23 – உனதன்பில் உயிர்த்தேன்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 23

“யோவ்… என்னாச்சுயா?” என்று பதறிய படி கணவன் அருகில் ஓடிய தேன்மலர் அவன் நிலையைப் பார்த்து அதிர்ந்து போனாள்.

“நீ எம் பொஞ்சாதி இல்லாம வேற யாரு? பொஞ்சாதின்னு சொன்னா அப்படியான்னு கேட்குற?” என்று புலம்பிய படி வரப்பில் விழுந்து கிடந்த வைரவேலின் குரல் குழறிக் கொண்டிருக்க, அதுவே அவன் குடித்திருக்கிறான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

தங்கள் திருமணத்திற்குப் பிறகு இப்போது தான் அவன் குடிப்பதை பார்க்கிறாள்.

இவ்வளவு நாட்களும் குடிக்காதவன், இப்போது குடிக்க வேண்டிய அவசியம் என்ன?

“இப்ப என்னாத்துக்குயா இப்படிக் குடிச்சுப் போட்டு வந்து இங்கன கிடக்குறீர்?” என்று தன் எண்ணத்தை அவனிடமே கேட்டாள்.

“ஹா… யாரது?” சொருகிய கண்களைச் சுருக்கிக் கொண்டு கேட்டான்.

“ம்ம், உம்ம பொஞ்சாதி…” என்று நொடித்துக் கொண்டாள்.

“ஏ பொஞ்சாதி வா… வா… இங்கன வா… எம்மைத் தூக்கு…” என்று இரு கைகளையும் அவளை நோக்கி நீட்டினான்.

“ஆமா, நீர் பச்சப்புள்ள பாரு. தூக்கி ஏ இடுப்புல வச்சுக்கிறேன்…” என்றாள் கடுப்பாக.

“ஏன் இடுப்புல வச்சுக்கிட்டா என்ன? எம் பொஞ்சாதி தானே நீ? இடுப்புல வச்சுக்கலாம், தப்பில்ல…” என்றான்.

“ஏன்யா இப்படிக் குடிச்சு போட்டு வந்து அலும்பல் பண்ணிட்டு இருக்கீர்? எழுந்து வாரும். வூட்டுக்குப் போவோம்…” என்று அவனின் கையைப் பிடித்தாள்.

அவளின் கையைப் பிடித்துக் கொண்டவன், எழுவதற்கு முயற்சி செய்யாமல் அவளைத் தன்னை நோக்கி இழுத்தான்.

அவன் இழுத்த வேகத்தில் அவனின் மார்பின் மீது அப்படியே விழுந்தாள் தேன்மலர்.

“ஆ… யோவ், என்னய்யா பண்றீர்?” என்று பதறி எழுந்து கொள்ள முயற்சி செய்ய, அவனோ அவளின் முதுகை சுற்றிக் கையைப் போட்டு இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

“மலரு புள்ள…” என்று முனங்கியவன், அவளின் கழுத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.

விதிர்த்துப் போனாள் தேன்மலர்.

அவனின் அணைப்பும், அழைப்பும் அவளைத் திக்குமுக்காட வைத்தது.

“இது என்ன புதுசா மலருன்னு கூப்பிடுறீர். நா உமக்கு வெறும் புள்ள தானே?” மனத்தாங்கலுடன் கேட்டாள்.

“ம்கூம்… நீ மலரு தேன். நம்ம தோட்டத்துல உள்ள பூவ போல மென்மையான மலரு. நீ எம் மலரு புள்ள…” என்று ஆசையுடன் முனங்கினான்.

அவளுக்குக் கேட்க ஆசையாகத்தான் இருந்தது.

ஆனால் அவனின் நிலையும், தாங்கள் இருந்த சூழ்நிலையும் புரிய, அவனின் கையைத் தன்னை விட்டு விலக்க முயன்றாள்.

ஆனால் சிறிது கூட அவனின் கையை அசைக்க முடியாமல் இறுக அணைத்திருந்தான்.

“ம்கூம்… உம்மை விட மாட்டேன். உமக்குத் தெரியுமா மலரு புள்ள? உம்மை எமக்கு ரொம்பப் பிடிக்கும். ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ஆனா என்னால அதை உங்கிட்ட சொல்ல முடியலை…” என்றான் சோகமாக.

அவன் தன்னைப் பிடிக்கும் என்றதும் தேன்மலருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அதோடு அவனுக்குள் ஏதோ கலக்கம் உண்டு என்று அறிந்திருந்தாள் என்பதால் அவனைப் பேச வைக்க முடிவு செய்தாள்.

“ஏன்யா?” என்று கேட்டு ஊக்கினாள்.

“ஏன்னா நா எம் மொத பொஞ்சாதியை இழந்தவன். அவ செத்ததும் நா அவள மட்டும் தேன் நினைச்சு நினைச்சு உருகி உருகி வாழணும்னு நினைச்சேன். அவ நினைப்புல மட்டுந்தேன் இனி நா உயிர் வாழணும்னு நினைச்சுருக்கேன்.

இப்போ கூட அவளை மறந்து போட்டேனான்னு கேட்டா இல்ல தேன். எம் பொஞ்சாதியா எம்மோட வாழ்ந்தவளை மறந்துட்டேன்னு நா சொன்னா அது எம்மை மட்டுமில்ல உம்மையும் ஏமாத்துறது போலத்தேன்…” என்று அவன் நிறுத்த, அவனைப் பற்றிப் புரிந்த பாவனையில் அமைதியாக இருந்தாள்.

“எம்மேல கோபமா புள்ள?” அவள் முகத்தைத் தன் மார்பிலிருந்து தூக்கிக் கேட்டான்.

“உம்ம நிலைம புரியுதுயா. மேல சொல்லும்…” அவனிடமிருந்து அனைத்தையும் தெரிந்து கொள்ள நினைத்து அவனுக்கு ஆறுதலாகப் பேசினாள்.

“நீ புரிஞ்சுக்குவன்னு எமக்குத் தெரியும் மலரு புள்ள. உங் கழுத்துல தாலி கட்டினதுக்கு மொதல வருத்தந்தேன் பட்டேன் புள்ள. அதுவும் எம் மொத பொஞ்சாதி செத்து போயி கொஞ்ச நாளுதேன் ஆவுது. அப்படி இருக்கும் போது இப்படிப் பண்ணிப் போட்டேன்னு வருத்தமா இருந்தது புள்ள. ஆனா, போகப் போக உம்மை எமக்குப் பிடிச்சு போச்சு புள்ள…”

“ஒ, எப்ப இருந்து?” என்று மன நெகிழ்வுடன் கேட்டாள்.

“அதெல்லாம் எப்ப, எப்படின்னு எமக்குத் தெரியாது. ஆனா பிடிக்கும். நீ எம் மனசுக்குள்ளார எப்பவோ வந்துட்ட. ஆனா ஒருத்தி போன உடனே இன்னொருத்தியையும் உடனே இப்படி ஏத்துக்கிறயேனு எம் மனசே எம்மைக் கேள்வி கேட்டது புள்ள. அந்தக் கேள்விக்கு எம்மால பதிலு சொல்ல முடியலை.

ஆனா அந்தக் கேள்விய எல்லாம் உம் அன்பு மாத்துச்சுப் புள்ள. அதுவும் நா உம்மை விட்டு விலகி இருக்கும் போதும், ஏ வயித்தை பத்தி நீ கவலை பட்டதும், நா சாப்புடாம நீ சாப்புடாம இருப்பதும், எமக்காக ஒருத்தி இருக்கா. எம் மேல பாசம் வைக்க ஒருத்தி இருக்கா. எமக்கு ஒன்னுனா துடிக்க ஒருத்தி இருக்கான்னு எமக்கு எப்படி இருக்கும் தெரியுமா?” என்று கேட்டான்.

“ஓ, இவ்வளவு நினைச்சவரு அப்புறம் ஏன் விலகி போனீர்?”

“குற்றவுணர்ச்சி!” என்றான் ஒரே வார்த்தையாக.

“அது எதுக்கு?”

“எம் மொத பொஞ்சாதி செத்து அந்த இடத்துல புல்லு கூட முளைச்சுருக்காது ஆனா நா அதுக்குள்ள வேற கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்போ ஏ மாமனாரு சொன்ன போலப் பொம்பள சுகத்துக்கு அலையறவனான்னு எமக்கு நினைப்பு.

அந்த நினைப்பு எம்மை நிம்மதியா இருக்க விடலை. என்னையவே நம்பி வந்த உம்மையும் ஏத்துக்க முடியாம, ஒ வாழ்க்கையையும் சூனியமாக்கி வச்சுப்போட்டேன்னு குற்றவுணர்ச்சி. அது என்னைய கொன்னு தின்னுருச்சு. அதை எல்லாம் கொஞ்ச கொஞ்சமா மாத்தியது உம் அன்பு மட்டும் தான் புள்ள…” என்றான்.

“அந்தக் குற்றவுணர்ச்சி தேவையே இல்லைய்யா. அப்படி ஒன்னும் நீர் பொம்பள சுகத்துக்கு அலையறவன் இல்ல. அவனவன் பொஞ்சாதி உசுரோட கூட இருக்கும் போதே அடுத்த வீட்டு பொம்பள மேல எப்ப பாயலாம்னு சில பயலுக காத்துக்கிடக்கானுங்க.

அப்படி இருக்கும் போது உமக்கு உரிமையான பொஞ்சாதியா நா இருக்கும் போதும், நீர் எம் மேல பாய நினைக்கலை. ஏ வாழ்க்கை என்னாகுமோனு எமக்காகவும் கவலைப்பட்ட. இதை விட ஒ நல்ல மனசுக்கு என்னய்யா வேணும்?” என்றாள் தேன்மலர்.

“ஆனா எமக்கும் ஆம்பள புத்தி இருக்குமே மலரு புள்ள. அந்த ஆம்பள புத்தி இந்தக் கொஞ்ச நாளா அலைபாயுது புள்ள…” என்றவன் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்து அவள் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்து அங்கே அழுத்தமாக ஒரு முத்தமும் வைத்தான்.

தேன்மலரின் உடல் கூசி சிலிர்த்தது.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க, அதுவரை அவர்களை நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராசு ‘சரிதான், இனி அவர் இப்போதைக்கு எழுந்து கொள்ள மாட்டார்கள்’ என்ற முடிவுக்கு வந்து அதுவும் ஒரு ஓரமாகப் படுத்துக் கொண்டது.

“உம்மை இப்படிக் கட்டிக்கணும், ஒட்டிக்கணும், இன்னும் என்ன எல்லாமோ செய்ய ஆசை வருது புள்ள. ஆனா பயமா இருக்கு…” என்று அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தபடியே முனங்கினான்.

“பயமா… ஏன்?”

“தெரியலை. ஆனா என்னென்னமோ ஆசையெல்லாம் உம் மேல இருக்கு. ஆனா அதை என்னால காட்ட முடியாம தவிப்பா இருக்கு. ஏ தவிப்பை என்னால அடக்க முடியலை. உங்கிட்ட காட்டவும் முடியலை. அது எனக்குள்ள பெரிய போராட்டமா இருக்கு. அதுதேன் அந்தப் போராட்டத்தைத் தாங்க முடியாம இன்னைக்குக் குடிச்சுப் போட்டேன். நா குடிச்சதுல எம்மேல உமக்குக் கோபமா புள்ள?” என்று கேட்டான்.

தேன்மலருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

அவன் குடித்துவிட்டு வந்ததில் வருத்தம் உண்டு. ஆனால் குடித்ததால் தான் தன் மனதை விட்டு அவன் பேசியிருக்கிறான் என்றும் புரிந்தது. அதனால் அவன் மேல் கோபம் கொள்ள முடியவில்லை.

அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அவளின் முகத்தை நிமிர்த்தி அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டான்.

“எம் மேல கோவிச்சுக்காத மலரு புள்ள. நீ கோவிச்சுக்கிட்டா நா தாங்க மாட்டேன்…” என்று புலம்பியவன் மீண்டும் முத்தமிட்டான்.

முதல் முதலாகக் கணவன் தன் இதழ்களைத் தீண்டியதை தேன்மலருக்கு ரசிக்க ஆசை தான். ஆனால் சாராய வாசனையில் முத்தத்தை எங்கிருந்து ரசிக்க?

தன் உதடுகளை விலக்கி கொண்டவள், “நாறுதுயா…” என்றாள் முகத்தைச் சுளித்து.

“மன்னிச்சுடு மலரு புள்ள…” என்றவன் இப்போது கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.

“போதும்யா, எழும். உமக்கு என்ன பஞ்சு மெத்தைல படுத்திருக்குற நினைப்பா?” என்றவள் அவனை விட்டு எழ முயற்சி செய்தாள்.

“பஞ்சு மெத்தைல படுத்தது போலத்தேன் இருக்கு புள்ள. ஆனா பஞ்சு மெத்தை எம்மேல படுத்துருக்கு…” என்று அவளை அணைத்த படி சொன்னான்.

அவளுக்கு வெட்கம் வந்தது.

“சரிதேன். நீர் ஒரு மார்க்கமாத்தேன் இருக்கீரு. என்னைய விடும். வூட்டுப் போய்ச் சேருவோம். பாம்பு வந்தா நாம ரெண்டு பேரும் பரலோகம் போயி சேர வேண்டியது தேன்…” என்றாள்.

“பாம்பா… ம்கூம்… உங்கூட நா வாழணும். ரொம்ப வருசம் வாழ வேணும். நாம சாவக் கூடாது. எழுந்துகோ…” என்று அவளை விட்டான்.

அவன் பேச்சில் தேன்மலருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

தன்னைத் திரும்பி கூடப் பார்க்காமல் இருந்தவன் மனதிற்குள் தான் சிம்மாசனமிட்டுருக்கிறோம் என்பதில் அவளுக்கு ஏக மகிழ்ச்சி.

அந்த மகிழ்ச்சியுடன் அவன் எழுந்து கொள்ளக் கையை நீட்டினாள்.

அவனும் இந்த முறை அமைதியாக எழுந்து நின்றான்.

எழுந்து நின்றவன் நிற்க முடியாமல் தடுமாற, அவனின் கையை எடுத்து தன் தோள் மேல் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

ராசுவும் எழுந்து அவர்களுடன் சென்றது.

“என்ன தாயி, குடிச்சுப் போட்டு கிடந்தானா?” திண்ணையில் அமர்ந்து காத்திருந்த அப்பத்தா பதறி போய்க் கேட்டார்.

“ஆமா ஆத்தா…”

“என்ன ராசா இது? நீரு அந்தக் கருமத்தை விட்டுப் போட்டன்னு நினைச்சேனே?”

“ஹா… அது… எம் பொஞ்சாதி…” என்று அவன் ஏதோ சொல்ல வர,

“குடிக்கிறதுக்கு ஏதாவது காரணத்த தேடிட்டு இருந்திருப்பாரு. வேற என்ன? விடுங்க ஆத்தா…” என்று வேகமாகச் சொல்லி கணவனைப் பேச விடாமல் செய்தாள்.

பேரன் பொஞ்சாதி என்றதில் குமுதாவின் ஞாபகம் வந்து விட்டது போல என்று நினைத்துக் கொண்டார்.

ஆனால் அவளுக்குத்தானே தெரியும் அவன் புலம்பிய புலம்பல்கள் எல்லாம். அவரின் முன்பும் அவன் உளறி வைத்து விடுவானோ என்று நினைத்து தான் தடுத்துவிட்டிருந்தாள் தேன்மலர்.

“இப்படிப் படும்யா…” என்று வாசலில் இருந்த கட்டிலில் படுக்க வைத்தாள்.

அவன் படுக்கும் போது அவளையும் சேர்த்து இழுக்க, அவன் மேல் விழுந்து விடாமல் சமாளித்துக் குனிந்து நின்றாள்.

“விடும்யா…” என்றவளின் கையை விடாமல் பிடித்து, “எமக்கு உங்கூட வந்து படுக்கணும் மலரு புள்ள…” என்றான்.

“என்னது?” என்றவளுக்கு முதலில் வந்தது அதிர்ச்சி மட்டும் தான்.

கூடவே சங்கடமும் வந்தது. அப்பத்தா கேட்டு விட்டாரோ என்று வேகமாகத் திரும்பி பார்க்க, அவர் கேட்டு விட்டார் என்பதற்கு அடையாளமாக அவரின் உதட்டில் நமட்டுச் சிரிப்புத் தவழ்ந்தது.

“அவன் கேட்குறதும் சரிதேன் தாயி. உள்ளார கூட்டிட்டு போ. இன்னும் எம்புட்டு நாளு தேன் வெளியே கிடப்பான். நானும் கொள்ளு பேரன், பேத்தியை கண்ணார பாத்துக்கிறேன்…” என்றார்.

“ஆஹ்… சும்மா இருங்க ஆத்தா…” என்று சிணுங்கினாள்.

“அதுதேன் அப்பத்தா கொள்ளு பேரன் கேட்குதுல? வா உள்ளார போவோம்…” என்று கட்டிலிலிருந்து எழுந்து கொண்டான்.

“அய்யோ! இந்த ஆளு அலும்பல் தாங்க முடியலையே…” என்று புலம்பிக் கொண்டவள், “பேசாம இரும்யா. நீர் இங்கனயே படும்…” என்றவள், வெட்கத்துடன் வேகமாக உள்ளே சென்றாள்.

அவனும் விடாமல் பின்னால் செல்ல, ‘சரிதேன் நீங்களா ஒரு முடிவுக்கு வாங்க…’ என்று சிரிப்புடன் நினைத்துக் கொண்டு அவர்களைக் கண்டு கொள்ளாமல் திண்ணையில் சாய்ந்தார் அப்பத்தா.

உள்ளே சென்ற வைரவேல் கையோடு கதவையும் மூடி விட்டு மனைவியைத் தேட, அவள் தன் அறைக்குள் சென்றிருந்தாள்.

அவனும் தடுமாறிக் கொண்டே அறைக்குள் சென்று கதவை தாழ் போட்டான்.

அவன் இப்படி வருவான் என்று எதிர்பாராத தேன்மலருக்கு மேனி நடுங்கியது.

அறையில் நின்று கொண்டிருந்தவள் அருகில் சென்று பின்னாலிருந்து சுற்றி வளைத்து அணைத்தான் வைரவேல்.

அவளின் உடலே சிலிர்த்து ஜில்லிட்டுப் போனது போல் ஆனது.

“ம்ம்… விடும்யா…” என்று சிணுங்கினாள்.

“ம்கூம்…” விடமாட்டேன் என்று மறுப்பாகத் தலையை அசைத்தவன், பின்னாலிருந்து அவளின் கழுத்தில் முகத்தைப் புதைத்து அழுத்தமாக ஒரு முத்தத்தை வைத்தான்.

அதைத் தொடர்ந்து அவளின் காதில் மென் முத்தம் ஒன்றை வைத்தான். அடுத்து அவனின் உதடுகள் அவளின் கன்னத்திற்கு நகர்ந்தது.

லேசாக நடுங்கிய படி அவனின் ஸ்பரிசத்தை ஏற்றுக் கொண்டிருந்தாள் தேன்மலர்.

அவளை அப்படியே முன்னால் திருப்பி இறுக்கமாக அணைத்துக் கொண்டவன், “நாம வாழுவோமா புள்ள?” என்று கிசுகிசுப்பாக அவளின் காதில் கேட்டான்.

தேன்மலருக்குச் சம்மதம் சொல்ல ஆசை தான். ஆனால் அவன் இப்போது குடித்திருப்பதால் நிதானம் இல்லாமல் தன்னை நாடுகிறான்.

பின் காலையில் அவனே கூட வருந்த வாய்ப்பு உள்ளது என்று தோன்றியது. அதோடு அவன் இந்த நிலையில் இருக்கும் போது தங்கள் வாழ்க்கையைத் துவங்க அவளுக்குமே ஒரு மாதிரியாக இருக்க, அவனுக்கு மறுப்பாகத் தலையை அசைத்தாள்.

“ஏன் புள்ள?” ஏக்கமாகக் கேட்டான்.

“நீரு இப்ப நிதானத்துல இல்லயா. இந்த நேரத்துல வேணாம். நம்ம வாழ்க்கை நீரும், நானும் மனப்பூர்வமா தொடங்கியதா இருக்கணும். அதுதேன் எமக்கு விருப்பம்…” என்றாள்.

“சரிதேன்…” என்று சோகமாகச் சொன்னாலும், அவன் அவளைக் கட்டாயப்படுத்தவில்லை.

குடி போதையில் கூடத் தன் விருப்பத்தை மதிக்கிறான் என்று அவளுக்குப் பெருமையாக இருந்தது.

“நீர் போய் வெளிய படும்…” என்று அவனின் அணைப்பை விட்டு விலகினாள்.

“ம்கூம்… நீ இப்போ குடும்பம் நடத்த வேணாம்னு சொன்னதைக் கேட்டுக்கிட்டேன்ல. அது போல நீயும் நா சொல்றதை கேட்கணும்…” என்றான்.

“என்னய்யா?”

“நா வெளிய போவ மாட்டேன். எமக்கு உன்னைய கட்டிக்கிட்டே தூங்கணும்…” என்றான்.

“இது என்னய்யா பிடிவாதம்?” என்று அதிர்ந்து கேட்டாள்.

“அது அப்படித்தேன்…” என்றவன் அவளின் ஒற்றைக் கட்டிலில் போய்ப் படுத்து அவளைச் சுண்டி தன்னிடம் இழுக்க, அவன் மேல் சென்று விழுந்தாள்.

“இந்தக் கட்டிலுல ரெண்டு பேரு படுக்க முடியாதுயா…” என்று சிணுங்கினாள்.

“அப்ப நீ எம்மேல படுத்துக்கோ…” என்றவன், அவளைச் சுற்றி வளைத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

அவனின் பிடிவாதத்திற்கு அவள் தான் வளைந்து கொடுக்க வேண்டியதாக இருந்தது.

ஆனாலும் அவனின் அணைப்பில் அப்படிப் படுத்திருப்பதும் சுகமாக இருக்க, சந்தோஷத்துடன் கணவனின் அணைப்பில் அடங்கிப் போனாள் தேன்மலர்.