21 – சிந்தையில் பதிந்த சித்திரமே
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 21
“அம்மா… என்னம்மா இதெல்லாம்? தயா நீ கூடவா?” என்று கேட்டாள் நயனிகா.
“எனக்கும் அம்மாவுக்கும் எதுவும் தெரியாதுக்கா. ஒரு ஃபிரண்ட் வீட்டுக்குப் போறோம்னு சொல்லித்தான் அப்பா எங்களைக் கூட்டிட்டு வந்தார்…” என்ற தயாவும் அதிர்ச்சியில் தான் இருக்கிறான் என்பதை அவன் குரல் எடுத்துரைத்தது.
“உங்ககிட்ட இதை நான் எதிர்பார்க்கலை அரவிந்த். அம்மா, தயா வாங்க… நாம போவோம்…” என்று கோபத்துடன் வெளியேற முயன்றவளின் கையை வலுவாகப் பிடித்துக் கொண்டான் அரவிந்த்.
“என் கையை விடுங்க அரவிந்த்…”
“முடியாது ஸ்வீட்டி. உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இப்ப நம்ம கல்யாணம் நடந்தே ஆகணும்…” என்றான் பிடிவாதமாக.
“அரவிந்த் அண்ணா, நீங்க செய்றது கொஞ்சம் கூடச் சரியில்லை…” என்றான் தயா.
“இனி உனக்கு நான் அண்ணா இல்லை தயா. மாமான்னு கூப்பிடு…” என்று அலட்டாமல் சொன்னான் அரவிந்த்.
“நான் மாமான்னு கூப்பிட வேற ஒருத்தர் இருக்கார். அவரை மட்டும் தான் நான் மாமான்னு கூப்பிடுவேன். ஒழுங்கா அக்கா கையை விடுங்க…” கோபமாகத் தயா சொல்ல,
“உங்க அப்பாவே பேசாம இருக்கார். நீ என்னடா துள்ற?”
“என்னப்பா இதெல்லாம்? அக்கா வாழ்க்கையோட இப்படி விளையாடுறீங்களே? இது உங்களுக்கே நியாயமா இருக்கா?” தந்தையிடம் நியாயம் கேட்டான்.
“நீ சின்னப் பையன் தயா. இதில் எல்லாம் நீ தலையிடாதே! முரண்டு பண்ணாதே நயனி. அப்பா உன் நல்லதுக்காகத் தான் இந்தக் கல்யாண ஏற்பாடு பண்ணிருக்கேன். அரவிந்தைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ சந்தோஷமா இருக்கலாம். அவனுக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. காதல்னு சொல்லி நீ செய்த முட்டாள்தனத்தைக் கூட அவன் பெருசா எடுத்துக்கலை…” என்றார் ஞானசேகரன்.
“முடியாதுப்பா. கதிரை தவிர நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். அம்மா நீங்களாவது சொல்லுங்க…” என்று அம்மாவின் ஆதரவை நாடினாள்.
“என்ன பத்மா, நீயும் இதுக்கு உடந்தையா?” என்று அரவிந்தின் அம்மாவிடம் கேட்டார் அபிராமி.
“சேகரன் அண்ணா, மகளைப் பத்தி எங்க வீட்டில் வந்து புலம்பவும், இவர் உடனே என் வீட்டு மருமகளா ஏத்துக்கிறேன்னு சொல்லிட்டார் அபிராமி. அரவிந்தும் அவளைப் பிடிச்சிருக்குன்னு சொல்றான். என் பேச்சை யார் கேட்குறா? அப்பாவும், மகனுமா தான் இந்த ஏற்பாட்டைப் பண்ணிருக்காங்க…” என்று புலம்பினார் பத்மா.
“எனக்கு முன்பே உன்னைப் பிடிக்கும் ஸ்வீட்டி. உன் படிப்பு முடியட்டும்னு தான் காத்திருந்தேன். ஆனா நீ அதுக்குள்ள அவசரப்பட்டு அந்தக் கையில்லாதவனை லவ் பண்ணி, சாகுற லெவலுக்குப் போயிட்ட. அவன் உனக்கு வேண்டாம் ஸ்வீட்டி. நான் உன்னைப் பத்திரமா பார்த்துப்பேன்…” என்றான் அரவிந்த்.
“எங்க அப்பா தான் என் மனசை பார்க்க மாட்டிங்கிறார். நீங்களாவது என் மனசை பத்தி யோசிச்சீங்களா அரவிந்த்? நீங்க என் ஃபிரண்ட். கதிர் என் உயிர். என் மனசை பத்தி யோசிக்காத நீங்க எல்லாம் அவர் குறைபாட்டைப் பத்தி பேச தகுதி இல்லாதவர்…” என்றாள் கோபமாக.
“என் கை, கால் எல்லாம் நல்லா இருக்கே ஸ்வீட்டி? அப்ப எனக்குத்தான் சொல்ல முழுத் தகுதி இருக்கு…” என்று அலட்சியம் போல் சொன்னவனை அருவெறுப்புடன் பார்த்தாள் நயனிகா.
“கை, கால் நல்லா இருப்பது பெரிய விஷயம் இல்லை. மனசு நல்லா இருக்கணும். என்னை இனி ஸ்வீட்டின்னு கூப்பிடாதீங்க அரவிந்த். அந்தத் தகுதி உங்களுக்கு இல்லை…” என்றவள் வெக்கென்று தன் கையை அவனிடமிருந்து உதறி விடுவித்துக் கொண்டவள்,
“நாம போகலாம்மா…” என்று அன்னையின் பக்கம் நடக்க ஆரம்பித்தாள்.
“ஹேய் ஸ்வீட்டி, போகாதே! இப்ப நம்ம கல்யாணம் நடந்தே ஆகணும்…” என்று மீண்டும் அவளின் கையைப் பிடிக்க வந்தான் அரவிந்த்.
ஆனால் அதற்கு முன் அவனின் கையை இன்னொரு கை பற்ற, ‘யாரது?’ என்று திரும்பிப் பார்க்க, அங்கே ரவுத்திரம் பொங்க நின்று கொண்டிருந்தான் கதிர்நிலவன்.
“யார் கையை யார் பிடிப்பது?” என்று கேட்ட கதிர்நிலவன் அவனின் கையைப் பிடித்து அழுத்த…
“கதிர்…” என்று ஆவலாக அழைத்தாள் நயனிகா.
“இதோ பார், சேகர் மாமா என்னைத்தான் அவர் வீட்டு மாப்பிள்ளையா தேர்ந்தெடுத்திருக்கிறார். நீ விலகிப் போய்டு…” என்றான் அரவிந்த்.
“நீ என்ன உன் மாமா கூடவா குடும்பம் நடத்த போற? நயனிகாவே உன்னைப் பிடிக்கலைனு சொன்ன பிறகு அவளை ஏமாத்தி இங்கே கூட்டிட்டு வந்து கல்யாணம் கட்டிக்கிட்டால் மட்டும் போதுமா?” என்று நக்கலாகக் கேட்டான் கதிர்நிலவன்.
“என்ன சேகர் இது? நீ கவலைப்பட்ட, இவனும் ஆசைப்பட்டான்னு கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னேன். ஆனா இங்கே என்னென்னவோ நடக்குது…” என்று அரவிந்தின் அப்பா கேட்க,
“ஒன்னும் பிரச்சனை இல்லை பாண்டியா. இந்தப் பிரச்சனையை நான் சரி பண்றேன்…” என்ற ஞானசேகரன், “டேய், அவன் கையை விடு…” என்று வேகமாக வந்தவரை முறைத்தான் கதிர்நிலவன்.
“நான் ஏற்கனவே சொல்லிருக்கேன். என் பொண்டாட்டியைத் தான் உங்கள் வீட்டில் விட்டு வச்சுருக்கேன். அவளுக்கு ஏதாவது ஆனால் நான் சும்மா விட மாட்டேன்னு. ஆனா நீங்க இவனுக்கு என் பொண்டாட்டியைத் திருட்டுக் கல்யாணம் பண்ணி வைக்க ரெடி ஆகிட்டீங்க. உங்களை…” என்றான் கோபமாக.
“சும்மா ஆடாதேடா. என்னமோ தாலி கட்டியவன் கணக்கா பொண்டாட்டி… பொண்டாட்டின்னு சொல்லிட்டு இருக்க? அரவிந்த் தான் என் மாப்பிள்ளை. அவனை விடு…” என்றார்.
“இப்ப உங்களுக்குத் தாலி தானே பிரச்சனை?” என்றவன் அரவிந்தின் கையை விட்டுவிட்டு நயனிகாவின் அருகில் வந்தான்.
“அம்மா…” என்று அபிராமியை அழைத்துக் கதிர் கேள்வியாகப் பார்க்க, அவர் சம்மதமாகத் தலையை அசைத்தார்.
“நயனிமா, இப்ப இந்த இடத்தில் நீ என் மனைவியாக வர உனக்குச் சம்மதமா?” என்று நயனிகாவிடம் கேட்டான்.
அவன் கேட்டதின் பொருளை முழுவதுமாகப் புரிந்து கொள்வதற்குள் சம்மதமாகத் தலையை ஆட்டினாள்.
அவளைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டே தன் பையில் இருந்த தாலியை எடுத்து நயனிகாவின் கழுத்தில் கட்டினான் கதிர்நிலவன்.
“டேய், என்ன பண்ற?” என்று ஞானசேகரன் தடுப்பதற்குள் தாலியைக் கட்டி முடித்து அவளின் தோளில் கைப்போட்டு அணைத்துக் கொண்டான்.
“இப்ப இவள் என் பொண்டாட்டின்னு உரிமையோடு சொல்லலாம் இல்லையா மாமனாரே?” என்று நக்கலாகக் கேட்டான்.
அவரோ, ஸ்ஸ்ஸ்… புஸ்ஸ்… என்று கோபத்தோடு அவனைப் பார்க்க, அரவிந்தோ அதிர்ச்சியாக நின்று விட்டான்.
“சூப்பர் மாமா…” என்று கை தட்டினான் தயா.
“எங்க கல்யாணத்தைப் போட்டோ எடுத்தியா தயா?”
“அம்மா சிக்னல் கொடுத்தாங்க மாமா. எடுத்துட்டேன்…” என்று ஆர்ப்பரித்தான் தயா.
“அப்போ எல்லாம் உன் வேலையா?” என்று கோபமாக மனைவியிடம் பாய்ந்தார் ஞானசேகரன்.
அபிராமியோ அலட்டிக் கொள்ளாமல் கணவரைப் பார்த்தார்.
“இன்னும் இங்கே எதுக்குடா நிற்கிற? நான் அப்பவே வேண்டாம்னு சொன்னேன். கேட்டியா நீ? வாடா…” என்று மகனை கோபமாக அழைத்தார் பத்மா.
“எல்லாம் உங்களால் தான். இந்த அவமானம் நமக்குத் தேவையா? நண்பனுக்கு உதவி செய்றாராம் உதவி. நம்ம மகனுக்கு வேற பொண்ணே கிடைக்க மாட்டாளா என்ன? வீட்டுக்கு வாங்க உங்களுக்கு இருக்கு…” என்று கணவனையும் திட்டிக் கொண்டு இருவரையும் அங்கிருந்து அழைத்துச் சென்று விட்டார் பத்மா.
நயனிகா மனம் நெகிழ்ந்து போயிருந்தாள். கதிர்நிலவன் தன் கணவனாகி விட்டான் என்ற எண்ணம் அவளை இறகு போல் பறக்க வைத்தது.
கணவனைக் காதலுடன் பார்த்தாள். அவனும் அதே குறையாத காதலுடன் பார்க்க, அவர்களைக் கடுப்பாகப் பார்த்து விட்டு அங்கிருந்து சென்றார் ஞானசேகரன்.
மற்றவர்களும் கதிர்நிலவனுடன் கிளம்பினர்.
“அம்மா, நீங்களே உள்ளே போய் எங்களுக்கு ஆரத்தி எடுத்துட்டு வர்றீங்களா?” என்று தன் வீட்டுக் கதவைத் திறந்ததும் கேட்டான் கதிர்நிலவன்.
“இதோ மாப்பிள்ளை…” என்ற அபிராமி உள்ளே சென்று ஆரத்தி கரைத்து எடுத்து வந்தார்.
மணமக்களுக்கு அபிராமி ஆரத்தி சுற்ற, தயா அவர்களைப் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தான்.
“பாலும், பழமும் சாப்பிடணும் மாப்பிள்ளை…” என்று உள்ளே சென்றதும் சொன்னார்.
“பால் ஃப்ரிஜில் இருக்கும்மா. இதோ நான் வந்து காய்ச்சுறேன்…” என்றவன் இருக்கையை விட்டு எழ,
“நீங்க இருங்க மாப்பிள்ளை. நானே சுட வைக்கிறேன்…”
“அம்மா, ஒரு நிமிசம்! என்னை எப்பவும் போலத் தம்பினே கூப்பிடுங்க. இந்த மாப்பிள்ளை எனக்கு அந்நியமா தெரியுது. அதே மாதிரி என்னாலும் உங்களை அத்தைன்னு சொல்ல முடியலை. நான் அம்மானே சொல்லிக்கிடட்டுமா?” என்று கேட்டான்.
“என்ன தம்பி என்னைப் போய்க் கேட்டுக்கிட்டு? அம்மானே கூப்பிடுங்க. வீட்டுக்கு வர்ற மருமகளுக்கு மட்டுமில்ல மருமகனுக்கும் அம்மாவா இருக்கலாம்…” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டுச் சமையலறைக்குச் சென்றார்.
“கதிர் இது நிஜம் தானே?” அவர்களின் பேச்சில் பங்கு கொள்ளாமல் அமைதியாகக் குனிந்து தன் மார்பில் தவழ்ந்த தாலியைப் பார்த்துக் கொண்டே கேட்டாள் நயனிகா.
“வேணும்னா ஒரு கிள்ளு கிள்ளட்டுமாக்கா?” நிஜமா பொய்யான்னு தெரிஞ்சிடும்…” தயா கேலியாகக் கேட்க,
அவனைப் புன்னகையுடன் பார்த்த கதிர்நிலவன், நயனிகாவின் புறம் லேசாகச் சரிந்து அமர்ந்து, “சின்னப் பையன் புரியாம பேசுறான். கிள்ளை விடக் கிஸ் செம்மயா இருக்கும்ல? நான் கொடுக்கும் கிஸுக்குப் பிறகு உனக்கு இந்த மாதிரி சந்தேகம் எல்லாம் வரும்கிற?” என்று குறும்புடன் கேட்டவனை ‘ஹான்’ என்று பார்த்தாள் நயனிகா.
அவர்கள் பேசிக் கொள்ளட்டும் என்று தயா எழுந்து போய் விட, “இப்ப பெரிய பையன் ஆகிட்டான்…” என்று தயாவின் முதுகை பார்த்துச் சிரிப்புடன் சொன்னவன், “என்ன நிஜமா இல்லையான்னு புரிய வைக்கட்டுமா?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டான்.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம். நிஜம் தான்! நிஜம் தான்! எனக்குப் புரிஞ்சிடுச்சு…” என்று வேகமாகச் சொன்னாள்.
“ச்சே… ச்சே… இவ்வளவு சீக்கிரம் புரிஞ்சிடுச்சே…” என்று ஏமாற்றத்துடன் அலுத்துக் கொண்டான்.
“நீங்க இப்படி எல்லாம் பேசுவீங்களா?” என்று கண்களை விரித்துக் கொண்டு கேட்டாள்.
“இது மேலயும் கூடப் பேசுவேன். உன்கிட்ட மட்டும்…” என்றான் காதலாக.
அவனின் காதலை கண்டு அவளின் முகம் கனிந்தது.
“எனக்கு ஒரு டவுட் கதிர்…”
“என்னமா?”
“எப்படி நீங்க அங்கே சரியான நேரத்துக்கு வந்தீங்க? நான் ரிஜிஸ்டர் ஆபிஸ் போனது உங்களுக்குத் தெரியுமா?”
“உன்னோட முதல் கேள்விக்குப் பதில் சொல்லும் முன்னாடி, நீ ஏன் அவன் கூப்பிட்டதும் அப்படிப் போனமா? என்ன ஏதுன்னு ஆராய மாட்டியா?” என்று கேட்டான்.
“நான் கேட்டேன் கதிர்…” என்றவள் அரவிந்த் சொன்ன தகவல் அனைத்தையும் சொன்னாள்.
“இதில் ஒரு இடத்தில் கூட அவன் பொண்ணு பெயர் கூடச் சொல்லலையே? அதைக் கேட்கணும்னு கூட உனக்குத் தோணலையா?”
“எனக்கு அது சந்தேகமே வரலை கதிர். அரவிந்தை நான் நம்பினேன். அவர் இப்படி ஏமாத்துவார்னு நான் நினைக்கவே இல்லை. அவரை நான் நல்ல ஃபிரண்டா மட்டும் தான் நினைச்சுருந்தேன். ஆனால் அவர் மனதில் இப்படி எல்லாம் எண்ணம் இருக்கும்னு எனக்குத் தெரியாம போயிருச்சு…” என்றாள் வருத்தத்துடன்.
“உன் அப்பாவும், அவனும் சேர்ந்து அப்படி அழகா நடிச்சுருக்காங்க. இதில் உன்னை எங்க குறை சொல்றது…” என்றபடி வந்தார் அபிராமி.
“முதலில் பாலும், பழமும் சாப்பிடுங்க. அப்புறம் பேசலாம்…” என்றவர் பழத்தையும், பால் டம்ளரையும் கதிர்நிலவன் கையில் கொடுத்தார்.
பழம் பகிர்ந்து உண்டு விட்டு, தான் பாதிப் பாலை குடித்து விட்டு, மீதியை நயனிகாவிடம் கொடுத்தான்.
“இப்ப சொல்லுங்க. எப்படிச் சரியா வந்தீங்க கதிர்?” என்று மீண்டும் கேட்டாள்.
“அம்மா தான் எனக்குத் தகவல் சொன்னாங்க…” என்று அபிராமியை கை காட்டினான்.
“நீங்க அங்கே இருக்கும் போது போன் எதுவும் போட்ட மாதிரி கூடத் தெரியலையேமா? அப்புறம் எப்படிக் கதிருக்கு தகவல் சொன்னீங்க?” என்று சிந்தனையுடன் கேட்டாள்.
“தகவல் நான் அங்கிருந்து சொல்லலை. அதுக்கு முன்னாடியே சொல்லிட்டேன்…” என்றவரை புரியாமல் பார்த்தாள்.
“என்னமா சொல்றீங்க? அப்போ முன்னாடியே உங்களுக்கு அப்பா இந்த ஏற்பாடு செய்திருப்பது தெரியுமா?”
“இப்படிக் கல்யாணம் ஏற்பாடு பண்ணுவார்னு தெரியாது. ஆனா ஏதோ பண்ண போறார்னு மட்டும் தெரியும்…”
“எப்படிமா?”
“உங்க அப்பா ஒரு வாரமாகவே சரியாவே இல்லை. அடிக்கடி ரகசியமா போன் பேசிட்டு இருந்தார். அப்படித்தான் ஒரு நாள் அரவிந்த்கிட்ட எப்படியாவது என் மகள் மனசை மாத்தி கல்யாணம் பண்ணிக்கோன்னு அவர் பேசுவதைக் கேட்டேன். அதில் இருந்து அவரைக் கவனிச்சுட்டே இருந்தேன்.
ஃபிரண்டு வீட்டுக்குப் போறதாக இருந்தால் உன் அப்பா என்கிட்ட முதல் நாளே சொல்லிடுவார். ஆனா இன்னைக்கு உடனே கிளம்புணும்னு அவசர அவசரமா கிளம்பச் சொன்னார். அதிலேயே எனக்குச் சந்தேகம் தான். அதான் வீட்டை விட்டுக் கிளம்பும் போதே கதிர் தம்பிக்கிட்ட எதுக்கும் எங்களைப் பாலோ பண்ணுங்க தம்பின்னு சொல்லிட்டு கிளம்பினேன். அவரும் வந்தார். அதுக்குப் பிறகு நடந்தது தான் உனக்குத் தெரியுமே…” என்றார்.
“ஓ, இவ்வளவு நடந்துருச்சா?” என்று கேட்டாள்.
“இது மட்டுமில்லை நயனிமா. இன்னும் கூட இருக்கு…” என்று கதிர்நிலவன் சொல்ல,
“இன்னும் என்ன இருக்கு கதிர்?” வியப்பாகக் கேட்டாள்.
“அரவிந்த் வந்து போக ஆரம்பிச்சதுமே உன் அப்பா முகத்தில் ஒரு பரவசம் இருந்ததைப் பார்த்தேன். அதோட அவன் வந்து உன்கிட்ட பேசிட்டு போறப்ப எல்லாம் என்னை நக்கலா ஒரு பார்வை பார்த்துட்டுப் போவார்.
அப்போவே அவர் மேல எனக்குச் சந்தேகம் வந்தது. அன்னைக்கு முதல் முறையா உன்னை அரவிந்த் வெளியே கூட்டிட்டுப் போனப்ப உன்கிட்ட எதுவும் மிஸ்பிகேவ் செய்வானோன்னு எனக்கு ஒரு டவுட். அதனால் நானும் உங்க பின்னாடி வந்தேன்.
நீங்க போன கடையில் உங்களை விட்டுக் கொஞ்சம் தள்ளி நின்னு கவனிச்சேன். அவன் காதல் விஷயம்னு சொன்னாலும், அவன் பேச்சில் காதல் மேல் ஓர் ஒற்றுதல் தெரியலை. பொண்ணு பெயரையும் அவன் சொல்லலை. உன் மேல் படிந்த அவன் பார்வையும் சரியில்லை. ஆனால் நீ அவன் பார்வையைக் கவனிக்கவே இல்லை…” என்றான் குறையாக.
“அப்போ உங்க ஞாபகம் தான் எனக்கு இருந்தது. என்கிட்ட நீங்க பேசணும்னு சொல்லிட்டே இருந்தீங்க. ஆனா பேசமுடியாம தள்ளிப் போகுதேன்னு யோசிச்சுட்டு இருந்தேன். அதோட எனக்கு அரவிந்தை சந்தேகப்படவே தோணலை. அதான் அவர் பார்வையையும் கவனிக்காம விட்டுட்டேன்…” என்றாள்.
“ம்ம், அதுக்குப் பிறகு திரும்ப நேத்து உன்கிட்ட கீழே வச்சுப் பேசினான். அப்போ என்னால் கீழே வர முடியலைனாலும், என்ன நடக்கப் போகுதுன்னு உன்னைக் கவனிச்சிட்டே இருந்தேன். நீ இன்னைக்குக் காலையில் சேலையில் வெளியே கிளம்பவும் எனக்கு டவுட் தான். அதோட அம்மாவும் கொஞ்ச நேரத்தில் போன் பண்ணவும் கன்பார்மே ஆகிடுச்சு…” என்றான்.
“அப்போ அப்பாவே உங்களுக்கு உதவி பண்ணிருக்கார்னு சொல்லுங்க மாமா…” என்று கேலியாகச் சொன்னான் தயா.
“அதென்னவோ சரிதான் தயா. அவர் என்னை நக்கலா பார்த்தே சொதப்பிட்டார்…” என்று சிரித்தான் கதிர்நிலவன்.
“தாலி எப்ப வாங்கினீங்க?” என்று கேட்டாள் நயனிகா.
“அது அவர் கொஞ்சநாளா ஏதோ திட்டம் போடுறார் போல இருக்கு தம்பி. எதுக்கும் நீங்க தயாரா இருந்துக்கோங்கன்னு அம்மா சொல்லவும் என்ன செய்வதுன்னு அம்மாவும், நானும் சேர்ந்து பேசி இந்த வாரத்தில் தான் வாங்கினோம்…” என்றான்.
“தேங்க்யூ சோ மச் மா…” என்று எழுந்து அன்னையின் அருகில் வந்து அவரைக் கட்டிப்பிடித்துக் கன்னத்தில் முத்தம் கொடுத்து கொஞ்சினாள்.
மகளின் சந்தோஷத்தில் மகிழ்ந்தவர், “தம்பி மேல நீ வச்சுருக்கிற பிரியம் எவ்வளவுன்னு நீ கையை அறுத்துக்கிட்டப்பவே தெரிஞ்சுக்கிட்டேன் நயனிமா. அதனால் தான் உன் மனசு போல வாழ்க்கை கிடைக்கட்டும்னு உன் அப்பாவை எதிர்த்துக்கிட்டு உன் பக்கம் நின்னேன். நாங்களே வலை போட்டு தேடினாலும் தம்பி மாதிரி ஒரு குணமான மாப்பிள்ளை கிடைக்க மாட்டார். தம்பி மேல் இருக்கும் உன் பிரியம் என்னைக்கும் குறையாமல் நீ வாழ்ந்து காட்டுவதில் தான் அம்மாவோட நிம்மதி இருக்கு.
தம்பியை பத்திரமா, பாசமா, மனம் கோணாமல் பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு. இதுவரை அவர் ரொம்பக் கஷ்டப்பட்டுட்டார். இனி அது போல் அவர் கஷ்டப்படாமல் பார்த்துக்கோ. இதை நான் உன் அம்மாவா மட்டும் சொல்லலை. உன் மாமியாராவும் சொல்றேன். கதிரும் என் பிள்ளை தான் பார்த்துக்கோ. அந்தப் பிள்ளையை நல்லா பார்த்துக்கலைனா மகளே உனக்கு உதை தான்…” சீரியசாக ஆரம்பித்துக் கேலியாகச் சொல்லி முடித்தார் அபிராமி.
“ம்க்கும்… நீங்க எனக்கு அம்மாவா இருக்கும் போதே மாமியார் போலத் தான் அதட்டி உருட்டுவீங்க. இப்ப மாமியார்னு தனிப் போஸ்ட் வேறயா? நல்லா மாட்டினேன்டா சாமி…” என்று தலையில் கைவைத்துப் புலம்பியவளைப் பார்த்து மூவரும் சிரித்தனர்.
இவர்கள் இங்கே சிரித்தபடி இருக்க, எதிர்வீட்டிலோ, கோபத்துடன் இந்தப்பக்கமும், அந்தப்பக்கமுமாக நடந்து வீட்டை அளந்து கொண்டிருந்தார் ஞானசேகரன்.