23 – ஞாபகம் முழுவதும் நீயே

அத்தியாயம்- 23

மருத்துவமனைக்கு வந்து விட்டு சென்று கொண்டிருந்தாலும் அது ஒரு சுகமான பயணமாகவே தம்பதிகள் இருவருக்கும் தோன்றியது.

கவினும் இப்போது முழித்திருக்கத் தாங்கள் ஒன்றாகக் காரில் செல்வதைப் பார்த்துக் குதூகலித்த படி வந்தான்.

சில நேரங்களில் வினய் கார் ஓட்ட தடுமாறுவதைப் பார்த்து, கணவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

மனைவி தன்னையே பார்ப்பதை உணர்ந்து அவள் பக்கம் மெல்ல திரும்பியவன் அவளின் கேள்வியான பார்வையில், “இந்த ஊர் ரோட்டுல ட்ரைவிங் எனக்குப் பழக்க இல்லையே? அதான் இப்படி…” என்று தன் தடுமாற்றத்தை சொன்னான்.

அவன் சொன்னதை கேட்டதும் நேற்று இரவு வெளியே சென்று விட்டு வந்தது ஞாபகம் வர “அப்போ நைட் எப்படிக் குடிச்சிட்டு ஓட்டுனீங்க…?” என்று முறைத்துக் கொண்டே கேட்டாள்.

அவளின் உரிமையான கோபம் கூட வினய்க்கு சந்தோசத்தை தர மனைவியின் புறம் லேசாக திரும்பி சிரித்தவன் “நைட் டாக்சில தான் போனேன். குடிச்சிட்டு கார் ஓட்டி எனக்குப் பழக்கம் இல்லை. அதான் நேத்து இங்கேயும் டாக்சில போய்ட்டு வந்தேன்” என்றான்.

“ம்கும்… குடிச்சிட்டு ‌வண்டி ஓட்ட கூடாதுங்கிற எண்ணமாவது இருந்ததே… சந்தோஷம்…!” என்றவளிடம் “என் குடும்பத்துக்கு நான் வேணும்கிற நல்ல எண்ணம் தான்” என்று சிரித்தபடி சொன்னான்.

அதைக் கேட்டு கியரின் மேலிருந்த அவனின் கையை மென்மையாகப் பிடித்தாள்.

மருத்துவரிடம் எப்பொழுது குடியை விட்டுவிடுவதாக வினய் சொன்னானோ அப்பொழுதே பவ்யாவின் கோபம் அனைத்தும் பறந்தோடி விட்டது. இப்போது அவன் சொன்ன பதிலில் மேலும் மகிழ்ந்தவள் கணவனைப் பார்த்து மென்னகை புரிந்தாள்.

மனைவியின் தொடுகையிலும், புன்னகையிலும் வினய்யின் மனம் மகிழ்ச்சியில் ஆர்பரித்தது.

வீடு வந்து சேர்ந்ததும் வினய்யை சிறிது நேரம் படுத்திருக்கச் சொல்லிவிட்டு சமையல் வேலையை ஆரம்பித்தாள்.

கணவனுக்கு வயிற்றுப் புண் இருந்ததினால், மருத்துவர் சொன்னது போல் காரம் அதிகம் சேர்க்காமல் சமைத்தாள்.

காலை உணவு முடிந்ததும், ரங்கநாதனுக்கு அழைத்து வினய்க்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி அலுவலகம் வர முடியாததைச் சொன்னாள்.

விவரம் கேட்டவரிடம் கணவனின் குடியை பற்றிச் சொல்லாமல் வெறும் சூடு என்று மட்டும் சொல்லி வைத்தாள்.

அவள் பேசுவதை எல்லாம் வினய் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். இப்போது வலி இல்லை அலுவலகம் போகின்றேன் என்றவனை வீட்டில் இருக்கச் சொன்னவளே அவள் தான்.

காலையில் தான் வலியில் துடித்த போது அவளும் எப்படித் துடித்தாள் என்று கவனிக்கத்தானே செய்தான். அந்த நொடியிலிருந்து இப்போது வரை தனக்குப் பார்த்துப் பார்த்துச் செய்பவளை அவனின் பார்வை வட்டமிட்டுக் கொண்டே இருந்தது.

வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் அடிக்கடி ‘இப்ப எப்படி இருக்கு வலி? குறைந்து இருக்கா?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தாள்.

அவள் கேட்கும் போதெல்லாம் பதில் சொன்னவன் சிறிது நேரத்தில் மீண்டும் வந்து பவ்யா கேட்கவும், சில நொடிகள் மனைவியின் முகத்தையே அமைதியாகப் பார்த்தான்.

பின்பு தன் அருகில் விளையாடிக் கொண்டிருந்த கவினின் ஒரு காரை எடுத்து இவர்கள் ஹாலில் அமர்ந்திருந்ததால் அந்தக் காரை உள் அறைக்குள் போவது போல விட்டுவிட்டு “போய் எடுத்துட்டு வாங்க கவின் குட்டி…” என்றான்.

அவனும் வேகமாகக் காரை பிடிக்க ஓடினான். பவ்யா கணவனின் செய்கையைப் புரியாமல் பார்த்தாள்.

கவின் உள்ளே சென்றதும் தன் அருகில் நின்றிருந்த மனைவியின் கையை அவள் சுதாரிக்கும் முன் சுண்டி இழுத்தான்.

அவன் இழுப்பான் என்று எதிர்ப்பார்க்காதலால் அவனின் மடியிலேயே போய் விழுந்தாள். விழுந்தவளை நொடியும் தாமதிக்காது இறுக அணைத்திருந்தான் வினய்.

இதைச் சற்றும் எதிர்பாராத பவ்யா அவனிடம் இருந்து விலகப் பார்த்தாள். “ப்ளீஸ் பவிமா… கொஞ்ச நேரம்…” என்றான் இறைஞ்சுதலாக.

அவனின் அந்தக் குரலுக்குக் கட்டுப்பட்டு அவனோடு ஒட்டிக் கொண்டாள். அவளுக்குமே அந்த அணைப்புத் தேவையாக இருந்தது.

தனித்துத் தவித்துத் தனிமையில் போராடிய அவள் போராட்டத்திற்குப் பலன் கிடைத்தது போலக் கணவன் தன் கை சேர்ந்ததில் எல்லையில்லா நிம்மதி வந்தது.

அவளை அணைத்த படி அவளின் காதின் அருகில் தன் அதரங்களைக் கொண்டு சென்றவன் “இந்த அன்பை ரொம்ப நாளா இழந்துட்டேன் பவிமா. உன் அக்கறை… எனக்காகத் தவிக்கும் உன் தவிப்பு… இது எல்லாம் இல்லாம நான் வாழ்ந்த வெறுமை வாழ்க்கை இப்படி ஒரு அன்பை இத்தனை நாளும் இழந்துட்டியேடா மடையானு என்னைப் பார்த்துச் சிரிக்கிறது போல இருக்கு” என்றவனின் குரல் கரகரப்பாக ஒலித்தது.

கணவனின் வேதனையை உணர்ந்து வாய் பேச்சாக இல்லாமல் அமைதியாக அவனின் முதுகை இதமாகத் தடவிக் கொடுத்தாள்.

அதற்குள் கவின் வரும் சத்தம் கேட்க, இருவரும் விருப்பமே இல்லாமல் மெல்ல பிரிந்து அமர்ந்தார்கள்.

தன் காரை எடுத்து வந்த கவின் உற்சாகமாகத் தந்தையின் கையில் கொடுத்து மீண்டும் விடச் சொன்னான். “குட் டா குட்டி… இந்தாங்க திரும்ப எடுத்துட்டு வாங்க…” என்று திரும்பக் காரை விட்டான்.

“நீயும், நானும் பேச குட்டியே ஐடியா கொடுக்குறான்” என்று கள்ள சிரிப்புடன் வினய் சொல்ல, பவ்யாவிடமும் அந்தச் சிரிப்பு பரவியது.

ஆனாலும் விடாமல் அவனின் உடல்நிலையில் அக்கறை கொண்டு “சொல்லுங்க வினு. இன்னும் வலி இருக்கா…?” என்று கேட்டாள்.

தன் அருகில் இருந்த மனைவியின் கையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்ட வினய் “வலி இல்லடா. மாத்திரை போட்டதும் வலி நல்லா குறைஞ்சிருச்சு” என்றவன், மனைவியை மீண்டும் அணைக்கும் ஆவலில் அருகில் இழுத்தான்.

“ஹுகும்… வேண்டாம்…” என்று பவ்யா மறுப்பு தெரிவிக்க, வினய் கெஞ்சலாக ஒரு பார்வை பார்த்து வைத்தான்.

அந்தப் பார்வையில் பவ்யாவின் மனதும் உருகி கரைந்தது. அவளின் இளகலை உணர்ந்து வினய் மனைவியை அணைக்கப் போக, வீட்டின் அழைப்பு மணி அழைத்து அவர்களின் நிலையைக் கலைத்தது.

ஏமாந்த உணர்வுடன் கதவைப் பார்த்தான். அவனைப் பார்த்து லேசாகச் சிரித்து விட்டுப் பவ்யா போய்க் கதவை திறக்க ரங்கநாதன் தான் வந்திருந்தார். “என்ன மாமா இந்த நேரத்தில்?” என்ற பவ்யாவின் பேச்சை காதில் வாங்காமல்,

வேகமாக மகனின் அருகில் வந்தவர் “டேய் வினய்… உனக்கு ஒரு ஆபத்து வந்தா அதைச் சொல்லக் கூட மாட்டியா? அப்படியாடா எங்க மேல எல்லாம் வெறுத்து போய் இருந்த…?” என்று எடுத்ததும் கோபமாகக் கேட்டார்.

“என்னப்பா சொல்றீங்க? ஆபத்தா…? அப்படி எதுவும் இல்லப்பா. சாதாரண வயிறு வலி தான். அதுக்குப் போய் ஏன் என்னென்னமோ கேட்குறீங்க?” என்று குழம்பி போய்க் கேட்டான். பவ்யாவும் ‘என்ன நடக்கிறது இங்கே?’ என்பது போலப் புரியாமல் முழித்தாள்.

“டேய்… இந்த வயித்து வலியை யாரு கேட்டா? நீ ஊர்ல இருக்கும் போது ஏதோ துப்பாக்கி சூடு நடந்ததாமே? அதில் இருந்து அதிர்ஷ்டவசமா தப்பிச்சிருக்க. ஒரு வார்த்தை இங்கே எங்களுக்குப் போன் பண்ணனும்னு உனக்குத் தோணுச்சாடா?” என்று கேட்டார்.

அவர் சொன்னதைக் கேட்டு பதறிப் போன “என்ன மாமா சொல்றீங்க?” என்று கேட்டாள்.

“ஆமாமா…” என்றவர் தான் கேள்வி பட்டதாக அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைப் பற்றிச் சொன்னார்.

‘அப்படியா…?’ என்பது போல நெஞ்சில் கை வைத்து பவ்யா அதிர்ந்து நின்றிருக்க, வினய்யோ சற்றும் அலட்டிக் கொள்ளாமல் தந்தையைக் கூர்மையாகப் பார்த்தான்.

“என்னடா… பேசாம இருந்தா என்ன அர்த்தம்…? எங்களுக்கு ஏன் சொல்லலை…?” என்று அதட்டலாகக் கேட்டார்.

பவ்யாவும் அந்தக் கேள்வியைக் கண்ணில் தாங்கி கேட்க, வினய்யோ “உங்களுக்கு யாருப்பா சொன்னது?” என்று நிதானமாகக் கேட்டான்.

அவன் கேள்வியில் இப்போது ரங்கநாதன் தடுமாறினார். ஆனாலும் சமாளித்து “யார் சொன்னா என்ன? நான் கேட்டதுக்கு நீ முதலில் பதிலை சொல்லு…” என்றார்.

“ப்ச்ச்…! அது ஒன்னும் இல்லப்பா லேசான காயம் மட்டும் தான்” என்றவன் தலையில் இருந்த தழும்பை தேய்த்து விட்டான்.

‘அப்படி வந்த தழும்பு தானா இது?’ என்பது போல அந்தத் தழும்பையே பவ்யா பார்த்துக் கொண்டிருக்க,

“உங்களுக்கு யாரு சொன்னது ரிதேஷா? அவனை உங்ககிட்ட சொல்லக் கூடாதுனு தடுத்து வச்சுருந்தேனே?” என்று வினய் கேட்டான்.

“ஓ…! உனக்கு ரிதேஷ் பத்தி தெரிஞ்சுருச்சா? ஆனா அவன் கொஞ்ச நேர முன்னாடி பேசும் போது கூட உனக்குத் தெரிஞ்சுருச்சுன்னு சொல்லவே இல்லையே…?” என்று சாதாரணமாகவே கேட்டார் ரங்கநாதன்.

“நாம இரண்டு பேரும் இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கட்டும்னு நினைச்சுருப்பான்” என்றான் அவருக்குப் பதிலாக.

அவர்கள் பேசுவது புரியாமல் முழித்துக் கொண்டு நின்றிருந்தாள் பவ்யா.

“அன்னைக்கு நான் தலையில் அடிப்பட்டு ஹாஸ்பிட்டல்ல இருக்குறப்ப தான் ரிதேஷ் உங்களுக்குப் போன் செய்து சொல்ல போறேன்னு என்கிட்டே உளறிட்டான். அப்புறம் தான் தெரிஞ்சது நீங்க அவன் மூலமாகத் தான் என்னைப் பத்தின நியூஸ் எல்லாம் தெரிஞ்சுகிறீங்கன்னு. அவன்கிட்ட நான் இங்க வர போறதை கூடச் சொல்ல வேண்டாம்னு சொன்னேன். அதான் உங்ககிட்ட அவன் இத்தனை நாளும் பேசலை. ஆனாலும் நல்ல ஆளை ஏற்பாடு பண்ணிருக்கீங்க என்னை மாத்த…” என்றான்

“பின்ன… என்னை என்ன செய்யச் சொல்ற? போன்ல ஒழுங்கா பேச மாட்டேங்கிற. பவ்யாவும், நீயும் பேசிக்கிறதே இல்லை. அப்படி இருக்கும் போது உன்னைப் பத்தி தெரிஞ்சுக்க ரிதேஷ்கிட்ட பேசினேன்.

நான் வடமாநிலத்துல ஆர்டர் எடுக்கும் இடத்தில் அந்தக் கம்பெனியில் மேனேஜரா இருப்பவர் தான் ரிதேஷோட அப்பா. ஒரு முறை பேசும் போது அவர் மகனும் அமெரிக்காலத் தான் வேலை பார்க்கிறதா சொன்னார். அந்தச் சமயம் அவனுக்குக் கல்யாணம்னு இந்தியா வந்திருந்தான்.

கூப்பிட்டு பேசினதுல தான் நீயும் அவனும் ஒரே கம்பெனி, உன் பிரண்டுனு வேற சொன்னான். அப்புறம் என்ன? உன்னைப் பத்தி சொல்லி, இப்படிப் பிரிஞ்சு இருக்கான். ஏதாவது பண்ணனும்னு சொன்னேன்.

அவனும் கல்யாணம் முடிஞ்சு ஊருக்கு போன பிறகு இப்படி எல்லாம் பேசி உன் மனசை மாத்த போறதா சொன்னான். அவன் குழந்தை பிறந்தப்ப நீ ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு இருந்தியாமே? அதையும் சொல்லி வினய் மனசு மாறிடுச்சுன்னு நினைக்கிறேன்னு சொல்லவும் ரொம்பச் சந்தோஷப்பட்டேன்.

அதுக்குள்ள இங்க பவ்யா உன்கிட்ட போகப் போறேன்னு சொல்லவும், ரிதேஷ் உன் மனசு மாறிடுச்சுனு சொன்னதை வச்சு தான் கொஞ்சநாள் பொறுமானு சொன்னேன்.

ஆனா மானத்துக்குப் போராடி தப்பிச்சதுல பவ்யா வேதனை படவும், அதோட என்னால என் மருமகளைப் பாதுகாக்க முடியலைகிற வருத்தத்திலும் அவ கிளம்ப ஏற்பாடு செய்தேன்” என்று நடந்ததை எல்லாம் சொல்லி முடித்தார் ரங்கநாதன்.

“எனக்கு இதெல்லாம் தெரியவேயில்லையே மாமா?” என்று பவ்யா கேட்க,

“எப்படிமா சொல்றது? நீயும் ஒரு போன் கூடப் பேச மாட்டேன்னு பிடிவாதமா இருந்த. அதோட நீங்களா இவனை வர வைக்காதீங்கன்னு எனக்கு ஆர்டர் வேற போட்டுட்ட. ஆனாலும் அதுக்காக உங்க இரண்டு பேரையும் அப்படியேவா விட முடியும்?

நானா அவனை வர வைக்க முடியல. ஆனா அவன் மனசு மாறுவதற்கு ரிதேஷ் மூலம் சில ஏற்பாடு செய்தேன். பிடிவாதம் பிடிக்கிற உங்க இரண்டு பேரையும் வச்சுக்கிட்டு நான் வேற என்ன தான் செய்ய முடியும்? அதுக்குத் தான் நான் இப்படி எல்லாம் செய்ய வேண்டியதாகிருச்சு” என்றார்.

மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர் “சரி… நான் கிளம்புறேன். ரிதேஷ் கொஞ்ச நாளா போனே போடலை. எப்படி இருக்கான்னு தெரிஞ்சுக்கப் போன் போட்டா இப்படி ஒரு நியூஸ் இத்தனை நாள் பிறகு சொல்லி என் பி.பி.யை ஏத்திட்டான். அதான் கிளம்பி வந்தேன். இனியாவது எதையும் மறைக்காம இருக்கப் பாரு” என்று விட்டு கிளம்பினார்.

அவர் சென்றதும் கவின் அருகில் இருக்கும் போது வினய்யை தொட்டு பேச தயங்கிய பவ்யா மகனை விளையாட விட்டுவிட்டு கணவனின் அருகில் அமர்ந்து மெல்ல அவனின் கேசத்தை வருடி விலக்கி விட்டவள் பின்பு தழும்பில் கைவைத்து மெதுவாக விரலால் தடவி விட்டாள்.

தன் அருகில் இருக்கும் மனைவியின் முகத்தையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த வினய் அவளின் வருடலில் உடல் சிலிர்த்தான்.

அவளின் விரலின் மீது தன் கையை வைத்துப் பிடித்துக் கொண்ட வினய் “அது ஒன்னும் இல்லைடா பயப்படாதே…” என்றான் ஆறுதலாக.

“ம்ம்… ஆனா ரொம்ப வலிச்சிருக்கும்ல உங்களுக்கு. நல்லவேளை இதோட போயிருச்சு. வேற எதுவும்னா…?” என்று சொல்லி நிறுத்தியவள் அதற்கு மேலும் யோசிக்க முடியாமல் இப்போது தானே கணவனை இறுக அணைத்திருந்தாள்.

கேள்விப்பட்ட விஷயத்தில் அவள் உடல் மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தது.

அதை உணர்ந்த வினய் “நோ பவி…! எனக்கு ஒன்னும் இல்லை. இப்போ உன் கண்ணு முன்ன நான் நல்லாத்தான் இருக்கேன்” என்று ஆறுதல் படுத்தினான்.

வரவேற்பறை படுக்கையில் அமர்ந்த படி அவர்கள் அணைத்திருக்கச் சிறிது நேரம் தனியாக விளையாடிக் கொண்டிருந்த கவின் இவர்களின் நிலையைக் கண்டு எழுந்து வந்தவன் இருவரையும் சேர்ந்தார் போல அவனால் முடிந்த அளவு கையைக் கொண்டு வந்தவன் அன்னையையும், தந்தையையும் சேர்த்து அணைத்தான்.

மகனின் அணைப்பில் பெற்றவர்களுக்கு உச்சி குளிர்ந்து போனது. அவனை அள்ளி கைகளில் எடுத்துக் கொண்ட வினய் “என் சமத்துக் குட்டி…” என்று கொஞ்சிக் கொண்டான்.

பின்பு பவ்யாவிடம் திரும்பி “நாம நிறையப் பேசணும் பவி. இனி நமக்கிட்டேயே இருந்த இடைவெளி தொடர வேண்டாம்னு நினைக்கிறேன். உனக்கு ஓகேவாடா? இல்லைனா நேத்து நைட் மாதிரி இன்னும் என் மேல கோபம் இருக்கா…?” என்று கேட்டான்.

அவனின் கேள்விக்கு இல்லை என்று தலையசைத்தவள் “இன்னைக்குக் கூடப் பேசலாம் வினு…” என்று தன் சம்மதத்தைத் தந்தாள்.

தொடர்ந்த அன்றைய பகல் பொழுது முழுவதும் இன்னும் தாங்கள் முழுதாகப் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் இருவரின் மனதிலும் ஒரு இனிமை படர்ந்த வண்ணமே இருந்தது.

இரவு உணவை விரைவில் முடித்து, கவினை உறங்க வைத்த பவ்யா தன் படுக்கையில் தடுமாற்றத்துடன் அமர்ந்திருந்தாள்.

பேசலாம் என்று சொல்லி விட்டாலும், ஏதோ ஒரு தயக்கம் அவளைத் தடுமாற வைத்தது.

அதனுடனேயே சிறிது நேரம் இருந்தவளை, லேசாகத் திறந்திருந்த கதவின் வழியே எட்டிப் பார்த்தான் வினய். அவனைக் கண்டு அவளும் பார்க்க, கண்கள் இரண்டும் கவ்வி நின்றன.

பின்பு மெல்ல தன் ஒற்றைக் கையை நீட்டியவன் ‘இங்கே வா…!’ என்பது போலத் தலையை அசைத்தான்.

அவனின் அழைப்பில் உடனே அவனிடம் அடைக்கலம் புக மனம் விரும்பினாலும், தாயாய் தான் அவளின் மனம் முதலில் யோசித்தது. அதனால் கவினை கண் காட்டி அவள் தயங்க “நாம பேசுற சத்தத்தில் எழுந்துருவான்டா. நாம பேசி முடிச்சுட்டு அங்கே போகலாம்” என்றான் மெல்லிய குரலில்.

‘சரி’ என்பது போல எழுந்தவள் கவினை சுற்றி அரணாகத் தலையணைகளை வைத்து விட்டு எழுந்து மெல்ல கால்கள் பின்ன நடந்து வந்தாள்.

அருகில் வந்த மனைவியின் கரம் பற்றி அழைத்துக் கொண்டு ஹாலில் இருந்த படுக்கையில் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து மனைவியையும் அருகே அமர வைத்தான்.

இருவரிடமும் சிறிது நேரம் மௌனம் ஆட்சி செய்தது.

அந்த மௌனத்தை முதலில் கலைத்த வினய் “உனக்கு என்கிட்டே எதுவும் கேட்கணுமா பவி…?” என்று கேட்டான்.

‘கேட்கணும்’ என்பது போலத் தலையசைத்த பவ்யா “நிஜமாவே நீங்க கவினுக்காக மட்டும் தான் வந்தீங்களா?” என்று கேட்டாள்.

நேற்று இரவு போதையில் பேசியதை வைத்து அப்படி இல்லை என்று அவள் அறிந்திருந்தாலும், கணவன் சுயநினைவோடு இருக்கும் போது அவன் வாய் மொழியாக அறிந்து கொள்ள முயன்றாள்.

மனைவியின் முகத்தில் படிந்திருந்த லேசான சுணக்கத்தைப் பார்த்த வினய் “நீ ஏன் எனக்குக் கவின் வீடியோ மட்டும் எடுத்து அனுப்பின?” என்று பதிலுக்குக் கேட்டான்.

இது என்ன கேள்வி என்பது போலப் பார்த்தவள் “கவின் பிறந்ததில் இருந்து நீங்க அவனைப் பார்க்கலை. எப்படியும் எப்பவாவது இதோ இது போல நாம சேரும் போது அவன் பிறந்ததில் இருந்து எப்படி இருந்தான்னு கூட நான் பார்க்கலையேனு நீங்க வருந்துவீங்கனு நினைச்சு தான் அவன் என் வயிற்றில் இருக்கும் போதே அது போல வீடியோ எடுத்து வைக்கணும்னு நினைச்சேன்.

ஆனா வீடியோ எடுத்த பிறகு ஏன் அதை உங்களுக்கு அனுப்ப கூடாதுன்னு தோனுச்சு. நாம பேசிக்கலைனாலும் உங்களுக்கும், எனக்கும் இடையே அவனாவது ஒரு பாலமா இருக்கட்டும்னு எனக்கு ஒரு எண்ணம்.

அதோட அந்த வீடியோ பார்த்து பிள்ளையைப் பார்க்கணும்கிற ரத்த பாசம் உங்களை இங்கே இழுத்து வரும்னு நினைச்சேன். ஆனா நீங்க வீடியோ பார்த்தும் இப்பதான் வந்துருக்கீங்க” என்று தன் எண்ணத்தைச் சொன்னவள் முடிக்கும் போது வருத்தமாக முடித்தாள்.

அவள் வருத்தத்தைப் பார்த்து அவளின் கையை இறுக பிடித்தவன் “சாரி பவி…! சில உண்மைகள் கசக்க தான் செய்யும். இப்போ நான் சொல்ல போறதும் உனக்குக் கஷ்டமா இருக்கலாம். ஆனால் சாரிடா… நான் சொல்லிடுறேன்…” என்று பீடிகை போட்டவன்,

அவள் கையை இன்னும் தன்னுள் புதைத்துக் கொண்டு, “நான் அந்த வீடியோவை இப்போ கொஞ்ச நாளைக்கு முன்ன தான் முதல் முதலா திறந்து பார்த்தேன் பவி” என்று அவன் சொன்னதும், “என்ன…?” என்று அதிர்ந்த படி அவளின் கையை அவனிடம் இருந்து பறித்துக் கொள்ள முயன்றாள்.

“நோ பவி…” என்று அவள் கையை விடாமல் பிடித்துக் கொண்டவன், “இதுக்கு விளக்கம் சொல்ல நான் ஆரம்பத்தில் இருந்து சொல்லணும். ப்ளீஸ்… பொறுமையா கேளு…” என்றவன் பேச்சை தொடர்ந்தான்.

“நீ அப்பா பார்த்த பொண்ணு. அப்படி இருக்கும் போது நீயும், அப்பாவும் சேர்ந்து தான் என்னை இங்கேயே தங்க வைக்க முயற்சி பண்ணுறீங்களோனு எனக்கு அன்னைக்கு என் மனசில் அழுத்தமா பதிஞ்சிருச்சு. அந்தக் கோபம் என்னை விட்டு போகவே இல்லை. நீ உன் அப்பா, அம்மா பத்தி சொல்ல வந்ததை நான் கேட்டு இருக்கணும். ஆனா அப்ப இருந்த கோபம் ரொம்ப முரட்டுத் தனமா பிகேவ் பண்ண வச்சுருச்சு.

அதனால் தான் உன் கண்ணீரை பொருட்படுத்தாமல் போனது. உன்னை நடிக்கிறனு சொன்னது” இதை அவன் சொல்லும் போது பவ்யாவின் முகத்தில் வலி தெரிவதை பார்த்து, “சாரிமா… தப்பு தான்! என் குணம் அப்படிச் சொல்ல வச்சுருச்சு.

என்னோட சின்ன வயசில் இருந்து நான் என்ன கேட்டாலும், தட்டாமல் கிடைக்கும். வெளிநாட்டுக்குப் படிக்கப் போக ஆசைனு சும்மா ஒரு வார்த்தை தான் என் அப்பாகிட்ட சொன்னேன். அதை என் அம்மா தடுத்ததையும் மீறி அவங்களையும் சம்மதிக்க வச்சு என்னைப் படிக்க அனுப்பினார் அப்பா.

அதுக்குப் பிறகும் என்ன கேட்டாலும் எனக்கு அதை வாங்கித் தருவார். அம்மா முதலில் தடுத்து பார்ப்பாங்க. ஆனா அவங்களையும் நான் பேசி எப்படியாவது சம்மதிக்க வச்சுருவேன். பிறகு என்ன கேட்டாலும் கிடைக்கும் நிலைக்கு நான் பழகிட்டேன்.

அப்படி இருக்கும் போது பாரின் வாழ்க்கையின் மீது ஆசை வந்து அங்கே இருக்குற முடிவுக்கும் அப்பா சம்பதிப்பார்னு நினைச்சேன். அம்மாவையும், அப்பாவையும் அப்படியே அழைச்சுட்டு போய்றணும்னு ஆசை எனக்கு.

ஆனா அம்மாவோட எதிர்பாராத இழப்பும், அந்தச் சமயத்தில் இந்த ஊர் சூழ்நிலை தான் என் அம்மா இறக்க காரணம்கிற என் மனதில் விழுந்த அழுத்தமும் பாரின் வாழ்க்கை தான் பெஸ்ட்னு நினைக்க வச்சது” என்றான்.

“ஏன்… ஆபத்து எங்கேயும் தான் இருக்கும். அதுக்கு உள்நாடு என்ன? வெளிநாடு என்ன?” என்று கேட்டாள் பவ்யா.

அவள் கேள்வியில் வறட்சியாகச் சிரித்தவன் “என்ன செய்யப் படிச்சுப் பட்டம் வாங்கியும் அதைக் கொஞ்சம் கூட யோசிக்காத முட்டாள் தான் நான்” என்றவன், “பிடிவாதம்…. முரட்டுப் பிடிவாதம் மட்டுமே என்னை எதையும் யோசிக்க விடலைனு நினைக்கிறேன்.

படிக்கும் போதே வெளிநாட்டில் செட்டில் ஆகணும். பிசினஸ் பண்ணனும். இந்த மாதிரி எல்லாம் என் வாழ்க்கை அமோகமா இருக்கணும்னு ஏதேதோ கனவு எனக்கு. ஆனா இது எல்லாம் அப்பாவாலயும் உன்னாலயும் தடைப் பட்டப்ப, என் ஆசை கனவு எல்லாம் எப்படி மறுக்கப்படலாம்னு கோபம்.

நான் கேட்டது எனக்குக் கிடைக்கணும்கிற வீம்பு. என் ஆசைக்கு விழுந்த முதல் தடை அது. அதை என்னால தாங்க முடியலை. அதுவும் அப்பா லாஸ்ட் வரை எனக்குச் சரி சொல்லிட்டு கடைசி நேரத்தில் வேண்டாம்னு தடுக்கவும், உண்டான கோபம். எனக்கு எப்படி நீங்க மறுப்பு சொல்லலாம்னு ஆத்திரம் தான்… நம்ம நாலு வருஷ பிரிவு…!” என்று பெருமூச்சு விட்டான் வினய்.

“நீயும் என் கூட வரமுடியாதுனு சொல்லவும், உன் நியாயத்தைக் கூடக் காது கொடுத்து கேட்காம கோபத்தை மட்டும் கையில் பிடிச்சுக்கிட்டு உன்னை விட்டுப் போய்ட்டேன்.

அந்தக் கோபமும், நீயும் எப்படி என் ஆசைக்குத் தடை சொல்லலாம்கிற வீம்பும் தான் என்கிட்ட முழுமையா இருந்துச்சு. அது தான் நீ மெயில் அனுப்பினப்பவும் நீ ஏதோ என்ன சமாதானம் செய்யத் தான் அனுப்புறனு நினைச்சு நான் ஓப்பனே பண்ணலை” என்றான்.

“ஓ…! அப்புறம் எப்படிக் கொஞ்ச நாளைக்கு முன்னாடி மட்டும் ஓப்பன் பண்ணி பார்க்க தோணுச்சு?” என்று பவ்யா கேட்டாள்.

அவள் அப்படிக் கேட்கவும்… ரிதேஷ், ஷீலுவை பற்றியும் சொன்னவன், ஷீலு ஒரு பெண்ணின் தனிமை வாழ்க்கையில் வரும் இன்னல்களைச் சொல்லி தன்னைப் பயமுறுத்தியதை சொன்னவன்,

“ஷீலு அப்படிச் சொல்லவும், ஒருவேளை உனக்கு அப்படி எதுவும் ஆபத்து வந்து அதைச் சொல்றதுக்கு மெயில் அனுப்பிருப்பியோனு நினைச்சு தான் பதைபதைப்போட ஓபன் பண்ணினேன். அப்பத்தான் நம்ம குட்டி கண்ணனின் தரிசனம் எனக்குக் கிடைச்சது” என்றான்.

“ஓ…!” என்று அவன் சொன்னதைக் கேட்டாள்.

“ஹ்ம்ம்…! ஆனா அந்த வீடியோ தான் இன்னும் உன் மேல கோபத்தைக் கூட்டி விட்டுருச்சு” என்றான்.

“என்னது…? எதுக்குக் கோபம்…? உங்க பிள்ளையை உங்க கிட்ட காட்டினதுக்கா?” என்று கேட்டாள்.

‘இல்லை…’ என்று தலையசைத்தவன் “இத்தனை வீடியோ அனுப்பினவ, ஒரே ஒரு வீடியோவிலாவது இந்த அழகு முகத்தை ஏன் காட்டலைனு தான் கோபம் வந்துச்சு” என்றவன் அருகில் இருந்த மனைவியின் அழகு முகத்தைத் தன் விரலால் வருட ஆரம்பித்தான்.

அவனின் அந்தப் பதில் பவ்யாவை நம்ப முடியாத திகைப்பில் ஆழ்த்தியது. ‘நிஜமாகவா…?’ என்பது போல விழிவிரித்துக் கணவனைப் பார்த்தாள்.