24 – மின்னல் பூவே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் - 24
“இந்த வீடு ஓகேன்னு தோணுது. கீழே பார்க், ஜிம் இருக்கு. சூப்பர் மார்க்கெட் கூடப் பக்கத்திலேயே இருக்கு. வேலைக்குப் போய்ட்டு வந்து பொருட்கள் எல்லாம் பக்கத்திலேயே வாங்க வசதியா இருக்கும். ஆபிஸில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தான் வருது. இதையே பேசி முடிச்சுடலாம் மாமா…” என்று வீரபத்ரனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் முகில்வண்ணன்.
“உத்ராவுக்கும் ஓகே வான்னு கேட்டு முடிச்சுடலாம் மாப்பிள்ளை…” என்றவர் அவன் தன் மகளிடம் சம்மதம் கேட்பான் என்று நினைத்தார்.
ஆனால் “இந்தப் பால்கனி நைட் நேரத்தில் கூட உட்கார வசதியா இருக்கும். இங்கே ஒரு ஊஞ்சல் போட்டால் நல்லா இருக்கும் போல…” என்று அவரின் பேச்சைக் கவனியாதவன் போலப் பால்கனியில் சென்று நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் தன் மகளைப் புறக்கணித்து விட்டுச் செல்வது வெளிப்படையாகத் தெரிய வீரபத்ரனின் கண்கள் கோபத்தால் சிவந்தன.
“கல்யாணம் முடிஞ்ச பிறகும் அப்படி என்ன வீம்பு? கூப்பிட்டு வச்சு நான் வெளிப்படையா பேசிட போறேன். ஒரு பொண்ணு தைரியசாலியா இருந்தால் பாராட்டலைனாலும் அதைக் குறை சொல்லாம இருக்கணும். அதை விட்டு இப்படி நடந்துகிறது கொஞ்சம் கூட எனக்குப் பிடிக்கலைமா…” என்று தன் அருகில் இருந்த மகளிடம் மெல்லிய குரலில் தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.
“ரிலாக்ஸ் பா. இப்போ எதுக்கு இவ்வளவு கோபம்? நீங்க சொன்ன மாதிரி எங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. இனி அவர் மனைவியை அவரே தான் புரிஞ்சு நடந்துக்கணும். இதில் நீங்க என்ன பேச போறீங்க? கண்டுக்காம விடுங்க…” என்றாள் உத்ரா.
“எவ்வளவு நாளைக்குமா இப்படி நான் கையைக் கட்டி வேடிக்கைப் பார்க்கணும்?” என்று கேட்டவரின் மீசை கோபத்தால் துடித்தது.
“அப்பா, ப்ளீஸ் கோபப்படாதீங்க. அவரோட வாழ்க்கையில் இப்போ வம்படியா திணிக்கப்பட்டவள் நான். யாரோ தெரியாத ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிருந்தாலும் அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கும்.
ஆனால் என்னை வேண்டாம்னு சொல்லிட்டு இப்போ நானே அவர் வாழ்க்கையில் வந்துட்டதை அவரால் ஈஸியா எடுத்துக்க முடியலை. முகில் இடத்தில் நானே இருந்தாலும் இப்படித் தான் நடந்து கொண்டிருப்பேன்…” என்று அவள் சொல்ல,
“நீ ஒன்னும் கண்டிப்பா இப்படி நடந்துருக்க மாட்டம்மா…” என்றார்.
“நீங்க உங்க பொண்ணு பக்கம் மட்டுமே யோசிச்சு பார்க்கிறீங்க பா. ஆனால் முகில் பக்கம் இருந்தும் கொஞ்சம் யோசிங்க…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே முகில் பால்கனியிலிருந்து அங்கே வர அவர்களின் பேச்சு நின்றது.
வீரபத்ரனிற்கு முகில் பக்கமிருந்து யோசிக்கப் பிடிக்கவில்லை.
இதற்கு முன் மகளை அவன் வேண்டாம் என்று சொன்ன போது அது அவனின் சுதந்திரம். அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதைச் சொல்ல உரிமை இருக்கிறது என்று நினைத்து அமைதியாக இருந்திருக்கிறார்.
ஆனால் இப்பொழுதோ மனைவியாகிவிட்டவளை அவன் ஒதுக்கி நிறுத்துவது அவருக்குச் சரியாகபடவில்லை.
ஆனாலும் அவனுக்கும் உத்ராவை மனைவியாக ஏற்றுக்கொள்ள நேரம் தேவைப்படும் என்று தான் அவனிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாகப் பேசிப் பழகிக் கொண்டிருந்தார்.
ஆனால் இப்போது தன் முன்னால் கூட அவளிடம் ஒரு சாதாரண அபிப்பிராயத்தைக் கூடக் கேட்காமல் நிராகரித்து விட்டுச் செல்வதைத் தந்தையாக அவனின் செய்கையை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
ஆனாலும் மருமகன் ஆகிவிட்டவனை ஒரு அளவுக்கு மேல் முறைத்துக் கொண்டிருக்க முடியாமல் அவனிடம் சாதாரணமாகவே நடந்து கொள்ள முயன்றார்.
“உனக்கு இந்த வீடு பிடிச்சிருக்கா உத்ரா? பிடிச்சிருக்குனா மேலே பேசலாம். இல்லைனா வேற பார்ப்போம்…” என்று மருமகன் கேட்க மறுத்ததைத் தானே மகளிடம் கேட்டார்.
அவர் பேசிய விதமே ‘இந்த வீடு என் மகளுக்குப் பிடிக்கவில்லை என்றால் நீ வேறு வீடு தான் பார்க்க வேண்டும்’ என்ற குறிப்பு முகிலுக்கு இருந்தது.
ஆனால் அதை அவன் கவனித்துப் புரிந்து கொள்வதற்குள் “எனக்கு இந்த வீடே பிடிச்சிருக்குபா…” என்று சொல்லியிருந்தாள் உத்ரா.
“உனக்குப் பிடிச்சிருந்தால் அப்போ முடிச்சுடலாம் மா. நீங்க என்ன சொல்றீங்க மாப்பிள்ளை?” என்று முகிலிடம் கேட்டார்.
“அப்பா, அம்மாவை ஒரு முறை அழைச்சுட்டு வந்து காட்டிட்டு அட்வான்ஸ் கொடுத்திடலாம் மாமா…” என்றான்.
“அதுவும் சரி தான்…” என்றார்.
“சரி, அப்போ நாம கிளம்பலாம். அஜந்தா அங்கே சாப்பாடு ரெடி பண்ணிருப்பாள்…” என்றார்.
அன்று காலை உணவு முடிந்ததுமே வீடு பார்க்க முகில், உத்ரா, வீரபத்ரன் மூவரும் கிளம்பி வந்திருந்தனர்.
அஜந்தா வீட்டில் இருந்தார்.
நான்கைந்து வீடுகள் பார்த்ததில் எதுவும் திருப்தி இல்லாமல் போகக் கடைசியாகப் பார்த்த வீடு திருப்தியாக இருக்க அதைப் பற்றிப் பேசிவிட்டு வீட்டிற்குக் கிளம்பினர்.
இன்றும் விருந்து தயார் செய்து வைத்திருந்தார் அஜந்தா. உணவை முடித்துவிட்டு வெளியே அலைந்து விட்டு வந்ததால் ஓய்வு எடுக்க அறைக்குள் சென்று விட்டான் முகில்வண்ணன்.
உடனே படுக்கக் கூடாது என்று கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான்.
வீரபத்ரனும் ஓய்வு எடுக்கச் சென்று விட, டைனிங் ஹாலில் அமர்ந்து உத்ராவும், அஜந்தாவும் மெதுவான குரலில் பேசிக் கொண்டிருந்தனர்.
“இன்னைக்கு விமலா போன் போட்டாள் உத்ரா. கமலி பத்தி இன்னும் ஒன்னும் தெரியலைன்னு கவலைப்பட்டாள். இந்தப் பொண்ணுக்குப் புத்தி ஏன் இப்படிப் போச்சுன்னு புலம்பி அழுதாள்…” என்றார் அஜந்தா.
“நான் விசாரிக்கச் சொன்னதை விசாரிச்சாங்களாமா?” என்று கேட்டாள் உத்ரா.
“விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க உத்ரா. இன்னைக்குக் கூட அதுக்காகத் தான் அவள் வீட்டுக்காரர் வெளியே போயிருக்காராம்…” என்றார்.
“சரிமா விசாரிச்சுட்டு விவரம் தெரிந்ததும் சொல்ல சொல்லுங்க. இல்லனா சித்திகிட்ட நானே அப்புறம் பேசுறேன்…” என்றாள்.
“ஏன் உத்ரா, ஏதோ சாமான் வாங்கணும்னு லீவு நாளில் எல்லாம் உன்னையும் இழுத்துட்டு போனாளே, அப்படி என்னத்தை வாங்கினாள்?” என்று கேட்டார்.
“அவள் எங்கம்மா என்கிட்ட வாங்கணும்னு சொன்ன பொருளை எல்லாம் சரியா வாங்கினாள்? என்னை வரச் சொல்லிட்டுக் கடை கடையா சுத்தினாள். அவள் சொன்னதில் பாதிப் பொருள் வாங்கிட்டு இருக்கும் போதே நேரமாச்சு. இன்னொரு நாள் வாங்குவோம்னு ஓடிடுவாள்…”
“அதுக்கு எதுக்கு உன்னையும் வரச் சொல்லி வம்பு பண்ணினாள்?”
“அது தான் எனக்குச் செம கடுப்பா ஆகிடுச்சுமா. கடைக்குப் போகணும்னு வெள்ளிக்கிழமை ஆனால் சரியா ஈவ்னிங் ஆபிசில் வேலை பார்த்துட்டு இருக்கும் போதே போன் போட்டு கூப்பிட்டுடுவாள். சரின்னு லீவ்ல ரெஸ்ட் எடுக்காம அவள் கூடப் போனால் அரையும், குறையுமா வாங்கிட்டு ஓடுவாள்.
அன்னைக்கு நைட் நாம அப்பாகிட்ட பேசி முடிச்சுட்டுப் படுக்கப் போன பிறகு அவள் எனக்குப் போன் போட்டுக் கொஞ்சம் சாமான் வாங்கணும் ஹெல்ப் செய்ய முடியுமான்னு கேட்டாளே? அன்னைக்கே என்னால் முடியாது. எனக்கு வேலை இருக்குன்னு நான் சொல்லியிருக்கணும். தப்புப் பண்ணிட்டேன்…” தன்னை அலைய வைத்துவிட்டாளே என்ற எரிச்சலை வெளிப்படுத்தினாள் உத்ரா.
“ஆனா இப்போ எனக்கு அதுலயும் ஒரு டவுட் இருக்குமா. அவள் என்கூடப் பொருள் எல்லாம் வாங்கணும்னு சித்திகிட்ட சொல்லிட்டு வந்துட்டு, என்கூடக் கொஞ்ச நேரம் மட்டும் இருந்துட்டு, மீதி நேரத்தில் வேற என்னமோ பண்ணிருக்காள்னு தோணுது.
என் பேரை சொன்னால் சித்தி ஒன்னும் சொல்ல மாட்டாங்கன்னு என்னையும் இதில் உள்ளே இழுத்து விட்டுருக்காள்னு நினைக்கிறேன்…” என்றாள் உத்ரா.
“இருந்தாலும் இருக்கும் உத்ரா. மணமேடை வரும் வரை கமுக்கமா இருந்தவள் செய்திருக்கச் சான்ஸ் இருக்கு. இங்க பாரு. விவரம் இல்லாம நாம பாட்டுக்குப் பேசிட்டு இருக்கோம். உள்ளே மாப்பிள்ளைக்குக் கேட்டால் டென்ஷன் ஆகிட போறார்…” என்றார் அஜந்தா.
“முகில் இந்த நேரம் தூங்கி இருப்பார்மா…” என்றாள்.
“ஆனாலும் நாம அவரையும் வச்சுக்கிட்டு கமலினி பத்தி பேசாம இருக்குறது தான் நல்லது. நீயும் வேணும்னா போய்க் கொஞ்ச நேரம் படுத்திரு…” என்றார்.
“இல்லமா, நாளைக்கு நான் அங்கே போய்டுவேன். அதனால் இப்போ நான் உங்க கூடவே பேசிட்டு இருக்கேன்…” என்றாள்.
மாப்பிள்ளைக்குக் கேட்டு விடும் என்று அஜந்தா பேச்சை மாற்றியிருக்க, அதற்கு முன் அவர்கள் பேசியதை கேட்டுருந்தான் முகில்வண்ணன்.
சிறிது நேரம் அமர்ந்திருந்து விட்டுப் படுக்கலாம் என்று அவன் கட்டிலில் சாய்ந்ததும் விக்கல் வர, தண்ணி குடிக்கலாம் என்று எழுந்து அறை வாசலுக்கு வந்த போது தான் அவர்கள் பேசிக்கொண்டிருந்தது கேட்க, அப்படியே நின்றுவிட்டான்.
கடைக்குப் போனதை பற்றி அஜந்தா விசாரித்துக் கொண்டிருக்கும் போதே வந்து விட்டவன் அவர்கள் பேசி முடித்த போது திரும்ப உள்ளே சென்று அமர்ந்து விட்டான்.
அவனின் விக்கல் கூட அதுவாக நின்று போயிருந்தது.
இரவு குடும்பத்திற்கான நேரத்தில் உத்ரா வேறு யாருடனும் பேச மாட்டாள் என்று தெரிந்த போதே உத்ராவின் மீது தவறில்லை. அவள் பெயரை சொல்லி அந்தக் கமலினி தான் தன்னை ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறாள் என்று அவனுக்குப் புரிந்து போனது.
அந்த உண்மை புரிந்ததுமே அவளுடன் தன்னைப் பேச விடாமல் செய்தாளே என்று உத்ராவின் மீது தான் கொண்ட கோபத்தில் அர்த்தமில்லை என்பதும் அவனுக்கு உறைத்தது.
இரவே அவன் அந்த விஷயத்தில் தெளிவாகி இருக்க, இப்போது உத்ரா சொன்னதை வைத்து இன்னும் அவனுக்குக் கொஞ்சம் தெளிவு கிடைத்தது.
போன் பேசும் போதெல்லாம் கமலினி தான் உத்ராவை அழைத்துப் பேசியிருக்கிறாள். ஆனால் தன்னை ஏமாற்ற உத்ரா தான் போன் போடுவதாகச் சொல்லி மழுப்பி இருக்கிறாள்.
‘எவ்வளவு பித்தலாட்டம் செய்திருக்கிறாள்?’ என்று நினைத்த போது அவளின் மீது கோபம் வந்தது.
‘என்னை இளிச்சவாயன்னு நினைச்சாள் போல’ என்று நினைத்துப் பல்லைக் கடித்தான்.
அதோடு போன் பேச விடாமல் உத்ரா தான் தடுக்கிறாள் என்று நினைத்து அவளின் மீது எவ்வளவு கோபம் கொண்டேன். அந்தக் கோபம் எல்லாம் எவ்வளவு தவறு என்று உச்சியில் அறைந்தது போல் உறைக்க அதற்காக வருந்தவும் செய்தான்.
அவனின் வருத்தம் அதற்காக மட்டும் தான் இருந்தது.
‘போன் விஷயத்தில் உத்ரா மீது தவறு இல்லாமல் இருக்கலாம். ஆனால் மற்ற விஷயங்கள்?’ என்று கேள்வி அவனின் மனதில் தொக்கி நின்றது.
ஆனால் இப்பொழுதோ அந்தக் கேள்விகுறியும் ஆட்டம் கண்டு ஆடியது.
“என் பேரை சொன்னால் சித்தி ஒன்னும் சொல்ல மாட்டாங்கன்னு என்னையும் இதில் உள்ளே இழுத்து விட்டுருக்காள்னு நினைக்கிறேன்…” என்று உத்ரா சொன்னதைக் கேட்ட பிறகு அந்தக் கமலினி தன்னை மட்டுமில்லை உத்ராவையும் ஏமாற்றி இருப்பாளோ என்ற எண்ணம் தோன்ற அதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
அதே நேரம் வெளியே உத்ரா இப்போது அலைபேசியில் தன் மாமியாரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
வீடு பார்த்து விட்டு வந்ததைப் பற்றி அன்னை, தந்தையிடம் ஏற்கனவே முகில் பேசியிருந்தான்.
அவர்களும் வீட்டைப் பார்த்துவிட்டு அட்வான்ஸ் கொடுத்து விடலாம் என்று பேசி முடிவு செய்திருந்தார்கள்.
இப்போது உத்ராவிடம் பேசலாம் என்று வளர்மதி அழைத்திருந்தார்.
“அவர் ரெஸ்ட் எடுக்குறார் அத்தை. நான் அம்மாகிட்ட பேசிட்டு இருக்கேன்…” என்றாள்.
“நீ ரெஸ்ட் எடுக்கலையா உத்ரா? நீயும் தானே வீடு பார்க்க போன?” என்று கேட்டார் வளர்மதி.
“இல்லை அத்தை. அம்மாகிட்ட பேசிட்டு இருக்கலாம்னு வெளியே உட்கார்ந்துட்டேன்…”
“சரி, நேத்து தான் நீயும், முகிலும் எங்கேயும் வெளியே போகலை. இன்னைக்காவது போறீங்களா, இல்லையா?”
“வெளியேவா? இல்லை அத்தை. எங்கயும் போகலை…” என்றாள்.
“வீட்டுலயே இருந்து என்ன செய்யப் போறீங்க உத்ரா? நீ போனை அவன்கிட்ட கொடு. நான் அவன்கிட்ட பேசுறேன்…” என்றார்.
“அவர் தூங்கியிருப்பார் அத்தை…”
“நீ உள்ளே போய்ப் பார். அவன் தூங்கியிருந்தால் அப்புறம் பேசுறேன்…” என்றார் பிடிவாதமாக.
‘இவர்களை இப்படியே விட்டால் தனித்தனியாகத் தான் இருப்பார்கள் போலிருக்கிறதே…’ என்று தனக்குள் புலம்பிக் கொண்ட வளர்மதி இன்று எப்படியாவது இருவரையும் வெளியே எங்கேயாவது சென்று வர செய்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.
உத்ரா உள்ளே வந்த போது யோசித்துக் கொண்டே கையைக் கண்களின் மீது வைத்து மூடிய படி படுத்திருந்தான் முகில்.
அவள் உள்ளே வந்ததைக் கூட அவன் உணரவில்லை.
அவன் தூங்குகிறானோ என்று நினைத்து “முகில்…” மெதுவாக அழைத்துப் பார்த்தாள்.
அவளின் அழைப்பில் உடனே கையை எடுத்து அவளைப் பார்த்தான்.
“நீங்க இன்னும் தூங்கலையா? இந்தாங்க அத்தை உங்ககிட்ட பேசணுமாம்…” என்று கைபேசியை அவனிடம் நீட்டினாள்.
அவள் அத்தை என்றதும் சிந்தனையில் இருந்தவனுக்குச் சட்டென்று பிடிப்படாமல் போக, ‘யார்?’ என்பது போல் அவளைப் பார்த்தான்.
“உங்க அம்மா பேசுறாங்கன்னு சொன்னேன்…” என்றாள்.
படுத்திருந்த படியே அவளின் கைபேசியை வாங்க கைநீட்ட, அவனிடம் கைபேசியைக் கொடுத்துவிட்டு வெளியே சென்றாள் உத்ரா.
“என்னம்மா, சொல்லுங்க…”
“என்ன பண்ற முகில்?”
“வீடு பார்த்துட்டு வந்த அலைச்சலில் அலுப்பா இருந்ததுமா. அதான் சாப்பிட்டு படுத்துட்டேன்…”
“அப்போ கொஞ்ச நேரம் தூங்கிட்டு நாலு மணி போல எழுந்து நீயும், உத்ராவும் எங்கயாவது வெளியே போய்ட்டு வாங்க…” என்றார்.
‘வெளியேவா? அதுவும் அவள் கூடவா?’ என்று நினைத்தவன்,
“போங்க மா… என்னால் எங்கேயும் போக முடியாது…” என்று உடனே மறுத்தான்.
அவள் பக்கமாக யோசிக்க ஆரம்பித்திருந்தாலும் அவனால் உத்ராவை இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“சொன்னா கேளு முகில். புதுசா கல்யாணம் ஆகிட்டு எங்கயும் போகாமல் இருந்தால் எப்படி?”
“என்னம்மா நீங்க?” என்று அலுத்துக் கொள்ள,
“எந்தச் சாக்குப்போக்கும் சொல்லாதே முகில். அவளைக் கூட்டிட்டு வெளியே போற. அம்மா பேச்சை கேட்பன்னு நினைக்கிறேன்…” என்றவர் தொடர்ந்து, “என்ன போவ தானே?” என்று கேட்டார்.
“வேற வழி? நான் தான் அம்மா, அப்பா பேச்சை கேட்குற பிள்ளையாச்சே…” என்றான் அலுப்புடன்.
“அலுத்துக்காம போய்ட்டு வாடா…” என்றவர் அழைப்பை துண்டித்தார்.
“ச்சே, இந்த அம்மா வேற…” என்று எரிச்சலுடன் முணுமுணுத்தவன் கைபேசியைத் தூக்கி படுக்கையில் போட்டான்.
அப்போது வேறு ஒரு அழைப்பு வர, மீண்டும் கையில் எடுத்தான்.
அந்த அழைப்பு ஒரு ரிங்குடன் நின்று போனது. நம்பரை பார்க்க ஏதோ விளம்பர அழைப்பு எண்ணாகத் தெரியவும் மீண்டும் கைபேசியைக் கீழே வைக்கப் போனான்.
ஆனால் அப்போது அவனின் கண்களில் கைபேசி முகப்பில் இருந்த புகைப்படம் பட ‘என்ன படம் இது?’ என்ற ஒரு ஆர்வத்தில் பார்த்தான்.
கைபேசியின் முகப்பில் உத்ரா அவளின் அப்பா, அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வைத்திருந்தாள்.
வீரபத்ரன், அஜந்தாவிற்கு நடுவில் நின்று கொண்டிருந்த உத்ரா அவர்கள் இருவரின் தலையையும் கையால் இழுத்து முட்ட வைத்து விட்டு அவர்களின் தலைக்கு மேலே தன் தலையை உயர்த்திக் கண்களில் குறும்பு மின்ன சிரித்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அந்தப் புகைப்படத்தில் உத்ராவின் கண்களில் இருந்த குறும்பை கண்டவன் ‘சரியான சேட்டைக்காரியா இருப்பாள் போலயே’ என்று நினைத்துக் கொண்டான்.
அந்த ஒற்றைப் புகைப்படமே இன்னும் என்ன புகைப்படம் எல்லாம் வைத்திருக்கிறாள் என்று பார்க்கும் ஆர்வத்தை மேலும் தூண்டியது. அவள் போனை பார்க்க வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் இல்லாமலேயே ஒரு விதமான ஆர்வத்தில் புகைப்படத் தொகுப்பை திறந்தான்.
உள்ளே நிறையப் புகைப்படங்கள் வைத்திருந்தாள். பல படங்களில் அவளும், அவளின் அன்னையும், தந்தையும் இருக்கும் புகைப்படங்களே இடம் பெற்றிருந்தன.
மீதி படங்களில் இயற்கை காட்சிகள் கொட்டிக் கிடந்தன. அதிலும் அவைகள் எடுக்கப்பட்டிருந்த கோணம், புகைப்படத்தில் இருந்த நேர்த்தி அனைத்தும் கண்களைக் கவர்ந்திழுத்தன.
இயற்கை படங்களைப் பார்த்துவிட்டு, குடும்பப் புகைப்படங்களைக் காண ஆரம்பித்தான்.
உத்ரா தன் பெற்றோருடன் இருக்கும் புகைப்படம் அனைத்திலும் அவளின் சிறுபிள்ளைதனமான செய்கை அதீதமாக வெளிப்பட்டிருந்தது.
“ஹப்பா! என்னவெல்லாம் சேட்டை பண்ணிருக்காள்! வீட்டில் இவள் சரியான வாலு தான் போல…” என்று நினைத்தவன் தொடர்ந்து பார்த்தான்.
பார்த்துக் கொண்டிருக்கும் போதே அடுத்து ஒரு புகைப்படம் வர அதைப் பார்த்தவன் தன் கண்களை அங்கேயே நிலைக்க விட்டான்.
உத்ரா மட்டும் தனியாக இருந்த புகைப்படம் அது. மார்பளவு புகைப்படமாக இருக்க, அவளின் முகம் அருகில் இருப்பது போல் பெரிதாக இருந்தது.
அவளின் முகத்தைப் பார்க்க ஆரம்பித்தவன் அவனையும் மீறிக் கண்களைத் திருப்பாமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.
‘இவள் இவ்வளவு அழகா?’ என்று தான் முதலில் தோன்றியது.
அவளை அவன் ஒரு நாளும் ஆர்வமாகப் பார்த்ததே இல்லையே? பின் எப்படி அவளின் அழகு அவனின் கண்களில் பட்டிருக்கப் போகிறது?
‘நீ அவள் அழகை என்னைக்குப் பார்த்திருக்க? அவள் எதிரில் வந்தாலே நீ தெறித்து ஓடுவ. இல்லனா அவளே ஓடுற மாதிரி பேசி வைப்ப. இதில் எங்க இருந்து அவள் அழகை பார்க்கிறது?’ என்று அவனின் மனசாட்சியே கிண்டலுடன் கேலி செய்தது.
அதன் கிண்டலை எல்லாம் தூக்கி தூர போட்டுவிட்டு, அவளின் கண்கள் கவர்ச்சியாக இருக்க அதைக் கண்ணூற்றுப் பார்த்தவன் கண்ணில் அடுத்ததாக விழுந்தது அவளின் இதழ்கள்.
எந்தச் சாயமும் பூசாமல் ஆங்காங்கே லேசான வெடிப்புடன் இருந்தாலும் அதுவும் அதிகமாகத் தெரியாத அளவில் அவளின் உதடுகள் ஈரம் பளபளக்க மின்னிக் கொண்டிருந்தன.
அந்த இதழ்களின் வடிவும், அதில் மின்னிய ஈரமும் அவனைச் சுண்டி இழுப்பது போல் தோன்ற “அம்மாடியோ! என்ன உதடுடா இது?” என்று வாய்விட்டே சொன்னவன் தொடர்ந்து அந்த உதட்டை பார்க்க முடியாமல் கைபேசியைக் கட்டிலில் போட்டுவிட்டுக் கண்கள் மேல் கையை வைத்து மறைத்துப் படுத்துக் கொண்டான்.
மூடிய கண்களுக்குள்ளும் அந்தப் புகைப்படம் மட்டும் அவனின் முன் நின்று கண்ணாமூச்சி ஆடியது.
‘அவளை உனக்குப் பிடிக்காது முகில். அவள் முகத்தை ஏன் நினைக்கிற?’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்.
ஆனாலும் அவனின் மனக்கட்டுப்பாட்டையும் மீறி உத்ராவின் முகம் அவனை வசியம் செய்து கொண்டிருந்தது.