24 – ஞாபகம் முழுவதும் நீயே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம்- 24
“நீ அனுப்பிய வீடியோவில் ஏன் உன் முகத்தைக் காட்டவில்லை” என்று கேட்டுக் கொண்டே மனைவியின் முகத்தை வருடிய வினய்யின் கையைப் பிடித்த பவ்யா “என்ன சொல்றீங்க…? நிஜமாவா…? நிஜமாவா…?” என்று திரும்பத் திரும்பக் கேட்டாள்.
அவள் கேள்வியில் மெலிதாகச் சிரித்தவன் “நிஜம் தான்…!” என்று அழுத்தி சொன்னான்.
கணவன் கோபம் கொண்டு விட்டுச் சென்றதில் அவனுக்குச் சிறிது கூடத் தன் மேல் நேசம் இல்லையோ என்று எண்ணி வருந்தியிருக்கின்றாள். நேற்று தூக்கத்தில் புலம்பியது கூட ஒருவேளை அது தன்னுடைய மனதை தேடாமல், வெறும் தாம்பத்திய எண்ணம் கொண்டு மட்டும் தன்னைத் தேடுகின்றானோ என்று கூட அவளுக்குத் தோன்றியது. அவனின் அந்தப் புலம்பல் அவளை அப்படி நினைக்க வைத்தது.
ஆனால் இப்பொழுது நல்ல சுயநினைவில் தன்னைத் தேடுவதாகச் சொன்ன இந்தத் தேடல் நிஜமா என்பது போல நினைத்தாள்.
அதனால் தான் ஏன் தன் முகத்தைக் காட்டவில்லை என்று கேட்டதும் திகைத்து விழித்தாள்.
பவ்யா இன்னும் நம்ப முடியாமல் பார்த்த பார்வை அவனை வருந்த வைத்தது.
அதே வருத்துடன் “உன் மேல எந்த அளவு கோபம் இருந்ததோ, அதே அளவு உன் மீது எனக்கு லவ்வும் இருந்தது” என்று சொல்லி மனைவியை நம்ப வைக்க முயன்றான்.
மேலும் தன் பேச்சை தொடர்ந்து “உன் போட்டோ பார்த்தே பிடிச்சு தானே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதுக்குப் பிறகு வந்த ஒவ்வொரு நாளும் உன் கூட இருந்தப்ப வெறும் உடல் சுகத்தை மட்டும் தான் நான் காட்டினேனா? ஒரு துளி கூட அதோடு இருந்த என் காதல் தெரியலையா?” என்று மனைவியின் நம்பாத பாவனையைப் பார்த்துக் கேட்டான்.
அவன் அப்படிக் கேட்டதும் அந்த நாட்களை ஞாபக அடுக்கில் கொண்டு வந்து பார்த்தாள். வெளிவோட்டமாகப் பார்க்கும் போது உடல் சுகம் பெரிதாகத் தெரிந்தாலும், தன்னை அணு அளவும் பிரிய முடியாமல் அவன் காட்டிய நெருக்கத்தில் கணவனின் அன்பும் கலந்தே தான் இருந்ததை உணர்ந்தாள்.
சிறு செய்கையிலும் அவனின் அன்பை ஏதோ ஒரு விதத்தில் அவன் வெளிப்படுத்தினான் என்பதை மனைவியாக அவனோடு வாழ்ந்தவளுக்குப் புரிய தான் செய்தது.
அவன் கையைப் பிடித்து அழுத்தியவள் “நம்புறேன் வினு…” என்று சொல்லி கணவனைக் குளிர வைத்தாள்.
அதில் மகிழ்ந்தவன் அவளின் தோளின் மீது கை போட்டு தன்னுடன் இழுத்துக் கொண்டவன் “பவி வித் யுவர் பெர்மிஷன்?” என்று கேட்டான்.
என்ன? எதுக்குப் பெர்மிஷன் என்பது போலப் பவ்யா பார்க்க, மனைவியின் கன்னத்தில் தன் ஒற்றை விரலால் லேசாக வருடினான். அதில் அவன் கேட்டது புரிந்து போக நாணத்தில் முகம் மாற அதை அவனுக்குக் காட்டாமல் லேசாக முகத்தைத் திருப்பினாள்.
அவள் அப்படித் திருப்பவும் அவளின் கன்னம் எனக்குக் கொடுக்க வேண்டியதை கொடு என்பது போல வினய்யின் முகத்திற்கு நேராக இருக்க, அதைச் சம்மதமாக எடுத்துக்கொண்ட கணவனவன் அந்த மென்மையான கன்னத்தில் தன் அழுத்தமான அதரங்களை அழுத்தி வைத்தான்.
சிறிது நேரம் அதே இடத்தில் தன் பரிசை கொடுத்தவன், மெல்ல விருப்பமே இல்லாமல் விலகினான்.
கிடைத்த பரிசில் இன்னும் பவ்யா மோன நிலையில் இருக்க, அதை அவள் தோளில் லேசாகக் கையை அழுத்தி கொடுத்துக் கலைத்தான்.
கூச்சத்துடன் பவ்யா திரும்பி பார்க்க “தேங்க்ஸ் பவி…” என்று சொல்லிவிட்டு மேலும் தன் மனதை சொல்ல ஆரம்பித்தான்.
“கோபப்பட்டுப் போய்ட்டேனே தவிர உன் ஞாபகம் மட்டும் கொஞ்சம் கூட என்னை விட்டு அகலவில்லை. என் ‘ஞாபகம் முழுவதும் நீ’ மட்டுமா தான் இருந்த. அப்படி ஞாபகம் இருக்கும் போதெல்லாம் உன் மேல உள்ள கோபத்தை இழுத்து பிடிச்சு வச்சுக்குவேன்.
அதுவும் நீ கன்சீவ்னு தெரிஞ்சு நான் கூப்பிட்டும் நீ வரலைன்னு சொல்லவும், என் கோபம் இன்னும் அதிகம் ஆகிருச்சு. உன் நினைவையும் போக்க முடியாம, உன்கிட்ட வரவும் முடியாம தனிமையில் தவிச்சுப் போய்ட்டேன். அதைக் கட்டுப்படுத்த தான் மதுவை தேடி போனேன். அது எவ்வளவு பெரிய தப்புன்னு நேத்து நீ பேசும் போது தான் புரிந்தது.
குடிக்கிறதுக்கு ஏதோ ஒரு காரணத்தை நான் தேடி இருக்கேன். சாரிடா…! டாக்டர்கிட்ட சொன்னது தான் உன்கிட்டயும் சொல்றேன். நம்ம குடி(குடும்பம்) நல்லா வாழணும். அதனால இனி குடியை நினைச்சுக் கூடப் பார்க்க மாட்டேன். சரியா…?” என்று மனைவியிடம் குடித்ததற்கு மன்னிப்புக் கேட்டு விட்டு மேலும் பேச்சை தொடர்ந்தான்.
“ஆனா அந்த மது இன்னும் உன்னை அதிகம் தான் ஞஞாபபடுத்துச்சு. குடிச்சுட்டு வந்தன்னைக்கு நைட் எல்லாம் நீ என் கூடவே இருக்கிறது போலத் தோணும் எனக்கு” என்று அவன் சொல்லும் போதே பவ்யாவிற்கு மீண்டும் அவன் இரவு குடித்து விட்டு புலம்பியது ஞாபகம் வர இதழை லேசாகச் சுளித்துச் சிரித்தாள்.
அதைக் கண்டு தன் பேச்சை நிறுத்தி “என்ன பவிமா…?” என்று கேட்டான்.
“ஒன்னும் இல்லை… நீங்க சொல்லுங்க…” என்றவள் சொல்ல மறுத்து விட “என்னமோ இருக்கு. சரி… அப்புறம் என்னனு தெரிஞ்சுக்கிறேன்” என்றவன் தொடர்ந்தான்.
“உன் மெயில் வர ஆரம்பிச்ச பிறகு எங்கே அதைப் பார்த்தா என் கோபம் குறைஞ்சிருமோன்னு பயம். ஆனா என் மனசு உன்னைத் தேடுறப்ப எல்லாம் உன்னைத் திட்டுற போல உன்னை நினைச்சுக்குவேன்” என்றவன் தொடர்ந்து,
ரிதேஷ் பேச்சின் மூலம் குழந்தை ஆசை வந்ததையும், திரைப்படப் பாடல்கள் மூலம் குழந்தைகளைப் பார்த்து தான் கற்பனை கண்டதையும் சொன்னான்.
“அதுக்குப் பிறகு கவினோட வீடியோ பார்த்து ரொம்பச் சந்தோஷபட்டேன். ஆனா அந்தச் சந்தோஷமும் கொஞ்ச நேரத்தில் குறைஞ்சிருச்சு. ஆரம்பத்தில் குழந்தையைப் பார்த்த சந்தோஷம் இருந்தாலும், எல்லா வீடியோவும் பார்த்தும் அதில் ஒண்ணுல கூட உன் குரல் கூட அதில் இல்லைங்கவும் ரொம்ப ஏமாந்து போய்ட்டேன்.
திரும்பத் திரும்ப வீடியோவை ஓட விட்டு உன்னோட சின்ன அசைவுனாலும் அந்த வீடியோவில் இருக்கானு தேடினதில், எனக்கு ஏமாற்றத்தை மட்டும் தான் பரிசா கொடுத்த. குழந்தை ஆசை பின்னுக்குப் போய் உன்னைப் பார்க்க முடியலைங்கிற தவிப்பு தான் முன்னுக்கு வந்தது. அதான் எனக்குக் கோபம் வர காரணம். ஏன் உன் முகத்தைக் காட்டலை” என்று இப்போதும் அதே கோபத்துடன் கேட்டான்.
கணவனின் கோபம் கூடப் பவ்யாவிற்குத் தித்திப்பாகத் தெரிந்தது. தாயாகப் பிள்ளையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அந்தக் காணொளியை அனுப்பி வைத்தாள். ஆனால் அதிலும் கணவன் தன் பிம்பத்தைத் தேடியதில் அவனின் அன்பு அவளில் உயிர் வரை தீண்டியது.
அவன் பிள்ளையைப் பார்க்கத் தான் வந்தேன் என்று சொன்ன போது ‘அப்போ நான்?’ என்று கேள்வி அவள் மனதை அரித்ததினால் தான் அவனிடம் தன் அன்பை காட்டாமல் கோபத்தைக் காட்டினாள்.
மகனுக்காக வந்ததில் தாயாக அவள் மனம் சந்தோஷப்பட்டாலும், ஒரு மனைவியாக என்னை அவன் நினைக்கவில்லையே என்ற பரிதவிப்பு அவள் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
இன்று கணவனின் அன்பை தெரிந்துக் கொண்டதில் உவகைக் கொண்ட உள்ளத்துடன் காதலாகக் கணவனைப் பார்த்தாள்.
மனைவியின் பார்வையில் வினய்யின் கோபம் தண்ணீர் தெளித்த பாலாக அடங்கி விட “என்ன இப்படி ஒரு பார்வை?” என்று கேட்டான்.
பதில் சொல்லாமல் அவள் பார்வையை விடாமல் தொடர “என்னடா…?” என்று மீண்டும் கேட்டான்.
“ஹ்ம்ம்…! அன்னைக்கு மாமாகிட்ட கவினை பார்க்க தான் வந்தேன்னு நீங்க சொன்னப்ப அப்ப நான் உங்க மனசில் இல்லவே இல்லையான்னு நினைச்சு ரொம்பக் கஷ்டமா இருந்தது. நீங்க கவினுக்கு முக்கியத்துவம் கொடுத்தது சந்தோசம் தான்.
ஆனா என்னை நீங்க கொஞ்சம் கூட நினைக்கலையோனு என் மனசில் விழுந்த அடி தான் அடுத்து வந்த நாள்ல உங்ககிட்ட பேசாம தவிர்த்தேன். கவினுக்காக மட்டும் தான் உங்கிட்ட வர முடிவெடுத்தேன்னு பொய் சொன்னேன். அந்தக் கோபம்தான் நீங்க என் பேரன்ட்ஸ் பத்தி கேட்டப்ப சொல்ல தோணலை. ஆனா இப்போ நீங்க என்னைத் தேடினதை கேட்கும் போது என் தவிப்பெல்லாம் ஓடிப் போய்ருச்சு” என்று சொன்னவளின் கண்ணில் சந்தோஷ கண்ணீர் வர ஆரம்பித்தது.
அவள் கண்ணைத் துடைத்து விட்ட வினய் “அது அப்பாவை சும்மா வெறுப்பேத்த சொன்னேன்டா. அதோட அந்த வீடியோ கோபத்தில் தான் உன்னையும் வெறுப்பேத்த அப்படிச் சொன்னேன். அப்பா மேலயும், உன் மேலயும் இருந்த கோபம் எல்லாம் எப்ப உயிரே போயிருக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்து தப்பிச்சேனோ அப்பவே போய்ருச்சு. நான் வந்த அன்னைக்குச் சுவரில் சாய்ந்துகிட்டு, நான் வந்தது உண்மையா பொய்யான்னு திகைச்சு பார்த்த பார் ஒரு பார்வை. அப்பயே அப்படியே உன்னை அணைச்சுக்கிட்டு நான் வந்துட்டேன்டா பவின்னு சொல்லணும் போல இருந்துச்சு. ஆனா அதைச் செய்ய விடாம பயம் தடுத்துருச்சு” என்றான்.
“பயமா..? என்ன பயம்…?” என்று பவ்யா கேட்க…
“எங்க நான் அப்படி அணைச்சு என்னைத் தள்ளிவிட்டுருவியோனு. அப்படி ஒருவேளை நடந்து, வந்த உடனே நமக்குள்ள மீண்டும் மனஸ்தாபம் பெரிசா வந்துருமோன்னு பயம். அதான் என்னை அடைக்கிக்கிட்டு அமைதியா காட்டிக்கிட்டேன். அப்புறம் உன்னைத் தான் அணைக்க முடியலை, கவினையாவது என் கைக்குள்ள கொண்டு வந்து வச்சுக்கணும்னு தான் அவனைப் பார்க்க ஓடினேன். அவன் என்னை உடனே ஏத்துக்கும் படி எப்படி வளர்த்துர்க்கனு அவன் என் கைக்குள் இருக்கும் போதும் உன்னைப் பத்தி எனக்குத் தோணுச்சு.
அவனைத் தூக்கிட்டு வெளியே வந்தா எங்க இரண்டு பேரையும் நீ உருகி நின்னு பார்த்ததும், திரும்ப ஒரு கை அணைப்புல நீயும், இன்னொரு கையில கவினையும் வச்சுக்கணும்னு எனக்கு அவ்வளவு ஆசை வந்தது. அந்த ஆசையையும் உன் மனநிலைக்காகத் தான் அடக்கிக்கிட்டேன். என் கைக்கு எட்டுற தூரத்தில் நீ இருந்தும், உன்னைத் தள்ளி இருந்து மட்டும் பார்க்க வேண்டிய நிலை கொடுமையா இருந்துச்சுடா” என்றவனின் குரலில் அந்தக் கொடுமையை உணர்ந்த வலி தெரிந்தது.
அதை உணர்ந்து மனைவியவளுக்கும் வலிக்க இதமாக அவன் இதயப் பகுதியில் தடவி விட்டவள் விபத்து பற்றி மேலும் அறிந்து கொள்ள “அன்னைக்கு என்ன நடந்துச்சு வினு” என்று கேட்டவளின் குரலில் வேதனை தெரிந்தது. அதைக் கேட்டுக் கொண்டே மீண்டும் அவனின் நெற்றி தழும்பை வருடி விட்டாள்.
ரிதேஷின் குழந்தையைப் பார்த்து விட்டு வந்ததைச் சொன்னவன் “குழந்தையைப் பார்த்ததும், நம்ம கவினையும் இப்படிக் கையில் ஏந்தாம போய்ட்டேன்னேனு மனசு கஷ்டமா இருந்துச்சு. அதோட ஷீலு அன்னைக்குப் பிரசவ வலியில் துடிச்சப்ப நீயும் அந்த மாதிரி தானே வலியில் துடிச்சிருப்ப. ஷீலுவை தாயாகக் கையில் குழந்தையுடன் பார்த்ததும், உன்னையும் அப்படிப் பார்க்காம விட்டுட்டேன்னு ஒரு தவிப்பு மனசுல உட்கார்ந்திடுச்சு.
அதோட என் வறட்டுக் கோபத்தில் உன் பிரசவ நேரத்தில் உன் கூட இல்லாம போய்ட்டேன்னு என் மனசை அறிக்க ஆரம்பிச்சிருச்சு. குழந்தையைப் பார்த்துட்டு போகும் போதெல்லாம் கவின் ஞாபகமும், உன் ஞாபகமும் தான் என்னைச் சுத்தி சுத்தி வந்துச்சு.
அப்போ உன்னை உடனே பார்க்கணும்னு ஒரு எண்ணம் வரவும் அந்தப் பார்க்ல உட்கார்ந்து உன் பழைய போட்டோவை பார்க்க ஆசை பட்டுதான் அங்கே போக நடந்து போய்ட்டு இருந்தேன். அப்போ உன் முகத்தைப் பார்த்தே ஆகணும்கிற ஆர்வத்தை அடக்க முடியாம நம்ம கல்யாணத்தப்ப எடுத்த போட்டோவை பார்த்தேன். உன்னைப் பார்த்துகிட்டே நடந்ததுல என்னைச் சுத்தி நடந்தது எதுவுமே எனக்குத் தெரியலை.
சைலன்சர் துப்பாக்கி வச்சு அந்தச் சைக்கோ சுட்டுருக்கான். அதில் சத்தமும் கேட்கலை. என் மேல ஆளு விழுந்து போன் கீழே விழவும் உன் பிம்பம் என் கைவிட்டு போகுதேன்னு தான் வேகமாகக் குனிஞ்சேன். ஆனா அந்தாளு என் மேல விழுந்த வேகத்தில் நானும் விழுந்து பக்கத்தில் இருந்த லைட் போஸ்ட்ல பலமா மோதினதுல எனக்கு மயக்கம் வந்துருச்சு.
அந்த ஆளும் குண்டடி பட்டு என் மேல விழுந்ததில் என் மேல எல்லாம் அவர் ரத்தம் தான். அந்த இடத்துலேயே அவர் இறந்துட்டார். அவர் மட்டும் என் மேல விழலேனா கண்டிப்பா என் மேலயும் குண்டு பாய்ந்திருக்கும்” என்று அன்று நடந்ததை சொன்னவன் சிறிது நேரம் கண்ணை மூடி அமர்ந்தான்.
அதைக் கேட்டு பவ்யாவோ கண்ணீர் விட ஆரம்பித்தாள்.
அழுகை சத்தம் கேட்டுக் கண்ணைத் திறந்து பார்த்தவன் “எனக்குத் தான் ஒன்னும் ஆகலையே…? அழாதே பவி…!” என்றான்.
ஆனால் அவளோ “என் போட்டோவை பார்க்க ஆசை வரலைனா நீங்க அப்படி ஒரு சூழலில் மாட்டிருக்க மாட்டீங்க தானே” என்று கேட்டுக் கொண்டே இன்னும் அழுகையைத் தொடர்ந்தாள்.
“நீ ஏன் அப்படி நினைக்கிற பவி? அப்படி ஒரு நிலையில் மாட்டினதால் தான் இப்பவாவது எனக்கு உங்களை எல்லாம் பார்க்க வரணும்னு தோனுச்சு. இல்லனா என் வரட்டுப் பிடிவாதம் தான் இன்னமும் ஜெயித்திருக்கும்.
மயிரிழையில் உயிர் தப்பிச்சதும், உன்னை உடனே நேர்ல பார்த்தாகணும்னு என் மனசு அரிக்க ஆரம்பிச்சது. வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசை பட்டு உன்னோடு வாழாம பொன்னான எத்தனை நாளை வேஸ்ட் பண்ணிட்டேன்.
அந்த வாழ்வில் எனக்கு என்ன கிடைச்சது தனிமையும், வெறுமையும் தவிர? அந்தச் சம்பவத்தில் ஒருவேளை என் உயிர் போயிருந்தா என்ன ஆகிருக்கும்?” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவனின் வாயை தன் கை கொண்டு மூடினாள் பவ்யா.
அவள் கையை மெதுவாக விலக்கியவன் “சொல்லி முடிச்சுறேன் பவி. நம்ம வாழ்க்கையே இந்த உலகத்தில் கொஞ்ச நாள் தான். அந்த நாட்களையும் ஏதாவது ஒரு வீம்பை பிடிச்சுக்கிட்டு வாழ்க்கையைப் பாழாக்கிறோம்.
‘எந்த ஊரில் நாம வாழ்றோம்னு சொல்றதை விட, நம்ம வாழ்க்கை யாரோட எப்படி இருக்குங்கிறது தான் முக்கியம்’. ஊரு முக்கியமா உறவுகள் முக்கியமானு யோசிச்சப்ப உறவுகள் தான் முக்கியம்னு கிளம்பி வந்துட்டேன்.
உன்கிட்டயும், அப்பாகிட்டயும் கோவிச்சுகிட்டு போய் அங்கே நான் என்னத்தைச் சாதிச்சேன்? நாம மூனு பேரும் ஆளுக்கு ஒரு வேதனையில் தவிச்சது தான் மிச்சம். அதோட என் பிள்ளை என்ன தப்புப் பண்ணினான் எனக்கு மகனா பிறந்ததைத் தவிர? அவனையும் தானே நான் தவிக்க விட்டேன்.
அந்தச் சம்பவம் தான் என்னை இப்படியெல்லாம் யோசிக்கத் தூண்டியது. அதனால் அதுக்கும் உன்னைக் காரணமாக்கி அழுகாதே. சரியா…?” என்றான்.
“ம்ம்…” என்று பவ்யா தலையசைத்தாலும் கண்ணீர் மட்டும் அவளுடைய கண்ணில் இருந்து நிற்பேனா என்றது.
இந்த முறை கையால் கண்ணீரை துடைக்காமல் தன் இதழால் துடைத்தான்.
அதன் பிறகும் அங்கே கண்ணீர் வருமா என்ன? அவளின் கண்ணீர் நின்று விட “ஹ்ம்ம்…! இப்ப எப்படி இருக்கு முகம். அதை விட்டு சும்மா அழுதுக்கிட்டு. போதும் நீ விட்ட கண்ணீர் எல்லாம். இனியாவது மகிழ்ச்சியா நம்ம வாழ்க்கையைக் கொண்டு போகப் பார்ப்போம்” என்றான்.
“அப்புறம் இன்னொரு விஷயம் சொல்லியே ஆகணும். உன்னோட ஞாபகம் தான் முக்கியமா என்னை இங்கே இழுத்துட்டு வந்தது. உன் மேல கோபத்தை இழுத்து பிடிச்சு வச்சிருந்தது வரை ஒன்னும் தெரியலை. என்னை என்னால சமாளிக்க முடிஞ்சது.
ஆனா எப்போ உடனே உன்னைப் பார்த்தே ஆகணும்னு தோணுச்சோ அப்போவே கிளம்புற முடிவை எடுத்துட்டேன். உன்கிட்ட வந்து சேரணும்னு நினைச்ச பிறகு வேற என்ன எண்ணமும் என்னை அண்டவில்லை.
வேலையை உடனே ரிசைன் பண்ணிட்டு வந்துட்டேன். இன்னும் அங்கே இருக்குற கார், பொருட்களை எல்லாம் விக்கலை. அதை எல்லாம் ரிதேஷ் பொறுப்புல விட்டுருக்கேன்” என்றான்.
‘உன் ஞாபகம் தான் என்னை இழுத்து வந்தது’ இந்த வார்த்தையை விட எனக்கு வேறு என்ன வேண்டும். பிரிந்திருந்தாலும் உன் நினைவை மறக்காமல் தான் நான் வாழ்ந்தேன் என்ற கணவனின் வார்த்தைகள் பவ்யாவின் மன உணர்வுகளை மீண்டும் உயிர்த்தெழ வைத்தது.
எத்தனை சண்டை, சச்சரவுகள் வந்தாலும் ‘நீ தான் எனக்கு எல்லாம்’ என்ற துணையின் ஒரு வார்த்தை அங்கே தாம்பத்தியத்தை உயிர்க்க வைத்து விடுகின்றது.
தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாகத் தானே முன் வந்து கணவனை அணைத்திருந்தாள் பவ்யா. தன்னையே நினைக்கும் தன்னவன் என்ற நினைவு அவளிடம் இருந்த சிறிது தயக்கத்தையும் உடைத்தெறிந்திருந்தது.
மனைவியின் மன நெகிழ்வில் வினய்யின் மனமும் நெகிழ்ந்து போனது. தானும் தன் நெகிழ்வை தன் அணைப்பில் காட்டினான். நீண்ட நாளுக்குப் பின்னான அணைப்பு வினய்யின் தாப உணர்வுகளைத் தூண்ட தன் கையை மனைவியின் மேனியில் பரவ விட்டான்.
கணவனின் தீண்டலில் பவ்யாவின் உடல் கூசி சிலிர்த்தது. அவனின் தீண்டலுக்கு உடல் வளைந்து கொடுத்தாலும், அவன் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்ல வில்லையே. என்னை நினைத்திருந்தவனுக்கு என் நினைப்பையும் சொல்ல வேண்டுமே என்ற எண்ணம் தோன்ற மெல்ல அவனிடம் இருந்து விலகப் பார்த்தாள்.
மனைவியின் விலகலை உணர்ந்து “ஸ்ஸ்… பவிமா! கொஞ்ச நேரம் ப்ளீஸ்…” என்றான் தாபமாக.
அவனின் கெஞ்சலுக்குக் கட்டுப்பட்டு அவள் அமைதியாகி போனாலும் “நான் உங்க கேள்விக்கு இன்னும் பதில் சொல்லலையே வினு…” என்று அவனின் காதின் ஓரம் முணுமுணுத்தாள்.
“ஹ்ம்ம்… ஹ்ம்ம்…! நீ அப்புறம் சொல்லேன். இப்போ எனக்கு வேற எதுவும் கேட்குற மூட் கூட இல்லை. இப்ப என் பவி என் கைக்குள் இருக்கா. அது மட்டும் தான் எனக்கு நினைப்பில் இருக்கு” என்றவன் மேலும் மேலும் தன் அணைப்பை இறுக்கினான்.
“ஒரே ஒரு மாசம் மட்டும் எனக்குக் கிடைத்த இன்பம் இப்ப எனக்கு வேணும். தருவியா பவிமா…?” என்று கேட்டவனின் குரல் காதலுடன் கெஞ்சி கொஞ்சியது.
தன் மனம் கவர்ந்த மன்னவனின் கெஞ்சல் பெண்ணவளுக்குத் தாங்குமா என்ன?
“ம்ம்…ம்ம்…” என்று தன் சம்மதத்தைத் தரவும், மனைவியின் கழுத்தில் முகம் புதைத்து பேசிக் கொண்டிருந்தவன், மெல்ல நிமிர்ந்து அவள் முகத்தில் மையம் கொள்ள ஆரம்பித்தான்.
முகம் முழுவதும் முத்த சத்தத்தில் அதிர வைத்தவன், தன் இணையான அவளின் இதழில் இன்ப கவி பாட ஆரம்பித்தான்.
இதழ்களின் சங்கமத்தில் கரைகாண காதலை காட்டி காவியம் படைக்க ஆசை கொண்டான்.
அதன் பின்பு அங்கு அவர்கள் இருவருக்குமே ஆன காதலுடன் கூடிய இன்ப உணர்வு மட்டுமே ஆட்சி செய்ய ஆரம்பித்தது.
யுகமாய்த் தோன்றும் கணங்கள்
யாவும் கரைந்தே போகும்!
என்னருகில் நீ இருந்தால்…!
சிறிது நேரம் சென்றிருக்கத் தன் மார்பில் சாய்ந்திருந்த மனைவியின் கலைந்த கேசத்தை ஒதுக்கி விட்டான். பின்பும் சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் “சாரி பவி…” என்றான் திடீரென.
எதுக்குச் சாரி? என்று புரியாமல் அவன் மார்பில் இருந்து பவ்யா தலையைத் தூக்கி பார்த்து “இப்போ எதுக்குச் சாரி வினு…?” என்று கேட்டாள்.
அவள் கண்ணோடு கண் பார்த்த வினய் “கேட்டது கிடைச்சாகணும்கிற என்னோட பிடிவாத குணம் தான் நாம பிரியுறதுக்கு முக்கியக் காரணம். அதனால இனி அப்படிப் பிடிவாதம் பிடிக்கக் கூடாதுன்னு நினைச்சிருந்தேன்.
ஆனா இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ பேசணும்னு சொல்லியும் நீ இப்பயே வேணும்னு பிடிவாதம் பிடித்து உன்னைப் பேசவிடாம பிடிவாதம் பிடிச்சு உன்னை எடுத்துக்கிட்டேன். என் இந்தப் பிடிவாத குணம் என்னை விட்டு போகவே போகாது போல…” என்று சொன்னவன் குரலில் வருத்தம் நிறைந்திருந்தது.
கணவனின் வருத்தத்தைப் போக்கிவிடும் வேகம் எழ “அப்படி நினைக்காதீங்க வினு. நாம பிரிய என்னோட பங்கும் அதிகம் இருக்கு. உங்ககிட்ட மட்டுமா பிடிவாத குணம் இருக்கு? என்கிட்டேயும் தான் இருக்கு.
நான் மட்டும் விட்டு கொடுத்துப் போயிருந்தா கண்டிப்பா நாம பிரிஞ்சி இருந்திருக்கிற அவசியமே இல்லை. உங்களுக்குச் சமமா நான் பிடிவாதம் பிடிச்சதால தானே நம்மளோட பிரிவு நீடிச்சது. தப்பை இரண்டு பேர் மேலயும் வச்சுக்கிட்டு உங்களை மட்டும் குறை சொல்லாதீங்க” என்றாள்.
“ஆனா உனக்காவது ஒரு காரணம் இருந்து இருக்கேடா. ஆனா நான் நினைச்சிருந்தா பிரிவை தடுத்து இருக்கலாம்” என்று மீண்டும் தன்னையே குறை சொல்லிக் கொண்டான்.
“அப்படி இல்லை வினு. நானும் என் பயத்தைப் பெருசா நினைக்காம இருந்திருந்தா என்னாலயும் தடுத்துருக்க முடியும்” என்றாள்.
“உனக்கு ஏன்டா பவி பயம்? அப்பா, அம்மா எப்படி இறந்தாங்க?” என்று கேட்டான்.
அவன் கேள்வியில் சிறிது நேரம் மௌனமாக இருந்த பவ்யா “என் அப்பா, அம்மா கூட நான் இருந்த சில வருடங்கள் எனக்கு எந்தளவு சொர்க்கமா இருந்ததோ, அதே அளவு நரகமாகவும் இருந்தது வினு” என்று சொல்லி நிறுத்தியவளை கேள்வியாகப் பார்த்தான்.
அதைப் பார்த்தவள் நிறுத்தாமல் தொடர்ந்தாள் “ஆமாம் வினு. அப்பா, அம்மா கூட இருக்குறது எப்படி நரகம் ஆகும்னு கேட்கலாம். ஆனா எனக்கும், என் அம்மாவுக்கும் நரகத்தைக் காட்டினார் என் அப்பா” என்றாள்.
“என்னடா சொல்ற? அப்படி என்ன செய்தார் உன் அப்பா?” என்று வினய் கேட்க, அந்த நாட்களை நினைத்துப் பார்த்தவளின் மேனி மெலிதாக நடுங்கியது.
அந்த நடுக்கத்தை உணர்ந்தவன் “சொல்ல முடியலைனா விட்டுருறா பவி…” மனைவியின் நடுக்கத்தைக் குறைக்க அவளை அணைத்துப் பிடித்தான்.
கணவனின் அணைப்பில் சிறிது நேரம் அடங்கி இருந்தவள் பின்பு மெல்ல நிமிர்ந்து “சொல்லி முடிச்சிறேன் வினு” துக்கத்தால் அடைத்த தொண்டையைச் செருமி விட்டுக் கொண்டாள்.
அவளின் அந்தத் தவிப்பு கணவனையும் தவிக்க வைக்கத் தன் கைவளைவுக்குள் இருந்தே பேச அனுமதித்தான்.
அது பவ்யாவிற்குக் கொஞ்சம் தைரியத்தைத் தர பேச ஆரம்பித்தாள். “எந்த மனுஷனும் சந்தர்ப்பம் அமையாம இருக்குற வரை தான் நல்லவன்னு சொல்லுவாங்களே வினு? அது தான் என் அப்பா விஷயத்திலும் நடந்தது.
அப்பா நிறையப் படிச்சு தன்னோட தகுதியை வளர்த்துக்கிட்டு இந்தியால நல்ல வேலையில் இருந்தாலும், அமெரிக்கா போய் வேலை பார்க்கணும்னு ஆசை பட்டு அங்கே கிடைச்ச வேலையைச் சந்தோஷமா ஏத்துக்கிட்டு என்னையும் அம்மாவையும் எனக்கு எட்டு வயசா இருக்கும் போது அங்கே அழைச்சுட்டுப் போனார்.
அம்மா இங்கே இருக்கும் போது டீச்சரா இருந்தாங்க. அப்பாவோட ஆசைக்காக அந்த வேலையை விட்டுட்டு அப்பாவோட கிளம்பினாங்க.
அங்கே போய் இருந்தாலும் அம்மா இந்தியா கலாசாரத்தை நான் மறந்துற கூடாதுன்னு. இந்தியா இருந்தப்ப என்னை எப்படி வளர்த்தாங்களோ அப்படித் தான் அங்கேயும் என்னைப் பார்த்துக்கிட்டாங்க.
அதுக்குப் பிறகு என்னோட பதினொரு வயசு வரைக்கும் வாழ்க்கை நல்லா தான் போய்கிட்டு இருந்தது. இல்லை எனக்குத் தான் அப்படித் தெரிஞ்சுதான்னு தெரியலை. இந்தியால இருந்த வரை என் கூட நேரம் செலவளித்த அப்பா அங்கே போனதும் வேலைனு சொல்லி என் கூட டைம் ஸ்பென்ட் பண்றதை குறைச்சுட்டே வந்தவர், ஒரு கட்டத்தில் மொத்தமா நிறுத்திட்டார்.
எப்ப வீட்டுக்கு வர்றார். எப்ப தூங்குறார். எப்ப ஆபிஸ் போறார்னு எதுவும் எனக்குத் தெரியாத காலம் வந்தப்ப எனக்குப் பதிமூனு வயசு. அம்மாகிட்ட அதைப் பத்தி கேட்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அம்மா சமாளிப்பாங்க.
ஆனா அவங்களும் எத்தனை நாளுக்குச் சமாளிக்க முடியும்? ஒரு நாள் என் அப்பாவோட சுய ரூபத்தை என் கண்ணால் பார்த்தேன்” என்று சொல்லி நிறுத்தி மேலும் பேச முடியாமல் வினய்யின் மார்பில் அழுத்தமாகத் தன் முகத்தைப் புதைத்து கொண்டவளின் கண்ணில் இருந்து நிற்காமல் கண்ணீர் வடிந்தது.
அந்த வயதில் மனைவி பட்ட துயரம் என்னவென்று தெரியவில்லை என்றாலும் அவள் அழுகை தாங்க முடியாமல் வினய்யும் துடித்துப் போனான்.
“அழுகாதே பவிமா… மனசை தேத்திக்கோ…” என்று அவளின் கண்ணீரை குறைக்க முயன்றான்.
சிறிது நேரத்தில் தன் அழுகையை நிறுத்திய பவ்யா “அன்னைக்கு எனக்கு ஸ்கூல் சீக்கிரம் முடிஞ்சு வழக்கமா வர்ற நேரத்தை விடச் சீக்கிரமே வீட்டுக்கு வந்தேன். அன்னைக்கு அந்த வீட்டில் நான் பார்த்தது ஹால் சோஃபாவில் வெறும் உள்ளாடையோட இருந்த என் அப்பாவையும், அவர் மேல படுத்து அவர்கிட்ட ஏதோ பேசிக்கிட்டு இருந்த அந்தப் பொண்ணையும் தான்” என்று சொல்லி நிறுத்தியவள் இன்னும் எப்படிச் சொல்ல என்று தடுமாறி தவித்தாள்.
“ஓ…!” என்று கேட்டுக் கொண்ட வினய்க்கும் என்ன சொல்வதன்றே தெரியவில்லை.
“எந்த ஒரு பெண் குழந்தைக்கும் அப்பானா ஒரு ஹீரோ வொர்க்சிப் இருக்கும். என் அப்பாவையும் நான் அது நாள் வரை அப்படித் தான் நினைச்சுட்டு இருந்தேன். ஆனா அந்தப் பிம்பம் ஒரே நாளில் உடைஞ்சிருச்சு.
நான் எங்க அப்பாவை அப்படிப் பார்த்து ஷாக்காகி நின்னுட்டேன். அப்ப நான் வந்ததையும் பார்த்த அப்பா ஒரு நிமிஷம் ஷாக்காகி பார்த்தார். அப்புறம் என்ன நினைச்சாரோ சோஃபாவை விட்டு எழுந்து அந்தப் பொண்ணையும் அணைச்சுகிட்டே ‘வா டார்லிங் உள்ளே போவோம். இங்கே ஒரே டிஸ்டபென்ஸா இருக்கு’னு சொல்லிக்கிட்டே உள்ளே போய்க் கதவை மூடிகிட்டார்.
எனக்கு அப்ப ஒண்ணுமே புரியலை. அந்த ஊர்ல வீதில கூட முத்தம் கொடுத்துக்கிறது, அணைச்சுக்கிறது எல்லாம் சகஜம் தான். ஆனா அதைப் பார்த்தாலும் எப்படிக் கடந்து போகப் பழகணும்னு எனக்கு அம்மா சொல்லி கொடுத்தாங்க.
ஆனா என் அப்பாவை அந்த மாதிரி ஒரு நிலையில் பார்த்து எப்படிக் கடந்து போகனு என் அம்மா எனக்குச் சொல்லி கொடுக்கலையே? ஒரு மாதிரி பிரமை பிடிச்ச மாதிரி நின்னுட்டேன்.
அப்ப வேற ரூம்ல இருந்து வந்த அம்மா நான் அப்படித் திகைச்சு அப்பா போன ரூமையே பார்த்துட்டு இருந்ததைப் பார்த்து அவங்களுக்குப் புரிஞ்சு போயிருச்சு.
உடனே ஓடி வந்து என்னைக் கட்டிக்கிட்டு எது உனக்குத் தெரிய கூடாதுனு இத்தனை நாளும் மறைச்சுட்டு வந்தேனோ அது உனக்குத் தெரிஞ்சு போயிடுச்சானு சொல்லிக்கிட்டே அழுதாங்க.
அப்பா ஏன்மா அப்படி இருக்காருனு நான் கேட்டதுக்கு என் அம்மாவால பதில் சொல்ல முடியலை. அந்த நாளுக்குப் பிறகு நிறைய விஷயம் எனக்குத் தெரிய வந்தது. என் அப்பாவோட சுயரூபம் எனக்குத் தெரிஞ்சிட்டதாலோ? இல்ல அவங்க மனசுக்குள்ளே புழுங்கினதை சொல்ல ஆள் கிடைச்சுட்டதாலோ என்னவோ அப்பாவோட குணத்தைப் பத்தி அம்மா என்கிட்ட நிறை பேசினாங்க.
அவருக்கு இந்தியால இருக்கும் போதே இப்படி மத்த பொண்ணுங்க கூடப் பழக ஆசை இருந்துச்சாம். ஆனா நம் ஊர் மக்கள் இந்த மாதிரி ஆட்களைக் குறைவான மதிப்போடு தானே பார்ப்பாங்க. அதனால் இது போலக் கண்காணாத இடம்னா எந்தப் பேச்சுக்கும் ஆளாகாம ஜாலியாவும் இருக்க முடியும்.
ஊர்ல இருக்குற சொந்தக்காரங்ககிட்டயும் மதிப்பும் கிடைக்கும்னு ஐடியா பண்ணி தான் வெளிநாட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தாராம். அங்க வந்த ஒரு வருஷத்துலயே அவருக்கு வேற பொண்ணுங்க கூடப் பழக்கம் ஆகிருக்கு. அம்மாவுக்குத் தெரிய வந்து தடுத்தா அவர் என் முன்னாடி பொண்ணுங்களைக் கூட்டிட்டு வந்து அசிங்கமா நடந்துப்பேன்னு மிரட்டி இருக்கார்.
எந்த அம்மாவுக்குத் தான் தன் தகப்பனை பொண்ணு அப்படிப் பார்க்கட்டும்னு விட முடியும்? அம்மா எனக்காகப் பார்த்து அப்பா செய்றதை தட்டி கேட்க முடியாமல் போய்ருச்சு. ஆனா நீயே இப்ப பார்த்துட்ட. இன்னும் என்ன என்னவெல்லாம் நடக்கப் போகுதோனு அழுதாங்க.
அவங்க நினைச்சது போல என் கண்ணு முன்னாடியே நிறைய நடத்தி காட்டினார் என் அப்பா” என்று சொன்ன பவ்யாவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வர அதை அடக்க முடியாமல் கேவி அழ ஆரம்பித்தாள்.