24 – இன்னுயிராய் ஜனித்தாய்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 24
“நீ சந்தோஷமா இருக்கியா நித்திலா?” என்ற அண்ணனின் கேள்வியைக் காதில் வாங்கியதும், மஞ்சள் வண்ணமாக மாறிக் கொண்டிருந்த மாலை பொழுதின் வான்வெளியை விட்டு பார்வையைத் திருப்பி அண்ணனைப் பார்த்தான் நித்திலன்.
“உன்னோட இந்தக் கேள்வியே அநாவசியம் அண்ணா. என் வாழ்க்கையில் துர்காவும், வருணாவும் வந்த பிறகு சந்தோஷம் மட்டும் தான் இருக்கும்னு உனக்குத் தெரியாதா?” என்று புன்முறுவலுடன் கேட்டான்.
தம்பியின் முகத்தை ஆதூரத்துடன் பார்த்தான் நிரஞ்சன்.
ஒரு வருடத்திற்கு முன் வாழ்க்கையே வெறுத்துப் போன நிலையில் பார்த்த நித்திலனுக்கும், இப்போது வாழ்க்கையை வாழ துடிக்கும் நித்திலனுக்கும் இருக்கும் வேறுபாட்டை உணர்ந்தவனுக்குக் கடவுளுக்கு மனதார நன்றி சொல்ல தோன்றியது.
துர்காவும், வருணாவும் தம்பியின் வாழ்க்கையில் வரவில்லை என்றால் உண்மையான சந்நியாசி போல வாழ்ந்திருப்பான். இப்போதும் அவன் மகிழ்ச்சியாகவே இருந்தாலும், தம்பி இன்னும் மகிழ்ச்சியுடன் அவன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைத்தான்.
“அவங்க வந்தது சந்தோசம் தான். ஆனா அது மட்டுமே சந்தோசம் இல்லை நித்திலா. நீயும் உன் வாழ்க்கையை வாழணும்…” என்று குறிப்பாகச் சொன்னவன், அவன் கண்களை ஊடுருவி பார்த்தான்.
அண்ணனின் பேச்சின் அர்த்தம் புரிந்தாலும் நித்திலனின் புன்முறுவல் மாறவே இல்லை.
“திருமண வாழ்க்கையில் ஒருத்தரோட ஆசை மட்டுமே பெருசு இல்லை அண்ணா. தன் துணையோட விருப்பம் என்ன என்பதையும் பார்க்கணும். துர்காவுக்கு இப்போதைக்கு என் மேல விருப்பம் வரலை. அதே நேரம் வெறுப்பும் இல்லை. விலகி இருந்தாலும் நாங்க ஒன்னாத்தான் இருக்கோம். எனக்கு அது போதும்!” என்றான்.
“எத்தனை நாளைக்கு நித்திலா? கணவன், மனைவிக்குள் இது போதும்னு விலகி நிக்கவே முடியாது நித்திலா. ஒரே இடத்தில் ஒன்னா இருப்பது பெருசல்ல. ஒற்றுமையா இருக்கணும். நீங்க இரண்டு பேரும் ஒற்றுமையா வாழணும் என்பது தான் என் விருப்பம்…” என்றான் நிரஞ்சன்.
“வாழ்வோம் அண்ணா. ஆனா என்ன, அதற்கான சந்தர்ப்பம் இப்ப வரலை. சரி, அதை விடுங்க. மதியம் வந்தோம். இப்ப நைட் ஆகப்போகுது. இன்னும் குட்டீஸை பார்க்கலை அண்ணா. எப்ப கண்ணில் காட்டுவ?” என்று கேட்டான்.
“கொஞ்சம் நேரம் இங்கேயே நில்லு. நான் போய் என்ன செய்றாங்கன்னு பார்த்து கூட்டிட்டு வர்றேன்…” என்ற நிரஞ்சன் கீழே இறங்கி சென்றான்.
அவன் இறங்கிய சில நொடிகளிலேயே, “ப்பா… ப்பா…” என்ற வருணாவின் குரல் அழுகையுடன் மாடிப்படிகளில் கேட்க, “குட்டிம்மா…” என்று விரைந்து படிக்கு வந்தான்.
“அப்பாகிட்ட போகலாம், அழாதே!” என்று மகளைச் சமாதானப்படுத்திக் கொண்டே மாடியேறி வந்து கொண்டிருந்தாள் துர்கா.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“என்னாச்சு துர்கா? ஏன் அழறாள்?”
“கீழே விழுந்துட்டாள்…”
“விழுந்துட்டாளா? எங்கே?” என்று பதறி கேட்டவன், வேகமாகக் குழந்தையை வாங்கி, பரிசோதித்தான்.
“குட்டிம்மா… அடிப்பட்டுருச்சாடா?” என்று கேட்க, விசும்பிக் கொண்டே அவனின் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள் வருணா.
“கட்டிலில் விளையாடிட்டு இருந்தாள். நான் பெட்டியில் அவள் ட்ரெஸ் எடுத்துட்டு இருந்தேன். என்கிட்ட வர்றேன்னு முயற்சி பண்ணி கட்டிலிருந்து விழுந்துட்டாள். பின்னந்தலையில் தான் அடிப்பட்டுருச்சு. தைலம் வச்சு தேச்சு விட்டுட்டேன்…” என்றாள் துர்கா.
“தலையில் அடிப்பட்டுருச்சாடா குட்டிம்மா?” என்றவன் தானும் பின்னந்தலையைப் பரிசோதித்து விட்டு தேய்த்து விட்டான்.
“வலி போயிருச்சு. அப்பா தேச்சுட்டேன். சரியாகிடும்…” என்று சமாதானப்படுத்த, சில நொடிகள் விசும்பியவள் பின் அழுகையை நிறுத்தி மொட்டை மாடியை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
“அந்த மரம் பார்த்தியா குட்டிம்மா? அதில் தினமும் ஒரு கிளி வந்து உட்காரும். இப்போ கிளி இருக்கான்னு பார்க்கலாமா?” என்று கேட்டவனுக்கு ஆர்வமான கண் உருட்டலை வருணா பதிலாகத் தர, துர்கா கீழே செல்ல திரும்பினாள்.
“துர்கா, கீழே போய் என்ன செய்யப் போறீங்க? இங்கே வந்து உட்காருங்க. கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்…” என்று அவளை அழைக்க, மேலே ஏறி வந்தாள்.
மொட்டை மாடியில் சிமிண்ட் இருக்கை போடப்பட்டிருக்க, அதில் அமர்ந்து யோசனையுடன் குழந்தையுடன் பேசிக் கொண்டிருந்த நித்திலனை பார்த்தாள்.
பன்மையில் அழைக்க வேண்டாம் என்று சொன்னதற்கு அவனின் பதில் முதலில் புரியவில்லை என்றாலும் அடுத்து சிறிது நேரத்தில் புரிந்துவிட்டது.
அவனின் எதிர்பார்ப்பும் புரிந்தது.
தன்னை விரும்பி திருமணத்திற்குக் கேட்டவனை வெறும் நண்பனாக மட்டும் இரு! என்று சொல்வது முட்டாள்தனம் என்று அவளுக்கே புரிந்தது.
திருமண வாழ்க்கையில் என்னென்ன இருக்கும் என்று தெரியாதவள் அல்ல.
ஆனாலும் கணவனாக வந்து விட்டவனை முழுமனதுடன் ஏற்கும் நிலைக்கு இன்னும் அவள் வரவில்லை என்பதால் மட்டுமே தோழமையுடன் இருக்க முடிவு செய்திருந்தாள்.
ஆனால்… என்று யோசித்துக் கொண்டிருந்தவளின் சிந்தனையைக் கலைத்தது இரு மழலைகளின் குரல்.
படி பக்கம் திரும்பிப் பார்க்க, தன் குழந்தைகளை அழைத்து வந்து கொண்டிருந்தான் நிரஞ்சன்.
மேல் படிக்கு வந்ததும் “சித்தப்பா…” என்று ஓடி வந்து நித்திலன் காலை கட்டிக் கொண்டனர் குழந்தைகள்.
“சிவா, ஷிவானி குட்டிகளா…” என்று ஆசையுடன் அழைத்தவன் ஒற்றைக் கையினால் இருவரையும் அணைத்துக் கொண்டான்.
“சித்தப்பா எங்க போன? எங்களைப் பார்க்க வரவே இல்லை…” மழலை குரலில் கேட்டு வைத்தாள் ஷிவானி.
“சித்தப்பா ஊருக்குப் போயிட்டேன்டா குட்டிம்மா…” என்றவன் ஷிவானியின் கன்னத்தில் முத்தமிட்டான்.
“சித்தப்பா எனக்கு?” என்று சிவாவும் கன்னத்தைக் காட்ட, அவனுக்கும் முத்தம் ஒன்றை வைத்தான்.
“நீங்க ஏன் சித்தப்பா வந்ததும் பார்க்க வரலை? உங்களை உங்க பாப்பாவும் தேடினாள். ஆனா நீங்க பார்க்கவே வரலை…” கைப்பிடி சுவரில் சாய்ந்து அமர்ந்து வருணாவை மடியில் வைத்துக் கொண்டு அண்ணன் குழந்தைகளையும் தனக்கு நெருக்கமாக அமர வைத்துக் கொண்டு குழந்தை போல் குழந்தைகளிடம் கோபித்துக் கொண்டான்.
“அம்மா விட மாட்டேன்டா…” என்றாள் ஷிவானி சோகமாக.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“இது எங்க பாப்பாவா?” வருணாவை சுட்டிக் காட்டிக் கேட்டான் சிவா.
“ஆமா, உங்க இரண்டு பேருக்கும் குட்டி தங்கை. உங்க தங்கை பேர் தெரியுமா?” என்று அவர்களின் அன்னையின் பேச்சை புறம் தள்ளிவிட்டு, சிவாவின் கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல ஆரம்பித்தான்.
“எனக்குத் தெரியும்… எனக்குத் தெரியும்…” என்று குதித்தாள் ஷிவானி.
“எனக்கும் தான் தெரியும்…” போட்டிக்கு வந்தான் சிவா.
“சூப்பர்! இரண்டு பேருக்குமே தெரியுமா? என்ன பேரு, இரண்டு பேரும் சேர்ந்து சொல்லுங்க…” என்றான்.
“வருணா…” என்று இரண்டு பேரும் ஒரே குரலில் சொல்ல,
“வெரி குட்! எப்படித் தெரியும்?” வியந்து கேட்டான்.
திருமணத்திற்கு வந்திருந்த போது கூட ஹேமா குழந்தைகளை யாரோடும் பேச விடவில்லையே?
“பாட்டியும், அப்பாவும்…” என்றனர்.
நித்திலனின் பார்வை அண்ணனின் மேல் படிய, மென்மையாகச் சிரித்தான் நிரஞ்சன்.
“அது யாருன்னு தெரியுமா?” துர்காவை சுட்டிக் காட்டி கேட்க, இருவரும் அவளைத் திரும்பிப் பார்த்தனர்.
துர்கா அவர்களைப் புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, “சித்தி…” என்றனர் கோரஸாக.
“சமத்து குட்டீஸ்!” என்று கொஞ்சியவன், அவர்களிடம் மகிழ்ச்சியுடன் உரையாடினான்.
பிள்ளைகளிடம் பேசும் போது அவனிடம் தெரிந்த கனிவு, உதடுகளிலும், கண்களிலும் நிலைத்திருந்த சிரிப்பு, பேச்சில் தெரிந்த உற்சாகம்! அனைத்தையும் தன்னையறியாமல் ரசித்துக் கொண்டிருந்தாள் துர்கா.
பிள்ளைகளிடம் பேசிக் கொண்டே தற்செயலாக நிமிர்ந்து பார்த்த நித்திலனின் பார்வையில் அவளின் பார்வை விழ, மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.
“எல்லாரும் இங்கே இருக்கீங்களா? போண்டா போட்டேன். எடுத்துக்கோங்க…” என்று செவ்வந்தி சிற்றுண்டி தட்டை எடுத்து வந்து நீட்ட, ஆளுக்கு ஒன்றாக எடுத்து சாப்பிட்டுக் கொண்டே பேச்சை தொடர்ந்தனர்.
“சிவா, ஷிவானி…” என்று கீழே ஹேமாவின் குரல் கேட்க,
“ஐயோ! அம்மா…” என்று பிள்ளைகள் இருவரும் பதறி எழுந்து படியை நோக்கி ஓடினர்.
“பிள்ளைகளைப் பார்த்துக் கூட்டிட்டுப்போ நிரஞ்சா, ஹேமா கை நீட்டிடாம…” என்றார் செவ்வந்தி.
“நான் பார்த்துக்கிறேன்மா. அவங்க வீட்டுக்குப் பேசினால் ரொம்ப நேரம் பேசுவாள். இன்னைக்குப் பார்த்துச் சீக்கிரம் பேசி முடிச்சுட்டாள்…” என்று சொல்லிக் கொண்டே பிள்ளைகள் பின்னால் சென்றான் நிரஞ்சன்.
“சொந்த சித்தப்பாகிட்ட பேச கூடப் பயந்து பயந்து பேசுற நிலைக்குக் கொண்டு வந்துட்டாள் பாதகத்தி!” என்று செவ்வந்தி புலம்ப,
“விடுங்கமா. பிள்ளைங்க பாசம் மாறலையே? அதுக்குச் சந்தோஷப்பட்டுக்குவோம்…” என்றான் நித்திலன்.
“நானும், நிரஞ்சனும் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து இறுக்கி பிடிச்சுட்டு இருக்கோம். அதுவும் எத்தனை நாளைக்குன்னு தெரியலை…” என்றார் வருத்தமாக.
“அண்ணன் பார்த்துக்குவான்மா. அப்படியெல்லாம் விட்டுட மாட்டான்…” என்றான் ஆறுதலாக.
“என்னமோ போ. நம்ம வீட்டுக்கு வந்தவள் இப்படி ஆகிட்டாளே…” என்று அலுத்துக் கொண்டே அவரும் வேலை இருப்பதாகக் கீழே செல்ல, மூவர் மட்டுமே அங்கே இருந்தனர்.
“என்ன துர்கா, நம்ம வீடு விநோதமா இருக்கா?” என்று அதுவரை எதிலும் தலையிடாமல் அமைதியாக இருந்தவளிடம் கேட்டான்.
“மனிதர்கள் பலவிதம்னு எப்பவோ பாடம் படிச்சுட்டேன்…” என்றாள்.
“ம்ம், அதனால்தான் அண்ணி பேசியதையும் உங்களால் சாதாரணமா எடுத்துக்க முடியுது போல…” என்றான்.
“அவங்க என்னைப் பேசியதை விட உங்களைப் பேசியது தான் அதிகம். நீங்களே அமைதியாத்தானே இருக்கீங்க?”
“என்ன பேசினாலும் அவங்க மாறப் போவதில்லை. நாம ஏதாவது சொல்லிட்டால் இன்னும் வலிக்க ஏதாவது சொல்லுவாங்க. இனி அந்த வலியை தாங்க நான் தயாராயில்லை. அதான் ஒதுங்கிப் போறேன்…” என்றான்.
‘புரிந்தது’ என்று தலையை அசைத்தாள் துர்கா.
“ப்பா…” தன்னிடம் பேசவில்லை என்று வருணா அவனைத் தன் பக்கம் திருப்ப, “என்னடா குட்டி?” என்று கேட்டான்.
அவள் தன் மழலையில் ஏதோ சொல்ல, அதைக் கேட்டு அவளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தான்.
தந்தை, மகளுக்குள் பேச்சு ஓட, துர்காவின் பார்வை மீண்டும் அவனிடம் பதிந்தது.
அவளின் பார்வையைத் திரும்பிப் பார்க்காமலேயே உணர்ந்து கொண்ட நித்திலன் மனம் ஜில்லென்று குளிர்ந்து போனது.
காதல் கொண்ட மனம் பதில் பார்வை பார்க்க சொல்லி தூண்டியது.
தூண்டிய மனதை அப்படியே அடக்கி அமிழ்த்தினான்.
தான் பார்க்காதவரை தான் அவள் பார்வை தன் மீதிருக்கும் என்று உணர்ந்தவன் ரகசியமாக அவளின் ரகசிய பார்வையை ரசித்தான்.
சில நொடிகள் கணவனைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த துர்கா திடுக்கிட்டது போல் விழித்துக் கொண்டாள்.
தான் ஏன் அவனையே தொடர்ந்து பார்க்கிறோம்? என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டவள், பட்டென்று இருக்கையிலிருந்து எழுந்தாள்.
“என்ன துர்கா?” அவள் வேகத்தில் அவனின் கேள்வி பிறக்க,
“நான் கீழே போறேன்…” என்று மெதுவான குரலில் முணுமுணுத்து விட்டு கீழே இறங்க ஆரம்பித்தாள்.
அவளின் முதுகையே பார்த்துக் கொண்டிருந்த நித்திலனுக்குப் புன்முறுவல் அரும்பியது.
“உன்னோட அம்மாவுக்கும் என்னைப் பிடிச்சிருக்குடா குட்டி!” என்றவன் குழந்தையின் நெற்றியில் மகிழ்ச்சியுடன் இதழ் பதிக்க, குழந்தையும் அவனின் மகிழ்ச்சியில் பங்கெடுப்பது போல் சிரித்தாள்.
படியில் இறங்கிய துர்கா கடைசிப் படியில் காலை வைத்த போது அவளை வழி மறைத்தாள் ஹேமா.
“என்ன என் பிள்ளைகளை அவன் பக்கம் இழுக்கப் பார்க்கிறானா உன் புருஷன்? அவனை ஒழுங்கா இருக்கச் சொல்லு. இல்லனா அவன் குறையை எங்க சொந்தகாரங்ககிட்ட எல்லாம் சொல்லி நாரடிச்சுருவேன்…” என்றாள் ஆத்திரமாக.
அவளின் ஆத்திரத்தில் ஒரு நொடி திகைத்த துர்கா அவளை விநோதமாகப் பார்த்தாள்.
“அவர் அண்ணன் பிள்ளைங்களோட தானே பேசினார். அதில் என்ன தப்பு?” என்று கேட்டாள்.
“பேசக் கூடாது. ஒரு பொட்டைப்பயலோட மூச்சுக் காத்து கூட என் பிள்ளைங்க மேல படக்கூடாது…” என்று இன்னும் ஆங்காரத்துடன் சொல்ல,
அவள் சொல்லிய வார்த்தையில் துர்காவின் மேனி நடுங்கிப் போனது.
என்ன மாதிரியான வார்த்தை அது? எப்படிக் கூசாமல் சொல்கிறாள் என்று நினைத்த துர்காவிற்குக் கூடவே கோபமும் வந்தது.
“மரியாதையா பேசுங்க. என்ன பேச்சு இது? உங்க புருஷனோட தம்பி அவர். அவரை இப்படிப் பேச உங்களுக்குக் கூசலை?” என்று கேட்டாள்.
“எனக்கு ஏன் கூசணும்? பிள்ளை பெத்துக்கத் தகுதி இல்லாத அவனே கூசாம நெஞ்சை நிமிர்த்திக்கிட்டுத் திரியுறான். ஒரே பிரசவத்தில் இரட்டை பிள்ளை கொடுத்த என் புருஷனுக்கு இப்படி ஒரு தம்பி…” என்றாள் இளக்காரமாக.
“போதும் நிறுத்துங்க. பிள்ளை பெத்துக்கிறது ஒன்னும் பெரிய சாதனை இல்லை…” என்று துர்கா சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“அது சரி, குழந்தையோட ஒருத்தனை பிடிச்சுக்கிட்ட உனக்கு அது எல்லாம் பெரிய விஷயம் இல்லை தான். ஆமா நீ எப்படி இப்படி ஒரு பொட்டைப்பயல கட்டிக்கச் சம்மதம் சொன்ன? உன் முதல் புருஷன் போய்ச் சேர்ந்து தனியாத்தானே இருந்திருப்ப?
அப்ப கட்டியது தான் கட்டின ஒரு நல்ல ஆம்பிளையா பார்த்துக் கட்டிருக்கக் கூடாது? இவனைக் கட்டிகிட்டு ராத்திரி சுகம் கூடக் கொடுக்க மாட்டான். வேற ஆம்பளைய கட்டியிருந்தாலாவது சுகம் கொடுத்திருப்பான். இப்ப இவனைக் கட்டியும் நீ தனியாதானே வாழணும்? அதுக்கு எதுக்குக் கல்யாணம்?” என்ற அவளின் குதர்க்கமான கேள்வியில் முகத்தைச் சுளித்தாள் துர்கா.
எப்படி இவளால் தங்களின் அந்தரங்கத்தை அநாகரிமாகப் பேச முடிகிறது என்ற அருவருப்பு உண்டானது. இவளிடம் பேசுவது என்பது சாக்கடைக்குள் தானே குதித்துக் கொள்வதற்குச் சமம் என்று தோன்ற, விலகி நடக்க முயன்றாள்.
ஆனால் அவளைச் செல்ல விடாமல் படியின் குறுக்கே காலையும், கையையும் நீட்டி வழிமறித்தாள் ஹேமா.
“பதில் சொல்லிட்டு போ… காலம் முழுவதும் அவன் கூடச் சந்நியாசியா வாழப் போறதுக்கு எதுக்குக் கல்யாணம்?” என்று கேட்க, உள்ளுக்குள் சுருக்கென்று இருந்தது.
காலம் முழுவதும் சந்நியாசியாக இரு! என்று சொல்வது போல் தானே அவனைத் தான் திருமணம் செய்து கொண்டோம். அப்போது தவறு தன் மீது தானே என்று தோன்றியது.
“உன் நல்லதுக்குத் தான் சொல்றேன். அவன்கிட்ட உனக்கு ஒரு சுகமும் கிடைக்காது. அவனை அத்து விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ. இல்லனா ஒரு ஆளை வச்சுக்கோ. பொட்டைப்பய அவன். அவனுக்குப் பிள்ளை பிறக்காதுன்னு உன் பிள்ளையை அபகரிக்கவே உன்னைக் கல்யாணம் செய்துருக்கான். உன் பிள்ளையைக் கைபற்றிக்கோ. இல்லனா உன் பிள்ளை உனக்கு இல்லை…” என்று ஹேமா பேசிக் கொண்டே போக,
“ச்சீ, நீங்களும் ஒரு பொண்ணா? வாயை திறந்தாலே சாக்கடை. அருவருப்பா இருக்கு உங்க பேச்சு. அவர் பிள்ளையை அவரே அபகரிப்பாரா? இப்படிப் பேச அசிங்கமா இல்லை?” என்று கேட்டாள்.
“என்ன அவன் பிள்ளையா? உன் கூடப் படுத்தா பிள்ளை பெத்துக்கிட்டான்? வேற எவனுக்கோ பெத்த குழந்தையை அவன் குழந்தைன்னு சொல்ல உனக்கே வெட்கம் இல்லாதப்ப நான் ஏன் வெட்கப்படணும்?
ஆமா, நீ உன் முதல் புருஷனுக்குப் படுத்து தான் பிள்ளை பெத்தியா? இல்ல, வேற எவனுக்காச்சும் பெத்தியா? அப்பன் பேரு தெரியாம இவன் பேரை வைக்கத்தான் இந்தப் பயலை கட்டிக்கிட்டயோ?” என்று வக்கிரமாக ஹேமா கேட்க,
அவளின் அபாண்டமான குற்றசாட்டில் துர்காவிற்கு உயிரே ஆட்டம் கண்டது போல் நடுங்கிப் போனது.
பதில் பேச கூட முடியாமல் அவள் உறைந்து நின்று போக, “போதும் நிறுத்துங்க…” என்று கோபமாகச் சொல்லிய படி அங்கே வந்தான் நித்திலன்.
“வாய் இருந்தா என்ன வேணும்னாலும் பேசுவீங்களா? என் துர்காவோட புனிதத்தைப் பத்தி பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை. அண்ணியாச்சேன்னு பேசாமல் போனால் உங்க இஷ்டத்துக்குப் பேசுவீங்களா? இவ்வளவு தான் உங்களுக்கு மரியாதை. இதுக்கு மேல பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன்…” என்றான்.
“என்ன செய்வ? என்ன செய்ய முடியும் உன்னாலே? மீச வச்சவனெல்லாம் ஆம்பளை ஆகிட முடியாது…” என்றாள் இன்னும் இளக்காரமாக.
“ஆமா நான் ஆம்பளை இல்லை தான். அதனால் உங்களுக்கு என்ன? என் அண்ணனுக்காகப் பார்க்கிறேன். இல்லனா…” என்றவன் கோபத்துடன் கையை ஓங்கினான்.
ஆனால் அதற்குள், ‘பளார்’ என்று ஹேமாவின் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது.