25 – இன்னுயிராய் ஜனித்தாய்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 25
மனைவியை அடித்து விட்டு உக்கிரமாக அவளை உறுத்துப் பார்த்தான் நிரஞ்சன்.
“உங்க தம்பி என்னை அடிக்கக் கை ஓங்குறார். அதை என்னன்னு கேட்காம என்னை ஏன் அடிச்சீங்க?” ஆத்திரமாகக் கேட்டாள் ஹேமா.
“எப்பவும் பொறுமையா போற என் தம்பியே இன்னைக்குக் கை நீட்ட துணிஞ்சான்னா அந்த அளவுக்கு நீ மோசமா பேசியிருக்கன்னு அர்த்தம்…” என்றான் நிரஞ்சன்.
“நான் ஒன்னும் தப்பா பேசலை. உண்மையைத்தான் பேசினேன். அதுக்கு உங்க தம்பிக்கு எரிஞ்சா நான் ஒன்னும் செய்ய முடியாது…” என்றாள் அப்போதும் அடங்காமல்.
“இவள் என்ன பேசினாள் நித்திலா?” என்று தம்பியிடம் கேட்டான்.
“விடு அண்ணா. அவங்க பேசுவது என்ன புதுசா? நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்…” என்றான் நித்திலன்.
மேலும் பிரச்சனை பெரிதாவதில் அவனுக்கு விருப்பம் இருக்கவில்லை.
“இப்ப சொல்ல போறீயா இல்லை?” நிரஞ்சன் கோபமாகக் கத்திக் கேட்க,
“என்ன? என்னாச்சு?” என்று வீட்டிற்குள் இருந்து பதறிக் கொண்டு வந்தார் செவ்வந்தி.
“ஒன்னுமில்லைமா…” என்ற நித்திலன், “துர்கா வாங்க…” என்று அவளையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைய,
“நித்திலா… இப்ப அவள் என்ன சொன்னாள்னு சொல்ல போறீயா இல்லையா?” என்று நிரஞ்சன் விடாமல் பின்னால் சென்றான்.
“நல்லா இருக்கு உங்க நியாயம்? என்ன நடந்துச்சுன்னு கூடத் தெரியாம நீங்க என்னை அடிப்பீங்க. நமக்குள்ள சண்டையை மூட்டி விட்டு ஒன்னுமறியாத பச்சப்புள்ள போல உங்க தம்பி உள்ளே போவாரோ…” என்று கோபமாகக் கத்தியபடி தானும் உள்ளே சென்றாள் ஹேமா.
வீட்டிற்குள் வேலையாக இருந்ததால் என்ன பிரச்சனை என்று அறியாத செவ்வந்தியும் தவித்துப் போய் அவர்கள் பின் செல்ல,
நடுக்கூடத்தில் பெரிய கலவரமே நடக்கும் சூழல் உருவானது.
ஹேமாவின் வார்த்தையை இன்னும் ஜீரணிக்க முடியாமல் கலங்கிய கண்களை யாருக்கும் காட்ட முடியாமல் சமாளித்துக் கொண்டு நின்றிருந்தாள் துர்கா.
“துர்கா கண் வேற கலங்கி இருக்கு. நீ அவளை அடிக்கக் கை ஓங்கி இருக்க. அப்போ என்னவோ பெருசா பேசி இருக்காள். என்னன்னு இப்ப எனக்குத் தெரிஞ்சாகணும்…” என்றான் நிரஞ்சன்.
“என்ன கை ஓங்கினானா? என்ன நித்திலா இது?” செவ்வந்தி நம்ப முடியாமல் கேட்க,
“ஸாரிமா…” என்றவன், “அண்ணா நான் செய்தது தப்பு. என்னை மன்னிச்சுடு…” என்றான் அண்ணனிடம்.
“ஸாரி கேட்டால் ஆச்சா?” என்று ஹேமா துள்ளிக் கொண்டு வர,
“அண்ணா நான் கை நீட்டியது தப்பு. அதுக்கு ஸாரி கேட்டுட்டேன். இதுக்கு மேல இந்தப் பேச்சை வளர்க்க வேண்டாம். விடு…” ஹேமாவை திரும்பிப் பார்க்க கூடப் பிடிக்காமல் அண்ணனிடம் சொன்னவன் அங்கே இருந்து செல்ல போனான்.
“ஏய், நில்லு! உன்னால் என் புருஷன் என்னை அடிச்சிருக்கார். அதுக்குப் பதில் சொல்லிட்டுப் போ…” என்று வீடே அதிரும் வண்ணம் கத்தினாள் ஹேமா.
ஏற்கனவே அங்கே நடந்த கலவரத்தைப் பார்த்து நித்திலன் கையில் இருந்த வருணா அரண்டு போயிருக்க, இப்போது ஹேமா கத்திய கத்தில் பயந்து வீரிட்டு அழ ஆரம்பித்தாள்.
நிரஞ்சனின் பிள்ளைகள் இருவரும் அரண்டு செவ்வந்தியிடம் அண்டிக் கொண்டனர்.
“குட்டிம்மா, ஒண்ணுமில்லைடா…” என்று குழந்தையைச் சமாதானம் செய்து கொண்டே நித்திலன் அறைக்குள் செல்ல போக,
அங்கிருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து நடுவீட்டில் படீர் என்று தூக்கி எறிந்தாள் ஹேமா.
ஒரு நொடி அங்கிருந்த அனைவரின் நெஞ்சமும் படபடக்க ஆரம்பிக்க, திகைத்து விழித்தனர்.
“ஏன்மா இந்த ஆட்டம் ஆடுற? பிள்ளைங்க பயப்படுது பார்…” என்று செவ்வந்தி சத்தம் போட,
“உங்க இளைய பிள்ளை என்னை அடிக்கக் கை ஓங்குவார். உங்க மூத்த பிள்ளை என்ன காரணம்னு தெரியாம அடிப்பார். எல்லாம் வாங்கிட்டு நான் அமைதியா இருக்கணுமா?” என்று கேட்டாள்.
“ஏய், ஓவரா ஆடாதேடி! நானும் பொறுத்து பொறுத்துப் போறேன். உன் ஆட்டம் அதிகமாகிட்டே போகுது. நீ என் தம்பியை எப்படிப் பேசுவன்னு எனக்குத் தெரியும். இப்பவும் அதை விட மோசமா எதுவோ பேசியிருக்க. அதுதான் அடிச்சேன். இன்னும் பிரச்சனை செய்யலாம்னு பார்த்தால் இன்னும் அடிப்பேன்…” என்று மனைவியை அடிக்க மீண்டும் கையை ஓங்கினான்.
“நிரஞ்சா…”
“அண்ணா…”
அன்னை, சகோதரன் இருவரும் ஒரே நேரத்தில் குரல் கொடுக்க, நிரஞ்சன் ஓங்கிய கையைக் கோபத்துடன் கீழே இறங்கினான்.
“ஐயோ! இந்த அநியாயத்தை எங்கே போய்ச் சொல்லுவேன். என் புருஷனை எனக்கு எதிரா திருப்பி விட்டு குடும்பமே வேடிக்கைப் பார்க்குதே. என்னை அடிச்சே கொன்னுடுவாங்க போல இருக்கே. அதுக்கு முன்னாடி நானே செத்துப் போறேன். ஒன்னுக்கும் உதவாத பயலுக்கு வக்காலத்து வாங்கி உங்க பொண்டாட்டியையே அடிப்பீங்களா?”
ஒப்பாரி வைத்து புருஷனிடமும் கேள்வி கேட்டவள், தனது வழக்கமான மிரட்டும் நாடகத்தைக் கையில் எடுத்து, அறைக்குச் சென்று கதவை மூடிக் கொள்ளப் போனாள்.
“எம்மா ஹேமா…” என்று செவ்வந்தி பதற,
“அண்ணி… வேண்டாம்…” விபரீதம் நடந்து விடுமோ என்று நித்திலனும் படபடக்க,
இப்படி ஒரு சண்டையை எதிர்பாராத துர்கா என்ன செய்வது என்று அறியாமல் பதட்டமாகப் பார்த்தாள்.
ஆனால் அறைக்குள் போக விடாமல் மனைவியின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்திய நிரஞ்சன்.
“ஏய், சாகணும்னா வெளியே போய்ச் சாகுடி. இல்லனா உன் அப்பன் வீட்டில் போய்ச் செத்து தொலை. என் வீட்டில் சாகக் கூடாது…” என்றவன் அவளின் கையைப் பிடித்துத் தரதரவென வாசல் பக்கம் இழுத்துப் போனான்.
“நிரஞ்சா, என்ன பண்ற?” என்று செவ்வந்தி மகனை அதட்ட,
“இவள் இந்த வீட்டில் இருந்து ஆடின ஆட்டம் எல்லாம் போதும் மா. இனி இவள் இங்கே இருக்கக் கூடாது. என் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு ராட்சஷி அம்மாவா இருக்கத் தேவையே இல்லை…” என்றான்.
“அண்ணா, அவங்க தான் புரியாம தப்பு செய்றாங்கனா நீயும் ஏன் இப்படிச் செய்ற? விடு அவங்களை…” என்றான் நித்திலன்.
“நீ பேசாமல் இரு நித்திலா. நான் சரியாத்தான் செய்துட்டு இருக்கேன். வீட்டுக்கு வாழ வந்தவள் வீட்டில் இருக்கிறவங்க கூடச் சந்தோஷமா பழகலைனாலும் நிம்மதியா வாழ விடணும். இவளால் நீ இந்த வீட்டை விட்டே மொத்தமா போயிட்ட.
இப்பவும் அதே சாகுறேன் நாடகம் போட்டு இனி உன் குடும்பத்தோடு இங்கே வர விடாம செய்ய வழி பார்க்கிறா. இவள் ஆடும் நாடகத்தை எல்லாம் நான் வேடிக்கை பார்த்தது போதும்…” என்றவன், மனைவியை வீட்டின் வெளியே தள்ளினான்.
கணவன் இப்படிச் செய்வான் எதிர்பாராமல் ஹேமா திகைத்து விழிக்க, “போடி, சாவியோ… வாழுவியோ எதுவா இருந்தாலும் இந்த வீட்டுக்கு வெளியே வச்சுக்கோ. நான் உன் அப்பனுக்குப் போன் போட்டு சொல்றேன்.
இத்தனை நாளும் என் தம்பி பத்தி உன் அப்பனுக்குத் தெரிய வேண்டாம்னு தான் பொறுத்துப் போனேன். ஆனா இனி பொறுக்க முடியாது. இனி நீ இந்த வீட்டுக்கு தேவை இல்லை. என் பிள்ளைங்களை நான் வளர்த்துக்கிறேன்…” என்றவன் உடனே மாமனாருக்கு போன் போட போனான்.
ஹேமா நிஜமாகவே பயந்து போனாள். அவள் அப்பாவுக்கு மட்டும் விஷயம் தெரிந்தால் அவளை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்.
மகளின் மீது தப்பு என்று தெரிந்தால் அவரும் அவளைத் தன் வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்வார். அவ்வளவு நியாயஸ்தர்.
நித்திலன் மீது அவளுக்குத் தனி விரோதம் எதுவுமில்லை. ஆனாலும் அவனின் குறை தெரிந்ததில் இருந்து அவன் மீது ஒரு இளக்காரம். இவன் எல்லாம் ஒரு ஆளா என்ற எண்ணப்போக்கு.
குழந்தை இல்லை என்றால் பெண்களைக் குறைவாகப் பேசும் சிலரை போன குணம் உள்ள ஹேமா தன் கொழுந்தன் குறையையும் அதனுடன் ஒப்பிட்டு, மலடன் கண் பட்டால் தன் குழந்தைகளுக்கு ஆகாமல் போகும் என்று அவளாக ஏதேதோ எண்ணமிட்டு சிறிது சிறிதாக வன்மத்தை வளர்த்துக் கொண்டவள்.
இப்போது தன் வாழ்க்கை ஆட்டம் காண்பது மட்டும் இல்லாமல், குழந்தைகளையும் பார்க்க கூடாது என்றதும் பயந்து போனாள்.
“நான் என்னங்க தப்புச் செய்தேன்? நான் ஏன் போகணும்? என் பிள்ளைகளை விட்டு என்னால் போக முடியாது…” என்றாள்.
“ஏன் உன்னைப் போல என் பிள்ளைகளும் வக்கிரமா பேச கத்துக்கவா? தேவையில்லை, போய்டு…” என்றான் பிடிவாதமாக.
“அண்ணா, போதும்! இதில் உன் வாழ்க்கையும் இருக்கு. உன் வாழ்க்கையைத் தொலைச்சுட்டு நிற்கிறதை பார்த்துட்டு என்னால் சும்மா இருக்க முடியாது. அண்ணி என்னைத் தானே பேசினாங்க? நானே சொல்றேன். உள்ளே கூப்பிடு. பிரச்சனையை வளர்க்காதே!” என்றான் நித்திலன்.
“ஆமாப்பா, இப்படி முடிவு எடுக்காதே! ஹேமா சொன்னால் கேட்டுக்குவா. இரட்டை பிள்ளைங்கபா. அவங்களுக்கு அம்மா வேண்டும். பிடிவாதம் பிடிக்காதே!” என்றார் செவ்வந்தி.
“நீங்க என்ன சொன்னாலும் என்னால் முடியாது. நித்திலன் இனி இந்த வீட்டுக்கு வந்து போய் இருக்கணும். ஒவ்வொரு முறையும் இவள் பேச்சுக்குப் பயந்து அவன் ஓடி ஒளிந்தது எல்லாம் போதும். இவள் இங்கே இல்லையானால் தான் நித்திலன் வந்து போய் இருப்பான்…” என்றவன் தன் முடிவிலிருந்து பின் வாங்க தயாராக இருக்கவில்லை.
“அண்ணா, உனக்கு என்ன? நான் இந்த வீட்டுக்கு வந்து போய் இருக்கணும் அவ்வளவு தானே? கண்டிப்பா வருவேன். அண்ணியை இப்ப நீ உள்ளே கூப்பிட்டால் தான் நான் வருவேன். இல்லனா நான் இப்பவே என் பொண்டாட்டி பிள்ளையோட ஊருக்கு கிளம்புறேன். இப்ப போயிட்டா திரும்பி வரவே மாட்டேன்…” என்றான் நித்திலன்.
“அவள் உன்னைத்தான்டா பேசுறா. நான் உனக்காகத்தான் சொல்றேன். இனி எந்த அசிங்கமான பேச்சையும் நீ கேட்க வேண்டாம்…” என்றான்.
“அண்ணி தானே அண்ணா என்னைப் பேசினாங்க? அண்ணி இனி அப்படிப் பேச மாட்டாங்க. இங்கே பார் அண்ணா, பிள்ளைங்க எல்லாம் அரண்டு போயிருக்காங்க. அவங்க முன்னாடி சண்டை வேண்டாம்…” என்றான்.
“அவள் பேச மாட்டாள்னு என்ன நிச்சயம்?” என்று நிரஞ்சன் கேட்க,
“பேச மாட்டீங்க தானே அண்ணி?” என்று ஹேமாவிடம் கேட்டு வைத்தான் நித்திலன்.
அவளால் வேறு என்ன சொல்ல முடியும்? நித்திலன் எப்படிப் போனால் அவளுக்கு என்ன? அவள் வாழ்க்கையை அல்லவா காப்பாற்றிக் கொள்ள வேண்டும்? அதனால் பேச மாட்டேன் என்று தலையை அசைத்தாள்.
“இப்ப கூட நீ சொன்னதால் தான் இவளை உள்ளே விடுறேன் நித்திலா. இனி எதுவும் பிரச்சனை செய்தால் நேரா அவள் அப்பன்கிட்ட தான் பஞ்சாயத்து வைப்பேன்…” என்று சொல்லியே மனைவியை உள்ளே அழைத்தான் நிரஞ்சன்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வருணாவின் அழுகை கூடியதால் அவளைத் தூக்கிக் கொண்டு துர்கா அறைக்குள் சென்றிருக்க, ஹேமா தன் இரு குழந்தைகளையும் சமாதானப்படுத்தி, தங்கள் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.
அன்னையிடமும், தமையனிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு, அறைக்குள் சென்றான் நித்திலன்.
அழுது அழுது வருணா தூங்கியிருக்க, அவளை மடியில் படுக்க வைத்த வண்ணம் கட்டிலில் அமர்ந்திருந்த துர்காவின் முகம் இறுகிப் போயிருந்தது.
கதவைத் தாழ் போட்டுவிட்டு அவர்கள் அருகில் வந்தவன், “தூங்கிட்டாளா?” என்று குழந்தையின் நெற்றியில் கை வைத்து வருடினான்.
துர்கா பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க, அவளின் எதிரே கட்டிலில் அமர்ந்தவன், “ஸாரி துர்கா. உங்களைப் பேசியவங்களை நானே சமாதானம் செய்து வீட்டுக்குள் கூப்பிட வேண்டியதாகிருச்சு. எனக்கு வேற வழி தெரியலை…” என்றான் வருத்தமாக.
அதற்கும் துர்கா அமைதியாக இருக்க, “துர்கா, ஸாரி…” என்றான் மீண்டும்.
“நீங்க ஏன் இவ்வளவு நல்லவரா இருக்கீங்க?” என்று மெதுவாக அவன் கண்களை ஊடுருவி பார்த்து கேட்டாள்.
“துர்கா?” இந்தக் கேள்வி ஏன் என்ற பாவனை நித்திலனிடம்.
“இப்பவும் அவங்க உங்களைத்தான் அதிகம் பேசினாங்க. ஆனா நீங்க அவங்க வாழ்க்கையை நேராக்கிட்டு வந்துருக்கீங்க. என்னை அவங்க பேசியதுக்கு என்கிட்ட நீங்க மன்னிப்பு கேட்குறீங்க. ஏன் இப்படி? ஏன் இவ்வளவு நல்லவரா இருக்கீங்க? உங்களுக்கு அவங்க பேசியது கஷ்டமா இல்லையா?” என்று கேட்டாள்.
சில நொடிகள் நித்திலனிடம் மௌனம் மட்டுமே!
தலையை அழுத்தி நீவி விட்டுக் கொண்டான்.
துர்காவின் மடியில் படுத்திருந்த வருணாவை பார்த்தவன், “எனக்கு வலிக்குது துர்கா. ரொம்ப ரொம்ப வலிக்குது. என் வலிக்கு ஆறுதலா, இதோ… வருணா படுத்திருக்கும் இடத்தில் நான் தலை வைத்து படுத்துக்கணும் போல இருக்கு…” என்று ஏக்கமாகச் சொன்னவனின் ஏக்கத்தை உடனே தீர்த்து வைக்க வேண்டும் போல் தோன்றியது துர்காவிற்கு.
ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம் இருக்க, அமைதியாக அவனைப் பார்த்தாள்.
“எனக்குத் தெரியும் என் ஆசை அதிகபடின்னு. ஆனாலும் கிடைக்கலைனு ஏங்கி போகும் கட்டத்தை எல்லாம் எப்பவோ தாண்டி வந்துட்டேன்.
சரியா ஒரு வருஷத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேன்னு தெரியுமா துர்கா? ரொம்ப ரொம்பச் சந்தோஷமா… கவலைனா என்னன்னு தெரியாமல், அவ்வளவு ஹேப்பியா இருந்தேன்.
படிப்பை முடிச்சதுமே வேலை. கை நிறையச் சம்பளம். நினைத்ததை உடனே வாங்கி அனுபவிக்கிறதுன்னு சந்தோஷமா வளைய வந்தேன்.
விளையாட்டு போல ஸ்பெர்ம் டொனேஷன் செய்யப் போகலைனா இன்னும் கூடச் சந்தோஷமா இருந்திருப்பேனோ என்னவோ… அந்த நாளுக்குப் பிறகு என் வாழ்க்கையே தலைகீழ் மாற்றம்.
சுத்தமா உடைந்து போனேன். கல்யாணம் வேண்டாம்னு வீட்டில் காரணம் சொன்ன போது அம்மா ஒரு பக்கம் அழுகை. அதுவரை என்னை மதிப்பா பார்த்துட்டு இருந்த அண்ணி இளக்காரமா பார்க்க ஆரம்பிச்சது. எதுக்கு எடுத்தாலும் என் குறையைச் சொல்லிக் காட்டுவது, மட்டம் தட்டுவதுனு அவங்க மாறிப் போனாங்க.
ஆரம்பத்தில் அவங்க பேசிய பேச்சை எல்லாம் தாங்க முடியாமல் வேதனையோட வண்டியை எடுத்துட்டு வெளியே போனவன், அப்படியே எந்த லாரியிலாவது மோதி செத்து போயிடலாம்னு நினைச்சேன்…”
“என்ன?” என்று அதிர்ந்து பார்த்தாள்.
அதைச் சொல்லும் போது உணர்ச்சி வேகத்தில் அவன் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.
தன் தயக்கம் எல்லாம் மறந்து குழந்தையைப் படுக்கையில் படுக்க வைத்து விட்டு அவன் அருகில் அமர்ந்தவள் அவன் கையைப் பற்றிக் கொண்டாள்.
அவன் அதைக் கூட உணரவே இல்லை. பழைய ஞாபகங்கள், தான் வாங்கிய சுடுசொற்கள் அந்த நேரத்திலிருந்து இப்போது வரை தொடரும் அவசொற்களில் உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தான்.
“எனக்கு வாழவே பிடிக்கலை. நான் ஏன் வாழணும்? ஒரு ஆணோட முழுமை அவன் தகப்பன் ஆகும் போது தானே கிடைக்கும். ஆனா எனக்கு அது கிடைக்கவே கிடைக்காது எனும் போது இந்த உலகத்தில் வாழ்ந்து என்ன செய்யப் போறேன் என்ற விரக்தி.
அப்படியே லாரியில் விழுந்து செத்துப் போயிடலாம்னு நினைக்கும் போது அம்மாகிட்ட இருந்து போன்… ஒரு செகண்ட் என் கவனம் சிதறலைனாலும் அன்னைக்கே என் உயிர் போயிருக்கும்…” என்று சொன்னதும் அவன் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.
“ஏன் இப்படி? அப்படி ஒன்னும் உங்களுக்குப் பெரிய குறை இல்லை…” என்றாள்.
அப்போது தான் அவள் தன் கையைப் பிடித்திருப்பதை உணர்ந்தவன், உள்ளுக்குள் வியந்து, இப்போது தான் அவள் கையை அழுத்தமாக பற்றிக் கொண்டான்.
“உங்களுக்கு என் குறை பெரிதாகத் தெரியாமல் இருப்பதே கொஞ்சம் நிம்மதியா இருக்கு துர்கா. ஆனாலும்…” என்றவன் ஏதோ சொல்ல வந்து அப்படியே பேச்சை நிறுத்தினான்.
என்ன என்பது போல் துர்கா பார்க்க, அவள் கண்களைச் சந்திப்பதை மறுத்தவன், அவளின் கையில் தன் அழுத்தத்தைக் கூட்டினான்.
“எனக்கு இதை எப்படி… எப்படிச் சொல்றதுன்னு தெரியலை துர்கா…” என்றவனின் மேனி லேசாக நடுங்கியதை, அவனின் கைகளினூடே உணர்ந்தாள்.
‘ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறான்?’ என்ற கேள்வி அவளிடம்!
“இல்லை, வேண்டாம். ஒன்னுமில்லை…” என்றவன் விலகி நகர்ந்து வருணாவை ஒட்டிப் படுத்துக் கொண்டான்.
என்னவோ சொல்ல வந்து ஏன் நிறுத்தினான் என்று புரியாமல் துர்கா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனிடம் ஏதோ சங்கடமும், சொல்ல முடியா அவஸ்தையும் தெரிந்தது.
என்ன அது அவளுக்குப் புரியவில்லை.
“ஏதோ சொல்ல வந்தீங்களே?” என்று மெல்ல கேட்டுப் பார்த்தாள்.
“ஒன்னுமில்ல துர்கா…” என்றான் அவள் பக்கம் கூடத் திரும்பாமல்.
“என் மடியில் தலை வச்சு படுக்கணும்னு சொன்னீங்களே… அதுவா?” மெல்லிய குரலில் கேட்கும் போதே இப்போது அவளிடம் தயக்கம் ஒட்டிக்கொண்டது.
மெல்ல அவள் புறம் திரும்பிப் பார்த்தான்.
இருவரின் கண்களிலும் சங்கடமா? எதிர்பார்ப்பா? இரண்டும் கலந்த கலவையா? ஏதோ ஒன்றை வெளிப்படுத்தின.
“படுக்கலாமா?” மெதுவாகக் கேட்டான்.
துர்காவால் சரி என்று சொல்ல முடியவில்லை. வேண்டாம் என்றும் மொழியவில்லை.
அவன் வலியையும், வேதனையையும் கண்கூடாகப் பார்த்தவளுக்கு மறுக்கத் தோன்றவில்லை.
அவன் படுக்கத் தோதாகக் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள்.
அவளின் சம்மதத்தில் முகம் மலர்ந்து போக, “தேங்க்ஸ் துர்கா…” என்றவன், அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்.
மெல்லிய இலையாய் ஓர் இணக்கம் அவர்களுக்குள் இழைந்து உறவாடியது.