21 – இதயத்திரை விலகிடாதோ?

அத்தியாயம் – 21

2020 ஆம் ஆண்டு, மார்ச் மாதம்!

லாக்டவுன்!

முதலில் ஒரு நாள் லாக்டவுன் போடப்பட்டு, அன்று மாலையே கொரானா நோய் போய் விட்டதாக மக்கள் கொண்டாட ஆரம்பிக்க, ஒரு பக்கம் மருத்துவர்கள், கொரானா நோய் பற்றி ஓரளவு விவரம் தெரிந்தவர்கள் ‘அது தவறு, இப்படிக் கூட்டம் கூடினால் இன்னும் நோய் அதிகரிக்கும்!’ என்று சோசியல் மீடியாவில் கதறிக் கொண்டிருந்தனர்.

ஆனால் கொரானா நோய் பற்றி விவரம் புரியாத பாமர மக்கள் எண்ணில் அடங்காமல் இருந்ததால் கூட்டம் கூடுவதைத் தயங்காமல் செய்தனர்.

அதோடு நம் நாட்டு வெயிலுக்குக் கொரானா தாக்குப் பிடிக்காது என்றும், அது நோய் அல்ல, யாரோ பரப்பி விட்ட புரளி. அந்த நோய் யாரையும் ஒன்றும் செய்யாது என்றும் பல மக்கள் மூடத்தனமாக நம்பிக் கொண்டிருந்ததால் தங்கள் பாதுகாப்பை பற்றி விழிப்புணர்வே இல்லாமல் இருந்தனர்.

இந்த நிலையில் ஒரு நாள் லாக்டவுனில் எல்லாம் பலன் இருக்காது. நாட்டு மக்களுக்கு நோய் அதிகமாகப் பரவாமல் இருக்க, சமூக இடைவெளி தான் முதலில் வேண்டும் என்ற எண்ணத்தில் அரசாங்கம் மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு முழு லாக்டவுன் அறிவித்தது.

லாக்டவுன் அறிவிக்கப்பட்டதும் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊரில் தங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் உடனே சொந்த ஊரைத் தேடி ஓடினர்.

பேருந்து, ரயில், வாகனங்களில் மக்கள் அலை மோதி ஊருக்கு ஓடிக் கொண்டிருக்க, சூர்யாவையும், யுவஸ்ரீயையும் மதுரைக்கு அழைத்தார் சித்ரா.

“வீட்டை விட்டு வெளியே போகக் கூடாதுன்னு சொல்றாங்க. அங்கே இருப்பதற்கு இங்கே வந்துவிடலாமே யுவா?” மருமகளிடம் கேட்டார் சித்ரா.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை அத்தை. நீங்க அவர்கிட்ட கேளுங்க…” என்றாள் யுவஸ்ரீ.

“நீ போனை கண்ணாகிட்ட கொடு. நான் பேசுறேன்…” என்றார்.

“அத்தை பேசணுமாம்…” என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொல்லி, கைபேசியை அவனிடம் நீட்டினாள்.

கைபேசியை வாங்கியவன், “சொல்லுங்கமா…” என்று பேச ஆரம்பித்தான்.

“இரண்டு பேரும் இங்கே வந்துருங்களேன் கண்ணா. நாட்டில் நடப்பதை பார்த்தால் பயமா இருக்கு. நீங்க அங்கேயும், நாங்க இங்கேயும் ஏன் இருக்கணும்? நீங்க இரண்டு பேரும் இங்கே வந்துட்டால் எங்களுக்கு நிம்மதியா இருக்கும்…” என்றார்.

“அம்மா, இந்த நேரத்தில் இப்படி ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் போறது தான் தப்புன்னு சொல்றாங்கமா. நாம இருக்கிற இடத்திலேயே இருக்குறது தான் நல்லதுன்னு நிறையப் பேர் சொல்றாங்க. நாங்க இங்கே பாதுகாப்பா இருப்போம். நீங்களும், அப்பாவும் வெளியே எங்கேயும் போகாமல் வீட்டில் இருங்க. நிலைமை கொஞ்சம் சரியானதும் வர்றோம்…” என்றான் சூர்யா.

“என்ன கண்ணா, இப்படிச் சொல்ற?” மனத்தாங்கலாகக் கேட்டார்.

“நம்ம சேஃப்டிக்குத் தான் மா சொல்றேன். நாங்க வரும் வழியில் யாருக்காவது நோய் இருந்து, அது எங்களுக்கு வந்து, அப்புறம் உங்களுக்கும் வந்தால் என்ன செய்ய முடியும்? அந்த ரிஸ்க் எதுக்கு எடுக்கணும்மா? இருக்கும் இடத்திலேயே பத்திரமா இருப்போமே?” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு பயந்தவர், மகனும், மருமகளும் பத்திரமாக இருக்கட்டும் என்று நினைத்து ‘சரி’ என்றிருந்தார்.

யுவஸ்ரீக்கும் அது தான் சரியாகப்பட்டது.

அதோடு தானும், கணவனும் இப்படி ஆளுக்கு ஒரு மூலையில் இருப்பது பெரியவர்களுக்குத் தெரிய வேண்டாம் என்று நினைத்தாள்.

அங்கே சென்றால் இப்படித் தனித்தனியாகவும் இருக்க முடியாது.

பெரியவர்கள் வரை விஷயத்தைக் கொண்டு போக வேண்டாம் என்றால், அதற்கு இங்கேயே இருப்பது தான் சரி என்று அவளுக்குத் தோன்றியது.

ஆனாலும் அன்னை தனியாக இருப்பாரே என்று கவலை கொண்டவள், அவருக்கு அழைத்துப் பேசினாள்.

“மாமா என்னை அவன் வீட்டுக்கு வர சொல்லிட்டான் யுவா. அம்மா அங்கே போய் இருக்கப் போறேன். என்னைப் பத்தி நீ கவலைப்படாதே!” என்றார் பரிமளா.

“சரிம்மா. கிராமத்தில் இருக்கோம்னு அசால்டா இருக்காதீங்க. கவனமா இருங்க…” என்றாள் யுவஸ்ரீ.

அன்னை தனியாக இருக்க மாட்டார் என்பதில் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

“நான் கவனமா இருக்கேன். நீயும், மாப்பிள்ளையும் மதுரைக்குப் போறீங்களா?” என்று கேட்டவரிடம் தாங்கள் இங்கேயே இருக்கும் விவரத்தை தெரிவித்தாள்.

“சரி, பார்த்து இருங்க. வெளியே போகாதே! சாமான் எல்லாம் கொஞ்சம் வாங்கி வச்சுக்கோங்க…” என்றார்.

“வாங்கி வச்சுருக்கோம்மா. அப்படியும் பத்தலைனா ஆன்லைனில் வாங்கலாம்னு சொல்றாங்க. அப்படி வாங்கிக்கிறேன். உங்களுக்குச் செலவுக்குப் பணம் இருக்கா? நான் அனுப்பட்டுமா?”

“இல்லை யுவா, அம்மாகிட்ட இருக்கு. கொஞ்சம் பணம் எடுத்துட்டு தான் மாமா வீட்டுக்குப் போறேன். சும்மா உட்கார்ந்து அங்கே சாப்பிட முடியாதே? அந்தப் பணத்தை வச்சு நான் பார்த்துக்கிறேன்…” என்றார்.

இரு வீட்டுப் பெரியவர்கள் பத்திரத்தையும் கேட்டு தெரிந்து கொண்டு, தங்கள் லாக்டவுன் நாட்களைச் சூர்யாவும், யுவஸ்ரீயும் ஆரம்பித்தனர்.

அன்று வேலை நாள் என்பதால் காலை உணவை முடித்துக் கொண்டு, தான் இப்போது தங்கியிருந்த அறைக்குச் சென்று கணினியை எடுத்து அலுவலக வேலையை ஆரம்பித்தாள் யுவஸ்ரீ.

சூர்யா வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

இருவருமே அப்போது மீட்டிங்கில் இருந்தனர். ஒரே மீட்டிங் தான். ஆனால் அங்கே அதிகம் பேசியது சூர்யா தான்.

டீம் லீடர் என்ற முறையில் அன்று செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி அவனது டீமிடம் கலந்துரையாடிக் கொண்டிருந்தான்.

டீம் லீடரான கணவன் சொல்வதை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள் யுவஸ்ரீ.

அவளுடன் சூர்யா நேரடியாகப் பேசி சில நாட்கள் ஆகியிருந்தன.

அவள் விலகி விலகி செல்ல, அவனும் ஏனோ ஒரு யோசனையுடன் விலகித்தான் இருந்தான்.

என்ன யோசிக்கிறான்? அன்று மாலை அவன் விரைவாக வீடு வந்த அன்று என்ன நடந்தது? என்று அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை.

ஆனால் நண்பர்களுடன் முன் போல் அவன் கலகலப்பாகப் பேசுவதில்லை என்று மட்டும் அவளுக்குப் புரிந்தது.

ஏன்? என்று தோன்றினாலும் அவனிடம் கேட்டு தெரிந்து கொள்ள முயலவில்லை அவள்.

அதோடு அவள் அன்று சண்டை போட்டதால் அப்படி இருக்கிறான் என்றும் அவளால் நினைக்க முடியவில்லை.

வேறு என்னமோ நடந்திருக்கிறது, அது என்ன என்று தான் தெரியவில்லை.

“யுவஸ்ரீ, ஆர் யூ எபிள் டு ஹியர் மீ?” என்று சூர்யாவின் குரல் காதில் மாட்டியிருந்த இயர் போன் வழியாக உயர்ந்து ஒலிக்க, அப்போது தான் மீட்டிங்கில் சூர்யா தன்னிடம் ஏதோ கேட்பதை உணர்ந்து ஏதேதோ நினைவுகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவள் நடப்பிற்கு வந்தாள்.

“எஸ் சூர்யா…” என்று தடுமாறி பதில் சொன்னாள்.

அவள் தடுமாற்றத்தை உணர்ந்து சோஃபாவில் இருந்தவன், மனைவி இருந்த அறையை யோசனையுடன் திரும்பிப் பார்த்து விட்டு, மீட்டிங்கில் கவனத்தை வைத்து, அவளிடம் வேலையைப் பற்றி விசாரித்தான்.

“இன்னைக்கு நீங்க இரண்டு டெஸ்ட் கேஸ் பண்ணனும். அதை இன்னைக்குள் முடித்துக் கொடுங்க…” என்று அவளுக்கான வேலையைச் சொன்னான்.

“ஓகே சூர்யா…” என்றாள்.

அடுத்து மற்றவர்களிடம் சூர்யா பேச ஆரம்பிக்க, அதையும் கவனித்தாள்.

அவர்களுக்கான வேலையைச் சொல்லிவிட்டு மீட்டிங்கை முடித்து வைத்த சூர்யா தன் வேலையைப் பார்க்க ஆரம்பிக்க, அறைக்குள் அவள் வேலையைத் தொடர்ந்தாள்.

மதியம் வரை வீடே அமைதியாக இருக்க, இருவரும் வேலையில் மூழ்கி போயினர்.

காலையிலேயே மதிய உணவையும் தயார் செய்து வைத்து விட்டு தான் வேலையை ஆரம்பித்திருந்தாள் யுவஸ்ரீ.

அதனால் மதியம் இரண்டு மணி அளவில் எழுந்து வந்து உணவை எடுத்து வைத்தவள், கணவன் வருகிறானா? என்பது போல் பார்த்தாள்.

சூர்யா தலையைக் கூட உயர்த்தாமல் கணினிக்குள் மூழ்கிப் போயிருந்தான்.

“நான் சாப்பிட போறேன்…” அறிவிப்பு போல் குரல் கொடுத்தாள்.

அவள் குரலில் நிமிர்ந்து பார்த்தவன், “ஒரு மெயில் அனுப்பிட்டு இருக்கேன். முடிச்சுட்டு வர்றேன்…” என்றான் பதிலாக.

ஒட்டாத தன்மை இருவரின் பேச்சிலுமே!

மனைவிக்குக் கணவன் தன்னை அடித்த கோபம்.

கணவனுக்குக் கோபம் இருந்த இடத்தில் இப்போது வேறு ஏதோ இருந்தது.

அதனால் இருவராலும் சகஜமாகப் பேச முடியவில்லை.

அவன் வருவதற்குள் இருவருக்குமே தட்டில் உணவை போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.

சூர்யாவும் மின்னஞ்சலை அனுப்பி விட்டு, கையைக் கழுவி விட்டு சாப்பிட அமர்ந்தான்.

எப்போதும் கைபேசியை நோண்டி கொண்டோ, நண்பர்களுடன் ஷாட்டில் உரையாடிக் கொண்டோ சாப்பிடும் சூர்யா, இப்போது ஏதோ சிந்தனையுடன் சாப்பிட்டு எழுந்து சென்றான்.

அவளும் சாப்பிட்டுவிட்டு வேலையைப் பார்க்கச் சென்றாள்.

அவள் தனியாக உள்ளே சென்று அமர்ந்து வேலை பார்ப்பதையோ, அந்த அறையில் அடைந்து கொள்வதையோ சூர்யா பெரிதாக வருத்தப்பட்டது போல் தெரியவில்லை.

மாலை ஒரு முறை தனக்குக் காஃபி போட்டுக் கொண்டாள். சூர்யா குளிர்சாதன பெட்டியிலிருந்து பழச்சாற்றை எடுத்து அருந்தினான்.

இரவு ஏழு மணிக்கு எழுந்து சமையல் வேலை பார்க்க நினைத்த யுவஸ்ரீக்கு நினைத்தது போல் எழுந்து வேலையைப் பார்க்க முடியவில்லை.

சூர்யா அவளுக்கான வேலையாக இரண்டு டெஸ்ட் கேஸ் செய்து முடிக்கச் சொல்லியிருக்க, காலையில் இருந்து வேலை பார்த்தும் அவளால் ஒரு டெஸ்ட் கேஸ் மட்டுமே செய்ய முடிந்தது.

இன்னொன்றில் மீண்டும் மீண்டும் எரர் வந்து கொண்டிருக்க, அதைச் சரி செய்யப் போராடிக் கொண்டிருந்தாள்.

அதை முடிக்காமல் எழுந்து செல்ல அவளால் முடியவில்லை.

இன்று இதை முடிக்கவில்லை என்றால் அவள் தான் பதில் சொல்ல வேண்டும்.

அதுவும் சூர்யாவிடம் தான் பதில் சொல்ல வேண்டியது வரும். அவனிடம் என்னால் முடியவில்லை என்று சொல்ல அவளால் முடியாது.

அதனால் அடுத்து ஒரு மணி நேரம் போராடினாள்.

எட்டு மணி ஆகிவிட்டிருந்தது.

சூர்யாவிற்குப் பசி எடுத்திருக்க, சாப்பிட என்ன இருக்கிறது என்று சமையலறையைப் போட்டு உருட்டும் சத்தம் கேட்டு, வேகமாக எழுந்து வெளியே வந்தாள்.

“நைட்டுக்கு இனி தான் செய்யணும்…” என்றவள், வேகமாகக் கோதுமை மாவை எடுத்து பிசைய ஆரம்பித்தாள்.

சூர்யாவிற்குச் சமையலில் அ-ன்னா, ஆ-வன்னா கூடத் தெரியாது என்பதால் சில நொடிகள் அவளை நின்று பார்த்தவன், திரும்பச் சோஃபாவில் சென்று அமர்ந்து விட்டான்.

“மாவு இருந்தால் ஈஸியா வேலை முடிஞ்சிருக்கும். நேத்தே ஆட்டாமல் விட்டுட்டேன். இப்ப சப்பாத்தி, அதுக்குத் தொட்டுக்கக் குருமான்னு வேலை இழுக்குது…” என்று தனக்குத் தானே சத்தமாக முனங்கி கொண்டவள் குரல், சூர்யாவின் செவியை எட்டியது.

ஆனால் ஒரு வேலையும் தெரியாமல் அவளுக்கு என்ன உதவி செய்வது என்று புரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

அவளுக்குச் சொன்ன அலுவலக வேலையை அவள் இன்னும் முடித்து அவனுக்கு அனுப்பவில்லை. அது வேறு அவனுக்கு யோசனையைக் கொடுத்திருந்தது.

ஆனாலும் அவனாக அவளிடம் கேட்கவில்லை. இன்று அவள் அனுப்பவில்லை என்றால் நாளை மீட்டிங்கில் அது பற்றிக் கேட்க வேண்டும் என்பதால் அவள் என்ன செய்கிறாள் என்று பார்ப்போம் என்று நினைத்துக் கேட்காமல் விட்டுவிட்டான்.

அடுத்த அரைமணி நேரம் வேக வேகமாகத் தன் வேலையை முடித்துக் கொண்டு சப்பாட்டை எடுத்து மேஜையில் வைத்தவள், “சாப்பிடுங்க, எனக்கு வேலை இருக்கு…” என்று சொல்லிட்டு அறைக்குள் சென்று விட்டாள்.

‘நீ சாப்பிடவில்லையா?’ என்று அவன் கேட்க வாயை திறந்த போது, அவள் அங்கே இருக்கவில்லை.

‘சரி, வேலையை முடித்து விட்டு வந்து சாப்பிடுவாள்’ என்று நினைத்து, தான் சாப்பிட்டு முடித்தான்.

ஆனால் இரவு பத்து மணி ஆனப் பிறகும் அவள் வேலையையும் முடித்து அனுப்பவில்லை. சாப்பிடவும் வரவில்லை.

அவன் தன் வேலையை முடித்துக் கொண்டு, தொலைக்காட்சியில் கொரானா பற்றிய செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மனைவி சாப்பிட வரவில்லை என்றதும் அதற்கு மேல் பொறுக்க முடியாமல், அவள் இருந்த அறையை எட்டிப் பார்த்தான்.

மடிக்கணினியை கட்டிலில் வைத்து, அதன் முன் சம்மணமிட்டு அமர்ந்து, தலையை இரண்டு கைகளிலாலும் தாங்கி பிடித்துக் கொண்டு, கவலையாகக் கணினி திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் யுவஸ்ரீ.

அவள் அமர்ந்திருந்த நிலையைக் கண்டு திடுக்கிட்டவன், “யுவா, என்னாச்சு, ஏன் இப்படி உட்கார்ந்திருக்க?” என்று கேட்டான்.

அவன் குரல் கேட்டதும் விழுக்கென்று தலையை நிமிர்ந்தி பார்த்தாள் யுவஸ்ரீ.

பின் பதில் சொல்லாமல் மீண்டும் கணினி திரையை வெறித்தாள்.

“யுவா… என்னன்னு சொல்ல போறீயா இல்லையா? நீ இன்னும் சாப்பிடவும் இல்லை. முதலில் வந்து சாப்பிடு…” என்றான்.

“நான் அப்புறம் சாப்பிடுறேன்…” கணவனின் முகம் பார்க்காமல் பதில் சொன்னவள், வேலையில் இருந்த குழறுபடியை மட்டும் சொல்ல மறுத்து விட்டாள்.

“அப்புறமா? இப்பவே மணி பத்து ஆச்சு…” என்றான்.

“ம்ப்ச்…” என்று சலித்துக் கொண்டவள், எழுந்து வாசல் அருகில் நின்றிருந்தவனைத் தாண்டி சென்றாள்.

அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க, கையைக் கழுவி விட்டு சாப்பிட அமர்ந்தாள்.

சாப்பிட்டு முடித்துக் கையோடு பாத்திரங்களையும் கழுவி வைத்து விட்டு வந்து மீண்டும் கணினி முன் அமர்ந்து விட்டாள்.

சூர்யாவிற்கு உறக்கம் வந்ததால் வழக்கம் போல அவர்களின் படுக்கையறையில் சென்று படுத்துவிட்டான்.

யுவஸ்ரீ இன்னும் டெஸ்ட் செய்யவில்லை என்ற ஞாபகம் இருந்தது. நாளை மீட்டிங்கில் கேட்போம் என்று நினைத்து தூங்கிவிட்டான்.

நள்ளிரவில் தொண்டை வறண்டு போனது போல் இருக்க, சட்டென்று சூர்யாவிற்கு விழிப்பு வந்தது.

அறையில் தண்ணீர் எடுத்து வைக்கவில்லை என்பதால் எழுந்து வெளியே வந்தவனுக்குப் பக்கத்து அறையிலிருந்து வந்த வெளிச்சம் திகைப்பைத் தந்தது.

‘இன்னுமா இவள் தூங்கவில்லை?’ என்று நினைத்தவன், தண்ணீர் குடிப்பதை மறந்து, அந்த அறைக்குச் செல்ல, இன்னும் கணினி திரையைப் பார்ப்பதும், ஏதோ யோசிப்பதுமாக இருந்தாள்.

அந்த அறையில் இருந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான். மணி ஒன்றாக ஐந்து நிமிடங்கள் இருந்தன.

அந்த நேரத்தில் அவன் அறைக்குள் வந்ததைக் கூட உணராமல் கணினியுடன் போராடிக் கொண்டிருந்தாள்.

“யுவா, இன்னும் தூங்காம என்ன செய்ற?” என்று கணவன் குரல் கேட்டதும் திடுக்கிட்டு பார்த்தாள்.

“வேலை இருக்கு. நீங்க போய்த் தூங்குங்க…” என்றாள்.

“வேலை இருந்தால் நாளைக்குப் பார். இப்ப எடுத்து வச்சுட்டு தூங்கு…”

“நாளைக்கு என்னோட லீடர் கேட்கிற கேள்விக்கு நீங்களா பதில் சொல்வீங்க?” என்று மனைவி கேட்டதும், தூக்க கலக்கம் எல்லாம் ஓடிப் போய், உதடுகளில் சிரிப்பு ஒட்டிக்கொண்டது.

“உன்னோட லீடர் கேட்டால் உன்னோட புருஷன் தான் வேலை பார்க்க விடலைன்னு சொல்லிடு…” என்று நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்களைச் சிமிட்டி சிரித்தான்.

ஆனால் அவனுடன் சேர்ந்து சிரிக்காமல் உர்ரென்று இருந்தாள் யுவஸ்ரீ.

“ரொம்பத்தான் அலட்டிக்காதேடி பொண்டாட்டி. உனக்குப் பதிலா நான் வேணும்னா உன் லீடர்கிட்ட பேசுறேன்…” என்று கிண்டலாகச் சொன்னவன், அவள் அருகில் வந்து மடிக்கணினியை மூடி எடுத்து அங்கிருந்த மேஜையில் வைத்தான்.

“நான் ஏற்கெனவே செம கடுப்பில் இருக்கேன். என் லேப்டாப்பை ஏன் நீங்க மூடுறீங்க? நான் என் வேலையை முடிக்கணும்…” என்று அவள் கத்தியதை காதிலேயே வாங்கவில்லை அவன்.

“தூங்கு…” என்றான் அமைதியாக.

“சூர்யா…” என்று அதட்டினாள் யுவஸ்ரீ.

சில நாட்களுக்குப் பிறகு மனைவி அவ்வாறு அதட்டலாகப் பேசியது சூர்யாவை ஏதோ செய்தது.

கோபம் வராமல் அவளின் பேச்சு மனதிற்கு இதமாக இருப்பதை அவனே உள்ளுக்குள் வியப்பாக உணர்ந்தான்.

முகத்தைத் திருப்பிக் கொண்டு யாரோ போல் பேசிக் கொண்டிருந்த மனைவியின் இந்த அதட்டலை ரசிக்கவே செய்தான்.

“தூங்கு யுவா. காலையில் பார்த்துக்கலாம். உன் டெஸ்ட்ல ஏதோ பிராப்ளம்னு தெரியுது. காலையில் மீட்டிங்கில் சொல்லு. என்னன்னு பார்க்கலாம்…” என்று இதமாகவே சொன்னான் சூர்யா.

கணவனின் இந்த இதமான பேச்சை யுவஸ்ரீயும் எதிர்பார்க்கவில்லை.

திகைத்து அவனைப் பார்த்தாள்.

அவளின் பார்வை புரிந்தாலும், அதற்கு மேல் எதுவும் பேசாமல், அந்த அறையின் விளக்கை அணைத்து, விடிவிளக்கைப் போட்டு விட்டு, வாசலை நோக்கி நடந்தவன், ஏதோ நினைத்துக் கொண்டது போல் நின்று திரும்பிப் பார்த்தான்.

‘என்ன?’ என்பது போல் அவளும் பார்க்க, “நம்ம ரூமுக்கு எப்ப வருவ?” என்று கேட்டான்.

உடனே அவள் முகம் இறுகிப் போனது.

அவனுக்குப் பதில் சொல்லாமல், அவன் முகம் பார்க்காமல் திரும்பிப் படுத்துக் கொண்டவள், போர்வையையும் இழுத்து மூடிக் கொண்டாள்.

எப்போதும் வழக்கமாக யுவஸ்ரீ விடும் பெருமூச்சை முதல் முறையாகச் சூர்யா இழுத்து விட்டான் ஏக்கமாக!