22 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 22

“என்ன சத்யா என்னைப் பற்றி நீ தெரிந்து கொள்ள வேண்டாமா?” என்று தர்மா அவள் வேண்டாம் என்றதில் குழப்பத்துடன் கேட்டான்.

“இப்போ தெரிந்து கொள்ள வேண்டாம்…” என்றாள் உறுதியாக.

“ஏன் சத்யா?” என்று அவன் கேட்ட பின்பும் அவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

“என்ன சத்யா? சொல்லுமா… அமைதியா இருந்தா நான் என்ன நினைக்கட்டும்?” என்று கேட்டான்.

சில நொடிகள் கடந்த மௌனத்திற்குப் பின்பு தொண்டை லேசாகச் செருமி விட்டு, “அம்மா ஒரு வரன் வந்திருக்கு இரண்டாந்தாரமானு சொல்லவும், அதுக்கு மேல விவரம் கேட்க எனக்குச் சுத்தமா பிடிக்கலை. எனக்குக் கண்ணு தெரியாதுங்கிற ஒரே காரணத்துக்காக இரண்டாந்தாரமா தான் போகணுமானு ஒரு எண்ணம். அதனால் தான் அம்மா மாப்பிள்ளை பற்றிச் சொல்ல வரும் போதெல்லாம் அவாய்ட் பண்ணினேன்.

உங்களைச் சந்திச்ச பிறகு ஒரு கட்டத்தில் என் மனசு உங்க பக்கம் சாய ஆரம்பிச்சது. அப்போ எல்லாம் இது உனக்கே அளவுக்கு மீறின ஆசைன்னு தெரியலையானு என் மனசை அடக்கி வச்சுக்குவேன். அதனாலே நீங்க கடைக்கு வரும் நாளுக்கு வர கூடாதுனு அவாய்ட் பண்ண ஆரம்பிச்சேன்…” என்று அவள் மெல்லிய குரலில் சொல்லவும், அவளின் கையை அழுத்தி பிடித்தவன்,

“உனக்கு என்னடா குறை? கண்ணு தெரியலையேனு சொல்லாதே. கண்ணு இருந்தும் நல்லது கெட்டது பிரிச்சு பார்க்க தெரியாம எத்தனையோ பேர் இருக்காங்க. அவங்களுக்கு முன்னாடி நீ உயர்ந்தவள் டா. கண்ணு தெரியலைனு முடங்கி உட்காராம ஒரு டீச்சரா உயர்ந்து இருக்க. இதை விட உன்னை உயர்த்திக்க என்ன வேணும்? குறைன்னு பார்த்தா என்கிட்டயும் தான் குறை இருக்கு. இதுக்காக உன்னை நீ குறைவா நினைத்து என்னை அவாய்ட் பண்ண நினைச்சுருக்கவே வேண்டாம்.

நீ அவாய்ட் பண்றாயோனு அன்னைக்கே எனக்குத் தோணுச்சு. இரண்டு வாரமா வராம இருந்து வந்ததும் உன்னை நான் பார்க்க வந்தப்ப நான் வந்ததும் வாங்கனு சொல்றவ கண்டுக்காம இருந்த. அப்பயே உன்னை நோட் பண்ணினேன்…” என்றான்.

அவன் அவளின் குறையைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பேசியது மனதின் ஓரம் இதத்தைத் தந்தது.

“அதெப்படி நான் கடைக்கு வந்ததும் சரியா வந்தீங்க?” என்று கேட்டாள்.

“மாமாகிட்ட சொல்லி வச்சிருந்தேன் நீ வந்தா சொல்ல சொல்லி. ஆனா அவர் சொல்றதுக்கு முன்னாடியே இந்த வாரம்னாலும் வந்திருக்கியா இல்லையானு பார்த்துட்டு வருவோம்னு தான் கிளம்பினேன். நீ வந்திருந்த…” என்றான்.

“ஹ்ம்ம்… அப்பா கூட உங்களைத் தெரியாத மாதிரி காட்டிக்கிட்டார்…” என்றாள் சிறு ஆதங்கத்துடன்.

“முதல் நாள் அவருக்கும் என்னைத் தெரியாதுமா…” என்றான் அவளைச் சமாதானப்படுத்தும் நோக்கோடு.

“தெரியாதா? அதெப்படி?”

“ஒரு சொந்தக்காரங்க மூலமா தான் என்னைப் பற்றிய விவரம் சொல்ல சொல்லி உன்னைப் பெண் கேட்க சொல்லி விட்டுருந்தோம். முதலில் சொல்லி வைப்போம்கிற எண்ணம் தான். அப்புறம் எப்படியும் இங்கே தானே வர போறோம் நேரில் அப்போ உங்க அப்பாவை பார்த்து பேசலாம்னு இருந்தேன்.

“அதனால் தான் முதல் நாள் என்னைத் தெரியாம யாரோன்னு பார்த்தார். அதுக்குப் பிறகு நான் தனியா பார்த்து பேசினேன். அப்போ தான் அவர் என் மக இரண்டாந்தாரம்னு தயங்குறானு சொன்னார். கேட்டதும் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்தது.

என் வருத்தத்தைப் பார்த்துட்டு உங்களைப் பற்றி இன்னும் அவ விவரம் கேட்டுக்கலை. கேட்டா கண்டிப்பா சம்மதம் சொல்லுவானு சொன்னார். என் விவரம் கேட்டு இரக்கம் காட்டி சம்மதம் வாங்குறதானு எனக்கு யோசனை. அதனால் இப்போ சொல்ல வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும்னு சொன்னேன். அதுதான் அவங்களும் அதுக்குப் பிறகு கல்யாணத்தைப் பத்தி பேசலை…” என்று அவன் சொல்ல,

“இதோ இதுக்குத் தான் இப்போ உங்களைப் பற்றிய விவரம் சொல்ல வேண்டாம்னு தடுத்தேன்…” என்று இடையிட்டாள் சத்யா.

“எதுக்குடா?”

“நீங்க சொன்னீங்களே உங்களைப் பத்தி விவரம் தெரிஞ்ச பிறகு நான் சம்மதம் சொன்னா உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும்னு தான் இப்பயும் கூட வேண்டாம்னு சொல்றேன். உங்களை எனக்குப் பிடிச்சது நீங்க யாருனு எனக்குத் தெரியாதப்ப தான். அதுவும் உங்க பர்ஷனல் பற்றி அதிகம் தெரியாதப்பயே எனக்கு விருப்பம் வந்தது. அது அப்படியே இனியும் இருக்கட்டும்னு தான் நீங்க சொல்ல வந்ததைத் தடுத்தேன்…” என்று சத்யா சொல்ல அவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.

“ஆனா இப்போ தான் உன் சம்மதத்தைச் சொல்லிட்டியேடா… இதுக்கு மேலயும் ஏன் தெரியாம இருக்கணும்?”

“இல்லை வேண்டாம்…” என்று உறுதியாக மறுத்தாள்.

அவள் மீண்டும் மீண்டும் வேண்டாம் என்றதன் காரணம் புரியாமல் தர்மா முழிக்கத் தான் வேண்டியிருந்தது.

அவனுக்கு அவளின் மன உணர்வுகள் புரியவில்லை.

தர்மா அன்று காதல் சொன்னது போல் அவனில் அவளின் நெஞ்சம் வீழ்ந்து விட்டது தான். அதில் சிறிதும் அவளுக்குச் சந்தேகம் இல்லை.

அவன் தான் மாப்பிள்ளை என்று தெரிந்ததும் கோபம் வந்ததும் உண்மை. அதைப் பல நாட்கள் அவன் மறைத்துத் தன்னிடம் பழகியதால் உண்டான கோபமும் கூட.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவனில் வீழ்ந்த நெஞ்சம் அவனைத் தேட ஆரம்பித்தது. அவனின் குரலை கேட்க மனம் தவித்தது.

அவளின் கோபம் குறைந்ததும் அவன் வருவான் என்று அவள் காத்திருக்க அவனோ வராமல் ஆட்டம் காட்டினான். மீண்டும் பள்ளி செல்லும் வழியில் பார்க்க வந்தவன் கையெட்டும் தூரம் வந்து நின்றிருந்தும் ஒரு நாள் கூட அவளிடம் பேச முயற்சி செய்யவில்லை.

முதல் நாள் அவன் பாதை ஓரத்தில் வந்து நின்ற போதே கையெட்டும் தூரத்தில் தான் அவன் நின்றதால், அவனின் இருப்பை அறிந்து கொண்டாள். அவனுக்கே உரித்தான வியர்வை கலந்த ஆண் மகனுக்குரிய பிரத்யேக வாசம் அவனைக் காட்டி கொடுத்து விட்டது.

அவன் தனக்காக வருகிறான் என்பதில் அவளின் பெண்மனம் பெருமையுடன் சந்தோஷப்பட்டுக் கொண்டது.

ஆனால் அவன் பேச முயற்சி செய்யாததில் கோபம் உண்டானது. அந்தக் கோபம் இன்னும் ஒட்டிக்கொண்டும் இருந்தது.

ஆனால் அதையும் மீறி இனி அவனை விட்டுத் தன்னால் விலக முடியாது என்று இத்தனை நாளில் உறுதியுடன் அறிந்து கொண்டாள்.

அதுவும் அன்னை புகழேந்தி பற்றிப் பேசியது அவளை அதிகம் பாதித்திருந்தது. ‘என் தர்மா இருக்கும் போது நான் ஏன் புகழ் சாருக்கு சரி சொல்ல வேண்டும்?’ என்று தான் வசந்தா பேசும் போது அவளின் எண்ணம் ஓடியது.

“என் தர்மா” என்ற எண்ணம் தோன்றியதிலேயே தர்மா சொன்னது போல இனி வேறு ஆடவனின் அருகாமையை அவள் மனம் விரும்பாது என்று தெளிவாக உரைத்து விட்டது.

அது எல்லாம் என் மனதை நன்றாகத் தான் தெரிந்து வைத்திருக்கிறான். ‘கள்ளன்’ என்று உள்ளுக்குள் செல்லமாக அவனைச் சீராடி கொண்டாள்.

பல வார்த்தைகள் விளக்க முடியாதவற்றை “என்” என்ற இரண்டே இரண்டெழுத்து நேசம் கொண்டவர்களுக்கு அவர்களின் எண்ணத்தை விளக்கிவிடுகிறது.

“என்” என்பது பல நேரத்தில் தலைக்கனம் மிகுந்த வார்த்தையாகத் தான் தெரியும்.

ஆனால் அன்பு, நேசம் சூழ்ந்த இடத்தில் அந்த “என்” என்பது மகுடம் சூட்டும் வார்த்தையாகிவிடுகிறது.

சத்யாவிற்கும் அந்த “என் தர்மா” என்பதே அவளின் மனதை அவளுக்கே பிரதிபலித்து விட்டது.

தர்மாவை விரும்புகின்றாள். அவனைத் தன் வாழ்வில் இணைத்துக் கொள்ளத் தயாராகி விட்டாள். ஆனாலும் ஏனோ அவனின் முதல் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலே வலித்தது.

தன்னை இப்போது விரும்புவதாகச் சொல்பவன் அவனின் முதல் மனைவியையும் இப்படித் தான் விரும்பி இருப்பானோ? தன் மனதை நன்றாக அறிந்தவன் அவளின் மனதையும் இப்படித் தான் அறிந்து வைத்திருப்பானோ?

தன் அருகாமைக்கு இப்படித் தவிப்பவன் முதல் மனைவியின் அருகாமைக்கும் இப்படித் தான் தவித்திருப்பானோ? என்று இன்னும் ஏதேதோ தோன்றி அவளின் மனம் அவளை அலைக்கழித்தது.

இப்படியெல்லாம் ஒவ்வொன்றுக்கும் யோசிக்கக் கூடாது என்று நினைத்தாலும் அவளின் மனம் அடங்க மறுத்தது.

இரண்டாந்தாரம் வேண்டாம் என்று அவள் ஒதுக்கி வைத்த ஒன்று! அந்த வேண்டாம் என்பதை வேண்டும் என்ற நிலைக்கு மாற்றும் போது அதை ஏற்றுக்கொள்ளப் போராடும் போராட்டமே சத்யாவின் மனப் போராட்டமாக இருந்தது.

அவளின் மனநிலை இப்படியிருக்க, இந்த நிலையில் அவனின் முதல் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள அவளுக்கு விருப்பம் இல்லை.

அவனின் முந்தைய வாழ்க்கையில் இன்பம் இருந்ததோ? துன்பம் இருந்ததோ? எதுவாக இருந்தாலும் இப்போது அதைத் தெரிந்து கொள்ளவே வேண்டாம் என்பது மட்டுமே அவளின் முடிவாக இருந்தது.

தர்மா என்னும் புது மனிதனை சந்தித்தாள். அவனைக் காதலித்தாள், கரம் பிடித்தாள் என்பதாக மட்டுமே இப்போதைக்கு இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

எப்படியும் பின்னாளில் தெரிந்து கொள்ளத் தான் வேண்டியது இருக்கும். அப்போது தெரிந்து கொண்டால் போதும் என்று நினைத்தாள்.

அவன் தன் முதல் மனைவியுடன் வாழ்ந்த முறையைத் தெரிந்து கொண்டு அதை மனதில் சுமந்து கொண்டு அவனுடனான தன் வாழ்க்கையைத் துவங்க கூடாது என்று மனது உறுதியாக நினைத்ததால் அதைத் தர்மாவிடமும் காட்டினாள்.

அவளின் பிடிவாதம் தர்மாவை திக்கு முக்காட வைத்தது.

அவன் தன் முந்தைய வாழ்க்கையை எல்லாம் அவளிடம் சொல்லிவிட்டு எந்த உறுத்தலும் இல்லாமல் தான் விரும்பிய சத்யாவுடன் தங்கள் புதிய வாழ்க்கையைச் சந்தோஷமாகத் தொடங்குவோம் என்பது அவனின் நினைப்பாக இருந்தது.

அதனாலேயே அனைத்தையும் சொல்லி விடுவதில் முனைப்பாக இருந்தான். ஆனால் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தளர்ந்து அமர்ந்து விட்டான்.

“அப்போ வேற என்ன இப்ப சொல்றது சத்யா?” என்று குழப்பத்துடன் கேட்டான்.

“என் ஆப்ரேஷனுக்குப் பின்னாடி ஏன் பேசலை? இப்போ ஒரு மாசமா என்னைப் பார்க்க வந்தும் ஏன் பேச முயற்சி பண்ணலை? இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. வேற எதுவும் இப்போதைக்கு எனக்குத் தெரிய வேண்டாம். என்னை எப்ப இருந்து விரும்ப ஆரம்பிச்சீங்க என்பது கூட இப்போ வேண்டாம்.

உங்க வாழ்க்கையோட சேர்ந்து தான் என்னைச் சந்தித்தது பற்றியும் சொல்ல வேண்டி இருக்கும்னா அது நாம வாழ்க்கையில் ஒன்னு சேர்வதற்கு முன் தெரியவே வேண்டாம்…” என்றாள் அழுத்தமாக.

அவள் அவ்வளவு சொன்ன பிறகும் மீற மனதில்லாமல் அவளாகத் தெரிந்து கொள்ள நினைக்கும் போது சொல்லி கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தவன் அவளின் கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல ஆரம்பித்தான்.

“உன் ஆப்ரேஷனுக்குப் பிறகு உன்கிட்ட பேசாம இருந்ததுக்குக் காரணம் நீ தான் சத்யா…”

“நானா…?”

“ஹ்ம்ம்… ஆமா சத்யா. மயக்க மருந்து பவர் எல்லாம் முடிஞ்ச பிறகு ரொம்ப வலிக்கும் டா. அதுக்குப் பிறகும் மாத்திரை பவர் முடிஞ்சதும் வலி பயங்கரமா இருக்கும் வலியில் கோபம் வரும், எரிச்சல் வரும், அழுகை வரும்.

ஒவ்வொரு விஷயத்துக்கும் அடுத்தவங்க உதவி தேவைப்படும். அப்படி வரும் போது ரொம்பக் கஷ்டமா இருக்கும். அதான் உன் மைண்டை கொஞ்சம் டைவர்ட் பண்ணுவோம்னு நினைச்சேன். நான் பேசாம அவாய்ட் பண்ணினது உனக்கு என்ன தோணுச்சு?”

“ஏன் பேசலை. நான் தனியா வலிக்குதுனு அழுதப்ப என்னைத் தாங்கினீங்களே… இப்போ ஏன் நான் எப்படி இருக்கேன்னு கூடக் கேட்கலைன்னு யோசனையா இருந்தது. என் மேல எதுவும் கோபமா? ஒரு வேளை வேற எதுவும் பிரச்சனையோ? என்னை விட்டு விலக நினைக்கிறீங்களோனு தவிப்பா இருந்தது…” என்றாள்.

“இப்படி உன் மனசு குழம்பட்டும்னு தான் பேசலை சத்யா. உன் கவனம் இப்படிக் குழப்பத்தில் இருக்கும் போது உன் வலி கொஞ்சம் மட்டுப்படும்னு நினைச்சேன். நீ உன் வலியை மறக்க ஏதோ என்னாலான சிறு முயற்சி…” என்றான்.

அவனின் காரணம் கேட்டதும் அவளின் மனது நெக்குருகி போனது. என்னுடைய வலியை மறக்க அவன் எடுத்த முயற்சி மனதுக்கு இதமாக இருந்தது.

நமக்காக ஒருவர் ஒன்று செய்தாலே மனம் இளகி விடும். அதிலும் தன் வலியை குறைக்க முயல்வது பெரிய விஷயம் அல்லவா?

வலித்தால் ஐயோ வலிக்குதா என்று அனுதாபப்படுவதைக் காட்டிலும் அந்த வலி எப்படி எல்லாம் இருக்கும் என்று புரிந்து அதைக் குறைக்க வழி தேடுவது… அதுவும் அதைச் செய்வது தன் மனம் கவர்ந்தவன் என்னும் போது மனம் இன்ப நெகிழ்வில் இளகத்தானே செய்யும்?

அந்த இளகல் சத்யாவின் மனதில் உண்டாக அதைத் தன் செயலில் காட்டினாள்.

அவ்வளவு நேரம் தர்மாவின் கைகளுக்குள் அடைப்பட்டிருந்த தன் கையை விலக்கி அவனின் கரத்தை தன் கை சிறைக்குள் கொண்டு வந்து இறுக்கி பிடித்தாள்.

“காலில் அடிப்பட்ட ரொம்பக் கஷ்டப்பட்டீங்களா?” என்று அவனுக்கு இன்று தான் அடிப்பட்டது போல் பரிதவிப்புடன் கேட்டாள்.

“ஹ்ம்ம்… ரொம்ப…!” அவளின் கை சிறையில் அகப்பட்டிருந்த தன் கையைப் பார்த்து ரசித்துக் கொண்டே சாதாரணக் குரலில் சொன்னான்.

அவன் சாதாரணமாகச் சொன்னாலும் ‘ரொம்ப’ என்ற வார்த்தையிலேயே அவனின் வலியை உணர்ந்தவள் போல அவனின் கையை அழுத்தினாள்.

அதை உணர்ந்தவன் மென்மையாகப் புன்னகைத்து, “இப்போ ஒன்னும் இல்லடா. அப்போ ரொம்பக் கஷ்டமா இருக்கும். அதுவும் காலில் பலமான அடி, பாதிச் சிதைந்த நிலை தான். அதனால் நடமாட்டம் சிறிது கூட இல்லை. கைனாலும் சமாளிச்சுடலாம். கால் அசையாமல் இருக்கும் போது அன்றாட இயற்கை தேவைக்குக் கூட உதவிக்கு ஒரு ஆள் இருந்தா தான் சாத்தியம் எனும் போது ரண வேதனையா இருக்கும். அப்பா தான் என்னைக் குழந்தை போலப் பார்த்துக்கிட்டார். எனக்குப் பார்த்து ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணி தான் அவருக்கு அட்டாக் வரை போயிருச்சோன்னு கவலைப்பட்டிருக்கேன்.

அதான் அவருக்கும் சிறு ஓய்வை தருவோம்னு கடையை வித்துட்டு இங்க அழைச்சுட்டு வந்துட்டேன். இப்போ ட்ரைவிங் ஸ்கூலில் சில பொறுப்பு எடுத்துப் பார்த்துக்கிறார். அதனால் எனக்கும் ஒத்தாசையா இருக்கு. ஸ்கூல் இன்னும் விரிவு படுத்த வேலை பார்த்துட்டு இருக்கேன்…” என்றான்.

கால் பற்றி மட்டும் சொல்லி நிறுத்தினால் அவள் வேதனை படுவாளோ என்று நினைத்தவன் தந்தை, பயிற்சி நிலையம் என்று பேச்சை நீட்டினான்.

ஆனால் அவனின் முயற்சி வீண் என்பது போல் சத்யாவின் கண்ணின் ஓரம் ஒற்றைத் துளி முத்தாய் கண்ணீர் தேங்கி நின்றது.

அவளின் கண்ணீர் முத்துக்களைக் கண்டதும் பேச்சை நிறுத்தி “ம்ம்… சத்யாமா ஏன் இப்படி?” கேட்டுக் கொண்டே தன் மற்றொரு கையால் அவளின் இமையோரம் பூத்திருந்த கண்ணீர் பூக்களை மென்மையாகத் துடைத்து விட்டு, விரலை அப்படியே இறக்கி அவளின் கன்னத்தில் மயிலிறகால் வருடுபவன் போல வருட ஆரம்பித்தான்.

அதில் அவளின் துயரம் மறைந்து உடலில் மெல்லிய நடுக்கம் ஓடி மறைய, வேகமாகத் தன் கன்னத்தை வருடிக் கொண்டிருந்த அவனின் விரலை பிடித்துத் தடுத்து “என்… என்ன…என்னதிது…?” புரியாத உணர்வில் தத்தளித்துக் கொண்டிருப்பவள் போலக் கேட்டாள்.

“நீ கண்ணீர் சிந்துவது எனக்கு வருத்தமா இருந்தாலும், நீ எனக்காகச் சிந்தும் கண்ணீர் எனக்கு எவ்வளவு சந்தோஷத்தை தருதுனு உனக்குத் தெரியுமா சக்திமா? ‘எனக்காகக் கண்ணீர் சிந்த ஒரு பெண்!’ அப்படினு நினைக்கும் போதே நாடி நரம்பெல்லாம் அப்படியே சிலிர்த்துக்கிட்டு நிக்குது.

அம்மா, தங்கையும் பெண் தானேனு நினைக்காதே. அவங்க அன்பு வேற. எனக்கே எனக்குனு உரிமையுள்ள ஒரு பெண் எனக்காகச் சிந்தும் கண்ணீர் விலைமதிப்பில்லாதது. அதைச் செய்ய நீ இருக்கனு நினைக்கும் போது உன்னைக் கொண்டாடணும் போல இருக்கு. நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும் சக்திமா…” என்றவனின் குரல் கரகரத்தது.

அவனின் பேச்சும், செய்கையும் சத்யாவின் மனதில் ஓரம் ஏதோ உறுத்தியது.

முதல் மனைவியின் இழப்பை தாங்க முடியாமல் அவளின் ஆதரவை தன்னிடம் எதிர்பார்க்கின்றானோ? என்று ஒரு நொடி நினைத்தவள் ‘ப்ச்ச்… இப்படிச் சின்னச் சின்ன விஷயத்திற்கும் ஒப்பிட்டுக் கொண்டிருந்தால் வாழ்க்கையே ரணமாகத்தான் நகரும்’ என்று தோன்ற கடிவாளம் இல்லாத குதிரையாக ஓடிய மனதை இழுத்து பிடித்து நிறுத்தினாள்.

“ஒரு மாதமா ஏன் என்னைப் பார்க்க வந்தும் பேசாம போனீங்க?” எனப் பேச்சை மாற்றித் தன் மனதையும் மாற்ற முயன்றாள்.

“இதுக்கான பதில் நான் கார்த்திக்கிட்ட சொன்னேன் சக்திமா…”

“கார்த்திக்கிட்டயா? அவகிட்ட என்ன சொன்னீங்க?”

“நிராகரிக்கரிப்பதின் வலியை விட நிராகரிக்கப்படுதலின் வலி அதிகம்னு சொன்னேன்…” என்றவன் கார்த்திகாவும், அவனும் பேசியதை எல்லாம் சொன்னான்.

அவன் சொல்லும் போதே தான் பேசாமல் தவிர்த்ததால் எவ்வளவு வேதனை அடைந்திருப்பான் என்பது புரிய, “ஸாரி…” என்று மனதார மன்னிப்புக் கேட்டாள்.

“பரவாயில்லை விடு சத்யா… உன் நிலையும் எனக்குப் புரிஞ்சது. நீயும் அந்த ஷாக்ல இருந்து வெளியே வர டைம் கொடுப்போம்னு தான் தள்ளி நின்னேன். உன் மனதில் ஒரு தெளிவு வர இந்த இடைவெளி தேவைன்னு நினைச்சேன்…”

அவன் சொன்னது சரிதான். அவன் விலகி நிற்க, நிற்கத்தான் ‘ஏன் என்னை விட்டு விலகுகின்றான்?’ என்று தவிப்பாக இருந்தது.

அவன் பேசாமல் தவிர்க்க எப்போது பேசுவான் என்று மனது ஏங்கியது. தள்ளி நிற்காமல் அவன் திரும்பவும் பேச முயற்சி செய்திருந்தால் தன்னுடைய வீம்பான கோபத்தை இன்னும் இழுத்து பிடித்து வைத்திருப்போம் என்று புரிந்தது.

அவன் பேசாமல் இருந்ததே நல்லது என்று நினைத்துக் கொண்டாள் சத்யா.

“அது சரி… அது என்ன கார்த்திக்கிட்ட சொன்னேன்னு சொல்றீங்க? அவ சின்னப் பொண்ணு. அவகிட்ட போய் இப்படி எல்லாம் பேசினீங்களா?” என்று கேட்டாள்.

“அவ வயதில் வேணும்னா சின்னப் பொண்ணா இருக்கலாம் சத்யா. ஆனா உன் மீது அவள் வைத்திருக்கும் அன்பிற்கும், காட்டும் அக்கறைக்கும் முன்னால் அவளோட வயசு ஒரு பொருட்டே இல்லை. அக்காவுக்கு அம்மா மாதிரி அக்கறை காட்டும் ஒரு தங்கை உனக்குக் கிடைத்திருக்கிறாள்.

“அவளோட அந்தப் பாசத்துக்கு முன்னாடி என் மனது எப்படிப் பட்டதுனு சொன்னது எனக்குத் தப்பா தெரியலை. நீ நைட் எல்லாம் அவ தூக்கிட்டாள்னு நினைச்சு அழுதியாம். அதைத் தாங்க முடியாமல் என்னைத் திட்ட தான் அவள் வந்தாள். அதோட உன் வாழ்க்கையைக் குறித்த தவிப்பும் எனக்குப் புரிஞ்சது. அதான் மனசு விட்டு அவகிட்ட சொன்னேன். அப்படிச் சொன்னதால் தான் உன்னைச் சமாதானம் செய்ய இங்க கூட்டிட்டு வந்தாள்…” என்று சொன்னவனின் குரலில் கார்த்திகாவை குறித்த நெகிழ்வு தெரிந்தது.

தங்கையின் அக்கறை கலந்த பாசத்தில் சத்யாவின் மனது பெருமையுடன் பூரிப்படைந்தது.

மேலும் சிறிது நேரம் பேசி மனதை ஓரளவு தெளிவுபடுத்திக் கொண்ட இருவரும் பெரியவர்களிடம் பேசிவிடும் முடிவுடன் எழுந்து சென்றனர்.