24 – இதயத்திரை விலகிடாதோ?

அத்தியாயம் – 24

ஞாயிற்றுக்கிழமை!

ஊரே வீட்டிற்குள் அடங்கியிருக்க, வீட்டிற்குள் அடங்கியிருந்தவர்களுக்கு விடிந்ததும் பொருட்டில்லை, விடியாததும் பொருட்டில்லை என்பது போல் ஆகிப் போன லாக்டவுன் என்னும் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிய ஞாயிற்றுக்கிழமை அநியாயத்திற்குச் சோம்பலாக விடிந்தது.

காலை பத்து மணி ஆகிவிட்ட பின்னும், எழ மனமற்றுக் கண் விழித்த பின்னும், சோம்பி போய்ப் படுக்கையில் கிடந்தாள் யுவஸ்ரீ.

‘எழு! வேலை இருக்கிறது!’ என்று மூளை கட்டளையிட, ‘இன்னும் கொஞ்ச நேரம் படுத்திரு!’ என்று மனம் அடம்பிடித்தது.

கூடவே, ‘அவர் எழுந்திருப்பாரா?’ என்று யோசனை ஓடியது.

‘எழுந்திருந்தால் இந்நேரம் நடமாடிக் கொண்டிருந்திருப்பாரே?’ என்றும் தோன்றியது.

வெளியே அவனின் நடமாட்டமில்லை.

கணவனை நினைத்ததும் என்றுமில்லாமல் மனம் இதமாக இருந்தது.

இரவு கணவன் ஊட்டி விட உண்டதில் வயிறு மட்டுமில்லாமல், மனதும் நிரம்பிப் போயிற்று!

சற்று இலகுவாகப் பேசியதில் இரவு பற்றிய கேள்வி வருமோ என்று அவளை உறுத்தியது.

ஆனால் ‘குட்நைட்’ சொல்லிவிட்டு அறைக்குள் சென்று விட்டான் சூர்யா.

இப்படியே இருந்து விட முடியாது என்று தெரியும். ஆனால் இப்போதே ஒட்டிக் கொண்டு விடவும் அவளுக்கு விருப்பமிருக்கவில்லை.

கணவனின் அன்பு செயலுக்காக எதிர்பார்த்து ஏமாந்து கிடந்தவளுக்கு அது வேண்டும் வேண்டும் என்று மனம் அடம் பிடிக்கையில் அவளாலும் கணவனுடன் ஒன்ற முடியும் என்று தோன்றவில்லை.

கணவனின் இந்த மாற்றம் அவள் எதிர்பாராதது. ஆனாலும் அவனின் இந்த மாற்றத்தைத் தான் எதிர்பார்த்தாள் என்பதால் மனம் தித்தித்துப் போனது.

வரவேற்பறையில் டீவி ஓடும் சத்தம் கேட்க, கணவன் எழுந்து விட்டான் என்றதும் படுக்கையிலிருந்து எழுந்து குளியலறைக்குள் சென்றாள்.

குளித்துத் தயாராகியே வந்துவிட்டிருந்தாள்.

அறை கதவை திறந்த சத்தம் கேட்டு, சோஃபாவில் அமர்ந்திருந்த சூர்யா, திரும்பிப் பார்த்து, “குட்மார்னிங் பொண்டாட்டி…” என்றான்.

“குட்மார்னிங்…” என்றாள்.

“குளிச்சிட்டே வந்துட்டியா? நான் இன்னும் குளிக்கலை…” என்றான்.

“லீவ் தானே? மெதுவா குளிங்க. நான் இன்னும் சமைக்கலை, அதைப் போய்ப் பார்க்கிறேன்…” என்றாள் சமையலறைக்குச் சென்று கொண்டே.

“மெதுவா செய்! நான் குளிச்சுட்டு வர்றேன்…” என்றான்.

அவள் சாதாரணமாகப் பேசியதே அவனுக்குப் போதும் போல் இருந்தது.

ஒரே வீட்டில் இருந்து கொண்டு ஒருவருடன் ஒருவர் பேசாமல் இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை என்று இந்தச் சில நாட்களிலேயே பாடம் படித்திருந்தான் சூர்யா.

வார வாரம் அவளுக்குத் தனிமையைத்தான் கொடுத்திருந்தான்.

அப்போது என்ன மனநிலையில் இருந்திருப்பாள் என்று அவனுக்கு இப்போது புரிந்தது.

அவன் குளித்து விட்டு வந்த போது இட்லி தயாராக இருந்தது.

இன்னொரு பக்கம் குக்கரில் என்னவோ வைத்திருந்தாள்.

“தேங்காய் சட்னி மட்டும் தான் வச்சுருக்கேன். கூட இட்லி பொடி தொட்டுக்கப் போதும் தானே?” என்று கேட்டாள்.

“போதும்! உனக்கு என்ன செய்யப் போற? உனக்குத்தான் பொடி பிடிக்காதே?” என்று கேட்டவனைக் குறுகுறுப்பாய் பார்த்தாள்.

நேற்று தோசை கொடுத்த போது கவனித்திருக்கிறான் என்பதில் அவளின் மனதில் மெல்லிய சாரல்.

“தோசைக்குத் தொட்டுக்கத்தான் பிடிக்காது. இட்லிக்கு பிடிக்கும்…” என்றாள்.

சின்னச் சின்ன வார்த்தைகள்!

அன்பாய்! அரவணைப்பாய்!

நான் உன்னைக் கவனிக்கிறேன்! என்ற செயல் தன் துணையிடமிருந்து கிடைக்கும் இன்பமே அலாதியானது.

அதை அந்த இட்லி பொடியில் உணர்த்தினான் கணவன்.

மனைவி இப்போது சொன்னதையும் மனதின் ஓரம் குறித்துக் கொண்டான் சூர்யா.

இருவரும் எதிரெதிரே அமர்ந்து உண்டனர்.

“குக்கரில் ஏதோ வச்சுருக்க? என்ன அது?” உண்டு கொண்டே கேட்டான்.

“தக்காளி சாதம் வச்சுருக்கேன். தொட்டுக்க முட்டை பிரட்டல் செய்யணும்…” என்றாள்.

“இப்பத்தான் காலை சாப்பாடே சாப்பிடுறோம். அதுக்குள்ள ஏன்?”

“கையோடு வேலையை முடிச்சுட்டா ப்ரீயா இருக்கும்னு பார்க்கிறேன். வேலையை முடிச்சுட்டு இன்னைக்கு அமேசானில் ஒரு படம் பார்க்கணும்…” என்றாள்.

“என்ன படம்?” என்று கேட்டான்.

ஒரு ஆங்கிலப் படத்தின் பெயரை சொன்னாள்.

“ம்ம், நானும் அந்தப் படம் பார்க்கணும்னு நினைச்சேன். இரண்டு பேரும் சேர்ந்தே பார்ப்போம்…” என்றான்.

சாப்பிட்டு முடித்ததும், தக்காளி சாதத்திற்குத் தயிர் பச்சடியும், முட்டை பிரட்டலும் செய்ய ஆரம்பித்தாள்.

இடையில் சித்ரா அழைக்க, அவரிடம் சமையலறை மேடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் சூர்யா.

சித்ரா மருமகளிடம் பேச வேண்டும் என்று சொல்ல, “அவள் சமைக்கிறாள்மா. இருங்க ஸ்பீக்கரில் போடுறேன். பேசுங்க…” பச்சடிக்காக, கேரட்டை துருவிக் கொண்டிருந்தவள் முன் கைபேசியை நீட்டினான்.

“ஹலோ அத்தை, எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் மா. நீ என்ன சமைக்கிற?” சித்ரா கேட்க,

தான் செய்து கொண்டிருக்கும் உணவு வகைகளைச் சொன்னாள்.

“கண்ணாவுக்கு நான்வெஜ் இல்லாமல் தொண்டையில் சாப்பாடு இறங்காது. தக்காளி சாதத்தை எப்படிச் சாப்பிட போறானோ?” என்றார்.

“அதுக்கு என்ன செய்ய முடியும் அத்தை? இந்த லாக்டவுனில் கறிக்கு எங்கே போவது? அதான் முட்டை நிறைய வாங்கி வச்சிருக்கேன். நான்வெஜ் சாப்பிட தோனும் போது முட்டையில் ஏதாவது வெரைட்டி செய்து கொடுக்கிறேன்…” என்றாள்.

“நீ மட்டும் செய்யாத. கண்ணாவையும் செய்ய வை!” என்றார்.

‘யார் இவர் சமைப்பாவாராம்?’ என்பது போல் கணவனைக் கேலியாகப் பார்த்தாள்.

“அம்மா, பேசாம இருங்க. எனக்குக் குக்கிங் எல்லாம் தெரியாது…” என்று சூர்யா அலற, யுவஸ்ரீயின் உதடுகளில் நமட்டுச் சிரிப்பு நெளிந்தது.

“இதுவரைக்குத் தெரியலையானால் போகுது. இனி தெரிந்து கொள். லீவில் வீட்டில் சும்மா தானே இருப்ப…” என்றார் சித்ரா.

“உங்களுக்கு ஏன்மா இந்த விபரீத ஆசை?”

“வீட்டில் பொழுது போகலைன்னு உன்னோட அப்பாவே என் கூட ஹெல்ப் செய்றார். உனக்கு என்னடா?”

“அப்பாவுக்குச் சமையல் வேலை தெரியும், செய்றார். நான் அப்படியா? நான் சமைச்சால் உங்க மருமகள் தான் சாப்பிடணும். எதுக்கு இந்த விபரீத பரீட்சை? இந்த நேரத்தில் அவசரத்துக்கு ஹாஸ்பிட்டல் கூடப் போக முடியாது…” என்றான்.

“சும்மா அலறாதே கண்ணா! இப்படியே சொல்லி தப்பிக்கவும் நினைக்காதே! பாவம் என் மருமகள். கம்பெனி வேலையும் பார்த்து, வீட்டு வேலையும் அவள் தான் பார்க்கணும். இந்த நேரத்தில் உதவிக்கு வேலை ஆள் கூட வைக்க முடியாது. நீ ஏதாவது கூடச் செய்! நான் சும்மா விளையாட்டுக்கு சொல்லலை…” என்றதும் அமைதியாக இருந்தான்.

“அவன் மாட்டேன்னு சொல்றான்னு அப்படியே விடாதே யுவா. நீங்க இரண்டு பேரும் தனியா இருக்கீங்க. நாள பின்ன உனக்கு வேலை பார்க்க முடியாமல் போனால் அந்த நேரம் கண்ணா ஏதாவது ஹெல்ப் செய்யவாவது கத்துக்கிறது நல்லது தான்…” என்றார்.

லாக்டவுனில் சுற்றிலும் கேள்விப்படும் விஷயங்கள் அவரை அப்படிப் பேச வைத்தது.

அதோடு மகனின் குணமும் அவருக்குத் தெரியும். இந்த நேரத்தில் மனைவிக்கு உதவி செய்யும் போது மனதளவில் அவர்களின் அன்னியோன்யம் வளரும் என்று நினைத்தார்.

“என்ன கண்ணா, செய்வீயா?” மகன் சரி என்று சொல்லும் வரை விட மாட்டார் என்பது போல் கேட்டார்.

ஏற்கனவே மனைவியின் மனதோடு ஒட்டிக் கொள்ளும் முயற்சியில் இருந்த சூர்யாவும், “சரிம்மா…” என்றான்.

அவன் சம்மதிப்பான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

சித்ரா பேசி முடித்து அழைப்பை துண்டித்ததும், “அதான் உன் மாமியாரே சொல்லிட்டாங்களே… நான் என்ன செய்வதுன்னு சொல்லு…” என்று அவள் அருகில் வந்து நின்றான் சூர்யா.

அலங்கார வார்த்தைகள் எதுவும் சொல்லாமல், அவள் துருவி கொண்டிருந்த கேரட்டை கணவன் கையில் குடுத்து, “இதைச் சீவுங்க…” என்றாள்.

அவனும் வாங்கித் துருவ ஆரம்பித்தான். இரண்டு, மூன்று முறை அவன் கையை விட்டுக் கேரட் நழுவி நழுவி போனது.

தடுமாறி, தத்தளித்துக் கணவன் வேலை பார்ப்பதை பார்த்து அவளுக்குச் சிரிப்பு வரும் போல் இருந்தது.

ஆனாலும், அவன் அதைப் பார்ப்பதே பெரிது என்று நினைத்தவள், தன் வேலையை அமைதியாகப் பார்த்தாள்.

“ஹப்பா! முடிந்தது!” ஏதோ பெரிய மலையைப் புரட்டி போட்டு விட்டு வந்தது போல் அலுத்துக் கொண்ட கணவனை இப்போது பார்த்து இதுவரை மறைத்து வைத்திருந்த புன்னகையைச் சிந்தினாள் யுவஸ்ரீ.

“ஹோய்! என்ன நக்கலாடி பொண்டாட்டி?” என்று அதட்டியவன், உதடுகளிலும் புன்னகை நெளிந்தது.

“சரி… சரி… அடுத்து என்ன செய்யணும், சொல்லு…” என்றான்.

“இப்ப எதுவும் செய்ய இல்லை. நான் செய்வதைப் பாருங்க. போர் அடிச்சா நீங்க போங்க. நான் பார்த்துப்பேன்…” என்றாள்.

“என்ன விளையாடுறியா? இவ்வளவு நேரம் அம்மா பேசியதை கேட்ட தானே? நீ சொல்லி கொடு, நான் கத்துக்கிறேன்…” என்றான் பிடிவாதமாக.

அவனையும், அவன் சற்று நேரத்திற்கு முன் செய்த வேலையையும் பார்த்தாள்.

கேரட் சீவ கொடுத்த பாத்திரத்தை தாண்டி கேரட் சிந்தி கிடந்தது.

அவள் பார்வையைப் பார்த்தவன், “அது… புதுசா வேலை கத்துக்கிறேன்ல? அப்படித்தான் இருக்கும்…” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.

“சரிதான், இப்படிச் செய்யும் வேலை எல்லாத்தையும் கொட்டிக்கிட்டே இருந்தால் அதைக் கிளீன் பண்ற வேலையும் சேர்த்து நான் தான் பார்க்கணும்…” என்றாள்.

“அப்போ அந்த வேலையும் நான் பார்க்கிறேன்…” என்றான்.

“வேண்டாம் சாமி, என்னை ஆளை விடுங்க. நான் சீக்கிரம் வேலையை முடிக்கணும். உங்க விஷப்பரீட்சையை எல்லாம் இன்னொரு நாள் பார்க்கலாம்…” என்றவள், பேசிக் கொண்டே மடமடவென்று வேலையை முடித்தாள்.

அவள் வேலை செய்யும் வேகத்தைக் கண்டு மலைத்துப் போனான் சூர்யா.

வேகமாகவும், லாவகமாகவும் வேலையைப் பார்த்தாள்.

‘தன் பொண்டாட்டி கெட்டிக்காரி தான்’ சூர்யாவின் மனம் கர்வத்துடன் நினைத்துக் கொண்டது.

அவள் வேலை செய்வதை இதுவரை கவனித்துப் பார்த்தது இல்லை என்பதால், வியப்பாகத்தான் பார்த்தான்.

இதைத் தெரிந்து கொள்ள அவனுக்கு இத்தனை மாதங்கள் ஆகியிருக்கிறது. அதை நினைக்கும் போதே ‘என்னைப் பத்தி உங்களுக்கு எதுவுமே தெரியாது’ என்று மனைவி சொன்னது உள்ளுக்குள் இருந்து குத்தியது.

அவள் சொன்னது உண்மைதானே? அவளைப் பற்றி அவனுக்கு எதுவுமே தெரியவில்லை.

மனைவியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். நேற்று வரை இருந்த இறுக்கம் குறைந்து, நிர்மலமாக இருந்தது அவள் முகம். அடுப்பின் அனல் அவள் முகத்தில் ஆங்காங்கே வேர்வை துளிகளைப் பூக்க வைத்திருந்தது.

உதட்டின் மேலேயும், நெற்றியின் மீதும் பூத்திருந்த வேர்வை துளிகளைப் பார்க்க பார்க்க, அவனைச் சில்லு சில்லாக நொறுக்கிக் கொண்டிருந்தது.

அவள் மீது ஏற்கனவே பித்தாக இருப்பவனை அந்த வேர்வை துளிகள் ‘வா, வந்து உன் உதடுகளால் என்னை ஒற்றி எடு!’ என்று அவனை அழைப்பது போல் இருந்தது.

ஆனால் அதைச் செய்ய விடாமல் மனைவியின் வார்த்தைகள் அவன் கால்களை அவளை நோக்கி நகர விடாமல் கட்டிப் போட்டது.

ஆனாலும் அப்படியே பார்த்துக் கொண்டிருக்க முடியாமல், என்ன செய்வது என்று யோசித்தவன், அங்கிருந்த டிஸ்யூ பேப்பரை எடுத்துக் கொண்டு அருகில் சென்றான்.

“இந்தப் பக்கம் திரும்பு பொண்டாட்டி!” என்றான்.

“என்ன? சொல்லுங்க…” முட்டை பிரட்டலில் மிளகு தூள் போட்டு பிரட்டிக் கொண்டிருந்தவள், அவன் பக்கம் திரும்பாமல் கேட்டாள்.

“திரும்புடி!” என்றான்.

எதற்கு என்று புரியாமல் திரும்பியவளின் நெற்றியையும், உதட்டின் மேலேயும் பூத்திருந்த வேர்வை துளிகளையும் டிஸ்யூ பேப்பர் கொண்டு ஒற்றி எடுத்தான்.

அவனின் செய்கையை எதிர்பாராமல் விழிகளை விரித்தாள்.

விரிந்த விழிகளில் மொத்தமாய்த் தொலைந்து போனான் சூர்யா.

கூடலின் போது கூட ரசித்துப் பார்க்க தவறிய அவளின் முகப் பாவனைகளை இப்போது பார்த்து ரசித்தான்.

இத்தனை நாட்களும் மனைவியை ரசித்துப் பார்க்காத தன்னை, ‘ரசனை கெட்டவன்டா நீ!’ என்று திட்டிக் கொண்டான்.

அவளின் கண்ணோடு தன் கண்ணைக் கலக்க விட்டான் சூர்யா.

அந்த நொடி அவளைக் கொஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும் என்று தோன்றாமல் ரசிக்க வேண்டும் என்று தோன்றியது சூர்யாவிற்கு.

அதனை உணர்ந்தவள், ‘இந்த ரசனையும் ரொமான்ஸ் தான் புருஷா!’ என்று மனதோடு சொல்லிக் கொண்டவள் கணவனைப் பார்த்து புன்முறுவல் பூத்தாள்.

சொக்கிப் போனான் அவளவன்!

அவனின் அதரங்களும் அப்புன்முறுவலில் பூவாய் மலர்ந்து கொண்டது.

“என்ன சிரிப்பு?” என்று கேட்டான்.

“என்ன திடீர்ன்னு இவ்வளவு அக்கறை?” சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“இனி அப்படித்தான்!” என்ற பதில் மட்டுமே அவனிடமிருந்து கிடைத்தது.

அந்தப் பதிலிலும் ஆனந்தமடைந்தாள்.

செய்த சாப்பாட்டை எல்லாம் ஹாட் பாக்ஸில் எடுத்து வைத்தாள் யுவஸ்ரீ.

அவள் சொல்லாமலே அதைக் கொண்டு போய் டைனிங் டேபிளில் அடுக்கி வைத்தான் சூர்யா.

அடுப்பை துடைத்து விட்டு, குளியலறை சென்று முகம் கழுவி கொண்டு வந்து சோஃபாவில் அமர்ந்தாள்.

மனைவியின் அருகே அமர்ந்து கொண்டான் சூர்யா.

“படம் பார்ப்போமா?” என்று கேட்டான்.

“பார்க்கலாம் சூர்யா, போடுங்க…” என்றாள்.

தொலைக்காட்சியை உயிர்ப்பித்து மனைவி சொன்ன ஆங்கிலப் படத்தைப் போட்டு விட்டான்.

ஐம்பது இஞ்ச் டீவியில் படம் ஓட ஆரம்பிக்க, இருவரும் பார்க்க ஆரம்பித்தனர்.

நடுநடுவே படம் பற்றித் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இப்படி இருவரும் சேர்ந்து படம் பார்ப்பது புது அனுபவமாக இருந்தது.

ஒரு மணி நேரம் படம் ஓடியிருக்க, “பசிக்குது பொண்டாட்டி, சாப்பிடலாமா?” என்று கேட்டான் சூர்யா.

“படம் சுவாரசியமாகப் போய்ட்டு இருக்கு சூர்யா. இப்ப எழுந்து போகவா?” என்று கேட்டவள், “சரி, இருங்க…” எனப் படத்தை நிறுத்தி வைத்து விட்டு ஹாட் பாக்ஸை எடுத்துக் கொண்டு வந்து சோஃபாவிற்குக் கீழ் வைத்தாள்.

“என்ன பண்ற யுவா?”

“இங்கேயே படம் பார்த்துட்டே சாப்பிடுவோம் சூர்யா…” என்றாள்.

“குட்! நானும் வர்றேன்…” என்று அவனும் சேர்ந்து எடுத்து வைத்தான்.

சாப்பாட்டு, தண்ணீர் எல்லாம் தரையில் வரிசை கட்டியது.

“இப்ப படத்தைப் போட்டு விடுங்க…” என்று சொல்லி விட்டு, தட்டில் உணவை பரிமாறினாள்.

இருவரும் படத்தைப் பார்த்துக் கொண்டே உண்ண ஆரம்பித்தனர்.

“இப்படிப் படம் பார்க்கிறது ரொம்பப் பிடிச்சிருக்கு யுவா. ச்சே, இதை இத்தனை நாளா மிஸ் பண்ணிட்டேனே…” என்றான் வருத்தமாக.

அவளுக்கும் அந்த வருத்தம் உண்டு.

இது எல்லாம் அவளின் நீண்ட நாள் ஆசை. கணவனுடன் இப்படிப் பேசிக் கொண்டே படம் பார்க்க வேண்டும். ஒன்றாகச் சாப்பிட வேண்டும். அரட்டை அடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறாள். அது எல்லாம் இன்று நிறைவேறவும், அவளின் கண்களில் கண்ணீர் துளிகள் பூத்தது.

“என்ன மிளகாயை கடிச்சுட்டியா?” என்று அதையும் கவனித்துக் கேட்டான்.

‘இல்லை’ என்று தலையை அசைத்தவள், கண்ணீரை விழுங்க தண்ணீரை எடுத்து விழுங்கினாள்.

அவளை யோசனையுடன் பார்த்தான்.

“இப்படிப் படம் பார்க்கிறது பிடிச்சுருக்கா?” அவனே யூகித்துக் கேட்டான்.

மறுக்காமல் ‘ஆமாம்’ என்று தலையை அசைத்தாள்.

இவளின் இந்த ஆசையை இனி எப்போதும் நிறைவேற்ற வேண்டும் என்று மனதிற்குள் குறித்துக் கொண்டான்.

கூடவே, சின்னச் சின்ன விஷயத்திற்குக் கூட மனைவி எவ்வளவு தூரம் ஏங்கி போயிருக்கிறாள் என்பது புரிய, அவளை ஏங்க வைத்தவன் தான் அல்லவா? என்ற எண்ணம் மனதை அறுத்தது.

தன்னை நம்பி வந்தவளை இப்படி ஏங்க வைத்து விட்டு, தான் என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம்? என்று நினைக்கும் போது தன் மீதே வெறுப்பாக வந்தது.

அவளை மட்டுமா ஏங்க வைத்தான்? அவனையே அவன் இவ்வளவு நாளும் இந்தச் சந்தோஷங்களை எல்லாம் அனுபவிக்காமல் ஏமாற்றி இருக்கிறான்.

இருவரும் சாப்பிட்டு முடித்த பிறகும் கையைத் தட்டிலேயே கழுவி விட்டு அப்படியே அமர்ந்து படம் பார்த்தனர்.

படம் முடிந்த பின்னே எடுத்து வைத்தனர்.

“படம் உனக்குப் பிடிச்சதா யுவா?” சூர்யா கேட்க,

“ரொம்பப் பிடிச்சது சூர்யா. முடிவு நெகட்டிவ் எதுவும் கொடுத்திடுவாங்களோன்னு பயந்தேன். ஆனால் பாசிட்டிவ் முடிவை பார்த்ததும் தான் மனசு பாரம் இல்லாமல் இலகுவா இருக்கு…” என்றாள்.

“ஏன் உனக்கு நெகட்டிவ் முடிவு பிடிக்காதா?”

“அப்படின்னு சொல்ல முடியாது. கதைக்குச் சில நேரம் நெகட்டிவ் முடிவு தான் சரியா இருக்கும். அதுக்குச் சரியான காரணங்கள் இருந்தால் அதையும் ஏற்றுக் கொள்ளுவேன். ஆனாலும் மனம் ஒரு மாதிரி பாரமா இருக்கும். அன்னைக்கு சரியா தூங்க கூட முடியாது. அதே பாசிட்டிவ் முடிவுனா மனசுல இருக்குற கஷ்டம் எல்லாம் காணாம போயிட்ட மாதிரி இருக்கும்…” என்றாள்.

“ஓ, ஓகே! ஆனா நீ படம் பார்த்து நான் பார்த்ததே இல்லை. எப்ப படம் பார்ப்ப?”

“வீக் எண்ட் எனக்குத் துணையே படங்களும் தான். படம் பார்க்காத போது பாட்டு போட்டு விட்டுடுவேன். எந்த நேரமும் அது ஓடிட்டு இருக்கும் போது தனிமை தெரியாது…” என்றவளை கண்களில் வலியுடன் பார்த்தான் சூர்யா.

படத்திலும், பாட்டிலும் அவள் தனிமையைப் போக்கும் நிலைமைக்கு மனைவியைத் தள்ளி விட்டவன் நான் தானே?

‘என்ன செய்து வைத்திருக்கிறேன் நான்?’ என்ற கேள்வி அவனைக் கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது.