23 – இதயத்திரை விலகிடாதோ?

அத்தியாயம் – 23

மனதின் அழுத்தத்தைக் குறைக்கக் குடியை நாடிய சூர்யா, அலமாரியிலிருந்த மதுவை எடுத்து வந்து கட்டிலில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தான்.

அப்போது அறைக்கு வெளியே நிழலாடுவது போல் இருக்க, நிமிர்ந்து பார்த்தான்.

யுவஸ்ரீ தான் அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

அறையைக் கடக்கும் போது தற்செயலாக அறைக்குள் பார்த்தவள், கணவன் குடிப்பதை பார்த்து திகைத்து நின்று விட்டிருந்தாள்.

‘வாங்கி வைத்து வீட்டில் குடிக்கும் அளவிற்கு வந்து விட்டானா?’ என்று நினைத்தவளுக்குப் பாரம் நெஞ்சை அழுத்தியது.

வெறித்த பார்வையில் வலியும் விரைந்தோட ஆரம்பித்த மனைவியின் கண்களைக் கண்டவனுக்கு அடுத்த மிடறு அருந்த முடியவில்லை.

அவளுக்குத் தான் குடித்தாலும் பிடிக்காது அல்லவா? என்ற ஞாபகமும் வர, சட்டென்று குடிப்பதை நிறுத்தி விட்டு, பாட்டிலை மூடி டம்ளரை ஓரமாக வைத்தான்.

அதற்குள் அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தாள் யுவஸ்ரீ.

பட்டென்று எழுந்து மது பாட்டிலை அலமாரியில் வைத்து மூடியவன், குளியலறைக்குள் புகுந்தான்.

பற்களைத் தேய்த்து விட்டு குளித்து வேறு உடைக்கு மாறி வந்து மனைவியைத் தேடிய போது, மீண்டும் அவள் ஊஞ்சலில் அமர்ந்திருப்பதைக் கண்டு அங்கே சென்றான்.

அவன் முகத்தைப் பார்க்க பிடிக்காமல் திருப்பிக் கொண்டாள்.

மிகுந்த கோபத்தில் இருக்கிறாள் என்று புரிந்தது.

தப்பை சரி செய்வதாக நினைத்து மீண்டும் தப்புச் செய்து விட்டோமோ என்று தவிப்பாக இருந்தது.

இன்னும் எத்தனை நாளைக்கு இந்தத் தவிப்பு? மீண்டும் மீண்டும் அவளை வருந்த வைத்துக் கொண்டிருந்தால் எங்கிருந்து இந்தத் தவிப்பு அடங்கும்? என்ற எண்ணம் தோன்றியது.

மனைவி கோபமாக இருக்கிறாள் என்று இன்னும் எத்தனை நாட்கள் தான் கையைக் கட்டி வேடிக்கையும் பார்த்துக் கொண்டிருப்பது?

தான் தான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவன் போல், ஊஞ்சலில் அமர்ந்திருந்த மனைவியின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தான் சூர்யா.

அவன் அப்படி அமர்வான் என்று எதிர்பாராத யுவஸ்ரீ திகைத்து விழித்தாள்.

அவள் மடியில் கையை வைத்தவன், அவளின் முகத்தை அண்ணாந்து பார்த்து, “ஸாரி யுவா, நீ அப்படிப் பேசும் நிலைக்கு உன்னைத் தள்ளிட்டேனோனு ஒரு மாதிரி மனதை அழுத்திவிட்டது. அதான் ட்ரிங்க் பண்ணிட்டேன்…” என்றான்.

“இதை எதுக்கு என்கிட்ட வந்து சொல்றீங்க?” அவன் முகம் பார்க்காமல் கேட்டாள்.

“நீ கோபமா இருக்கியே…” என்றான்.

“ஓ! என்னோட கோபத்துக்கு எல்லாம் மதிப்பு கொடுப்பீங்களா?” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்டாள்.

“மதிப்பு கொடுத்ததால் தான் நீ கோபமா இருக்கன்னு இத்தனை நாளும், விலகி இருந்தேன்…” என்றான்.

எந்த எதிர்வினையும் காட்டாமல் அமைதியாக இருந்தாள்.

“உன்னை நிறையக் கஷ்டப்படுத்திட்டேனா யுவா?” என்று கேட்டு மனைவியின் அமைதியைத் தானே கலைக்க முயன்றான் சூர்யா.

கணவனின் இந்தக் கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை.

“என்ன திடீர்ன்னு இந்தக் கேள்வி?” என்றவளின் கேள்வி திணறலுடன் வந்தது.

இன்னும் அவன் தன் முன் மண்டியிட்டு அமர்ந்திருக்கும் நிலையும் அவளைக் கேட்க வைத்தது.

“திடீர்ன்னு இல்லை. கொஞ்ச நாளாவே நான் ஏதோ தப்பு பண்றேன்னு உன் பார்வையும், உன் பேச்சும் சொல்லுச்சு. நான் என்ன தப்பு செய்துட்டு இருக்கேன்னு இந்தக் கொஞ்ச நாளா தான் புரிய ஆரம்பிச்சுருக்கு. அதுவும் இன்னைக்கு நீ சொன்ன வார்த்தை?” என்றவனிடம் ஏதோ தடுமாற்றம்.

மெல்ல தொண்டையைச் செருமிக் கொண்டவன், “அந்த வார்த்தையைச் சொல்ற அளவுக்குத்தான் நான் உங்கிட்ட நடந்திருக்கேனா? என்ற கேள்வி என் தொண்டைக்குள் மாட்டிய கொக்கியா எனக்கு வலியைக் கொடுக்குது…” என்றான்.

‘அந்த வலியை வர வைத்துக் கொண்டவனே நீ தானே?’ என்பது போல் பார்த்தவள், கசந்த புன்னகை சிந்தினாள்.

அந்தக் கசப்பு அவனின் மனதை அறுத்தது.

“இன்னைக்கு நாம கொஞ்சம் மனசு விட்டு பேசலாமா யுவா?” என்று கேட்டான்.

‘என்ன பேசணும்?’ யோசனையுடன் பார்த்தாள்.

“உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதுன்னு சொன்ன. உன்னைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுறேன். நீயா சொல்ல வேண்டாம். நானே தெரிஞ்சிக்கிறேன். ஆனா அதுக்கு முன்னாடி உன்கிட்ட சில விஷயங்கள் பேசணும்…” என்றான்.

‘என்ன பேச போறீங்க?’ என்பது போல் அவள் பார்க்க, அவனோ அவளின் கண்களில் இருந்த கேள்வியைப் படித்தான்.

“நான் ஒரு கேள்வி கேட்கணும் யுவா, உன் கோபத்தை எல்லாம் தள்ளி வச்சுட்டு அதுக்குப் பதில் சொல்லுவியா?” என்று கேட்டான்.

“கேளுங்க…” என்றாள்.

“ஏன் உனக்குக் கோபம் வந்த போதெல்லம் இதுக்கு மட்டும் தான் நான் வேணுமான்னு கேட்ட? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அந்த வார்த்தை சொன்ன?” என்று கேட்டான்.

அவன் முகத்தைப் பார்த்த வண்ணம் அவள் அமைதியாக இருந்தாள்.

“பதில் சொல்லு யுவா… ப்ளீஸ்!” என்றான்.

பெருமூச்சை இழுத்து விட்டவள், “நான் கேட்பதற்குப் பதில் சொல்லுங்க. அதிலேயே உங்களுக்கான பதில் கிடைக்கும்…” என்றாள்.

“என்ன? கேளு, சொல்றேன்…” என்றான்.

“உங்களுக்கு என்னைப் பிடிக்குமா, பிடிக்காதா?” என்று கேட்டாள்.

“இந்தக் கேள்வி நீ ஏற்கெனவே என்னைக் கேட்டுருக்க. நானும் பதில் சொல்லியிருக்கேன். திரும்பவும் சொல்றேன். எனக்குக் கல்யாணத்தில் முதலில் விருப்பம் இல்லை தான்.

ஆனால் அப்பா, அம்மா என்னை அப்படியே விட்டுவிடத் தயாராயில்லை. அதனால் தான் கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னேன். உன்னை நேரில் பார்த்த பிறகு பிடிச்சிருந்தது. பிடிச்சுத்தான் கல்யாணம் செய்தேன்.

பிடிக்காமல் இருந்திருந்தால் உன்னை மட்டுமில்லை, எவ்வளவு பெரிய அழகியா இருந்தாலும் கல்யாணம் பண்ணிருக்க மாட்டேன். அம்மா, அப்பாவை சமாளிச்சி இருந்திருப்பேன்…” என்றான்.

“பிடிச்சுக் கல்யாணம் முடிச்சவர் ஏன் என்னைத் தனிமையில் விட்டீங்க?”

“தனிமையில் விடணும்னு விடவில்லை யுவா. என் குணம் அது! என்னால் ஒரு கட்டுக்குள் இருக்க முடியாது. நான் நானா இருக்கணும்னு ரொம்ப எதிர்பார்ப்பேன். நம்ம வாழ்க்கையில் ஒரு பொண்ணு வந்த பிறகு தான், தனதுன்னு சுயநலமா மட்டும் இருக்க முடியாதுன்னு எனக்குப் புரியலை…” என்றான்.

“இப்ப மட்டும் புரிந்து விட்டதா?”

“கொஞ்சம் புரிந்து விட்டதுன்னு நினைக்கிறேன். அன்னைக்குக் கோபத்தில் என் உடல் நிலையைப் பற்றிக் கூட உங்களுக்குத் தெரியலைன்னு சொன்ன பார். அப்பவே என் மனசு குறுகுறுத்துப் போயிருச்சு. அப்ப இருந்தே ஒருவித உறுத்தல்.

நான் எங்கோ தவறு செய்கிறேன்னு புரிந்தது. அப்பத்தான் ஒரு நார்மலான கணவனா நான் நடந்துக்கலைன்னு புரிந்தது. நீ சொன்ன மாதிரி ராத்திரி தான் உன்னை ரொம்ப நான் நாடியிருக்கேன்.

பகலில் எனக்கான உலகத்தில் நான் வாழ்ந்திருக்கேன். ஆனால் அதுக்காக உன் மேல அன்பு இல்லாமல் இல்லை. என் அன்பை எனக்கு எப்படிக் காட்ட தெரிந்ததோ… அப்படிக் காட்டினேன். ஆனா அதுக்கு வேற அர்த்தம் கற்பிச்சுக்குவன்னு நான் எதிர்பார்க்கலை…” என்றான்.

“நீங்க முதலில் என்கிட்ட கேட்ட கேள்விக்கு இதோ நீங்களே பதில் சொல்லிட்டீங்க. அப்புறம் எப்படி என்னால் வேற அர்த்தம் கற்பிக்காமல் இருக்க முடியும்? நான் எதிர்பார்த்தது ராத்திரி தன் தேவைக்கு மட்டும் என் பக்கத்தில் வரும் கணவனை இல்லை. அதுக்காகப் பகலிலும் என்னைப் பற்றி மட்டுமே நினைக்கணும் என்ற சுயநலமான எண்ணமும் எனக்கு இல்லை.

எனக்காக ஐந்து நிமிஷம் ஒதுக்கினாலும் தன் அன்பை வெளிக்காட்டணும்னு நினைச்சேன். அப்படி உங்க அன்பை நீங்க என்கிட்ட வெளியே காட்டிய தருணங்கள் ரொம்ப ரொம்பக் குறைவு. நானும் சாதாரண மனுஷி தானே? எனக்கும் ஆசாபாசங்கள் இருக்காதா?

எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும் சூர்யா. ஆனால் நீங்க என்கிட்ட நடந்து கொண்ட முறை, என்ன வாழ்க்கை இதுன்னு பல முறை என்னைக் கண்ணீர் சிந்த வச்சுருக்கு…” என்றவள் கண்கள் கலங்கியிருந்தது.

மனதில் இருப்பதைச் சொல்ல மாட்டேன் என்று கோபமாகப் பிடிவாதம் பிடித்தவள், இப்போது சூர்யா தன்மையாகப் பேசவும், அவள் அறியாமல் தன் மன ஆதங்கத்தைக் கொட்டி விட்டாள்.

கையை நீட்டி அவள் கண்ணீரை துடைத்தான்.

எதுவாக இருந்தாலும் பட்பட்டென்று பேசி விடுவாள். கண்ணீர் சிந்துவது அவளின் வழமை அல்ல. அதுவும் அவனின் முன் சுத்தம்!

ஆனால் இன்று தன் கண்ணீரை அவள் கட்டுப்படுத்த முனையவில்லை.

தன் மனபாரத்தை ஒரு கட்டத்தில் யாரிடமாவது, எதனிடமாவது இறக்கி வைத்து தான் ஆகவேண்டும்.

ஆனால் யுவஸ்ரீ யாரிடமும் இதுவரை அவள் தன் மனபாரத்தை இறக்கி வைத்ததே இல்லை.

அனைத்தையும் தன் மனதிற்குள் போட்டே அடைகாத்து வைத்துக் கொண்டாள்.

அடக்கி வைக்க வைக்க ஒரு நாள் அடங்காமல் சீறி எழுந்து வரவே செய்யும்.

இன்று அது நிகழ்ந்து விட்டிருந்தது.

“அழாதேடி பொண்டாட்டி! மனசை போட்டு என்னவோ பண்ணுது…” என்றான் சூர்யா.

ஆனால் அவள் கண்ணீர் என்ன தண்ணீர் பைப்பா? மூடியதும் நிறுத்திக் கொள்ள?

அது நிற்காமல் அவள் கட்டுப்பாட்டையும் மீறி வழிந்தது.

அவளின் இரண்டு கண்களையும் அழுத்தமாகத் துடைத்து விட்டான்.

“இப்படி நீ கண்ணீர் விட்டு கதறும் அளவுக்கு உன் புருஷன் ஒன்னும் அவ்வளவு கொடுமைக்காரன் இல்லை…” என்றான் சமாதானமாக.

“கொடுமைபடுத்த கட்டி வைத்து அடிக்கணும்னு இல்லை…” என்றாள் வெடுக்கென்று.

“ஹப்பா! பளிச் பளிச் பொண்டாட்டி வந்துட்டா… அது சரி, நான் எவ்வளவு நேரமா மண்டி போட்டு உட்கார்ந்திருக்கேன். பாவமே, புருஷனுக்கு வலிக்குமேன்னு எழ சொன்னியா?” என்று கேட்டான்.

‘என்ன பேசிக் கொண்டு இருந்துவிட்டு இப்போது என்ன பேசுகிறான் இவன்?’ என்பது போல் அவனைப் பார்த்தாள்.

“எழ சொல்ல மாட்டியா பொண்டாட்டி?” அதிலேயே நின்றான் அவன்.

“நானா உங்களை மண்டி போட சொன்னேன்? உங்க காலு… நீங்க போட்டீங்க. உங்களுக்கு வேணும்னா நீங்களே எழுந்திருங்க…” என்றாள் எரிச்சலாக.

“ஓஹோ! பொண்டாட்டி மேடம் அப்படி வர்றீங்க? சரிதான், என் பொண்டாட்டியை என்னை மாதிரியே மாத்தி வச்சுருக்கேன் போல…” என்றான்.

‘உனக்குத் தேவையானதை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்ற அவனின் பேச்சை அவள் நடைமுறை படுத்துகிறாளாம்.

அதைப் புரிந்து கொண்டவனுக்கு உதடுகளில் புன்சிரிப்புத் தவழ்ந்தது.

‘எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருந்தோம். இப்ப எதுக்கு இப்படிப் பேச ஆரம்பிச்சுட்டான்? இதில் சிரிப்பு வேற’ என்பது போல் கணவனைப் பார்த்தாள்.

சூர்யா தனக்குள் ஒரு முடிவிற்கு வந்து விட்டது அவளுக்குத் தெரியவில்லை.

ஆம்! சூர்யா ஒரு முடிவிற்கு வந்திருந்தான்.

தன் செயலால் தான் அவள் காயப்பட்டுப் போனாள். தன் செயலாலே அவள் காயத்திற்கு மருந்திட வேண்டும் என்ற முடிவிற்கு வந்திருந்தான்.

அதை வாயால் சொல்வதை விட, அவளையே உணர்ந்து அனுபவிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

எழுந்து நின்றான்.

“நைட் ஒன்பதுக்கு மேல ஆச்சு. சோறு போடுவியா, மாட்டியா?” என்று கேட்டான்.

“போய் உங்க சாராயத்தைக் குடிங்க. பசி போயிடும்…” என்றாள் கடுப்பாக.

“என்ன பொண்டாட்டி இது? என்னைப் பற்றி நல்லா புரிந்து இருந்தும் இப்படிச் சொல்ற? உன் புருஷனுக்குச் சாப்பிட்ட பிறகு தானே ரொம்பப் பசிக்கும். அது தெரிந்தும் நீ இப்படிப் பேசுவது சரியா? நியாயமா?” என்று கேலியுடன் கேட்டவனைச் சுட்டெரிப்பது போல் பார்த்தாள்.

“என்ன பேசிட்டு இருந்தோம்… நீங்க இப்ப என்ன பேசுறீங்க?” மனதில் நினைத்ததைக் கேட்டே விட்டாள்.

“பேசின வரைக்கும் போதும் பொண்டாட்டி. உன் புருஷனுக்குப் பக்கம் பக்கமா பேச எல்லாம் தெரியாது. எல்லாமே செயல் தான். இன்னைக்கு என்னவோ ஏற்கெனவே ரொம்பப் பீலிங்கா பேசிட்டேன். அதுவே என் கேரக்டருக்கு ஒட்டாது. இதுக்கு மேல பீலிங்கா பேச எனக்கு வரலைடி. என்னை விட்டுடேன்… உன் புருஷன் பாவம்!” என்றான் அப்பாவி போல.

‘உன்னை எல்லாம் என்ன செய்தால் தகும்?’ என்பது போல் பார்த்து வைத்தவளுக்கு அதே அப்பாவி லுக்கை பரிசாகத் தந்தான்.

“சகிக்கலை…” என்றாள் பட்டென்று.

“பாரு, நான் எப்பவும் போல இருக்குற மாதிரி இருந்து இப்ப இப்படி மாறியது உனக்கே சகிக்கலை தானே? என் மேக் அப்படிடி. நான் என்ன செய்வேன்? எனக்குப் பிழிய பிழிய காதல் வசனம் பேச வராது. கண்ணே… மணியேன்னு கொஞ்ச தெரியாது. ஆனா என் அன்பு நிஜம்! அதை எனக்குக் காட்ட தெரியவில்லை என்பதும் நிஜம்! ஆனா எப்பவும் அப்படி இருக்க முடியாது இல்லையா? மாறித்தான் ஆகணும்…” என்று தீவிரமாகச் சொன்னவனை விநோதமாகப் பார்த்தாள்.

“பேசி பேசி பசிக்குது. சாப்பாடு போடு…” என்றான்.

‘திங்கிறதிலேயே இருக்கான் பார்!’ என்று மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டாள் யுவஸ்ரீ.

ஊஞ்சலிருந்து இறங்கியவள், சமையலறைக்குச் சென்றாள்.

அவனும் பின்னால் சென்றான்.

தன் பின்னால் வந்தவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“இன்னைக்கு நான் இங்கே உட்கார்ந்தே சாப்பிட போறேன்…” என்றவன் சமையல் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டான்.

‘இன்னைக்கு என்ன புதுசா இருக்கு?’ என்று நினைத்தாலும் அவனிடம் ஒன்றும் கேட்காமல் தோசையை வார்க்க ஆரம்பித்தாள்.

இன்னொரு பக்கம் மதியம் வைத்த சாம்பாரை சுட வைத்தாள்.

தோசையைச் சுட்டு சாம்பாரை ஊற்றி, ஓரமாகப் பொடி வைத்து அதில் நடுவில் எண்ணெய் ஊற்றிக் கொடுத்தாள்.

கையில் வாங்கியவன், ஒரு வில்லைத் தோசையைப் பிய்த்து ஒரு ஓரத்தில் சாம்பாரையும், இன்னொரு ஓரத்தில் பொடியையும் தொட்டு தன் வாயில் வைக்காமல் அவள் பக்கமாக நீட்டினான்.

இன்னொரு தோசையை வார்த்து விட்டு நின்றிருந்தவளின் முன் நீண்ட கையைப் பார்த்து, சட்டென்று மலைத்து நின்று விட்டாள். விழிகள் விரிய கணவனைப் பார்த்தாள்.

“வாங்குடி, நீ தான் எனக்கு ஊட்டி விட மாட்ட. நான் உனக்கு ஊட்டி விடுறேன்…” என்றான்.

அவள் அப்போதும் வாயைத் திறக்காமல் இருக்க, “வாங்கு பொண்டாட்டி…” என்று அவள் உதட்டில் வைத்து அழுத்தினான்.

தன்னிச்சையாக அவளின் உதடுகள் விரிந்து வழி விட, அவனின் விரல்கள் உதடுகளைத் தாண்டி உள்ளே நுழைந்து, உணவை ஊட்டி விட்டது.

வாயை மெல்ல அசைப்போட்டவளின் கண்கள் கண்ணீரில் பளபளத்துக் கொண்டிருந்தன.

“ம்ப்ச், இது என்ன இன்னைக்கு இப்படி அழற?” என்று மென்மையாகக் கடிந்து கொண்டவன், இன்னொரு வாய் உணவை நீட்டினான்.

“எனக்குப் பொடி வேண்டாம்…” என்றாள்.

‘ஓ! பிடிக்காதோ?’ என்று மனதிற்குள் குறித்துக் கொண்டான்.

கையில் இருந்த தோசையைத் தன் வாயில் போட்டுக் கொண்டவன், அடுத்ததை எடுத்துச் சாம்பாரில் மட்டும் தோய்த்து அவளுக்கு ஊட்டினான்.

கணவனின் இந்தப் பரிமாணத்தை எதிர்பாராமல் திகைத்து அவன் ஊட்டியதை விழுங்கினாலும், உள்ளுக்குள் தித்திப்பாய் உணர்ந்தாள்.

அடுத்த வாய் ஊட்ட வரும் போது மறுப்பாய் தலையை அசைத்தவள், “நீங்க சாப்பிடுங்க…” என்றாள்.

“நான் சாப்பிடுறேன். நீயும் சாப்பிடு…” என்றவன் அவளை மறுக்க விடாமல் ஊட்டி விட்டான்.

அடுத்தடுத்த தோசையும் அதே போல் மாறி மாறி இருவரின் வாயிற்குள்ளும் போய்க் கொண்டிருந்தது.

“ஆமா, நான் ஊட்ட வரும் போது இந்த விரலை கடிச்சு எல்லாம் விளையாட மாட்டியா? அது தானே நீ கேட்ட ரொமான்ஸ்?” என்று சூர்யா கேட்டதும், அவளுக்குச் சட்டென்று சிரிப்பு வந்தது.

இதழ்களில் புன்னகையைத் தவழ விட்டவள் அமைதியாக இருக்க, “ஆமா தானே? அதானேடி ரொமான்ஸ்?” அர்த்தம் கேட்டுக் கொண்டிருந்தான் அந்த அனர்த்தமானவன்.

“எனக்குத் தெரியாது…” அலட்சியமாகத் தோளை குலுக்கி கணவனின் பழக்கத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டாள்.

“உனக்கும் தெரியாதா? அப்ப நான் எப்பத்தான்டி ரொமான்ஸ்க்கு அர்த்தம் தெரிந்து கொள்வது?” ஏமாற்றத்துடன் கேட்டான்.

“அதைத் தெரிந்து வைத்து என்ன செய்யப் போறீங்க?”

“என்ன செய்யப் போறேனா? என்ன இப்படிக் கேட்டுட்ட? என் பொண்டாட்டி ரொமான்ஸ்க்கு நான் சொன்னது அர்த்தமில்லைன்னு சொன்னாள். அப்போ அதோட அர்த்தம் என்னன்னு நான் தெரிந்து கொள்ள வேண்டாமா?” என்று கேட்டவனுக்கு அவளிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

“பதில் சொல்லுடி, என் பொண்டாட்டி!” என்றான்.

“சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை மாதிரி, சொல்லித் தெரிவதில்லை ரொமான்ஸ் என்பதையும் சேர்த்தாச்சு. அதனால் நான் சொல்லாமலே தெரிந்து கொள்ளுங்க…” என்றாள் இடக்காக.

வெளியே அப்படிச் சொன்னாலும், ‘நீங்க எனக்கு முதல் வாய் உணவை ஊட்டி விடும் போது எனக்குள் நான் உணர்ந்த தித்திப்பும் ரொமான்ஸ் தான் புருஷா…’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் யுவஸ்ரீ.

இத்தனை நாட்கள் இருந்த அழுத்தம் குறைந்து, அவளின் மனமும், முகமும் அந்த நொடி மலர்ந்திருந்தது.