22 – இன்னுயிராய் ஜனித்தாய்
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 22
ஊருக்குக் கிளம்பியிருந்தார் செவ்வந்தி.
கிளம்பும் முன் ஊருக்கு வரச் சொல்லி துர்காவிடமும் சொல்லிவிட்டே சென்றிருந்தார்.
நித்திலனுக்குச் செல்ல விருப்பமே இல்லை. ஆனாலும் அன்னைக்காகச் சரி சொல்லியிருந்தான். அதனால் அந்த வார இறுதியில் செல்வதாக இருந்தனர்.
“இன்னைக்கு எங்கையாவது வெளியே போவோமா?” என்று காலை உணவின் போது துர்காவிடமும், மாமனாரிடமும் கேட்டான்.
“நீங்க துர்கா, குழந்தையோட போயிட்டு வாங்க மாப்பிள்ளை. நான் வீட்டில் இருக்கேன்…” என்றார்.
“வீட்டில் தனியா என்ன செய்யப் போறீங்க மாமா? நாம சேர்ந்தே போவோம்…” என்றான்.
“துர்கா, நீங்க ஒன்னும் சொல்லலையே?” என்று கேட்டான்.
சபரிநாதன் அவர்கள் பேச்சில் தலையிடாமல் அமைதியாகி விட்டாலும், ‘இன்னும் துர்காவை நீங்க, வாங்க என்றே மாப்பிள்ளை அழைக்கிறாரே’ என்று அவரின் யோசனை சென்றது.
அவர்களுக்குள் இன்னும் ஒற்றுதல் இல்லை என்று புரிந்தாலும் பன்மையில் அழைப்பது இன்னும் அவர்களின் விலகலை அப்பட்டமாகக் காட்ட அவருக்கு மனதிற்குக் கஷ்டமாக இருந்தது.
ஆனாலும் மகள் இன்னும் இந்த வாழ்க்கைக்குத் தயாராக இல்லாத போது நித்திலனும் தான் என்ன செய்வான் என்பதால் அமைதியாக இருந்தே ஆக வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது.
“எங்கே போக?” என்று கேட்டாள்.
“மால் போகலாமா? அப்படியே ஈவ்னிங் பீச் போய்ட்டு டின்னர் முடிச்சுட்டு வந்திடலாம்…” என்றான்.
அவன் ஆர்வமாகக் கேட்க, துர்காவிற்கு மறுக்கத் தோன்றவில்லை.
“போகலாம்…” என்றாள்.
“கிளம்ப ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க, செய்றேன்…” என்றான்.
“பாப்பாவுக்கு மட்டும் இரண்டு மாத்து ட்ரெஸ், கொஞ்சம் பால் பிளாஸ்க்ல எடுத்துக்கணும். அது எல்லாம் நானே பார்த்துக்கிறேன்…” என்ற துர்கா, காலை சாப்பிட்டு முடித்ததை எல்லாம் ஒதுங்க வைத்து விட்டு அறைக்குள் வந்த போது, குழந்தைக்கானதை எல்லாம் தயாராக எடுத்து வைத்திருந்தான் நித்திலன்.
குழந்தையின் இரண்டு உடைகள், ஒரு துவாலை, வெயிலில் பிடிக்கக் குடை, தண்ணீர் டப்பா என்று அவன் எடுத்து வைத்திருப்பதைப் பார்த்துப் புருவத்தை உயர்த்திப் பார்க்க, “அண்ணி வெளியே கிளம்பும் போது இதை எல்லாம் கொண்டு போவதை பார்த்திருக்கிறேன்…” என்றான்.
“ம்ம், சரியா எடுத்து வச்சுருக்கீங்க. தேங்…” நன்றி சொல்ல வந்தவள், அவனின் முகத்தைப் பார்த்து அப்படியே வார்த்தையை நிறுத்தினாள்.
“நான் போய்ப் பால் டப்பாவும், பிளாஸ்க்கும் எடுத்துட்டு வர்றேன்…” என்று சமையலறைக்குச் சென்றாள்.
அவள் நன்றி சொல்லாமல் நிறுத்தியதில் நித்திலன் முகத்தில் புன்னகை அரும்பியது.
அவளுக்குள் முடங்கி விடாமல் அவனுடன் இயல்பாகப் பேசுவதே அவனுக்குப் பெரும் நிம்மதியாக இருந்தது.
அவன் அவளிடம் நடந்து கொள்ளும் முறை மட்டுமே, அவளை இயல்பாகப் பேச வைத்துக் கொண்டிருப்பதும் உண்மை.
அதை உணர்ந்தே அவனும் ஒருவித விலகலையே வெளிப்படுத்தினான்.
காதல் கொண்ட அவன் நெஞ்சத்திற்கு அது கடினமாகவே இருந்தது. ஆனாலும் அப்படியாவது துர்கா தன்னுடன் இயல்பாகப் பேச வேண்டும் என்று நினைத்தான்.
அவனின் கட்டுபாடுகள் கட்டவிழ்ந்து போகும் நேரமும் வரும் என்று அவனே உணர்ந்து கொள்ளும் நாளும் வெகு அருகில் இருந்தது.
“குட்டிம்மா வேற ட்ரெஸ் போடலாம் வாங்க…” என்று மாமனாரிடமிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டு அறைக்குள் சென்றவன், அவளுக்கு வேறு உடையும் தானே மாற்றி விட்டான்.
“குட்டிம்மா ரெடி ஆகிட்டாங்க. இப்போ அப்பா போய்க் கிளம்பட்டுமா?” என்றவன், அவளைப் படுக்கையில் விட்டு, அலமாரியிருந்து உடையை எடுத்து மாற்ற ஆரம்பித்தான்.
அதற்குள் படுக்கையில் அவளுக்கு எடுத்து வைத்திருந்த பொருட்களை எல்லாம் அதன் பையில் இருந்து எடுத்து வெளியே போட ஆரம்பித்தாள் வருணா.
உடையை மாற்றி விட்டு வந்தவன், “அச்சோ! குட்டிம்மா என்ன செய்து வச்சுருக்கீங்க?” என்று குழந்தையிடம் கேட்க,
அவளோ தன் வாயின் ஓரம் எச்சில் வடிய அவனைப் பார்த்து சிரித்தாள்.
“ஆஹா! என்னோட குட்டிம்மா சிரிப்பு அள்ளுதே…” என்று குழந்தையைத் தூக்கி கொஞ்சினான்.
“என்ன இது? எல்லாத்தையும் எடுத்து வெளியே போட்டு வச்சுட்டாளா?” அறைக்குள் வந்த துர்கா கேட்க,
“ஆமா துர்கா, எடுத்து போட்டுட்டு அவள் சிரிப்பை பாருங்க…” என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.
“அப்படியே முதுகில் ஒரு அடி போடாம கொஞ்சிட்டு இருக்கீங்க?” என்றாள்.
“குட்டிம்மாவை அடிக்கிறதா? நோ… நான் கொஞ்சத்தான் செய்வேன். என்னடா குட்டி?” என்று குழந்தையின் மூக்குடன் மூக்குரசி கொஞ்சினான்.
அவளும் அவன் மூக்குடன் உரசி விட்டு ஒரு கடியும் வைத்தாள்.
அவர்கள் விளையாட்டைப் பார்த்துக் கொண்டே கட்டிலில் சிதறி கிடந்த பொருட்களை மீண்டும் பையில் எடுத்து வைத்தாள் துர்கா.
சிறிது நேரத்திலேயே வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே கிளம்பினர்.
“அப்பா, நீங்க முன்னாடி உட்காருங்க…” காரில் ஏற போகும் போது சொன்னாள்.
“நீ பாப்பா கூட உட்காருமா. எனக்குப் பின்னாடி தான் வசதி…” மருமகனுடன் மகளை இயல்பாக்க தன்னை விலக்கியே நிறுத்திக் கொண்டார் சபரிநாதன்.
குழந்தையுடன் துர்கா முன்னால் அமர, மனைவி, மகளுடன் வெளியே கிளம்பும் அந்தத் தருணத்தை மிகவும் ரசித்தான் நித்திலன்.
முதலில் ஒரு மால் சென்றனர்.
நேரமே கிளம்பி விட்டதால் மாலில் அதிகக் கூட்டமில்லாமல் இருந்தது. முதலில் ஒரு தளத்தைச் சுற்றி வந்தவர்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கு வரவும், குழந்தையை அங்கே விளையாட விடச் சென்றான் நித்திலன்.
“அவளுக்கு அங்கே விளையாட தெரியாது. காசு வேஸ்ட் பண்ணாதீங்க…” என்றாள் துர்கா.
“கொஞ்ச நேரம் விட்டுப் பார்ப்போம் துர்கா. விளையாடலைனா தூக்கிட்டு வந்துடுறேன்…” என்றான்.
“காசு தான் வேஸ்ட்…” என்றாள்.
“நம்ம குட்டிம்மாவுக்குச் செலவழிக்காம வேற யாருக்குச் செலவழிக்கப் போறேன் துர்கா?” என்றவன் குழந்தையை விளையாட விட அழைத்துச் சென்றான்.
விளையாட்டு அரங்கிற்கு வெளியே இருந்த இருக்கையில் தந்தையும், மகளும் அமர்ந்து விட்டனர்.
“அவர் ஏன்பா இவ்வளவு செலவழிக்கிறார்? எனக்கு ரொம்பக் கில்டியா பீல் ஆகுது…” என்றாள் தந்தையிடம்.
“அவளுக்குச் செய்ய ஆசைப்படுறார்மா. செய்யட்டுமே… அவர் ஆசையை ஏன் தடுக்கணும்?” என்று கேட்டார் சபரிநாதன்.
“ஆனா நான் இப்படி அவர் இவ்வளவு வசதின்னு எதிர்பார்க்கலைபா…” என்றாள். தெரிந்திருந்தால் கல்யாணத்திற்கு யோசித்திருப்பேன் என்ற பாவனை அவளிடம்.
“வசதியைப் பார்க்காதேமா துர்கா. அவர் மனசை பார். இவ்வளவு வசதி இருந்தும் ஏன் அப்படிச் சாதாரண வீட்டில் இருந்தார்னு யோசி. அவர் வாழ்க்கையில் எந்த மாதிரியான விரக்தியான நிலைக்குப் போயிருந்தால் கையில் காசு இருந்தும் அவ்வளவு சாதாரண வாழ்க்கை வாழ்ந்திருப்பார்?” என்று தந்தை கேட்க,
துர்காவின் முகம் யோசனைக்குப் போனது.
அவன் உடல் குறை மட்டுமே அவனை வாழ்க்கையின் விளிம்பு நிலைக்குத் தள்ளியதா என்ன? என்று யோசித்தாள்.
அவளுக்குத் தேவையான பதில் எதுவும் அவள் சிந்தனைக்குக் கிடைக்கவில்லை.
அவன் பட்ட துன்பங்களை எல்லாம் நேரடியாகவே காண்போம் என்பதையும் அவள் அறிந்திருக்கவில்லை.
வருணாவை சின்னச் சின்ன விளையாட்டுகளில் விளையாட விட்டு அரைமணி நேரம் கடந்து வெளியே அழைத்து வந்தான்.
அவன் வந்த போது துர்கா மட்டும் இருக்கையில் அமர்ந்திருந்தாள். அவள் அருகில் வந்து சுவாதீனமாக அமர்ந்தவன், “மாமாவை காணோம்?” என்று கேட்டான்.
தன்னிடம் தாவிய மகளை வாங்கிக் கொண்டே அவனை விட்டு மெல்ல நகர்ந்து அமர்ந்தவள், “பாத்ரூம் போயிருக்கார்…” என்றாள்.
அவள் நகர்ந்ததைக் கவனிக்கவே செய்தான். ஆனால் கண்டுகொண்டது போல் காட்டிக் கொள்ளவில்லை.
மகளுக்கு இரண்டு பிஸ்கட்டை பாலில் நனைத்து ஊட்டி விட ஆரம்பித்தாள். விளையாடியதில் பசித்து விட, அன்னை ஊட்டியதை சாப்பிட்டு விட்டு அப்படியே கண்ணயர்ந்தாள் வருணா.
மதியம் ஆகியிருந்ததால் சாப்பிட சென்றனர்.
சாப்பாட்டை முடித்து விட்டு, அங்கிருந்த ஆடையகத்தில் அனைவருக்கும் உடைகள் எடுக்க நினைத்தான் நித்திலன்.
முதலில் குழந்தைக்கு எடுத்தான். அடுத்து துர்காவை அவளுக்கு எடுக்கச் சொல்ல, அவள் மறுத்தாள்.
“எடுத்துக்கோங்க துர்கா. முதல் தடவை நாம வெளியே வந்திருக்கோம். எதுவும் வாங்காமல் எப்படி இருக்க முடியும்?” என்றான்.
“கல்யாணத்துக்கு இப்போதானே சேலை எல்லாம் எடுத்தோம். அதே போதும்” என்றாள்.
“அது கல்யாணத்துக்கு. இப்போ வீட்டில் போடுவது போல் ஏதாவது வாங்கலாமே? சுடிதார் வாங்கிக்கோங்க. உங்ககிட்ட சேலை மட்டும் தானே இருக்கு…” என்றான்
அவள் சுடிதார் போட்டே பல மாதங்கள் ஆகிவிட்டன.
நர்சரி பள்ளிக்கு வேலைக்குப் போனதால் சேலை தான் அவள் உடையாகியிருந்தது. அதன் பிறகு சுடிதார் எல்லாம் எடுப்பதையே விட்டுவிட்டாள்.
பணமும் தட்டுப்பாடாக இருந்ததால் துணி எடுக்க வேண்டும் என்ற நிலையில் சேலை மட்டுமே எடுத்துக் கொள்வாள்.
இரவு உடையாக நைட்டி போடுவதும் இல்லை.
அவளைக் கவனித்திருந்தவன் அதையெல்லாம் அவளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தான்.
“நான் சுடிதார் எல்லாம் இப்போ போடுவது இல்லை…” என்றாள்.
“இனி போடுங்க துர்கா…” என்றவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் சுடிதார்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டான்.
வருணா தூங்கி கொண்டிருந்ததால் அவளை மடியில் வைத்துக் கொண்டு சபரிநாதன் வெளியே அமர்ந்திருந்தார்.
துர்கா வேண்டாம் என்று தடுத்தும் அவன் கேட்கவில்லை.
“அடுத்த வாரம் ஊருக்குப் போகும் போது டிராவலில் போட வசதியா இருக்கும் துர்கா…” என்றவன் ஒரு சுடியை எடுத்து “இது ஓகேவா பாருங்க…” என்றான்.
“வேண்டாமே…” என்று அவள் தயங்க, அவனின் முகம் சுருங்கியது.
ஒன்றும் சொல்லாமல் அந்த உடையை எடுத்த இடத்தில் வைத்து விட்டவன், குழந்தையின் உடையை மட்டும் பில் போட சென்றான்.
அவனின் முகவாட்டம் துர்காவிற்கு வருத்தத்தைத் தந்தது தான். ஆனாலும் அவனைச் சமாதானப்படுத்த முயலவில்லை.
நண்பர்களாக இருப்போம் என்று சொல்லிவிட்டு இப்போது அவன் தந்த வசதியை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.
இதில் இன்னும் அவனிடம் வாங்க அவளுக்கு விருப்பமிருக்கவில்லை.
கணவன், மனைவி பந்தத்திற்குள் நுழைந்த பிறகு வெறும் தோழமையுடன் மட்டும் இருக்க முடியாது என்று அவளுக்குப் புரியவே இல்லை.
இருவரும் வெளியே வந்த போது வருணா முழித்திருக்க, அவளுக்கு அங்கேயே உணவு வாங்கி உண்ண வைத்து விட்டு, சிறிது நேரம் விளையாட விட மாலை ஆகிவிட்டது.
“வீட்டுக்குப் போகலாமா? இன்னொரு நாள் பீச் போகலாம்…” என்றாள் துர்கா.
அவள் உடை வாங்கிக் கொள்ளாதிலேயே தன் இயல்பை தொலைத்திருந்த நித்திலன், “ஏன்?” என்று ஒற்றை வார்த்தையாகக் கேட்டான்.
“பாப்பா இன்னைக்கு நிறைய விளையாடிட்டாள். இன்னும் ரொம்ப வெளியே சுத்தினால், நைட் தூங்காமல் அழுதுட்டே இருப்பாள்…” என்றாள்.
“ஓ!” என்றவன் வேறு பேசாமல் வீட்டின் பக்கம் வண்டியைத் திருப்பினான்.
ஆனாலும் தன்னுடன் நீண்ட நேரம் வெளியே சுற்ற விருப்பம் இல்லாமல் சொல்கிறாளோ என்று அவனுக்குள் ஒரு கேள்வி எழுந்தது.
அவன் கேள்வியை உண்மையாக்குவது போல் வீட்டிற்குச் சென்ற பிறகு வருணா இன்னும் விளையாடினாள்.
வீட்டிலும் விளையாடத்தானே செய்கிறாள். இதுவே கடற்கரைக்குச் சென்றிருந்தால் குழந்தை இன்னும் சந்தோஷப்பட்டிருப்பாளே என்று நினைத்தான்.
அன்று இரவு தூங்க போவதற்கு முன் சுடுதண்ணீர் வைத்து குழந்தையின் உடலை கழுவி விட்டு, படுக்க வைத்தாள் துர்கா.
படுத்ததுமே தூங்கியும் விட்டிருந்தாள் குழந்தை.
கடற்கரை சென்று விட்டு வந்ததும் இதையே செய்திருக்கலாமே? ஏன் துர்கா வேண்டாம் என்று சொன்னாள்? என்று அவனின் மனம் மீண்டும் அந்தக் கேள்வியிலேயே வந்து நின்றது.
அந்தக் கேள்வி அவனைத் துரத்த, அவனின் முகத்தில் சிறு சுணக்கம் இருந்து கொண்டே இருந்தது.
அதைத் துர்காவும் கவனிக்கவே செய்தாள். நான் உடையை மறுத்ததால் அப்படி இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டாள்.
அதற்குச் சமாதானம் செய்தால் மீண்டும் உடை வாங்கிக் கொடுக்க முயலுவான் என்பதால் அவளும் அமைதியாக இருந்து விட்டிருந்தாள்.
ஆளுக்கு ஒன்றை நினைத்துக் கொண்டே படுக்கையில் விழுந்தனர்.
அன்று இரவு துர்கா சொன்னது போல் தூக்கத்தில் சிணுங்க ஆரம்பித்தாள் வருணா.
முதலில் சிணுங்கலாக ஆரம்பித்த அழுகை நேரம் செல்ல செல்ல பெரும் அழுகையாக ஆரம்பித்திருந்தது.
துர்கா எழும் போதே நித்திலனும் எழுந்து விட்டான்.
கண்ணைத் திறக்காமல் அழுத மகளைத் துர்கா சமாதானம் செய்ய, அதை எல்லாம் காதில் வாங்காமல் அழுது கொண்டிருந்தாள் வருணா.
“எறும்பு கடிச்சிருக்கப் போகுது, ட்ரெஸை ரிமூவ் பண்ணிட்டு செக் பண்ணுங்க…” என்றான்.
உடையைக் கழற்றிச் சோதித்துப் பார்க்க, எறும்பு எதுவும் இல்லையென்றாலும் வேறு உடையை மாற்றி விட்டாள். அப்போதும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை.
“என்ன இப்படி அழறாள்?” என்று கவலையாகக் கேட்டான்.
“அதான் சொன்னேனே இன்னைக்கு ஓவர் ஆட்டம் அழுவாள்னு. இவள் இன்னைக்கு ஆடிய ஆட்டத்துக்கு உடம்பு வலிக்கும்னு தான் ஈவினிங் சீக்கிரம் வீட்டுக்குப் போவோம்னு சொன்னேன்.
வீட்டுக்கு வந்தால் கொஞ்ச நேரம் தூங்குவாள்னு பார்த்தேன். ஆனா வீட்டுக்கு வந்தும் ஒரே ஆட்டம். ஈவினிங் தூங்கியிருந்தால் இப்படி அழ மாட்டாள். ஆனா இந்தக் குட்டி எங்கே தூங்குச்சு?” என்று அலுத்துக் கொண்டவள், குழந்தையைத் தோளில் போட்டு தட்டிக் கொடுத்து கட்டிலை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.
அப்போது தான் அவன் கேள்விக்குப் பதில் கிடைக்க, துர்கா குழந்தைக்காகத் தான் சொன்னாள் என்ற உண்மை புரிய, அவளைத் தவறாக நினைத்ததற்குத் தன்னையே நிந்தித்துக் கொண்டான் நித்திலன்.
இனி குழந்தை விஷயத்தில் துர்கா என்ன சொன்னாலும் நம்ப வேண்டும். தானாக ஒன்றை நினைத்து வேதனைப்படக் கூடாது என்ற முடிவுக்கும் வந்தான்.
இரவில் குழந்தை அவனிடம் வரமாட்டாள் என்பதால் அவளைத் தோளில் போட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டே துர்கா நடப்பதை பார்த்த வண்ணம் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
“நீங்க ஏன் முழிச்சிருக்கீங்க? தூங்குங்க, நான் பார்த்துக்கிறேன்…” என்று துர்கா சொல்ல,
“இல்லை, குட்டிம்மா தூங்கட்டும்…” என்றான்.
அரைமணி நேரம் நடந்து கொடுத்த பிறகு தான் குழந்தை தூங்க ஆரம்பித்தாள்.
“வெளியில் போயிட்டு வந்தாலே இப்படித்தான் அழுவாளா?” என்று குழந்தையைத் தொட்டிலில் படுக்க வைத்ததும் கவலையாகக் கேட்டான் நித்திலன்.
“ஆமா, ரொம்ப நேரம் அவளுக்கு ரெஸ்ட் இல்லைனா நைட் இப்படித்தான் அழுவாள்…” என்றதும்,
“அப்போ இனி நாம வெளியே போக வேண்டாம்…” என்றான் வேகமாக.
அவனின் வேகத்தில் அவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
அவனின் தீவிரமான முகபாவம் அவளின் சிரிப்பை மட்டுப்படுத்தியது.
“வெளியே போனால் மட்டுமில்லை. வீட்டிலேயே ரொம்ப நேரம் ரெஸ்ட் எடுக்காமல் விளையாடினாலும் இப்படித்தான் இருப்பாள். குழந்தைங்கனா அப்படித்தான் இருப்பாங்க. எதற்கெடுத்தாலும் இப்படிக் கவலைப்படாதீங்க…” என்றவள் அமைதியாகப் படுத்துவிட்டாள்.
ஆனாலும் சிறு விஷயத்திற்குக் கூட அவன் இவ்வளவு கவலைப்படுவது குழந்தை மேல் அவன் வைத்திருக்கும் பாசத்தை எடுத்துரைக்க, அவளின் மனம் நெகிழச் செய்தது.
என்ன தான் துர்கா எடுத்துச் சொன்னாலும் கூட, குழந்தை மீண்டும் அழுவாளோ என்று நினைத்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் நித்திலன்.
லேசாகக் கண்ணசந்திருந்த துர்கா, அவனின் பக்கமாகத் தூக்கத்திலேயே புரண்டு படுத்தாள். அப்போது மகள் என்ன செய்கிறாள் என்று லேசாக விழிகளைத் திறந்து பார்க்க, படுக்கையில் வருணாவை காணவில்லை.
உடனே பட்டென்று விழித்து எழுந்தமர்ந்து தேட, நித்திலன் குழந்தையை மடியில் படுக்க வைத்தப்படி கட்டிலில் சாய்ந்தமர்ந்திருந்தான்.
அவன் விழிகள் மூடியிருக்க, ஒரு கை குழந்தை மடியிலிருந்து விழுந்து விடாத வண்ணம் அணைவாகப் பிடித்திருக்க, இன்னொரு கையோ குழந்தையைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது.
“என்னாச்சு? திரும்ப அழுதாளா?” என்று கேட்க, மூடியிருந்த இமைகளைப் பிரித்து மனைவியைப் பார்த்தான்.
“லேசா சிணுங்கினாள். ரொம்ப அழ விட வேண்டாம்னு தூக்கி மடியில் வச்சேன். உடனே தூங்கிட்டாள்…” என்றான் மெதுவான குரலில்.
“தூங்கிட்டாள் தானே? அப்போ திரும்பப் பெட்ல படுக்க வச்சுருங்க…” என்றாள்.
“இல்லை துர்கா, என் மடியிலேயே இருக்கட்டும். இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துட்டு அப்புறம் படுக்க வைக்கிறேன். பாவம் குட்டிம்மா, சரியா தூங்காமல் அவளுக்குக் கஷ்டமா இருக்கும்…” என்றான்.
அவன் மடியில் இருக்கும் வருணா குழந்தையா? இல்லை இவன் குழந்தையா? என்ற சந்தேகம் தான் துர்காவிற்கு வந்தது.
சிறு குழந்தை போல் சிறுசிறு விஷயங்களுக்கும் சுணங்குகின்றானே என்று நினைத்தாள்.
“அழுதால் தூக்கிக்கலாம். இப்ப படுக்க வைங்க. மடியிலேயே வச்சுருந்தாலும் அவளுக்கு உடம்பு வலிக்கும்…” என்றாள்.
“வலிக்குமா?” என்று பரிதாபமாகக் கேட்டவனுக்குக் குழந்தையைக் கீழே படுக்க வைக்கவே மனதில்லை.
‘ஆமாம்’ என்று துர்கா தலையை அசைக்க, வேறு வழியில்லாமல் குழந்தையைப் படுக்கையில் படுக்க வைத்து விட்டு, அவளை ஒட்டிப் படுத்து தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான்.
வருணாவின் தந்தை இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பானோ தெரியாது. ஆனால் வருணாவிற்குக் கிடைக்கும் தந்தையின் பாசம் எப்படி இருக்கும் என்று கண்கூடாகக் கண்டாள் துர்கா.
அவளின் கண்கள் பனிந்து போனது.
தான் நித்திலனை திருமணம் செய்தது சரியே என்று அந்தக் கணம் அவளுக்குத் தோன்றியது.
கணவனாக அல்ல! தன் மகளுக்குத் தந்தையாக நித்திலனை முழுமையாக ஏற்றுக் கொண்டாள் துர்கா.