொல்லணும்” என்றவன் தொடர்ந்து,
“என்னோட பார்வை பொண்ணுங்களைத் தப்பா பார்க்குறது இல்லைனு சொன்னல பவி? அதுக்கு நீ உன் மாமியாருக்கு தான் நன்றி சொல்லணும்” என்று வினய் சொல்ல,
“ஓ…!” என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.
“ம்ம்… யெஸ்…! அம்மா தான் காரணம். என்னோட சின்ன வயசில் இருந்தே அம்மா பொண்ணுங்களை எப்படிப் பார்க்கணும். ஏன் தப்பா பார்க்க கூடாதுனு எல்லாம் சொல்லிக் கொடுத்துருக்காங்க.
நான் அம்மா, அப்பா இரண்டு பேருக்கும் செல்லம்னாலும், அம்மா எனக்கு ஒரு பிரண்டா இருந்து இது போல விஷயங்களைச் சொல்லி பொண்ணுங்களை நான் கண்ணியமா பார்க்க பழக்கினாங்க.
அதோட நான் பாரின் போகச் சம்மதம் சொன்னவங்க என்கிட்ட கேட்ட ஒரே ஒரு வேண்டுகோள் என்ன தெரியுமா?” என்று பேச்சை நிறுத்தினான்.
தன் மாமியாரை பற்றிப் பெருமையாக நினைத்தபடி வினய்யின் பேச்சை கேட்டுக் கொண்டு வந்தவள் அவன் நிறுத்தவும் “என்ன…?” என்று கேட்டாள்.
“அங்கே உள்ள கலாச்சாரம் வேற… இங்கே உள்ள கலாச்சாரம் வேற… எப்பயும் நம்ம கலாச்சாரத்தை மறந்திறாம பொண்ணுங்க விஷயத்தில் தடுமாறாம இருந்துக்கோ. அது தான் இந்த அம்மாவோட வளர்ப்புக்கு மரியாதை. இதை மட்டும் எப்பவும் ஞாபகம் வச்சுட்டுப் படிக்கப் போனு சொல்லித்தான் என்னை அங்கே அனுப்ப சம்மதிச்சாங்க.
“அம்மா அப்படிச் சொன்ன பிறகு இன்னும் நான் கன்ரோலா இருக்கப் பழகிட்டேன். ஆனா இந்த மது பழக்கம் தான் உன்னை மறக்க முடியாம கோபத்தில் கட்டுபாடு இழந்து அந்தப் பழக்கத்தைப் பழகிட்டேன்” என்று வருத்தப்பட்டான்.
“என் மாமியார் கிரேட் வினு…” என்ற பவ்யா “ஆனா குடி பழக்கத்திலேயும் நீங்க தடம் மாறாம இருந்ததுக்கும் என் மாமியார் வளர்ப்பு தான் காராணமா இருக்கும். அதுவும் குடிச்சா கூட ஸ்டெடியா பொண்டாட்டி கூட மட்டும் தான் டூயட் பாடுறீங்க” என்று சொன்ன பவ்யாவின் குரலில் கேலியுடன் கூடிய பெருமை தெரிந்தது.
“என்ன பவி…? என்ன டூயட்…?” என்று அவள் கேலி புரியாமல் வினய் கேட்க…
நேற்று இரவு குடித்துவிட்டுத் தன்னிடம் பேசுவதைப் போல உளறினதை சொல்லும் போதே அவன் உளறின சில விஷயங்களைச் சொல்ல முடியாமல் வெட்கம் வந்து விட வார்த்தையை மென்று முழுங்கினாள்.
அதைக் கண்டு “என்னடா பவி இப்படி வெட்கம்…? அப்படி என்ன உளறினேன்…?” என்று அப்பாவியாகக் கேட்டான்.
“ஐயோ…! அதை எல்லாம் நான் எப்படிச் சொல்ல…?” என்று பவ்யா இன்னும் கூச்சப்பட,
“நீ இப்ப சொல்லி தான் ஆகணும்” என்று வேண்டும் என்றே பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தான்.
“ச்சு… போங்க வினு… அதெல்லாம் சொல்ல முடியாது. ஆனா உங்க புலம்பலை கேட்டு நான் என்ன நினைச்சேன்னு வேணும்னா சொல்றேன்” என்று தயக்கத்துடன் “கனவுலேயே பிள்ளை வரை போய்ருவீங்களோனு நினைச்சேன்” என்று சொல்லி விட்டு வெட்கம் தாளாமல் அவனின் மார்பிலேயே முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
மனைவியின் பதிலில் வினய்கே கூச்சம் வந்து விடத் தலையை அழுந்த கோதிக் கொண்டவன் “அப்படியா உளறினேன்? உன் கூடக் கனவு கண்டேன்னுல இத்தனை நாளும் நினைச்சுட்டு இருந்தேன். வாய் விட்டே உளறினேன்னு இப்ப நீ சொல்லி தான் தெரியுது” என்றான்.
சிறிது நேரம் அதைப் பற்றிக் கேலியாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு, “ஆனா வினு அது என்ன குடிச்சுட்டு என்னைப் பேபினு கூப்பிட்டீங்க? இதோ இவ்வளவு நேரம் பேசியிருக்கோம். ஆனா பவி தவிர வேற வரலை. ஆனா குடிச்சுட்டு வார்த்தைக்கு வார்த்தை பேபி வந்துச்சு” என்று கேட்டாள்.
“நீ சொன்னதே தான்டா. இப்பயே எத்தனை பவி சொல்லிருக்கேன். பவின்னு சொன்னாலே அப்படியே உன்னில் கரைந்து போறது போல அப்படி ஒரு உணர்வுடா. நமக்குக் கல்யாணம் பேசின சமயத்திலேயே என் பவி. என் பவினு சொல்லி பார்த்துப்பேன். அவ்வளவு பிடிக்கும் உன்னையும் உன் பெயரும். ஆனா தனியா இருக்கும் போது நான் உருகி கரையுற பேரான பவியைக் கோபத்தோடு சொல்லிக்க ஏனோ விருப்பம் இல்லை.
ஆனா அந்தக் குடியிலயும் பவினு சொல்லிருந்தா எங்க என் பிடிவாதம் தளர்ந்து போய்ருமோன்னு ஒரு எண்ணம். சோ… ஏதோ பெயர் இருக்கட்டும்னு பேபி சொல்லிருப்பேன். நேத்துக் குடிச்சதனால் பழக்க தோஷத்தில் தன்னால் பேபின்னு சொல்லிருப்பேன்” என்று நீளமாக விளக்கம் கொடுத்தான்.
தன் பெயர் கூட அவனின் பிடிவாதத்தைத் தளர்த்தும் என்று கணவன் சொன்னது பவ்யாவிற்கு ஒரு வித நிறைவை தந்தது. அவனின் வெளிநாட்டு ஆசை நிறைவேற கோபத்தை இழுத்து பிடித்து வைத்திருந்திருக்கின்றானே தவிரத் தன் மேல் வெறுப்புக் கொண்டு இல்லை என்ற எண்ணம் மனைவியவளை குளிர வைத்தது.
“ஆனா பவி… நான் தூக்கத்தில் உன்கிட்ட அந்நியோன்யமா இருந்தது போல நினைச்சுது வெறும் உடல் இச்சை போல இருக்காடா?” என்று தயங்கி கொண்டே கேட்டான்.
ஏனோ மனைவி தான் தூக்கத்தில் பேசியதை சொல்லிய பிறகு அவனுக்கே மனது ஒரு உறுத்தலாக இருந்தது. ஒருவேளை தான் உடல் தேவையை மட்டும் பெரிதாக வெளிப்படுத்திவிட்டாற் போல அவன் மனதை குறுகுறுக்க வைத்தது. அதனால் தான் கேட்டுவிட்டான்.
கணவன் தயங்கி கொண்டே கேட்க, மனைவியோ பட்டென “அப்படியில்லை வினு…” என்று பதிலளித்தாள்.
தன் பவி அதைத் தவறாக எடுத்திருப்பாளோ என்று நினைத்த வினய்க்கு அவளின் பட்டெனப் பதில் ஆச்சரியத்தைத் தந்தது.
அவனின் ஆச்சரிய விழிகளைப் பார்த்துக் கொண்டே, “இது அந்தரங்கமான விஷயம் தான் வினு. ஆனா இப்போ கல்யாணம் ஆகாத சில ஆண்களே பெண்களை மனதில் தவறா கற்பனை பண்ணிக்கிட்டு அந்த இச்சையை அடக்க முடியாம பொண்ணுங்க கிட்ட தவறா நடந்துக்குற அளவுக்குப் போறாங்க.
ஆண், பெண் உறவு புனிதமானது. தாம்பத்யமும் இயற்கையான உணர்வுதான். தன் துணையை மட்டும் தீண்டி வேறு தவறுக்கு இடம் கொடுக்காமல், தன் தேவையைக் காதலுடன் நிறைவேற்றிக் கொள்ளும் ஆண் மகன் தான் நல்ல ஆண்மகன். ஆனால் அப்படி இல்லாம, தன் துணையை வேதனை படுத்தித் தன் இச்சையை நிறைவேத்திக்கிறதும், அவளோட மனசை பத்தி கவலைபடாம அவளை ஒரு போகப்பொருளா மட்டும் பார்க்கிறது தான் ரொம்ப ரொம்பத் தவறான செயல்.
அப்படிப் பார்த்தா நீங்க என்கூட இருந்த ஒரு முறை கூட என்னை வேதனை படுத்தல. என்னைப் போகப் பொருளா மட்டும் பார்க்கல. கல்யாணம் ஆன புதிதில் கூட நீங்க தாம்பத்தியத்தை அறிந்து கொள்ளும் ஆர்வத்தைக் காட்டினங்களே தவிர, வெறியை காட்டலை. அது தான் என்னையும் உங்களோட ஒன்ற வச்சது.
அதுவும் நாலு வருடம் தனியா இருந்தும், கனவுலதான் என்னை அப்படி நினைச்சுக்கிட்டீங்களே தவிரச் சுய உணர்வோடு இருக்கும் போது அப்படி இருந்துருக்க மாட்டீங்க. என்ன வினு சரியா?” என்று கணவனிடம் கேட்டாள்.
மனைவியின் பேச்சை வியந்து கேட்டுக் கொண்டே வினய்யின் தலை தன்னால் ‘ஆமாம்’ என்றது.
“ஹ்ம்ம்…! இதான் கண்ணியம். கனவில் கூட என்னைத் தான். உங்க மனைவியைத்தான் நீங்க தேடினீங்க. நீங்க இருந்த தனிமை வாழ்க்கையில், அதுவும் உடல் தேவையைச் சுலபமாகத் தீர்த்துக் கொள்ளும் பல வழிகள் அந்த ஊரில் இருந்தும், நீங்க மதுவை மட்டும் தான் நாடினிங்களே தவிர, வேறு மாதுவை நாடலை.
நேத்து உங்க உளறல் கேட்டு கூச்சமா இருந்த அதே நேரத்தில் என் கணவன் கனவிலும் என்னைத் தேடுறான்னு எனக்கு நிம்மதியா தான் இருந்தது. அதனால் அதைப் பத்தின கவலையை விடுங்க. ஏதோ இயற்கை உணர்வில் அப்படிப் புலம்பிட்டிங்க. அதனால் அதைப் பெரிசா எடுத்துக்காம இதோட விட்டுறலாம்” என்று கணவனுக்குத் தெளிவான பதிலை சொன்னாள்.
மனைவியின் பேச்சு அனைத்தையும் ஏதோ மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவன் போலக் கேட்டுக்கொண்டிருந்தான் வினய். அவள் விடலாம் எனவும், அவனின் தலை இப்பொழுதும் தன்னால் ஆடியது.
அதைப்பார்த்து “என்ன வினு சும்மா, சும்மா தலையை ஆட்டுறிங்க? ரொம்ப ஓவரா பேசிட்டேனோ?” என்று கேட்டாள்.
“இல்லடா பவி…! ஓவரா இல்ல ரொம்பத் தெளிவா பேசின. ஆனா அந்தத் தெளிவு தான் என்னை ஆச்சரியத்தில் தள்ளிருச்சு” என்றான்.
“என்ன ஆச்சரியம் வினு…?”
“அது உங்க அப்பா அப்படி நடந்தும், நீ தாம்பத்ய வாழ்க்கையில் இவ்வளவு தெளிவா சிந்திக்கிறியே? சின்ன வயசுல இப்படிச் சம்பவங்கள் சந்தித்தால், அது அந்தக் குழந்தைகளைப் பாதிக்க நிறைய வாய்ப்பு இருக்குனு கேள்விபட்டுருக்கேன். அதான் உன் தெளிவு ஆச்சரியமா இருக்கு” என்றான்.
“அதுக்குக் காரணம் அத்தை தான் வினு. நான் அவங்க கைக்கு வந்து சேர்ந்ததும் அப்பா அப்படி இருந்தது எல்லாம் தெரிந்ததும், நடந்த விஷயங்களில் நான் அந்தச் சமயம் மனசு ஒரு மாதிரி இருந்ததிலும் அவங்க உடனே நடவடிக்கை எடுத்து, என்னைச் சரிபண்ண ஏற்பாடு பண்ணினாங்க. என்னைப் பார்த்த டாக்டர் எனக்குப் பின்னாளில் எந்த மாதிரி பாதிப்பு எல்லாம் வரலாம்னு சொல்லி, என் வயதுக்கு ஏற்றாற் போல அவ்வப்போது கவுன்சிலிங் கொடுத்தாங்க. அதில் தான் எனக்கு நிறையத் தெளிவு கிடைச்சது. நம்ம மன வாழ்க்கையும் வேற பிராப்ளம் எதுவும் வராம ஆரம்பித்தது. இப்படி நான் தெளிவாகப் பேசவும் எனக்கு அத்தை செய்த ஏற்பாடு தான் காரணம்” என்றாள்.
“தாரா சித்தி இவ்வளவு நல்லது பண்ணிருக்காங்க. அவங்க கிட்ட போய் ஏன்டா பேசாம இருந்த? பாவம் அவங்க அன்னைக்கு எப்படி அழுதாங்க…” எனக் கேட்டான்.
அவன் கேள்வியில் வருத்தமான பவ்யா “அது எப்பவும் எனக்கு அத்தை எல்லாம் பார்த்து, பார்த்து செய்துட்டு, என்னை வாழாவெட்டினு சொல்லிட்டாங்களேன்னு ரொம்பக் கஷ்டமாகிருச்சு வினு. அதோட அவங்க சொன்னது உங்களை டிவோர்ஸ் பண்ண சொல்லி, அதை எப்படி என்னால் சாதாரணமா எடுத்துக்க முடியும்? என்னைப் புரிஞ்சுக்கிட்ட அத்தையா இப்படின்னு ரொம்ப வருத்தமா ஆகிருச்சு.
என் அத்தை இப்படிப் பண்ணலாமானு கோபம். அதுவும் அந்த டைம்ல கிரண் வேற என்னைப் பின் தொடர்ந்ததில் மன உளைச்சலில் இருந்தேன். அப்போ அத்தையும் இப்படிப் பேசவும், ஏதோ விரக்தி. என் அத்தை இப்படிப் பண்ணிட்டாங்களேனு பேசாம இருந்துட்டேன். ஆனா அது அவங்களை எப்படிப் பாதிக்கப்பட்ட வச்சதுன்னு அவங்க அழுத பிறகு தான் என் தப்பு உரைச்சது…” என்று வருந்தி பேசியவள் தொடர்ந்து “ஆனா பாருங்க உங்களைப் போலவே உங்க மனைவியும் அவசர புத்திகாரியா இருக்கா என்ன பண்ணலாம் அவளை?” என்று கேலியாக முடித்தாள்.
அவள் கேலியில் மெலிதாகச் சிரித்த வினய் “அவசரக்காரனும், அவசரக்காரியும் இப்படி முட்டிக்கலாம்” என்றவன் மனைவியின் நெற்றியில் செல்லமாக முட்டினான்.
சில நொடிகளுக்குப் பிறகு மீண்டும் வினய் கேட்ட ஒரு கேள்வியில் மௌனத்தைத் தத்தெடுத்தாள் பவ்யா.
“என் மேல தான் நம்பிக்கை இருந்துச்சே பவி. அதே நம்பிக்கையை வச்சு என் கூட வந்திருக்கலாமே…” என்று கேட்டிருந்தான் வினய்.