22 – ஈடில்லா எனதுயிரே

அத்தியாயம் – 22

ராகவர்தினியை தன் மனைவியாக நினைக்க முடியவில்லை என்று சொல்லிக் கொண்டாலும் அவன் மனதில் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கிறாள் என்று இப்போது தான் அவனுக்கே புரிந்தது.

அவளைத் திருமணம் செய்து கொள்ள அவ்வளவு தயங்கியவன் தான். ஆனாலும் அந்த நேரத்தில் அவள் இடத்தில் வேறு ஒருத்தியை நிறுத்தி திருமணம் செய்யச் சொல்லியிருந்தால் செய்திருப்பானா என்பது கேள்விக்குறி தான்.

தன்னை நன்றாக அறிந்தவள் என்பதே அவனுக்கு அப்போது போதுமானதாக இருந்தது.

அவன் சிந்தனையில் இருக்க, ராகவர்தினியும் ஏனோ இப்போது மௌனமாக வந்தாள்.

அவள் முகத்தில் ஒரு வித அவஸ்தை வந்து போனது.

“அத்தான்…” என்று மெல்ல அழைத்தாள்.

“ம்ம்… என்ன ராகா?” தன் சிந்தனை கலைந்து கேட்டான்.

“ஒரு மெடிக்கல் ஷாப்பில் வண்டியை நிறுத்துங்க…”

“ஏன் ராகா, உடம்பு எதுவும் சரியில்லையா? மாத்திரை எதுவும் வாங்கணுமா?” அவனின் கேள்வியில் மெல்லிய பதட்டம்.

“மாத்திரை இல்ல…”

“வேற?”

“நீங்க போங்க அத்தான். அங்கே போய் நானே வாங்கிக்கிறேன்…”

“ஏன், என்னன்னு சொல்லு. என்கிட்ட என்ன தயக்கம்?”

“என்னால் தயக்கம் இல்லாமல் உங்ககிட்ட சொல்ல முடியும் அத்தான். உங்களால் தயக்கம் இல்லாமல் வாங்க முடியுமா?”

“நான் தயங்கும் அளவுக்கு அப்படி என்ன?” என்று கேட்ட படி ஒரு மெடிக்கல் ஷாப் வாசலில் வண்டியை நிறுத்தினான்.

அவள் அவன் காதோரம் குனிந்து மெல்லிய குரலில் தனக்குத் தேவையானதை சொல்ல, கேட்டவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

“இதுக்கேன் தயக்கம்?” என்றவன் தயங்காமல் மெடிக்கல் சென்று அவள் கேட்டதை வாங்கி வந்தான்.

“நீங்க தயங்குவீங்கன்னு நினைச்சேன்…” என்று அவன் கொடுத்ததை வாங்கிப் பையில் வைத்துக் கொண்டாள்.

“இயற்கையான நிகழ்வுக்குத் தயக்கம் என்ன வேண்டி இருக்கு?” என்று வண்டியை எடுத்தான்.

“கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு போங்க அத்தான். என்னால் சமாளிக்க முடியும்னு தோனலை…” என்றாள்.

“ம்ம்… இதோ போயிடலாம்…” என்றவன் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினான்.

வீடு வந்து சேர்ந்ததும் வண்டியை விட்டு இறங்கும் போதே எதுவும் ஆகிவிட்டதோ என்று தன் உடையைப் பரிசோதித்துக் கொண்டாள்.

அவளின் தவிப்பை உணர்ந்தவன், “ஒன்னும் பிரச்சனை இல்லை, போ…” என்றான் மென்மையாக.

மாமனார் கதவை திறந்து விட்டதும் விரைந்து அவர்களின் அறைக்குச் சென்றாள்.

எப்போதும் அவரிடம் இரண்டொரு வார்த்தைகள் பேசி விட்டு செல்பவள் இன்று நிற்காமல் செல்ல, மருமகளைப் புரியாமல் பார்த்தார் சுபேசன்.

தந்தையின் பார்வை உணர்ந்து, அவரிடம் பேச்சுக் கொடுத்தான் பிரபஞ்சன்.

“எனக்கு டீ குடிக்கணும் போல இருக்குப்பா. நான் போட போறேன். உங்களுக்கும் சேர்த்து போடவா?” என்று கேட்டான்.

“ராகா வரட்டுமே பிரபா…” என்றார்.

“இன்னைக்கு நான் போடுறேன்பா. ராகா சொல்லிக் கொடுத்திருக்கா…” என்றவன் தானே பாலை சுட வைத்து, தேநீரை போட்டு தந்தைக்குக் கொடுத்து விட்டு, இரண்டு டம்ளர்களில் தனக்கும், மனைவிக்கும் எடுத்துக் கொண்டு மாடியேறினான்.

அவன் மேலே செல்லும் போது தலைக்குக் குளித்து வேறு உடை மாற்றி முடித்திருந்தாள்.

“டீ எடுத்துக்கோ ராகா…” என்று அவளிடம் ஒரு டம்ளரை நீட்டினான்.

“இப்பத்தான் சூடா ஏதாவது குடிச்சா நல்லா இருக்கும்னு நினைச்சேன் அத்தான்…” என்றபடி தேநீரை எடுத்து சுவைக்க ஆரம்பித்தாள்.

“முன்னேறிட்டீங்க அத்தான். டீ நல்லா இருக்கு…” என்றவள் நாக்கை சப்பு கொட்டினாள்.

மென்மையாகச் சிரித்தபடி தன் தேநீரை அருந்தினான் பிரபஞ்சன்.

“ஐயம் சோ ஹேப்பி அத்தான். தேங்க்யூ. இன்னைக்கு ரொம்பவே சோர்வா இருந்தது. இப்போ கொஞ்சம் புத்துணர்ச்சியா இருக்கு…” என்றாள்.

“நீ ரெஸ்ட் எடுக்கணும்னா எடு. நைட் வெளியே டிபன் வாங்கிக்கலாம்…” என்றான் அனுசரணையாக.

“இல்லை அத்தான், நானே செய்றேன். மாமாவுக்கு வெளியே வாங்கும் சாப்பாடு சேராது. சரி அத்தான், எனக்குக் கொஞ்சம் எழுத வேண்டியது இருக்கு. எழுதிட்டு வர்றேன்…” என்று பக்கத்தில் இருந்த இன்னொரு அறைக்குச் சென்றாள்.

முன்பு பொருட்கள் இல்லாமல் இருந்த அறை அது. பிரபஞ்சன் தனியாகச் சென்ற போது வாங்கிய கட்டில், நாற்காலி எல்லாம் வீட்டை காலி செய்து விட்டு இப்போது அந்த அறையில் அதெல்லாம் போட்டிருந்தனர்.

அதைத் தனது படிக்கும் அறையாக உபயோகித்துக் கொண்டாள் ராகவர்தினி.

அவள் எழுதி விட்டு வந்த போது இருட்டியிருந்தது.

அவள் முகத்தில் அவ்வளவு சோர்வு.

அதைக் கண்டவன் மீண்டும் வெளியே சாப்பாடு வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லிப் பார்த்தான்.

ஆனால் அவள் கேட்காமல் சமையல் செய்யச் செல்ல, தானும் உதவிக்குச் சென்றான்.

இருவரும் பொதுவாகப் பேசிக் கொண்டே வேலையை முடிக்க, உடலில் சோர்வு இருந்தாலும் மனதிற்குள் உற்சாகமாகவே உணர்ந்தாள்.

சாப்பிட்டு முடித்து, ஒதுங்க வைத்து விட்டு முதலில் ராகவர்தினி மேலே சென்று விட்டாள்.

தந்தையைப் படுக்க அனுப்பி விட்டு, கதவு எல்லாம் மூடியிருக்கிறதா என்று சரி பார்த்து விட்டு பிரபஞ்சன் அறைக்குள் சென்ற போது, கை, கால்களை முடக்கி சுருண்டு படுத்திருந்தாள் ராகவர்தினி.

“ராகா, என்ன இப்படிப் படுத்திருக்க? நேரா கை, காலை நீட்டிப் படு…” என்றபடி படுக்கையில் அமர்ந்தான்.

“முடியலை அத்தான். வயிறு ரொம்ப வலிக்குது…” என்று முனகினாள்.

“ஏன்டாமா?” என்று வாஞ்சையுடன் கேட்டான்.

“இப்படித்தான் இருக்கும் அத்தான்…” என்றாள்.

அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

“வலி குறைய மருந்து எதுவும் போடுவியா?” என்று கேட்டான்.

“இல்லை அத்தான். எப்பவும் இப்படி வலிக்காது. இந்த முறை தான் இப்படி…” என்று வலியுடன் முனங்கினாள்.

“இப்ப என்ன செய்யலாம்?” என்று அவளிடமே கேட்டான்.

“தூங்குனா சரியாகிடும் அத்தான். ஆனா தூங்க முடியலை…”

“கண்ணை மூடிக்கோ. தூக்கம் வரும்…” என்றவனை விழியுயர்த்திப் பார்த்தாள்.

“என்னமா?” அவள் கண்களில் தெரிந்த எதிர்பார்ப்பில் கேட்டான்.

“உங்க கை கொடுக்குறீங்களா அத்தான்?” என்று கேட்டவளிடம் எதற்கு எனப் புரியவில்லை என்றாலும் தன் கையை அவளிடம் நீட்டினான்.

ராகா அவன் கையைத் தன் வயிற்றில் அழுத்தி வைத்துக் கொள்ள, அவனுக்குத்தான் ஒரு மாதிரியாக இருந்தது.

அவன் தயக்கத்தை உணர்ந்தவள், “ப்ளீஸ் அத்தான், அப்படியே படுங்க. உங்க கை எனக்கு வேணும்…” என்றதும் மறுப்பு சொல்ல முடியாமல் படுத்துக் கொண்டான்.

தன் கை அவளிடம் இருந்ததால், வழக்கத்தை விட அவளை நெருங்கி படுக்க வேண்டியதாக இருந்தது.

அவள் இன்னும் தன் உடலை குறுக்கி படுக்க, அவளின் வலியின் அளவை அவனால் உணர முடிந்தது.

“காலை நீட்டு ராகா. இப்படியே எவ்வளவு நேரம் படுத்திருப்ப?” என்றான்.

“காலும் ரொம்ப உளைச்சலா இருக்கு அத்தான்…”

“கால் வலிக்கு என்ன செய்வ?”

“அம்மா தான் கொஞ்ச நேரம் கால் அமுக்கி விடுவாங்க. அப்படியே தூங்கிடுவேன்…” என்றாள்.

“ஓ!” என்றவன் உடனே எழுந்து அவள் காலை அமுக்கி விடப் போக,

“நோ அத்தான். நீங்க அமுக்க வேண்டாம்…” வேகமாக மறுத்தாள்.

“ஏன், நீ என்ன புருஷன் பொண்டாட்டி காலை பிடிக்கக் கூடாதுன்னு நினைக்கிற ஆளா?”

“அப்படி இல்லை அத்தான். ஆனாலும் வேண்டாம்…”

“எனக்காக நீ எல்லாமே செய்ற. உனக்கு வலிக்கும் போது நான் கால் அமுக்கினா தப்பா?” சூடாகவே கேட்டான்.

“எனக்கு நீங்க கால் எல்லாம் அமுக்க வேண்டாம். ஆனா என் கால் வலி குறைய நீங்களே வழி செய்யலாம்…” என்றாள்.

“என்னன்னு சொல்லு, செய்றேன்…”

“நீங்க படுங்க…” என்றதும் அவன் புரியாமல் பார்த்தான்.

“ப்ளீஸ் அத்தான்!” என்றதும் மீண்டும் படுத்துக் கொண்டான்.

அவன் படுத்ததும் தன் காலை தூக்கி அவன் கால் மேல் போட்டுக் கொண்டவள், அவனின் இன்னொரு காலை அவள் காலில் மேல் போட சொன்னாள்.

மிக நெருக்கமான நிலை. ஆனாலும் அவள் முகத்தில் தாபமோ, உணர்ச்சி வேகமோ இல்லை. தன் கால்வலியை குறைக்கும் வேகம் மட்டுமே அவளிடம்.

அவள் காலை தன் மீது போட்டதும் முதலில் சட்டென்று திகைத்து நெளிந்தவன், அவளின் வலியை உணர்ந்து அமைதியானான்.

அவளின் கால் அவன் காலுக்குள் சிக்கியிருப்பது போல் இருக்க, அவளின் வலிக்கு அது இதமாக இருக்கச் சுகமாகக் கண் மூடினாள்.

அவள் வயிற்றில் இருந்த அவனின் கை மென்மையாக வயிற்றையும் நீவி விட்டுக் கொண்டிருந்தது.

தன் துணையின் வலியை குறைக்கும் அந்த நெருக்கம் இப்போது அவனுக்குச் சங்கடத்தைத் தரவில்லை.

உடல் சார்ந்த நெருக்கம் உணர்ச்சிகளைத் தூண்டும் என்பதையும் தாண்டி உள்ளதை தீண்டும் என்பதை அந்த நொடி உணர்ந்தான் பிரபஞ்சன்.

உணர்வுகள் கொந்தளிக்காமல் அவனின் உள்ளம் உருகியது.

தன் துணையின் வலியை தன்னால் போக்க முடிகிறது என்பதே அவனைப் பேருவகைக் கொள்ளச் செய்தது.

இன்னொரு கையால் அவள் தலையையும் இதமாக வருடிக் கொடுத்தான்.

அவனின் இதமான வருடலில் தன் வலி மறந்து நித்திரையைத் தழுவினாள் ராகவர்தினி.

அவள் உறங்கிய பிறகே தான் உறங்கினான் பிரபஞ்சன்.

காலையில் கண் விழிக்கும் போது ராகவர்தினியின் தலை பிரபஞ்சனின் மார்பில் தஞ்சமடைந்திருக்க, அவளின் கால் இன்னும் அவன் காலின் மீது தான் இருந்தது.

அவனை அணைத்து உறங்கி கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்ததுமே பட்டென்று விழிகளைத் திறந்தாள் ராகவர்தினி.

மார்பில் இருந்து தலையை நிமிர்த்தி அவன் முகம் பார்த்தாள்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் பிரபஞ்சன்.

“என் அழகு அத்தான்…” என்று மெல்லிய குரலில் கொஞ்சியவள் சற்று நிமிர்ந்து அவன் கன்னத்தில் தன் இதழ் பதித்தாள்.

அவன் தூக்கத்திலேயே தன் கன்னத்தைத் துடைத்துக் கொள்ளப் போக, அவன் கையைப் பிடித்துத் தன் கன்னத்தில் அழுத்திக்கொண்டாள்.

அதில் பிரபஞ்சனும் கண்விழித்து, அவள் தன்னை அணைத்துப் படுத்திருப்பதைக் கண்டான்.

பதறி விலகவில்லை அவன். அப்போது அவனுக்கு முதலில் ஞாபகம் வந்தது அவள் வலி மட்டுமே!

“இப்ப எப்படி இருக்க ராகா? இன்னும் வலிக்குதா?” கரகரப்பான குரலில் கேட்டான்.

“இப்ப பரவாயில்லை அத்தான். தேங்க்ஸ், உங்களால் தான் வலியை மறந்து நான் தூங்கினேன்…” என்றவளின் உதட்டில் விரலை வைத்து தடுத்து,

“எனக்கு நீ தேங்க்ஸ் சொல்லுவியா?” என்று கேட்டான்.

அவனின் கேள்வியில் அவளின் உதடுகளில் புன்முறுவல் பூத்தது.

“தேங்க்ஸ் வேண்டாம்னா அப்போ என் நன்றியை வேற மாதிரி சொல்லட்டுமா?” கண்களில் மின்னிய குறும்புடன் கேட்டாள்.

எப்படி? என்பது போல் அவன் பார்க்க,

அவனின் மீதிருந்து எழுந்தவள் பட்டென்று அவன் உதட்டில் தன் இதழை அதிவிரைவாகப் பதித்து விட்டு, அதே வேகத்தில் படுக்கையிலிருந்து துள்ளி கீழே இறங்கியவள், “வாத்தி… ஐயம் எஸ்கேப்…” என்று சிட்டாகப் பறந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் என்ன செய்தாள் என்று புரிந்து கொள்ளவே அவனுக்குச் சில நொடிகள் தேவைப்பட்டது. புரிந்தபோது கோபத்திற்குப் பதில் அவனின் உதடுகளில் ரகசிய சிரிப்பே தோன்றியது.

“ராக்கம்மா…” என்று செல்லமாக முணுமுணுத்துக் கொண்டான்.

கூடவே, ‘படிப்பு முடியுற வரை இந்த மாதிரி சேட்டை எல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்லி கண்டிச்சு வைக்கணும்’ என்று வாத்தியாராகவும் நினைத்துக் கொண்டான்.

அன்று மகளுக்கு மாதாந்திர பிரச்சனை இருப்பதை அவளுடன் பேசும் போது தெரிந்து கொண்ட மீரா, அவளைத் தங்கள் வீட்டிற்கு வரும்படி அழைத்தார்.

“உனக்கு இரண்டாவது நாள் தானே கால் ரொம்ப வலிக்கும். வீட்டில் வந்து ரெஸ்ட் எடுத்துட்டு போ ராகா…” என்றழைத்தார்.

“இல்லமா, பரவாயில்லை. நான் சமாளிச்சுடுவேன்…” என்று அன்னையிடம் சொல்லி மறுத்தவள்,

‘அத்தானே எனக்கு வலி தெரியாமல் உறங்க வைப்பாங்கமா…’ என்று தனக்குள் ரகசியமாகச் சொல்லிக் கொண்டாள்.

தான் முத்தமிட்டதற்கு எப்படி எல்லாம் திட்ட போகிறானோ என்று அவள் பயந்ததற்கு மாறாக, ‘இப்போதைக்கு இப்படி வேண்டாம். படிப்பு முடியும் வரை அமைதியாக இரு’ என்று மட்டும் சொல்லி அவன் முடித்துக் கொண்டதும் கணவனின் மனதும் தன் பக்கம் சாய்ந்து கொண்டு வருவதை உணர்ந்து அவளின் உள்ளம் துள்ளியது.

நாட்கள் விரைவாக விரைய, பிரபஞ்சன், ராகவர்தினி இடையே பிணைப்பு அதிகரித்தது.

முதுகலை படிப்பின் இறுதியாண்டின் தேர்வும் நெருங்க, வீட்டு வேலை என்று அவளை மூழ்க விடாமல் பார்த்துக் கொண்டான். வீட்டில் இருக்கும் பொழுதுகளில் அவளுக்கு அவனும் உதவி செய்ய, இருவரும் அதிக நேரம் சேர்ந்தே இருந்தது இருவரின் நெருக்கத்தையும் அதிகரிக்க வைத்தது.

கடைசித் தேர்வுக்கு முதல் நாள் விடுமுறையாக இருந்தது. அன்று ராகவர்தினியின் பிறந்தநாளும் கூட, அதனால் இருவரும் கோவிலுக்குச் சென்றனர்.

கோவிலில் அன்று கூட்டமும் அதிகமாக இருந்தது.

“யாருக்கோ கல்யாணம் போல அத்தான். அதோ அந்த மண்டபத்தைப் பாருங்களேன்… அலங்காரம் பண்ணிருக்காங்க…” என்று கோவில் மண்டபத்தைக் காட்டினாள்.

“ம்ம், ஆமா… கூட்டம் பக்கம் போகாதே ராகா. இந்தப் பக்கம் வா…” அவளை வேறு பக்கம் அழைத்துச் சென்றான்.

அந்தப் பக்கம் இருந்த ஒரு அறையில் இருந்து சலசலப்பு கேட்க, இருவரும் திரும்பி பார்த்தனர்.

அங்கே வந்தவளை பார்த்த ராகவர்தினி, “அத்தான்…” என்று அவனின் கையைப் பிடித்தாள்.

அவனும் அவளைப் பார்த்தான், எந்தச் சலனமும் இல்லாமல் மூன்றாம் மனிதனை போல்.

அதே நேரம் உறவினர்களுக்கு நடுவே மணப்பெண் கோலத்திலிருந்த நந்திதாவும் அவர்களை ஜோடியாகப் பார்த்தாள்.

ராகவர்தினியின் கழுத்தில் இருந்த தாலி அவளுக்கு அவர்கள் தம்பதியாகிவிட்டார்கள் என்பதைப் புரிய வைத்தது.

பிரபஞ்சனை பார்த்த நந்திதாவின் கண்களில் முற்றிலும் அந்நியத்தன்மையைப் கண்டு ராகவர்தினி மனதில் சிறு நிம்மதி.

என்ன தான் வெளியே காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் இன்னொருத்தியை திருமணம் செய்து கொள்வதாக இருந்து அந்தத் திருமணம் நின்ற சலனம் அவர்களுக்குள் இருக்குமோ என்று சின்ன மனசஞ்சலம் ராகவர்தினிக்கு இருக்கவே செய்தது.

அதுவும் பிரபஞ்சனின் கைபேசியில் நந்திதாவின் புகைப்படத்தைப் பார்த்தவள் வேறு.

தங்கள் திருமணத்திற்கு முன் அவனிடம் கடற்கரையில் வைத்துப் பேசிய போது அனைத்தையும் நீக்கிவிட்டதாகப் பிரபஞ்சன் சொன்ன பிறகு தான் கஸ்தூரியின் கடைசி ஆசையாகக் கேட்ட போது உடனே திருமணத்திற்குத் தன் சம்மதத்தைத் தெரிவித்திருந்தாள்.

அன்று இன்னும் நந்திதாவின் நினைவு தன்னிடம் உள்ளது என்று அவன் சொல்லியிருந்தால் அவள் எடுத்திருக்கும் முடிவே வேறாக இருந்திருக்கும்.

“ராகா, என்ன அப்படியே நிற்கிற? வா பிரகாரத்துக்குப் போவோம்…” என்ற பிரபஞ்சனின் குரலில் அதுவரை நந்திதா சென்ற திசையை வெறித்துக் கொண்டிருந்தவள் தன் நினைவு கலைந்தாள்.

“அத்தான், அவங்க…” என்று நந்திதா சென்ற திசையைச் சுட்டிக் காட்டினாள்.

“யாருக்கோ கல்யாணம். அது எதுக்கு நமக்கு? நாளைக்கு உனக்குப் பைனல் எக்ஸாம். சீக்கிரம் சாமியை கும்பிட்டுட்டு வீட்டுக்கு போகணும், வா…” என்று மனைவியை அழைத்துக் கொண்டு சென்றான்.

அவனின் யாரோ என்ற குறிப்பில் ராகவர்தினி இதழ்களில் புன்னகை அரும்பியது.

“அத்தான் எப்போதும் என் அத்தான் மட்டுமே!” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள் ராகவர்தினி.

மறுநாள் தேர்வு முடிந்த பின் தன் மனதை பிரபஞ்சனிடம் சொல்லிவிடும் முடிவுடன் சாமி கும்பிட்டு விட்டு கணவனுடன் வீட்டிற்குக் கிளம்பினாள்.

அவர்கள் கோவில் வாசலை தாண்டும் போது கோவிலுக்குள் மங்கல இசை ஒலித்து நந்திதாவின் திருமணம் முடிந்ததைப் பறைசாற்றியது.