24 – ஈடில்லா எனதுயிரே (Final)

அத்தியாயம் – 24

“நானே அதைக் குப்பையில் போட வேண்டியதுன்னு சொல்றேன். அதை நீ பொக்கிஷம்னு சொல்ற…” கடுப்புடன் கேட்டான் பிரபஞ்சன்.

அதுவும் அவள் அதைத் தன் நெஞ்சத்துடன் அழுத்தி வேறு வைத்துக் கொள்ள, அவனின் கொதிப்பு கூடும் போல் இருந்தது.

“ராகா, அதைக் கொடு! நானே கிழிச்சு குப்பைல போடுறேன்…” என்று அதை அவளிடமிருந்து பறிக்கப் போனான்.

ஆனால் அவளோ பறிக்க விடாமல் வேகமாகப் பின்னால் நகர்ந்தாள்.

“என்ன பண்ற ராகா? அதைக் கொடு…” கோபமாகக் கேட்டான்.

“நோ அத்தான். எனக்கே என்னைப் புரிய வைத்தது இதுதான் அத்தான். இதைக் கிழிக்க விடமாட்டேன்…” என்றாள் தீவிரமாக.

“என்ன சொல்ற நீ?” என்று புரியாமல் கேட்டான்.

நந்திதாவுடன் நடக்கவிருந்த திருமணத்திற்காக அச்சடித்த பத்திரிகை அது.

தாய் மாமாவிற்கு முதல் பத்திரிகை வைக்க வேண்டும் என்று வைத்த பத்திரிகை.

அவன் வீட்டில் இருந்த மீதி பத்திரிகைகளைக் கூடக் குப்பையில் தூக்கி போட்டிருந்தான்.

இப்போது அந்தப் பத்திரிகையில் நந்திதா பெயர் இருந்த இடத்தில் ராகவர்தினி அவள் பெயரை எழுதி பத்திரமாக வைத்திருக்கிறாள்.

அதுவும் பொக்கிஷம் என்கிறாள். அதில் என்ன பொக்கிஷம் என்று அவனுக்குப் புரியவே இல்லை.

“அந்தப் பத்திரிகையைப் பார்க்க கூட எனக்குப் பிடிக்கலை ராகா. அதை அணைச்சு வேற பிடிச்சிருக்க…” என்று சிடுசிடுத்தான்.

“இப்ப இந்தப் பத்திரிகையில் நீங்களும், நானும் மட்டும் தான் இருக்கோம் அத்தான். அதனால் இருக்கட்டும்…” என்றாள் பிடிவாதமாக.

“அதான் நம்ம ரிசப்ஷனுக்கு அடிச்ச பத்திரிகை இருக்கே… அப்புறம் என்ன?”

“அது வேற… அது நீங்க எனக்கே எனக்குக் கிடைச்ச பிறகு அடிச்ச பத்திரிகை. ஆனால் இது எனக்கு நீங்க கிடைக்கலைன்னு ஏக்கத்தில் நான் இருந்தப்ப உங்க பெயர் பக்கத்தில் என் பெயர் எழுதி உங்க கூட நானே சேர்ந்தது போல் பார்த்து பார்த்து மகிழ்ந்த பத்திரிகை. இது எனக்குப் பொக்கிஷம் தான்…” என்றாள்.

“என்ன சொல்ற நீ?” அதிர்ந்து போனான் பிரபஞ்சன்.

தான் சரியாகத்தான் கேட்டோமா? என்று அவனுக்கு அவனின் காதுகளின் மீதே சந்தேகம் வந்தது.

“உண்மையைச் சொல்றேன் அத்தான்…” என்றவளின் கண்களை ஊடுருவி பார்த்தான்.

அவள் கண்களில் ஒருவித தவிப்பு. தன்னிடம் ஏதோ சொல்ல துடிக்கும் அவளின் உதடுகள். ஏன் இந்தத் தவிப்பும்? துடிப்பும்? அவனுக்குள் கேள்வி எழுந்தது.

“என்ன உண்மை?” என்று கேட்டான்.

“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா அத்தான்? உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்…”

“அது எனக்கும் தெரியுமே! நீ என் மேல நிறையப் பாசம் வச்சுருக்க…”

“அது உங்க கல்யாணம் முடிவு ஆகும் வரை தான் அத்தான்…”

“ஏன் அதுக்குப் பிறகு என்னாச்சு?”

“உங்க மேல எனக்கு இருப்பது வெறும் பாசம் மட்டும் தான்னு உங்க கல்யாணம் நிச்சயம் ஆகும் வரை நானும் உறுதியா நம்பினேன் அத்தான். அதான் உங்களுக்குப் பொண்ணு பார்க்க கூட அவ்வளவு ஆர்வமா இருந்தேன்.

ஆனால் எப்போ உங்களுக்கு இனி நந்திதா தான்னு முடிவாச்சோ அப்ப இருந்து என் மனசு ஆட்டம் காண ஆரம்பிச்சிடுச்சு.

ஏன் இந்தத் தடுமாற்றம்னு எனக்குள் கேட்டுப் பார்த்தேன். பதில் கிடைக்கலை. ஆனா உங்க பத்திரிகையில் உங்க பேர் பக்கத்தில் நந்திதான்னு பேர் பார்க்கவும், என் பேர் இருக்க வேண்டிய இடத்தில் இவங்க பேர் எப்படி இருக்கலாம்னு தோன்றிய போது தான் என் மனசு ஏன் தடுமாறுச்சுன்னு எனக்கே புரிந்தது.

ஆமாம் அத்தான்! உங்களை நான் லவ் பண்றேன்! உங்க மேல எனக்கு இருந்தது வெறும் பாசம் மட்டுமில்லை, காதல்!” என்றவள் அவனைக் காதலுடன் பார்த்தாள்.

“ராகா…” நம்ப முடியாமல் அழைத்தான்.

ஆம்! அவனால் நம்பத்தான் முடியவில்லை.

ராகவர்தினிக்குத் தன்னைப் பிடிக்கும் என்று அவன் நன்றாகவே அறிவான். அவனுக்கும் கூட அவளைப் பிடிக்கும். ஆனால் அது அன்பு மட்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தான்.

அவள் தன் மீது தங்கள் திருமணத்திற்கு முன்பே காதல் கொண்டிருப்பாள் என்று எதிர்பார்க்கவே இல்லை.

அதையும் அவள் காட்டிக் கொள்ளவே இல்லையே? தன் திருமண நிகழ்வில் எல்லாம் சந்தோஷத்துடன் தான் வளைய வந்தாள்.

அதிலும் நந்திதாவுடன், அவனையும் சேர்த்துக் கேலி செய்வாள். நந்திதாவுடன் பேசும் போதும் அவளிடம் எந்த வேறுபாட்டையும் அவன் கண்டது இல்லை. அப்படியிருக்க, இப்போது அவள் சொன்ன காதல் அவளைப் புரியாமல் பார்க்க வைத்தது.

“என்ன அத்தான் நம்ப முடியலையா?” என்று கேட்டாள்.

“ம்ம், லவ் செய்தேன்னு சொல்ற… ஆனா நீ அப்படி எதுவும் காட்டிக்கிட்டது இல்லையே?” என்று கேட்டான்.

“காட்டினால் என்ன நடக்கும் அத்தான்? நந்திதாவுடன் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி இருப்பீங்களா என்ன? அப்போது நீங்க இருந்த மனநிலையை மனதில் வைத்து சொல்லுங்க…” என்றாள்.

அன்றைய மனநிலையில் கண்டிப்பாக நிறுத்தியிருக்க மாட்டான் தான்.

அதிலும் அவள் படித்துக் கொண்டிருக்கிறாள் என்ற காரணம் வேறு முன் நின்றது. அந்த நிலையில் அவள் காதலை அவன் ஏற்றிருப்பானா என்பது சந்தேகமே!

அவனின் மௌனமே அவளுக்குப் பதிலானது.

“எனக்குத் தெரியும் அத்தான். நீங்க மனசு மாறியிருக்க மாட்டீங்க. அதோட நான் உங்க சந்தோஷம் தான் என் சந்தோஷம்னு நினைச்சேன். நந்திதாவை கல்யாணம் செய்வது தான் உங்க சந்தோஷம்னு தெரிந்தது.

அது என்னால் தடை படக் கூடாதுன்னு என் காதலை என் மனசுக்குள்ளேயே போட்டுப் புதைச்சுக்கிட்டேன். அப்படியும் மனசு கேட்காம என்னைப் போல என் கூட வேற யாராவது ஜோடியாக ஆனால் நீங்க பீல் பண்றீங்களா இல்லையான்னு தெரிஞ்சுக்கத்தான் ஆதித்யா என்கிட்ட காதல் சொன்னதாகப் பொய் சொன்னேன்…” என்று நிறுத்தினாள்.

அவள் கடைசியாகச் சொன்னதை விட ‘உங்க சந்தோஷம் தான் என் சந்தோஷம்னு நினைச்சேன்’ என்ற அவளின் வார்த்தைகள் இப்போதும் அவனைத் தாக்கியது.

“ஆதித்யாவை பற்றி ஏன் பொய் சொன்னன்னு என் மேல நீங்க கோபப்பட்டீங்களே… உங்க மனசை தெரிந்து கொள்ளத்தான் பொய் சொன்னேன் அத்தான். நீங்க பொறாமை எதுவும் படாமல் தெளிவா இருந்தீங்க. அதுக்கு மேலயும் என்கிட்ட காதல் சொன்னவன் சரியானவன் தானான்னு விசாரிக்கவே கிளம்பிட்டீங்க. அதுதான் அத்தான் இன்னும் என் மனசை உங்ககிட்ட காட்டவேவிடலை.

உங்க கல்யாண நிகழ்ச்சியில் எல்லாம் சந்தோஷமா இருக்குற மாதிரி கலந்துகிட்டேன். ஆனால் நான் சந்தோஷமா இல்லை அத்தான். எனக்கு வலிச்சது… ரொம்பவே வலிச்சது. வெளியே சிரித்து, கலாட்டா செய்து உள்ளுக்குள் வலியுடன் தான் வளைய வந்தேன் அத்தான்…” என்றவள் இப்போது எந்தத் தயக்கமும் இல்லாமல் தன் வலியை அவனிடம் பிரதிபலித்தாள்.

அவளின் வலி அவனையும் பாதித்தது.

மனைவியின் அருகில் சென்ற பிரபஞ்சன் அவள் கையில் இருந்த பத்திரிகையை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டான்.

“ஸாரி ராகா, எனக்கு எதுவுமே தெரியலை. உன் மேல எனக்கு ரொம்பப் பாசம் இருந்தது. எனக்கு ஒரு நல்ல பொண்ணு வாழ்க்கை துணையா கிடைக்கிற மாதிரி, உனக்கும் கிடைக்கணும்னு தான் அப்போ நினைச்சேன்.

நீ என்னை லவ் செய்திருப்பன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் ஒரு பக்கம் சந்தோஷமா இருந்த நேரத்தில் நீ வலியால் துடிச்சுருக்கன்னு நினைக்கும் போது இப்ப எனக்கு வலிக்குது.

என்ன லவ் உன் லவ்! உன் லவ் என்னை அடித்து வீழ்த்துகிறது ராகா. நம்ம கல்யாணம் முடியுற வரை எனக்கு லவ் மேல எல்லாம் பெருசா நம்பிக்கையே இல்லை ராகா.

ஆனா நம்ம கல்யாணத்துக்குப் பிறகு உன் ஒவ்வொரு செயலிலும் லவ் எப்படி இருக்கும்னு எனக்கு உணர்த்தியது நீதான் ராகா. எனக்கே தெரியாமல் உனக்கு நிறைய வலியைக் கொடுத்துட்டேன். ஸாரி ராகா…” என்றான்.

அவனின் அணைப்பில் சுகமாக அடங்கிக் கொண்டவள், “நீங்க ஸாரி சொல்ல வேண்டாம் அத்தான். நீங்க தெரிந்தே எந்தத் தப்பும் செய்யலை…” என்று அவனைத் தேற்றினாள்.

“ம்ம், நான் முதலில் ரொம்ப ஃபீல் பண்ணிருக்கேன் ராகா. அந்தப் பொண்ணு பைரவி ஏன் என்மீது தவறான புகார் கொடுத்தாள்? ஏன் என் கல்யாணம் நின்றது? ஏன் என் வாழ்க்கை மாறியதுன்னு. ஆனால் நீ என் வாழ்க்கையில் வரணும்னு தான் இத்தனையும் நடந்திருக்கு.

என் கல்யாணம் நிக்கலைனா நீ எனக்குக் கிடைச்சிருக்கவே மாட்ட. முன்னாடி ஃபீல் பண்ண நானே இப்ப சொல்றேன் ராகா. எனக்கு நடந்ததில் அம்மா இறந்ததைத் தவிர வேற எல்லாமே இப்ப எனக்கு வருத்தத்தைத் தரலை ராகா…” என்றான் ஆத்மார்த்தமாக.

இன்னும் கணவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் ராகவர்தினி. தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக அவன் கன்னத்தில் முத்தம் ஒன்றையும் வைத்தாள்.

தன் காதலை தான் உணர்ந்தது… அவன் திருமண நிகழ்வில் எப்படி எல்லாம் வேதனைபட்டாள் என அனைத்தையும் அவனுடன் பகிர்ந்து கொண்டாள் ராகவர்தினி.

அனைத்தையும் கேட்டு அவளுக்காக வருந்தினான், உருகினான் பிரபஞ்சன்.

“ஸாரி ராகா… ஸாரி ராகா…” என அவனின் உதடுகள் அடிக்கடி முணுமுணுத்தன.

“உன்கிட்ட ஒன்னு கேட்கணும் ராகா…” என்று பிரபஞ்சன் சொன்னதும் அவனின் மார்பிலிருந்து முகத்தை நிமிர்த்தி அவன் முகம் பார்த்தாள்.

“என்ன அத்தான்?”

“நான் நந்திதா கூடப் பேசியது, பழகியது எல்லாம் நினைச்சு இப்ப எதுவும் ஃபீல் பண்றியா?” என்று கேட்டான்.

“இல்லை அத்தான். அப்படி ஃபீல் பண்ண வேண்டிய தேவையும் இல்லை. கல்யாணம் முடிவாகிருக்கிற பொண்ணு கூட ஒரு பையன் அப்படிப் பேசலைனா எப்படி? ஆனால் நம்ம கல்யாணம் நடந்த பிறகு நீங்க எனக்கு மட்டும் தான்னு எனக்கு நல்லா தெரியும். அதனால் வேற எதையும் நினைச்சு நான் ஃபீல் பண்ணலை…” என்றாள்.

“உன்கிட்ட இவ்வளவு மெச்சூர்ட் நான் எதிர்பார்க்கவே இல்லை ராகா. இப்ப மட்டும் இல்லை எப்பவும்!

அதுவும் என்னை யாருமே நம்பாதப்ப நீ மட்டும் உறுதியா நம்பியது. எனக்காக ஆதாரம் தேடி அலைந்தது… என் மீது குற்றம் இல்லைன்னு நிரூபித்ததுன்னு நீ செய்தது எல்லாம் பெரிய பெரிய விஷயங்கள்.

அதுக்குப் பிறகு என் வாழ்க்கையில் நடந்த எல்லாத்திலேயும் நான் இருக்கிறேன் உனக்குன்னு நீ கூட இருந்தது எனக்குப் பெரிய ஆறுதல்!” என்றவன் அவள் நெற்றியில் இதமாக இதழ் பதித்தான்.

“என் அத்தானுக்காக நான் இல்லைனா வேற யார் இருப்பா அத்தான்?” என்று கேட்டவளை இன்னும் பிடித்தது அவனுக்கு.

“அதோட பைரவி சொன்னது பொய்ன்னு எனக்கு நல்லா புரிந்தது அத்தான். எத்தனை நாள் உங்க அறைக்குத் தனியா வந்திருக்கேன்? எவ்வளவோ தடவை உங்களைத் தொட்டுப் பேசியிருக்கேன். அப்ப எல்லாமே நீங்க கண்ணியமா நடந்துக்குவீங்க அத்தான்.

இவ்வளவு ஏன் நம்ம கல்யாணத்துக்குப் பிறகு கூட நீங்க என்னைத் தொட தயங்கியது உங்க கண்ணியத்திற்குச் சாட்சி. இவ்வளவு ஏன் உங்களுக்கு நிச்சயம் செய்த நந்திதாகிட்ட கூடக் கண்ணியத்தோட நீங்க பழகியதை பார்த்திருக்கிறேன்.

பார்வையில் கூட உங்க கண்ணியம் என்னைக்கும் தவறியது இல்லை. உங்களை நல்லா புரிந்த நானே உங்களை நம்பலைனா எப்படி?” என்று கேட்டாள்.

“தேங்க்ஸ் ராகா. நீ இவ்வளவு என்னை நோட் பண்ணிருப்பன்னு நான் நினைக்கவே இல்லை…” என்று அவளை உச்சி முகர்ந்தான்.

“என் மேல காதல் இருந்ததால் தான் ஹாஸ்பிடலில் கல்யாணத்துக்குக் கேட்டதும் உடனே சம்மதம் சொன்னியா?” என்று கேட்டான்.

“ஆமாம் அத்தான். அது மட்டுமில்லை… இன்னொன்னும் இருக்கு…” என்றாள்.

“என்ன ராகா?”

“நாம ஹாஸ்பிட்டல் வரும் முன்னாடி இனி உங்க வாழ்க்கையில் நந்திதா இல்லைன்னு நீங்க சொன்னதும் தான் நான் கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னேன்…”

“என்ன சொல்ற ராகா? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”

“சம்பந்தம் இருக்கு அத்தான். நீங்க நந்திதாவை கல்யாணம் முடிக்குற முடிவில் இருந்திருந்தால் நான் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லியிருக்க மாட்டேன்…”

“அப்போ உன் காதல்? அது நிறைவேறணும்னு நீ நினைக்கவே இல்லையா?” என்று கேட்டான்.

“உங்க ஆசையைக் கொன்னுட்டுத்தான் என் காதல் நிறைவேறணும்னு அவசியம் இல்லை அத்தான்…” என்றவளை வியந்து தான் பார்த்தான்.

யாராக இருந்தாலும் தன் காதல் ஜெயிக்க வேண்டும் என்று போராடுவார்கள். இல்லையென்றால் தன் காதலை உடைவர்களிடம் சொல்லி யாசிப்பார்கள். அப்படியும் இல்லையென்றால் தன் காதலை சொல்லி பதில் காதலையும் எதிர்பார்ப்பார்கள்.

ஆனால் ராகவர்தினி அப்படி எதுவுமே செய்யவில்லை.

அவள் நினைத்தது எல்லாம் காதலித்தவனின் மகிழ்ச்சி! அவனின் மகிழ்ச்சி எங்குள்ளதோ அது அவனுக்குக் கிடைக்க வேண்டும் அதுதான் தனக்கும் மகிழ்ச்சி என்ற எண்ணத்தைப் பிரதிபலித்த ராகவர்தினியின் காதல் அவனுக்கு வியப்பைத்தான் தந்தது.

அது ஏன் அப்படி என்று அவளிடமே கேட்கவும் செய்தான்.

அதற்கு அவள் சொன்ன பதில் அவனுக்கு அவள் மேல் உள்ள காதலை இன்னும் பெருக வைத்தது.

“எல்லாருக்கும் எல்லாமே கிடைத்து விடாது அத்தான். எனக்கு முன்னாடியே நீங்க கிடைக்கணும்னு இருந்திருந்தால் உங்க கல்யாணம் நிச்சயம் ஆகுறதுக்கு முன்னாடியே என் மனதில் நீங்க இருப்பதை நான் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் முன்னாடி எனக்கு அது புரியவே இல்லை. லேட்டாகத்தான் புரிந்தது. எனக்கு லேட்டா புரிந்ததும் உடனே வந்து என் காதலை சொல்லி அதை நீங்க ஏத்துக்கணும்னு நினைப்பது முட்டாள்தனம்.

என் காதல் எனக்குப் பெருசு தான். ஆனால் அதை விட உங்க மனம் எனக்குப் பெருசு. உங்க மனம் என் பக்கம் இருக்குன்னு நான் கொஞ்சம் உணர்ந்திருந்தாலும் உங்களுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆனது பற்றியெல்லாம் கவலைப்படாம என் காதலை சொல்லியிருப்பேன்.

ஆனால் உங்க மனம் என் பக்கம் சிறிது கூட இல்லை. வீட்டில் பார்த்த பெண்ணை மனைவியா ஏத்துக்கத் தயாரா இருந்தீங்க. அந்த நிலையில் எப்படி உங்க மனதை நான் குழப்ப முடியும்?

தன்னோட காதல் ஜெயிக்கணும்னு நினைக்கிறது மட்டும் காதல் இல்லை அத்தான். தான் காதலிக்கிறவர் சந்தோஷம் எதில் இருக்கோ அந்தச் சந்தோஷம் அவங்களுக்குக் கிடைக்கட்டும்னு நினைப்பதும் காதல் தான் அத்தான்…” என்றாள் தெளிவாக.

இப்படி ஒரு துணை யாருக்கு கிடைக்கும்? இதோ எனக்குக் கிடைத்திருக்கிறாள் என்று நினைத்து மகிழ்ந்தவன் முதல் முறையாக அவள் இதழில் தன் உதடுகளைப் பதித்தான்.

அவள் காதலை தான் உணர்ந்ததை அவளுக்கு உணர்த்துவது போல்!

நீ எனக்குக் கிடைத்தது தான் என் சந்தோஷம் என்று அவளுக்கு உணர்த்துவது போல் அவள் இதழில் நீண்ட முத்தத்தைத் தொடர்ந்தான் பிரபஞ்சன்.

அவன் உணர்த்தியதை அவனின் உதடுகள் வழியாக உள்வாங்கி உள்ளம் நிறைந்தாள் ராகவர்தினி.

“எனக்கு இன்னைக்கு ஒரு டவுட் கிளியர் ஆகிடுச்சு அத்தான்…” என்றவளை கேள்வியுடன் பார்த்தான் பிரபஞ்சன்.

“என்னோட கெமிஸ்ட்ரி வாத்திக்கு கெமிஸ்ட்ரி எல்லாம் நல்லா வேலை செய்யுமா செய்யாதான்னு டவுட் இருந்தது. இன்னைக்கு அவருக்குக் கெமிஸ்ட்ரி நல்லாவே வேலை செய்யும்னு தெரிந்து விட்டது அத்தான்…” அவன் தீண்டிய இதழ்களைச் சுளித்துக் கேலி செய்தாள் ராகவர்தினி.

அவன் அவளைச் செல்லமாக முறைக்க, அவள் அவனின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.

“ஆனால் ஒன்னு அத்தான்… எனக்கு நீங்க தான். உங்களுக்கு நான் தான் கிடைக்கணும்னு இருந்திருக்கு அத்தான். அதனால் தான் உங்க கல்யாணம் நின்றது. அதைவிட நீங்க உங்களை நம்பாத நந்திதா உங்களுக்கு வேண்டாம்னு உறுதியா இருந்தீங்க. அதையும் விட நந்திதா உங்களை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் உறுதியா இருந்தாங்க. அது எல்லாமே என் காதலுக்கு ஆண்டவனே கொடுத்த பரிசு போல…” தனது கேலியை விட்டு ஆத்மார்த்தமாகச் சொன்னாள்.

“என்ன சொல்ற ராகா? நந்திதா என்னை வேண்டாம்னு சொன்னாங்களா? நீ எப்ப அவங்களைப் பார்த்த?” என்று கேட்டான்.

அவளைப் பார்த்த சூழ்நிலையை அவனிடம் சொன்னாள்.

“ஏய், மோதிரத்தையும், போட்டோவையும் பார்த்துட்டா இன்னும் அவங்க மேல விருப்பம் இருக்கும்னு நினைச்சு நந்திதாகிட்ட பேச போன? நான் அன்னைக்குக் காலையிலேயே மோதிரத்தை கழட்டிட்டு எல்லாத்தையும் டெலிட் பண்றதாகத்தான் இருந்தேன். ஆனால் ஸ்கூல் போக வேண்டியது இருந்ததால் வந்து பார்த்துப்போம்னு விட்டுட்டேன். நான் வீட்டுக்கு வந்தப்ப நீயும் மாமாவும் வந்துட்டீங்க…” என்றான் விளக்கமாக.

“அது எனக்குத் தெரியாதே? இன்னும் அவங்க நினைப்பில் இருக்கீங்க போலன்னு தான் அவங்ககிட்ட பேச போனேன். ஆனால் அவங்க கல்யாணத்துக்கு மறுத்த காரணம் நான்…” என்றாள்.

“என்ன நீயா? நீ என்ன செய்த?” புரியாமல் கேட்டான்.

“அவங்க என் காதலை கண்டுபிடிச்சுட்டாங்க அத்தான்…” என்று நந்திதாவுடன் பேசியதை எல்லாம் சொன்னாள்.

“எனக்காகத்தான் விட்டுக் கொடுக்குறாங்களோன்னு எனக்கு உள்ளுக்குள் ஒரு குற்றவுணர்வு இருந்தது. ஆனால் கோவிலில் அவங்க கல்யாணம் அப்போ பார்த்த போது அவங்க கண்ணில் உங்க கூட என்னைப் பார்த்த பொறாமை எதுவும் தெரியாதப்பத்தான் எனக்கு நிம்மதியா இருந்தது…” என்றாள்.

“ஓ!” என்று கேட்டுக் கொண்டவன், “அவங்க உன் காதலை கண்டுபிடிக்காம போயிருந்தாலும் நின்ன கல்யாணம் நடந்திருக்காது ராகா. ஏனோ நின்ன கல்யாணம் திரும்ப நடக்கணும்னு எனக்கு ஆசையே வரலை…” என்றான்.

“அதான் உங்க வாழ்க்கையில் நான் தான் வரணும்னு அந்த ஆண்டவன் எழுதி வச்சுட்டானே. காலம் முழுவதும் உங்க குடும்பி என் கையில் தான்…” என்று குறும்பாகச் சொல்லி அவனின் தலையைக் கலைத்து விட்டாள் ராகவர்தினி.

“அதானே, இந்த ராக்கம்மா எனக்கே எனக்குக் கிடைக்கணும். அவள் அன்பு முழுவதும் என் மேலே பொழியணும்னு இருக்கும் போது அதற்கு எத்தனை தடைகள் வந்தாலும் தகர்க்காமல் போகுமா என்ன?

நான் நல்லா இருக்கணும்னு நினைச்ச உன்னோட நல்ல மனசுக்கு கடவுள் உனக்கே என்னைத் தூக்கிக் கொடுத்திட்டார். உன் அன்புக்கு முன் எதுவுமே ஈடு இணை இல்லை. ஈடில்லா எனதுயிர் ராக்கம்மா நீ…” என்றவன் அவளைக் காதலுடன் அணைத்துக் கொண்டான்.

“ஆமா அத்தான். நான் உங்க உயிர் தான்…” என்று தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக அவனின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“உன்னோட இந்த எதிர்பார்ப்பு இல்லாத காதலுக்கு என்னோட பரிசு என்ன தெரியுமா ராகா?” என்று கேட்டான்.

“என்ன அத்தான்?” ஆவலுடன் கேட்டாள்.

“என்னோட காதல் ராகா…!” என்றான் புன்சிரிப்புடன்.

“அத்தான்!”

“ஆமா ராகா. நானும் உன்னை விரும்புறேன். உன் அன்பும், காதலும் என்னுள் காதலை உதிக்கச் செய்து விட்டது ராகா…” என்று தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தினான்.

“எனக்கு ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கு அத்தான்!” என்று தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக அவன் முகம் முழுவதும் முத்தமிட்டு மகிழ்ந்தாள்.

அவளின் முத்த மழையில் நனைந்து திக்கு முக்காடிப் போனவன், “ஆமா, இந்த வெட்கம், நாணம், பயிர்ப்புன்னு ஏதோ சொல்லுவாங்களே அதையெல்லாம் எங்கயாவது ஒளிச்சு வச்சுருக்கியா? எந்த மூலையிலிருந்தாவது எட்டிப் பார்க்குமா?” என்று கிண்டலாகக் கேட்டான்.

“அது எதுக்கு வெட்டியா நமக்கிடையே? அதெல்லாம் நம்மை டிஸ்டெப் பண்ணும் அத்தான். அதான் நீ எங்கிட்ட வந்தால் கொலை பண்ணிடுவேன்னு சொல்லி மிரட்டி விரட்டி விட்டுட்டேன்.

உங்களுக்கு வேணுமா அது? வேணும்னா சொல்லுங்க வரச் சொல்றேன். ஆனா அது வந்த பிறகு நான் நானாக இருக்க மாட்டேன். யாரோ போல இருப்பேன்…”

“நோ! எனக்கு யாரோ வேண்டாம். என் ராக்கம்மா தான் வேணும்…” என்று அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டான் பிரபஞ்சன்.

பேசி பேசி களைத்தவர்கள் மெல்ல மெல்ல தாம்பத்யம் என்னும் புனித உறவினுள் நுழைந்து மூழ்கி முத்தெடுக்க ஆரம்பித்தனர்.

ஒருவரை ஒருவர் மனதால் மட்டுமல்ல. உடலாலும் முற்றும் முதலாக அறிந்து கொண்டனர்.

உடல் களைத்தாலும் உள்ளம் புத்துணர்ச்சியாக இருக்க, படுக்கையில் சோர்ந்து போயிருந்த மனைவியைத் தன் கையணைப்பிற்குள் கொண்டு வந்தான் பிரபஞ்சன்.

“என்ன அத்தான் இன்னும் வேணுமா? எனக்கு ஓகே!” என்று கண்சிமிட்டி சிரித்தாள் ராகவர்தினி.

அளவுக்கு மீறிச் சோர்ந்திருந்த நிலையிலும் தன் விருப்பத்தை நிறையவேற்ற துடிக்கும் மனைவியின் மீது நேசம் பொங்கி வழிந்தது.

“வேண்டாம் டா. நீ தூங்கு…” என்று அவள் தலையை இதமாக வருடி விட்டான்.

“பரவாயில்லை அத்தான். என்னால்…” என்று அவள் ஏதோ சொல்ல வர அவள் உதட்டில் மீது விரல் வைத்துத் தடுத்தான்.

“நம்ம வாழ்க்கை இந்த ஒரு நாள் இரவில் முடிந்து விடாது. எனக்கே எனக்கான என் ராகாவை நித்தம் நித்தம் காதல் செய்து சந்தோஷமா வாழுவேன்.

எனக்காக யோசித்து, எனக்காகத் தவித்து, எனக்காக ஆதரவாகப் போராடி, எனக்காக அவள் காதலையே விட்டுக் கொடுக்கத் தயாராகி, எனக்காகவே என்னைத் திருமணம் செய்து, எனக்காக எல்லாம் பார்த்து பார்த்துச் செய்து, என் மீது அளவில்லா அன்பையும், காதலையும் பொழியும் என்னுடைய யாதுமானவளாக நீயும் என் காலம் முழுவதும் தொடர்ந்து வருவாய். அதனால் கவலைப்படாமல் தூங்கு…” என்றான்.

“அடி ஆத்தி! இப்ப எப்படி நான் தூங்குவது?” என்று அலறி எழுந்து அமர்ந்தாள் ராகவர்தினி.

“ஏன்? என்னாச்சு?” புரியாமல் குழம்பிப் போனான் பிரபஞ்சன்.

“என்னோட வாத்தி புருஷன் எனக்காக… எனக்காகன்னு நிறையச் சொன்னார். அதில் இப்ப எத்தனை எனக்காக இருக்குன்னு நான் எண்ணியாகணுமே? அப்பத்தானே அவர் இதில் எதுவும் பரீட்சை வச்சால் நான் பாஸ் பண்ண முடியும்…” என்று கவலை கொண்டாள்.

அவளின் சேட்டையில் அவளை முறைத்துப் பார்த்தவன், “ராக்கம்மாவோட வாய் மட்டும் குறைவே மாட்டிங்குது” என்று அலுத்துக் கொண்டான்.

“அச்சோ! அப்போ உங்களுக்குச் சரியா லிப் டூ லிப் அடிக்கத் தெரியலைன்னு அர்த்தம் அத்தான். அதான் என் வாய் குறையாம அப்படியே இருக்கு. நான் வேணும்னா எப்படி வாயைக் குறைகிறதுன்னு சொல்லித் தரட்டுமா?” என்றவள் பேச்சோடு நிற்காமல் செயலிலும் இறங்க…

அவளைத் தன்னுடைய யாதுமானவளாக ஆக்கிக் கொள்ளும் முயற்சியில் இறங்கினான் பிரபஞ்சன்.

விட்டுப் பிரியாதது மட்டுமல்ல!

விட்டுக் கொடுப்பதும் காதலே!

விட்டுக் கொடுப்பது விட்டு விலகாமல்

விருப்பத்துடன் கைவந்து சேரும்!