25 – உனதன்பில் உயிர்த்தேன் (Final)
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 25
“நா குடிக்கலைன்னு நீ கண்டுபிடிக்க மாட்டன்னு நினைச்சேன் புள்ள. ஆனா சரியா கண்டுக்கிட்டயே?” என்று வியந்தான் வைரவேல்.
“க்கும்… கள்ளப்பயலுக்கு ஏத்த கள்ளி புள்ள வேலை பார்க்கணுமே…” என்று நொடித்துக் கொண்டாள் தேன்மலர்.
“அப்ப எமக்கு ஏத்த சோடிதேன்னு சொல்லு…”
“பின்ன?” என்றவள், “ஏன்யா ரெண்டு நாளைக்கு முன்ன குடிச்சது போல நடிச்சீரு?” எனக் கேட்டாள்.
“அது… எம் மனசுல இருக்கிறதை எல்லாம் உங்கிட்ட சொல்ல தோணுச்சு புள்ள. வூட்டுல வேற உங்கிட்ட ஒட்டாம தள்ளி நின்னே பழகிட்டேனா, சட்டுனு எப்படி எம் மனசை சொல்றதுன்னு தெரியலை. எம் மனசை சொல்லிட்டு உமக்கும் சம்மதம்னா நாம சேர்ந்து வாழ ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன்.
உங்கிட்ட சரியா முகம் கொடுத்தே பேசாம இருந்து போட்டு, வா சேர்ந்து வாழுவோம்னு என்னால சட்டுனு கூப்பிட முடியலை. அதுதேன் குடிச்சுப் போட்டு வந்த மாதிரி எம் மனசை சொல்லுவோம்னு நினைச்சேன். நீ எப்படிப் புள்ள நா நடிச்சேன்னு சரியா கண்டு பிடிச்ச?”
“குடிச்சுப் போட்டு நீர் பண்ற அலும்பலைதேன் பார்த்திருக்கேனே. அப்ப உம்ம இடுப்புல வேட்டி கூட நிக்காது. ஆனா இப்போ உம்ம உடுப்பு கொஞ்சங்கூட விலகலை. அதோட, ஆரம்பத்தில் குழறின போல நடிச்சீரு. ஆனா தொடர்ந்து பேசும் போது நடிக்கிறதை மறந்து போட்டுத் தெளிவா பேசினீர். அதுலதேன் கண்டுகிட்டேன். ஆனாலும் உம்ம மேல சாராய வாசனை வந்ததே, எப்படியா?”
“நீ ரொம்ப விவரந்தேன் புள்ள. சாராய வாசனை வர வாயில் ஊத்தி கொப்பளிச்சேன். உடம்பு மேல தெளிச்சுக்கிட்டேன்…” என்றான்.
“அது எதுக்குத் தேவையில்லாத சோலி? உம்ம பொஞ்சாதிக்கிட்ட நேர பேச அப்படி என்ன தயக்கம்?” என்று கேட்டாள்.
“நா ஏற்கனவே கல்யாணம் ஆகாதவனா இருந்தா அந்தத் தயக்கம் வந்துருக்காது புள்ள. மொத பொஞ்சாதியை பறி கொடுத்தவனா இருந்தேன். அவ நெனப்பும் எம் மனசுல இருக்கு. அதோட உம்மையும் எமக்குப் பிடிக்கும்னு சொன்னா அதை நீ எப்படி எடுத்துக்குவயோன்னு பயமா இருந்தது…” என்றான்.
குடித்து விட்டு வந்தது போல நடித்த அன்று அவன் ‘பயமா இருக்கு’ என்று சொன்னதன் காரணம் அவளுக்கு இப்போது பிடிப்பட்டது.
“நா அப்படியெல்லாம் ஒன்னும் நினைக்கலையா. உம்ம வாழ்க்கையில் நா வருவதுக்கு முன்னாடியே உமக்குக் கல்யாணம் ஆகி உம்ம பொஞ்சாதி இறந்து போகணும்னு விதி இருந்திருக்கு. அது நடந்து போச்சு.
விதியை யாரால் என்ன செய்யமுடியும்? சொல்ல முடியும்? அதே போலக் கூட வாழ்ந்தவளை மறந்து போட்டு நீர் எம்மை மட்டுந்தேன் நினைக்கணும்னு சொல்ற அளவுக்கு நா கல்நெஞ்சக்காரி இல்லை…” என்றாள்.
“இந்த உம் மனசு தேன் புள்ள எம்மை உம் பக்கம் இழுத்துச்சு…” என்று காதலுடன் சொன்னவன், குனிந்து அவளின் இதழில் மென்மையாக இதழ் பதித்தான்.
மெய் மறந்தாள் தேன்மலர்.
“ஆனாலும் உமக்கு நக்கல் சாஸ்தி தேன் புள்ள. நேத்து அப்பத்தாகிட்ட, சாராயத்தை நா வாயில ஊத்தின வாய் நல்ல வாய், சாராயம் குடிக்காத வாய் நாரவாய்னு என்னமா நக்கல் அடிக்கிற?” அவளை விட்டு விலகியதும் கேட்டவன், அவளின் காதை வலிக்காமல் திருகினான்.
“பின்ன சரிதானேயா? சாராயத்தைக் குடிச்ச மாதிரி நடிச்சுப் போட்டு எம் பக்கத்துல தேன் படுப்பீர்னு அடம் பிடிச்சீர். நல்லா இருக்குறப்ப யாரோ போல விலகி போனீர். அதான் அப்படிச் சொன்னேன்…” என்றாள்.
“நான் சாதாரணமா இருக்குறப்ப ஒரு சங்கடம் புள்ள. அதுதேன் நேத்து விடுஞ்சதும் நீ முழிக்கிறதுக்கு முன்ன ஓடிட்டேன். நா உங்கிட்ட ஆசையா பேச நினைச்சாலும் எப்படியோ தயக்கம் வந்துடுது…” என்றான்.
“பொஞ்சாதிகிட்ட தயக்கம் காட்டி அப்படி என்னய்யா சாதிக்கப் போறீர்?” என்று கிண்டலாகக் கேட்டாள்.
“தயக்கம் காட்டினா எம் பொஞ்சாதிகிட்ட இருந்து ஒன்னுமே சாதிக்க முடியாதுன்னு தெரிஞ்சி போச்சுது புள்ள. இனி தயக்கத்தை எல்லாம் கடாசிட்டு…” என்றவன் வாய் பேச்சை நிறுத்த, கைகள் அவளைச் சுற்றி வளைத்தன.
“க்கும்… ஒடம்புக்கு முடியலைனா மடில படுத்துகிறதும், குடிச்ச மாதிரி பக்கத்துல வர்றதும் தானே இருப்பீரு… இப்போ ஒசாரோட எப்படி வர்றீராம்?” என்று செல்ல கோபம் கொண்டாள்.
“தப்புத்தேன் புள்ள. இனி பாரு எப்பவும் உம் மடியிலேயே விழுந்து கிடப்பேன்…” என்றவன் உடனே மடியில் தலை வைத்து படுத்தும் கொண்டான்.
அவள் அவன் கேசத்தைக் கோதி விட, அவள் முகத்தை ஆசையாகப் பார்த்துக் கொண்டே, அவளின் உதடுகளை மெல்ல தடவியவன் “நல்ல வாயாடி புள்ள நீ…” என்றான் செல்லமாக.
அவன் அப்படிச் சொன்னதும் அவளின் முகம் சுருங்கியது.
“என்னாச்சு புள்ள?”
“ஏ அம்மா நியாபகம் வந்துருச்சுயா. உமக்கு ஒன்னு தெரியுமாயா? ஏ அம்மா இருக்கும் போது அம்மாக்கிட்ட நல்லா வாயாடுவேன். அம்மாவும் ஏ கூடச் சரிக்கு சமமா வாயாடும். எமக்கு விவரம் தெரிஞ்ச நாளுல இருந்து இந்த வூட்டுல நானும் அம்மாவும் தானே? எமக்கு அம்மா, அம்மாவுக்கு நானுன்னு ரொம்ப ஒட்டுதலா இருப்போம்.
ஆனா அம்மா போனப்ப எமக்கு எல்லாமே முடங்கிப் போன போல ஆகிடுச்சு. பேச கூட மனுசங்க இல்லாம தவிச்சுருக்கேன். ஒரு நாளு செத்துப் போயிடலாம்னு கூட நினைச்சுருகேன்…” என்று அவள் சொல்ல,
“என்ன புள்ள நீ?” என்று பதறிப் போனான்.
“அன்னைக்கு அப்படித்தேன் தோணுச்சுயா. அப்படி நினைச்சப்ப ராசு முன்னாடி நின்னுட்டு நா உமக்கு இருக்குறதை மறந்து போட்ட பாத்தியான்னு பார்க்குற மாதிரி இருந்தது. அப்புறம் தேன் சாக வேணாம் ராசுவும், நானுமா இருப்போம்னு நினைச்சுக்கிட்டேன்…” என்றாள்.
“நல்லவேளை ராசு உங்கூட இருந்துச்சு. இல்லனா எம் மலரு புள்ளயவும் நா இழந்திருப்பேன். ஏ வாழ்க்கையே சூனியமாகி போயிருக்கும்…” என்ற வைரவேல் மனைவியைத் தன்னை நோக்கி இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
இருவரும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்
“நீரும் ஏ வாழ்க்கைக்குக் கிடைச்ச வரம்தேன்யா. வூரே எம்மை வேசி பரம்பரைன்னு தூத்தினப்ப, அந்த ராமரு எம் மேல பழிய போட்டப்ப, நீர் மட்டும் என்னைய நம்பினீரு…” என்றாள்.
“அப்பத்தாவும்…” என்றான்.
“ஆமா, ஆத்தாவுக்கு நா என்ன கைம்மாறு செய்யப் போறேனோ தெரியலை. அதுவும் பழைய காலத்து மனுசி வேற. ஆத்தாவுக்குப் பெரிய மனசு…” என்றாள் மனம் நெகிழ.
“அப்பத்தாவுக்கும், எமக்கும் நீரும், ஒ அம்மாவும் எப்படிக் கண்ணியமா வாழ்ந்தீங்கன்னு தெரியும் தானே புள்ள. ஏன் இந்த வூருக்கே கூடத் தெரியும். அப்படி இருந்தும் உம் மேல இந்த வூரு பழி சொல்லிப் போடுச்சேன்னு இன்னும் எமக்குக் கோபம் தேன்…” என்றான் கடுப்பாக.
“வூரு வாய் அப்படித்தேன்யா. ஒரு சமயம் இப்படிப் பேசும். ஒரு சமயம் அப்படிப் பேசும். விட்டுத் தள்ளும். உம்மை மாதிரி நினைக்காத பலர் இந்த ஒலகத்துல உண்டுதேன்யா. நா கல்யாணமே முடிக்காமத்தேன் வாழுவேன்னு நினைச்சு வச்சுருந்தேன். ஏ பரம்பரை பத்தி பேசியே எம்மைத் தப்பா பொண்ணு கேட்டாக. அவுகளை எல்லாம் அம்மா தேன் விரட்டி அடிச்சுச்சு. ஆனா நீர் ஏ வாழ்க்கையில் வந்தீர்.
அதுவும் ஏ பரம்பரை பத்தி தெரிஞ்சும் ஒரு முறை கூட அதைப் பத்தி சொல்லி என்னைய தப்பா பேசியது இல்ல. அப்படிப்பட்ட உம்மை அந்த ராமரு பய அன்னைக்கு வயலுல வச்சு தகராறு பண்ணினப்ப, நீர் ஏ பரம்பரைய நினைச்சுத்தேன் இன்னும் என்னைய தொடாம இருக்கீர்னு அசிங்கமா எல்லாம் பேசினான்…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“இல்ல புள்ள, நா அப்படி உம்மைப் பத்தி நினைச்சு ஒ பக்கத்துல வராம இருக்கலை…” என்று வேகமாக மறுத்தான்.
“அது எமக்கே தெரியும்யா. அந்த நாய்கிட்டயே சொல்லிட்டேன். ஏ புருசன் ஒருக்காலும் என்னைய அப்படி நினைக்க மாட்டார்டா. நா பரிசுத்தமானவள்னு அவருக்குத் தெரியும்னு சொன்னேன்…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவளின் பிடரியில் கை கொடுத்துத் தன்னை நோக்கி இழுத்து அவள் இதழ்களைத் தன் அதரங்களால் ஆசையாகக் கொய்தான்.
அவனின் வேகத்தில் அரண்டாலும், அவனுக்குத் தன் இதழ்களைத் தாரை வார்த்து கொடுத்துவிட்டு வாளாதிருந்தாள்.
சிறிது நேரத்தில் அவளை விட்டு விலகியவன், “உம்மோட இந்தப் புரிதலுக்கு என்ன கைம்மாறு செய்யப் போறேன் புள்ள?” என்று கேட்டான்.
“நீர் ஏ வாழ்க்கையில் வந்ததை விட வேற எமக்கு என்னையா வேணும்?” என்றாள் நெகிழ்வுடன்.
அவளைக் காதலுடன் அணைத்துக் கொண்டான் வைரவேல்.
“மலரு புள்ள?” கிசுகிசுப்பாக அழைத்தான்.
“ம்ம்…” அவளும் கிசுகிசுத்தாள்.
“நாம வாழ ஆரம்பிக்கலாமா புள்ள?” ரகசியம் பேசினான்.
“ம்ம்ம்…” ரகசியமாகவே தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.
அவர்களுக்குள் இருந்த ரகசியங்கள் எல்லாம் ரகசியமாகப் பறிமாறப்பட்டு ரகசியமாக அரங்கேற ஆரம்பித்தன தம்பதிகளின் ரகசியங்கள்!
நான்கு வருடங்களுக்குப் பிறகு…
“ரா… சு… ரா…சு… என்று மழலை குரலில் அழைத்துக் கொண்டே தத்தக்கா பித்தக்கா என்று எட்டு வைத்து ராசுவை விரட்டி பிடித்துக் கொண்டிருந்தாள் வைரவேல், தேன்மலரின் புதல்வி சுடர்மதி.
ராசுவும் அவளுக்குப் போக்கு காட்டி அவளுடன் விளையாடிக் கொண்டிருந்தது.
“பார்த்து போடி தங்கம். ஏ தங்கத்துக்குப் பிஞ்சி காலு நோவப்போவுது…” என்று திண்ணையில் அமர்ந்து கொள்ளு பேத்தி விளையாடும் அழகை ரசித்துக் கொண்டிருந்தார் அப்பத்தா.
“மதி கண்ணு, ராசு கூட விளையாடுறீகளா?” என்று அப்போது தான் வீட்டிற்கு வந்த வைரவேல் மகளைத் தூக்கி கொஞ்சினான்.
“ப்பா… ப்ப்பா…” அரைமணி நேரத்துக்கு முன் வெளியே சென்று திரும்பி வந்த அப்பாவை, என்னவோ பல நாட்களுக்குப் பின் திரும்பி வந்தவன் போல் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அவனின் முகத்தில் எச்சில் பதிய முத்தமிட்டாள் அந்தச் சின்னச் சிட்டு.
“அப்பா உம்மை விட்டுப் போட்டு வெளியே போயிட்டேனா? இதோ வந்துட்டேன் மதி குட்டி…” என்று அவனும் கொஞ்சினான்.
சிறிது நேரம் அப்பாவும், மகளும் கொஞ்சி முடித்ததும், மகளுக்கு மீண்டும் விளையாட்டு ஞாபகம் வந்து விட, “ரா… சு…” என்றாள்.
“ராசு கூட விளையாட போறீரா குட்டி? சரிதேன், போய் விளையாடும்…” என்று மகளை இறக்கி விட்டான்.
“சாப்பிட்டீரா அப்பத்தா?” என்று கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்.
“ஆச்சுயா…” என்றார்.
“மலரு புள்ள… மலரு புள்ள…” வீட்டிற்குள் நுழைந்ததும் மனைவியைத் தேடினான்.
“இங்கன இருக்கேன்யா…” என்று அவர்களின் அறையிலிருந்து குரல் வர, அங்கே சென்றான்.
தேன்மலர் முதல் முதலாக இந்த வீட்டிற்கு வந்த நாள் முதலாகத் தங்கிய அறை தான் அது. அதையே தங்கள் அறையாக மாற்றியிருந்தான்.
என்ன தான் முதல் மனைவி நினைவும் இருக்கிறது என்று தேன்மலரிடம் மனம் விட்டு சொல்லி விட்டாலும் அவளை மேலும் சங்கடப்பட விடாமல் பார்த்துக் கொண்டான்.
அதனால் குமுதாவுடன் வாழ்ந்த அறையில் வாழ வேண்டும் என்று சொல்லி தேன்மலரையும் சங்கடப்படுத்தாமல் இந்த ஏற்பாடு செய்து கொண்டான்.
பெண் குழந்தை பிறந்த போது கூட, “உமக்கு விருப்பம்னா மூத்தாரு பேரையே வைய்யும்யா. நா எதுவும் நினைக்க மாட்டேன்…” என்று கூடச் சொன்னாள்.
ஆனால் அவனுக்கு அதில் உடன்பாடில்லை. ஏதாவது ஒரு சூழ்நிலையில் அதனால் தேன்மலர் கலங்க நேர்ந்தால் தன்னாலேயே தாங்க முடியாது என்று நினைத்தவன், தங்கள் வாழ்க்கைக்கு வெளிச்சம் கூட்ட வந்தவளுக்குச் சுடர்மதி என்ற பெயரை மகளுக்கு வைத்தான்.
அறையில் துவைத்த துணிகளைக் கட்டிலில் போட்டு மடித்துக் கொண்டிருந்தவளின் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டவன், “மலரு புள்ள…” ஆசையுடன் முனங்கி அவள் கழுத்தில் முகம் புதைத்து முத்தமிட்டான்.
இப்போது போல் முதல் முதலாகத் தன்னைக் கணவன் இப்படி அணைத்தது நினைவு வர, தேன்மலரின் இதழ்கள் புன்னகையில் மலர்ந்தன.
“மலரு புள்ள… இன்னைக்கு வாசமா இருக்க…” என்று அவளை முன்னால் திருப்பி அணைத்துக் கொண்டான்.
“மலரு புள்ளக்கு என்ன வச்சுருக்கீரு? இப்படிக் கொஞ்சுரீர்?” சிணுங்கலாகக் கேட்டாள்.
“என்னையவே அவளுக்காகத்தேன் வச்சுருக்கேன்…” மிஞ்சி கொஞ்சினான்.
“ம்ம், சரிதேன்…” என்று அவள் நொடித்துக் கொள்ள,
“நம்பு புள்ள…” என்றான்.
“உம்மை நம்பாம வேற யாரையா நம்புவேன்?” என்று அவள் கேட்டதும் எப்போதும் போல் மனம் நெகிழ்ந்து போனவன் அவளின் இதழில் அழுத்தமாகத் தன் அதரங்களைப் பதித்தான்.
“தனி மரமா போக இருந்த ஏ வாழ்க்கைல நீ வந்து, ஒ அன்பை ஒட்டு மொத்தமா எமக்கே கொடுத்து, ஏ வாழ்க்கைய உசுரு பெற வச்சு உயிர்க்க வச்சுட்ட மலரு புள்ள…” என்றான் மனம் நெகிழ்ந்து.
“நீர் மட்டும் என்னய்யா? முதிர்கன்னியா வாழ இருந்த எமக்கு ஒ அன்பையும், அக்கறையையும் கொடுத்து உசுரு பெற வச்சுருக்கீர். உனதன்பில் உயிர்த்தேன்யா இந்தத் தேன்மலரு…” என்றாள் முத்தாய்ப்பாக.
தன் மலரானவளை ஆசையாக அணைத்துக் கொண்டான் வைரவேல்.
அவனின் அணைப்பில் வாகாக அடங்கிக் கொண்டாள் தேன்மலர்.
அன்பும், புரிதலும் இருக்கும் இடத்தில் காதலும் நிலைத்து உயிர்வாழும்!
***சுபம்***