21 – நெஞ்சம் வீழ்ந்தது உன்னில்

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 21

ஞாயிற்றுக்கிழமையான அந்த மாலை வேளையில் குழந்தைகளின் சலசலப்பில் அந்தப் பூங்காவே அதிர்ந்தது.

ஊஞ்சலில் ஆடிக் கொண்டும், சறுக்கலில் சறுக்கிக் கொண்டும், ஓடிப் பிடித்தும் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளின் சத்தத்தைக் கேட்டுக் கொண்டே அந்தப் பூங்காவிற்குள் நுழைந்த சத்யாவின் முகம் மலர்ந்தது.

குழந்தைகள் இருக்கும் இடத்தில் இருக்கும் போது வேறு எந்தச் சிந்தனையும் மனதில் நுழையாமல் அவர்களின் சலசலப்பு அவளைக் காக்கும் என்பதால் அதை விரும்பி ரசிப்பாள்.

தங்கையின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து வந்தவள், “என்ன கார்த்தி, வழக்கமா உட்காரும் இடத்தில் உட்காராம எங்கே கூட்டிட்டுப் போற?” குழந்தைகள் விளையாடும் பகுதியில் இருக்கும் இருக்கையில் தான் அவர்கள் வழக்கமாக அமர்வது. ஆனால் இன்று குழந்தைகள் பகுதியை தாண்டி அவர்களின் சத்தம் குறைந்த பகுதிக்குத் தங்கை அழைத்துச் செல்லவும் குழப்பத்துடன் கேட்டாள்.

“அங்க இன்னைக்குச் சேர் புல்லா ஆளுங்க உட்கார்ந்து இருக்காங்க அக்கா. அதான் இந்தப் பக்கம் வந்தேன். இங்கே ப்ரீயா இருக்கு, வா…” என்று அழைத்துப் போனாள்.

அந்தப் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் மட்டுமே நடந்து கொண்டிருந்தார்கள். இருக்கை அந்த நடைபாதையில் இருந்து சிறிது தள்ளி இருந்ததால் அங்கே சென்று அமர வைத்தாள்.

அமர்ந்த அடுத்த நொடியில் சத்யாவின் உடல் விறைப்புற்றது. “கார்த்தி…” என்று பல்லை கடித்து அழைத்தவள் “என்ன காரியம் பண்ணிட்டு இருக்க? நட! வீட்டுக்கு போவோம்…” என்றாள் கடுமையாக.

அவளின் கோபத்தில் கார்த்திகா தயங்கி நிற்க, “நீ போய் நடந்துட்டு வா கார்த்திமா. என் பொண்டாட்டிகிட்ட நான் பேசிக்கிறேன்…” என்று அமைதியாகச் சொன்னான் ஏற்கனவே அந்த இருக்கையில் அமர்ந்திருந்த தர்மா.

‘சைட் கேப்பில் பொண்டாட்டினு சொல்லிட்டாரே, விவரம் தான்…!’ என்று கார்த்திகா வாயை பிளந்து பார்க்க, அவளைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தவன், ‘கிளம்பு…’ என்பது போலச் சமிக்ஞை செய்தான்.

‘நீங்க நடத்துங்க மாமா’ என்பது போலச் சாடை செய்தவள் அவன் நடந்து விட்டு வர சொன்னதைச் சாக்காக வைத்துக் கொண்டு “நான் இதோ வந்துடுறேன்கா…” என்று அதற்கு மேல் நிற்காமல் நடையைக் கட்டினாள் கார்த்திகா.

“கார்த்தி உதை வாங்குவ… ஒழுங்கா என்னைக் கூட்டிட்டு போ…!” என்று சத்யா அதட்ட, இன்னும் வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள் கார்த்திகா.

இருக்கையில் அமராமல் எழுந்து நின்றவள் தங்கையுடன் வந்ததால் உதவிகோலை எடுத்துக் கொள்ளாமல் வந்த தன் மடத்தனத்தை நொந்துக் கொண்டாள்.

உதவிகோல் இல்லையென்றாலும் மீண்டும் அந்த இருக்கையில் அமர பிடிக்காமல் தானே நடந்து செல்ல கைகளைத் துழாவிய படி அடியெடுத்து வைத்த அடுத்த நிமிடம் துழாவிய அவளின் கையைப் பற்றிக் கொண்டான் தர்மா.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“ப்ச்ச்… விடுங்க…!” என்றாள் எரிச்சலாக.

“ஷ்ஷ்…! சத்யா அமைதியா இருடா. உன் கை பேலன்ஸில் தான் நானும் நிற்கிறேன். நீ கையைத் தட்டி விட்டா விழுந்துடுவேன்…”

அவன் விழுந்து விடுவான் என்றதும் சட்டென அமைதியானாள் சத்யா.

உண்மையில் அவனால் ஒற்றைக் காலில் சமாளித்திருக்க முடியும். அருகிலேயே இருக்கை இருந்ததால் அவள் கையைத் தட்டி விட்டாலும் இருக்கையைப் பிடித்துக் கொண்டு சமாளித்து விடுவான். அப்படி இருந்தும் விழுவேன் என்று சொன்னவனின் கண்ணில் குறும்பு மின்னியது.

அவள் தனக்காக நின்றதும், அந்தக் குறும்பு இதழோரத்திலும் ஒட்டி கொள்ள, “கொஞ்ச நேரம் மட்டும் உட்கார் சத்யா. ப்ளீஸ்… எனக்காக…” என்றான்.

அவனின் இறைஞ்சுதலான குரலை கேட்ட பிறகும் வீம்பு பிடிக்க மனதில்லாமல் மீண்டும் இருக்கையில் அமர்ந்து தன் கையை விடுவித்துக் கொண்டாள். அவள் அருகிலேயே தர்மாவும் அமர, இன்னும் தள்ளி அமர்ந்தாள்.

“வாழ்க்கை முழுவதும் என் அருகாமையைத் தவிர, வேற யாரின் அருகாமையையும் நீ ஏத்துக்க மாட்டனு உன் மனது உறுதிபடுத்திட்ட பிறகும், இந்த விலகல் தேவைதானா சத்யா?” என்று மென்மையாகக் கேட்டான்.

“உங்க கற்பனைக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது…” என்றாள் எரிச்சலுடன்.

“கற்பனையா? அப்படியா? அப்போ நம்ம இரண்டு பேருக்கு நடுவில் குறுக்கிட்ட புகழேந்தி, கற்பனை பாத்திரம் தானா?”

‘புகழ் சார் பற்றி இவனுக்கு எப்படித் தெரிந்தது?’ என்று ஒரு கணம் திடுக்கிட்டவள், கார்த்திகாவின் ஞாபகம் வர, ‘அவளை…’ என்று மனதிற்குள் பல்லை கடித்தவள்,

“நம்ம இரண்டு பேருக்குள்ளயே ஒன்னும் இல்லைங்கும் போது, புகழ் சார் எப்படி நம்ம நடுவில் வந்தவர் ஆவார்?” என்றாள்.

“நீ புகழ் சார்னு சொன்னதில் இருந்தே அவனுக்கான இடம் எதுன்னு எனக்குப் புரிஞ்சுடுச்சு. ஆனா நம்ம இரண்டு பேருக்கும் நடுவில் எதுவுமே இல்லையா என்ன?” என்று தீவிரமாகக் கேட்டான்.

“நமக்குள் எதுவும் இல்லை…” என்றாள் வெடுக்கென்று.

“என் மேல் ஏன் சக்திமா இவ்வளவு கோபம்?” என்று அவளின் வெடுக்கென்ற பதிலில் வேதனையுடன் கேட்டான்..

“ஏன்? உங்களுக்குத் தெரியாதா?” குரலில் மிதமிஞ்சிய கோபம் தெரிந்தது.

அவளுக்கு இருந்த கோபத்தில் அப்போது அவன் பொண்டாட்டி என்றதும், இப்போது அவன் புதிதாக அழைத்த ‘சக்திமா’ என்றதும் கூட அவளின் மனதில் பதியவில்லையோ?

“நான் தான் உன்னைப் பொண்ணு கேட்ட மாப்பிள்ளைங்கிறதால் என் மேல கோபமா? இல்லை பொண்ணு கேட்டுட்டு உன்னிடம் அந்த உண்மையை மறைச்சுட்டேன்னு கோபமா? எதுக்கு என் மேல கோபம்னு சொல்லு சத்யா. உன் கோபத்தைக் குறைக்க அதில் எனக்கு வழியிருக்கானு பார்க்கிறேன்…” என்றான்.

அவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, “அநேகமா இரண்டாவது காரணம் தான் உன் கோபத்துக்கான காரணமா இருக்கும்னு நினைக்கிறேன். ஆனாலும் முதலில் இருந்து சொன்னா தான் உனக்கே என்னைப் பற்றித் தெரியும். அதனால் ஆரம்பத்தில் இருந்து முழுசா சொல்லிடுறேன்…” என்றான்.

“ஒன்னும் தேவையில்லை…” என்றாள் மீண்டும் வெடுக்கென்று.

அவள் மீண்டும் வெடுக்கென்று பேச தர்மாவின் மனது வலித்தது.

அந்த வேதனையில் தான் அவளுக்கு விளக்கம் சொல்ல வந்ததை விட்டுவிட்டு “உன்னை ஏன் நான் முன்னாடியே பார்க்கலைனு வேதனை படுறேன்டா சக்திமா. ஏன் உனக்குப் பிடித்த மாதிரி நான் இல்லாம போனேன்னு தவிப்பா இருக்கு. என் வாழ்க்கையில் வந்த முதல் பொண்ணா ஏன் நீ இல்லாம போனன்னு எனக்கு வருத்தமா இருக்குடா.

“ஆனா நடந்த எதையுமே மாத்த முடியாது. அப்படி இருக்கும் போது முடிஞ்சு போன வாழ்க்கையை மறந்துட்டு புதுசா வாழ ஆசைப்பட்ட என் ஆசை அதிகப்படி தான். உன் மேல எனக்கு விருப்பம் வந்திருக்கவே கூடாது. அதனால் தான் இப்போ உன்னையும் வருந்த வச்சுக்கிட்டு இருக்கேன்.

“தப்பு தான் சத்யா… நான் செய்தது பெரிய தப்பு தான். உன்னைக் கடையில் பார்த்த அன்னைக்கே நான் தான் மாப்பிள்ளைனு உண்மையைச் சொல்லியிருக்கணும். சொல்லாமல் விட்டது என் தப்பு தான்….” என்றவன் குரல் கரகரத்தது.

“இப்போ எதுக்கு இப்படிப் பேசிக்கிட்டு இருக்கீங்க? எனக்குப் பிடிக்கலை…” என்றாள் கோபமாக.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

வந்ததில் இருந்து சிடுசிடுவென அவள் பேச, அவளை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று புரியாமல் முழி பிதுங்கி போனான் தர்மா.

அடுத்து என்ன பேச என்று தெரியாமல் மலைத்து அப்படியே அமர்ந்து விட்டான்.

சிறிது நேரம் இருவருக்கும் இடையே மௌனமே ஆட்சி செய்ய, அந்த மௌனத்தைக் கலைப்பது போல் சத்யாவின் வாய் ஏதோ முணுமுணுத்தது.

அதைக் கவனித்தவன் ‘என்ன பேசுகின்றாள்?’ என்று புரியாமல் முகத்தை அவள் புறம் மெள்ள சாய்த்து கேட்டான்.

“கை ஒடிஞ்சு ஆப்ரேஷனுக்குப் போறதுக்கு முன்னாடி கவலைப்படாதேன்னு ஆறுதல் சொல்லுவானாம். ஆப்ரேஷன் முடிஞ்சு வந்ததுக்கு அப்புறம் எப்படி இருக்கேன்னு கூடக் கேட்க மாட்டானாம். நானா பேசியதும் பேசுவானாம்.

இவன் தான் மாப்பிள்ளைனு தெரிஞ்சு அந்த ஷாக்ல இருந்தவளை தேடி வந்தவன்கிட்ட என்ன பேசனு தெரியாமல் அவாய்ட் பண்ணினா அப்புறம் கோபம் குறைஞ்சுதானு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணாம நான் ஸ்கூல் விட்டு வரும் போது பேச கூட முயற்சி எடுக்காம வேடிக்கை பார்த்துட்டு இருப்பானாம்.

இப்போ புகழ் சார் பத்தி தெரிஞ்சதும் அய்யா பதறி அடிச்சுட்டு வந்து நடந்ததுக்கு எல்லாம் விளக்கம் சொல்லுவாராம். அதையும் நான் பொறுமையா கேட்கணுமாம். சரிதான் போயா… நீ சொல்றது எதையும் கேட்க மாட்டேன். வந்துட்டான் பெருசா விம் பார் போட்டு விளக்க… இதில் பெரிய உரிமையுள்ளவன் போலப் பொண்டாட்டி, சக்திமானு கொஞ்சல் ஒன்னு தான் குறைச்சல்…” என்று கடுகடுகென்று மெல்லிய குரலில் முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள்.

அவனுக்குக் கேட்க வேண்டும் என்றே முணுமுணுத்தது போலிருந்தது அவளின் செய்கை.

அவள் பேசியதை கேட்டவன், “உஃப்…” என்று வாயை ஊதி அடைத்து வைத்திருந்ததெல்லாம் வெளியே விட்டது போல நிம்மதி மூச்சு விட்டான்.

இருக்கையின் பின்னால் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தவன் தலையைக் கோதி விட்டு அதரங்களில் புன்னகையை நெளிய விட்டான்.

இரண்டு கைகளையும் குளிர் காயப் போகின்றவன் போலப் பரபரவென்று தேய்த்து விட்டுக் கொண்டு இரு உள்ளங்கைகளையும் வைத்து முகத்தை மூடிவிட்டு கைகளை விளக்கினான்.

‘சத்யா எங்கே சுத்தமாகத் தன்னை வெறுத்து விட்டாளோ?’ என்று அவன் சில நொடிகள் பயந்த பயம் எல்லாம் காற்றில் பறந்து போனது போல இருந்தது.

அவளின் கோபமும், சிடுசிடுப்பும் அவனை அவள் வெறுத்ததினால் வந்ததில்லை. ‘விருப்பத்தினால் வந்தது!’ என்று கண்டு கொண்ட நொடி தன்னை விட்டு சென்று கொண்டிருந்த உயிர் மீண்டும் தன்னிடமே வந்து சேர்ந்தது போல உணர்ந்தான்.

தான் பேசாமல் விலகி இருந்ததிற்காக ஊடலில் வந்த கோபம். விலகி நின்றவன் புகழ் விஷயம் கேள்வி பட்டதும் அதனால் பயந்து தன்னைத் தேடி வந்திருக்கின்றான் என்பதினால் உண்டான கோபம்.

தான் தினமும் அவள் நடந்து செல்லும் பாதையில் காத்திருந்தும் அவளிடம் பேச முயற்சி செய்யவில்லை என்பதினால் உண்டான கோபம்.

இந்த விஷயங்களோடு இன்னும் ஒன்றும் தர்மாவிற்குப் புரிந்தது. அது… எதற்காக அவன் வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தினானோ அதற்கான பலன் கிடைத்து விட்டதை உணர்ந்தான்.

ஆம்! வேண்டும் என்றே தான் வாசனை திரவியங்களை நிறுத்தியிருந்தான்.

முதல் நாள் தன் நடையோடு அவள் வாசனை திரவியங்களையும் அடையாளமாகச் சொன்னதை வைத்து, இனி தன் இயற்கை வாசனையை வைத்தே அவள் தன்னை உணர வேண்டும் என்று தான் அவனைப் பார்க்க வரும் நேரம் எல்லாம் திரவியங்களைத் தவிர்த்திருந்தான்.

அதற்குப் பலனாக அவள் அவனைக் கண்டு கொண்டாள் என்பதால் உல்லாசமாக உணர்ந்தான்.

சற்று முன்பு கூடத் தன் நடையை வைத்து இல்லாமல் இருக்கையில் அமர்ந்ததும் தான் அங்கே அமர்ந்திருக்கிறேன் என்று உடனே உணர்ந்து கொண்டு தானே கார்த்திகாவின் மீது கோபப்பட்டாள்.

எந்த அளவு தன்னை உணர்ந்து கொண்டிருக்கிறாள் என்று நினைக்கும் போதே நாடி நரம்பெல்லாம் சிலிர்த்தது.

அச்சிலிர்ப்பில் கை ரோமங்கள் குத்திட்டு நிற்க, அந்தக் கையை மெல்ல நகர்த்தி இருக்கையின் மீது வைத்திருந்த சத்யாவின் கையை மென்மையாகப் பற்றினான்.

இந்த முறை வெடுக்கென்று இல்லாமல் மெதுவாகவே தன் கையை விடுவிக்க முயன்றாள்.

“சத்யா… சக்திமா… உன் கை இப்போ எனக்கு வேணும்டா. இப்போ இந்த நிமிஷம் எப்படி இருக்கேன் தெரியுமா? நாம இரண்டு பேரும் இப்போ கணவன், மனைவியா இல்லாம போனோம்னு ரொம்ப வருத்தமா இருக்கு. அப்படி மட்டும் இருந்திருந்தா இப்போ உன் எலும்பெல்லாம் நொறுங்குற மாதிரி இறுக்கி அணைச்சுருப்பேன்…” என்றான் உணர்வுகளில் முத்துக் குளித்தவனாக.

அப்படி அவன் சொன்னதும் சத்யாவின் கோபத்தில் சிவந்திருந்த முகம், வெட்கத்தில் சிவக்க தவித்தது. ஆனாலும் கோபம் மிகுதியாக இருக்க, முயன்று தன் முக உணர்வுகளை மறைத்தாள்.

“ப்ச்ச்… வெளியிடத்தில் உட்கார்ந்துக்கிட்டு என்ன பேச்சு இது?” என்று கடுமை இல்லாமலேயே உரிமையுடன் கண்டித்தாள்.

“இப்போ நான் வெளியிடம்னு நாகரீகம் பார்க்கிற நிலைமையில் இல்லைடா சக்திமா…” என்றான்.

அவள் மீண்டும் அமைதியாகி விட “ஆனாலும் ஒன்னுடா… காதலை இப்படியும் கூடச் சொல்லலாம்னு இப்போ தான் தெரிஞ்சுக்கிட்டேன். இது தான் கோபக் காதலோ?” என்று அவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்ததால் வந்த கேலியுடன்.

‘என்னைச் சரியாகக் கண்டுகொண்டானே…’ என்று நினைத்த சத்யா உதட்டை கடித்துக் கொண்டாள்.

அவளின் தவிப்பை ரசனையாகப் பார்த்தவன் “நான் சைட் கேப்ல பொண்டாட்டினு தான் உன்னைச் சொன்னேன். ஆனா அதுக்குன்னு உன் புருஷனை நீ எப்படி எல்லாம் ஒருமையில் திட்டுற…?” என்றான் கிண்டலாக.

அவன் புருஷன் என்றதில் மேனியில் சிலிர்ப்பு ஓடுவது போல உணர்ந்த சத்யா அதை அவனுக்குத் தெரியாமல் மறைக்கப் பெரும்பாடு பட்டாள்.

‘உரிமையுடையவனை ஒருமையில் திட்டுவது’ பெண்களுக்குப் பிடித்தமான ஒன்று என்று தர்மாவிற்கு யார் சொல்வதோ?

அவள் பேசவில்லை என்றாலும் தர்மாவின் பேச்சு நிற்காமல் தொடர்ந்தது.

“என் மனசு இப்போ எப்படி இருக்கு. உனக்குத் தெரியுமா சக்திமா? நீ என்னை ஒரு வாரமா பார்க்க முடியாதுனு தவிர்த்தப்பயும், இப்போ நீ சிடுசிடுனு கோபப்பட்டப்பயும் எங்கே நானா தேடி வந்த இந்த வாழ்க்கை எனக்குக் கிடைக்கவே கிடைக்காதோன்னு நான் எவ்வளவு வருத்தப்பட்டுருப்பேன் தெரியுமா?

“என் முதல் வாழ்க்கை தான் தோத்து போயிருச்சு. என் சத்யாவுடனான இந்த வாழ்க்கையாவது எனக்குக் கிடைக்கணும் ஆண்டவானு தினமும் வேண்டிப்பேன்…” என்று அவன் சொல்லிக் கொண்டே போக, முதல் வாழ்க்கை தோற்று விட்டதா? அப்படினா? அவன் சொன்னதின் அர்த்தம் புரியாமல் நெற்றியை சுருக்கினாள்.

அவளின் யோசனையைக் கண்டு கொண்டவன் போல “என்னைப் பற்றி முதலில் இருந்து சொன்னாத்தான் உனக்குப் புரியும் சத்யா. நீ என்னைப் பற்றி எந்த விவரத்தையும் கேட்காமல் தான் என்னை வேணாம்னு சொன்னனு உங்க அப்பா சொன்னார். நீ அப்பயே விவரம் கேட்டிருந்தா நான் உங்க கடைக்கு வந்த முதல் நாளே என்னைக் கண்டு பிடிச்சுருப்ப.

நீ மாப்பிள்ளை பற்றிக் கேட்காததாலும், நீயும் இரண்டாந்தாரமா வேணாம்னு உறுதியா இருந்ததாலும் தான் என்னைப் பற்றி உன்கிட்ட சொல்லவேண்டாம்னு முடிவெடுத்தேன். உண்மையைச் சொல்லாம மறைச்சு உன்கிட்ட நான் பழகியதில் உனக்குக் கோபம் இருக்கும். உண்மையை மறைகிறது எனக்கும் ஆரம்பத்தில் கஷ்டமா தான் இருந்தது…”

“ஆரம்பத்தில் கஷ்டமா இருந்ததுனா அப்புறம் பழகிருச்சோ?” என்று அவ்வளவு நேரம் கடைப்பிடித்த மௌனத்தை விட்டுவிட்டு அவனின் பேச்சில் இடையிட்டுக் கேட்டவளிடம் முன் இருந்ததை விடக் கோபம் குறைந்திருந்தாலும், ஆதங்கம் நன்றாகவே வெளிப்பட்டது.

அதைப் புரிந்து கொண்டவன் இன்னும் தன் கைகளுக்குள் அடங்கியிருந்த அவளின் கையை அழுத்தி விட்டான்.

“இப்படி நீ கேட்கும் போது மறைச்சதுக்காக இன்னும் கஷ்டமா இருக்குடா. ஆனா மறைக்காம போனா எங்க எனக்கு நீ கிடைக்க மாட்டியோனு தவிப்பா இருந்தது…” என்றான் தவிப்பாக.

“என் மேல அவ்வளவு விருப்பமா? அதெப்படி?” என்று ஆச்சரியமாகக் கேட்டவள் “உங்க பேச்சை கேட்டா என்னை ரொம்ப நாளா தெரிந்தவர் போலப் பேசுறீங்க… அது எப்படி?” என்று குழப்பத்துடன் கேட்டாள்.

“ரொம்ப நாளா? ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே தெரியும்…” என்றான் புன்னகையுடன்.

“ரொம்ப வருஷமா?” அதிர்ச்சியுடன் கேட்டாள் சத்யா.

“ஹ்ம்ம்… சரியா சொல்லணுமா நாலு வருஷமா தெரியும்…”

“என்னது? நாலு வருஷமா…?” நம்ப முடியா திகைப்புடன் கேட்டாள்.

“ம்ம்… உன்னைப் பார்த்ததைச் சொல்றதுக்கு முன்னாடி என் வாழ்க்கையில் என்ன நடந்துச்சுனு நீ தெரிஞ்சுக்கணும் சத்யா. ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு வீட்டில் அம்மா, அப்பா பார்த்து ஒரு பொண்ணைப் பிடிச்சுப் போய்க் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி…..” என்று தர்மா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே “கொஞ்சம் நிறுத்துறீங்களா?” என்று கோபத்துடன் இடையிட்டாள் சத்யா.

நடுவில் சாதாரணமாகப் பேசிக் கொண்டு வந்தவள் மீண்டும் கோபப்படவும் ஒன்றும் புரியாமல் பேச்சை நிறுத்தி அவளின் முகம் பார்த்தான் தர்மா.

வார்த்தையில் தான் கோபம் தெரிந்ததே தவிர அவளின் முகம் சாதாரணமாக இருந்தது.

அதில் இன்னும் குழம்பியவன் “என்னாச்சு சத்யா? என்னைப் பற்றிச் சொல்ல வேண்டாமா?” என்று கேட்டான்.

“வேண்டாம்…!” என்று உறுதியாக மறுத்தாள் சத்யவேணி.