22 – இதயத்திரை விலகிடாதோ?

அத்தியாயம் – 22

அன்று வெள்ளிக்கிழமை.

காலையில் சமையல் வேலையை முடித்து, தலைக்குக் குளித்து, சேலை கட்டியிருந்தாள் யுவஸ்ரீ.

தலை இன்னும் ஈரமாக இருந்ததால் மேலே மட்டும் சிறிது முடியை எடுத்து முடிந்து, கீழே விரித்து விட்டிருந்தாள்.

தன் அறையில் தயாராகி வந்தவள், நேராகச் சாமி படங்கள் இருக்கும் அலமாரியின் முன் சென்று நின்று, விளக்கை ஏற்றி வைத்து விட்டு, சாமி கும்பிட்டு முடித்து, அங்கிருந்த திருநீற்றையும், குங்குமத்தையும் எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாள்.

வேலைக்குச் செல்லும் போது நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்காதவள், இப்போது வீட்டில் இருப்பதால் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து மங்கலகரமாக இருந்தாள்.

சாமி கும்பிட்டு முடித்ததும் சமையலறைக்குச் சென்றவள் சமைத்து வைத்ததை எல்லாம் டைனிங் டேபிளில் எடுத்து வைத்தாள்.

அவள் அப்படி மங்கலகரமாக நடமாடுவதைக் கண்களில் பொங்கிய மயக்கத்துடன் பார்த்தான் சூர்யக்கண்ணன்.

மனைவி சேலை கட்டினால் எப்போதும் மயங்கித்தான் போவான் சூர்யா.

அதுவும் இன்று அவள் இன்னும் பளிச்சென்று இருக்க, அவளின் பதிபக்தியை எப்போதும் கேலி செய்பவன், இன்று அதை மறந்து ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

கணவனின் பார்வையை உணராது, அவனும் ஒருத்தன் வீட்டிற்குள் இருக்கிறான் என்பதையே மறந்தவள் போல் கண்ணும் கருத்துமாக வேலை செய்து கொண்டிருந்தாள்.

அவளின் பாராமுகம் சூர்யாவை பலமாகத் தாக்கியது.

இரவு தங்கள் அறைக்கு எப்போது வருவாய் என்று கேட்ட போது முகம் திருப்பியவள், காலை விடிந்த பின்னும் நடைமுறை படுத்தினாள்.

அவன் பக்கம் திரும்பாமல், ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருந்தாள்.

நேற்று அவனுடன் சிறிது சாதாரணமாகப் பேசியதால் தான் இரவு அறைக்கு அழைத்தான் என்று நினைத்தவள், இன்று இறுகிப் போய் விலகிப் போனாள்.

காலையிலிருந்து பேசாதவள் இப்போது சாப்பிட அழைக்கப் பேசிவிடுவாள் என்று சூர்யா அவள் அழைக்கும் நேரத்திற்காக ஆவலுடன் காத்திருக்க, அவனுக்கு ஏமாற்றத்தை தந்தாள் அவன் மனைவி.

அவனை அழைக்காமல் தனக்கு மட்டும் உணவை வைத்து உண்டு முடித்தவள், நேற்று முடிக்காமல் விட்ட வேலையை முடிக்கச் சென்றாள்.

ஏமாந்து போனவனின் முகத்தோடு மனமும் சுருங்கி சிணுங்கியது.

சாப்பாட்டைச் செய்து எடுத்து வைத்தாயிற்று. அவனே சாப்பிட்டு கொள்ளட்டும் என்ற எண்ணம் அவளுக்கு.

இத்தனை நாள் கோபமாக இருந்தாலும், தன்னைச் சாப்பிட அழைத்தாளே, இன்றும் அழைப்பாள் என்ற எதிர்பார்ப்பு அவனுக்கு.

தம்பதிகளின் ஊடல், ஊடல் கொண்டது அவர்களிடம்!

அவள் அழைக்காமல் சாப்பிட பிடிக்காதவன், தானும் கணினியை எடுத்து வைத்து வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டான்.

பத்து மணிக்கு ஆரம்பித்த மீட்டிங்கில் யுவஸ்ரீ முடித்து அனுப்பாத வேலையைப் பற்றி விசாரித்தான்.

“அதில் எரர் வருது. எனக்கு இன்னைக்கு ஒரு நாள் டைம் கொடுங்க. முடிச்சு கொடுக்கிறேன்…” என்று பதிலுரைத்தாள்.

“என்ன எரர் வருது? எக்ஸ்பிளைன் பண்ணுங்க…” என்றான்.

அவள் வேலையில் வந்த தவறை சொல்ல, அதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டவன், என்ன தவறு வந்திருக்கலாம் என்று தன் எண்ணத்தைச் சொன்னான்.

இரவு வெகுநேரம் முழித்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போது தவறு பிடிபட, இன்று வேலையை முடித்து விடலாம் என்ற நிம்மதி ஏற்பட்டது.

“நேத்தே நீங்க சூர்யாகிட்ட சொல்லிருந்தால் அவனே கூட வேலையை முடிச்சு கொடுத்திருப்பானே யுவஸ்ரீ…” என்று மீட்டிங்கில் இணைந்திருந்த தினேஷ் கேட்டான்.

“நானே முடிச்சிடலாம்னு நினைத்தேன் தினேஷ்…” என்றாள்.

“ஹஸ்பெண்ட் அன்ட் வொய்ப் ஒரே டீமில் வேலை செய்றீங்க. ஒருத்தருக்கு தெரியலைனா இன்னொருத்தர் வீட்டிலேயே சொல்லிக் கொடுத்துக்குவீங்க. நீங்க இரண்டு பேரும் ரொம்ப லக்கிபா…” மீட்டிங்கில் இருந்த இன்னொரு டீம் மெம்பர் சொல்ல,

“ஆமாப்பா, நாம தான் இங்கே தனியா தலையைப் பிச்சுக்கணும்…” என்றான் அடுத்து ஒரு டீம் மெம்பர்.

அவர்களின் கேலியுடன் கூடிய பேச்சில் யுவஸ்ரீயின் முகம் மாறியது.

“அப்படியெல்லாம் இல்லை கரண். என்னோட வேலையை நான் தான் முடிக்கணும். அதனால் தான் சூர்யா பக்கத்திலேயே இருந்தும், அவர்கிட்ட உதவி கேட்காமல், நானே முடிக்க முயற்சி செய்தேன். இப்பவும் கூட டீம் லீடருக்கு நான் இன்னும் ரிப்போர்ட் செய்யலை.

அதனால் என் வேலையில் வந்த எரரை சொல்ல வேண்டிய நிலை. ஒரு டீம் லீடரா, சூர்யா என் டவுட்டை கிளியர் செய்தார். அவ்வளவு தான். சூர்யாவுக்கும் அவங்கவங்க வேலையை அவங்களே முடித்தால் தான் பிடிக்கும்…” என்றாள் யுவஸ்ரீ.

“ஹோ, ஸாரி யுவஸ்ரீ. சும்மா கேலியாகச் சொன்னேன்…” என்று அந்தக் கரண் சமாதானமாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.

சூர்யாவிற்கு ஏன் இவள் இவ்வளவு எமோஷனல் ஆகிறாள் என்று தான் தோன்றியது.

கூடவே, இப்படிப் பேச்சு வரக் கூடாது என்று தான் நேற்று அவ்வளவு நேரம் ஆகியும் தன்னிடம் உதவி கேட்கவில்லையோ என்றும் தோன்றியது.

ஆனாலும் மீட்டிங்கில் இப்போது தேவையில்லாத பேச்சு வேண்டாம் என்று நினைத்தவன், “எனாஃப் கரண். இன்னைக்கு என்ன வேலை செய்வதுன்னு பார்ப்போம்…” என்று சொல்லி பேச்சை மாற்றினான் சூர்யா.

அதன்பிறகு அன்று செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி அவனது டீமிற்குச் சொன்னவன், மீட்டிங்கை முடித்து வைத்தான்.

வேலை மதியம் வரை ஓட, மதிய உணவை உண்ண வந்த யுவஸ்ரீ டைனிங் டேபிளில் இன்னும் இருந்த கணவனின் காலை உணவை பார்த்து அப்படியே நின்றாள்.

அவள் அப்படி நின்றதை சூர்யாவும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

கேள்வியுடன் கணவனின் பக்கம் திரும்பினாள் யுவஸ்ரீ.

ஆனால் அவனோ கணினியை இப்போது தான் ஆராய்ச்சி செய்பவன் போல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நேரா நேரத்துக்குச் சமைச்சு வைக்கத்தான் முடியும். சாப்பாட்டைத் தட்டில் போட்டு ஊட்டி விடவுமா முடியும்?” என்று அவனுக்கும் கேட்கும் படி சொன்னாள்.

‘ஏன் ஊட்டி விட்டால் தான் என்னவாம்?’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான் சூர்யா.

அவள் தன்னிடம் சகஜமாகப் பேசியிருந்தால் அவனும் நேரடியாகவே அதைச் சொல்லியிருப்பான். ஆனால் ஏற்கெனவே முறுக்கிக் கொண்டிருப்பவள் இன்னும் முறுக்கி கொள்ள வேண்டாம் என்ற எண்ணத்தில் மனதிற்குள் பதில் சொல்லிக் கொண்டான்.

மனைவி தன்னை விலக்கி வைத்திருப்பது மனதை போட்டு உறுத்திக் கொண்டிருந்தது.

காலையில் செய்த உணவை ஒதுக்கி வைத்தவள், மதியத்திற்கான உணவை எடுத்து டேபிளில் வைத்து விட்டு, இரண்டு தட்டுக்களில் உணவை பரிமாறி விட்டு அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

தனக்கும் அவள் உணவை வைத்ததைப் பார்த்தாலும், எழுந்து செல்லவில்லை அவன்.

தனக்கான உணவை வைத்து விட்டாலும், உண்ணாமல் அவனையே பார்த்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தாள்.

நீ எழுந்து வரும் வரை நானும் உண்ண மாட்டேன் என்று சொல்லாமல் சொன்னது அவளின் செய்கை.

அந்தச் செய்கை சூர்யாவின் மனதில் சாமரம் வீசியது.

‘என் மேல அம்புட்டு லவ் இருக்குல. அப்புறம் ஏன்டி உனக்கு இந்தக் கோபம்?’ என்று மனதிற்குள் கொஞ்சிக் கொண்டான்.

மேலும் பத்து நிமிடங்கள் கடந்த பிறகும் அவள் அப்படியே அமர்ந்திருக்க, அதற்கு மேல் வீம்பு பிடிக்காமல் எழுந்து சென்று சாப்பிட அமர்ந்தான் சூர்யா.

அவன் வந்து உண்ண ஆரம்பித்த பிறகு தான், தன் உணவில் கையை வைத்தாள் யுவஸ்ரீ.

காலையில் உண்ணாததால் பசியில் சூர்யா அவதி அவதியாக உண்ண, ‘எதுக்கு இந்த வீராப்பு?’ என்ற பார்வை பார்த்து வைத்தாள்.

அன்று மாலை இருவருக்குமே வேலை விரைவில் முடிந்தது.

அதனால் சூர்யா ஒரு திரைப்படத்தைப் போட்டு அதைப் பார்க்க ஆரம்பிக்க, யுவஸ்ரீ சமையல் வேலையைப் பார்த்து விட்டு பால்கனிக்கு சென்று, இயர்போனை காதில் மாட்டி, பாட்டு கேட்டுக் கொண்டே ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள்.

அன்று அவ்வாறு நேரம் செல்ல, மறுநாள் விடுமுறை நாள் என்பதால், இருவரும் நிதானமாகவே எழுந்தனர்.

யுவஸ்ரீ எப்போதும் போல் தனது வேலையைப் பார்க்க, சூர்யா சிறிது நேரம் டீவி பார்ப்பதும், கைபேசியை நோண்டுவதுமாக இருந்தான்.

கடந்த வாரங்களில் நண்பர்களுடன் செல்லாமல் இருந்தாலும், அவ்வப்போது எங்கேயாவது வெளியே சென்று வந்து கொண்டிருப்பான்.

ஆனால் இப்போது லாக்டவுனால் வெளியே செல்ல முடியாது.

வீட்டிலும் என்ன செய்வது என்று தெரியவில்லை. மனைவியும் பேசுவதில்லை.

அந்தச் சூழ்நிலை அவனுக்கு எரிச்சலை கொடுத்தது. நேரத்தை வெறுமனே நெட்டித்தள்ள முடியவில்லை.

எத்தனை படம் தான் பார்ப்பது? தொலைக்காட்சியும் தொல்லை காட்சியாகத் தோன்றியது. மற்ற நாட்கள் அலுவலக வேலை பார்த்து சமாளித்து விட்டான்.

ஆனால் விடுமுறை நாட்களை என்ன செய்வது?

மனைவி என்ன செய்து சமாளிக்கிறாள் என்று பார்த்தான்.

அவள் வேலையை எல்லாம் முடித்து விட்டு பால்கனி ஊஞ்சலில் சென்று அமர்ந்திருந்தாள்.

அது அவளுக்குப் பிடித்த இடம் என்று அவனுக்குத் தெரியும்.

பால்கனி படுக்கையறையுடன் இல்லாமல், ஹாலுடன் சேர்ந்து இருந்ததால் அவனுக்கு அங்கே செல்ல அவ்வளவாகப் பிடிக்காது.

ஆனால் யுவஸ்ரீக்கு இளைப்பாறும் இடமே அது தான்.

தனியாக இருக்கும் போது சில நேரம் உணவை கூட அந்த ஊஞ்சலில் அமர்ந்து தான் உண்பாள்.

இப்போதும் அவள் அங்கே இருந்ததால் தானும் அங்கே சென்றான்.

மாலை வேளை அது.

லாக்டவுனால் வெளியே ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்க, அதனை வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தவள் அருகில் வந்து நின்றான் சூர்யா.

அதிசயமாக அங்கே வந்து நின்றவனை, கேள்வியுடன் திரும்பிப் பார்த்தாள்.

“ரொம்பப் போர் அடிக்குது பொண்டாட்டி. நீயும் பேச மாட்டிங்கிற. எனக்குப் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு…” என்றவன் பால்கனி சுற்றுக் கம்பியில் சாய்ந்து நின்று அவளைப் பார்த்தான்.

அவனைப் பார்த்து அலட்சிய புன்னகை சிந்தினாள் யுவஸ்ரீ.

அந்தச் சிரிப்பிற்கான காரணம் அவனுக்குப் புரியவில்லை.

“என்ன? ஏன் அப்படிச் சிரிக்கிற?” என்று கேட்டான்.

இதற்கு அவளால் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

“தனிமை! நாமே எடுத்துக் கேட்டால் இனிமை! பிறர் நமக்குக் கொடுத்தால் கொடுமை!” என்றாள்.

அவள் மௌனம் மட்டுமல்ல, அவளின் பேச்சும் அவனுக்குப் புரியவில்லை.

“என்ன சொல்ற? இந்த லாக்டவுன் பற்றிச் சொல்றீயா?” என்று கேட்டான்.

மறுப்பாகத் தலையை அசைத்தவள், “உங்களுக்குப் போர் அடிக்காமல் இருக்கத்தான் உங்க ஃபிரண்ட்ஸ் இருக்காங்களே. அவங்க கூடப் போய்ப் பேசுங்க. போர் அடிக்காது…” என்றாள்.

“அவனுங்களைப் பத்தி பேசாதே! துரோகிங்க. சுயநலவாதிகள். அவனுங்க கிட்ட இனி பேச மாட்டேன்…” என்று பல்லை கடித்து ஆத்திரமாகச் சொன்னவனை வியப்பாகப் பார்த்தாள்.

‘அவனின் நண்பர்கள் மீது அப்படி என்ன கோபம் இவனுக்கு?’ புரியவில்லை அவளுக்கு!

“என்னாச்சு? உங்களுக்குத் தான் உங்க ஃபிரண்ட்ஸை என்னையே மறக்குற அளவுக்குப் பிடிக்குமே?” என்று அவனிடமே கேட்டு விட்டாள்.

அவள் சொன்ன வார்த்தைகள் அவனைத் தாக்கியது.

அவளையே மறக்கும் அளவிற்கா தான் இருந்தோம்? விக்கித்துப் போய் அவளைப் பார்த்தான்.

ஏற்கெனவே மனைவி கோபப்பட்டுப் பேசிய போது நிறைய யோசித்திருந்தான்.

அவள் உடல்நிலையைப் பற்றித் தான் தெரிந்து கொள்ளாமல் இருந்தது. மகாபலிபுரம் சென்ற போது அவள் நந்தினியிடம் பேசிய வார்த்தைகள் அனைத்தையும் யோசித்தவனுக்குத் தான் மனைவிக்கு அதிக நேரத்தை ஒதுக்கவில்லை என்ற எண்ணம் ஏற்கெனவே அவனுக்குக் குற்றவுணர்வை தந்து கொண்டிருந்தது.

அதனுடன் அவனின் நண்பர்கள் மூலமும் ஒரு பாடம் கற்றிருந்தான்.

ஏற்கெனவே இருந்த குற்றவுணர்வு, நண்பர்கள் ஏற்படுத்திய தாக்கம், மனைவியின் பாராமுகம், அவளின் கோபம், எல்லாம் அவனின் தவறை அவனுக்கே சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தது.

இப்போதும் அவள் சொன்ன வார்த்தைகள் அவனைத் தாக்க, எப்போதும் போல் அலட்சியமாக அவனால் தலையைச் சிலுப்ப முடியவில்லை.

நண்பர்களுடன் பேசாத இந்தத் தனிமையே இந்தச் சில நாட்களில் அவனைத் தாக்கி இருக்கிறது என்றால், தன்னைத் திருமணம் முடித்து வந்ததிலிருந்து அவன் அவளுக்குக் கொடுத்த தனிமை எவ்வளவு வலியைக் கொடுத்திருக்கும்?

தனிமை! கொடுமையானது! என்று அவள் சற்று முன் சொன்னதற்கான அர்த்தம் இப்போது அவனுக்குப் புரிந்தது.

தன் தவறை சரி செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

ஆனால் எப்படி என்று தான் தெரியவில்லை.

“உன்னை மறக்குற அளவுக்கு என் ஃபிரண்ட்ஸை பிடிக்கும்னு யார் சொன்னா?” என்று கேட்டான்.

“யார் சொல்லணும்? அனுபவித்துக் கொண்டிருப்பவள் நான் சூர்யா. எனக்குத் தெரியாதா? அதை என்னை அறைந்து எனக்குப் படம் சொல்லிக் கொடுத்திருக்கீங்களே!” என்றாள் கோபமாக.

“உன்னை அடிச்சது தப்பு தான். ஸாரி கேட்டுக்கிறேன். ஆனால் உன்னை விட என் ஃபிரண்ட்ஸை பிடிக்கும்னு சொல்வது பொய்!” என்றான்.

அவளுக்கு இன்னும் தான் கோபம் வந்தது.

“என்ன பொய்யா? நான் சொல்வது பொய்யா? நீங்க சொல்வது தான் பொய்! சொல்ல போனால் என்னை உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. உங்களுக்குத் தேவை, வீட்டில் உங்களுக்குச் சமைச்சு போட, ஒரு வேலைக்காரி. அதோட நைட் ஆனால் கூடப் படுக்கப் பொண்டாட்டிங்கிற பேரில் ஒருத்தி. நைட்க்கு மட்டும் தான் நான் வேணும்னா அதுக்குப் பேரே வேற…” என்று ஆத்திரமாகச் சொன்னவளை, “ஏய்…” என்று அடிக்கக் கையை ஓங்கியிருந்தான் சூர்யா.

“யுவா, என்ன பேச்சு பேசுற? நீ என் பொண்டாட்டிடி. அதைப் போய் அசிங்கமா பேசுற?” என்று கோபத்துடன் கேட்டான்.

அவள் சொன்ன வார்த்தையை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

தன்னை அறைய தூக்கியிருந்த கணவனின் கையை வெறித்துப் பார்த்தாள் யுவஸ்ரீ.

“அடிங்க சூர்யா. ஏன் நிறுத்திட்டீங்க? அடிங்க! ஆனால் நான் சொன்னது தப்புயில்லை சூர்யா. உங்க செய்கை எல்லாமே அப்படித்தான் இருந்திருக்கு. நான் சொன்னதே உங்களுக்குக் குத்துதே. ஆனால் உங்க செய்கை? நீங்க அடிக்காமயே வலிக்குது சூர்யா…” என்றவள் கண்ணிலிருந்து சட்டென்று கண்ணீர் துளிர்த்தது.

வேதனையுடன் வெளி வந்த மனைவியின் வார்த்தைகள், அவனின் கையைக் கீழே இறக்க வைத்தது.

“ஏன்டி இப்படிப் பேசுற? நீ பேசியது சாதாரண வார்த்தை இல்லை யுவா. அசிங்கமா இருக்கு…” என்றான் முகத்தைச் சுளித்து.

“எனக்கும் அசிங்கமாத்தான் இருக்கு சூர்யா. நான் இப்படிக் கீழிறங்கி பேசும் நிலைக்குக் கொண்டு வந்துட்டீங்க பார்த்தீங்களா?” என்றாள் வலியுடன்.

“நான் அப்படி என்ன தான்டி செய்றேன்? சொல்லித் தொலையேன்!” என்று ஆத்திரமாகக் கேட்டான்.

அவன் தவறு செய்கிறான் என்று தெரியும். ஆனால் என்ன தவறு என்று ஓரளவு இப்போது புரிந்தாலும் மனைவி என்ன எதிர்பார்க்கிறாள் என்று தெரிந்து கொள்ள நினைத்தான்.

“சொல்லணுமா? நானா? நெவர்! நான் ஏன் சொல்லணும். உங்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு எனக்கு அத்தனையும் தெரியும் சூர்யா! அது எல்லாம் நீங்க சொல்லியா எனக்குத் தெரியும்? இல்லையே! நானே தெரிந்து கொண்டேன். என் கணவனுக்கு என்ன பிடிக்கும், எப்படிப் பிடிக்கும், எந்த நேரம் என்ன ஆசைப்படுவார், எல்லாம் எனக்கு அத்துப்படி சூர்யா.

ஆனால் என்னைப் பற்றித் தெரிய நீங்க என்ன முயற்சி செய்திருக்கீங்க சூர்யா? ஒன்னுமே இல்லையே! இப்ப நான் சொல்லி நீங்க தெரிந்து கொள்ள நினைப்பது என்னைக் கட்டி வைச்சு அடிப்பது போல் இருக்கு சூர்யா. வேண்டாம்! எனக்கு அந்த வலி வேண்டாம்! நீங்களும் என்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாம்!” என்று கோபமாகச் சொன்னவள், ஊஞ்சலிலிருந்து இறங்கி அவள் அறைக்குள் சென்று விட்டாள்.

அவள் சொல்லி சென்றதை கேட்டு அப்படியே நின்றவன், இயலாமை நெஞ்சை அடைக்க, “ச்சே!” என்று கையைக் கோபத்துடன் உதறி, தானும் தங்கள் அறைக்குச் சென்றான்.

தன் மீதே கோபமாக வந்தது. மனைவியின் வார்த்தை குறித்தான ஆத்திரம் வந்தது.

என்ன வார்த்தை சொல்லி விட்டாள்? ஆத்திரம் கண்ணை மறைத்தது.

தன் செய்கை அப்படியா இருந்தது? தன்னையே கேட்டுக் கொண்டான்.

‘யோசி! யோசி! இனி நீயாகத் தான் தெரிந்து கொள்ள வேண்டும். யோசி!’ மனம் ஆர்ப்பரித்தது.

திருமணம் முடிந்ததிலிருந்து நடந்ததை எல்லாம் யோசிக்க யோசிக்க, தான் சாதாரண ஒரு கணவனாக அவளிடம் நடந்து கொள்ளவில்லை என்ற உண்மை உறைத்தது.

“மடையா! ஒரு பெண் எத்தனை தான் தாங்குவாள்?” என்று தன் நெற்றியில் தானே அறைந்து கொண்டான்.

மனம் நிலை கொள்ளாமல் தவித்துத் திணறியது. அந்த அழுத்தத்தை அவனால் தாளவே முடியவில்லை.

‘குறைக்க வேண்டும், இந்த வலியை குறைக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என்று யோசித்தவனுக்கு ஞாபகத்தில் வந்தது என்னவோ குடி தான்.

ஏற்கெனவே வாங்கி அலமாரியில் வைத்திருந்த மது குடுவைத் தேடித் சென்றான்.

வலியைக் குறைக்கக் குடியை நாடி, மீண்டும் தவறு செய்தான் சூர்யா.