24 – உனதன்பில் உயிர்த்தேன்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 24

அதிகாலையில் முதலில் கண் விழித்தவள் தேன்மலர் தான்.

அதிலும் அவன் மேல் இரவு முழுவதும் ஒரே பக்கமாகப் படுத்திருந்தது அசவுகரியமாக இருக்க, லேசாகத் திரும்பி படுக்க முயன்றவள் அப்போது தான் கணவனின் அணைப்பில் இருப்பதை உணர்ந்து தலை தூக்கி அவன் முகம் பார்த்தாள்.

அவன் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

கணவனின் முகத்தை ஆசையாகப் பார்த்தாள். கள்ளம் கபடமற்ற முகம். கனவில் கூட நல்லதை மட்டும் தான் நினைப்பான் போலும் என்று கணவனைப் பற்றிப் பெருமையாக நினைத்துக் கொண்டாள்.

இவ்வளவு நல்லவனுக்கு இந்தக் குடிப்பழக்கம் மட்டும் எப்படித்தான் வந்ததோ? என்று அலுப்பாகவும் நினைத்துக் கொண்டாள்.

இரவு முழுவதும் தன்னைச் சுமக்கிறானே, வலிக்காதோ? என்று நினைத்தாலும் அவனை விட்டு விலகி படுக்க அவளுக்கும் விருப்பம் இல்லை.

அழுத்தமாக அவனைக் கட்டிக் கொண்டவள், மேல் பட்டன் கழண்ட இடைவெளியில் தெரிந்த அவனின் மார்பின் ரோமத்தில் அழுத்தமாக முகத்தைத் தேய்த்தாள்.

சுகமாக இருந்தது. இன்னும் இன்னும் அவனுக்குள் மூழ்கி போக ஆசை வந்தது.

அவன் மார்பில் ஒரு முத்தத்தைப் பதித்தவள் சுகமாகக் கண்களை மூடிக் கொண்டாள்.

மீண்டும் கண்கள் சொக்க, அப்படியே கண்ணயர்ந்தாள்.

மீண்டும் அவள் விழித்துக் கண்களைத் திறக்கும் போது தான் மட்டும் கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்து வேகமாக எழுந்து அமர்ந்தாள்.

கணவனைத் தேட, அவன் அறையில் இருந்த சுவடு கூடத் தெரியவில்லை.

கதவை பார்த்தாள். வெறுமனே சாற்றி வைக்கப்பட்டிருந்தது.

அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.

அதோடு இப்போது என்ன மனநிலையில் இருக்கிறானோ? என்று கலக்கமாகவும் இருந்தது.

எழுந்து அறையை விட்டு வெளியே வந்தாள்.

கூடத்தைப் பார்க்க, அங்கே யாருமில்லை.

வாசல் கதவும் வெறுமனே பூட்டியிருக்கக் கதவை திறந்து வெளியே பார்த்தாள். வாசலில் கிடந்த கட்டிலிலும் இல்லை.

வாசலில் நிற்கும் மினி வண்டியையும் காணவில்லை. லோடுக்குச் சென்று விட்டான் போலும்? என்று நினைத்தவளுக்குப் பெருமூச்சு வந்தது.

அதன் பிறகு அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்காமல் வீட்டு வேலையை ஆரம்பித்தாள்.

காலை உணவிற்கு வருவான் என்று காத்திருந்தாள். ஆனால் அவன் காலை மட்டுமல்ல, மதியமும் கூட வரவில்லை.

நடுவில் ஒரு முறை போனில் அழைத்து, பூக்களை அவளையே அனுப்பி வைக்கச் சொன்னான். வேறு எதுவும் பேசாமல், அவளும் பேச இடம் கொடாமல் அழைப்பை துண்டித்து விட்டான்.

அவனின் மனநிலை என்னவென்று புரியாமல் குழப்பமாக இருந்தது.

இரவு உணவு நேரத்தில் தான் வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டிற்குள் நுழைந்த கணவனின் முகத்தை ஆர்வமாகப் பார்த்தாள் தேன்மலர்.

ஆனால் அவனோ அவளை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் வீட்டின் பின் பக்கம் சென்றான்.

‘திரும்ப முருங்கை மரம் ஏறியாச்சு’ என்று நினைத்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

அமைதியாகச் சாப்பிட அமர்ந்தவனுக்கு அவளும் அமைதியாகப் பரிமாறினாள்.

பிசைந்து அவன் சாப்பிட ஆரம்பிக்க, ஆராய்ச்சியாக அவளின் பார்வை கணவன் மேல் படிந்தது.

அவன் முகத்திலிருந்து அவன் என்ன நினைக்கிறான் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

சாப்பிட்டு முடித்தவன், எழுந்து கொண்டே, “நா நேத்து உங்கிட்ட எதுவும் சொன்னேனா?” என்று கேட்டான்.

“எதைப் பத்தி?” ஒன்றும் அறியாதவள் போல் கேட்டு வைத்தாள் தேன்மலர்.

“அதுதேன் நேத்து குடிச்சுப் போட்டு…” என்றவன் அதோடு நிறுத்திக் கொள்ள, அவளின் உதடுகள் புன்னகையில் துடித்தன.

“ஒன்னும் சொல்லலையே…” என்று அப்பாவியாகக் கைகளை விரித்து, உதட்டையும் பிதுக்கினாள்.

அவளைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

அவனின் முதுகை பார்த்து வக்கனை காட்டினாள் தேன்மலர்.

எதற்கோ அவளின் புறம் திரும்பியவனின் கண்களில் அவளின் வக்கனையில் சுளித்த உதடுகளைப் பார்த்து விட்டான்.

உடனே வாயை நேராக்கியவள் வேலை இருப்பது போல் உள்ளே சென்று விட்டாள்.

அவளுக்கு எதிர் திசையில் நடந்தவனின் உதடுகள் புன்னகையில் விரிந்தன.

‘இவளுக்குக் குசும்பு ரொம்பத்தேன்…’ என்று சிரிப்புடன் முனங்கி கொண்டே அங்கிருந்து சென்றான்.

அன்று இரவு அவன் தன் வழக்கம் போல் வெளியே படுக்கக் கட்டிலை எடுத்துப் போட்டான்.

அவனையும், கதவு அருகில் நின்றிருந்த தேன்மலரையும் ஒரு பார்வை பார்த்த அப்பத்தா, அவளிடம் ‘என்ன இன்னைக்கு வெளியே படுக்கிறான்?’ என்பது போல் கண்களால் கேட்டார்.

அவளோ உதட்டை பிதுக்கினாள்.

“என்ன ராசா, நேத்து எமக்குக் கொள்ளு பேரன் பெத்துத் தரப்போவதா சொன்னீரு?” என்று பேரனிடமே நமட்டு சிரிப்புடன் கேட்டு வைத்தார்.

கட்டிலில் படுத்திருந்தவன் தலையை மட்டும் நிமிர்த்தி அப்பத்தாவையும், அவரைத் தாண்டி நின்று கொண்டிருந்த மனைவியையும் பார்த்தான்.

தேன்மலரின் இதழ்களிலும் கேலி சிரிப்பு இழைந்தோடியது.

நேற்று ‘உங்கூடத் தேன் படுப்பேன் என்று சொன்னது என்ன? இன்று இங்கே வந்து படுப்பது என்ன?’ என்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இருவரையும் பார்த்துவிட்டு வானத்தை அண்ணாந்து பார்த்தவன், “கனா காணாம தூங்கும் அப்பத்தா…” என்றான்.

“கனாவா? சரிதேன். நேத்து இருந்த இருப்பு என்ன? இன்னைக்குப் பேசும் பேச்சு என்ன?” என்று நொடித்துக் கொண்டார்.

“நேத்து பேசினது நல்ல வாயி ஆத்தா. இன்னைக்குப் பேசுறது நாற வாயி…” என்று நக்கலாகச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் மறைந்தாள் தேன்மலர்.

“உம் பொஞ்சாதி என்ன ராசா சொல்லிப் போட்டு போறா?” புரியாமல் கேட்டு வைத்தார் அப்பத்தா.

“அதை அவகிட்டயே கேளும் அப்பத்தா…” என்றவன் அவள் சொல்லி சென்றதை நினைத்து யோசனையுடன் சிரித்துக் கொண்டான் வைரவேல்.

மறுநாள் காலையில் முகம் முழுவதும் நிறையச் சோகத்தை அப்பிக் கொண்டவள் போல் நடமாடிக் கொண்டிருந்த மனைவியைப் புரியாமல் பார்த்தான் வைரவேல்.

‘ஏன் இப்படி இருக்கிறாள் என்று யோசனை ஓடினாலும் அவளிடம் அவனாகக் கேட்கவில்லை.

ஆனால் அவன் வெளியே கிளம்பிய போது, “உம்ம கிட்ட ஒன்னு சொல்லணும்யா…” என்று நிறுத்தினாள் தேன்மலர்.

“என்ன?”

“இன்னைக்கு ஏ அம்மா நினைவு நாளு…”

“ஓ! இன்னைக்கா?” என்றவனுக்கு அப்போது தான் அவளின் சோகத்திற்கான காரணம் புரிந்தது.

“மன்னிச்சுப் போடு புள்ள. மறந்து போட்டேன். எதுவும் வாங்கணுமா?” என்று கரிசனையுடன் கேட்டான்.

“இருக்கட்டும்யா. நாந்தேன் உம்மகிட்ட மொதலேயே சொல்லாம விட்டுப் போட்டேன். நானே எல்லாம் வாங்கிட்டேன். படையலும் காலம்பரையே எழும்பி தயார் செய்துட்டேன். படையல் போட, ஏ வூட்டுக்கு இப்போ போவணும். நீரும் வர முடியுமா?” என்று கேட்டாள்.

“வாறேன்…” என்றான் உடனே.

சற்று நேரத்தில் அப்பத்தாவையும் அழைத்துக் கொண்டு அவளின் வீட்டிற்குச் சென்றனர்.

எல்லாம் வீட்டிலேயே சமைத்து எடுத்து வந்ததால் அவளின் வீட்டிற்குச் சென்றதும், அன்னையின் படத்தின் முன் படையல் போட்டு கும்பிட்டாள்.

அன்னையை நினைத்து அவள் கண்கள் கலங்கி இருந்தன.

அவனும் அமைதியாகக் கண்களை மூடிக் கொண்டு நின்றான்.

படையல் போட்டு முடித்ததும் அவனிடம் வந்தாள்.

“இன்னைக்கு ராவு நா இங்கனயே இருக்கப் போறேன்யா…” என்றாள்.

“தனியாவா?” யோசனையுடன் கேட்டான்.

“நா தனியா இருந்துப்பேன்…” என்றாள்.

“ம்கூம், தனியா எல்லாம் வேணாம். அப்பத்தாவ வேணா கூட வச்சுக்கோ…” என்றான்.

அவள் அப்பத்தாவை பார்த்தாள்.

“புது எடத்துல தங்குனா எமக்குத் தூக்கம் வராது ராசா. நீரு அவ கூடத் தங்கும்…” என்றார் அப்பத்தா.

“நானா?” என்று யோசனையுடன் இழுத்தான்.

“நீருதேன்…” என்று அப்பத்தா அவன் மறுக்க முடியாதவாறு அழுத்தமாகச் சொல்ல, வேறு வழியில்லாமல் தலையைச் சம்மதமாக ஆட்டி வைத்தான்.

அவர்களின் முடிவின் படி அன்று இரவு வைரவேலும், தேன்மலரும் அவள் வீட்டில் தங்கினர்.

தேன்மலர் உள்ளறையில் படுத்திருக்க, வைரவேல் கூடத்தில் படுத்திருந்தான்.

தேன்மலர் உள்ளறையில் அசந்து உறங்கி கொண்டிருக்கும் போது, இன்றும் கழுத்தில் ஏதோ உரசுவது போல் இருக்க, பட்டென்று கண்களைத் திறந்தாள்.

அவள் கை அதை விட வேகமாகத் தன்னை உரசியதை பற்றியது.

“இது என்னய்யா களவாணிபய மாதிரி?” என்று தன் கையில் அகப்பட்டவனின் கையை இறுக பற்றிக் கொண்டு கேட்டாள்.

தான் பிடிப்பட்ட உணர்வில் முதலில் கண்களை உருட்டி விழித்த வைரவேல், பின் நிதானமாக அவளின் அருகில் அமர்ந்தான்.

“எம் பொஞ்சாதியை நா தொட்டேன். இதுல என்ன களவாணிபய வேலைய கண்டுட்ட?” என்று அதே நிதானத்துடன் அவனின் கேள்வியும் வந்து விழுந்தது.

“ஓஹோ! உம்ம பொஞ்சாதி தூங்கிட்டு இருக்கும் போது அவளுக்கே தெரியாம தொடுறது களவாணிதனம் இல்லையோ?”

“இல்ல…” என்றான் அழுத்தமாக.

விடிவிளக்கின் ஒளியில் அவள் அவனை உறுத்துப் பார்க்க, அவனும் பதிலுக்குப் பார்த்து வைத்தான்.

பார்த்துக் கொண்டிருந்தவன் உதடுகள் மெல்ல புன்னகை புரிந்தன.

அவளின் உதட்டிலும் புன்சிரிப்பு இழைந்தோடியது.

“என்னைய மன்னிச்சுப் போடு புள்ள. உம்மை ரொம்பத் தவிக்க விட்டுப் போட்டேன்…” என்றவன் அவளின் கையை அழுத்தமாக பற்றிக் கொண்டான்.

“மன்னிப்பு கேட்குற அளவுக்கு நீர் ஒன்னும் தப்பு பண்ணலைய்யா. விடும். உம் மனசு எமக்குப் புரியுது…” என்றாள் மென்மையாக.

அவளின் தலையை இழுத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டவன், அவளின் உச்சியில் அழுத்தமாக இதழ் பதித்தான்.

“உங்கிட்ட எமக்கு ரொம்பப் பிடிச்சதே இதான் புள்ள. எம் மனசை புரிஞ்சி எமக்காகக் காத்திருந்த உமக்கு நா என்ன செய்தேன்? ஒன்னுமே செய்யலையே?” என்றான்.

“ஒன்னும் செய்யலையா? என்னய்யா இப்படிச் சொல்லிப் போட்ட? நீர் எமக்கு எது செய்யலை? நா யாரோவா இருக்கும் போதே எமக்கு நீர் செய்தது எதுவுமே லேசுப்பட்டது இல்லைய்யா.

தாலி கட்டிய பொறவும், குடிச்சுப் போட்டு தெரியாம கட்டிப் போட்டேன், தாலியை கொடுடின்னு நீர் கேட்டுருந்தா எமக்கும் கொடுக்குறத தவிர வேற வழி இருக்காது.

ஆனா நீர் இருந்த மன கஷ்ட நிலையிலும் எமக்காக முன்ன நின்னீர், பேசினீர். தெரு நாயா மேல பாய்ஞ்சவனை அடிச்சுப்போட்டு காப்பாத்தி, உம்ம வூட்டுலயே அடைக்கலம் கொடுத்தீர்.

இதெல்லாம் நீர் எம்மை உம்ம பொஞ்சாதியா நினைக்காதப்பயே செய்தீர். அப்புறமும், உம் மாமனாரையே எமக்காக எதுத்து நின்னீர். இதெல்லாம் ஒன்னுமே இல்லைனு சொல்ல முடியுமாயா?” என்று கேட்டாள்.

அவளின் தோளை அழுத்தமாகப் பிடித்தான்.

“உம் மனசு நல்லத மட்டுமே பார்க்குற மனசு புள்ள. அதுதேன் நா செய்த நல்லதை மட்டும் பார்க்குற. ஆனா நா தாலி கட்டிப் போட்டு உம்மை விட்டு ஓடி ஒளிஞ்சேன்.

ஏ வூட்டுக்கு கூட்டிட்டு போன பொறவும், உம்மைக் கண்டுக்காம விலகி போனேன். உம்மை எம் பொஞ்சாதியா கூட நடத்தலையே புள்ள…” என்றான் வேதனையுடன்.

“அப்பவும் எமக்கு ஒன்னுன்னா நீர் தானேயா முன்ன நின்னீர். இதுக்கு மேல எமக்கு என்ன வேணும்? வாழ்க்கையில் எப்பவும் நல்லது மட்டுமே நடக்காதேயா? கெட்டதும் நடக்கத்தேன் செய்யும். அதுல நாம நல்லதை மட்டும் எடுத்துக்குவோம். சரி, அதெல்லாம் விடும். இன்னைக்கு மட்டும் இல்லாம அன்னைக்கும் ஏ கழுத்தை உரசியது நீர் தானே?” என்று கேட்டாள்.

அதற்கு நமட்டுச் சிரிப்பு ஒன்றை சிந்தியவன், “எப்படிப் புள்ள கண்டுபிடிச்ச?” என்று கேட்டான்.

“நா அன்னைக்கு உம்மை எழுப்பி அந்த ராமரை பார்த்தேன்னு சொன்னதுக்கு நீர் ரொம்ப அலட்டிக்கலை. அதே மாதிரி அவன் வூட்டுக்குள்ளார வந்துட்டு போயிட்டான்னு சொன்னதுக்கும் நீர் பதறலை. நிதானமா இருந்தீர்.

அவன் வந்துட்டு போயிருந்தா நீர் அம்புட்டு நிதானமா இருந்திருக்க மாட்டீர். கதவு எப்படித் திறந்ததுன்னு சோதிச்சுப் பார்த்திருப்பீர். ஆனா நீர் அது கூடப் பண்ணலை. அப்பவே எமக்குச் சந்தேகம் வந்தது…” என்றாள்.

“அறிவாளி புள்ள நீ…” என்று மனைவியை மெச்சி கொண்டான்.

“அது இருக்கட்டும். எதுக்கு அப்படிக் களவாணி பய போல வந்தீர்? இப்பவும் கூட ஏ கழுத்துல தேன் என்னமோ செய்தீர். என்ன செய்தீர்?” என்று கேட்டாள்.

“இதுக்குத்தேன்…” என்றவன் அவள் சேலைக்குள் மறைந்து கிடந்த தாலியை வெளியே எடுத்து போட்டுக் கையில் ஏந்தினான்.

அவள் தாலியில் இன்னும் மஞ்சள் கிழங்கு தான் கட்டியிருந்தது.

அதை எடுத்துக் காட்டியவன், “ஒ தாலில வெறும் மஞ்சளை பார்க்கும் போதெல்லாம் உறுத்தலா இருந்தது புள்ள. உமக்குத் தங்கத்துல தாலி கூட வாங்கிக் கொடுக்கலைனு வருத்தமா இருந்துச்சு. அதான் இதை வாங்கியாந்தேன்…” என்று தன் சட்டை பையில் இருந்த தங்கதாலியை எடுத்து அவளிடம் காட்டினான்.

“இதை ஒ தாலில கோர்க்க நினைச்சுத்தேன் அன்னைக்கு ராவு வூட்டுக்குள்ளார வந்தேன். இப்பவும் அதுக்குத்தேன் தாலியை தொட்டேன். அதுக்குள்ளார நீ என்னைய கையும் களவுமா பிடிச்சுப் போட்ட…” என்றான்.

“இதைப் பகல்ல கொடுத்துருக்க வேண்டியது தானேயா?”

“அது என்னவோ எமக்குச் சங்கடமா இருந்தது புள்ள…”

“இதுல என்ன சங்கடம்?”

“உங்கிட்ட சரியா பேசுறதும் இல்ல. சரியா பார்க்குறதும் இல்ல. இதை மட்டும் எப்படிக் கொடுக்கன்னு இருந்தது. அதான் நானே மாட்டி விட்டுப் போடலாம்னு நினைச்சேன். இப்ப மாட்டலாமா புள்ள?” என்று கேட்டான்.

“ம்ம், சரி… நீரே மாட்டி விடும்…” என்றதும், எழுந்து விளக்கை போட்டு விட்டு வந்தவன் அவளின் எதிரே அமர்ந்து தாலியை கையில் ஏந்தினான்.

சற்று நேரத்தில் தங்க தாலியை தாலி கயிற்றில் கோர்த்து விட்டான்.

அவனை அவள் ஆசையுடன் பார்க்க, அவளின் நெற்றியில் இதமாக இதழ் ஒற்றினான்.

“இப்பத்தேன் புள்ள நல்லா இருக்கு. மனசுக்கு திருப்தியாவும் இருக்கு…” என்றான்.

“அது சரி, குடிச்ச மாதிரி நடிக்கும் போதுதேன் மலருன்னு கூப்பிடுவீரு போல இருக்கு…” என்று சடைப்பாகச் சொன்னாள் தேன்மலர்.

“அட கள்ளி! அதையும் கண்டுக்கிட்டயா?” என்று அவள் கன்னம் கிள்ளி குறும்பாகச் சிரித்தான் வைரவேல்.